உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/006

விக்கிமூலம் இலிருந்து

ஆடைபற்றிய சொற்கள்—ஓர் ஆய்வு

முன்னுரை

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே’ 3

என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தான் குறுந்தொகைப் புலவன், ஆய்வுக்கும் இது பொருந்தும். ஆய்வின் ஆழமும் அகலமும் வரையறைக்குட்படாதது. கற்றது கைம்மண்ணளவே ஆய்வின் நிலையுமாகும்.

அறிவியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு, மொழிநூல் ஆய்வு போன்ற பல்வகை ஆய்வுகளுள் சொற்பொருள் பற்றிய ஆய்வும் ஒன்று, இதனை 1. பல்துறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 2. ஒருதுறைச் சொற்கள் பற்றிய ஆய்வு 3. ஒருசொல் பற்றிய ஆய்வு என்ற முந்நிலைகளில் நோக்கலாம். இவற்றுள் ஓவ்வொரு சொல்லும் 1. சொல்லின் தோற்றம் 2. பொருள் 3. காலந்தோறும் ஏற்ற உருமாற்றம் 4. பொருள் மாற்றம் என்ற நான்கு கூறுகளையும் கொண்டிலங்குதல் வேண்டும்.

மொழிப் பொருட் காரணம் ‘விழிப்பத் தோன்றா எனினும் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது அறிஞர் சுட்டிய உண்மை. மனித எண்ணங்கள் சொற்களில் பாதுகாக்கப்படுகின்றன என்ற கருத்தினையும் காண்கின்றோம்.[1]

எனவே இச் சொல்லாய்வு, மொழிவளம், கால வளர்ச்சியில் மொழியில் புகும் புதுமைகள், சமுதாயம் பண்பாடு இவற்றில் உண்டாகும் மாறுபாடுகள் போன்ற பல எண்ணங்களைத் தெளிவுபடுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.

சொற்பொருள் ஆய்வு அன்றுமுதல் இன்றுவரை

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியினர் எனப் போற்றப்படுவோர் தமிழர். இவர் தம் முதல் இலக்கியங்களே இவரது நாகரிகச் சிறப்பினைத் தெளிவாக்கும். பல்துறை வல்லுநர்களாகிய இவர்கள் அன்றே ஆய்வு மனப்பான்மையுடனும் திகழ்ந்தனர். இதற்கு,

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார்;புலவர்’ (தொல். சொல். 156)

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் அமையும். என்மனார் புலவர் என்ற சுட்டினைச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு ஆக்கலாம். இவ்வெண்ணத் தொடர்ச்சி இன்றுவரைத் தொடர்கின்றது. இதனை இலக்கணங்களில் காணப்படும் சொல்விளக்கம், நிகண்டுகள், அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், ஒரு சொல் பற்றிய அறிஞர் ஆய்வுகள் போன்றன காட்டுகின்றன.

ஆடைபற்றிய சொற்கள்

மனித வாழ்வில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற ஆடைத் தொடர்பாகத் தமிழன் பயன்படுத்திய சொற்கள் பல. அவை ஆடையைக் குறிப்பன; ஆடைத்தொழிலுடன் தொடர்புடையன; ஆடை உருவாக்கப்பட்ட பொருட்களைச் சுட்டுவன என்ற பல நிலைகளில் அமையும். இவண் ஆடையைக் குறிக்க, தமிழன் பயன்படுத்திய சொற்களையும் அவற்றில் வரலாற்றையும் காணலாம்.

12-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆடைபற்றிய சொற்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைகின்றன.

இவற்றுள் பல சொற்கள் சங்கத் தமிழர் பயன்படுத்தியன. உடை, தழை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, போர்வை, காழகம், கச்சம், கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரீயம், கம்பலம், கவசம், தூசு, மடிவை, சிதர்வை, சிதவல், வார், மெய்ப்பை, துகின்முடி, மெய்ம்மறை, மெய்யாப்பு, வாலிது, வெளிது, புட்டகம், நூல், பக்குடுக்கை போன்றன.

நீதிநூற் காலத்தில் புதியனவாக அரத்தம், ஈர்ங்கட்டு, கோடி, கூறை, புடைவை, மாசுணி, பட்டம் அமைகின்றன.

