தமிழகத்தில் குறிஞ்சி வளம்/குற்றாலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. குற்றாலம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.


திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் தேனடையிலிருந்து சொட்டும் ஒரு துளி தேன் இப் பாடல். குறத்தி கூறும் மலை வளத்தின் சுவையான பகுதி. பாடலைப் படிக்கும் போதே நாவில் தேனருவித்திரை எழும்பி ஓடி வருகிறது. அம் மலையை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டால் நம் உள்ளம் உவகைக் கடலாக மாறிவிடும் என்பதில் ஐயமுண்டோ ! குற்றால மலையின் பேரழகை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். அதனால் எவ்வித இழப்பும் இல்லை. இராசப்பக் கவிராயர் அம் மலையின் எழில் நலத்தைத் தம் கவிதை என்னும் கருவியால் படம் பிடித்து ஒவ்வொரு காட்சியாகக் காட்டிச் செல்லுகிறார். அவரைத் தொடர்ந்து செல்லுவோம்.

குற்றால மலையின் உச்சியிலிருந்து பல அருவிகள் இன்னிசை எழுப்பிக்கொண்டு இழிந்து வருகின்றன, வரும்போது முத்துக்களை கழற்சிக்காய்களாக வீசி விளையாடிக்கொண்டு ஓடி வருகின்றன. அருவிக் கரைகளில் பரவியிருக்கும் மணலில் சிறு வீடு கட்டி, கொஞ்சு மொழிக் கோதையர் செஞ்சொற் பேசி விளையாடு கின்றனர். அவ் வீடுகளைத் தம் திரைக் கைகளால் அழித்துக்கொண்டு ஓடுகின்றன அவ் வருவிகள். மலையில் வீழ்ந்த கிழங்கைத் தோண்டியெடுத்தும், தேனெடுத்தும் பொழுதைக் கழிக்கின்றனர் மக்கள். தினையை உரலிலிட்டு, கைவளை குலுங்க யானைக் கொம்பால் குற்றுகின்றனர் பெண்டிர். 'பிறகு தேனையும் தினைமாவையும் பிசைந்து வயிறார உண்டு, மனமார மலை வளம்பாடி ஆடுகின்றனர்.

அம் மலைமீது நிறைந்து வாழும் வானரக் கூட்டம் தேமாவின் தீங்கனிகளைப் பறித்தெடுத்துப் பந்தடித்து விளையாடுகின்றது. முகை விரிந்து தேன் துளிர்க்கும் சண்பக மலர்களின் நறுமணம் அருகிலுள்ள வானுலகம் சென்று வீசுகிறது. ஆடும் அரவு ஈனும் மாணிக்கங்கள் எங்கணும் பேரொளி வீசுகின்றன. வட்ட நிலா வானத்தில் எட்டிப் பார்க்கிறது. அதைச் சோற்றுக் கவளமென்று எண்ணிய யானை ஒன்று, ஓடிப்பற்ற முயல்கிறது. தினைவிதைப்பதற்காக வேடுவர்கள் மலைமீதுள்ள காடுகளைத் தீயிட்டு அழிக்கின்றனர், அத் தீயில் பட்டு எரியும் சந்தன மரங்களும், குங்கும மரங்களும் காடெங்கும் தங்கள் நறுமணத்தைப் பரப்புகின்றன. வரையாடுகள் எங்கும் குதித்து விளையாடுகின்றன. குற்றாலமலை மிகவும் உயர்ந்திருப்பதால், காகம் அம் மலையுச்சியையடைய முடிவதில்லை. உயர்த்து பெருமிதத்தோடு நிற்கும் அம் மலையுச்சிகளில் மேகக் கூட்டங்கள் படிகின்றன. வானத்தில் தோன்றும் இடி முழக்கம், முழவின் ஓசைபோல் அதிர்கிறது. அம் முழக்கத்திற்கேற்ப மயிலினங்கள் தோகை விரித்தாடுகின்றன. இயற்கையின் இருப்பிடமாய், எழில் வளத்தின் கொள்கலமாய் விளங்கும் இம் மலையைப் பற்றி, சைவ சமய குரவராகிய திருஞான சம்பந்தர் இனிமை சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார். அப்பாட்டுப் பின் வருமாறு:-

"வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக் கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்
சொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
மைம்மா நீலக் கன்னியர் சாரல் மணிவாரிக்
கொய்மா ஏனல் உண்கிளி ஓப்பும் குற்றாலம்
போதும் பொன்னும் உந்தியருவி புடை சூழக்
கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
அரவின் வாயின் முள்ளெயி றெய்ப்ப அரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்".

