உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/004

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

உண்டி முதற்றே உலகம் இயங்கினும் உண்டியையும்விட உலகில் இன்றியமையாதது ஆடை என்பது சான்றோர் தம் முடிபு. இதனை, ‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்’ என்னும் வள்ளுவர் வாக்குத் தெளிவாக்கும். தெய்வப் புவவர் இக்குறளில் உயிர் கொடுக்கும் உண்டியை முதலில் கூறவில்லை. மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்ன மாந்தர்க்குத் தேவையான உடையையே சொல்லிச் செல்கின்றார். மாந்தனிடம் தனிச்சிறப்புப் பெற்ற ஆடை எண் வகை இன்பம்,[1] எண்ணெண் கலைகள்[2] இவற்றுள் ஒன்றெனத் திகழும் தன்மையையும் பெற்றுள்ளது. ஆடையில்லா மனிதன் அரைமனிதன், ஆள்பாதி ஆடைபாதி என்ற தமிழர் மொழிகளும் இதன் காரணமாகக் கிளைத்தனவே. அறிஞர் பலரும் இதன் மேன்மையினைத் தம் சொற்களால் சிறப்பித்துள்ளனர்.[3]

இவற்றால் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மாந்தரின் சிறப்பியல்புகளையும் உணர்த்தி நிற்பதில் முதன்மை பெறுவனவற்றுள் ஆடையும் ஒன்று எனல் மிகையில்லை.

இத்தகைய பெருஞ்சிறப்புடைய ஆடை பற்றிய கல்வி, நமக்குத் தரும் மாந்தர் வாழ்க்கைக் கூறுகள் பல,

1. உடையின் தன்மை, உடுத்தும் முறை
2. ஆடைத் தொழில் அறிவு
3. மக்களின் பழக்கவழக்கங்கள், கலையுணர்வு, நம்பிக்கையுணர்வு, நாகரிக உணர்வு

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இக்கூறுகள், பல்வேறு இனத்தாரிடையே அமைந்து கிடக்கும் ஒற்றுமைகள், வேற்றுமைகள், பிற நாட்டார் தொடர்பால் ஏற்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றங்கள் போன்றனவற்றையும் புலப்படுத்துகின்றன.

ஆடையின் தோற்றம்

மக்கள் வாழ்வு முறையினைத் தெளிவுபடக் காட்டுவதில் ஒரு கூறான ஆடையின் தோற்றம் பற்றிய வரலாறு இன்றைய நிலையிலும் தெளிவாகாத ஒன்று, அறிஞர் பலர் பல எண்ணங்களைக் கூறிச் செல்கின்றனர். இவற்றுள் தட்ப வெப்ப நிலையைக் காரணமாகக் காட்டுதல் பரவலான கருத்தாகத் தென்படுகிறது.

ஆக்னெஸ் ஆவன் உடையின் தோற்றம் சூழலைப் பொறுத்துப் பலபடியாகத் தோன்றி இருக்க வேண்டும் என்பர். தட்ப வெப்ப நிலை என்று சொல்வது ஆய்வின் முதற்படிதான் என்று இதற்குப் பல விளக்கங்களையும் நவில்வார். ஆடையின் தோற்றம், அணிகலன் என்ற நிலையில் அல்லது ஒரு இனத்தாரிடம் இருந்து இன்னோரு இனத்தாரைப் பிரித்தல் அல்லது தனது தகுதி காட்டல் அல்லது மந்திர சக்தியில் உள்ள நம்பிக்கை போன்ற காரணங்களாகலாம் என்பர்.[4]

தட்ப வெப்பநிலை மட்டுமன்றி, மாந்தர் இனத்தை விலங்குகளிடம் இருத்துப் பிரித்தலில் இருந்தும் தோன்றியிருக்கலாம் என்பர் சிங்காரவேலு.[5] மனிதனிடம் மயிரில்லாமையும், செயற்கையாகப் போர்த்தலுக்கு மனிதனைத் தூண்டியிருக்கக் கூடும் என்றும் இவர் கருதுகின்றார். அறிஞர் சிலரின் எண்ணங்களாக அழகுபடுத்தல், கவர்ச்சி, அடையாளச் சின்னத்தின் வளர்ச்சி நிலை, மாறுவேடம் போன்றவற்றையும் இவர் இயம்புகின்றார்.[6]

மேரியட்டர் கெட்டுனென் என்பார், தட்பவெப்ப நிலையை விடவும், பொருட்களை அணிந்து கொள்வதில் உள்ள ஆர்வமே உடையின் தோற்றம் என முடிவுரைப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் மிகுதியாக உள எனக் காட்டுவார்.[7]

எஸ். என். தார் ஆடையின் தோற்றம் தட்பவெப்பம் கருதியதன்று என்றுரைப்பர். இதற்கு இவர் கூறும் காரணம் வெவ்வேறு இடங்களில் உள்ள பல சமுதாயத்தினரைப் பார்க்கும்போது மிக மோசமான தட்பவெப்ப நிலையிலும் அவர்கள் எவ்வித பாதுகாப்பையும் நாடாமையே.[8] ஆதாம் ஏவாள் தொடர்பானதொரு கருத்தும் காணப்படுகிறது.[9]

