தந்தை பெரியார்/தீராத விளையாட்டுப் பிள்ளை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. தீராத விளையாட்டுப் பிள்ளை

"தொட்டதற்கெல்லாம் 'கடவுள் செயல்', 'கடவுள் செயல்' என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள், தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள்; அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறவர்கள் ஆவார்கள்.

- தந்தை பெரியார்

ஒரு மனிதன், தன் அயராத உழைப்பினால் அடைந்த வெற்றியாகத்தான் நம்புகிறான். வெங்கடப்ப நாயக்கரும் அப்படித்தான் நம்பினார்.

"ஏழையாயிருந்த தாங்கள் இத்தனை பெரிய செல்வந்தரானது; கடவுளின் கருணையினால் தான்" என்று கணவரைப் போலவே சின்னத்தாயம்மையாரும் கருதினார்.

இயற்கையிலேயே தெய்வபக்தி மிகுந்த வெங்கடப்ப நாயக்கர், தன் வீட்டிலுள்ள பெரிய கூடத்தில் நாள் தோறும் இரவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பண்டிதர்களைக் கொண்டு உபன்யாசம் செய்வித்துக் கேட்டு மகிழ்வார். இதற்காக பல அன்பர்களும் அங்கு வருவார்கள்.

தெய்வபக்தியோடு வெங்கடப்ப நாயக்கர் இளகிய மனமும், கருணை உள்ளமும் கொண்டவராகத் திகழ்ந்தார். அதனால் -

தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை அவர் ஒரு போதும் மறந்ததில்லை.

ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகத் தானதருமங்கள் செய்தார். வியாபாரத்தில் நொடித்துப் போன சிறிய வியாபாரிகளுக்குப் பொருள் உதவி செய்து கைதுாக்கி விட்டு அவர்களுக்குப் புது வாழ்வளித்தார்.

தான் ஏழ்மையில் பிறந்து வறுமையில் வாடிக் கஷ்டப்பட்டது போல; பிறர் அத்துன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணினார்.

பசியின் கொடுமையை நன்கு அறிந்திருந்த அவர்; ஏழைகளுக்கான அன்னதானச் சத்திரங்கள் வைத்தார்.

வழிப்போக்கர்கள் தங்குவதற்கும்; இரயில் பயணிகள் தங்குவதற்கும் ஆங்காங்கே தரும சத்திரங்கள் கட்டினார்.

ஆலயங்கள் நிறைந்த ஊரில் தன் பங்கிற்கும் ஓர் பிள்ளையார் கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்தார்.

இத்தனைக்கும் பிறகும் வெங்கடப்ப நாயக்கரின் உள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை. கல்வி அறிவில்லாமல் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் அவர் கண்முன்னே நின்றன. அதனால் அடைய நேரிட்ட அவமானங்களை அவரது நெஞ்சம் மறக்கவில்லை -

'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி' -

என்கிற பாரதியின் வரிகளை அவர் படித்ததில்லை.

ஆயினும் -

தன்னையே உதாரணமாகக் கொண்டு ஊரிலுள்ள ஏழைச்சிறுவர்களை எண்ணிப் பார்த்தார்.

மற்றெதனையும் விடக் கல்விச் சாலையே அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

ஈரோட்டில் மஹாஜன ஹைஸ்கூல் என்கிற பள்ளியை நிறுவினார்.

எண்ணற்ற, ஏழைக் குழந்தைகளின் அறிவுக்கண் திறக்க வெங்கடப்ப நாயக்கர் கட்டிய, ஆலயத்திலும் சத்திரத்திலும் சிறந்த பள்ளிக்கூடம் -

இன்றும் அவரது அழியாப் புகழையும் கருணை உள்ளத்தையும் பறை சாற்றி நிற்கின்றது.

★ பசிக்குச் சத்திரமும்

★ கல்விக்குப் பள்ளியும் கட்டிய பிறகு - மனிதனை வாட்டும்

★ பிணிக்கு வழி செய்யவில்லையே என்று எண்ணினார். அன்றே ஈரோட்டில் தர்ம வைத்திய சாலை ஒன்றை நிறுவி முப்பிணிக்கும் மருந்திட்ட பெருமகனானார்.

வெங்கடப்ப நாயக்கரும் சின்னத்தாயம்மையாரும் தங்களின் இரு புதல்வர்களையும் இரண்டு கண்களைப் போல் கருதினர்.

அன்பையும் பாசத்தையும் கொட்டி அவர்களை மிகவும் ஆசை ஆசையாக வளர்த்து ஆளாக்கினர்.

தக்க வயது வந்ததும் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.இராமசாமியையும் பள்ளியில் சேர்க்க ஆசைப் பட்டார்.

இராமசாமியின் சிறிய பாட்டியார் குடும்பத்தில் குழந்தை இல்லாததால் - இராமசாமி பாட்டியார் குடும்பத்தில் சுவீகார புத்திரனாக வளர்ந்து வந்தார்.

இராமசாமி குழந்தைப் பருவத்திலிருந்தே மிகுந்த பிடிவாதமும், குறும்புத்தனமும் நிறைந்தவராக இருந்தார்.

இப்போது -

அவரைக் கண்டித்து வளர்க்க அப்பாவோ, அம்மாவோ அருகில் இல்லாததால் இராமசாமிக்கு மிகுந்த சவுகரியமாயிற்று. பாட்டியைப் பற்றி பயமே அவருக்கு இல்லை.

மனம் போல் ஊர்க் குழந்தைகளுடன் சுற்றித் திரிந்துவிட்டு, இஷ்டத்திற்கு வீட்டிற்கு வருவார். பள்ளிக்குச் சென்றாலும் சக மாணவர்களுடன் சண்டை, வாக்குவாதம் தினம் தினம் ஊர்ச் சண்டை.

தட்டிக் கேட்க ஆளில்லாததோடு பாட்டியார் கொடுக்கிற அளவுக்கு மீறிய - செல்லத்தினால் தன் பிள்ளை தறுதலையாக வளர்ந்து வருகிற விஷயம், வெங்கடப்ப நாயக்கருக்குத் தெரிய வந்தது.

இப்படியே போனால், பிறகு தன் மகனைத் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்தார்.

உடனே, பாட்டியாரிடமிருந்த இராமசாமியைத் தன் வீட்டோடு அழைத்து வந்து விட்டார்.

இது இராமசாமிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அப்பாவும் அம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான் - தன்னிடம் மிகவும் ஆசையாகவும் அன்பாகவும் இருப்பார்கள். ஆனால் -

மிகவும் கண்டிப்பானவர்கள் -

நேர்மையாகவும், ஒழுங்காகவும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள் எல்லாவற்றிற்கும் மேல், நிதம் காலையில் குளிக்கச் சொல்லுவார்கள்.

பாட்டி வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்தது போல இஷ்டத்திற்கு ஊர் சுற்றித் திரிவதும், பள்ளிக்குச் செல்லாமல் பாட்டியை ஏமாற்றுவது போல் இங்கு நடவாது.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த இராமசாமிக்குத் துக்கம் பெருஉருண்டையாகத் தொண்டையை அடைத்தது.

அன்று இரவெல்லாம் இராமசாமிக்கு உறக்கமே வரவில்லை.