இவ்வாறு இலக்கியப் புகழ் பெற்று விளங்கும் குற்றாலம் மலைபடு பொருள்களுக்கும் பெயர் பெற்றது. கொய்யா, பம்பிளிமாஸ், வாழை, மா, பலா, ஆரஞ்சு, வங்கிஸ்தான், தென்னை, கழுகு, சந்தனம், குங்கிலியம், செண்பகம், ரோஜா, முல்லை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலம், முதலியன இங்கு நிறைய விளைகின்றன, அருவி நீரும், இளந்தென்றலும் இங்கு வாழ்வோரின் உள்ளத்தை உவகையிலாழ்த்துவதோடு உடலுக்கும் நலம் பயக்கின்றன. இங்கு அழகிய வண்ணக் கற்கள் பல வடிவங்களோடு சிதறிக்கிடந்து வைரத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. எங்குப் பார்த்தாலும் பசுமரங்கள்! நீல நிறமான மலைமுகடுகள்! மஞ்சு தவழ்ந்து மகிழ்ந்து ஆடும் குன்றுகள் ! அக்குன்றுகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஆயிரம் ஆயிரம் வண்ண மலர்கள் ! எங்கு பார்ப்பினும் வருவாய் நல்கும் வளமிக்க காஃபித் தோட்டங்கள்!

குற்றாலம் என்ற பெயரால் தமிழகத்தில் இரண்டு ஊர்கள் உள்ளன, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்குற்றாலம், நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊா; இன்பவாழ்விடம். தென்காசியிலிருந்து மேற்கே மூன்றரைக்கல் தொலைவிலுள்ளது. இது மேற்குமலைத் தொடரின் தென் கிளையின் மேல் சுமார் 550 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இது குறும்பலா, திருக்குற்றாலம் முதலிய இருபத்தொரு பெயர்களால் வழங்கும். இவ்வூருக்கு அண்மையில் ஓடும் நெடுஞ் சாலைகளிலிருந்து, பல கிளைப் பாதைகள் வலை பின்னினாற்போல் அமைந்து இவ்வூரை இணைக்கின்றன. ஐரோப்பியரும் இந்திய நாட்டுச் செல்வரும் இந்நகரில் விரும்பி வாழ்கின்றனர். குறிஞ்சியழகும், குளிர் தென்றலும், நீர் வீழ்ச்சிகளும், குறும்பலாவீசர் கோவிலும், இவ்வூருக்குப் பெருஞ் சிறப்பு நல்குகின்றன. ஆண்டுக்கு இங்கு 60 அங்குல மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் திங்கள் வரை 'அரியங்காவுக் கணவாய்' வழியாகத் தென் மேற்குப் பருவக்காற்றினால் துரத்தப்பட்ட மேகக் கூட்டங்கள் திரள் திரளாக இங்கு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சமயத்தில் வேறு எங்கும் மழை கிடையாது. ஆனால் குற்றாலமும் அதைச் சுற்றியுள்ள சரிவுகளும் நிறைந்த மழையைப் பெறுகின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வானத்தில் மிதந்து திரியும் மேகக் கூட்டங்களிடையே புகுந்து வீசும் காற்று குளிர்ச்சி பெற்று, குற்றால நகரின் வெப்ப நிலையைப் பத்து முதல் பதினைந்து டிகிரிவரை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கோடைக்காலத்தில் மக்கள் இங்கு வந்து திரளாகக் கூடுகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர்வரை, இங்கு மக்கள் மிகுதியாகத் தங்கும் சிறப்புக் காலமாக இருந்து வருகிறது.

