உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/011

விக்கிமூலம் இலிருந்து

4. பரியட்டக்காசு

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இத்துகில் பற்றிய எண்ணம் எதுவும் விளக்கமுறவில்லை. பொற்காசுகளை ஓரத்திலே வைத்துத் தைத்த துகிலாடை என்பர். பரிவட்டம் என்றதொரு ஆடையினைப் பற்றிய எண்ணமும் உண்டு.[1]

இன்று, கடவுளுக்குச் சாத்தும் ஆடையை ‘பரிவட்டம் சாத்துதல்’ என்று குறித்தல் உண்டு. பரிவட்டம் எல்லாத் தெய்வங்கட்கும் சாத்துதல் இல்லை. மாடன், இசக்கி போன்ற சிறு தெய்வங்களின் ஆடையினைப் பரிவட்டம் என்று சொல்ல மாட்டார்கள். உருவற்ற பீடத்திற்குப் போடும் துணியினைப் பரிவட்டம் என்பர் (கன்னியாகுமரி மாவட்டம்). அபிஷேகத்திற்குக் கொடுக்கும் குடும்பத்தினரில் மூத்தோருக்குக் கோயிலில் பரிவட்டம் என்னும் துணியினைத் தலையில் கட்டுவர் (மதுரை).

பரியட்டக்காசு, பரிவட்டம் இரண்டும் தொடர்புடையவையா என்பதும் ஆய்விற்குரியது. ஆயின் சிறப்புடைய ஆடையைச் சுட்டுவதில் இரண்டும் ஒன்றுபடக் காண்கின்றோம். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை.

5. தேவாங்கு

அடியார்க்கு நல்லார் சுட்டும் துகில் வகையுள் ஒன்று. இன்று ஓர் இனத்தார் தேவாங்குச் செட்டியார் என வழங்கப்படுகின்றனர். தேவாங்கு என்ற ஆடையினை நெய்த காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வடநாட்டாரும் தேவாங்கு என்றதொரு உடை பற்றிய எண்ணத்தைத் தருகின்றனர்.[2]

முடிவுரை

சங்கம் முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய, தமிழர் ஆடை குறித்த சொற்கள் இவண் ஆராயப்பட்டன. முழுநிலையில் இவை தரும் எண்ணங்களாகச் சிலவற்றைக் கொள்ளலாம்.

தன்னையும், தன் பொருளையும், பொருளின் இயல்பினையும் ஓரளவுக்குத் தெளிவாக்கும் நிலையில் இச்சொற்களின் பயிற்சி அமைகின்றது. இவற்றால் ஆடையின் மேன்மை, இழிவு புலப்பட அவற்றை யுடுத்தி வந்த தமிழன் சமுதாய நிலையினையும் விளங்கிக்கொள்ள இயலுகின்றது.

2. ஆடையின் பெயராக்கத்திற்கு, அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளான் தமிழன். அவை யாவன:-

1. மூலப்பொருள் எ.டு. தழை, பட்டு
2. பயன்பாடு எ.டு. அரணம், ஈர்ங்கட்டு
3. நிறம் எ.டு. அரத்தம், நீலம்
4. தொழில் எ.டு. மடிவை, அறுவை
5. பண்பு எ.டு. துகில், சிதார்
6. இடம் எ.டு. கலிங்கம், வங்கச்சாதர்
7. உறுப்பு எ.டு. மெய்ப்பை, மேலாக்கு
8. பொருள் எ.டு. வம்பு, படம்
9. அளவு எ.டு. வட்டுடை
10. நெய்யும் தன்மை எ.டு. இரட்டு

3. வடநாட்டுத் தொடர்பின் தோய்வினையும் சில சொற்கள் விளக்கி நிற்கின்றன. (எ-டு) கஞ்சுகம், உத்தரியம்-கம்பலம், வற்கலை.

4. தன் சொல்லையும் பொருளையும் விளக்கமுறத் தரும் சொற்களைத் தவிர, சில, பொருள் விளக்கமின்றி, என்ன ஆடை என்பதை மட்டுமே உணர்த்தி அமைகின்றன். (எ.டு) ஆசு - கவசம்.

மேலும் சில, ஒருவகை ஆடை என்பதை மட்டுமே புலப்படுத்துவன.

(எ.டு) கம்பல், சேலம், சுண்ணம், கோங்கலர், இறைஞ்சி, பாடகம், சில்லிகை, தூரியம், வேதங்கம், பங்கம், தத்தியம், வண்ணடை, நூல் யாப்பு, திருக்கு, குச்சரி, காத்தூலம் போன்றன.

எனவே சொற்பொருள் ஆய்வுக்கு, மிகுதியான இலக்கியப் பயிற்சி அல்லது வழக்குத் தேவை என்பது விளக்கமற்ற இச்சொற்களை நோக்கப் புலப்படுகிறது.

5. கால வளர்ச்சியில் மனித எண்ணங்கள் மாறல் இயற்கை. இத்துடன் அவர்கள் தொடர்பான அனைத்தும் மாறும் இயல்பின என்பதற்கொரு சான்றாகவும் இவ்வாடை வரலாறு அமைகின்றது.

ஆடைபற்றிய சொல், பொருள் இரண்டின் வரலாற்றையும் காண,

(1) சொல் திரிதல் (சீலை) (2) சொல் வழக்கறுதல் (சிதார்) (3) பல்பொருளினின்றும் ஒரு பொருளைக் குறித்தல் (புடவை) (4) ஒரு பொருளினின்றும் பல்பொருளைக் குறித்தல் (ஆடை) (5) இழிபொருட்பேறு (கலிங்கம்) (6) சிறப்புப் பொருட்பேறு (கூறை) (7) பொருள் மாறுபாடு (அறுவை) என்ற நிலைகளில் இவை அடைந்த மாற்றங்கள் தெரிய வருகின்றன.

கால வெள்ளத்தில் தாக்கம் எதுவும் அடையாமல் நிற்கும் சொற்களும் உள. சான்றாக உடை, கவசம் போன்றனவற்றைக் கூறலாம். அதிகமான செல்வாக்கு, எளிமை, சிறப்புக் காரணமாக இவை மக்கள் மனதில் அன்றுமுதல் இன்றுவரை எவ்விதச் சொற் பொருள் மாற்றத்தையும் அடையாது நிற்கின்றன எனல் பொருந்தும்.

  1. Tamil Lexicon Vol.IV, part-I.
  2. “There are other words about fabrics Samaraiccakaha Which are equally of great interest. They are devanga and devadusa which perhaps signify the same kind of stuff. Devanga is said to have been made of silk...”
    - Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, page.115.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/011&oldid=1841551" இலிருந்து மீள்விக்கப்பட்டது