உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார், நீலமணி/பள்ளிக்கூடம் சிறைக்கூடம்போல் தோன்றியது

விக்கிமூலம் இலிருந்து

5. பள்ளிக்கூடம்
சிறைக்கூடம் போல் தோன்றியது

"என்னைப் பொறுத்தவரை நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல், எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச் சக்தி உண்டு என்று நம்புகிறவன்."

- தந்தை பெரியார்

அன்று இரவு, இராமசாமியின் தந்தைக்கும் உறக்கம் வரவில்லை. வெங்கடப்ப நாயக்கர் இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி வியந்தார். படிக்க வேண்டும் என்கிற ஆசையிருந்தும், ஏழைக் குடும்பத்தில் பிறந்ததினால் தனக்குக் கல்வி எட்டாக் கனியாக இருந்தது. அதை அவரால் ஒப்புக் கொள்ள முடிந்தது. ஆனால் - இராமசாமிக்கு என்ன குறை?

ஏன் பள்ளிக்கூடம் வேண்டாம் என்கிறான்; படிப்பில் விருப்பமே இல்லாமல் இருக்கிறானே! தான் படிக்காததினால்தானே, கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்தது.

ஒருவேளை, தன்னைச் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொண்டு அவன் இப்படி நடந்து கொள்கிறானா! நிலையில்லாத இந்தச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகலாம்; கல்வி ஒன்று தானே நிலையான, அழியாச் செல்வம்!

இதை அவன் மறுக்கலாமா?

கடையில் எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து உட்கார்ந்து கொண்டுவிட முடியும்; ஆனால் கல்வி அத்தகையது அல்லவே! காலத்தோடு - இளமையில் தேடி அடைய வேண்டிய வற்றாத செல்வமல்லவா கல்வி.

இதையெல்லாம் இராமசாமிக்கு விளக்கிச் சொன்னால் அவன் புரிந்து கொள்வான் - என்று இப்படிப் பலவாறாக எண்ணி; இரவு வெகுநேரம் வரை மகனைப் பற்றிய சிந்தனையிலேயே உறக்கம் வராமல் விழித் திருந்தார் - வெங்கடப்ப நாயக்கர்.

மறுநாள் காலை -

வெங்கடப்ப நாயக்கர் குளித்துக் குறியிட்டு, சாமி கும்பிட்டு, ஹாலுக்கு வந்தபோது அவர் பிரமித்துப் போனார்.

அவர் கண்களையே அவரால் ஒருகணம் நம்ப முடியவில்லை.

அண்ணன் கிருஷ்ணசாமியைப் போலவே ராமசாமியும், அழகான உடைதரித்து, தோளில் புத்தகப் பையைத் தொங்க விட்டுக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான்.

சின்னத்தாயம்மையார் அவனது தலையைச் சீவி, நெற்றியில் அழகான பொட்டும் வைத்தார்.

பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டு இராமசாமி அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.

ஈரோட்டிலுள்ள பள்ளியில் சேர்ந்த அன்று முதல் ஆரம்பச் சில நாட்கள் இராமசாமி ஒழுங்காகத்தான் பள்ளி சென்று வந்தார்; பாட்டி ஊரிலுள்ள பள்ளியை விட இது பெரிதாக இருந்ததுடன் நிறைய மாணவர்களும் பல ஆசிரியரும் இருந்தனர். அங்கு நடப்பதெல்லாம் அவருக்கு விசித்திரமாகவே பட்டது. எல்லோருடனும் சேர்ந்து கை கூப்பி கடவுள் வாழ்த்துப் பாடுவது வேடிக்கையாயிருந்தது.

பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை வீட்டில் வந்து படித்து உருப் போட்டு மறுநாள் அதை ஒப்புவிக்க வேண்டும் என்பது இராமசாமிக்கு மிகவும் தொல்லையாகத் தோன்றியது.

