தந்தை பெரியார்/பள்ளி போயிற்று

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
10. பள்ளி போயிற்று கடை வந்தது...

மனிதனுக்குக் கல்வி அவன் அறிவாளியாகும் லட்சியத்திற்கு அடிப்படையாக அமைய வேண்டும். படிப்பில் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். பகுத்தறிவிற்கு ஏன் பயப்பட வேண்டும்?

சிந்தனை அறிவு ஒன்றுதானே, உண்மையறிவாகக் கருதப்படக் கூடியது. வெறும் புத்தக அறிவு, அறிவாகி விடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா?

அறிவு வளர்ச்சிக்குக் கல்வி பயன்படவில்லையென்றால் வேதனையாகத்தானே இருக்கிறது!

வெங்கடப்பர் நொறுங்கிப் போனார். தன்னுடைய இரண்டு பிள்ளைகளைப் பற்றியும் அவர் ஏராளமான கனவுகள் கண்டு வந்தார்.

கலெக்டரைப் போல் பெரிய படிப்பெல்லாம் படித்து - வெள்ளைக்காரத் துரைகளைப் போல மிடுக்காக உடைகள் அணிந்து கொண்டு, பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களாகத் தம் மக்கள் பெயர் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

நம்பிக்கை நட்சத்திரமாகக் கண்ணும் கருத்துமாகப் படித்து வருபவர் கிருஷ்ணசாமி ஒருவர்தான். இராமசாமியைப் பொறுத்தவரை - அவனைப் பற்றிய ஆசைகளும் - எதிர்பார்ப்புகளும் அவர் மனதில் அடியோடு அஸ்தமித்து விட்டன. - 'பள்ளிக்கூடம் ஒழுங்காய்ப் போவதுமில்லை, படிப்பதுமில்லை; கெட்ட சகவாசமும், தீய பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. எல்லாவற்றிற்கும் சிகரமாகக் கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுகிறான். தங்கள் பெருமை மிக்க குல ஆசாரத்தையும்; அனுஷ்டானங்களையுமே தன் மகன் பரிகசிப்பது போல் நடந்து கொள்கிறான்.'

சின்னத்தாயம்மையாரால், கணவரிடம் முறையிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

வெங்கடப்ப நாயக்கரும், மகனைத் திருத்த, தனக்குத் தெரிந்த வழியெல்லாம் முயன்று தோற்றுப் போனார். அவனைத் திருத்த ஒரே வழிதான் அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இராமசாமியை அருகில் அழைத்தார்.

அவன் தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையைக் கேட்டு வாங்கினார்.

"இனிமேல் நீ படிக்க வேண்டாம்; என்கூட மண்டிக் கடைக்கு வந்து வியாபாரத்தை கற்றுக் கொள்" என்றார்.

இராமசாமி எவ்வித மறுப்பும் கூறாமல் “சரி அப்பா", என்று கூறினான்.

தன்னுடைய தந்தை, எவ்வித முன் அறிவிப்புமின்றித் திடீரென்று தன் படிப்பை நிறுத்தி விட்டாரே! என்கிற கவலையோ, துளி வருத்தமோ கூட இராமசாமிக்கு ஏற்படவில்லை.


'பகுத்தறிவில்லாத ஆசிரியர்களிடம் பாடம் படிப்பதைவிட; படிக்காத முட்டாளாக இருப்பதே மேல்' என்று அவருக்குத் தோன்றியது.

ஊர்ப்பிள்ளைகளுக்கெல்லாம், கல்விக்கண் திறக்கப் பள்ளிக்கூடம் கட்டியவர்; தன் பனிரெண்டு வயதுப் பிள்ளைக்குப் பள்ளியின் வாசலை அடைத்து விட்டார். ஆசிரியர்கள், பெரிய தலைவலி விட்டதென்று மகிழ்ந்தனர். 1891-ம் ஆண்டோடு அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது.