இவ்வாறு, அறிஞர் பலரின் எண்ணங்களையும் நோக்க, நாணம், அடக்கம், அடிப்படையில் உடுத்தத் தொடங்கினர் என்னும் குறிப்பு யாண்டும் தென்படவில்லை. தட்பவெப்ப நிலையும் ஆடைத் தோற்றத்திற்குரியதொரு காரணமே தவிர, முதன்மையானது அன்று. ‘அழகு படுத்திக் கொள்ளல்’ என்னும் சிந்தனைக்கே இவர்தம் எண்ணங்கள் பொருந்தி வருகின்றன. இந்நிலையில் ஆடையின் தோற்றம் உடலை அழகுபடுத்திக் கொள்வதினின்றும் உருவானது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இதனை, லெஸ்டர் கருத்தும் உறுதிப்படுத்துகின்றது.[10]

ஆடையும் சூழலும்

1. மானவுணர்வுக்குத் துணையாதல் 2. அழகினை மிகுவித்தல் 3. தட்பவெப்பு நிலையினின்றும் பாதுகாத்தல் 4. தன் தகுதியியம்பல் 5. உடுத்தவர் தகுதியியம்பல் 6. கலையுணர்வு எடுத்துக் காட்டல் போன்ற பல்வேறு பயன்களைத் தன்னில் வெளிப்படுத்தி நிற்கும் உடை, நாட்டின் தட்ப வெப்பம், நாட்டில் உற்பத்தியாகும் மூலப்பொருள், உளவியல், சமுதாயநிலை, உடலின் தன்மை, பொருளாதாரம் என்ற பல நிலைகளுக்கிணங்க அமையும் என்பர்.[11]

இன்று பல்துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மாறுபாடுகள் இக்கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டதைக் காண்கின்றோம்.

அதிக வெப்ப நிலைக்கேற்ப குறைந்த அளவு உடையுடுத்திய தமிழர், பண்பாட்டுக் கலப்பு காரணமாக இன்று அதிகமாக ஆடையுடுத்தல் கண்கூடு. ஒரு நாட்டில் மூலப் பொருட்கள் எல்லா நாட்டினருக்கும் கிடைக்கத் தொடங்கவே எல்லா வகை ஆடைகளையும் எல்லா மாந்தரும் பயன்படுத்தும் தன்மையும் அமைகின்றது.

உடல் இயல்புகளுக்கேற்ப உடை உடுத்தல் சாதாரண மாந்தர் நிலையே. மகளிர் ஆடவர் உடையை உடுத்தும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. சமுதாய நிலை எனக் காணின், சாதி மதம் போன்றவற்றில் உள்ள கட்டுப்பாடு இன்று தளர்ந்து விட்டிருக்கக் காண்கின்றோம். உளவியலுக்கேற்றபடி உடுத்தல் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டு வருகின்றது.

எனவே, காலந்தோறும் ஏற்படும் அரசியல், பொருளாதாரம், சமயம் போன்ற சூழல்களுக்கேற்ப ஆடையும் மாறுபட்டு அமைகின்றது எனல் பொருந்தும்.

மூலப் பொருட்களும் முதல் ஆடையும்

இன்று மாந்தர், இயற்கை நல்கும் தாவர (vegetable) விலங்கு (animal) இழைகளுடன், தன்னால் உருவாக்கப்பட்ட செயற்கையிழைகளையும் (synthetic fibre) ஆடைக்காகப் பயன்படுத்துகின்றனர். செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படா நிலையில், முதலிரு இழைகளையுமே மாந்தர் பயன்படுத்தினர். இவற்றுள்ளும் தழை, மரவுரி, தோல் இவையே ஆதி மனிதன் உடைகள். இவற்றுள் எது முதலாடை என்பது இன்றும் முடிவு செய்யப்படாத ஒன்று.[12] அறிஞர் சிலர் தோலினையும்,[13] சிலர் தழையினையும்[14] முதலாடை என்பர். தழைபற்றிய எண்ணங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. சில சான்றுகளை இவண் காணலாம்.

1. ஆடையின் தோற்றத்துக்கு அழகு படுத்தலே காரணம் எனக் கண்டோம். இதற்குத் தோலினை விடவும் இலை தழைகனைப் பயன்படுத்தினர் என்பதே பொருத்தமானதாகும்.

2. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் பயன்படுத்தியது இயற்கையினின்றும் கிடைத்த பொருட்களேயாம். இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளே புலாலுக்கு முன்னர் அவன் உண்ணும் பொருளாக இருந்திருக்க வேண்டும். இதைப்போன்று இயற்கை வழங்கிய இலை தழைகள், மரவுரியைப் பயன்படுத்திய பின்னரே, உணவுக்காகப் பெற்ற விலங்குகளின் தோலினை அவன் உடையாகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

3. ஆதாம் ஏவாள் முதலில் உடுத்தியது தழையுடை. இறைவன் அவர்க்குக் கொடுத்தது தோலாடை என்பது விவிலிய நூல் தரும் விளக்கம். எனவே விவிலிய நூல் காலத்திய எண்ணமாக இதனைக் கொள்ள, ஈண்டும் தோலாடை இரண்டாமிடமே பெறலைக் காணலாம்.

