உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/010

விக்கிமூலம் இலிருந்து

26. ஈர்ங்கட்டு

கார் நாற்பது முதலில் உணர்த்தும் இவ்வுடை கார் காலத்தில் காவலர் உடுத்தியதாக அமைகின்றது.

இளையரும் ஈர்ங்கட்டு அயரவுளை யணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம் போற் பூத்தன காடு (22)

வேறு குறிப்புக்கள் இதனைக் குறித்துக் காணக் கூடவில்லை.

இச்சொல்லிற்கு ஈரத்திற்கு ஏற்ற கட்டு என்று பொருள் கூறுவர்.[1] குளிர் காலத்திற்குரிய உடை என்பது அகராதியியம்பும் பொருள்.[2] எனவே குளிருக்கு இறுக்கமாகக் கட்டுதல் காப்பானது என்ற உணர்வு கொண்டு, உடம்போடு நெருக்கமாகக் கட்டப்பட்ட உடையினை இது குறித்திருக்கலாம்.

27. கோடி

மடியினைப் போன்று, புத்தாடையைக் குறிக்கத் தமிழர் கொண்ட மற்றுமொரு சொல்லே கோடி ஆகும். நீதிநூற் காலம் முதல் பயிற்சி பெறும் தன்மையுடையது (ஆசாரக். 44). சங்க காலத்தில் கோடி என்ற சொல் வழக்குக் காணப்படினும் ஆடை அல்லது புத்தாடை என்ற பொருள் இல்லை.

இன்று கோடியாடைக்கு இருக்கும் மதிப்பு அன்றே உருவான ஒன்று. இன்பச் சடங்கில் பங்கு கொள்ளும் கோடி இறப்புச் சடங்கு வரை தொடருகின்றது.

‘மந்திரக் கோடியுடுத்தி’ (நாச். திரு. 6:3) என மணத்தில் இடம் பெறும் கோடியின் தன்மை சிறந்த மேன்மை பொருந்திய உடையினைக் காட்டும். பஞ்சும் துகிலும் பூம்பட்டும் என (சூளா. 1438) மன்னன் மரணச் சடங்கில் இடம் பெறுகின்றதைக் காண, தகுதியைப் பொறுத்து, கோடி இச்சடங்கில் வேறுபடுகின்றதைக் காணலாம். திருமந்திரம் பொதுநிலையில் இறப்புச் சடங்கினைச் சொல்லும்போது, ‘பருக் கோடி மூடிப் பலரழ’ (189) என இயம்பும் தன்மை ஏற்புடைத்தாகும். ஈண்டு பருக்கோடி-பருத்த இழைகளாலான ஆடை என்ற பொருளில் சாதாரண ஆடையாகிய கோடியே சுட்டப்படுகிறது.

இன்று மரணமடைந்தவர்க்கு எடுத்துப் போடும் ஆடையுடன், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்க்கு எடுத்துக்கொடுக்கும் ஆடையினையும் கோடி எடுத்துப்போடல் என்றுரைப்பர்.

28. கூறை

கூறுபடுத்துதல் காரணமாகப் பெற்ற பெயர் கூறை. மலையாளத்திலும் உடையைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது.[3]

இன்று கூறைச்சேலை, கூறைப்புடவை என்று மணமகள் தாலிகட்டும் சடங்கில் உடுத்தும் உடையினைக் குறித்து நிற்கின்றது இது. அதிகமான இலக்கியப் பயிற்சி பெறவில்லையாயினும், சமுதாயத்தில் இதனைப் பற்றிய உணர்வு இருந்து கொண்டே வந்துள்ளது என்பதும், மாந்தர் எண்ணத்தில் சிறந்ததொரு இடத்தினைப் பெற்றுள்ளது என்பதும் இதனால் தெளிவு படுகின்றது.

