தந்தை பெரியார்/நாகம்மை என்னும் நாக இரத்தினம் மறைந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
26. நாகம்மை என்னும் நாக இரத்தினம் மறைந்தது...

"பெண்களே வீரத்தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள்.

எதிர்காலத்தில் "இவள் இன்னாருடைய மனைவி" என்று அழைக்கப்படாமல்; "இவர் இன்னாருடைய கணவன்" என்று அழைக்கப்பட வேண்டும்."

- தந்தை பெரியார்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் கடமை, இலட்சியம் என இரு பகுதிகள் உண்டு.

கல்வி, குடும்பம் என இருபகுதிகள் உண்டு.

கல்வி, குடும்பம், தொழில் எனக் கடமைகளைச் செய்து கொண்டே இலட்சியத்திற்காகப் பாடுபடுவது ஒருவகை -

தன் லட்சியம் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று வாழ்வது ஒருவகை. ஈ.வெ.ரா இதில் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக வாழ்ந்தவர்.

- ஈ.வெ.ரா. எந்தக் கடமைகளைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல், லட்சியம் ஒன்றே வாழ்க்கை - தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதே அந்த லட்சியம் - என வாழ்ந்து காட்டியவர்.

இப்படியொரு லட்சிய புருஷனுக்கு மனைவியாக வாய்த்தவர் நாகம்மையார். கணவன் செய்யும் காரியங்கள் அனைத்திலும் தோள் கொடுத்து; கணவரது சுக, துக்கங்கள் அனைத்திலும் சமபங்கேற்று வாழ்ந்து காட்டிய நாகம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

மனைவியின் அருகிலிருந்து கவனித்து அவளுக்குத் தைரியமூட்டி, ஆறுதல் கூறவேண்டிய ஈ.வெ.ரா அதைப் பற்றிச் சிந்தித்தாரில்லை.

தான், தனது தொண்டு - அதுவே பெரிதென்றெண்ணி, பொதுக் கூட்டங்களில் உரையாற்றச்சுற்றுப் பயணம் சென்று விட்டார்.

நாளுக்கு நாள் நாகம்மையார் உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்தது.

வைத்தியம் செய்த மருத்துவர்கள் இனிப் பிழைப்பது அரிது என்று கூறினார்கள்.

அருகில் இருந்து கவனித்துக் கொள்ள எத்தனையோ பேர் இருந்தாலும்; நாகம்மையாரின் தளர்ந்த விழிகள், நாற்புறமும் கணவரைத் தேடித் துழாவின.

இத்தருணத்தில் கூடத்தன் கணவர் அருகில் இல்லாமற் போனது நாகம்மையாரின் மெல்லிய மனத்தை மிகவும் வருத்தியது.

வந்துவிடுவார்... வந்து விடுவார் என்கிற நம்பிக்கை வரவர அவரது உள்ளத்தில் தளர்ந்து கொண்டே வந்தது.

ஈ.வெ.ராவோ -

திருப்பத்துரில் நடக்கும் மகாநாட்டில்; ஈ.வெ.ரா பலத்த கைதட்டல்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தார். ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

ஆனால், இதைக் கேட்டதும் - ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை.

மகாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார்.

ஈரோட்டு மிஷன் ஆஸ்பத்திரியில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம், உயிர்துறந்தார்.

ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண ஆஸ்பத்திரி சென்றபோது -

நாகம்மையாரின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது.

எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ராவை -

எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை -

நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை.

அன்பே உருவானவர் நாகம்மையார்.

எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிரார உணவளித்து அனுப்புவார்.

மாமன், மாமியைத் தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி அறிவில்லாமல் வளர்ந்த நாகம்மை மணமான பின்பு, பொறுப்புள்ள நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்ந்து காட்டினார்.

அதேசமயம் -

கணவரைப் பலசமயம் தன் வீட்டாரிடம் விட்டுக் கொடுக்காமலும் -

வெளியுலகில் தன் கணவரது பொதுத் தொண்டுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்புக் கொடுத்து -

கணவர் சிறைபுக நேர்ந்தால், அவர் விட்ட இடத்திலிருந்து தொண்டைத் தொடர்ந்து போராடி - சிறைக்கும் அஞ்சாமல் வீரசாகசம் புரிந்த ஒப்பற்ற வீராங்கனையாக வாழ்ந்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் நாகம்மையார்.

காந்திஜிக்கு வாய்த்த கஸ்துரிபாய் போல; ஈ.வெ.ரா. வுக்கு நாகம்மை கிடைத்தார்.

ஆனால் -

கஸ்தூரிபாயை இழந்தபோது ஒரு குழந்தையைப் போல காந்திஜி அழுதார்.

ஈ.வெ.ராவோ -

இறந்துபோன மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்தார்.

பற்றற்ற துறவிபோல, அன்றிரவே திருச்சிக்குப் புறப்பட்டார்.

அங்கு சென்ற ஈ.வெ.ரா. அரசு விதித்திருந்த 144 - தடை உத்தரவை மீறினார்.

கைதுசெய்யப்பட்ட ஈ.வெ.ரா. பிறகு விடுதலையானார்.