சிலப்பதிகாரத்தில் கஞ்சுகம், மணிமேகலையில் உடுப்பு, சிதர், சிதவற்றுணி, வட்டுடை போன்றனவும் முகிழ்க்கின்றன.

பெருங்கதை வட்டம், வடகம், மீக்கோள், குப்பாயம், நீலம், வங்கச் சாதர், சேலம் இவற்றைப் புதுமையாகக் காட்டும்.

சிந்தாமணியில் கோசிகம், பஞ்சி, கருவி, சாலிகை, பூண், ஆசு, கிழி, வட்டு, தலைக்கீடு போன்றன மேலும் இடம் பெறுகின்றன.

கம்பர் கோதை, சீரம், சேலை, நீலி, வற்கலை, புட்டில் போன்றனவற்றை வடமொழி மணம்கமழத் தருகின்றார். கலையையும் ஆடையெனக் குறிப்பார்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் காம்பு, நேத்திரம், மேலாப்பு ஆகியவற்றையும் பெரியபுராணம் பாவாடை, கீள், கோவணம் போன்றவற்றையும் நல்குகின்றன.

சிலப்பதிகாரம் வாயிலாக உடைகள் பற்றிய எண்ணம் மிகுதியாக வெளிப்படாவிடினும் அடியார்க்கு நல்லார் உரையின் மூலம் பல ஆடைவகைகளை அறியக் கூடுகின்றது. இவர் முப்பத்தாறு வகையானது துகிலின் வர்க்கம் என்றுரைக்கின்றார். இவற்றுள் பல இவர்க்கு முன்னைய காலத்தன—கோசிகம், பீதகம், அரத்தம், நுண்துகில், வடகம், பஞ்சு.

சில சொல்லளவில் புதுமையாகவும் பிற சொற்களுடன் இவற்றிற்குரிய தொடர்பு காரணமாக முன்னரேயே இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தையும் தருவன—கவற்றுமடி, குருதி, பச்சிலை, கோபம், புங்கர்க் காழகம்.

பிற இவர் காலத்தனவாக அமைவன இரட்டு, கண்ணம் பாடகம், கோங்கலர், சித்திரக்கம்பி, கரியல், வேதங்கம், பாடகம், சில்லிகை, தூரியம், பங்கம், கத்தியம், வண்ணடை, நூல்யாப்பு, திருக்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி ஆகியன.

இன்று நாட்டின் பல்வித வளர்ச்சி நிலைகளுக்குமேற்ப, மொழியில் புகுந்தள்ள உடை பற்றிய சொற்கள் பல. உதாரணமாகப் பாரசீகச் சொற்களான லுங்கி, சமக்காளம், சால்வை, உருதுச் சொற்களான லங்கோடு, குடுத்துணி, ஆங்கிலச் சொற்களான டை, வெல்வெட்டு, தெலுங்குச் சொற்களான ரவிக்கை, சொக்காய், தோவத்தி போன்ற பல சொற்களைச் சுட்டலாம்.[2]

இவை எந்தெந்த மொழிச் சொற்கள் என்பதைத் தெளிவாக அறிய இயல்வதுபோன்று, முன்னைய சொற்களை அறிய இயலவில்லை. ஓரளவுக்கே அவற்றின் வரலாறு விளக்கமுறுகின்றது. தொழில், பண்பு, நிறம், இடம் போன்றவற்றின் காரணமாக இச்சொற்கள் தோற்றம் பெற்றது எனினும் சிலவற்றின் சொல்லாக்க நிலையைத் தெளிவாக அறிய இயலாமைக்கு விளக்கமின்மையும், நீண்டகால இடைவெளியும், கிடைக்கும் சான்றுகளின் சுருக்க நிலையும் காரணமாகலாம். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது.[3]

அமைப்பு முறை

இன்று உடையைச் சுட்டப் பொதுச்சொற்களாக அமையும் உடை, ஆடை என்பன முதலிலும், சங்க காலத்துச் செல்வாக்குப் பெற்றிருந்த தழை உடை, இதனோடு தொடர்புடைய நாருடைகள் பின்னரும் இடம்பெறுகின்றன. இதற்கு அடுத்தாற் போன்று வரலாற்று அடிப்படையில் காலந்தோறும் செல்வாக்கு மிகுதிபெற்ற ஆடை வகைகளும் பெயர்த் தொடர்பும், பொருட்தொடர்பும் உடைய ஆடைகள் ஒருங்கிணைத்தும் தேக்கப்படுபடுகின்றன. இச்சொற்களின் அமைதியைத் தொடர்ந்து காணலாம்.

