தந்தை பெரியார்/கேள்வியும் நானே... பதிலும் நானே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. கேள்வியும் நானே...
பதிலும் நானே...

"என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்."

- தந்தை பெரியார்

"கட்டிக் கொடுத்த சோறும்; சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு வரும்? சுயபுத்தி வேண்டாம்! ஊரிலே தலை காட்ட முடியலே; எவன் எவனெல்லாமோ முதுகுக்குப் பின்னாடி பேசிட்டுத் திரியறான்.”

வெங்கடப்ப நாயக்கர் கோபத்தின் உச்சியிலிருந்து வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு விசாரணையின் நிமித்தம் தூண் ஒரமாகக் கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராமசாமி, தாயாரைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சரி... சரி....விடுங்க... யாரோ சொன்னதுக்காக, இப்படி ஏன் கோவப்படறீங்க.பாவம், அவன் கொழந்தைதானே! எல்லாம் போகப் போகச் சரியாயிடும்.”

"நிச்சயம் சரியாகாது. பாட்டி வீட்டிலே செல்லம் குடுத்துக் கெட்டுப் போறான்னு, இங்கே கூட்டிட்டு வந்தோம். கொழந்தை, கொழந்தைன்னு, இங்கே நீயும் அதே காரியத்தைச் செய்து அவனைக் குட்டிச் சுவராக்கிட்டே. குழந்தையா அவன்; வயசு பத்தாகல்லே... கூடப் பொறந்த அண்ணன்தானே கிருஷ்ணசாமி! அவன் எப்படிப் படிக்கறான்? எவ்வளவு அடக்க ஒடுக்கமா எல்லார்கிட்டேயும் நடந்துக்கறான். அவனைப் பத்தி இன்னிவர, யாராவது ஏதாவது தப்பாச் சொல்லி யிருப்பாங்களா?"

"போதும் நிறுத்துங்க உங்களுக்கு எப்பவும் இராமசாமின்னா.... ஒரு எளப்பமும்; கோவமும்தான். மூத்தவனைப் போல அவனும் நமக்கு ஆசையாய் பொறந்த பிள்ளைதானே! ஏன் ஒரு கண்ணிலே வெண்ணெயும்; ஒரு கண்ணிலே சுண்ணாம்பும் மாதிரி நடந்துக்கறிங்க?”

"நானா அப்படி நடந்துக்கறேன்?" வெங்கடப்ப நாயக்கர் வியப்போடு கேட்டார்.

"பின்னே என்ன? சில புள்ளங்க, ஆரம்பத்திலே சுறுசுறுப்பா இருக்கும், சில புள்ளங்க பின்னாலே சூரப்புலியா வருவாங்க. உங்களுக்கு ஆமையும் முயலும் கதை தெரியுமில்லே..."

"எனக்கு உன்னோடு ஒரு கதையும் கேட்க வேண்டாம். இதோ... இவனாலே இன்னும் கொஞ்ச நாள்லே நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வர்றவங்களே நின்னுடுவாங்க போலிருக்கு. அப்புறம் நீயும், நானும மாறி மாறி கதை சொல்லிட்டு இருக்கலாம்.”

"நீங்க என்ன... புதுசு புதிசாப் புகார் சொல்றீங்க?" என்றார் வியப்போடு சின்னத்தாயம்மையார்.

"நடந்ததை நான் சொல்லாட்டி உன்கிட்டே வந்து வேறெ யார் சொல்லுவாங்க? இவனப் பத்தி முழுசுமா உனக்கு ஒண்ணுமே தெரியாமத்தான் இப்படி அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசறே.”

"சரி... என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்.”

"நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வந்த சுப்ரமண்ய சாஸ்திரிகிட்டே இவன் கேட்டிருக்கான். 'ஏன் ஐயா, ராமர் ராச்சியம் வேண்டாம்னு சொல்லிட்டார்னா பரதன் ஆள வேண்டியதுதானே. அதில்லாமே, ராமரோட செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்திலே வச்சு, அது ஆளுதூன்னா; செருப்பாலே எப்படி ஐயா அரசாட்சி பண்ண முடியும்னு" கேட்டிருக்கான். என்று கணவர் கூறி முடிப்பதற்குள், தாயம்மையார் குறுக்கிட்டுக் கேட்டார்.