இம்மாற்றத்திற்குரிய காரணமாகச் சில எண்ணங்கள் எழுகின்றன. இன்றைய கொரநாடு, கூறைநாடு என்பதனின்றும் மருவியது என்பது அறிஞர் எண்ணம்.[4] இதற்கு ஏற்றாற்போன்று கூறைநாடு எனச் சோழர் காலத்திலேயே வழங்கியிருக்கக் காண்கின்றோம்.[5] ஆகவே, அன்று கூறைநாடு உயர்ந்த ஆடைகளைத் தயாரிப்பதில் சிறந்திருக்கவேண்டும். அங்கிருந்து சிறப்பு நாட்களுக்கென்று, சிறப்பாக மணநாட்களுக்கு உடைகளைப் பெறல் பெருமையாகக் கருதப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் எப்புடைவையாயினும் மணப்பெண்ணின் உடையினைக் கூறைப்புடைவை என்னும் மரபு உருவாகியிருக்கலாம் என்ற எண்ணங்களே அவை. கொரநாடு என்னும் இடம் பற்றிய உணர்வும், கூறைச்சேலைக்கு இன்று இருக்கக் கூடிய செல்வாக்குமே இவ்வெண்ணங்கட்கு அடிப்படையே தவிர, தனிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை.

29. புடைவை

அடுத்தலால் ஆடை பெயர் பெற்றது போன்று, பக்கத்தில் வைக்கப்படுதலால் (புடை+வை) புடைவை எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். புடைவை பற்றிய குறிப்புகள் உரையாசிரியர்களின் உரையிலும், சாசனங்கள் வழியாகவுந்தான் தெரிய வருகின்றதே தவிர இலக்கியத்தில் அதிக இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இன்னா நாற்பது ‘பாத்தில் புடைவையுடை யின்னா’ (2) என்று பகுப்பில்லாத உடையுடுத்தல் துன்பத்தைத் தரும் என்று இயம்புகின்றது. இரண்டு ஆடை உடுத்தல் வேண்டும். ஓர் ஆடை கூடாது என்னும் நிலையில் ஈண்டுப் புடைவை, ஆடை என்ற பொதுப்பொருளைத் தருகின்றது.

திருநாவுக்கரசர்,

மெய்தருவான் நெறியடைவார் வெண்புடைவை மெய்
சூழ்ந்து சென்றடைந்தார் (61)

எனப் பெரியபுராணம் காட்டும். இவண் போர்வை என்னும் பொருள் அமைகின்றது.

உரையாசிரியர்கள் உடை (புறம். 136) கலிங்கம் (மது. 513) கோடி (சிலப். 11:45) போன்றவற்றிற்குப் புடைவை எனப் பொருள் உரைப்பர்.

தந்தி வர்மன் சாசனம், ‘காணவிலையின் புடவை’[6] என்றும், பராந்தகன் கல்வெட்டு, ‘சமைப்பானுக்கு நாடோறும் நெல் ஐநாழியும் ஆறுமாதங்கட்கு ஒருமுறை புடவையும் கொடுக்குமாறு திட்டம் செய்து இருந்தான்’[7] என்றும் குறிப்பிடுகின்றன.

இவற்றை நோக்கின் புடவை என்பது இதன் பொருளுக்கிணங்க, ஆண்பெண் இருவராலும் உடுத்தப்பட்ட உடையினைக் குறிக்கும் பொதுச்சொல்லாகும் என்பது தெளிவுறுகின்றது. இன்று, பெண்டிர் உடுத்தும் சேலையைக் குறித்து நின்று பொதுப்பெயர் நிலையினின்றும் சிறப்புப் பெயர் நிலைக்கு மாறிவிட்டதெனினும், மரபுத் தொடர்ச்சியும் உண்டு[8] என அறிகின்றோம். மேலும் புடைவை என்ற சொல் மக்கள் பேச்சு எளிமையில் புடவை என்றாகி விட்டதனை, கல்வெட்டுக்களிலேயே காண்கின்றோம்.

30. வட்டுடை

மணிமேகலையில் தோற்றம் பெறும் வட்டுடை, பெருங்கதை, சிந்தாமணியில் தொடர்ந்து காணப்படும் ஒன்று. இது முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம்.