எனவே அழகு கருதி தழையுடைகளையும் பின்னர் பல் உணர்வுகளின் அடிப்படையில் பிற உடைகளையும் அணியத் தொடங்குகின்றான் மனிதன் எனக் கருதலாம். தழைகள் கிடைக்கவியலாத பனிப்பிரதேசம் போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் தோலினை முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும் எனினும், பெரும்பான்மையான இடங்களில் தழையுடையினையே முதல் உடையாகக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என்பது ஈண்டு தெளிவு பெறுகின்றது.

இவ் வெண்ணங்கட்குத் துணையாக, தமிழர் ஆடை வரலாறும் சில கருத்துகளைத் தருகின்றது.

1. தமிழரின் உடைகளாக சங்க இலக்கியம் பல உடைகளை இயம்பினும், இவற்றுள் சிறப்பாக அமைவது தழையுடையே. ஆடவர் மரவுரி உடுத்தலும் காணலாகும் ஒன்று. பழமை மரபுடன் தொடர்புடைய பழக்க வழக்கமாக இதனைக் கொள்ளலாம்.

2. உலக உடை வரலாற்றில் ஆதிமுதல் தோல் மயிராடை இடம் பெறினும், தமிழர் இதனைப் பெரும்பாலும் பயன்படுத்தியிரார் என்பதையே அவர் தம் வரலாறு காட்டக் காண்கின்றோம், தோலாடை பற்றிய ஒரு சில குறிப்புகளையே தமிழர் ஆடை வரலாறு சொல்லிச் செல்கின்றது. இதற்கென்று தனித்த பெயர்கள் அமையாமையும் இக்கருத்தினை உறுதிப்படுத்த உதவும்.

ஆடைபற்றிய ஆய்வு மூலங்கள்

வரலாற்றினை முழுமையாக உணர்வதற்கு உதவும் ஆய்வு மூலங்கள் பல. அவையாவன:- தொல்பொருள், இலக்கியம், வரலாறு, தொல்கதை, புராணம், பழக்க வழக்கம், மொழிநூல், புவியியல், கலைகள், கல்வெட்டு போன்றன. இம்மூலங்கள் அனைத்தையும் இணைத்து ஆராயும்போதுதான் உண்மையும் தெளிவும் பொருந்திய முழுமையானதொரு வரலாற்றை நாம் பெற இயலும். இணைத்து நோக்குதலின் முழுமையினைப் பெற தனித்தனியே நோக்குதல் அடிப்படை என்ற நிலையில் இவண் இலக்கியம் உணர்த்தும் ஆடை வரலாறு ஆராயப்படுகின்றது.

இலக்கியம் கொள்கைக்காகப் படைக்கப் படினும், பொழுதுபோக்கிற்காகப் படைக்கப்படினும் அவையுணர்ந்தோ உணராமலோ அவ்வக் கால வரலாற்றுச் செய்திகளையும், மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும் சொல்லிச் செல்கின்றன என்பது உண்மை. சுருங்கச் சொன்னால், சமுதாயத்தாக்கங்கள் அவ்வவ்கால இலக்கியங்களில் இருந்தல் இயற்கை எனலாம். சமுதாயத் தாக்கம் என்று நோக்க, மக்களிடம் முதன்மையிடம் பெற்றிருந்த ஆடைகளின் தோய்வும், பலநிலைகளில் அமைந்து கிடக்கக் காண்கின்றோம்.

அறிஞர், இலக்கியம் வரலாற்றுண்மைக்குத் தேவை எனக் கருதினும்,[15] சிலர் அதனை ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றனர். தொல்பொருட்களே ஆடைபற்றிய ஆய்வுக்கு மிகுந்த துணையாகும் என்று கருதுகின்றனர்.[16]

ஆயின் வரலாற்றுடன், ஆடை வரலாற்றுக்கும் இலக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு ஆய்வு மூலம் என்பதைச் சில எண்ணங்கள் வழி நிறுவலாம்.

1. இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கூறு.