1. உடை

பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமெனத் திகழும் தொல்காப்பியம் தரும் உடைபற்றிய ஒரே சொல் உடை. தொன்றுதொட்டு இன்றுவரை, தன் சொல் நிலையிலும், பொருண்மையிலும் மாற்றமேதுமின்றி, தலைமையிடம் பெறும் பெருமையுடையது இச்சொல்.

உடையின் வேர்ச்சொல் ‘உடு’ என்பதாகும். உடுத்துதல், சூழவிருத்தல் என்ற இதன் பொருண்மையில் கிளைத்த உடுக்கை, உடுப்பு போன்ற பிற சொற்கள் காணக்கிடைப்பினும், உடை போன்று இலக்கியப்பயிற்சி பெறவில்லை. இச்சொற்களில் பலவும், இதனோடு தொடர்புடைய பல சொற்களும், திராவிட மொழிகள் பலவற்றில் காணப்படும் தன்மை, உடு என்ற சொல் திராவிடச் சொல் என்பதையும் உணர்த்தவல்லது.[4]

இலக்கியத்தில்—

1. உடை—உடை பெயர்த்துடுத்தல்-தொல். மெய்ப். 14.
     புகை முகந்தன்ன மாசில் தூஉடை-திருமுருகு. 138.
     பொன்னிறம் கொண்ட உடை-சிலப். 22:67.
     மேயுடை அணிந்த கணி-சூளா. 1098.
     செறிந்தவுடை மேல் வீக்கி-பெரிய. ஏனாதி. 11.

2. உடுக்கை—குன்றி யேய்க்கும் உடுக்கை-குறுந். கட. வாழ்த்து.
     உடுக்கை யுலறி-நாலடி. 141.
     புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை-சிலப். 25:126.
     துவருடுக்கை-நாலா. திருவாய். 4:8:4.

போன்ற நிலைகளில் பயிற்சி பெறுகின்றன. இக்கருத்துகள் எத்துணியாயிலும் உடுக்கும் உடையினை உடை, உடுக்கை என்று குறிப்பிட்டனர் என்பதை உணர்த்தும். பொதுநிலையில் உடையினைக் குறித்தலும், ஆடையுடன் இணைத்து உடையின் தனித்துவத்தைக் காட்டலும் இச்சொற்களின் இயல்பாகின்றது.[5]

உடுப்பு என்ற சொல் உடையினைக் குறித்தலை மணிமேகலை காட்டும்.

‘தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர’-மணி 3,140

உடை, ஆடை இரண்டும் ஒரே பொருளன என்பதும் மாறுபட்டவை என்பதும் அறிஞர் தம் முரணான எண்ணங்கள்.[6] இலக்கியச் சான்றுகளை நோக்க வேறுபட்டது என்னும் கருத்தே வலுப்பெறக் காண்கின்றோம்.

உடை, உடம்பைச் சுற்றி உடுத்தப்படும் உடையைக் குறிக்கின்றது. ஆடை, ஆதியில் இப்பொருளிலிருந்து பின்னர் துணியைக் குறிக்கும் பரந்த பொருளில் வழங்கத்தலைப்படுகின்றது. எனவே உடை, உடையினையும் (dress) ஆடை, துணியினையும் (Cloth) குறித்து மக்களிடம் பயிலப்பட்டது என்பது பொருத்தமானதாகும். சில எண்ணங்களைக் காணலாம்.

1. மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் சாற்றுகின்றன, இவ்வுடைகள் உடையாக மட்டுமே பயன்பட்டன. எனவே உடை என்று மட்டுமே இவை சுட்டப்படுகின்றன. ஆயின் பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துதற்கே அன்றி போர்வை, அணை, எழினி போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என்றும் அழைக்கப்படக் காணலாம்.

2. சிந்தாமணியில் மூசிய ஆடை உடையாக (2929) என்று இழிந்த ஆடையை இரவலரின் உடையாகக் காட்டியிருத்தல், உடையை ஆடையிலிருந்து வேறுபடுத்தி இருத்தலை இயம்பும். உடைக்கும் ஆடைக்குமுரிய இந்நுண்ணிய மாறுபாடு ஒருசில இடங்களில் நெகிழ்ச்சியுற்றிருக்கக் காண்கிறோம்.