"ஆமாம்... அதிலே என்னதப்பு? அவன் பச்சப்புள்ளதானே? தெரியாத விசயத்தைக் கேட்டிருக்கான்; சாஸ்திரி அவனுக்கு விளக்கி பதில் சொல்லியிருக்க வேண்டியதுதானே? சும்மாவா வந்து இராமாயணம் படிக்கறாரு?”

"இதோ பாரு... தாயம்மா அத அவரு அவனுக்கு விளக்கிட்டாரு, ஆனா நம்ம வீட்டுக்கு வந்து கதை படிக்கறவங்க எல்லாம் ஒண்ணும் சாமானிய ஆளுங்க இல்லே; பெரிய பெரிய வேதம் படிச்சவங்க, சாஸ்திரம் தெரிஞ்சவங்க பணம் குடுக்கறோம்கறதுக்காக மட்டும் அவங்க நம்ம வீட்டுக்கு வரல்லே...

நாமல்லாம் கடவுள் பக்தி உள்ளவங்க, நமக்குப் புரியாத பல புராண விஷயங்களை விளக்கிச் சொல்லணும்கறதுக்காகத்தான் வர்றாங்க. அதைக் கேட்டு புண்ணியம் பெறணும்கறதுக்காகத்தான் நம்ம வீட்டைத் தேடி, கதை கேக்க பல பேரு வர்றாங்க -

நாம எல்லோரும் இதுவரை அவங்க சொல்லறதையெல்லாம், பக்தியோடு கேக்கறோமே தவிர, நீயோ, நானோ இப்படி எப்பவாவது எதிர் கேள்வி கேட்டிருக்கோமா? சரி போவட்டும்; பஞ்சு தீஷதரை உனக்குத் தெரியுமில்லே?" கேட்டுவிட்டு வெங்கடப்ப நாயக்கர், பதிலுக்காக மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

"தெரியும்... சொல்லுங்க பெரிய வேதவித்து. புராணங்கள் எல்லாம் படிச்சு; நிறைய பட்டமெல்லாம் வாங்கினவரு. அவருக்கு என்ன இப்போ?”

"அவருக்கு ஒண்ணுமில்லே. இதோ நிக்கறானே உன் பிள்ளை இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு, சாது மாதிரி. அவனுக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப் போச்சு அவ்வளவு பெரிய பண்டிதரைப் போய் இவன் என்ன கேள்வி கேட்டிருக்கான் தெரியுமா?’’

“எனக்கென்ன தெரியும்; சொல்லுங்க..." "கோவில்லேயிருந்து அவரு வீட்டுக்குப் போறப்போ "ஐயா" ன்னு கூப்பிட்டிருக்கான்.

திரும்பிப் பார்த்தாரு. இவனைப் புரிஞ்சுக்கிட்டு, "என்னப்பா விஷயம்... அப்பா ஏதாவது சொல்லி அனுப்பினாரா" என்று கேட்டிருக்காரு.

"ஒண்ணுமில்லே ஐயா, முந்தா நாள் கதை சொன்னீங்களே... அதிலே ஒரு சந்தேகம்" என்று கேட்டிருக்கான். “என்னான்னு கேட்டாரு; இவன் என்ன கேட்டான் தெரியுமா, ஐயா கல்யாணத்துக்கு முந்தி குந்தியம்மா சூரிய பகவான்கிட்டே குழந்தை பெத்துக்கிட்டதாச் சொன்னிங்க. ஆனா கல்யாணத்தப்போ... சூரியனைப் பண்ணிக்காமெ; ஏன் பாண்டு மகாராசாவைக் கட்டிக் கிட்டாரு" ன்னு கேட்டிருக்கான்.

