உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/013

விக்கிமூலம் இலிருந்து

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள்

உண்ணுதல் தன் விருப்பில் அமையலாம். ஆயின் உடுத்தல் பிறர் விருப்பிற்கு ஏற்ப அமையவேண்டும்[1] என்பது உடைபற்றி, மாந்தரின் பொதுவானதொரு எண்ணமாகும். விரைந்து செயல்படும் நட்புக்கு, உடுக்கை இழந்தவன் கையினை உவமையாக்கும் நிலையில் வள்ளுவர், மானவுணர்வுக்குரிய உடையின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவார். பல்வேறு சூழல்களால் பல பிரிவினர்களாகப் பிரிந்துள்ள மாந்தர் சமுதாயம், உடையிலும் தங்களின் பல்வேறு நிலைகளுக்கிணங்க மாறுபட்டு இருப்பது பண்டு தொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கூறாகும். இவர்களின் வேறுபட்ட மன உணர்வுகள் உடையுடுத்தும் நிலையிலும் பிரதிபலிக்கக் காணலாம்.

நீலகிரி வாழ் தோதவர்கள் கழுத்திலிருந்து கணுக்கால்வரை ஆடையைப் போர்த்திக் கொள்கின்றனர். அந்தமான் ஒங்கோன் மக்கள் இடுப்பில் ஒரு நார்ப்பட்டையை மட்டும் கட்டிக் கொண்டு பிறந்த மேனியாகத் திரிகின்றனர்.[2] இவண் இடமாற்றத்தில் உடை மாற்றம் அமைகிறது. உடல் முழுவதையும் மறைத்தல் தேவை என ஒரு பாலார் கருத, மற்று ஒரு சாரார் அதனைத் தேவை என்று எண்ணாத மனமாற்றத்தையும் இவண் காண்கின்றோம். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையேயும் காலமாற்றத்திற்குத் தக உடையிலும் உடுத்துமுறையிலும் வேறுபாடு நிகழக்கூடும் என்பதனை, அன்று மேலாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழர் இன்று, இடையாடைக்குரிய தேவையினை, மேலாடைக்கும் கொடுக்கும் தன்மையால் உணர்த்தலாம்.

இத்தகைய மனவுணர்வுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தினர் உடுத்திய உடைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு உடுத்தினர் என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புலவர்களின் நாவன்மையால், என்னென்ன உடையினைத் தமிழர் உடுத்தியிருந்தனர் என்பதை நாம் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆயின் எவ்விதம் உடுத்தினர் என்பதை நாம் தெளிவாக அறியக் கூடவில்லை. ஏனெனில் இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்று காட்சிச் சான்று அன்று. இலக்கியத்தைவிடக் காட்சிச் சான்றுகளே உடையின் முழு உருவத்தையும் படம்பிடித்துக் காட்டி, அதனை உடுத்திய முறையையும் வெளிப்படுத்த வல்லன. இலக்கியம் உணர்வுக்கருவி என்ற நிலையில், உணர்வு வழியாகவே சித்திரங்களை நம் கண்முன் கொணரத்தக்கன. எனவே, இலக்கியத்தைப் பொறுத்த வரையில் புலவரின் எழுத்து வன்மையும், வர்ணனைச் சிறப்பும் தான், மாந்தரின் உடையுடுத்தும் முறை பற்றிய விளக்கங்களை நல்குவன. இலக்கியம் வழியாக இவ்வறிவினைப் பெறப் புலவர் எப்படித் துணைநிற்கின்றனர் என்பதற்குச் சில சான்றுகளை இவண் நோக்கலாம்.

ஆடையுடன் அணிந்த இடத்தினையும் சுட்டிச் செல்லல் ஆடவர், மகளிர் மறைத்துக் கொண்ட இடத்தினை வெளிப்படுத்தும் கருவியாகின்றது. எந்தெந்த ஆடைகளை எவ்வெவற்றிற்குப் பயன்படுத்தினர் என்பதையும் பெறமுடிகிறது.

