தந்தை பெரியார்/காங்கிரஸ் வானில் ஒரு புதிய ஒளிக்கீற்று

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
19. காங்கிரஸ் வானில் ஒரு புதிய
ஒளிக் கீற்று

"எனது தொண்டு மற்றவர்கள் செய்வது போல் வெள்ளத் தோடு சேர்த்து செல்லும் நீரோட்டத் திசை வேலை அல்ல; அதை எதிர்த்துப் போராடிச் செல்லும் எதிர் நீச்சல் தொண்டாகும்.

அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குக் கல்லைப் புரட்டுவது போன்றகாரியத்தில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்."

- தந்தை பெரியார்

ஒருவர் ஒரு காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பர். சிலர், ஒரே சமயத்தில் பல காரியங்களையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

அத்தகைய அளப்பரிய ஆற்றல் படைத்தவர் ஈ.வே.ரா. இருபத்தி எட்டுவிதமான பொறுப்புள்ள பதவிகளை; ஒரே காலத்தில் பல்வேறு ஸ்தாபனங்களில் திறம்படச் செய்து காட்டியவர் ஈ.வே.ரா.

எந்தத் துறையானாலும் ஏற்றுக்கொண்ட பணியினை திறமையாகவும், பிறர் மெச்சும்படியாகவும் செய்பவர் ஈ.வே.ரா.

காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் முழு மூச்சாக அக்கட்சிக்காக உழைத்தார். சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும் என்பது பற்றி ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வந்தார்.

அப்போது, பஞ்சாப் படுகொலை நடந்தது. அதைக் கண்டித்து, பலர் தங்களது அரசு பதவிகளை விட்டார்கள். ஈ.வே.ரா.வும் தன்னுடைய சேர்மேன் பதவியை ராஜினாமா செய்தார். அதை வாபஸ் வாங்கும்படி இராசகோபாலச்சாரியார் கூறியும் ஈ.வே.ரா. இணங்கவில்லை. அதனால் இராசகோபாலாச்சாரியாரும் நண்பரைப் பின்பற்றி ராஜினாமாச் செய்தார்.

1918-களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளை ஈ.வே.ரா. முன்னின்று நடத்தினார். 1919ம் ஆண்டு காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததும், தனது ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

காந்திஜி, மதுவிலக்குத் திட்டம்; திண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை காங்கிரசில் கொண்டு வந்தார்.

1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார் காந்திஜி.

ஈ.வே.ரா.வை, இத்திட்டங்கள் பெரிதும் கவர்ந்தன. அதனால் தனது முழுநேர உழைப்பையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்தார். தாம் வகித்து வந்த பற்பல பதவிகளிலிருந்தும் விலகிக் கொண்டார்.

ஈரோடு நகரில் காங்கிரசு இயக்கம் ஈ.வே.ரா.வின் முயற்சியால் தீவிரம் அடைந்தது. பொதுத் தொண்டில் தன் முழு நேரத்தையும், ஈ.வே.ரா. செலவிட்டார்.

அதனால் வியாபாரத்தை அவரால் ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை. தந்தையார் காலத்திலிருந்து சிறப்போடு நடைபெற்று வந்த மண்டிக் கடையை மூடும் படியாயிற்று.

காந்திஜியாலும், அவரது மதுவிலக்கு, தீண்டாமை போன்ற கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்ட ஈ.வே.ரா. கதராடை அணிந்தார். தான் மட்டுமல்ல. தன் குடும்பத்தினர் அனைவரையுமே கதர் ஆடை அணியும்படிச் செய்தார்.

கதர் துணிகளை மூட்டை மூட்டையாகத் தம் தோளில் சுமந்தார், விற்றார். காந்திஜியின் கொள்கைகளைப் பரப்ப ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார்.

அவரது திறமையான பேச்சு மக்களைக் கவர்ந்திழுத்தது. ஈ.வே.ரா. என்னும் மூன்றெழுத்து தமிழகமெங்கும் பிரபலமாயிற்று.

ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈ.வே.ரா. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற பாடுபட்டார்.

நீதிமன்றங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரசு இயக்கம் தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி நடந்தார் ஈ.வே.ரா.

அதனால் அவர் குடும்பத்திற்கு நீதிமன்றத்திலிருந்து வர வேண்டிய ஐம்பதினாயிரம் ரூபாயை வேண்டாம் என்று இழந்து ஒதுக்கினார். இது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரிந்தது. அடுத்தபடியாக கோர்ட்டிலிருந்து அடமான பத்திரம் மூலம் தனக்கு வரவேண்டிய, 28,000/ ரூபாயையும், ஈ.வே.ரா. பகிஷ்கரித்தார்.

அப்படிச் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஈ.வே.ரா. கேட்கவில்லை. வேண்டுமானால் அந்தப் பணத்தை திலகர் நிதியில் சேர்த்துவிடலாம் என்றனர். 'திலகர் நிதியில் சேர்ப்பதும்; அந்தப் பணத்தை நானே வைத்துக் கொள்வதும் ஒன்றுதான்' என்று மறுத்து விட்டார் ஈ.வே.ரா. கொள்கைப்படி கோர்ட்டிலிருந்து எனக்கு அந்தப் பணமும் வேண்டாம்; அதுதான் உண்மையான பகிஷ்கரிப்பு - என்று ஈ.வே.ரா. உறுதியாக இருந்துவிட்டார்.

ஈ.வே.ரா.வின் கொள்கைப்பற்று காங்கிரஸ்காரர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மதுவிலக்குப் பிரசாரத்தை ஈ.வே.ரா. மும்முரமாக நடத்தினார். கள்ளுக் கடைகளின் முன் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.

குடிக்காதே என்று குடிக்கிறவன் காலில் விழுவதை விட, அவனுக்கு மதுவைக் கொடுக்கிற மரத்தையே அழித்து விட்டால் என்ன என்று ஒரு புதிய கோணத்தில் யோசித்தார்.

இளநீரும், தேங்காயுமாய் மரத்திலிருந்து காலத்திற்கும் வருகிற வருமானத்தைப் பற்றி அவர் பொருட்டாக எண்ணவில்லை சிறிதும் தயங்காமல், தனது பண்ணையிலிருந்த ஆயிரக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டார் ஈ.வே.ரா.

இப்படிச் செய்ய, ஒருவருக்கு எவ்வளவு பெரிய தியாக மனப்பான்மை இருந்திருக்க வேண்டும்! மதுவின் பிடியிலிருந்து பாமர மக்கள் விடுபட்டுத் திருந்தி வாழ வேண்டுமென்று ஈ.வே.ரா. விரும்பினார்.

அந்த ஏழை அப்பாவிகள் மீது ஈ.வே.ரா. கொண்டிருந்த அளவு கடந்த மனிதாபிமானத்தையே அவருடைய அந்தச் செய்கை பிரதிபலித்தது என்றால் அது மிகையாகாதன்று.