குற்றாலமலையில் தோன்றும் சிற்றாறு {சித்திரா நதி) சம நிலத்தை அடைவதற்கு முன் பல நீர் வீழ்ச்சிகளாக விழுந்து ஒன்று கூடுகின்றது. சித்திரா நதி 200 அடி உயரத்திலுள்ள காட்டிலிருந்து கீழே விழுந்து சமவெளியை அடைகிறது. இது வேத அருவி எனப்படும். இதைக் கீழிருந்து பார்த்தால், அருவி விண்ணிலிருந்து குதித்து வருவது போன்று தோன்றும். இவ் வீழ்ச்சியின் நடு வழியிலுள்ள ஒரு பாறை அருவியைத் தடுக்கிறது. அப்பாறையில் நீர் விழுந்து விழுந்து மிக அழகான ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அருவி பாய்ந்து பொங்கி எழுவது, கடல் பொங்கி எழுவது போலத் தோன்றும். எனவே, இதற்குப் 'பொங்குமாங் கடல்' என்று மிகப் பொருத்தமாகப் பெயரிட்டிருக்கின்றனர். இப்பொங்குமாங் கடலிலிருந்து கீழே விழும் அருவியில் தான் மக்கள் குளிப்பர். குற்றால அருவி எனப்படும் இதில் குளித்தால், உடலில் ஒரு புத்துணர்ச்சி மலரும்; உடல் நலம் பெறும்.

குற்றாலத்தைவிடக் குளிர்ச்சியான மலைகள் பல உள. ஆயின், குற்றாலத்தைப்போல் மக்கள் நீராடுவதற் கென்று அமைந்த சீரான அழகுடைய அருவி வீழ்மலைப் பதி எதுவும் இல்லை, சிற்றாறு பல பகுதிகளாகப் பிரிந்து வீழ்ந்து அப்பகுதியையும் அருகிலிள்ள இடங்களையும் வளப்படுத்துகிறது. மலைமேல் பொழியும் பெரு மழையே இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்கிறது. பிரிந்து விழும் இவ்வருவிகளுக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் உயரமாக விழும் அருவி தேனருவியாகும். அது மேலிருந்து விழும் இடத்தில் தேன் கூடு அதிகமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது போலும். இதற்குச் சற்றுக் கீழாக விழும் அருவி சண்பகதேவி அருவி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இவ்வருவி விழும் இடத்தில் சண்பகதேவி என்ற அம்பிகை, கோவில் கொண்டிருக்கிறாள். இவ்விடத்தை முன்னர் சண்பக அடவி என்று முன்னோர் அழைத்தனர். முதலில் இவ்விடத்தில் சண்பக மரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கீழே தரையில் விழுவதை வட அருவி என்று அழைக்கின்றனர். இது வடதிசையில் அமைந்து இருப்பதால் இப்பெயர் பெற்றது. இதைப் பெரிய அருவி என்றும் கூறுகின்றனர். இதன் அளவு நோக்கி இப்பெயர் இடப்பட்டிருக்க வேண்டும். மிகவும் அளவில் சிறியதாக விழும் அருவி சிற்றருவி என்று அழைக்கப்படுகிறது. ஐந்தருவி என்ற மற்றொரு அருவியும் இருக்கிறது. இது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்கிறது. இவை ஐந்தும் தனித்தனியே பத்து கஜ தூரத்திலிருந்து விழுகின்றன. பொங்குமாங் கடலி லிருந்து சுமார் 2 கல் தொலைவு குறுகிய செங்குத்தான பாதையின் வழியாகப் போனால் சண்பக அருவி தென்படும். போகும் வழி நெடுக மா, பலா, கமுகு, ஏலம், கிராம்பு முதலிய மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும். மேலும் 2 கல் சென்றால் தேனருவியை அடையலாம். குற்றால நாதர் கோவிலுக்குத் தென் மேற்கில் 11 கல் தொலைவில் ஐந்தருவி உள்ளது. இங்குக் குளிக்கலாம்.

நீர் வீழ்ச்சி விழும் பாறையில் பல சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குளிக்கும் கட்டத்திலிருந்து சில நூறு அடி தூரத்தில், ஆற்றின் கரையில் குற்றால நாதர் கோவிலமைந்துள்ளது. விழாக் காலங்களில் இன்னிசை முழக்கோடு இவ்விறைவனை, அருகிலுள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர். பிறகு நீர்வீழ்ச்சியில் இறைவனைக் குளிப்பாட்டுகின்றனர். நாள்தோறும் கோவில் குருக்கள் தான் சிவலிங்கங்களுக்குப் பூசை நடத்துகின்றார். புண்ணிய நாட்களில் சித்திரா நதி, புனித கங்கையாகக் கருதப்படுகிறது. இந் நீர்வீழ்ச்சிகளின் சிறப்பால், குற்றாலம் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் குற்றால நாதரைத் தரிசிக்க இங்கு வந்து கூடுகின்றனர், திருக்குற்றால ஸ்தல புராணத்தில் இவ்வூர் 'திரி கூடாசலம்' (மூன்று சிகரங்களைக் கொண்ட மலை.) என்று குறிப்பிடப்படுகிறது. இங்குக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவன் 'திரிகூடாசலபதி' என்றும், 'திரிகூட நாதர்' என்றும் குறிப்பிடப்படுகிறான். திரிகூடாசலம் என்ற பெயரே 'திருக்குற்றாலம்' என்றும், குத்தாலம்' என்றும் மருவி வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

