தந்தை பெரியார், நீலமணி/வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர்

விக்கிமூலம் இலிருந்து
12. வழிகாட்டியாக வாழ்ந்து - காட்டியவர்...

"சுய மரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது. கணவன் மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான்; இதில் ஒருவருக்கொருவர் அடிமை - ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்."

- தந்தை பெரியார்

ஒரு மரத்துண்டை எத்தனை நேரம் நீருக்கடியில் அமிழ்த்தி வைத்திருந்தாலும், கையை எடுத்தவுடன் அந்த மரத்தடி எழும்பி, நீர் மட்டத்திற்கு மேலே வந்து மிதக்கவே செய்யும்.

அப்படித்தான் இராமசாமியின் வாழ்க்கையும் இருந்தது. பெற்றோரை அனுசரித்துப் போனதில்; மற்றவர்கள் கண்ணுக்கு அவர் மாறி விட்டதாக, திருந்தி விட்டதாகத் தோன்றினாலும்; இராமசாமி தன் இயற்கைக் குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

தன்னைப் பொறுத்தவரை, மாறுவதற்கோ, திருந்துவதற்கோ தான் எந்தத் தவறும் செய்ததாக இராமசாமி எண்ணவில்லை.

நாகம்மையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும், இராமசாமி தன்னுடைய பழக்க வழக்கங்களையும்; தான் விரும்பிய நண்பர்களின் சேர்க்கையும் விட்டு விலகி விடவில்லை; தனக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்தார். சாதிமத பேதமின்றி வெளியில் அவருக்குப் பலவிதமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு இரவு எப்போது வீடு திரும்புவார் என்று நாகம்மைக்கே தெரியாது.

நாகம்மை கணவரைப் பற்றி எதுவும் பிறரிடம் கூற மாட்டார். ஆனாலும்; இராமசாமியின் பெற்றோருக்கு எல்லா விஷயங்களும் புரிந்தன.

தன் மகனுக்காக ஒரு இளம் பெண்ணினுடைய வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்று வெங்கடப்பரும் தாயம்மையாரும் உள்ளூர வருந்தினார்கள்.

முன்போல், பகிரங்கமாக மகனைக் கண்டிக்கவும் வெங்கடப்பராமல் இயலவில்லை.

இராமசாமி, திடீர் திடீர் என சாதி மதம் பாராமல், கடை வாடிக்கையாளர்கள் என்றும்; நண்பர்கள் என்றும் பலரைத் தன் வீட்டிற்கு முன் அறிவிப்பின்றி சாப்பாட்டிற்கு அழைத்து வந்து விடுவார்.

நாகம்மையார், சிறிதும் முகம் கோணாமல், நிமிஷ நேரத்தில் அனைவருக்கும் உணவு தயார் செய்து அன்போடு பரிமாறுவாள்.

இதையெல்லாம் கண்டு மனம் வெதும்பிய வெங்கடப்பர் மகன் தலையில் இன்னும் கூடுதல் பொறுப்பைச் சுமத்தினால் திருந்தி விடுவான் என்று எண்ணி -

தன் பெயரில் இருந்த கடையை இராமசாமி பெயருக்கு மாற்றி, முழுப் பொறுப்பையும் அவன் தலையில் சுமத்தினார். கூடுதல் பொறுப்புக்களைத் திறமையாகச் சமாளித்தாரே தவிர; அதன் பிறகும் இராமசாமி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

பக்தி நெறியும்; சுத்த சைவமுமாய் திகழும் வீடு அது. சிறு வயதில், நண்பன் சலீமின் பழக்கத்தால் புலால் உண்ணும் பழக்கம் இராமசாமிக்கு ஏற்பட்டது.

அதன்பிறகு அதன் சுவையிலிருந்து இராமசாமியால் மீளவே முடியவில்லை.

சைவக் குடும்பத்திலிருந்து வந்த நாகம்மையிடம், இராமசாமி நைச்சியமாகப் பேசி, அவளையும் உண்ணவும் செய்துவிட்டார்.

கணவரது குணாதிசயங்களை, இளம் வயதிலிருந்தே நன்கறிந்திருந்த நாகம்மை எதற்கும் மறுமொழி கூறாமல், கணவன் மனம் கோணாமல் நடப்பதை தன் கடமை என்று அனைத்தையும் சகித்து வாழ்ந்தாள்.

கடை வேலையை விட இராமசாமிக்கு வெளிவேலை தான் அதிகமாயிருந்தது.

ஊரில் எந்த மூலையில் அடிதடியோ; தொழில் தகராறாகிப் புருஷன் - மனைவி குடும்பச் சண்டையோ, எது நடந்தாலும் உடனே பலர் இராமசாமியைத் தேடி, கடைக்கோ வீட்டிற்கோ ஆட்கள் வந்து விடுவார்கள்.

எந்த ஒரு வழக்கையும் புத்தி பூர்வமாக நன்கு ஆராய்ந்த பிறகுதான் இராமசாமி ஒரு முடிவுக்கு வருவார். அதன் பிறகு -

இராமசாமி வழங்கிய தீர்ப்புக்கு மறு பேச்சிருக்காது. அனைவரும் கட்டுப்பட்டு நடப்பர். இதனால், இராமசாமியின் அறிவும், புகழும் ஈரோட்டைத் தாண்டி சுற்று வட்டாரங்களிலும் பிரபலமாயிற்று.

இளமையிலிருந்தே பழமையை வெறுப்பவராகவும் முற்போக்குச் சிந்தனையுடையவராகவும் இராமசாமி இருந்து வந்தார்.

பிறருக்குத் தான் போதிக்கிற எந்த முற்போக்கும், சீர்திருத்தமும் முதலில் தன் வீட்டிலிருந்தே துவங்க வேண்டுமென்று விரும்பினார். அதனால் -

தன் தாயாருடன் சேர்ந்து விரதம், நோன்பு, கோவில், பூஜை என்றிருந்த தன் மனைவியிடம் அனைத்தையும் கைவிடும்படிக் கூறினார்.

நாகம்மைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருமகளுடைய தர்ம சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட சின்னத் தாயம்மையார் -

"நீ இனிமேல் எந்த விரதமும் நோன்பும் இருக்க வேண்டாம். இராமசாமியின் இஷ்டப்படியே நடந்து கொள்" என்று கூறிவிட்டார்.

கழுத்திலிருந்த தாலியைக் கழற்றித் தரும்படி இராமசாமி கேட்டபோது மறுப்புக் கூறாமல் கழற்றிக் கொடுத்தார் நாகம்மை.

அதைப் பற்றித் தன் மாமியார் மாமனாரிடம் கூட நாகம்மை கூறவில்லை. ஒன்றுமே நிகழாதது போல் எப்போதும் போல் சகஜமாக இருந்தார்.

நாகம்மை முழுவதும் தன் வழிக்கு வந்துவிட்டதில் மகிழ்ந்த இராமசாமி தாலியை மனைவியிடம் கொடுத்து திரும்பவும் அணிந்து கொள்ளச் செய்தார்.