கிருஷ்ணசாமியோ, எதைப் பற்றியும் கவலைப் படாமல் பள்ளி விட்டு வந்ததும் ஒழுங்காக வீட்டுக் கணக்குகளை முடித்தார். மறுநாள் கூற வேண்டிய பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டார்.

இராமசாமிக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. பள்ளிக்கூடம் சிறைச்சாலை போல் தோன்றியது அவருக்கு. ‘இஷ்டம் போல், ஊர்ப்பிள்ளைகளுடன், பாட்டி ஊரில் சுற்றித் திரிந்தது -

கையில் காசு எடுத்துச் சென்று விருப்பம் போல் தோன்றிய இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து வாங்கித் தின்று விட்டு வந்தது -

பள்ளிக்குச் செல்லாமல், புத்தகப்பையை மரக்கிளையில் தொங்கவிட்டு விட்டு,

மனம் போல் யாரும் காணாத மைதானத்தில் இஷ்டம் போல் விளையாடியது;

குளக்கரை, ஏரிக்கரை வழியாக சக நண்பர்களுடன் குஷியாகச் சிரித்துப் பேசிக் கழிந்த நாட்கள் ஆகியவை இராமசாமியின் நினைவில் அடிக்கடித் தோன்றி வருத்தியது.

வேண்டா வெறுப்பாகத் தோளில் பையை மாட்டிக் கொண்டு -

அப்பா அம்மாவுக்குப் பயந்து, அண்ணன் பின்னால் பள்ளிக்குச் சென்று வந்தார்.

ஆனால் இது அதிக நாள் நீடிக்கவில்லை. பள்ளிப் பாடங்களில், இராமசாமியின் மனம் லயிக்க மறுத்தது.

ஆசிரியர், அதட்டி உருட்டி அடித்துப் பிள்ளைகளைப் பணிய வைக்கக் கூடிய ஒரு பொல்லாத உருவமாகவே இராமசாமியின் கண்களுக்குப் பட்டது.

இதனால் -

பள்ளி செல்வதிலுள்ள நாட்டம் அவர் உள்ளத்தில் படிப்படியாகவே குறைந்து கொண்டு வந்தது.

ஆசிரியர் கற்றுக் கொடுப்பது எதுவும் தேவைப் படாதது போலவும் -

அதைவிடத் தனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பது போலவும் ஒருவித அலட்சியப் போக்கு அவருள் உருவானது.

கிருஷ்ணசாமி, இராமசாமியின் குணாதிசயங்களுக்கு நேர்மாறாக விளங்கினார்.

ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தார். காலந்தவறாமல், பாடங்களை வீட்டில் நன்றாகப் படித்து வகுப்பில் முதலாவதாகவும்; பள்ளியிலேயே மிகவும் நல்ல பையன் என்கிற நற்பெயரையும் பெற்று வந்தார். இராமசாமி அண்ணனுடன் கை கோர்த்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்படுவார். ஆனால்,

ஒழுங்காகப் பள்ளிபோய் சேரமாட்டார். வழியில் அண்ணன் கையை உதறிவிட்டுக் கடைகளில் தின்பண்டம் வாங்கித் தின்பார்.

எதிரில் தென்படுகிற மாணவர்களிடமும்; அப்பாவுக்குத் தெரிந்த மனிதர்களுடனும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். அந்த சமயங்களில் பள்ளி நினைப்பே இராமசாமிக்கு இருக்காது.

அண்ணன், "பள்ளிக்கு நேரமாகிறது வா தம்பி" என்று அழைத்தால், எரிந்து விழுவார் -

கிருஷ்ணசாமி தம்பியை விட்டுவிட்டு பள்ளி சென்று விடுவார்.

பள்ளிக்கே சென்றாலும் இராமசாமி ஆசிரியர் பாடம் சொல்வதைக் கவனமாகக் கேட்பதில்லை. சக மாணவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

இராமசாமியின் குணாதிசயங்களுக்கு ஒத்த மாணவர்கள் சிலரும் அவர் வகுப்பில் இருந்தனர். பாதி வகுப்பிலேயே அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றப் போய் விடுவார்.