சைவ சமய குரவர்களில் முதல்வரான மணிவாசகப் பெருமான் குற்றால நகரின் சிறப்பை வான்கலந்த மாணிக்கவாசகத்தால் பாடி மகிழ்ந்தார். அவருக்குப் பின் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் திருக்குற்றாலப் பதிகம், திருக்குறும்பலாப் பதிகம் என்ற இரு பாமாலைகளால் குற்றால நாதரை ஒப்பனை செய்து பரவி மகிழ்ந்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மேலகரம் மகாகவி திரிகூட ராசப்பன் கவிராயர் 'திருக்குற்றாலக் குறவஞ்சி', 'திருக்குற்றால மாலை', 'திருக்குற்றால ஊடல்' என்ற நூல்களைப் பக்திச் சுவையும் இன்பச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். திருகூட நாதர் கோவில் குறுமுனியான அகஸ்தியரால் இங்கு நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரமசிவனுக்கும் பருவதராசன் மகளாகிய பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நிகழ்ந்தது. அண்டத்தின் பல பகுதிகளிலிருந்து இறைவனின் திரு மணக்கோலத்தைக் கண்டு மகிழக் கோடிக்கணக்கானவர் கயிலையில் வந்து கூடினர். கூட்டம் மிகுதியாக இருந்ததால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதைச் சரி செய்யப் பெருவிரல் பருமனுள்ள குறுமுனியை இறைவன் தென் திசை நோக்கி அனுப்பினான். தென் திசைக்கு வந்த குறுமுனி பல புண்ணி யத்தலங்களைத் தரிசித்தார். திருக்குற்றாலத்திற்கு வந்து அங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த திருமாலை வணங்கக் கோவிலுக்குச் சென்றார். சிவ வேடம் தாங்கியிருந்த குறுமுனிவர் கோவிலுக்குள் அனுமதிக் கப்படவில்லை. உடனே இலஞ்சியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்த முருகப்பிரானிடம் சென்று இதை முறையிட்டார். முருகனின் அருள் மொழியை மேற்கொண்டு, திருமண்ணும் துளசி மாலையும் தாங்கிய வண்ணம் குற்றாலத்திற்கு வந்தார். இவருடைய வைணவக் கோலத்தைக் கண்ட கோவில் நம்பிகள், இவரை உள்ளே அனுமதித்தனர். கோவிலுக்குள் நுழைந்த குறுமுனி திருமாலைத் தம் திருக்கரத்தால் தொட்டார். உடனே அப் படிமம் சிவபெருமானாக மாறியது. இவ்வாறு வைணவத் தலமாக இருந்த குற்றாலம் அகத்தியரால் சிவத் தலமாக மாறியது. இப் புராணக் கதையில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இம் மாற்றம் அரசியல் மாறுபாட்டால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இக் கோவிலில் 15-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இதன் தென்புறத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள சதுரத் தூண், ஒன்று நாட்டப்பட்டுள்ளது. இத் தூண் தென்காசிக் கோவிலுக்கு முன்பு நாட்டப்பட்டுள்ள தூணை உருவத்தில் ஒத்திருக்கிறது.