2. ஆடை அணிகளைப் பொறுத்தவரை இலக்கியத்தில் புனைந்துரைகளைக் கலக்கத் தேலைவி்ல்லை. சான்றாக இன்றைய இலக்கியம்களைக் காணலாம். படைப்போன் படைக்கும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் புனைந்துரையாயினும், பாத்திரங்களின் ஆடை அவற்றுடன் கூடிய மாந்தர் தம் தொடர்பு ஆகியவை கற்பனையன்று. ஆசிரியன் தான் தினத்தோறும் காணும் நிலைகளையும், மாற்றங்களையுமே இவற்றுள் வடிக்கின்றான். இந்நிலையில் சங்க இலக்கியத்தை நோக்குவோம். புலவன் பல நிலைகளில் ஆடைகளை வருணிக்கின்றான். காம்புரியன்ன அறுவையையும், பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன சிதாரினையும் உரைக்கின்றான். இவண் உவமை ஆடையின் மேன்மையினையும், இழிவினையும் புலப்படுத்துகின்றது. ஆடையின் இயல்பினை ஓரளவுக்கு மிகைப்படுத்துவன இவை எனினும் உண்மை நிலையை உரைக்கவேண்டும் என்ற புலவன் தன் விழைவே இவ்வெளியீட்டு நிலை. இயல்பினை மிகைப்படுத்திக் கூறியுள்ளதால் இவ்வாடைகளே புனைந்துரை எனல் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? இவ்வாடைகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தன என்பது உண்மைதானே. எனவே ஆடைபோன்ற பயன்பாட்டு நிலையில் உள்ளவற்றைப் பொறுத்தவரையில் புலவர் தங்கள் கால எண்ணங்களைத்தான் பிரதிபலிப்பர்; பிரதிபலிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இலக்கியச் செய்திகளுட் சில புனைத்துரைத்தலாக இருந்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதேயாயினும் அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தள்ளிவிடுதல் எவ்வாற்றானும் ஏற்புடையதன்று என்னும் சதாசிவபண்டாரத்தார் கூற்றையும் இவண் சுட்டலாம்.[17]

3. சிற்பம் சித்திரம் போன்று காட்சிச் சான்றாகப் பயன்படாது இலக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே. ஆயின், காட்சிச் சான்று மட்டுமே ஆடை வரலாறு முழுமையும் உணர்த்தவல்லதாகாது. வரலாறு எனின் அது எவ்வாறு அரச வாழ்க்கை மட்டும் அல்லவோ, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலைகள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்ப வேண்டுமோ அதைப் போன்று ஆடை வரலாறு என்பதும் ஆடையுடுத்தும் முறையை விளக்குவது மட்டுமன்று, ஆடையுடன் தொடர்புடைய மாந்தர் வாழ்வியற் கூறுகள் ஒவ்வொன்றையும் அது விளக்கவேண்டும். எனவே உடுத்தும் முறை ஓரளவே வெளிப்படினும் பிற ஆடை வரலாற்றுக்குத் தேவையான விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இலக்கியம் மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத நிலை. இவக்கிய ஆய்வு இயம்பும் உண்மையும் கூட.

தமிழர் ஆடைகளைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் சிறப்பினை மேலும் சுட்டலாம். 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தான் சிற்பம் சித்திரங்களைக் காண இயலும் நிலையில் அதற்கு முன்னைய, தமிழர் வாழ்வியற் கூறுகளில் தெளிவுபெற இலக்கியங்களே உறுதுணையாக அமைகின்றன எனும் உண்மையில், இது தனிச் சிறப்பு பொருந்தியுள்ளமை வெள்ளிடைமலை.

ஆடை வரலாறு

ஆடைவரலாற்றின் முதல் சான்றாக நாம் காண்பது நியாண்டர்தால் மனிதனைப் பற்றிய எண்ணம் என்பர். இதனை “மனித இனவரலாற்றில் சான்றுகளோடு கூடிய மிகப் பழமையான மனிதர் நியாண்டர்தால் மனிதர்களே, டுரோ-மக்னான் காலத்தில் பிரான்ஸில் காவிலான் என்ற குகையில் கிடைத்த ஓர் எலும்புக் கூட்டின் அருகில் ஒரு கொண்டைஊசி, சிறு கச்சைகளுடன் கூடிய ஊசி போன்றவை கிடைத்தன,”[18] என்னும் எண்ணத்தால் உணரலாம். “கி.மு. 8000 ஆண்டிலேயே எகிப்திய விவசாயிகள் சணல் இழைகளைத் தயாரித்தனர். கிறித்துவுக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே சணல் ஆடைகள் எகிப்தில் மலிந்திருந்தன. கம்பளி ஆடையும் காணக் கிடைத்தது. இதே காலப்பகுதியில் ஐரோப்பாவின் ஏரிப்பகுதி மக்கள் ஆட்டின் மயிரை வெட்டி அதனின்றும் கம்பளி ஆடைகளை நெய்தனர்”[19] என அடுத்த நிலையில் எகிப்திய, ஐரோப்பிய மக்கனின் உடைபற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம்.

இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணக் கிடைக்கும் பருத்தியிழைகளே இந்தியரின் ஆடைபற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்று ஆகும். கி.மு. 2303 அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிக பொருட்களில் பருத்தியாடையும் ஒன்று என சுமேரியன் கையெழுத்துப்படிகள் சொல்கின்றன.[20] மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர்த் திருகுகள் இம்மக்கள் ஏழையர்—செல்வந்தர் என்ற வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததைத் தெரிவிக்கின்றன.[21]

பிற நாட்டாராகிய எகிப்தியர், கிரேக்கர் உடை வரலாற்றைக் காண, அவர்கள் பயன்படுத்திய பெரும்பாலான மூலப் பொருட்கள் தமிழரிடம் ஒன்றுபட்டே இருக்கக் காண்கின்றோம். ஆயின் உடுக்கும் நிலையில் மாறுபாடு அமைகின்றது. பொதுவாகப் பிற நாட்டார் உடுத்தியனவாக உடல் முழுவதும் மூடியதுபோன்ற உடைகள் அமைய, அன்று தமிழ் நாட்டார் இடையாடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையைக் காண்கின்றோம். ஆடவர் பெண்டிர் ஆடைகளில் வேறுபாடு அதிகமாக அமையாமை பிறநாட்டர் பண்பாக அமைகின்றது. தமிழர் அன்று உடுத்திய நிலை விளக்கமுறாவிடினும், இன்றைய நிலை கொண்டு, உடுக்கும் விதத்தில் ஓரளவுக்கு வேறுபாடு இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

வடஇந்தியரிடம் இருந்து தமிழர் வேறுபடுதல் இன்றும் கண்கூடு. அன்றும் சில நிலைகளில் வேறுபட்டு இருந்தனர். அ. மீரா முகைதீன் தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியரின் ஆடைபற்றிப் பேசும்போது,

“சிந்துவெளி நாகரிகக் காலம், வேதகாலம், பௌத்த காலம், மௌரியர் காலம், குப்தர் காலம், மொகலாயர் காலம், ஆங்கிலேயர் காலம் ஆகியவை வளர்ந்து வந்த நாகரிகத்தின் பலபடி நிலைகளைத் தருகின்றன” என்று கூறி அந்தந்தக் கால ஆடை வகைகளையும் விளக்குகின்றார். வடநாட்டாரின் ஆடையுடன் தொடர்புடைய சொற்களாக இவர் குறிப்பிடும் சொற்கள் பல. அவையாவன:- துர்சா, யான்ட்வா, வசனா அல்லது வஸ்திரம், வாசஸ் அதிவாசா, நீவி, அத்கா, டிராபி, பிசாசு, வாதூயா, சுவாசஸ் கவாசனா, ஊர்னா-சூத்ரா, ஊர்னா, உத்தரீயம், அந்தரீயம், ஆப்ரபதீனபதா, கஸ்கவுமா, அகதா, கொடும்பரா, அந்தர்வாசா, உத்தராசங்கா உஷ்னிசா ஹாஸ்தி சவுந்திகா, மத்சய வாலாகா, காடுங்குர்னகா, சதவல்லிகா பத்கா, கமர்பந், சங்காத்தி அல்லது இரட்டைச்சடார், அந்தர்வசாக, உத்தராசங்கா அல்வது துப்பட்டா, பித்தியாஸ்தரானா, கண்கே பிராக்டீசதானா, வார்சிக சார்திகா, கஞ்சுகா, அவுர்நா ஜாதரூபயரிஸ்கர்தான், பைலான், வார்சதம்சன, கம்பலான் லிவிதான், வஸ்திரம், அகர்பாசம், ஆவிகம், ராங்காவா, உஸ்னிசா, வெஸ்தனி, யாக்சினி, தேவதாகுலகோகா, கண்டா, துப்பட்டா, லகோதி, சானாபாப், செளவ்டார், பருத்தி, வல்வெட்டு, குல்லா, பக்கிரி, தார்வெஸ் குல்லாய், தலைப்பாகை, கமா, பைசாமா, பட்டாடை, உப்பக்சா, கபா, சார்வார், லங்கோடு, காக்ரா, பர்சாஸ் போன்றன.

இவற்றுள் பெரும்பான்மையன தமிழர் ஆடைபற்றிய சொற்களினின்றும் மாறுபட்டன. எனினும் ஒரு சில வடநாட்டார் தொடர்பு காரணமாகத் தமிழ் மொழியிலும் பயிலப்படுகின்றமையைக் காண்கின்றோம்.

வடநாட்டு மக்கள் தமிழரிடம் இருந்து தோலாடைபற்றிய எண்ணத்திலும் மிகுந்த வேறுபாட்டுடன் அமைகின்றனர். பல் வகையான மயிராடை, தோலாடையைப் பயன்படுத்தியிருக்கின்றனர் அவர்கள். சான்றாக, “மௌரியர் கால மக்கள் பருத்தியாடையைப் பயன்படுத்தினர். மற்றும் கம்பளித் துணிக்கு அவுரிநா என்றும், தங்கவேலையுடன் கூடிய ஒப்பனை சால்வைக்கு ஜாதரூபபரிஸ்கர்தன் என்றும் குழிக்குள் வாழ்சிற்றுயிர்களின் தோலாடையைக் குறிக்கப் பைலான் என்றும் காட்டுப்பூனைத் தோலாடையைக் குறிக்கப் வார்சதம்சன என்றும் பலவகைச் சொற்களைப் பயன்படுத்தினர். கம்பலான் லிவிதான் என்ற ஆடை கால்நடைகளின் மயிர்களால் ஆனவை, ஆவிகம் என்பவை ஆடுகளில் மெல்லிய மயிர்களால் ஆனவை. ராங்காவா என்பது மான்மயிர் மற்றும் கம்பளியலான சால்வை”[22] என்பதனைச் சுட்டலாம்.