மணிமேகலை பேடியின் உடையாக இதனைக் காட்டுகின்றது (3:122). பெருங்கதையில்,

‘வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு
பட்டுச் சுமந்தசைந்த பரவை அல்குலாள்’ (2:4:122-23)

என வாசவதத்தை காட்டப்படுகின்றாள். வட்டுடை என்ற சிறுதுணியினை உள்ளே உடுத்தி அதன் மேலே பட்டினை உடுத்தியிருக்கும் காட்சியினை இது காட்டுகின்றது.

சிந்தாமணியில் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், வட்டுடைப் பொலியப் பெற்றும் சீவகன் போருக்குப் புறப்படும் நிலை (468), போர்வீரர் வட்டு உடுத்தியிருத்தல் (2263) ஆகிய தொழில் வசதி கருதி, வட்டுடையினைச் சமருக்கும் உடுத்திச் சென்றனர் என்ற எண்ணத்தைத் தருவன. இதனால் வட்டுடை ‘வட்டு’ என்று சுட்டப்படும் நிலையும் தெளிவாகும்.

இன்று ‘வட்டு’ என்பது சிறுதுணியினைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கின்றது (தென் ஆற்காடு மாவட்ட வழக்கு). எனவே சிறிய துணியாகிய உடையினை அளவில் குறுகிய தன்மையினால் வட்டுடை என்று அன்று வழங்கியிருக்கின்றனர் என்பது புலப்படுகின்றது.

இன்று மலையாள நாட்டில் நாயர் மகளிர் இடையில் உடுத்தும் உடையுடன் இதனைத் தொடர்புபடுத்தலாம்.[9]

31. வங்கச் சாதர்

பெருங்கதை சுட்டும் இவ்வாடையினை இதன் பெயர் கொண்டு, வங்க தேசத்திலிருந்து வந்த ஆடை எனக் கருதுகின்றார் உ.வே. சாமிநாதையர் அவர்கள் (1.42:205). நிறங்கிளர் பூந்துகில் நீர்மையினுடீஇ (6:88) என்னும் சிலப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் நீலச் சாதருடை என்னும் பொருள் எழுதுவார். இவர் பின்னர் துகில் வகையுள் ஒன்றாகக் கருதும் (சிலப். 14:108) சாதர் என்பதும் இதனையே குறித்ததாகக் கருதலாம். வேறு விளக்கம் இதனைப் பற்றியில்லை. இன்று இப்பெயர் காணக்கூடவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்கும் தேவகிரி என்னும் ஆடையும் இதனைப் போன்று இடப்பெயரால் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகின்றது.

32. வட்டம்

‘வாலிழை வட்டம்’ என்று பெருங்கதை சுட்டும் (1.42:208) இவ்வுடை பற்றிய பிற சான்றுகள் இல்லை. வெள்ளிய நூலிழையால் செய்யப்பட்ட ஆடை என்பது மட்டுமே புலனாகின்றது.

33. கோசிகம்

தமிழருக்கு, வடநாட்டாரின் அன்பளிப்பே கோசிகம் என்னும் பட்டாடை, வடமொழியில் கோசிய (Kauseya) என்று அழைக்கப்படும் இவ்வாடை தோன்றிய இடம் குறித்துப் பல எண்ணங்கள் உள.[10]

கோசிக ஆடையைப் பெருங்கதைதான் முதன் முதலில் காட்டுகின்றது.

பைங்கூற் பாதிரிபோது பிரித்தன்ன
அங்கோசிகமும் (1.42:204-5).

அடியார்க்கு நல்லார் துகில் தொகுதியுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவார்.

கோசிக ஆடைபூத்தன பாதிரி (சீவக. 1650)
முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கு (கம்ப. 9788)

என வரும் கோசிகத்தின் பயிற்சி, புத்தம் புதுமையாக விளங்கக்கூடிய நிலையில் சிறப்பான தொன்றாக இதனை இயம்புகிறது.

