தந்தை பெரியார்/புதிய பாதை... புதிய பார்வை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

18. புதிய பாதை - புதிய பார்வை...

"இந்த நாட்டில் கடவுள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கிறானேயொழிய தன்புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதேயில்லை; எப்படி முன்னேற முடியும்?"

- தந்தை பெரியார்

இறைவன் படைப்பில் மக்கள் அனைவருமே சமமானவர்கள்தான். ஆயினும் அழிக்க முடியாத ஒன்றாக இன்று நம்மிடையே உயர்வு தாழ்வு உருவாகிவிட்டது.

கடவுள் மனிதனைப்படைத்தான். மனிதன் சாதியைப் படைத்தான். அதில் பல பிரிவுகளையும் படைத்து - சிலரைத் தீண்டாதவர்களாகவே உருவாக்கி விட்டார்கள்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு இனத்தவரைக் குறிப்பிடுவது மனித மனத்தைப் புண்படுத்தக் கூடிய செயலாகும்.

அதனாலே மகாத்மா காந்தி அவர்களை அரிசன் என்று புதிய பெயரிட்டு அழைக்கலானார். சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று வடக்கே இருந்து குரல் கொடுத்தார்.

தெற்கே வாழ்ந்த ஈ.வே.ரா.வின் செவிகளில் காந்திஜியின் இந்தக் குரல் தேனாகப் பாய்ந்தது. அவரது கொள்கைகளும் தனது கொள்கைகளும் ஒரே இலட்சியப் பாதையை நோக்கித்தான் பயணமாகின்றன என்பதை ஈ.வே.ரா. புரிந்து கொண்டார்.

அன்றிலிருந்து காந்திஜியிடமும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி மீதும் ஈ.வே.ரா. மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.

காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் அவரது மனதைக் கவர்ந்தன.

ஈ.வே.ரா.வுக்கு நண்பராக விளங்கியவர் இராச கோபாலாச்சாரியார்.

ஈ.வே.ரா. ஈரோட்டில் சேர்மேனாக இருந்தபோது இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் சேர்மேனாக இருந்தார். ஈ.வே.ரா.வின் நிர்வாகத் திறமையை இராசகோபாலாச்சாரியார் நன்கு அறிவார்.

ஈ.வே.ரா.வை மக்கள் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது அவரை எதிர்த்து நின்ற சிலர் ஈ.வே.ரா. ஒழுக்கமில்லாதவர் பொறுப்பில்லாதவர் இப்பதவிக்கு அருகதை அற்றவர் என்று கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். கலெக்டர் அதை ஏற்றார்.

ஈ.வெ.ரா. அதை மறுத்து என் மீது பொறாமை கொண்டு கொடுத்த மனு அது. நான் கிட்டத்தட்ட பொது நிறுவனங்களில் தலைவராகவும், உறுப்பினராகவும், செயலாளராகவும் முக்கிய பதவிகள் வகிக்கிறேன். இப்பதவிக்கு நான் முற்றிலும் தகுதியுடையவன் என்று எதிர் மனு கொடுத்தார்.

இரு மனுக்களும் வழக்கறிஞர் இராசகோபாலாச்சாரியாரின் பரிசீலனைக்கு வந்தது. ஈ.வே.ராவைப் பற்றி நன்கு அறிந்திருந்த இராசகோபாலாச்சாரியார் 'ஈ.வே.ரா. மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.

அப்போதிலிருந்தே இராசகோபாலாச்சாரியாருக்கு தன்னோடு ஈ.வே.ரா.வை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

மதுரையில் மில் தொழிலாளர்கள் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. மதுரையில் மில் தொழிலாளர் சங்கத்திற்கு ஈ.வே.ரா. தலைவர். இவ்வழக்கை நடத்திய டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் மில் தொழிலாளர்களுக்காக வாதாடும் இராசகோபாலாச்சாரியாரும் மதுரை போகும் வழியில் ஈ.வே.ரா.வின் வீட்டில் தங்குவார்கள்.

அப்போது இராசகோபாலாச்சாரியார் ஈ.வே.ரா.வைப் பற்றித் தாம் கொண்டுள்ள விருப்பத்தை நாயுடுவிடம் கூறினார்.

வரதராஜுலு நாயுடும் அது நல்லதே என்று எண்ணினார். உடனே நாயுடு ஈ.வே.ரா.விடம்,

"ஈ.வே.ரா. நீங்கள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டு செய்யுங்களேன். உங்களுடைய திறமையான சேவை நாட்டுக்கும் பொது மக்களுக்கும் பயன்படட்டுமே” என்றார்.

இராசகோபாலாச்சாரியாரும் எடுத்துக் கூறினார்.

காங்கிரஸ் மீதும் காந்திஜி மீதும் முன்னரே மதிப்புக் கொண்டிருந்த ஈ.வே.ரா. தன் இரு நண்பர்களின் அழைப்பை மறுக்காமல் காங்கிரசில் சேர்ந்தார்.

மதுரை மில் வழக்கில் தொழிலாளர்களே வெற்றி பெற்றனர். ஈ.வே.ரா.வின் புகழ் ஓங்கியது.

அதுவரைத் தனி மனிதராக நின்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்து வந்த ஈ.வே.ரா. தன்னை ஒரு தேசிய நீரோட்டமுள்ள கட்சியுடன் இணைத்துக் கொண்டு முன்னிலும் அதிக உற்சாகமாகச் செயல்படலானார்.