நீர்வீழ்ச்சிகளின் அடிவாரத்திலும் ஆற்றின் வட கரையில் கோவிலுக்கருகிலும், பிரயாணிகள் தங்குவதற் கென்று பல மண்டபங்கள் அமைந்துள்ளன. மண்டபங்களுக்கு முன்புள்ள திறந்த வெளி, தள வரிசைக் கற்களால் அமைந்தது. ஆற்றின் குறுக்கே நடை பாதையாக ஒரு பாலம் அமைந்துள்ளது. அங்குள்ள இரண்டு பெரிய மண்டபங்களும் 18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டவை. ஒரு மண்டபம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. மற்றொரு மண்டபம் கொடி மரத்தோடு விளங்குகிறது. இந்த மண்டபத்தில், இதைக் கட்டிய மன்னனின் சிலையும், அவன் சகோதரனின் சிலையும், இராணுவ உடையோடு காட்சியளிக்கின்றன. குற்றால நாதர் கோவிலிலிருந்து சில நூறு கஜங்களுக்கு அப்பால் அமைந்துள்ள மேட்டு நிலத்தின் உச்சியில், இக் கோவிலுக்குச் சொந்தமான வேறொரு சிறு கோவிலும் அமைந்துள்ளது. இது சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆடவல்லான் (நடராசப் பெருமான்) அபிநயக் கோலத்தோடு காட்சியளிக்கிறான். அக் கோவிலின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக் கோவிலின் எதிரில் ஒரு தெப்பக் குளம் உள்ளது. ஆண்டுதோறும் சனவரித் திங்களின்போது இக் குளத்தில் தெப்பத் திருவிழா (Foating Festival) நடைபெறும். ஆற்றின் இடதுபுறமாகக் கோவிலுக்கருகில் ஒரு பெரிய சத்திரம் அமைந்துள்ளது. இது கி. பி. 1700-இல், இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் உணவும் உறையுளும் வழங்குவதற்காகச் சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டது. இச் சத்திரம் இப்போது மாவட்டக் கழகத்தாரின் பொறுப்பில் உள்ளது. இச் சத்திரத்தை ஒட்டிப் பல அறைகளோடு கூடிய ஒரு கட்டிடம் இப்போது மாவட்டக் கழகத்தாரால் கட்டப்பட்டுள்ளது. அது பிரயாணிகளின் தங்கல் மனையாக இப்போது பயன்படுகிறது. பாதைக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள மண்டபம் 'வலங்கைப் புலி விலாஸ்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத் தண்டலர் குற்றாலத்தில் தங்கும்போது, இது அவருடைய அலுவலகமாகப் பயன்படுகிறது. இம் மண்டபம், புகழ் பெற்ற 'பெரியசாமி வலங்கைப் புலித் தேவ'னால் கட்டப்பட்டதாகும். பல நூற்றாண்டுகளாகத் திருக்குற்றாலம் ஒரு புண்ணியத் தலமாக மட்டும் தமிழ் மக்களால் கருதப்பட்டது. ஆனால் வெள்ளையர்கள் தமிழகத்தில் குடி புகுந்ததும், குற்றாலம் கோடை வாழ்விடமாக மாறி எல்லோரையும் தன்பால் ஈர்க்கத் தொடங்கியது.