பல்பூம் பகைத் தழை நுடங்கு மல்குல் (நற். குறிஞ். 8)
அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (சிலப். 14:86)
நுரை புரை கலிங்கம் ஒருமுலைபுதைப்ப (பெருங். 2.5:86)

போன்ற பல குறிப்புகளால், தழையாடை அல்குலுக்கும், பட்டு அரைக்கும், கலிங்கம் நகிலுக்கும், மறைத்தல் தொழிலுக்கு உதவியது என்பது புலப்படுகின்றது.

புலவர் பெய்யும் வினைகளைக் கொண்டு உடையை உடுத்தினரா? போர்த்தினரா? எவ்வாறு உடுத்தினர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உடுத்தும் உடைகளைக் குறிக்க தைஇ, உடீஇ, அணிந்து, சேர்த்து, மருங்கிற் கட்டிய, அசைந்த, உலாக்கிடந்த, புனைந்த, நுடங்கு, ஏந்திய, சுற்றிய, சாத்திய போன்ற வினைகளைக் காண்கின்ற நாம் கச்சை, கச்சு போன்று இறுக்கிக் கட்டப்பட்ட உடைகளை வீக்கிய, விசித்த, கட்டிய போன்ற வினைகளால் குறிக்கும் தன்மையையும் பார்க்கின்றோம். போர்த்த, மறைத்த எனும் வினைகள் போர்வை போன்றவற்றிற்கும் சூழ்ந்த, திருத்திய, இட்ட, புதைத்த போன்ற வினைகள் மேலாடைக்கும் பயன்படுத்தப்படக் காணலாம். இத்தகைய வினைகளை இன்றும் பயன்படுத்தும் நிலை கொண்டு அன்று தமிழர் உடுத்திய நிலையினை ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

புலவரின் உவமை வழி ஒரு சில உடுத்தும் முறைகள் விளக்கமாகின்றன.

தத்தி வீழும் அருவித் திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ (கம்ப. 6991)

மார்பில் அணியும் உத்தரீயத்தினை அருவிக்கு ஒப்புமையாக்குகிறான் கல்விக் கடலான கம்பன். மார்பு மலையாக, அதில் வடிந்து வீழ் அருவியைப் போன்று உத்தரீயம் காட்சி தருகின்றது. காட்சிப் படிவமான இது, சிறந்த முறையில் நம் கண்முன் மார்பில் உத்தரீயம் தவழும் காட்சியைப் புலப்படுத்துகிறது.

தாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகும் பெற விழையும் புலவரின் உள வெளிப்பாடே இத்தகைய கவி நயங்களாகும். இவை, புலவரின் விழைவினை நிறைவேற்றுவதுடன் ஆய்வாளரின் ஆய்விற்கும் விருந்தளிக்கின்றன என்பதற்கு இஃது ஓர் சான்று.

இத்தகைய இடம் சுட்டும் தன்மை மிகுதியாக இடையாடைக்கே அமைதல், தமிழர் இடையாடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை விளக்கவல்லது.

புலவர் விளக்கிச் செல்லும் தன்மையிலும் சில குறிப்புகள் புலப்படக் காணலாம். பூங்கரை நீலத்தைப் புடைதாழ உடுத்தல் என்னும்போது பூங்கரை நீலமாகிய உடையைப் (முல்லைகலி. 11) பக்கங்கள் தாழுமாறு உடுத்தல் மரபு எனப் புரிந்துகொள்கிறோம். இவ்வாறே ஏனைய குறிப்புக்களும் உடைபற்றிய விளக்கங்களைத் தந்தமைகின்றன.

இலக்கியம் சுட்டிச் செல்லும் இவ்வுடைகளை, குழந்தைகள், ஆடவர், மகளிர் என்ற முந்நிலைகளில் பகுத்து இவண் தெளிவுபடுத்தலாம்.

குழந்தைகள்

தமிழ் இலக்கியம் தரும் உடைகளின் விளக்கங்களை முழுவதுமாக நோக்க ஆடவர், மகளிர் உடைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் பெறுமளவிற்குக் குழந்தைகளின் உடைகளைப் பற்றி அறிய முடியவில்லை, கிடைக்கும் கருத்துக்கள் ஓரிரண்டே அமைகின்றன. எனினும், குழந்தைகளின் உடைகள் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கும் தன்மையில் இவை உள்ளன. ஆடையுடுத்தத் தெரியாத மகனை, ‘வெளிதுவிரித்துடீஇ’ப் (புறம். 299) போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். இதனின்றும் சிறுவருக்குரிய உடையினை இடையில் அணிவித்த தன்மை புலப்படும்.