பூப்புடை அணிந்த பொய்கை-உடை-போர்த்தியிருத்தல்
                                                                                       சீவக. 2772.
தொடையுறு வற்கலை ஆடைசுற்றி-வற்கலை உடை ஈண்டு ஆடை
                                                                                             கம்ப. யுத்த. 7252.

எனவே பெரும்பாலான காட்டுகளை நோக்க உடை, ஆடை இரண்டும் முதலில் ஒரே பொருளில் நின்று பின்னர் மாறுபாடாகக் கருதப்பட்டது எனத் தெரிகின்றது. இன்றும் இம்மாறுபாடு உள்ளதைக் காணலாம்.

உடை, உடுக்கை இன்றும் உடையைக் குறிக்க, உடுப்பு பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க வழங்குகின்றது. உடுக்கும் உடையினை உடுப்பு என்று வழங்கும் மரபும் தென் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. இதனால், மரபுத் தொடர்ச்சியுடன் பொதுப்பொருட் பேற்றினையும் இது அடைந்தமைப் புலப்படுகின்றது.

  1. “The beautiful thoughts and images, the imagination and feeling of past ages are preserved in words”—says Trench.
    Words and Their Significance—Dr. R. P. Sethupillai, Page 1.
  2. தமிழும் பிறபண்பாடும்—டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பக்கம். 77.79.
  3. “The Tamil Vocabulary furnishes numerous instances of faded metophars which bear the marks of ancient wisdom we fail to recognise them, partly from long familiarity with them, partly from insufficient knowledge partly it may be from never having had an attention called to them. —The Study of Words-Trench.”
    —Words and their Significance—Tamil Literary and colloquial, Dr. R. P. Sethupillai, Page—1.
  4. Ta. utu (-pp- -tt-) to put on (as clothes) surround, encircle ututtu (ututti) to dress one; utukkai-clothing; utuppu-cloth unseen garment, clothes; utai - clothes, garment, dress.
    Ma. utukka to dress, put on (Chiefly the lower garment); utuppu - dressing, clothes; utuppikka, utukkuka to dress another, marry; uta - cloth, danceri Pantaloons.
    To. udu dress of non - Todas.
    Ka. udu (utt-) to put round the waist and fasten there by tucking in or by a knot, wind or wrap round the waist; udisu to cause to put on in a peculiar manner (as certain clothes); udi, udu, ude, udike, udigo, udugu act of putting on in a peculiar manner (as certain clothes). Raiment put on in that manner, raiment in general; udaka, uduta winding or wrapping round the waist; udapu, udupu clothes of any kind.
    Kod. udi - udis - udit - to put on (sari); udipi clothe (in songs).
    Tu. udusre clothing, a female's garment.
    Te. udupu a suit of clothes, dress.
    Go. nittana - to put on peticoat utitana uttana to dress (of women); (M) ursana to wear, Ga (S) ud-to wear.
    — A Dravidian Etymological Dictionary - No. 502.
  5. “மாசுணுடுக்கை”—புறம். 54.
    “பொன்புனையுடுக்கை”—பரிபாடல்-1.
    “பீதக உடை”—சூளா. 1879.
    “பாயுடை”—பெரிய திருஞான. 724.
  6. “ஆடை” என்றால் உடை என்றே பொருள்படும். இது உடம்பின் மேல் அணிகின்ற எல்லாவகையான உடுக்கும் அமைப்புக்களைச் சுட்டும். “தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள்”-அ. மீராமுகைதீன்.
    தமிழியல்-டிசம்பர் 1974—பக். 90.
    “உடை என்னும் சொல் பயன்படுத்தப்படும் தொடர்பு அது நெருங்கி அணியப்படுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஆடை என்றால் தோற்றத்திற்காக அணியப்படுவது என்ற பொருளைத் தருவதுபோல் இருக்கிறது என்கின்றார் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள்...... இம்மாறுபாடு ஆராய்ச்சிக்கு உரியது”—தமிழர் ஆடை, டாக்டர் திருமதி தே.தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்னை பவளவிழா மலர்-பக்.100.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/006&oldid=1841540" இலிருந்து மீள்விக்கப்பட்டது