குற்றால மலையின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையை அறிந்த ஐரோப்பியர், வெளி நாட்டுப் பயிர்களை இங்குக் கொணர்ந்து பயிரிடத் தொடங்கினர். கி. பி. 1795 முதல் 1800 வரையில் ஜாதிக்காய், இலவங்கம் முதலியவற்றைப் பயிரிட்டு இங்குச் சோதனை நிகழ்த்தினார்கள். 'மலாக்கா' நாட்டுப் பயிர்கள் எல்லாம் இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டன. கி. பி. 1800 முதல் 1806 வரை கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வணிகத் துறைத் தலைவராகத் திருவாளர் காசாமேஜர் (Mr. Casamajor) என்பவர் பணியாற்றி வந்தார் (காசிமேசிபுரம் என்ற சிற்றூர் இவர் பெயராலேயே ஏற்பட்டது.) இவருடைய பெருமுயற்சியால் குற்றாலமலைச் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பல தோட்டங்கள் நிறுவப்பட்டன, இலவங்கப் பட்டை பயிரிடும் தோட்டமொன்று, கொக்கரக் குளத்தில் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நடுவர் தங்கியிருந்த பங்களாத் தோட்டத்திற்கு அடுத்தாற்போல் இத் தோட்டம் அமைந்திருந்தது. கி. பி. 1813-ஆம் ஆண்டு குற்றால மலையில் விளைந்த ஜாதிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை ஆகியவை ஐரோப்பிய நாட்டு விற்பனைக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவை உயர்ந்த தரத்தைச் சார்ந்தவையல்ல என்று ஆங்கில்வணிகர்கள் கூறினர். இப்பயிர்த் தொழில் இங்கு நல்ல வருவாய் அளிக்காததால் கம்பெனி வணிகத் துறையார் இத்தோட்டங்களை நிலவரித் துறை (Reveriue department) யிடம் ஒப்படைத்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே இலவங்கப்பட்டை இங்கு நன்றாக விளையாததால், திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் இருந்த இலவங்கப்பட்டைத் தோட்டங்கள் மட்டும் அரசியலாரின் சோதனைக் களங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து, குற்றால மலையில் விளைந்த பொருள்கள் மீண்டும் விற்பனைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டன. அப்பொழுதும் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டது. குற்றாலமலைச் சாதிக் காய்கள் ஐரோப்பியச் சந்தையில் எடுபடவில்லை. அவைகளின் விலையைவிடக் கப்பற்கூலி மிகவும் அதிகமாக இருந்தது. இங்கு விளைந்த காஃபியும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. ஜாவாவில் விளைந்த காஃபியோடு இதனால் போட்டியிட முடியவில்லை. காஃபியைப் பயிரிடுவதற்கு ஏற்பட்ட செலவு, மிகவும் அதிகமாக இருந்தது. குற்றாலத்திலிருந்த காஃபித் தோட்டங்களைத் திருவாங்கூரில் வாழ்ந்த ஓர் ஐரோப்பியத் தோட்ட முதலாளி, ஆண்டுக்கு ரூ. 200 வீதம் 1835- ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். ஆகையினால் பெருஞ்செலவில் அரசியலார் நடத்திவந்த காஃபிப் பயிர்த்தொழிற் சோதனை கைவிடப்பட்டது. திருநெல்வேலித் தண்டலராக இருந்த திருவாளர் ஈ. பி. தாமஸ் தோட்ட வேலையில் மிகவும் ஆர்வமுள்ளவர். கி.பி. 1843-ஆம் ஆண்டு குற்றாலத்தில் மீண்டும் பயிர்த் தொழிலை முழுமுயற்சியோடு தொடங்கினார். சாதிக்காய்ச் செடிகளை இங்கு நட்டதோடு, அவ்விதைகளைத் திருவாங்கூர், சேலம் மாவட்டங்களுக்கும் வழங்கினார். திருவாங்கூர் மலைகளிலும், சேர்வராயன் மலைகளிலும் அவை நடப்பட்டன. தாமஸ் தாம் பயிரிட்ட சாதிக் காய்ச் செடிகளுக்கு நல்ல உரமிட்டார்; களை எடுத்தார்; கிளைகளை வெட்டி விட்டார்; நல்ல முறையில் அவைகளைக் கண்காணித்தார், அவருடைய பேருழைப்பால், கி. பி. 1840 முதல் 1850-ஆம் ஆண்டிற்குள் சாதிக் காய் மரங்கள் நிறைய வளர்ந்தன. அப்பொழுது அத் தோட்டங்கள் 40 முதல் 50 ஏக்கர் வரை பரப்புடையனவாக இருந்தன. அத்தோட்டத்தில் சாதிக்காய் இலவங்கம், காஃபி, சிறிதளவு தேயிலை, சாக்லேட் மரம், மங்குஸ்டீன் முதலியவை நல்லமுறையில் விளைந்தன. கி. பி. 1848-ஆம் ஆண்டு தாமஸ் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அரசியலார் தோட்டங்களை விற்றுவிட எண்ணினர். ஆண்டுதோறும் அத்தோட்டத் தொழிலுக்காக ரூ. 3000 அரசியலரால் செலவிடப்பட்டது. அதுவே தாமஸ் அவர்களின் வெற்றிக்குக் காரணம். ஆனால் இச் செலவு மிகவும் அதிகமானதாக அரசியலாரால் கருதப்பட்டது. இலாபகரமாக இல்லாத இத்தொழிலைக் கைவிட முடிவு செய்தனர். கி. பி. 1853-ஆம் ஆண்டு பான்புலிக்கு மேலே இருந்த ஒரு தோட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை ரூ. 9841- க்கு விற்றுவிட்டனர். அதுவும் சில ஆண்டுகளில் திருவாங்கூர் அரசியலாரின் கைக்கு மாறியது.

