தந்தை பெரியார்/பூத்துக் குலுங்கும் பகுத்தறிவுப் பூங்காவின் நுழைவாயில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
1. பூத்துக் குலுங்கும் பகுத்தறிவுப் பூங்காவின் நுழைவாயில்

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், அத்தொண்டிற்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே எண்ணுகிறேன்.

என் கருத்துக்கள் பாராட்டப் படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.

- தந்தை பெரியார்

அன்பார்ந்த குழந்தைகளே...

மாணவ மணிகளே...

நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது.

சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார்.

அவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம்.

தாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார்.

சாதி, மதம், இனம், மொழி இவற்றின் பேரால், தமிழனை உயர் சாதியினர் இனம் பிரித்தனர்.

தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஆதி திராவிடர்களைத் தங்கள் அடிமைகள் போல் எண்ணி நடத்தினர்.

உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த தமிழனரின் நடமாட்டத்திற்குத் தடை விதித்தனர்.

காலில் செருப்புடனோ, தோளில் துண்டுடனோ, உயர் வகுப்பினர் எதிரில் செல்வதும்; நின்று பேசுவதும் குற்றமாகக் கருதப்பட்டது.

மண்ணில் மட்டுமல்ல - நீரிலும் தமிழனுக்கு முழுச் சுதந்திரமில்லை.

இயற்கை வழங்கிய, ஆறு, குளம், ஏரி, கிணறு போன்ற நீர்த் தேக்கங்களிலும், தமிழனுக்கென்று தனியாக துறைகள் ஒதுக்கப்பட்டு, விலக்கி வைக்கப் பட்டிருந்தனர். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரயில் நிலையங்களிலும், இதர பொது உணவு விடுதிகளிலும் கூட, உயர்சாதியினருக்கெனத் தனியாக இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

மனிதருக்கு மனிதர் ஏன் இந்த வேற்றுமையும் பாரபட்சமும்?

இதையெண்ணி வெட்கப்பட்டு, வெகுண்டு எழ வேண்டிய தமிழனே, தமிழினத்தைச் சார்ந்த ஆதி திராவிடரை அன்னியர் போல் எண்ணியது எவ்வளவு பெரிய அறியாமை!

உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர்பாய்ச்சிக் கதிர்அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால்

அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும் - அந்த ஏழை, அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம், சோற்றைத் தொட்டால் தீட்டு, இது எத்தனை பெரிய சோகம்!

உலக மக்கள் அனைவருமே, இறைவனின் குழந்தைகள் என்பது பொய்யாகி -

'இறைவன் படைப்பில் தீண்டத்தகாத குழந்தைகளும் உண்டு, என்பது நியாயப்படுத்தப் பட்டு வந்த காலமது. இல்லாவிட்டால்,

ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து - உச்சியில் கோபுரக்கலசம் வைக்கிற வரை, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு - ஆலயத்தின் மணிக் கதவங்கள் திறக்க மறுப்பதேன்! கருவறைக்குள்ளே சென்று, கடவுளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தொழ வேண்டும், என்று அவர்கள் ஆசைப்படவில்லை.

கொடிமர நிழல் கூட வேண்டாம், கோபுரவாயிலில் நின்று தரிசித்தாலே போதுமென்று கெஞ்சினார்கள்.

ஆலயத்தின் அருகில் கூட வரக்கூடாதென்று, உயர் சாதியினரால் அடித்து விரட்டப்பட்டனர்.

இதையெல்லாம் நம்புவதற்கு இன்றைய இளைய தலைமுறையினராகிய குழந்தைகளே உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் -

இப்படியெல்லாம் இந்த நாட்டில் நடந்து வந்தது உண்மை!

இது போன்ற கொடுமைகளையெல்லாம் கண்டு மனம் பொறாமல் -

இன்றைக்கு 117 - ஆண்டுகளுக்கு முன்னர், பிறந்த ஒரு குழந்தை - தாழ்த்தப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்தது.

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள ஈரோட்டில்... அளவற்ற தெய்வநம்பிக்கையும், இறை வழிபாடுகளும் நிறைந்த ஒரு ஆத்திகன் குடும்பத்தில் - நாத்திகமே உருவாய், இறை நம்பிக்கையே இல்லாத அந்தப் பகுத்தறிவுக் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை அழும்போதெல்லாம் 'கடவுள் இல்லை', என்று கூறுவது போலவே ஒலித்தது. பின்னாளில், அக்குழந்தையே, தந்தை பெரியாரானார். மிகச் சிறந்த சீர்திருத்தச் சிந்தனையாளர் என்றும் -

மனிதாபிமானம் மிக்கவர்; சுயமரியாதைக்காரர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களை, தலைநிமிரச் செய்தவர் என்றும்; ஒடுக்கப்பட்டவர்களுக்குப் புதுவாழ்வு கொடுத்தவர் என்றும் தந்தை பெரியாரைப் பலரும், பலவிதமாகப் போற்றிப் புகழ்ந்தாலும் -

தந்தை பெரியார், தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் என்று, தந்தை பெரியாரிடமே கேட்போமே!

நான் யார்?

"ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு, அதே பணியாய் இருப்பவன்."

- தந்தை பெரியார்

தந்தை பெரியார் இப்படித்தான் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார்.

சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அடிப்படையில், மனிதனுக்கு மனிதன், உயர்வு தாழ்வு இல்லாத, சுயமரியாதை மிக்க, ஓர் உன்னதமான சமுதாய மறுமலர்ச்சி காண, இரவு பகலாகப் பாடுபட்டார்.

எதிர்ப்பையே சுவாசித்து வளர்ந்த தந்தை பெரியார், எதற்கும் அஞ்சாத வீரனாய்; கொள்கை முழக்கத்தோடு, தன் கடமைகளைத் தொடர்ந்து செய்து வெற்றி கண்டவர்.

யாரையும், எவரையும் துணை தேடாமல், மக்களை மனமாற்றம் செய்யும், தன் ஓயாத பேச்சையும், ஒய்வில்லாத எழுத்தையுமே நம்பி; அகிம்சா வழியில் போராடியவர் தந்தை பெரியார்.

என்றுமே மக்களைச் சந்திப்பதையும், மக்களோடு மக்களாய் பழகுவதையும், மக்களுக்காகவே மேடை தோறும் பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதையும்; அவர்களுடைய மேம்பாட்டிற்காகவே தொடர்ந்து எழுதுவதையும் இறுதிவரைத் தந்தை பெரியார் நிறுத்தவே இல்லை.

தந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி!

நொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார்.

இப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல -

நிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, தனது கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார்.

அவரது பகுத்தறிவு நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை, அடுத்து வரும் அத்தியாயங்களில், படித்து மகிழலாம் வாருங்கள்.