இம்முறையில் தோலாடை, மயிராடையை அதிகமாகப் பயன்படுத்தியமை, தமிழரிடத்தில் காணவியலாத ஒன்று.

எனவே “பண்பாட்டைப்பகுத்துணர ஆடை ஓர் உறுப்பு; அப்பண்பாட்டு அடிப்படையில் ஆடை வகைகள் ஒரு குறிப்பிட்டப் பிரிவினரின் தன்மையைக் காட்டுவதாக அமையும்”[23] என்ற கூற்றின் உண்மையை அயலார் ஆடையுடன் தமிழர் ஆடையையும் ஒப்பிடப் புலனாகின்றது.

இன்று பல்வேறு தொடர்புகள் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியிருப்பினும் தேசிய உடையாகவும் தமிழர் உடையாகவும் நிகழ்வது வேட்டியும் புடவையுமே. ஆயின் பொது நிலையில் பண்டைய நிலையினின்றும் காலவண்ணம் (Fashion) காரணமாகக் குறைத்தும் நிறைத்தும் உடலோடு ஒட்டியும் தளர்த்தியும் பலவேறுபட்ட இயல்புகளில் உடையினை உடுத்துவதை இன்று நாம் காண்கின்றோம்.

ஆடை வரலாற்று நூல்கள்

ஆடையைப் பற்றிய எண்ணங்கள் அண்மையில்தான் ஆய்வு செய்யப்படும் நிலையை அடைந்துள்ளன என்பர்.[24] இக்கருத்து நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

அயல்நாட்டார் ஆடையின் தோற்றம், ஆடையின் கதை, வரலாற்று நிலையில் ஆடையின் இயல்பு, மனிதனும் ஆடையும், காலவண்ணம், தேசிய உடைகள் போன்ற பல கருத்துகளின் அடிப்படையில் பல நூல்களை எழுதியுள்ளனர்.

இந்திய ஆடை வரலாற்று நூல்களுள் சிறப்பாக மோதிச் சந்திரா, சச்சிதானந்த் சகாய், எஸ். என். தார் போன்றோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன. இந்தியரின் உடைகள் வெவ்வேறு காலநிலைகளில் எத்தன்மையன என்பதைப் பல மூலங்கள் வழித் தெளிவுற எடுத்தியம்புகின்றன இவை.

ஆயின் தொன்றுதொட்டே பெரும் சிறப்புடன் வாழ்ந்து உலகெங்கும் தங்கள் பெருமையைப் பரவச் செய்த தமிழரின் ஆடையினைப் பற்றியதொரு தனித்த நூல் ஒன்றினையும் நாம் காணக் கூடவில்லை. இந்திய வரலாற்றில் தமிழரின் ஆடை வரலாறு இடம் பெறினும் அவை முழுமையுணர்வினை நல்க வாய்ப்பில்லாமையால் ஒரு சில எண்ணங்களையே உரைத்து அமைகின்றன. அ. மீராமுகைதீன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள் என்ற வெளிவராத பொருட்கட்டுரை ஒன்றும் (கேரளப் பல்கலைக் கழகம் 1971,) மற்றும் சில தனிக் கட்டுரைகளுமே தமிழர் உடை வகைகளை விளக்குவன. பொருட்கட்டுரை சில குறிப்பிட்ட இலக்கியங்கள் இயம்பும் ஆடைகளை விளக்குகின்றது. தொடர் கட்டுரையாக, பி. எல். சாமியின் ‘சங்க இலக்கியத்தில், ஆடை அணிகலன்கள்’ என்ற கட்டுரையினைக் (செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவை) காண்கின்றோம். ஆடைபற்றிய பல்வேறு சொற்களின் வரலாற்றையும் இவர் சொல்லிச் செல்லும் விதம், சில நிலைகளில் மேலும் ஆய்வுக்குரியதாக அமையினும் ஆய்வாளருக்கு மிகுந்த பயனுடையது.

திருமதி. தியாகராசன், ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற அறிஞர் பலரும் ஆடைபற்றிய கருத்துகளைச் சொல்லிச் செல்கின்றமையும் சுட்டத்தக்கது.

இலக்கியம் தரும் செய்திகளை விளங்கிக் கொள்வதற்கும், விரித்துக் கொள்வதற்கும் கல்வெட்டு ஆய்வாளர் குறிப்புகள் சிறந்த துணையாகின்றன.

