தமிழர் ஆடைகள்/009
13. பூங்கரை நீலம்
சங்க இலக்கியம் குறிப்பிடும் இவ்வுடை பற்றிப் பிற்கால இலக்கியங்கள் ஏதும் பகரவில்லை. ஆயின் பெருங்கதையில் ‘நீலம்’ என்றதொரு ஆடைப்பெயரினைக் காண்கின்றோம் (1:42:208) இதனை நோக்க, அரத்தம், கரியல் போன்று, நீலநிற ஆடை முதலில் பூங்கரைநீலமெனப்பட்டு, பின்னர் நீலமென நின்றிருக்கக் கூடும். அல்லது நீல ஆடை நீலமெனவும், கரைமட்டும் நீலமாக அமைவது பூங்கரை நீலமெனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.
சங்கப் பாக்களில் ஈரிடங்களில் இவ்வுடை பற்றிய எண்ணம் அமைகின்றது.
‘யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇ’
(மு.கலி. 11)
‘யானு மென் சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர்பொல்கி’
(மு.கலி. 15)
இரண்டு இடங்களிலும் தலைவியின் உடையாகக் காட்டப்படும் இவ்வுடை, நிலம் தாழ உடுத்தப்படும் உடை எனத் தெரிகின்றது. வேறு எண்ணங்கள் புலனாகவில்லை.
14. தூசு
பிற திராவிட மொழிகளில் இல்லாது, தமிழில் மட்டும் காணக் கிடக்கும் ஆடைபற்றிய சொல் தூசு. சங்க காலத்தில் இத்தூசு பற்றிய கருத்து அருகிக் காணப்பட (பட்டினப்பாலை 148) பின்னைய காலங்களில் இதன் செல்வாக்கு மிகுகின்றது.
உயர்நிலை மாந்தரால் உடுத்தப்படுதலிலும் (சீவக. 550, 1320) (கம்ப. சுந்தர. 413) மன்னன் கொடையிலும் (கம்ப. 10516, 10518) அதிகமாகப் பயின்று வருவதால் தூசு மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைக் காட்டும். பயிற்சி அதிகமிருப்பினும் இது எந்த இழையால் நெய்யப்பட்ட ஆடை என்பது தெளிவுறவில்லை. பொதுநிலையில் ஆடை என்ற பொருளில் பருத்தி, பட்டில் சிறந்த ஆடைகளைக் குறிக்கும் சொல்லாக இது திகழ்ந்திருக்கக்கூடும். வெண்ணிறத் தூசு சிறப்பாகக் காணப்படினும் நிறத்தூசும் இருந்தன என்பதனை ஒரு சில சான்றுகள் உணர்த்தவல்லன (கம்ப. சுந்தர. 413).
தூசுபோன்ற பல சொற்களை வடமொழியிலும் காணக்கூடுகின்றது. அவை கம்பளி பின்னப்பட்ட கம்பளி என்ற பொருளைக் குறிக்கின்றன. ஆயின் தமிழில் பயிலும் தூசு, பட்டாடை பருத்தியாடையே தவிரக் கம்பளி ஆடையாக இருந்தமைக்குரிய எண்ணம் ஏதும் இல்லை. இது தோலாடையும் அன்று என்பது,
தூ சொடும் அணியும் முந்நூல்
தோல்தரும் தோற்றம் போன்றும்
(கம்ப. 674)
என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. அணிந்திருந்த தூசு அழகற்றதாய் தோல் போன்று காட்சி அளித்தது என்னும் பொருள் தூசு, தோலாடை. அன்று என்பதைத் தெளிவாக்கும்.
இன்று தூசு ஆடையைக் குறித்தல் இல்லை.
15. புட்டகம்
பரிபாடல் உரைக்கும் உடை இது.
புட்டகம் பொருந்துவ புனைகுவாரும் (12:17) என்ற பாடலடியில் காணும் புட்டகம் நீராடுவதற்கேற்ற உடை என்னும் பொருளுடையது என்பர்.[1] பிற இலக்கியங்களில் இதனைப் பற்றிய எண்ணமில்லை. எனவே வேறு விளக்கங்கள் தெளிவுறவில்லை. வடமொழியிலும் புட்டகா என்றதொரு உடையினைக் காண்கின்றோம். இதுவும் புட்டகம் போன்று தெளிவு பெறாததே.[2]
16. கம்பல்
17. நூல்
பட்டு எனப் பட்டாடையைக் குறித்தல் போன்று நூல், பஞ்சு, இழை என்று பருத்தியாடையைச் சுட்டும் மரபும் தமிழரிடம் காணப்பட்டது.
நுண்நூல் ஆகம் பொருந்தினள் (அகம். 198) என்னும் பாடலடியில் நூல் நுண்மையான நூலால் ஆகிய ஆடையை விளக்குவதாகும்.
பஞ்சாடை பஞ்சி எனச் சிந்தாமணி, சூளாமணியில் காட்டப்படுகின்றது.
- பஞ்சிமேற் கிடந்துடை ஞாண்பதைத்திலங்க - சீவக. 2240.
- பஞ்சிலங்கு அல்குலாள் - சூளா. 495.
இன்று, இவ்விரண்டு சொற்களும் வழக்கற, நூலினைக் குறித்த இழை என்ற சொல் (கம்ப. 309) உடையைச் சுட்டும் நிலையில் அமைகின்றது. ஆயின் இதுவும் திரிந்தே பயில்கிறது.
