தந்தை பெரியார்/திராவிட வானில் கறுப்புச் சூரியனின் உதயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

30. திராவிட வானில் கறுப்புச்
சூரியனின் உதயம்

"மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்திற்கும், அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்."

- தந்தை பெரியார்

சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 - வது மகாநாடு ஒரு புதிய விடியலுக்கு வித்திட்டது.

27.8.1944 -ல் நடைபெற்ற அம்மகாநாட்டில் பெரியார், தனது கட்சியின் பழைய பெயர்களை யெல்லாம் ஒருங்கிணைந்த கட்சியாக, "திராவிடர் கழகம்" என்றும் புதிய பெயரைத் தன் கட்சிக்குச் சூட்டினார்.

அறிஞர் அண்ணா அன்று முதல் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார், அத்துடன்,

பெரியாரின் 'விடுதலை' என்னும் நாளேட்டின் ஆசிரியராகவும், அண்ணாவைப் பெரியார் நியமித்தார்.

இளைஞர்களின் இதயங்களைத் தமது அடுக்கு மொழிப் பேச்சால் கொள்ளை கொண்டு வந்த அறிஞர் அண்ணா குரல், தொடர்ந்து விடுதலை ஏட்டில் முழங்கியது.

அண்ணாவின் எழுத்தில், சுயமரியாதைக் கொள்கைகளும்; சீர்த்திருத்தக் கருத்துக்களும்; கதைகளும், மக்களைக் கழகத்தின்பால் கவர்ந்து இழுத்தன.

பெரியார் 1944 -ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடை பெற்ற 'ரேடிகல் டெமாக்ரடிக்' கட்சி மகாநாட்டில் கலந்து கொண்டார்.

கல்கத்தாவில் உலக சமூக சீர்திருத்தவாதியான எம்.என். இராய் பெரியாரை அன்புடன் வரவேற்றார்.

பெரியாரை எம்.என். இராய் தனது ஆசான் என்றும், தனது நாத்திகக் கொள்ளைக்கு வழிகாட்டியவர் என்றும் மாநாட்டில் போற்றிப் புகழ்ந்தார்.

கல்கத்தா மாநாடு முடிந்து, கான்பூர் சென்றார் பெரியார். அங்கு நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தார்.

வட இந்தியச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பெரியார் தமிழகம் திரும்பினார்.

தனது புதிய கட்சிக்கு ஒரு கொடியும், கட்சியின் தொண்டர்களுக்கு ஓர் புதிய உடையும் உருவாயிற்று.

திராவிடர் கழகம் கருஞ்சட்டைப் படையை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் நிறைவேறியது.

அதன்படி 1945 -ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி இப்படை அமைக்கப்பட்டது.

1946-ம் ஆண்டு மதுரையில் கருஞ்சட்டைப் படையின் முதல் மகாநாடு நடந்தது.

கருப்புக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம் பொறித்த கொடியுடனும் -

கருப்பு வேட்டி, கருப்புச் சட்டை அணிந்த தொண்டர் படையுடனும் மதுரை மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.

1947 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரமடைந்தது. அந்தப் பொன்னான நாளை இந்தியா விமரிசையாகக் கொண்டாடியது.

பெரியார் அந்த நாளை -

"இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்" என்று அறிக்கை விட்டார். அறிஞர் அண்ணா அதிர்ந்து போனார்.

- 'எண்ணற்ற உயிர்த்தியாகங்களும், உண்ணாவிரதங்களும் இருந்து - கத்தியின்றி, ரத்தமின்றிக் கிடைக்கப்பெற்ற பொன்னான சுதந்திரத்தை, தந்தை பெரியார் ஏன் துக்க நாள் என்கிறார்?' - அண்ணாவின் சிந்தனையில் பெரியாரைப் பற்றிய முதல் வருத்தம் எழுந்தது.

தனக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து கூற, எவ்வளவு தைரியமும், மனஉறுதியும் வேண்டும்!

அதுதான், தந்தை பெரியாரின் இயல்பான குணம்.

காங்கிரசின் மேல் மோகம் கொண்டு; காங்கிரசு கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்துத் தன் அளவற்ற சொத்துக்களைத் தியாகம் செய்தவர் பெரியார்.

காங்கிரசின் கொள்கையைத் தென்னாட்டில் பரப்ப முழு ஒத்துழைப்பையும்; அயராத தன் உடலுழைப்பையும் அளித்தவர் பெரியார்.

பெரியாரைப் படிப்பவர்களுக்குப் புரியும்; அவரது கோபமெல்லாம் -

சுதந்திரத்தின் மீது அல்ல; அதற்குச் சொந்தம் கொண்டாடும் காங்கிரசு மீதுதான் என்று.

தான் மனமுவந்து நாடிச் சேர்ந்த காங்கிரசு கட்சியில், சாதி மனப்பான்மை கோலாச்சியதைப் பெரியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மனம் புழுங்கினார்.

குழந்தைகளிடமும் சாதியைப் புகுத்திய சேரன்மாதேவி குருகுல சம்பவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். சாதியை ஒழிக்க இயலாத காங்கிரசிடம்; வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையையாவது அங்கீகரிக்கும் படி தொடர்ந்து போராடினார்.

காங்கிரசு அதற்கும் இணங்கவில்லை. இனி எதற்கும் காங்கிரஸ் அருகதையில்லை என்று பெரியார் விலகி விட்டார்.

'சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசு ஆட்சி வந்த பிறகும், அக்கட்சியால் ஏழை எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எந்தப் பலனும், சுதந்திரமும் கிட்டாது' என்கிற கருத்திலேயே பெரியார், சுதந்திர தினத்தை துக்க நாள்' என்று கூறினார்.

ஆயினும், 'இது சரியல்ல' என்று அண்ணா கருதினார். அண்ணா மட்டுமல்ல; கழகத்திலிருந்த பலரும் அப்படியே கருதினார்கள்.