ஆய்வு நோக்கம்

உள்ளதன் நுணுக்கம் ஆய்தல் என்பார் தொல்காப்பியர். ஆய்வானது புதியது காணல், தெரித்ததன் மேன்மேற் காணல், முன்னைய குறைகளை நீக்கல், சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்தல், குறிப்பிட்ட பயன் கருதிச் செய்தல், அறிவுச் சிக்கலை விடுவித்தல் என்ற எண்ணங்களின் அடிப்படையில் அமைதல் தேவை, எனவே ஈண்டு, 1. தமிழர் ஆடைபற்றிய நூல் இன்மையை நீக்குதற்கும்.

2. தமிழர் ஆடைபற்றிய அறிவைப் பெறுதற்கும்.

3. அதன்வழிப் புலனாகும் தமிழரின் வாழ்வியற் கூறுகளை அறிதற்கும் தமிழர் ஆடைகள் பற்றிய செய்திகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆய்வின் தன்மை

தொல்காப்பியம் முதற்கொண்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலான சில குறிப்பிட்ட இலக்கியங்கள் உணர்த்தும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது. எடுத்துக் கொண்ட இலக்கியங்கள்,

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தேவாரம், நந்திக் கலம்பகம், கம்பராமாயணம், சூளாமணி கல்லாடம், முத்தொள்ளாயிரம், மூவருலா, தஞ்சைவாணன் கோவை, கலிங்கத்துப் பரணி, அம்பிகாபதிக் கோவை, பெரிய புராணம் ஆகியன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையும் இவ்வாய்வு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இயல்

உடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு.

இந்தியாவின் பிற்பகுதி மாந்தர் குறித்த, ஆடையுடன் தொடர்புடைய பல சொற்களைப் போன்று, தமிழரும் எண்ணற்ற சொற்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் பெரும்பாலனவற்றைக் கலைச்சொல்லகராதி என்னும் பகுதியாக இந்நூல் இறுதியில் காணலாம். இவண் தங்கள் ஆடைகளைக் குறித்து, தமிழர் வழங்கிய சொற்கள் என்னென்ன? அவை பல் நிலைகளில் பெயர் பெற்றமை, பல் மாற்றத்திலும் மாற்றமடையாத சில சொற்களின் தனிமை, சூழல் காரணமாகத் திரிந்த மாற்றமடைந்த சொற்களின் இயல்பு போன்ற பலவற்றையும் காணலாம்.

இரண்டாம் இயல்

தமிழர் உடைகள்-உடுத்தும் விதங்கள்.

உடை உடுத்தும் முறை என்று நோக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு நாகரிமாகத் தோன்றுபவை மற்றொரு பிரிவினருக்கு நாகரிகமாகத் தோன்றாது. எனவே நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் உடுத்தும் முறையும், உடையின் தோற்றமும் மாறுபட்டு அமைநின்றன. இஸ்லாமியப் பெண்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்வதை இன்றளவும் நாகரிகமெனக் கொண்டுள்ளனர். ஆடை அணியும் போது தங்கள் கால்களை மறைக்கின்றனர் சைனப் பெண்கள். மேல் நாட்டார் கால்கள் தெரிய உடை அணிகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் புடவையால் தம்முடம்பை, பெரும்பாலும் முழுமையாக மறைந்துக் கொள்கின்றனர். இன்றளவும் தம் மார்பை மறைக்காமை வேறுபாடாகத் தெரியவில்லை, சில மலையாள மகளிர்க்கு. எனவே அ. மீரான்முகைதீன் குறிப்பிடுவது போன்று நாகரிகம், நாகரிகமின்மை என்பவை எல்லாம் அவரவர் சமுதாய மனவளர்ச்சியைப் பொறுத்ததே எனல் ஒப்புக் கொள்ளக் கூடிய எண்ணமேயாகும்.

இந்நிலையில் தமிழகத்தில் வாழ்ந்தோர் அன்று உடுத்திய உடைகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதனை, இலக்கியங்கள் உணர்த்தும் நிலையில் விளக்கமாக இவண் காணலாம்.

மூன்றாம் இயல்

பழக்க வழக்கங்கள்-நம்பிக்கைகள்-மீவியல்புக் கூறுகள்.

இப்பகுதியில் தமிழர், ஆடையுடன் தொடர்புடையதாகக் கையாண்டு வந்த பழக்க வழக்கங்கள், இன்னும் அவற்றுள் ஒரு சில தம்மிடம் காணப்படும் தன்மை, சிலவற்றை எச்சக் கூறுகளாக மட்டுமே காணக்கூடிய நிலை ஆகியவை பேசப்படுகின்றன.

நம்பிக்கைகள் என்னும் பகுதியில், பலவித மனவுணர்வுகள் அடிப்படையில் அவர்களிடம் காணப்பட்ட நம்பிக்கைகளைக் காணலாம்.

மீவியல்புக் கூறுகளும் உடையும் என்ற பகுதியில், வேறுபட்ட தெய்வத்திற்கென, இவர்கள் சாத்திய உடைகள், இவை தெளிவுபடுத்தும் தமிழரின் பல எண்ணங்கள், புராணக் கதைகள், போன்றவை ஆராயப்படுகின்றன. இயக்கன், அரக்கன், பூதம் போன்ற பிற மீவியல்புக் கூறுகளின் உடைகள் பற்றிய எண்ணங்களும் இவண் இயம்பப்படுகின்றன.