நேரியல் என்பது மேலாடையின் பெயராக இன்று வழங்குகின்றது. நேரிய இழையாலாகிய ஆடையே, நேரிய இழை என நின்று நேரியல் என மருவி நிற்கின்றது. நேரியது என்ற வழக்கும் உண்டு.
18. வாலிது
நிற ஆடைகளை நிறம் கொண்டு சுட்டல்போன்று,. ஆடையின் இயல்பு கொண்டு பெயர் சூட்டுதலும் உண்டு. சங்க இலக்கியத்தில் புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை, வாலிது என அழைக்கப்பட்டது (புறம். 262). இதனைப் போன்று அழுக்குடையினை மாசு உண்ணல் காரணமாக மாசுணுடுக்கை (புறம். 54) மாசுணி (ஆசாரக். 12) என வழங்கும் வழக்கினையும் காணக்கூடுகின்றது.
இன்று வெள்ளை, சலவை என்று, வெளுத்த ஆடையைக் குறித்தும், அழுக்கு என மாசுணியைக் குறித்தும் தமிழர் வழங்குகின்றனர்.
19. கச்சை
கச்சை என்ற சொல் குறித்துப் பகரப்படும் எண்ணங்கள் இதனை வடமொழிச்சொல் எனக் காட்டுகின்றன. இதனைப் பற்றிய தெளிவினை நம் இலக்கியங்கள் தராமை மேற்கூறிய வடமொழிச் சொல் என்னும் கருத்தினை ஏற்கச் செய்கின்றன.
வடமொழியில் உள்ள ‘கக்ஷ’ என்ற சொல்லினின்றும் தோன்றியது இது. இதிலிருந்து இந்தோ-ஆரிய மொழிகளிலுள்ள கச்சா, காசா என்னும் சொற்கள் பெறப்பட்டன.[4] என்பர் திரு. எஸ். வைத்தியநாதன் கருத்தும் இதனோடு ஒப்புமையுடையதாகும்.[5]
திராவிட மொழிகள் பலவற்றிலும் இச்சொல்லின் பயிற்சி அமைகின்றது.[6]
கச்சை பயிலும் நிலைகள், இதனை அமைக்க எல்லாவகைத் துணிகளையும் பயன்படுத்தினமையைக் காட்டும் (சிறு. 239, குறிஞ். 125, பெருங். 1.41:98, சூளா. 538). அரையில் இறுக்கிக் கட்டினர்; தாழ்வாகக் கட்டினர் என்பனவும் புலனாகும் எண்ணங்கள். பெரும்பாலான காட்டுகள் தொழில் செய்யும் நிலையில் இதனை வரிந்து கட்டினர் எனச் சுட்டுகின்றன.அகராதிகள் பொருளுரைத்தலைப் போன்று,[7] உரையாசிரியர்களும் உடை என்ற பொதுப் பொருளையே உரைக்கின்றனர். எனவே இடையில் இறுக்கமாகக் கட்டப்பட்டதொரு உடை என்பது தெளிவாகின்றது.
இன்று கச்சம் வைத்துக் கட்டுதல் என்பது வேட்டி உடுத்தும் முறையைச் சுட்டுதலாகும். இது தவிர, இடுப்பில் துணி கட்டிக்கொள்ளலையும் கச்சை கட்டுதல் என்பர். இறப்புச் சடங்கில் (கன்னியாகுமரி மாவட்டம் - செட்டியார்) கச்சை கட்டுதல் தனியிடம் பெறுகிறது. இது இடுப்பில் கட்டும் துணியையே குறிக்கின்றது.
20. கச்சு
சங்க காலத்திலிருந்தே தமிழ் மகளிர் மார்பு ஆடை, கச்சு வம்பு, வார் என்று அழைக்கப்பட்டது. இவற்றுள் அதிக செல்வாக்குப் பெறுவது கச்சு ஆகும்.
வரிந்து கட்டிய ஆடை, கச்சை என்று அழைக்கப்பட, மார்பிலும் வயிற்றிலும் இறுகக் கட்டப்பட்டதன் காரணமாக கச்சு என வழங்கப்பட்டிருக்கலாம். மலையாள மொழியிலும் இச்சொல் வழக்குண்டு.[8]
துணி, பொன் இரண்டாலும் கச்சுகள் செய்யப்பட்டன. பொன்னாலாகியது அருகியே காணப்பட்டது. பல வண்ணத் துகில்கள் கொண்டு இவை அமைந்தன என்பது கருங்கச்சு. விரவு வரிக்கச்சு, நிலக்கச்சு, செம்பூங்கச்சு, அம்பூங்கச்சு போன்ற எண்ணங்களால் தெளிவுபடும்.
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று - அகம். 376.
வார் கச்சிற் றானை வீக்கல் - சீவக. 878.
கச்சியாப்புறுத்த கால் வீங்கிள முலை - பெருங். 1.34:202
கருங்கணிள முலை கச்சற வீக்கி - சீவக. 2116
என்பன மார்புக் கச்சினையும் காட்டும் சில சான்றுகள்.
இன்றைய நிலையில் மகளிர் அணியும் மார்பாடை (பிரா) ஆடவர் பயன்படுத்தும் வார் (பெல்ட்) போன்று இதனைக் கொள்ளலாம்.
மேலாடை இன்றியமையாததென எண்ணாத மகளிர்; புதுமையாக ஏற்றுக்கொண்டமையின் வம்பு எனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.
அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்பு விசித்தியாத்த வாங்கு சாய்நுசுப்பின் - நெடு. 149-50.
வம்பு வீக்கி வருமுலையுட் கரந்து - சீவக. 633.
வம்பின்பொங்கும் கொங்கை சுமக்கும்வலி இன்றி - கம்ப. 1002போன்ற இதன் பயிற்சி நிலைகள், மார்பில் இறுக்கிக் கட்டப்பட்ட, இதன் தன்மையை இயம்பும். உவமைகள், அடைகள் போன்றன இதனுடன் கட்டப்படாக் காரணத்தால் கச்சு போன்றதொரு ஆடை என்பது மட்டுமே விளக்கமாகின்றது.
கச்சு, வம்பு போன்று வரிந்து கட்டப்பட்டமை, வார் என்ற சொல்லாக்கம் பெற வாய்ப்பு அளிக்கின்றது. வார் முலை முற்றத்தை மறைத்தல் காரணமாகவும் (அகம். 361) இப்பெயர் அமைந்திருக்கலாம். ஆடவர் கட்டும் கச்சினை இன்றும் வார் என்னும் வழக்கு கச்சு, வார் ஆகியவற்றின் தொடர்பினையே காட்டும்.
இன்று இச்சொற்கள் வழங்கப்படவில்லை. இரவிக்கை, ஜெம்பர், சட்டை, பாடி, பிரா போன்ற பல பெயர்கள் இப்பொருளில் அமைகின்றன.
21. மெய்ப்பை
சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும் சட்டையைக் குறிக்கப் பயன்படும் சொற்களுள் மெய்ப்பையும் ஒன்று.
மெய்ப்பை புக்கு வெருவரு தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
என்று முல்லைப்பாட்டும் (60-61), மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவினையுடைய பொற்கொல்லனைச் சிலம்பும் (16:106) காட்டும். முல்லைப்பாட்டு அடிக்கு உ.வே. சாமிநாதையர் ‘சட்டை இட்ட அச்சம் தரும் தோற்றத்தினையுடையோர்’ என்று பொருள் எழுதுகின்றார்.
மெய்ப்பையுடன் தொடர்புடைய மெய்யாப்பு என்ற சொல்லும் (பரி.தி. 2.19) இதனைக் குறித்தமைகின்றது. வழக்கம் இல்லாத பண்டைத்தமிழர் பிறநாட்டார் சட்டையிடும் தன்மையையும், அதனைக் கண்டு, தங்களுள் ஒருசிலர் அணிவதையும் காண்கின்றனர். மக்கள் மனதில் சட்டையைப் பற்றிய எண்ணமின்மையின் தனிப்பெயர் ஏதும் தெரியவில்லை. தாங்கள் கண்ட காட்சியிலேயே மெய்யினை மறைப்பது என்ற பொருளில், மெய்ப்பை, மெய்ம்மறை, மெய்யாப்பு என்ற பல பெயர்களைச் சூட்டுகின்றனர். காலப்போக்கில் பிற கஞ்சுகம், குப்பாயம் போன்ற சொற்கள் அமைய இவை மறைந்து விடுகின்றன.
ஆடையில் சித்திரம், ஓவியம் எழுதும் வழக்கம் பழமையானது. சித்திரச் செய்கைப் படாம் என்று உலவனம் ஒப்புமையாக்கப்படும் தன்மையில் இவ்வெண்ணம் விளக்கம் பெறும் (மணி. 3:165). இன்று சித்திரங்களைப் படம் எனச் சுட்டல் போன்று அன்று, சித்திரங்கள் அமைந்த துணியினைப் படம் என்று குறித்திருக்கின்றனர்.[9] இந்நிலையில் படம்கொண்டு செய்த சட்டையினை படம் என்று வழங்கினர்.
படம் புகு மிலேச்சரையும் (முல்லை. 66) படம் புக்க வம்பலரையும் (பெரும். 69) சங்க காலத்தில் காண்கின்றோம். பின்னர், உறை என்று சிலப்பதிகாரம் சுட்டுகின்றதே தவிர, சட்டை என்ற பொருளில் இதன் பயிற்சி இல்லை. ஆடையைக் குறிக்கும் பொது வழக்காகத் திகழ்ந்தமையின் படம் என்னும் சட்டையைக் குறிக்கும் நிலை, செல்வாக்கு இழந்துவிடக் காண்கின்றோம்.
வடநாட்டார் தொடர்பு தமிழருக்கு அளித்த உடையே கஞ்சுகமாகும். சிலப்பதிகாரத்தில் முதன் முதலாக அமையும் இச்சொல்லாட்சி 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்கின்றது.
கஞ்சுகி மாக்கள், கஞ்சுகி அவரொடு, கஞ்சுகியவர், கஞ்சுகி மாந்தர், காஞ்சுகி முதியர் எனப் பல பெயர்களால் கஞ்சுகம் அணிந்தோர் குறிப்பிடப் படுகின்றனர். உரையாசிரியர் உரைகளும், வடமொழி நூற்குறிப்புகளும் கஞ்சுகம், மேலே அணியும் சட்டை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.[10]
சிலம்பில் முதன் முதலாகக் காட்டப்படும் கஞ்சுகமாக்கள் வடநாட்டாரே.
சஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவரும் (சிலப். 26:137-8)
வடநாட்டுடன் கஞ்சுகத்திற்குரியத் தொடர்பு இதனாலும் விளக்கம் பெறும்.
கஞ்சுகத்தின் அமைப்பு கம்பன் பாக்களில் தெளிவாகின்றது.
தாழ்ந்து விரிந்த கஞ்சுகம் - கம்ப. 880.
மெய்புகத் துன்னிடு கஞ்சுகத் துகிலர் - கம்ப. ஆரணிய. 569.
முற்றும் மூடிய கஞ்சுகன்-கம்ப. 6926.
இவை, கஞ்சுகம் முதலில் சட்டைபோன்றும் பின்னர் தளர்ந்த அங்கிபோன்றும் அமைந்திருக்கக் கூடும் என்ற எண்ணங்களைத் தருகின்றன. இதற்கு ஏற்றாற்போன்று பிற எண்ணங்களும் உள.[11]
கஞ்சுகத்தை வடநாட்டில் ஆடவரும் மகளிரும் அணிந்தனர்[12] ஆயின் தமிழகத்தில் ஆடவரிலும் ஒரு சிலரே அணிந்தனர். எனவே, இதன் அமைப்பு முறையிலும் மாறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு. சூளாமணியில் ‘கஞ்சுகமுகத்த’ (1796) என்று மகளிர் அணிந்ததாகக் காட்டப்படினும், விளக்கமின்மையாலும், பிற சான்றுகள் மகளிர் அணிந்தமையைத் தெரிவிக்காமையானும் இவ்வெண்ணம் தெளியுறவில்லை.
பெருங்கதையில் தோற்றம் பெறுவது குப்பாயம் என்னும் சொல். மெய்ப்பை, படம், கஞ்சுகம் போன்ற பிற சொற்கள் பண்டுதொட்டே சட்டையைக் குறித்து அமையினும் குப்பாயம் போன்று இன்றுவரை செல்வாக்குடன் திகழும் தன்மை அவற்றுக்கில்லை. கேரளாவில் இன்றும் சட்டையைக் குறிக்கக் குப்பாயத்தைப் பயன்படுத்துகின்றனர். எனினும் அதிகமான இலக்கியப்பயிற்சி அமையாமை சுட்டத்தக்கது.
பெருங்கதை வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையராகக் காவலரைக் காட்டும் (1:41:378) வரிகள் போட்ட துணியால் அமைந்த சட்டையாக இங்கு இது அமைகின்றது. திருத்தக்க தேவர்,
பதுமுகன் பரவை மார்பன் நெய்ச்கிழிப்பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே
சீவக. 678.
என்ற பாடலில் புதுமையானதொரு சட்டையினைக் காட்டுவார். இதற்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர், ‘மருத்துவன் தான் பதுமுகன் மார்பிலே கிழியைச் சேர்த்தி, காற்று படாதபடி உள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படாத்தாற் செய்த சட்டையிலே புகுக என்று கூறிப் பரிகரித்தான் என்க’ என்று நவில்கின்றார். மருத்துவ முறையிலும் சட்டையினை அமைத்தனர் தமிழர் என்பது இங்கே விளக்க முறுகின்றது.
பின்னர் சட்டை என்று குறிப்பிடும் வழக்குத் தொடங்கிவிடக் காண்கின்றோம் (சீவக. 678-நச்சி-உரை). இன்று சட்டையுடன் உடுப்பு, சொக்காய், ஷர்ட் போன்ற சொற்களையும் தமிழர் பயன்படுத்துகின்றனர்.
22. உத்தரீயம்
மேலாடையின்றி சபை புகுந்தால் மதிக்கமாட்டார் மேதினியோர் என்ற எண்ணமும் மேலாடையைப் பற்றிய தமிழன் உணர்வைப் புலப்படுத்தும். தமிழர் ஆடை வரலாறும் இக்கருத்தினையே உறுதிப்படுத்துகின்றது.
உயர்ந்தோர் மேலாடை அணிந்தும், தாழ்நிலை மாந்தர் மேலாடை அணியாமலும் இருந்திருக்கின்றனர். சோழர் காலத்தில் ‘குயவர்கள் ஒரு மேலாடை அணிந்துகொள்ளலாம்’ என்ற தகுதி உயர்வு விதியும் சமுதாய மதிப்பிற்குரிய இதன் பங்கினைப் பறைசாற்ற வல்லது. ஆடவர் இவ்வுணர்வு காரணமாக இதனை அணிய மகளிர் நம்பிக்கை (சீவக. 353), அழகு கருதி இதனை ஏற்கின்றனர்.
மேலாடையினைக் குறிக்கத் தமிழர் உத்தரீயம், பட்டம், மீக்கோள், வடகம், உத்தரியம், உத்தராசங்கம், மேலாப்பு, ஏகாயம் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.உத்தரீயம் என்னும் சொல் கலித்தொகையுள் சுட்டப்படுகின்றது. இது வடமொழிச் சொல் என்பதனை இச்சொல் பற்றிய அறிஞர் எண்ணங்கள் தெளிவாக்குகின்றன.[13] உத்தரம்-மேற்பகுதி என்ற வடமொழிப் பொருளும், மேற்பகுதியில் அணிந்தமையின் இப்பெயர் பெற்றிருக்கக் கூடும் என்பதனை விளக்கவல்லது.[14] இச்சொல் கம்பன் காவியத்தில் மிகுதியான பயிற்சி பெறுகின்றது. திரிபு அடைந்து உத்தரியம், உத்தராசங்கம் என்றும் இவை வழங்கப்படக் காணலாம் (சுந்தர. 41,பால. 832).