அவரைக் கேலி செய்கிற மாணவர்களுடன் அடிக்கடி, வீண் வம்பிழுத்து. சண்டையிடுவார்.

பள்ளி மைதானத்தில் அவர்களுடன் கட்டிப்புரண்டு அழுக்கான உடைகளுடனே வகுப்பில் வந்து; ஒன்றுமே அறியாதவர் போல், சாதுவாக உட்கார்ந்து கொள்வார். இவரால் வகுப்பாசிரியர்களுக்குப் பெருந்தொல்லையாகி விட்டது.

பெரிய இடத்துப் பிள்ளை அதிகம் தட்டிக்கேட்டு, கண்டித்து அடிக்கவும் முடியாது. எப்படி இராமசாமியைத் திருத்துவது; என்று ஆசிரியருக்குப் புரியவில்லை.

கிருஷ்ணசாமி தன் தந்தையிடம், ஒருநாள், தம்பியைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டார்.

அப்போது சின்னத்தாயம்மையாரும் அருகில் இருந்தார்.

தன் கணவர் இத்தனையையும் கேட்டு கோபித்து பிள்ளையை அடித்துவிடக் கூடாதே என்று பயந்தார். சட்டென்று:

"நான் இராமசாமிக்கு நல்ல புத்திமதிகள் சொல்லிக் கொடுத்துத் திருத்துகிறேன் இனிமேல் அவன் நல்ல பிள்ளையாகப் பள்ளிக்கூடம் போவான்; ஒழுங்காகப் படிப்பான்" என்று அவர்களிடமிருந்து மகனைத் தனியே அழைத்து வந்துவிட்ட சின்னத் தாயம்மையார், மகனைத் தன் அருகில் அணைத்தபடி அமர்த்திக் கொண்டார். மிகவும் அன்பான குரலில் குழந்தை இராமசாமிக்குப் புரியும்படியாகப் பல விஷயங்களை விளக்கிக் கூறினார்:

"இராமசாமி நீ நல்ல பிள்ளை, அல்லவா? அது எனக்குத் தெரியும். அண்ணனின் பேச்சை அப்பா நம்பினால் நம்பட்டும்; நான் நம்ப மாட்டேன்." "இனிமேல் நீ பள்ளிக்கு ஒழுங்காக அண்ணனுடனேயே சென்று படித்துவிட்டு; அண்ணனுடனேயே திரும்பி வரவேண்டும்.

வழியில் எந்தக் கடையிலும்; யார் வீட்டிலும் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது. கீழ்சாதிக் குழந்தைகளுடன் சேரவே கூடாது. அவர்கள் வீடுகளுக்கு நீ போவது தெரிந்தால் அப்பா மிகவும் மன வருத்தப்படுவார். அவர்கள் வீட்டிலிருந்து தண்ணிர் கூட வாங்கிக் குடிக்கக் கூடாது.

ஏனென்றால் - மற்றவர்களை விட நாமெல்லாம்தான் மிக உயர்ந்த வைணவ வகுப்பைச் சேர்ந்தவர்கள்; நாம் கீழ்ச்சாதிக்காரர்களுடன் பழகுவதும்; அவர்கள் வீட்டில் ள்தையாவது வாங்கிச் சாப்பிடுவதும் நமது குலப்பெருமைக்கும்; சாதி கெளவரத்திற்கும் அவமானமல்லவா?

அதனால் -

இனிமேல் அம்மாதிரி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லு," என்று அன்போடு கேட்டார்.

அம்மா கூறிய அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமசாமி, "அம்மா, இனிமேல், உன் சொற்படியே நடக்கிறேன் அம்மா,” என்று உருக்கமாகக் கூறினார்.

பெற்றவளின் மனம் அப்படியே மகிழ்ந்து போயிற்று.

அருகிலிருந்த மகனை வாரி இறுக அணைத்துக் கொண்டு, சின்னத்தாயம்மையார், இராமசாமியின் உச்சியில் முத்தமழை பொழிந்தார்.