நான்காம் இயல்

ஆடைத் தொழில்.

பல்கலை வல்லுநரான தமிழரின் ஆடைத் தொழிலின் சிறப்பு இவண் விரிக்கப்படுகின்றது. நெய்தல் தொழிலுடன் வாணிபம், ஆடைவெளுத்தல் ஆகியனவும் ஆடையுடன் தொடர்புடைய தொழில்கள் என்பதால் இங்கே இணைத்து நோக்கப்படுகின்றன.

இரண்டாம் பகுதி தொகுப்புச் செய்திகளை உள்ளடக்கியது. இங்கு ஆடைபற்றிய கலைச் சொற்கள், பழமொழிகள், நம்பிக்கைகள் ஆகியன முறையே தொடர்ந்து இடம்பெறுகின்றன.

பின்னிணைப்பாக இலக்கியத்தில் ஆடை இடம்பெறும் இடங்கள் பொருளடிப்படையில் பகுத்துத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

  1. “Dress, ornament, perfume, women, couch, singing, food and betel were regarded by ancient Indian savants as the eight enjoyments of life.”
    -Costumes of India and Pakistan, S.N.Dar, P. 180.
  2. Tamil Lexicon, Vol.I, part-I, P. 180.
  3. “Clothes in short, in primitive as in modern times are not merely the covering of the body, but the vesture of the soul.” - Encyclopaedia Britannica, Vol.7, 677.
    “In the life of a man the first and foremost are food and clothing. To man these two are fetters and chains which bind him to the field of re-birth.”
    -Costumes Textiles Cosmetics and Coiffure, Dr. Motichandra, P.49.
  4. “So we have seen clothing may have started as ornament or to distinguish one tribe from another or to show rank or because certain things were believed to have magic qualities” - The Story of Clothes, Agnes Allen, Pp. 15, 16.
  5. “The fact that climatic condition...has been an important factor in the origin of the use of clothing cannot be doubted for after all it is one of those factors that has differentiated human beings from animals which grow warm coats and transmit them to their offspring by heridity. It is even assumed an account of the loss of hair of the body, man was compelled to seek for an artificial covering.” - The Social Life of the Tamils, S. Singaravelu, P. 70.
  6. The Social Life of the Tamils, S. Singaravelu. P. 75.
  7. Fundamentals of Dress, Marietta Kattunen, P. 192.
  8. “If we turn to study the various societies of primitive savages, he says we find in many cases where the climate is far worse than our own they do not seem to need the least protection from it.” -Costumes of India and Pakistan, S.N. Dar.
  9. “The art of Dress did never begin till Eve, our mother learnt to sin.” Ibid, Introduction.
  10. The beginning of dress, that from which dress came to be was in the form of body decoration. The painting, cutting and tatooing of the skin are forms of body decoration which were the first step toward modern dress. - Historic Costume, Lester.
  11. Indian Costume Coiffure and Ornament
    - Sachidanand Sahay, P. XV.
  12. “Which fibres were the very first to be used we cannot say,”
    - The Story of Clothes, Agnes Allen, P. 19.
  13. “Man’s earliest clothing consisted of animal pelts and hides.” - Fundamentals of Dress-Marietta Kattunen-143.
  14. தழையாடைகளுக்கும் மரப்பட்டை ஆடைகளுக்கும் பிறகுதான் தோல் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில், அரங்க பொன்னுசாமி, கொங்கு இதழ், 15-3-1976, பக்-59.
  15. “ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுதற்கு அந்நாட்டில் எழுந்துள்ள இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதை பொருட்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை சான்றுகளாக உதவி வந்துள்ளன.” தமிழக வரலாறு-மக்களும் பணபாடும், கே. கே. பிள்ளை, பக். 12.
  16. “In the study of such a subject archaeological accounts are more valuable as they enrich the knowledge by the actual representation of the object. Poets, dramatists and literatures however versatile they may be cannot actually create the object before the eyes in such a vivid manner as a painter or a sculptor, actually portrays the inner ideas and places the object before the people.” Indian costume coiffure and ornament, Sachidanand sahay P.xx.
  17. இலக்கியமும் கல்வெட்டுகளும், சதாசிவபண்டாரத்தார், பக் 103.
  18. தமிழியல், தொகுதி-6. தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக். 90.
  19. தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீரா முகைதீன், பக்-92.
  20. மேற்படி பக். 92
  21. மேற்படி பக். 95
  22. தமிழியல், தொகுதி-6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள் அ. மீராமுகைதீன், பக். 98
  23. மேற்படி பக். 93
  24. “It is only comparatively very recently that people have begun to take an interest in the costume of the Past”.—Costume through the ages.—James Laver, Introduction; P. 5.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/004&oldid=1841538" இலிருந்து மீள்விக்கப்பட்டது