கைவினைப் பொலிந்தக் காசமைப் பொலக்காழ்மேல்
மையில் செந்துகிர்க் கோவை அவற்றின்மேல்
தைஇயப் பூந்துகில் ஐது கழல் ஒருதிரை (மரு. 85)

என்னும் கலித்தொகை அடிகள் அணிகளின் மேல் ஐதாய்க் கழலுகின்ற, ஒன்றாகிய திரைத்த பூந்துகிலை யுடுத்திய சிறுவனின் நிலையை இயம்பும். மணிமேகலையில்,

செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றங் காவா சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர
தளர்நடைத் தாங்காக் கிளர்பூம் புதல்வனைக் (3:140)

காண்கின்றோம்.

குழந்தையின் அறியாமை உணர்வும், அற்றங்காலா அதன் வெள்ளை இயல்பும், அரைகுறையாகத் துகில் உடுத்தியிருக்கும் அழகும் இப்பாடலில் சிறப்புற இயம்பப்படுகின்றன. அரையில் உடுத்தும் உடையே அற்றம் காக்கும் என்ற அன்றைய தமிழர் மனநிலையும் இவண் புலப்படுகின்றது.

இவ்வனைத்துக் காட்டுகளும் துகிலில் ஒரு சிறு துண்டினை எடுத்துப் புதல்வர்க்கு அணிந்து இருக்கின்றனர் என்பதனை யுணர்த்தும் வண்ணமே அமைகின்றன. தையலினை முழுமையாகப் பயன்படுத்தாமையும், இவ்வாறு தனித்த உடையில்லாமைக்குரிய காரணமாகச் சுட்டலாம். பொதுவாக உலக முழுவதும் சிறுவர்க்கெனத் தனித்த உடையில்லாமல் இருந்தமையும், அண்மைக் காலம் வரையில் இந்நிலை நீடித்தமையும் இவண் குறிப்பிடத் தக்கது.[3]

ஆடவர்

ஆடவர் உடைகளை அரசர், வீரர், காவலர், துறவிகள், ஏழைகள் எனப் பல நிலைகளில் நோக்கலாம்.

அரசர்

கலிங்கம், படாம், துகில், அறுவை, கச்சு சங்க இலக்கியத்திலும், துகில், கச்சை, வடகம், மீக்கோள் பெருங்கதையிலும், துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு சிந்தாமணியிலும், கம்பனில் பட்டு, உத்தரீயம் ஆகியனவும் அரசர்களின் ஆடையாக அவ்வக் காலப் பகுதியில் சுட்டப்பட்டுள்ளன.

பதிற்றுப்பத்து ‘இருநிலந் தோயும் விரிநூல் அறுவை’ (34:3) அணிந்தவனாக அரசனைக் காட்டுகின்றது. நிலந்தோயுமளவிற்கு அறுவையினை உடுத்திய இத்தன்மை, பெருமிதத்திற்குரிய அடையாளம் என்பர் உ.வே.சா. ‘மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்.’ (திருமுருகு. 214) என்ற அடியும் நிலந்தொட இடையில் துகில் உடுத்திய தன்மையையே யுணர்த்தி அமைகின்றது. இவற்றால் அரசர் எல்லா இடை உடையினையும் இம்முறையிலேயே அணிந்திருக்கலாம் என்று எண்ணலாம்.

துகிலினை மேலாடையாகவும் அணிந்தனர் என்பது ‘புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ’ (நெடு. 181) என்னும் பாடல் அடியால் பெறப்படும். இடவயின் தழீஇ என்பதனின்றும் வீழும் துகிலினை இடப்பக்கமாகத் தாங்கினான் என்பதனால் மேலாடையை இன்று போன்றே அன்றும் இடத்தோளில், அணிந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது. பிற அறிஞர்களின் எண்ணங்களும் இக்கருத்துக்கு அரணாகின்றன.[4]

கம்பன் பாடல்கள் பல, உத்தரியம் அணிந்தமையினைப் புலப்படுத்தவல்லன.

அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்திநின்று
உடுத்த லால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே (4359)

என்ற உவமை உத்தரியம் மார்பில் அணியும் தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றது. இங்குத் தோளின் ஒரு பக்கத்தின் வழியாக விழும் உத்தரியம் என்னுமாற்றான், ஒருவழியாகப் போடப்பட்ட தன்மை தெளிவுறுகின்றதே தவிர எந்தப் பக்கம் என்பது விளக்கமுறவில்லை.

உதயணனின் மேலாடை பற்றிக் கூறும்போது கொங்குவேளிர்,

பாம்பு ரியன்ன மீக் கொடானை
இருபுடை மருங்கினும் வகுவளிக் கொசிந்து (1.42:244-45)

என்பார். இவன் மீக்கொள்தானையாகிய மேலாடை, காற்றில் இருபக்கத்திலும் அசையும் வண்ணம் தோற்றம் தரக் காண்கின்றோம். இவண் இருபுடை என்பது மார்பின் இருபுறங்களிலுமா அன்றி முன்பக்கம் பின்பக்கம் என்ற நிலையிலா என்பது தெளிவுறவில்லை.

அரசர் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், தானை வீக்கற விசித்தும் போருக்குச் செல்கின்றனர். எனினும், பிற போர் வீரர்களைப் போன்றே இவர்களின் உடையும் அமைகின்றதே தவிர, வேறுபாடு எதையும் இவர்களின் உடையிலோ உடுத்தும் முறையிலோ காணக் கூடவில்லை.

அரசர்கள் உடைகளைக் காண அவர்களின் உடைகள் சிறந்த உடைகளாக அமைந்தன என்பதும், இடையாடையினை நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியும், மேலாடையுடனும் காணப்பட்டனர் என்பதும் தெளிவுறுகின்றது.

மன்னன் புலவருக்கும் இரவலர்க்கும் கொடுக்கும் நிலையில் மடி, துகில், கலிங்கம், அறுவை, வேறுபட்ட உடை போன்றன அமைகின்றன. வேறுபட்ட உடை என்பதற்குத் தெளிந்த விளக்கம் இல்லை. பல்வேறு வகையான உடைகளைக் குறிக்கும் சொல்லாக இதனைக் கருதலாம்.

இவ்வுடைகள் பற்றி எண்ணுங்கால் இவை அனைத்தும் மன்னனது ஆடைகளாகவும் அவன் பிறருக்குக் கொடுப்பதற்காகத் தனித்து வைத்திருந்தனவாகவும் கருதலாம். தன்னரைப் பொங்கு துகிலினைக் கொடை செய்யும் தன்மையும் (புறம். 398) தனக்குத் தேவை இல்லாத வற்கலையைத் தன்னைக் காணவரும் முனிவர்க்குக் கொடுக்க அரண்மனையுள் வைத்திருப்பர் என்ற கம்பன் உரையாசிரியர் கூற்றும் (கம்ப. 1919) இவ்வெண்ணங்கட்கு அடிப்படையாகின்றன.

போர் வீரர்கள்

கச்சை, கவசம் இரண்டும் போர்வீரர்களின் பொதுவானதொரு உடையாகும். இதனைச் சங்ககாலம் முதல் நாம் காணலாம்.

சங்க இலக்கியம் இவற்றுடன் சுற்று வீங்கு செறிவுடை (பெரும். 73) கொடுந்திரை ஆடை (புறம். 275) இவற்றைத் தர, சிந்தாமணி வட்டினையும் சூளாமணி கலிங்கத்தையும் இவர்களின் உடையாகக் காட்டுகின்றது.

சுற்று வீங்கு செறிவுடை என்னும்போது பக்கங்களில் இறுகக் கட்டப்பட்ட உடையாக இது அமைந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ‘வளைந்து திரைந்த ஆடையும்’ என்ற பொருள்படும் கொடுந்திரை ஆடையினை உடுத்தும் முறை பற்றிய விளக்கம் தெளிவுறவில்லை.

சிந்தாமணியில், வட்டு அணிந்த போர்வீரனை (2263) காணலாம். இவண் வட்டு என்பது வட்டுடை என்ற பொருளில் அமைந்து அரசர்களின் போர்க்கோலத்தினை, வீரரும் கொண்ட காட்சியினைக் காட்டும்.