இதனுடன், களிசெய் கோசிகம் என்னும் தொடரும் (சீவக. 1673) கோசிகத்தைப் பேழையில் வைத்துப் பாதுகாத்தனர் (சூளா. 870) என்பதும் இதன் மேன்மையைச் சுட்ட வல்லன. ‘கோசிகமொடு’ (சூளா. 870) என்றும் இயம்புவதும் இவ்வாடையின் மதிப்பினை உயர்விக்க வல்லது. மேலும் தொல்காப்பிய சொல்லதிகார உரையில் தெய்வச்சிலையார் ‘கொல்லவன் பட்டு உளவோ என்றால், கோசிகம் அல்லது இல்லை’ (33) என்று காட்டியுள்ளார். எனவே பட்டாடையான கோசிகம், தமிழரால் விரும்பப் பெற்றதொரு ஆடைவகை என்பது தெளிவாகின்றது.

34. காம்பு

பெரியாழ்வார் திருமொழி சுட்டும் ‘காம்பு’ (1.1:8) என்ற ஆடையினைப் பிற இலக்கியங்களில் காணமுடியவில்லை. ஆயின், காம்பு சொலித்தன்ன அறுவை எனச் சங்க இலக்கியத்தில் கண்டோம். எனவே காம்பு போன்ற மிகவும் மென்மையானதொரு உடையினைக் காம்பு என வழங்கியிருக்கலாம். அகராதி இதனை ஆடைக் கரையாக இயம்பும்.[11] பட்டு என்ற எண்ணமும் உண்டு.[12]

35. நேத்திரம்

ஆழ்வார் பாசுரம் தலைமுடியைச் சுட்டும் அழகிய ஆடையாக இதனைச் சுட்டுகின்றது.

நன்னெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து (பெரி. திரு. 3:4:8)

வடநூலான நளசம்பு, ‘நேத்திரம் அழகிய பட்டாடை; நீலநேத்திரமும் காணப்பட்டது; கஞ்சுகத்தை நேத்திராவில் செய்தனர்’. மென்மையானதொரு ஆடை என உரைக்கின்றது.[13] திலகமஞ்சரியும் நேத்திராவைப் பற்றி சில எண்ணங்களைத் தருகின்றது.[14] இக்கருத்துக்கள் நேத்திரம் என்பது பட்டாடை வகை என்பதை உணர்த்துகின்றன. எனவே வடமொழிச்சொல் என்பதும் தெளிவு பெறுகின்றது.

36. நீவி

கம்பராமாயணம் ஆடையைக் குறிக்க வழங்குமொரு சொல் நீவி என்பதாகும் (சுந்தர. 413). வேதகால மக்களின் உள்ளாடையும் ‘நீவி’ எனப் பெயர் பெற்றதே.[15] எனவே இவ்விரண்டு சொற்களையும் தொடர்பு கொண்டு நோக்குவர் அறிஞர்.

‘நெவ்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கிளைத்ததே ‘நீவி’ என்ற சொல் என்பதும் ஆடையின் அகன்ற கரையினைக் குறிப்பது இது என்பதும் இதனைப் பற்றிய கருத்துகள்.[16]

இன்று வடநாட்டு மொழியில் பெண்களின் தோள்மேல் சென்று கீழே விழும் சேலையின் முனைப்பகுதியை ‘நீவி’ என்று வழங்குவர் என்னும் கருத்தும் உண்டு.[17]

சங்க இலக்கியத்தில் ‘நீவி’ என்ற சொல் காணப்படினும் ஆடை என்ற பொருள் இல்லை. ‘அருங்கடி அன்ன காவல் நீவி’ (நற். 365) என்னும் இடத்தில் காவலைக் கடந்து என்னும் பொருளில் கடந்து என்ற பொருளைக் காண்கின்றோம். சிந்தாமணியில் ‘நீவியிருந்தான்’ (1302) எனும்போது வருடியிருந்தான் என்பதைக் குறிக்கின்றது. இப்பொருண்மையே இன்றும் தொடர்கின்றது.