விற்கப்பட்ட தோட்டங்கள் மொத்தம் 19. அவற்றில் ஒன்பது தோட்டங்கள் காவற் காடுக (Reserved forests) ளாக மாற்றப்பட்டன. மீதியிருந்த 10 தோட்டங்களில் குறிப்பிடத்தக்கது 'அருவிக்கரைத்தோட்டம்.' இது நீர் வீழ்ச்சியின் உச்சிக்கருகில் அமைந்துள்ளது. இது சிவகிரி ஜமீன்தாரினிக்கு உரிமையுடையதாக இருந்தது. மீதி 9 தோட்டங்களும் குற்றாலத்திற்கு மேல் மூன்று கால் தொலைவில், சித்திரா நதி மேலே ஓடிவரும் பகுதியில் அமைந்துள்ளன. இவ்விடம் இரண்டு செங்குத்தான மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ள குறுகிய பள்ளத்தாக்கில் உள்ளது. இத் தோட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 'பரதேசிப் புதை' என்னும் தோட்டமாகும். இத்தோட்டம், மற்ற எட்டுத் தோட்டங்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பேரடைஸ் எஸ்டேட்' (Paradise Estate) என்ற பெயரோடு இப்போது விளங்குகிறது. இத்தோட்டத்தின் அருகில் ஒரு பெரிய குகை இருக்கிறது. இது இரண்டு பெரிய பாறைகளாலானது. 30 அடி ஆழமுடையது. தாழ்வான ஒரு பாறையின் மீது குடை கவித்தாற் போன்று மற்றொரு பாறை படிந்துள்ளது. அப்பாறையைக் கடந்து கதிரவன் ஒளியும், மழையும் கூட உள்ளே எட்டிப்பார்க்க முடியாது. இக்குகையின் வாயிலில் 15 எழுத்துக்களால் ஆன ஒரு கல்வெட்டுக் காணப்படுகிறது. ஆனால், அதன் பொருள் இது வரையிலும் யாருக்கும் விளங்கவில்லை. அக் குகையில் வாழ்ந்த பரதேசியைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை, முன்னாட்களில் பரதேசித் தோட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களிலும் பணிபுரிந்த கூலிகள் தங்குவதற் கேற்ற இடமாக இக்குகை பயன்பட்டு வந்தது.

'பேரடைஸ் எஸ்டேட்' என்று சொல்லக்கூடிய ஒன்பது தோட்டங்களும், அருவிக் கரைத்தோட்டமும், தூத்துக்குடியில் பிரபல வணிகராக விளங்கிய சி. எச். ஆர். கோக் என்ற டச்சுக்காரரால் விலைக்கு வாங்கப்பட்டன. காஃபி பயிரிடுவதற்காக அருகிலுள்ள நிலங்களையும் வாங்கி அவர் பண்படுத்தினார். அவருக்குப் பிறகு அந்நிலம் பலருடைய கைக்கு மாறித் தற்போதைய சொந்தக்காரரை அடைந்திருக்கிறது. இவைகளன்றி வேறுபல தோட்டங்களும் குற்றாலமலையின்மீது உள்ளன. அவைகளில் தெற்கு மலைத் தோட்டம், ஹோப் எஸ்டேட், குளிராத்தி, திரிகூடா சல பர்வதம் என்பவை குறிப்பிடத்தக்கவை. தெற்கு மலைத் தோட்டத்திலும், பரதேசிப் புதையிலும், அருவிக்கரைத் தோட்டத்திலும், காஃபி நல்லமுறையில் பயிராகின்றது. இலவங்கம், இலவங்கப்பட்டை , சாதிக்காய், மங்குஸ்டீன் முதலியனவும் இங்குப் பயிரிடப்படுகின்றன.