சூளாமணி, ‘கலிங்கத்தைத் தரண் மேற் திரைத்துடுத்து’, என இயம்பும் தன்மை, வட்டுடை போன்றதொரு நிலையில், கலிங்கத்தையும், தாளின் மேற் அமையும்படி அடுக்கியுடுத்துக் காணப்பட்டனர் என்ற எண்ணத்தைத் தரும்.

நுண்வினைக் கச்சை தயக்கறக் கட்டி (குறிஞ்சி. 125)

என்று எண்ணம் கச்சையைக் கட்டிய முறையைச் சுட்டவல்லது.

கவசம் என்று நோக்கும்போது கவசத்தை முழுமெய்யும் மறையும்படியாகவும் சில பாகங்களுக்கு என்று தனித்தும் அணிந்துள்ளனர். மெய்புகு கவசம் (சிலப். 14:169) மெய்யினை மறைக்கும் இதன் நிலையினையும், ‘தோளின் மீளாக் கவசமிட்டு’ (கம்ப. ஆரணிய. 421) தோளில் கவசம் அணிந்தமையினையும் ‘காலாசொடு அறஎறிந்து’ (சீவக. 2236) காற்கவசத்தையும் சுட்டும் தன்மையால் தெளிவாக்கலாம். விரல்களுக்கும் கவசம் அணிதலைக் கம்பன், அழகியதொரு உவமை மூலம் விளக்குகின்றான்.

புதையிருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை
இதழ்தொறும் வண்டு வீற்றிருந்தது ஆம்என
ததைவுறு நிரைவிரல் புட்டில் தாங்கினான் (7256)

இராமனது போர்க்கோலம் இது. தாமரையின் இதழ்கள்தொறும் வண்டு வீற்றிருந்தது என்று சொல்லுமாறு நெருங்கியுள்ள வரிசையான கைவிரல்களில் விரற் செறியை அணிந்தான் என்னும் இவ்விளக்கம் மிகச்சிறப்பாக விரற்கவசம் பற்றிய எண்ணத்தைத் தருகின்றது.

புட்டில், கோதை முதலிய விரல், கைக்கவசங்களை விற்போரில் பயன்படுத்தியமையினைக் காண இவை விற்போருக்கு என எழுந்தவையாக இருக்குமோ என்ற எண்ணம் இங்கு எழுகின்றது.

காவலர்

மெய்க்காப்பாளர், வாயிற் காவலர், துறைகாக்கும் காவலர் எனப் பல்நிலைகளில் காவலர் அமைகின்றனர்.

இவர்களில் மெய்க்காப்பாளர்களின் ஆடை கஞ்சுகமாக அமைந்து கஞ்சுகமாக்கள் எனும் அளவிலேயே தங்கள் தொழிலையும் புலப்படுத்துகின்றது.

வாயிற் காவலரின் சட்டையினை, ‘வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச் செங்கண் தீவிழியா’ (431) எனச் சிந்தாமணி காட்டும்.

துறைகாக்கும் காவலர் வரிக்குப்பாயத்து வார் பொற்கச்சையராகக் காட்சிதருகின்றனர் (பெருங். 1.40:378).

இங்குச் சட்டை அணிதல் அனைத்துக் காவலரின் பொது உடையாக அமையக் காணலாம். துகின்முடி அணிந்தும் இக்காவலர் காணப்பட்டனர் என்பதை ‘துகின் முடிப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர்’ (முல்லை. 5), ‘பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு கஞ்சுகியவர்போல’ (சிந்தாமணி 1558) எனும் குறிப்புகள் உணர்த்துகின்றன.

சட்டை பற்றிய குறிப்பு அமையும் பகுதிகள் அனைத்தும், புகு, புக்கு என்ற வினைகளையே சொல்லிச் செல்கின்றன. ‘துகிற் குப்பாயம் புகுகென’ எனவும் படம்புக்கு (பெருங். 69) எனவும் இவை அமைகின்றன. புக்கு, புக என்ற சொற்கள் உடுத்தும் விதம் பற்றித் தரும் குறிப்பினைக் கம்பன் தெளிவாக உணர்த்துகின்றான்.

மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத்
துன்னிடு கஞ்சுகத் துகிலர் (ஆரணிய. 569)

இவண், மெய்புகும்படியாகத் தைக்கப்பட்ட கஞ்சுகமாகிய ஆடை என்ற பொருளில் சட்டையணிந்த முறையை இயம்பக் காண்கின்றோம்.

இச்செய்திகளினின்றும், சட்டையினை இன்று போன்று அணியவில்லை; இன்று ஆடவர் அணியும் பனியன் போன்று அணிந்திருக்கக் கூடும் என்ற விளக்கத்தைப் பெறலாம். ‘பொத்தானின் வரலாறும்’ இவண் இணைத்து நோக்கற்பாலது.[5]

முனிவர்

சங்க இலக்கியம் முதற்கொண்டு தொடர்ந்து முனிவர் சீரையுடனேயே காட்சி தருகின்றனர்.

மான் தோலினையும் இவர்கள் பொதுவாக அணிந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இதனை, சங்க இலக்கியம் மானின் உரிவை தைஇய மார்பினராக இவர்களைக் காட்டும் நிலையும் (திருமுருகு. 125), கம்பன் மானின் உரிவையை உடுத்தும் போர்த்தும் காட்டும் நிலையும் (6346) கொண்டு உணர்த்தலாம்.

மணிமேகலையில் சங்க தருமன் என்ற பெளத்த முனிவன் பொலம்புரி யாடையுடன் காட்சி தருகின்றான் (5:61). பொன்னிற்றிகழும் பொலம்புரியாடை என்னும் பெயர்க் காரணத்தை உ.வே சா. அவர்கள், ‘மருதந்துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதால் ‘பொன்னிற்றிகழும் பொலம்பூவாடை’ எனப்பட்டது. இதனைச் சீவரம் என்பர்’ என்று விளக்குகின்றார்.

சைவ முனிவனை நாணமும் உடையும் நீத்து இருந்த நிலையினனாக (3:88) மணிமேகலை காட்டும்.

பெருங்கதையில் யூகி, சைவமுனிவன் வேடத்தில் கல்லுண்கட்டிய அரையினனாகக் (4.7:158) காட்சி தருகின்றான். சிந்தாமணியில் சைவத் துறவியர் உடைமுழுவதையும் நீக்கும் தன்மை அமைகின்றது. இவ்வாறு சைவ முனிவர் உடையுடுத்தும், நீத்தும் காணப்படும் வேறுபட்ட நிலைகளுக்கு அடிப்படைக் காரணம் தெளியுறவில்லை.

துறவியர்

பௌத்தத் துறவிகளின் ஆடை காவியாடை எனத் தெரிகின்றது. இவர்களைக் கலிங்கத்துப் பரணி, உடுத்தும், போர்த்தும் காணப்பட்டனர் எனக் குறிப்பிடும் தன்மை, இவ்வுடையினை இவர்கள் உடுத்திய தன்மையைப் புலப்படுத்தும்.

சமணர் ஆடையையும் துறந்த நிலையினைச் சீவகனின் துறவுவழி,

மணியுறை கழிப்பது போல் பல்கலப்
பணிவருப் பைந்துகினீக்கிப் பாற்கடல்
அணிபெற வரும்பிய வருக்கனாமெனத்
திணிநிலத் தியன்றதோர் திலகமாயினான் (3028)

எனச் சிந்தாமணி நவிலும்.

பொதுமக்கள்

எஞ்சியோரைப் பொதுமக்கள் என்ற நிலையில் நோக்கலாம். பொதுமக்களை உயர்நிலை மாந்தர் தாழ்நிலை மாந்தர் என அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்பக் கொண்டு அவர்களின் உடை பற்றிய விளக்கங்கள் இவண் நவிலப்படுகிறது.

உயர்நிலை மாந்தராக ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்ந்தோர், தாழ்நிலை மாந்தராக மறவர், வேடர் போன்றோர் அமைகின்றனர்.

உயர்நிலை மாந்தர்

சங்க இலக்கியத்தில் தலைவனின் உடையாகத் தானை கலிங்கம் காட்டப்படுகின்றது.

இருபிறப்பாளராகிய அந்தணர் காழக உடையினராகக் காட்சி தருகின்றனர். பெருங்கதையில் அந்தணர் வெண்டுகிலுடன் காட்டப்படுகின்றனர்.