கம்பனில் ‘நீவி’ ஆடை என்ற பொருளைத் தருகிறது. தோலாடையினைக் குறித்து நிற்கும் தன்மையில் (ஆரணிய. 15) ஆடையின் பெயராக அமைகிறது. ‘நீவியின் தழைபட உடுத்த’ (சுந்தர. 413) என்ற நிலையில் கொய்சகம் வைத்து உடுத்திய ஆடையைக் காணலாம்.

இவற்றை நோக்க, ‘நீவி’ என்ற சொல் ‘கடந்தது’ என்ற பொருளில் ஆடைக்குரிய சொல்லாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வடமொழியில் உள்ளாடையை முதலில் குறித்தும் (மேலாடையைக் கடந்து நிற்றல்) பின்னர் தோளினைக் கடந்து நிற்கும் முந்தானையைக் குறித்தும் அமையும் நிலை இதனை உறுதிப்படுத்தும். வடநாட்டுத் தொடர்பு காரணமாக,[18] கம்பர் ‘நீவியின் தழை பட உடுத்தலை எண்ணி’, தமிழர் உடுத்திய ஆடையையும் நீவி என்று வழங்கியிருக்கக் கூடும். இன்று இப்பெயர் ஆடையைச் சுட்டல் இல்லை.

37. கலை

ஆடையைக் குறிக்கும் இச்சொல்லின் பயிற்சி, பிற்கால இலக்கியங்களில் அமைகிறது. கலை ஏன்ற சொல் பற்றிய உணர்வு ஆதியிலேயே இருப்பினும் (சிலப். 17:25) ஆடை என்னும் பொருள் கம்பனில்தான் விளக்கமுறுகின்றது.

சூளாமணியும் இதனைக் ‘காலுமொரொன்றுடையர் கலையிலர்’ (1975) எனத் தெளிவாகக் காட்டும். அணிகலனையும் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியதே இதன் பொருளைத் தெளிவாக அறிய இயலாமைக்குரிய இடர்ப்பாடாகும்.

அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் பல விளக்கம் இல்லாதன. சிலவற்றினை முன்னைய ஆடை வகைகளுள் கண்டோம். ஒருசிலவற்றை இவண் நோக்கலாம்.

1. இரட்டு

அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகிற் தொகுதியுள் ஒன்று இரட்டு (14:108). இலக்கியச் சான்றுகள் கிடைக்காவிடினும் இன்றையநிலை கொண்டு ஓரளவுக்கு இதனைப் புரிய முடிகின்றது.

இரட்டை இழைப் பாவு ஊடையில் ஆடை நெய்தல் ஆடை நெசவில் ஒரு வகை. பட்டு, பருத்தி இரண்டும் இரட்டை இழையில் நெய்யப்படினும் பட்டே இதில் சிறப்புறுகின்றது. பருத்தியாடையின் மென்மை அதன் ஓரிழையில்தான் அமைகின்றது. ஆயின் பட்டாடை, கனம் மிகுதியாக மிகுதியாக செல்வாக்கிலும் உயரும். இன்று காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மதிப்பு அதன் இரட்டை இழைப்பாவு ஊடையினாலாம். இரட்டையிழைப் பருத்தியாடைகள், ஈரிழைத்துவர்த்து என்றும், இரட்டை இழைத் துவர்த்து என்றும் பெயர் பெறுகின்றன. ஈரிழையின் சிறப்பின்மை, மென்மையின்மை கருதியே, இவற்றைத் தமிழர் உடுத்தாது, துவட்டுதல் போன்ற பிற பயன்பாடுகளுக்குக் கொள்கின்றனர். மேலும் பருத்தி ஆடையின் கரைமட்டும் ஈரிழை காரணமாக இரட்டு என்று சொல்லப்படுதலும் உண்டு.

ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறுவது கரை அன்று; துகிலே. மேலும் சிறந்த ஆடைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுவதால் ‘இரட்டு’ என்பது பட்டினைக் குறித்திருக்கக் கூடும் எனல் பொருந்தும்.