குற்றாலம் கோடைவாழ் நகரமாக மாறியதும், திருநெல்வேலித் தண்டலர், பாளையங்கோட்டை இராணுவத் தலைவர் (Commanding officer), வேறுபல உயர்ந்த அலுவலில் பணியாற்றும் ஐரோப்பியர் ஆகியோர் இங்கு மாளிகை அமைத்துத் தங்குவது பெருவழக்கு ஆகிவிட்டது. இங்குள்ள திருவாங்கூர் மாளிகை (Travancore Residency,) திருவாங்கூர் அரசபரம்பரையினருக்குச் சொந்தமானது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தண்டலராக வந்த லூசிங்டன் துரையுவர்களுக்கு இம்மாளிகை அமைந்துள்ள நிலம் உரிமையுடையதாக விளங்கியது. பாளையங்கோட்டையில் வணிகத்துறைத் தலைவராக விளங்கிய திருவாளர் ஜான்சல்லிவன் துரை, அந்நிலத்தை வாங்கி அழகிய இம்மாளிகையை எழுப்பினார். பிறகு திருநெல்வேலியின் துணைத் தண்டலராக விளங்கிய டபிள்யூ. ஓ. சேக்ஸ்பியர் என்பாரின் கைக்கு இது மாறியது. பிறகு திருவாளர் காக், சேக்ஸ்பியரிடமிருந்து இதை வாங்கித் தம் மகளுக்கு அளித்தார். அந்த அம்மையாரிடமிருந்து திருவாங்கூர் அரசர் இதை வாங்கினார். ஜி. ஏ. ஹக்ஸ் என்பாரால் கட்டப்பட்ட மாளிகை, 'கண்ணாடி பங்களா' என்ற பெயர்கொண்டு விளங்குகிறது. கண்ணாடி பதிப்பிக்கப் பெற்ற பலகணிகளையுடையதாக விளங்கியதால், புதுமை நோக்கி மக்கள் இவ்வாறு அழைத்தனர். பல மாறுதல்களுக்குப் பிறகும், இம் மாளிகை இப்பெயர் கொண்டே விளங்குகிறது. திருவாளர் ஹக்ஸ் தம் மகனான இராம்சிங்கிற்கு இம் மாளிகையைக் கொடுத்துவிட்டார். கொடுக்கும்போது "பாளையங்கோட்டையில் வாழும் இராணுவத்தலைவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது இதில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறிக் கொடுத்தார்.

இப்பொழுது சில காலமாக ஐரோப்பியர்கள் இங்கு அதிகமாகத் தங்குவதில்லை. ஓரிரு ஐரோப்பியப் பாதிரிகளே இங்குக் குடியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம், உதகமண்டலத்திற்கும் கோடைக்கானலுக்கும் சென்றுவிட்டனர். இப்போது தமிழ்நாட்டுச் செல்வர்கள் இங்குத் தங்குவதற்காகச் சிறிதும் பெரிதுமான பலமாளிகைகளை எழுப்பியுள்ளனர். அவைகள் பொதுவாக 'இந்தியன் வில்லாஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் பெரும்பாலும் கோவிலுக்கருகிலும், நீர்வீழ்ச்சிக்கருகிலும் கட்டப்பட்டுள்ளன.

குற்றாலத்தின் இயற்கைக் காட்சிகள், காண்போருக்கு இந்திய நாட்டின் மேற்குக் கரையான மலையாளக் கரையை நினைவூட்டுகின்றன. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும்பாதை, பரந்த பசுமையான நெல் வயல்களிடை (ஆண்டுக்கு 9 திங்கள்கள் பசுமையாகக் காட்சியளிக்கும்)யிலும், தென்னை , மா, பலா, கமுகு முதலியவை செழித்து வளர்ந்துள்ள சோலைகளிடையிலும் புகுந்து செல்லும் காட்சி உள்ளத்திற்குப் பேருவகை பயக்கும். மலையிலிருந்து இழிந்துவரும் அருவிகள் சித்திரா நதியை அடைவதற்கு முன் பல ஏரிகளில் தேக்கிவைக்கப்படுகின்றன. அவைகளிலிருந்து பல வாய்க்கால்கள் வலை பின்னினாற் போன்று ஓடி இச் சோலைகளை வளப்படுத்துகின்றன. தாவர இயல் வல்லுநர்களுக்கும், (Botonist) வேட்டை விரும்பிகளுக்கும் குற்றாலமலை பெரிதும் இன்பம் பயக்கும் இடமாக விளங்கு கிறது. கி. பி. 1835 ஆம் ஆண்டு, டாக்டர் வைட் என்பார் இம்மலையிற் போந்து, 20 சதுரமைல் பரப்பில் 1200 வகையான தாவரங்களைச் சேகரம் செய்தார். ஏறக்குறைய 2000 வகையான தாவரங்கள் இங்கு உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சாம்பர் என்னும் பெரிய மானினம் இங்கு அதிகமாகக் காணப்படுபடுகின்றது. மலையின் உயரமான பகுதிகளில் வரையாடுகள் நிறையக் காணப்படுகின்றன. புள்ளிமான் அருகிக் காணப்படுகின்றது. புலி சில சமயங்களில் தென்படுகிறது. காட்டுப் பன்றிகளை எந்நேரத்திலும் எவ்விடத்திலும் காணலாம். காட்டுக்கோழிகள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.