தந்தை பெரியார்/பொதுத் தொண்டு செய்பவனுக்குப் பதவிகள் எதற்கு?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

28. பொதுத் தொண்டு செய்பவனுக்கு
பதவிகள் எதற்கு?

"சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியமல்ல; கடவுள் தொண்டு, தேசத் தொண்டு, என்பவைகளை யாரும் செய்யலாம்;

சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும், எதிர்ப்புக்கும், மானாவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன் வருவது கிடையாது."

- தந்தை பெரியார்

நீதிக் கட்சியின் 14-வது மகாநாடு, 1938-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடைபெற்றது. மகாநாட்டின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரியாரோ -

இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

சிறையில் பெரியார் நூறு நாட்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்தார்.

அவர் உடல்நலம் குன்றியது. வயிற்றுப் போக்கும், காய்ச்சலும் வந்து அவரை வாட்டியது.

சிறையில் பெரியாரின் உடல் நிலையைக் கேட்டு, தமிழ் மக்கள் உள்ளம் கொதித்தார்கள்.

கிளர்ச்சி மூளும் என்ற பயத்தில், அரசு 1931 மே மாதம் 22ம் நாள் விடுதலை செய்தது.

விடுதலையடைந்து பெரியார் இன்னும் வீராவேசமாகச் செயல்பட்டார்.

'தமிழர் சுயாட்சி பெற வேண்டும்', என்கிற தனது நீண்ட நாளையக் கருத்தை -

'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முதல் முழக்கமாக 17.12.1939 ம் நாள் தனது குடி அரசுப் பத்திரிகையில் எழுதிப் பிரசுரம் செய்தார்.

இந்தக் கட்டுரை தமிழ் மக்களை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்தது.

அத்துடன் -

கட்டாய இந்தி திணிப்பு காரணமாகவும்; பெரியாரின் ஆவேச இந்தி எதிர்ப்பு பிரசாரத்தினாலும் சென்னையை ஆண்டுவந்த இராசகோபாலாச்சாரியார் தனது முதல் மந்திரிப் பதவியை இழந்திருந்தார்.

இராசகோபாலாச்சாரியார், ஆளுநரின் ஆணைப்படிப் பெரியாரைச் சந்தித்தார்.

நீதிக் கட்சியின் தலைவராயிருந்த பெரியாரை, மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு இராசகோபாலாச் சாரியார் கேட்டுக்கொண்டார்.

தமக்கு அப்பதவி தேவையில்லை என்று பெரியார் திடமாகக் கூறிவிட்டார்.

1940-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று பெரியார் பம்பாய் சென்றார்.

தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற கொள்கைகள் மூலம் அம்பேத்கர் பெரியாரை நன்கு அறிந்து வைத்திருந்தார்.

பம்பாய் வந்த பெரியாருக்கு அம்பேத்கர் பெரிய விருந்து கொடுத்தார். வரவேற்புக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், 'பெரியாரின் சேவை, இந்தியாவிலுள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேவை' - என்று புகழ்ந்து கூறினார்.

பின்னர் பெரியாரை, அம்பேத்கர் ஜின்னாவிடம் அழைத்துச் சென்று, தென்னாட்டில் பெரியார் செய்து வரும் தொண்டுகளைப் பெருமையோடு எடுத்துக் கூறினார்.

ஜின்னா பெருமையோடு கை குலுக்கித் தன் கருத்துக்களையும் கூறினார். பெரியார் பம்பாயை விட்டு சென்னை வந்த பிறகு ஒரு மாறுதல் ஏற்பட்டது.

"இந்தி கட்டாயப் பாடமில்லை. இந்தியை மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம். அது விருப்பப் பாடம்" என்று நேருஜி கூறினார். சென்னை மாகாணத்தை அப்போது ஆண்டுவந்த அட்வைசர் ஆட்சியினர் இதை அறிவித்திருந்தனர்.

'இந்த வெற்றி, இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி; அந்த வெற்றிக்கு உரியவர் பெரியார்' தான் என்று அனைத்துக் கட்சிகளும் பாராட்டிப் புகழ்ந்தன.

பெரியாருக்குப் போராட்டங்களில் இல்லை என்றால், ஒருநாள் கூட சுவையாக இருக்காது.

இந்தி எதிர்ப்பை அடுத்து; ரயில் நிலையங்களிலுள்ள உணவகங்களில், பிராமணருக்கென்று தனி இடம் ஒதுக் கப்பட்டிருந்தது.

இதை ஆட்சேபித்து பெரியார் ரயில்வே நிர்வாகத்திடம் போராட்டம் நடத்தினார். பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கழகத் தொண்டர்கள் அழித்தனர். இறுதியில் -

1941-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் நாள், பெரியார் விருப்பப்படியே இரயில்வே உணவு விடுதிகளில், சாதி பேதம் நீக்கப்பட்டு, பொது உணவு விடுதியாக மாறியது.