2. பீதகம்

அடியார்க்கு நல்வார் குறிப்பிடும் துகில் வகையுள் மற்றொன்று பீதகம். நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டும் பீதக உடை, பீதகச் சிற்றாடையே, பீதகம் அம்பரம் எனப்பட்டு, பீதாம்பரம் எனப்படும் மரபு அமைகின்றது. பீதாம்பரம் சிறந்த பட்டாடையினைக் குறிக்கும் நிலையில் பீதகமும் பட்டாடை எனத் தெரிகின்றது. பரிபாடல், சிலம்பு, மணிமேகலை காட்டும் பொலம் புரி ஆடை (3:88, 11:50, 5:61) பீதக ஆடையின் பழமை உருவாகலாம். தெய்வத்திற்குச் சுட்டும் தன்மையில் இதன் பயிற்சி அமைவது, மிகச் சிறந்ததொரு ஆடை என்பதைப் புலனாக்கவல்லது.

3. கோபம்

இந்திரகோபப் பூச்சியின் நிறத்தையுடைய ஆடை கோபமாகும். கோபத்தன்ன தோயாப் பூந்துகிலைத் திருமுருகாற்றுப்படை இயம்ப, பின்னர் அதுவே கோபம் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும். எனவே கோபம் என்ற பெயர்தான் புதிதாக அமைகின்றதே தவிர, இவ்வாடை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. கோபம் இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப் பெறுவதே, இதனை அரத்தத்தினின்றும் வேறுபடுத்துவது என்பது அறிஞர் எண்ணம்.[19]

நமக்குக் கிடைக்கும் சான்றுகள் நெய்த துணியில் நிறம் தோய்க்கும் இயல்பினைச் சொல்கின்றதே தவிர இயற்கையிலேயே நிறம் கொண்ட நூல்களுக்குச் சான்றுகள் இல்லை. நூலுக்குச் சாயம் தோய்த்தலையும் இலக்கியம் வழி நாம் அறியக்கூடவில்லை. கோபத்தன்ன தோயாப் பூந்துகிலை ஈண்டு துணையாக்குவர் இவ்வறிஞர், ஆயின் இத்தொடர் சூரர மகளிரின் நிலையைச் சொல்லக் கூடியது என்னும் நிலையில் இயற்கை இறந்த நிகழ்ச்சியாகிறது. எனவே இயற்கைக்கு மாறுபாடான ஒன்றைக் கூறும் தன்மையில் தோயாப் பூந்துகிலைப் புலவர் நவின்றிருக்கக் கூடும். இந்நிலையில் நிறம் காரணமாக, கோபம் என்னும் பெயர் அமைந்தது என்பதைத் தவிர, பிற எண்ணம் மேலும் ஆய்வுக்குரியது.