பெருநிதிக் கிழவர் கலிங்கம் புரளும் தானையுடன் தோற்றம் தருகின்றனர். சிலம்பில் பெருநிதிக் கிழானின் மகனான கோவலன் தன் உடையைக் கூறை எனச் சுட்டுகின்றான்.

பாண்டியனது பொற்கொல்லன் மெய்ப்பையுடன் காட்டப்படுகின்றான்.

பெருங்கதையில் கணக்கர், திணைத்தொழிலாளர் போர்வையுடனும் நெடு நுண்ணாடையுடனும் காட்டப்படுகின்றனர்.

இலங்கையில் அரக்கன், அரக்கியரை உத்தரீயம் அணிந்த தன்மையில் கம்பன் காட்டுகின்றான். உயர்ந்த மாந்தரையே கம்பன் உத்தரீயம் அணிந்த நிலையில் காட்டிச் செல்வதும், இலங்கை வளம் மிக்க நாடாகக் காட்சியளிப்பதும், உயர்நிலை மாந்தர் அனைவரும் உத்தரீயம் அணிந்திருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது.

இக்குறிப்புகள் உயர்நிலை மாந்தரின் உடுத்தும் நிலை பற்றிய ஒரு சில தெளிவுகளையும் தருவன.

செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண்பொரு
புகூமொண் பூங் கலிங்கம் புரளும் தானை (மதுரை, 431-33)

பெருநிதிக் கிழாரின் இவ்வுடையின் தன்மைக்கு, ‘செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்திவிழுமாறு போன்று ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உடை வாளோடே பொலிவுறக் கட்டி தின்னிய தேர்த்தட்டின் கட்பிரம்பிடத்தே ஆடையின் முன்றானைப் புரளா நிற்ப’ என்ற உரையாசிரியரின் உரை விளக்கம் கலிங்கமாகிய ஆடையுடன், மேலாடை அணிந்தமையினையும் தெளிவாக்க வல்லது.

பொதுவாகக் காவலர் போன்றோரே சட்டை அணியக் கண்டோம். இவண் சிலம்பு, பொற்கொல்லனை மெய்ப்பை அணிந்தவனாகச் சுட்டுவது புதுமையாக அமைகிறது. ஆயின் இந் நிலை புலப்படுமாறில்லை.

பெருங்கதையில் கணக்கர், திணைத் தொழிலாளரின் உடுத்தும் நிலையினை,

புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந் தோய்புடுத்த நெடு நுண்ணாடையர் (1.32:63-4)

எனக் காண்கின்றோம். இவண் போர்வை புறங்கால்வரை தாழ்ந்து காணப்படும் நிலையும், ஆடை நிலந்தோயும் அளவிற்கு உடுத்திய நிலையும் அமைகின்றது. அரசர்கள் நிலந்தோயும் அளவிற்கு உடுத்தியதற்குப் பெருமிதம் காரணம் எனக் கண்டோம். எனவே அரசர்க்குரிய இத்தனித்தன்மை பின்னர் அனைவராலும் பின்பற்றப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

தாழ்நிலை மாந்தர்

உயர்ந்த மாந்தர் நிலை இவ்வாறு அமையத் தாழ்நிலை மாந்தர் பற்றிய குறிப்புகளும் ஒருசில தென்படுகின்றன.

சங்க இலக்கியத்தில் குறவரின் உடையாக மரனாருடுக்கை அமைய, சிந்தாமணி, வேட்டுவன் உடையாக இதனை இயம்பும். வேடனாகிய குகனின் உடையினைச் சொல்லப்போந்த கம்பன்,

காழமிட்ட குறங்கினன் கங்கையின்
ஆழமிட்ட நெடுமையினான் அரை
தாழவிட்ட செந்தோலன் தயங்குறச்
சூழவிட்ட தொரு புலி வாலினான் (650)

என அவனின் உடையாகக் காழம், தோல், புலியின் வால் என மூன்றையும் சுட்டுகின்றான். இம்மூன்றையும் இடையில் அணிந்த நிலைதான் இவண் தெளிவுறுகின்றதே தவிர, பிற உடுத்திய நிலை தெளிவுபடவில்லை. முதலில் குறங்கினில் காழம் அணிந்து அதன்மேல் தோலாடையினை அரைவரை தாழும்படி பொருத்தி இரண்டினையும் வெம்புலியின் வாலால் சூழ இணைத்திருக்கவும் கூடும். மற்றொரு பாடலில் குகனை,