‘உடையும் ஒலியலும் செய்யை’ என்னும் பரிபாடல் (19:97-98) சுட்டும் ஒலியலை மேலாடை என்றுரைப்பர். உரையாசிரியர்கள் தானை (மது. 435) துகில் (நெடு. 181) தூசு (சீவக. 1302) போன்ற பிற உடைகளுக்கும், ஒலியல் என்று மேலாடை என்னும் பொருளை உரைப்பர். மேலும் கோயில் ஒழுகில், ஒலியல் என்ற ஆடை சிறந்ததாகச் சொல்லப்படுகிறது என்ற கருத்தையும் காண்கின்றோம்.[15] பிற்கால இலக்கியங்களில் அதிகப் பயிற்சி பெறாமையான், இதனைப் பற்றிய விளக்கத்தை அறியக் கூடவில்லை.
பட்டம் என்ற சொல் ஐந்திணை எழுபதில் (மரு. 41) இடம்பெறுகின்றது. கடாஅக் களிற்றில் மேல் கட்படாம் மாதர் படாஅ முலை மேல் துகில் என (குறள். 1087) மாதர் துகிலுக்கு ஒப்புமையான படாத்தின் திரிந்த தன்மையும் அணியும் விதத்திலுள்ள ஒற்றுமையும் இச்சொல்லுக்குரிய காரணமாகலாம். யானையின் முகப் படாத்தினை நெற்றிப்பட்டம் என்று கூறும் வழக்கும் இதனோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.பெருங்கதை மீக்கோள் என்றும் (2.15:126), வடகம் என்றும் (1:53:145) மேலாடையைக் குறிக்கின்றது. இன்று மேலாப்பு, மேலாக்கு, மேலாடை என்ற வழக்குகள் உள்ளன. மேலாடையின் பின் அமையும் பகுதி முன்னால் வரும் தன்மை முந்தானை, முந்தாணி என்ற பெயர்களையும் இதற்களித்துள்ளது.
சிந்தாமணியிலும் வடகம் சுட்டப்படுகின்றது (462).
எனக் கம்பனும் காட்டுகின்றான். வடகத்தைத் துகில் வகையுள் ஒன்றாகக் காட்டுவார் அடியார்க்கு நல்லார் (சிலப். 14:108). எனவே துணியின் வகையாகிய வடகத்தின் சிறப்புக்கருதி இதனை மேலாடைக்குப் பயன்படுத்தியிருப்பர் என எண்ணத் தோன்றுகின்றது. இன்று இவ்வழக்கு இல்லை. நச்சினார்க்கினியர் தம் உரையில் வடகத்தினை, அத்தவாளம்; உடைவிசேடம் (சீவக. 462) என்பர்.
இப்பல சொற்களிலும் இன்றும் பயிற்சியில் நிலைத்திருத்தல் உத்தரியத்திற்கே உரியது. அந்தணர், சோமன்உத்தரீயம் என்று வேட்டியையும் மேலாடையையும் சுட்டுகின்றனர். தவிர நேரியல், உறுமால், அங்கவஸ்திரம், மேல் துண்டு என ஆடவரின் மேலாடையினையும், முந்தானை, முந்தாணி, மேல்ச்சீலை, போன்ற சொற்கள் பெண்டிர் மேலாடையினையும் குறித்து வழங்குகின்றன. அதிகப் பயன்பாடு காரணமாக ஆடவர் மகளிர் மேலாடை தனித்த பெயர்களால் இன்று சுட்டப்படுகின்றது.
இவை பொது நிலையில் மேலாடையைக் குறிக்க வழங்கின எனினும் இவற்றுள்ளும் வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். சான்றாக நேரியல், உறுமால் இரண்டையும் நோக்கலாம். இவை பொருளால் ஒன்றுபடினும் அளவு வேறுபட்டனவாக அமைவன நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் ஒரே அளவாயிருத்தலை உறுமால் என்பர்.
23. போர்வை
போர்வை, படாம், கம்பலம் என்ற சொற்கள் தமிழரால் போர்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. சங்கத் தமிழர் போர்வை எனும் பொருளில் பயன்படுத்தியது ‘படாம்’ எனினும் பின்னர் ‘போர்வை’யே பெரும்செல்வாக்குப் பெறுகின்றது. இன்றும் இந்நிலையே நீடிக்கின்றது.
படர்ந்து இருத்தல் காரணமாகப் பெயர் பெற்றது படாம். உடாஅ, போராஅ என்பதறிந்தும் படாத்தினை மஞ்ஞைக்கு ஈயும் தன்மையில், சங்கப் புலவர் படாம் பற்றிய எண்ணத்தினை நல்குகின்றார். பின்னைய இலக்கியங்கள் போர்த்தல் என்ற பொருளில் இதனைச் சுட்டினாலும், யானையின் முகபடாம் (குறள்-1087, சீவக. 182) விரிப்பு (பெருங். 1.47:179) என்பனவற்றைச் சுட்டப் பயன்படுத்துகின்றனரே தவிர, மக்கள் போர்த்தியமையைக் குறிக்கப் பயன்படுத்தவில்லை.
படாம் என்ற சொல், பாவாடை என்று வழங்கிய நிலையும் பரவிய ஆடை என்ற இதன் பொருளையுணர்த்த வல்லது.