இராமசாமி இதற்கெல்லாம், சிறிதும் கவலைப் படாதவராகவே காணப்பட்டார். சாதிப்பித்து பிடித்த ஆசிரியரிடம் கல்வி கற்பதை விட முட்டாளாக இருப்பதே மேல் என எண்ணி, அப்பாவுடன் சேர்ந்து கடைக்குப் போனார். வெகு விரைவிலேயே வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கமிஷன் கடையில் திறமையாக ஏலம் போட்டு விற்பது -

மொத்த வியாபாரிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் பக்குவமாகப் பேரம் பேசவேண்டிய முறை -

இரயில் நிலையங்களிலிருந்து கடைக்கு வந்து போகும் சரக்குகளுக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொள்வது;

இப்படித் தன்தந்தையின் தொழில் துறையில் - சகல விதத்திலும் தன் அறிவுத்திறனை பிறர் மெச்சும்படியாக இராமசாமி நடந்து கொண்டு; விரைவிலேயே நற்பெயர் எடுத்து விட்டார். வியாபாரிகள்; வயதான வெங்கட்டப்பரை விட சுறுசுறுப்பும், புத்தி கூர்மையும் உடைய இராமசாமியிடம் வியாபாரம் செய்யவே விரும்பினர்.

பல ஆண்டு கால அனுபவமுடைய தன்னுடைய தொழில் வெற்றியின் ரகசியத்தை, பனிரெண்டு வயதிலேயே புரிந்து கொண்டு வெற்றி மகனை எண்ணி வெங்கட்டப்பர் உள்ளம் பூரித்தார். இது தாயாருக்கும் பெருமையாயிருந்தது. ஆனால், இராமசாமியின் உள்ளத்தில் மட்டும் ஒரு குறை -

முன்பெல்லாம் பள்ளி விட்டதும், வீட்டில் நடக்கும் இராமாயணம், பாரதம் சொற்பொழிவுகளை அவரால் கேட்க முடிந்தது.

இப்பொழுது கடையை விட்டுப் போக முடியாது.

ஆனால் கடை விடுமுறை நாளில் கதை சொல்கிறவர்கள் வீடு தேடிப் போவார்.

இவர்கள் எதைச் சொல்லி, நாள் தவறாமல், இத்தனை மக்களைத் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்கள் என்று அறியவோ -

அல்லது -

இத்தனை பேரும் இந்தக் கதைக்காரர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ள வருகிறார்கள் என்று அறிந்து கொள்ளவோ -

இராமசாமியும் விடுமுறை நாளில் அவர்கள் வீடு தேடிப்போய் நடந்த ஒரு வாரக் கதையையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்கள் மகிழ்ச்சியோடு கூறுகிற விளக்கங்கள் தனது பகுத்தறிவுக்கு ஏற்பதாக இல்லாவிட்டாலும்; வாதம் செய்ய மாட்டார். வாதம் செய்தால், அதிகப் பிரசங்கி என்று பிறகு கதை சொல்ல மாட்டார்கள்; அதன் பிறகு அவர்களிடமுள்ள விஷய ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்வதோ;

எடை போடுவதோ எப்படி!

மேலும், முன்பு ஒரு சமயம், இப்படி ஒருவரிடம் வாதம் செய்து, அப்பாவின் கோபத்திற்கு ஆளானதை அவர் மறக்க இல்லை.

விடுமுறை நாளைக் கூட வீணாக்காமல், இராமசாமி தன் வீடு வந்து கதை கேட்பதை சில உபன்யாசகர்கள், பெருமையாக சின்னத் தாயம்மையாரிடம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாய் மகிழ்ந்து போவார்.

தன் மகன் மிகவும் திருந்தி விட்டான்; தீய வழிகளை விட்டு, இறைவனிடமும், பக்தி மார்க்கத்திலும் அவன் மனம் செல்லவாரம்பித்து விட்டது, என்று பெருமையோடு அடிக்கடி எண்ணிக் கொள்வார்.

கிருஷ்ணசாமி படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மளமளவென்று முன்னேறினார்.

சித்த வைத்தியம் பயின்று பட்டம் பெற்றார். தனது தந்தையார் நிறுவிய தர்ம மருத்துவமனையைக் கவனித்துக் கொண்டார். ஏழை நோயாளிகளுக்கு மனமுவந்து, முழு நேரப் பணியாற்றினார். அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவராகப் புகழ் பெற்றார்.

பெற்றோர் மனம் கோணாதபடி நடந்து இனிய வாழ்வு வாழ்ந்து வந்தார்.