  1. சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன் 1978.
  2. Tamil Lexicon, Vol. I, part-I.
  3. Ta: Kurai - Cloth, Clothes.
    Ma: Kura-a set of clothes, thick cloth.
    - A Dravidian Etymological Dictionary, No. 1603.
  4. கூறை நெய்யும் தொழில் மிகுதியாக நடைபெற்ற நாடு. இப்பொழுது ஒரு சிற்றூராகக் கொரநாடு என்னும் பெயர் கொண்டு மாயவரத்தின் ஒருசார் அமைந்துள்ளது.
    - ஊரும் பேரும் - ந. சஞ்சீவி, பக். 60, தையற்கலை சுந்தரம் வெள்ளி விழா மலர்.
    Koranad is a curruption of Kurai nadu (கூறைநாடு) a place where cloth is manufactured.
    -Words and their Significance - Dr. R. P. Sethupillai, p. 14.
  5. “சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்த கூறைநாடு கீர்த்தி மிகு பருத்தியாடைகளைத் தயாரித்தது. அதனால் கூறை நாட்டுச் சேலைகள் சோழப் பேரரசு முழுவதும் பெரிதும் தேவைப்பட்டன.” - முதலாம் இராசராசச் சோழன், க. த. திருநாவுக்கரசு, பக். 241.
  6. தென்னிந்தியத் தமிழ் சாசனங்கள் - வ. தங்கையா நாடார், பக்கம். 29.
  7. முப்பது கல்வெட்டுக்கள் - வை. சுந்தரேச வாண்டையார், பக்கம். 11.
  8. புடவை என்பது ஆண்பாலாருடைக்கும் பெயராய்ப் பண்டு வழங்கிற்று. இவ்வழக்கு இக்காலத்தில் செட்டி நாட்டில் உள்ளதென்பர்.
    - தமிழர் ஆடை, டாக்டர் திருமதி. தே. தியாகராசன், தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை பவள விழா மலர், பக்கம். 100.
  9. Malabar women have made some advance in the matter of dress. At present a Nair Women ties around the loins tightly a long piece of cloth with one end passing between the legs and tucked back to the waist behind. This reaches below the knees. Another finer cloth is worn over this and it goes down almost below the ankle.
    - Social History of Kerala - Vol. II, L A. Krishna Iyer. page-39.
  10. Kauseya seems to be the true silk obtained from the cocoons spun by the silk-worm feeding on mulbery leaves.
    - Costumes Textiles Cosmetics and Coiffure - Dr. Motichandra, page-30.
    “McGrindle in an interesting note tells us that the first ancient author in Greecian literature who refers to the use of silk in Aristotle. According to him raw silk was brought from the intereior of Asia and manufactured at Kes, is the work Kauseya used for silk in Sanskrit derived from the town of Kes where it was manufactured; perhaps panini who gives special sutra for the formation of Kauseya referes to the town of Kosa and not the cocoons.” - Ibid, - page-17.
  11. காம்பு - ஆடைக்கரை - Tamil Lexicon, Vol. II, part-I.
  12. ‘காம்பு சிறந்த பட்டுத்துணி’ - சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள், பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, சனவரி, 1978.
  13. Netra - It is said to have been woven of very fine silk yarn. It was at times blue (Nilanetra). The Nalacampu (Early 10th Century) gives some interesting information about Netra. At one place it is said that Netra for making Kancuka was cut according to the measurements of the body. At another place netrapatta described as a transparent (accha) and white stuff which looked like the waves of the milk ocean (Ksivoda) gathered at the sari knot desirous of the pleasure of touching the thighs and the buttocks are mentioned, Costumes Textiles Cosmetics and Coiffures - Dr. Motichandra, page. 122.
  14. The Tilakamanjari also refers to different kinds of stuffs. Netra was a kind of silk; a canopy made of spangled netra (Dhantanetra) is mentioned. At a third place it is mentioned that the front border of the tunic made of netra slutte - red revealing the navel and the end of her sari was firmly tucked behind. - page. 117.
  15. The Vedic Indian seems to have worn three garments, an under garment (Nivi)... - Costumes Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page. 8.
  16. The Nivi has been explained by Sarkar as wider border of the cloth. He also gives the origin of the Nivi from the Tamil word ‘Nev’ to weave.
    - Costumes Textiles Cosmetics and Coiffure, Dr. Motichandra, page. 8.
  17. சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலன்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்வி, ஜூன், 1978.
  18. From the nivi having the praghata, the loose and long unwoven fringe with tassels the other end was plain and decorated with the tusa chaff .........
    - Costume Textiles Cosmetics & Coiffure, Dr. Motichandra, page-8.
  19. அரத்தம் சிவந்த ஆடை, ஆனால் சாயம் தோய்க்கப்பெற்றது. இயற்கையிலேயே சிவந்த நூலைக் கொண்டு நெய்யப்பெறுவது கோபம். இந்திரகோபப் பூச்சி போலச் சிவந்தது. கோபத்தன்ன தோயாப் பூந்துகில் ஆடையின் இயல்பு விளக்கும்.
    — எங்கள் நாட்டு ஆடை, தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/010&oldid=1841549" இலிருந்து மீள்விக்கப்பட்டது