விலை வரம்பறிதலில்லாத வெண்டுகில் அடுத்து என சிந்தாமணி (617) படாம் விரித்தமையைப் பேசும். பெரியபுராணத்தில் பாவாடை என்றே இது சுட்டப்படுகின்றது. பரந்த பாவாடைமீது முன்னிழிந்து அருளி வந்தார் (திருஞான. 1226).
கலிங்கத்துப் பரணியிலும் பாவாடை பற்றிய எண்ணத்தைக் காண்கின்றோம் (561).
இன்றும் யானையின் முகபடாத்தில் இச்சொல் வழக்கு மிகுதியாக அமைய, கரும்படாம், கரும்படம் எனப் போர்வையைக் குறிக்கும் மரபும் ஒருசில இடங்களில் தென்படுகின்றது (கன்னியாகுமரி மாவட்டம்). பாவாடை நடைப் படாத்துடன் பெண்டிர் இடையாடையினையும் குறிக்கின்ற நிலை கண்கூடு.
மயிரினால் உருவாக்கப்பட்ட ஆடைகள் அனைத்தையும் ‘கம்பளா’ என, பெளத்த இலக்கியங்கள் சுட்ட[16], தமிழர் போர்வைகளுள் மயிரினால் ஆனவற்றை மட்டும் கம்பலம் என்று வழங்கியிருக்கின்றனர். மயிர் ஆடைபற்றிய எண்ணங்கள் பல இருப்பினும், அவை தனித்த பெயர்களால் சுட்டப்படவில்லை என்பதும், கம்பளம் என்று வடநாட்டார் சுட்டும் தன்மையும் இது வடசொல்லாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருவன. இன்று கம்பளம், கம்பளி என்று வழங்குகின்றது.
போர்த்தலால் பெயர் பெற்றது போர்வை. முதலில் தோற் போர்வையையும் (புறம். 387, 399), பின்னர் துணியினைக் குறிக்கவும் வழங்குகின்றது. சான்றாக, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்-(பழமொழி. 74) ‘அந்துகிற் போர்வை அணிபெற தைஇ’ (கலித். குறிஞ். 65) போன்ற பல எண்ணங்களைக் காண்கின்றோம்.
பலவகைத் துணிகளினாலும் போர்வை உருப்பெற்றது எனினும் மயிர்ப்போர்வை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. மயிர் ஆடை பற்றிய எண்ணத்தினைச் சிலம்பு சுட்ட (5:16) பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் இதன் பெருஞ்சிறப்புகளை இயம்புகின்றன.
எலிப்பூம் போர்வை எனவும் (பெருங். 1.47:179) எலிமயிர்க் கம்பலம் (சீவக. 2686) என்றும் சுட்டப்படும் இவை, மயிர்ப்படாத்தினை விடவும் சிறந்தது என்பதும் புலனாகின்றது.
ஒடுச் சொல் உயர்பின் வழித்தே என்னும் இலக்கண நிலையில் நின்று இதனை உணர்த்துகின்றனர் புலவர்.
எலிமயிர்ப் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து - பெருங். 1.47:179
மேலும்,
எங்குமில்லன எலிமயிர்த் தொழில்
பொங்கு பூம்புகைப் போர்வை - சீவக. 2680.
பனிமயிர்க் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனிமயிர்க் குளிர்ப்பன கண்கொளாதனவாம் - சீவக. 2471.
இன்று போர்வையுடன் புதைப்பு என்ற சொல் வழக்கும் தென்தமிழ் நாட்டில் உள்ளது (கன்னியாகுமரி மாவட்டம்). ‘புதைத்தல் - போர்த்தல்; மலைநாட்டு வழக்கு’ என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 5:4), மலையாள நாட்டில் இன்று இவ்வழக்குண்மை, சார்பு காரணமாகத் தமிழராலும் இது பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வல்லது.
அடியார்க்கு நல்லார் துகில் வகையுள் உரைக்கும் செம்பொத்தி, வெம்பொத்தி, பணிப்பொத்தி என்ற ஆடைகள் பொத்திப் படுக்கும் போர்வைகள் என்பதும், வெண்மைநிறம், சென்னிறம், வேலைப்பாடுகள் அமைந்தமை காரணமாக இவை பெயர் பெற்றிருக்கலாம் என்பதும் அறிஞர் ஒருவரின் எண்ணமாகக் காண்கின்றோம்.[17] போர்த்தி என்ற சொல்லின் திரிபாகப் பொத்தி அமைந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் இவ் அறிஞர் கருத்தை உறுதிப்படுத்துவதாகும்.
இச்சொற்களைத் தவிர, நீலகேசியில் அமையும் ‘பெரிய பிரச்சையினாய்’ (497) என்பதில் உள்ள பிரச்சை என்ற சொல்லுக்கு உரையாசிரியர் போர்வை என விளக்கம் அளிப்பார். ஆனால் பிற விளக்கங்கள் இதனைப்பற்றியின்மையால், தெளிவாக இச்சொல் பற்றி அறியக் கூடவில்லை.