"சின்னப் பையன் கேக்கற கேள்வியா இது, அதுவும் நடு ரோட்டிலே நிறுத்தி...”

"அது சரி... அந்த ஐயா என்ன பதில் சொன்னாராம்?”

“என்ன சொல்லுவாரு... தம்பி, இதையெல்லாம், பத்தாம் நாள் கதையும்போது நல்லா விளக்கமாச் சொல்லறேன்னு அனுப்பிச்சுட்டாரு."

"நேத்திக்குக் காத்தாலே என்னைப் பார்த்ததும், ஏன்... நாயக்கரேன்னு எல்லா விஷயத்தையும் சொல்லிப்புட்டு, 'பையன் பெரிய நாத்திகனா இருப்பான் போலிருக்கே... உங்களோட பக்திக்கும், பவ்யத்துக்கும் இப்படியொரு பிள்ளையா? ஏதோ கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கு போலிருக்கு. பையனை சாக்கிரதையாப் பார்த்துக்குங்கோ' அப்படின்னுட்டுப் போனாரு.”

சின்னத்தாயம்மையாருக்கு மனதை என்னமோ செய்தது. மிகுந்த துயரத்துடன் மகனின் அருகில் சென்று, "ஏன் ஐயா... அவ்வளவு பெரிய பண்டிதர்கிட்டே, இப்படி அசிங்கமா எல்லாம் கேள்வி கேக்கலாமா? தப்பு இல்லையா", என்று தலையை வருடியபடிக் கேட்டார்.

"எனக்குத் தப்பாத் தோணல்லேம்மா சீதாம்மா, ருக்மணியம்மா இவங்க எல்லாம் தாங்க விரும்பின வங்களையே கட்டிக்கிட்டதாச் சொன்னாரு. இந்த குந்தி அம்மா மட்டும் ஏன் இப்படித் தப்புப் பண்ணினாங்கன்னு கேக்கணும்னு தோணிச்சு, அது தாம்மா கேட்டுட்டேன்."

சின்னத்தாயம்மையார் பிள்ளையின் கன்னத்தில் முத்தமிட்டபடி, "இதப்பாருய்யா... குந்தியம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களும் உன்னாட்டமா குழந்தைத்தனமா அப்படி நடந்துகிட்டாங்க; அதுக்காக அவங்களாலே சூரியனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது; என்று விளக்கிக்கூறிக் கொண்டிருக்கும்போது வெங்கடப்ப நாயக்கர் தன் மனைவியிடம்,

"தாயம்மா... நாளையிலிருந்து இவன் கதை கேக்கறதை எல்லாம் விட்டுட்டு; கிருஷ்ணசாமி மாதிரி ஒழுங்கா ரூமிலே இருந்து படிக்கச் சொல்லு, நான் வரேன் கடைக்கு நேரமாச்சு" என்று சொல்லியபடி துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபடி வெளியே சென்று விட்டார். சின்னத்தாயம்மாள் அவசரம் அவசரமாக இராமசாமியின் புத்தகப் பையை எடுத்துத் தோளில் மாட்டி, "கிருஷ்ணசாமி உன்னை விட்டுட்டுப் போயிட்டான். நீ தனியாப் போவியா?" என்று கேட்டார்.

"எனக்கு எதுக்கம்மா துணை நான் போயிட்டு வறேம்மா" என்று விடை பெற்று வெளியே வந்து விட்டார்.

வழியெல்லாம் இராமசாமிக்கு ஒரே யோசனையாக இருந்தது.

வகுப்பு ஆரம்பமாகியிருக்கும். நேரம் கழித்து வந்ததற்கு ஆசிரியர் காரணம் கேட்பார். இந்த வம்பெல்லாம் எதற்கு, என்று பள்ளிக்கூடமே போகாமல், தனக்குத் தெரிந்த நண்பர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழித்தார். மாலையில் ஒன்றுமே நடக்காதது போல் பள்ளிக்கூடம் விடுகிற நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விட்டார்.