தந்தை பெரியார், நீலமணி/படிக்காத மேதை பத்திரிகை ஆசிரியரானார்

விக்கிமூலம் இலிருந்து

22. படிக்காத மேதை பத்திரிகை ஆசிரியரானார்

"மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்க வேண்டு மென்பதிலும் எனக்கு, 1925-ம் ஆண்டு முதலே உறுதியான எண்ணமும், ஆசையும் உண்டு."

- தந்தை பெரியார்
நாட்டில் நடைபெறும் அன்றாட விஷயங்களை, அதிகாலையில் மக்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கிற ஒரே சாதனம் பத்திரிகைதான்.

நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பதையும்; நாடு நமக்கு என்ன செய்கிறது என்பதையும் பிற பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள்வதைவிட, நமக்காகவும்; மக்களுக்காகவும் நாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தால் என்ன என்று ஈ.வெ.ரா. ஆலோசித்தார்.

இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் அதற்கான காரியங்களில் தீவிரமாக முனைந்தார் ஈ.வெ.ரா.

1935-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி 'குடியரசு’ என்ற வார இதழை வெளியிட்டார் ஈ.வெ.ரா.

இப்பத்திரிகை, "சாதி, சமயம், மதம், அரசியல் இவற்றைக் கடந்து நடுநிலைச் செய்திகளை வெளி யிடும்” என்று ஈ.வே.ரா. அறிவித்தார். அப்படியே செய்தார்.

மிக விரைவில் குடியரசு பத்திரிகை பிரபலமாயிற்று.

சேரன் மாதேவி என்னும் ஊரில் காங்கிரசின் நிதி உதவியோடு, வ.வே. சுப்பிரமணிய ஐயர் என்பவர் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார்.

அந்த குருகுலத்தில் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இளம் பிள்ளைகள் மனதில், தேச பக்தி, தெய்வ பக்தி, ஒற்றுமை, சாதி, மதம், மொழி வேறு பாடில்லாமல், ஒருமைப்பாட்டு உணர்வை ஊட்டுவதே குருகுலத்தின் நோக்கம். 1942-ல் தமிழ்நாட்டு காங்கிரஸ் இயக்கத்தின் செயலாளராகப் பதவியில் இருந்த ஈ.வெ.ரா. ஒரு நாள் சேரன் மாதேவி குருகுலத்தைப் பார்வையிடச் சென்றார்.

அங்கு, பார்ப்பனச் சிறுவர்களுக்கு தனி இடம், தனி உணவுக்கூடம்; மற்ற சிறுவர்களுக்குத் தனி இடம், தனி உணவுக்கூடம் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட ஈ.வெ.ரா. திடுக்கிட்டுப் போனார்.

"சிறுவர்கள் உள்ள குருகுலத்தில் இப்படி சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா? இது சிறுவர்கள் மனதில் ஒற்றுமை உணர்வை கெடுத்து; வேற்றுமையை வளர்க் காதா?” என்று வ.வே.சு ஐயரிடம் ஈ.வெ.ரா. கேட்டார்.

உடனே வ.வே.சு. ஐயர் "என் தலைமையில் நடத்தப்படும் குருகுலம் இப்படித்தான் நடக்கும்” என்று ஆணவத்தோடு கூறிவிட்டார்.

ஈ.வெ.ரா. இந்தக் கொடுமையை, திரு.வி.க., வரத ராஜுலு நாயுடு போன்ற பெரியோர் நேரில் பார்க்கட்டும் என்று அவர்களை அழைத்து வந்து காட்டினார். அவர்கள் மனம் கொதித்தனர். கேட்டதற்கு, அவர்களிடமும் வ.வே.சு. ஐயர் அதே பதிலைத்தான் கூறினார்.

உடனே குருகுலத்திற்கு காங்கிரஸ் வழங்கும் நிதி உதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

குருகுலத்தின் செயல் முறையைக் கண்டித்து ஈ.வெ.ரா. தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து போராட்டம் நடத்தினார். பத்திரிகைகள் குருகுலத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்தன.

காந்தி சமரசம் செய்ய முன் வந்தார்; "சாதியை ஒழிக்கப் பாடுபடும் காங்கிரசில் இருப்பவர்கள், சாதிப் பிரிவினையை வளர்க்கலாமா?" என்று கேட்டார்.

வ.வே.சு. ஐயர் காந்திஜி பேச்சையும் கேட்கவில்லை. "குருகுலத்தை என் இஷ்டப்படித்தான் நடத்துவேன்," என்றார்.

இதனால் கிளர்ச்சி மூண்டது. காங்கிரசு மானியத்தை நிறுத்தியது. குருகுலம் மூடப்பட்டது.

வ.வே.சு. ஐயரின் பிடிவாதத்தினால், பல இளம் குழந்தைகளின் எதிர்காலம் பாழாயிற்று.

1927-ம் ஆண்டு, 'திராவிடன்' என்னும் நாள் இதழுக்கு, ஆசிரியராக இருந்து, ஈ.வெ.ரா. அருந்தொண்டாற்றினார். தன் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப் பெயரை நீக்கினார். குடிஅரசைப் போல், இதிலும் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியே, காரசாரமான, தம் கருத்துக்களை மக்களுக்கு எழுதி வந்தார்.

ஈ.வெ.ரா.வின் பத்திரிகை ஆசை மேலும் அதிக மாயிற்று.

மேல்தட்டு மக்களுக்கும், தனது கருத்துக்களும், கொள்கைகளும் சென்று எட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் 1928-ம் ஆண்டு 'ரிவோல்ட்' (REVOLT) என்கிற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார்.