24. கவசம்
காப்புக்காக அணியும் உடை கவசம். காலப்போக்கில் பலசொற்கள் கவசம் குறித்து முகிழ்த்தபோதும் தன் செல்வாக்கினின்றும் பெயர்ச்சியுறாதது இச் சொல், சங்கப் பாவில், புலிநிறக் கவசம், கச்சம், மெய்புதை அரணம் என்ற சொற்களும் சிந்தாமணியில் புலிநிறப் போர்வை, கருவி, கவசம், ஆசு, பூண், சாலிகை என்ற பெயர்களும், கம்பனில், கவசம், சாலிகையுடன் கோதை, புட்டில் என்பனவும் இதனைக் குறித்தமைகின்றன. உரையாசிரியர் உரை சந்நாகம் என்னுமொரு சொல்லினையும் நவிலும் (சீவக. 2236).
புலிநிறக் கவசத்திற்குப் புலியின் தோலாலாகிய கவசம் என்ற பொருளைக் காண்கின்றபொழுது (புறம். 13) முதலில் தோல் கொண்டு கவசம் அமைந்திருக்கக் கூடும் என்ற உணர்வினைப் பெறுகின்றோம். பின்னர் சிந்தாமணி (266) புலிப்பொறிப் போர்வையைத் தரல் உலோகத்தால் ஆன கவசத்தின்மேல் புலித் தோலினை மரபு கருதி அல்லது பகைவர்க்கு அச்சம் தரும் இயல்புகருதி அணிவித்திருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கு ஏதுவாகின்றது. இறுக்கமாகக் கட்டப்பட்ட கச்சு, கச்சை போன்று, காலின் பாதுகாப்பினைக் கருதி அணிந்த கவசத்தினைக் கச்சம் என்றனர் (மதுரைக். 436). மெய்புதை அரணம் (பதி. 52:6) என்னும் அரணம் குறிக்கும் சொல்லினைக் காண, அரணாகப் பயன்பட்டமையின் இப்பெயர் பெற்றமை விளங்குகின்றது, உட்கட்டு என வழங்கப்படும் கோவணமும் (திருமந்திரம் — 1635) அரணத்துடன் தொடர்புடையதாகும். இடையுடையாகப் பயன்படினும் பாதுகாப்பு உணர்வு காரணமாக இதுவும் அரணம் என்ற சொல்வழக்கினைப் பெறுகின்றது. ‘தலையாய காப்பு’ - கோ அரணம் என்றாகி, மக்கள் பேச்சு எளிமையில் கோவணமாகத் திரிந்துவிட்டது. பெரியபுராணம் இச்சொல்லினை மிகுதியாகக் கையாளுகின்றது.
கீள் எனும் உடையினையும் இதனோடு இணைத்துச் சுட்டுவர் (பெரிய. அமர்நீதி. 3). எனவே இதுவும் கோவணம் போன்றதொரு உடையாக இருக்கலாம். கீழ் உடை என்னும் சொல்லே கீள் உடை என மருவியிருக்கலாம் என்னும் நிலையில் இக்கருத்து உறுதி பெறும்.
மெய்ம்மறை என்ற சொல்லும் காப்பு, கவசம் என்ற பொருளில் சங்க இலக்கியப் பயிற்சி பெறுகின்றது (பதி. 14:12)
கருவியால் செய்யப்பட்டமை காரணமாக, கருவி, பூண் என்ற பெயர்களையும் கவசம் பெறுகின்றது (சீவக. 2214, 2265), சாலிகை (சீவக. 2217) என்ற சொல் விளக்கம் புலப்படவில்லை.
கால்கவசத்தைக் கச்சம் என்று சங்க இலக்கியம் சுட்ட, ஆசு எனச் சிந்தாமணி (2236) இதனைக் காட்டும்.
கம்பனில், கோதை (8658), புட்டில் (9791) என்பன கைக் கவசமாக, விரலுறையாகக் காட்டப்படுகின்றன.
சீவகசிந்தாமணியில், நச்சினார்க்கினியர் ‘சந்நாகம்’ (2236) என்று ஆசிற்குப் பொருள் உரைப்பர். இச்சொல் வடமொழிச் சொல் ஆகும்.[18]புலிநிறக் கவசம் (புறம். 13), பொன்னணி கவசம் (சீவக. 799), ஆடகக் கவசம் (கம்ப. ஆரணி. 480) கற்றை அம்சுடர்க் கவசம் (கம்ப. 7385), ஒளிகிளர் கவசம் (கம்ப. 9274) போன்ற கவசம் பற்றிய எண்ணங்கள் இதன் உருவாக்க நிலையை உரைத்து நிற்கின்றன.
போரைப் பொழுதுபோக்காகக் கொண்டு திகழ்ந்தவர் தமிழர். விளையாட்டு தங்கள் உயிருக்கு வினையாகிவிடக் கூடாது என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. எனவேதான் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, அதற்கு ஏற்றாற்போன்று உடை அணிந்து செல்கின்றனர். இவற்றுள் முதலிடம் பெறுவதே கவசம், மக்கள் சிந்தனையில் மிகுந்த இடம் பெறும் தன்மையால், காலந்தோறும் பெற்ற வளர்ச்சியினையும் இக்கவசம் பற்றிய வரலாறு தரும்.
25. அரத்தம்
சிவந்த நிறமானது எனத் தன் பெயரிலேயே சொல் விளக்கத்தினைக் கொண்ட ஆடையாகிய இது பதினெண்கீழ்க்கணக்கில் தோற்றம் பெறுகின்றது.
