தந்தை பெரியார், நீலமணி/விழலுக்கு இறைத்த நீர்

விக்கிமூலம் இலிருந்து
23. விழலுக்கு இறைத்த நீர்

"இந்த நாட்டில் சாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம், மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள்.

மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல .

நானோ, மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர் தேக்கத்தைக் கண்டு, கொசுக்களை அழித்துத் தடுக்கும், வைத்தியன் போன்றவன்."

- தந்தை பெரியார்

"ஒரே சாதி" என்கிற முறை உருவாக வேண்டும் என்று ஈ.வெ.ரா. விரும்பினார். ஆனால், முயன்றும் தீராமல், காங்கிரசில் ஜாதி உணர்வு ஆழமாக வேர் விட்டிருந்தது.

அதனால் 1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க.தலைமையில் நடைபெற்ற காங்கிரசு மகாநாட்டில், "வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை வேண்டும்", என்று கோரிக்கை எழுப்பினார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. இத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். ஈ.வெ.ரா.வுக்கு இது தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்தது.

இதே தீர்மானத்தை இதற்கு முன், 1920-ல் திருநெல்வேலி மகாநாட்டிலும், 1921-ல் தஞ்சாவூர் மகாநாட்டிலும், 1922-ல் திருப்பூர் காங்கிரசு மகாநாட்டிலும், 1924-ல் சேலத்திலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்ற மாகாண காங்கிரசு மகாநாட்டிலும் நிறைவேற்ற ஈ.வெ.ரா. கொண்டு வந்த போதெல்லாம்; வரிசையாகத் தோற்கடிக்கப் பட்டன.

இறுதியாக இப்போது காஞ்சிபுரத்தில் 1925-ல் நடந்த மகாநாட்டிலும் தீர்மானம் தோல்வியடையவே, ஈ.வெ.ரா. இனி இந்த இயக்கத்திற்காக உழைப்பது வீண் என உணர்ந்தார்.

பிராமணரல்லாதாரின் நலனுக்காகக் கொண்டு வந்த தீர்மானம்; பார்ப்பனரல்லாதாராலேயே தோற்கடிக்கப்பட்டது.

- வகுப்புகளை ஒழிக்காமல் ஏற்றுக் கொண்டு; அதற்கான பிரதிநிதித்துவ உரிமையை மட்டும் மறுப்பது என்பது, எந்த விதத்திலும் ஈ.வெ.ரா.வுக்கு நியாயமான செயலாகப் படவில்லை. அதனால் -

1919-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம், காங்கிரசின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுத் தொண்டாற்றிய ஈ.வெ.ரா. 1925-ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.

தேசிய வாதிகளின் உள்ளத்தில் வருணாசிரம கொள்கை கூடாது. 'வருணாசிரமக் கொள்கையை' ஆதரிக்கும், காங்கிரசை; அக்கட்சிக்கு வெளியே இருந்து எதிர்ப்பது என முடிவு செய்தார்.

1926-ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு எதிராக நின்ற நீதிக் கட்சி படு தோல்வி அடைந்தது. ஈ.வெ.ரா. நடுநிலை வகித்தார்.

காங்கிரசின் மீதுள்ள கோபத்தில் நீதிக் கட்சியில் சேர்ந்தார் ஈ.வெ.ரா. "தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்; தமிழர்களுக்காகப் பாடுபட வாருங்கள்", என்று அறைகூவல் விடுத்தார் ஈ.வெ.ரா.

நீதிக்கட்சியில் ஈ.வெ.ரா. சேர்ந்தபிறகு அது மீண்டும் வளர்ச்சி பெற்றது. காங்கிரஸ்காரர்கள் அக்கட்சி மீது கூறி வந்த பொய்ப் பிரசாரத்திற்கு பதில் கொடுத்தார்.

1926-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26 தேதிகளில் இரண்டு நாள் மதுரையில் ஈ.வெ.ரா. பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்றை நடத்தினார்.

பல தலைவர்கள் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தந்தனர்.

காங்கிரசை விட்டு கோபித்துக் கொண்டு ஈ.வெ.ரா. வெளியேறியது காந்திஜிக்குத் தெரிய வந்தது.

1927-ம் ஆண்டு காந்திஜி தமிழ் நாட்டிற்கு வந்த போது, ஈ.வெ.ரா.வை சந்தித்து, அவரது கோபத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.

ஈ.வெ.ரா. குடும்பத்தினர் மீது காந்திஜிக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும் மரியாதையும் உண்டு. ஈ.வெ.ரா. எதிலும் தீவிரமாகவும், உண்மையாகவும் உழைக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது.

அதனாலேயே -

கதர் இயக்கத்திற்கு ஈ.வெ.ரா.வைப் பொறுப்பாக நியமித்தார்.

ஓர் உண்மையான தொண்டனின் கோபத்தையும் மனக்குறையையும் தீர்க்க வேண்டியது ஒரு தலை வனின் கடமை என்று கருதியே காந்திஜி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் காந்திஜியின் சமாதானத்தை ஈ.வெ.ரா. ஏற்கவில்லை.