‘அரத்தம் உடீஇ அணிபழுப்பப்பூசி’ப் (திணை. மாலை. நூற். மரு. 144) பரத்தை மனை நோக்கிச் சேடியை அனுப்பும் நிலையில் நீதிநூல் இதனைக் காட்டும். குறிப்புமொழியாகப் பயன்படும் இவ்வாடை, கார்கால மகளிர் உடுத்தியதாகச் சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுகின்றது. ஆடவரின் ஆடையும் அரத்த ஆடையாக அமையும் (சிலப். 22:46), பெருங்கதையிலும் அரத்தம் பற்றிய எண்ணம் உண்டு (1.42:208). அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வருக்கத்துள்ளும் இது இடம் பெறுகின்றது (14:108).
இவ்வாடை அரத்த நிறமுடைய ஆடை எனப் புலனாகின்றதே தவிரப் பட்டா பருத்தியா என்பது தெளிவுறவில்லை. அரத்தப்பட்டு என்னுமிடத்தில் பட்டு என்பது விளக்கம் பெறுகின்றது. அரத்தப் பட்டினையே அரத்தம் என்னச் சுருக்கி அழைத்திருக்கவும் வாய்ப்புண்டு, இன்று அரத்தம் என்று சுட்டும் தன்மை ஆடைக்கில்லை. இதனைப் போன்று அடியார்க்கு நல்லார் உரைக்கும் கரியல் (14:108) என்ற ஆடையும் கறுத்த நிறத்தால் பெயர் பெற்றிருக்கலாம்.
- ↑ புட்டகம்—Bathing Dress—Pre Pallavan Tamil Index, Dr. N. Subramanian.
- ↑ Phuttaka—This was some sort of cloth which I have not been able to identify. This material apparently seems to have been in a great demand as a shop at Separa exclusively dealing in this material (Phuttaka—Vastravari) is mentioned. Could it be some sort of printed ealice?—Costumes, Textiles, cosmetics & Coiffure, Dr. Motichandra, page—32.
- ↑ கம்பல்—Garment; ஆடை.—Tamil Lexicon, Vol.II, Part-I
- ↑ ஆண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை - தமிழாக்கம்: எஸ். இலட்சுமி, பக்கம். 79.
- ↑ Indo Aryan Loan Words in Old Tamil—S. Vaidyanathan, Page-85.
- ↑ Ta. Kaccai—rope, girth girale, belt, piece of new cloth; kaceu—belt, girdle.
Ma. Kacca—girdle, waist, belt, long cloth.
Ko. Kacu—perineal cloth.
To. Kscu—embraidered perineal cloth; koc—cloth given at funeral.
Ka. Kacce—cloth passed between the legs to cover the privites, girdle,
Kod. Kacce—perineal cloth.
Tu. Kacce-end of lower garment gathered up behind and tucked into waist bend.
Te. Kacce-end of the lower garment passed between the legs and tucked in behind.
cf. Skt. Kaksya—A Dravidian Etymological Dictionary No.922. - ↑ Girdle Belt—
கச்சை—whole piece of அரைக்கச்சு
—Lexicon—Vol.III., part-I ,முழுப் புதுத்துணி. - ↑ Ta: Kaccu—a kind of Corset worn by Indian Women in ancient Times.
Ma: Kaccu—bedice to confine the breast.
—A Dravidian Etymological Dictionary, No.921. - ↑
புதிவதியன்ற மெழுகு செய்படமிபை......
முரண்மிகு சிறப்பிற செல்வனோடு நிலைஇய
—நெடுநல். 159-62.
வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம்
எழுதுவினைக் கம்மமொடு முழுது முதலளைஇ
—பெருங். 1.42:34.5 - ↑ Kancuka and Varabana according to the Amarakesa are the body armour. But from the description of the kancuka as worn by the Chieftains it was evident it was a tunic like garment. At one place it is said to have been made from spotted cloth and at another place from cloth of lapis lazuli shade.-Costumes Textiles Cosmetics & Coiffure-Dr. Motichandra, page-61.
The upper garment has been alluded to by the terms uttariya, patta, varabana and Kancuka. - Sachidanand Sahay - page-26. - ↑ Kancuka was something like coat reaching down to the ankles and similar to the tunics of the Gupta Kings.
Indian Costume Coiffure and Ornaments - Sachidanand Sahay, page-75. - ↑ The Bhikkhunis also seem to have been allowed to use Kancuka (Bodice) - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra - page-13.
Kancuka - It was an unsewn garment three and a half hands in length and one hand in width. This piece was firmly tied on both sides of the waist. It also covered the firm breasts whose centours were brought into preminence by tight garments - Dr. MotiChandra, page-71. - ↑ Indian Costume Coiffure and Ornament - Sachidanand Sahay, page-15.
- ↑ uttariya - upper or outer garment - Uttariyam (KLT. 96;13), reins of the horses.
(Uttara - upper, (higher) Phalaka - ‘plank’ uttara-p-palakai (CAM. 3:103) ‘The cross beam placed on the pillars of the state’
—Indo-Aryan Loan words in Old Tamil - S.Vaidyanathan, page-56. - ↑ தமிழ் இலகியத்தில் ஆடை அணிகலன்கள் பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி நவம். 1977.
- ↑ For woolen clothes of all varieties the term Kambala is used in Buddhist literature.
—Costume Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page-24. - ↑ தமிழ் இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச்செல்வி, அக்டோபர் 1977.
- ↑ வட சொற்றமிழ் அகரவரிசை - நீலாம்பிகை அம்மையார், பக்கம். 173.