வெற்றி வேற்சேனை யோடும்
         வெறி பொறிப் புலியின் வெவ்வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும்
         அரையினன் (10505)

என்று சுட்டும் தன்மை, புலியின் வெவ்வாலை மட்டும் தனித்துயுடுத்திய தன்மையைக் காட்டுகின்றது.

‘அச்சம் தரும் புள்ளிகளையுடைய புலியின் கொடிய வாலைச் சுற்றத் தொடுத்துக் கட்டிய அரையுடையவன்’ என்னும் இதன் பொருள், பல புலியின் வால்களை அழகுபடத் தொடுத்து இடையைச் சுற்றியும் கட்டிய தன்மையை விளக்கி நிற்கும். கம்பன், குகனின் உடையில் புலியின் வாலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் தன்மை அவன் வேட்டுவத் தொழிலின் மேன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்திருப்பதாகக் கொள்வதில் தவறில்லை.

இடையரின் உடையாக மாசுணுடுக்கையினையும் கருந்துவராடையினையும் சங்கப்பா காட்டும். சிந்தாமணி அத்துண்ணாடை என இதனைப் பகரும். எயினரின் உடை செந்துவராடையாக இருந்தது எனச் சங்கச்சான்றோர் உரைக்கின்றனர். ஆறலைக் கள்வர் துவர் செந்துவராடையைக் கொள்ள, கள்வர் நீலக் கச்சுடன் காணப்படுகின்றனர். சங்ககால நிலை இவ்வாறு அமைய, நீலத் தானையராகக் கள்வரை இளங்கோ காட்டுவார்.

வள்ளுவனை வெண்டுகிலுடையனாகப் பெருங்கதை சுட்டும் கணி மேயுடை அணிந்த நிலையில் சூளாமணியில் சுட்டப்படுகின்றான்.

ஏலலாளர் ‘படம் புக்கு’ இருந்த நிலையினராகக் காணப்படுகின்றனர்.

பாணனின் ஏழ்மை நிலையைச் சங்கப்பா பல இடங்களில் சுட்டும்.

சிதாருடுக்கை முதாரிப்பாண (புறம். 138) என இவர்களின் சிதாருடுக்கை பேசப்படுகின்றது. நந்திக் கலம்பகத்தில் துணியரைச் சுற்றி, பரடு திறப்பப் பல்கடைத் திரிந்த பாணன் காட்டப்படுகின்றான் (23). கால்கள் தெரியும்படி, துண்டினை உடுத்துச் செல்லும் பாணனின் நிலை இங்கு விளக்கமாகிறது.

இரவலரின் உடையாக மணிமேகலை, துணிச்சிதர் அணிந்தமையைக் காட்டும். சிந்தாமணியும் இதனையே உரைக்கும். ஏழைக் கிழவனின் உடையாக நொசிந்த அறுவை காட்டப்படுகின்றது.

இம்முறைகளில் தாழ்ந்த நிலை மாந்தரின் உடை சுட்டப்படுகின்றதே தவிர, உடுத்தும் முறை மிகுதியாக விளக்கப்படவில்லை.

புலவர்

ஏழ்மை நிலையிலிருப்பினும் தன் கல்வித் தகுதியால் மதிப்புப் பெற்றநிலை காரணமாக இவரைத் தனித்து நோக்கலாம்.

பாணன்போன்றே புலவரும் வெள்ளிய அரையில் சிதைந்த சிதாருடன் காட்சி தரும் நிலை சங்கப் பாக்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஒன்று. மேலாடை பற்றிய எண்ணமின்மையும் அரையாடையும் இழிந்த தன்மையில் காட்டப்படும் தன்மையும் சிறியதொரு உடையினையே இவர்கள் அணித்திருக்கக் கூடும் என்பதைப் புலப்படுத்த வல்லன.

நம் நாட்டு மக்களின் நிலை இவ்வாறு அமைய தொழிலின் பொருட்டு வந்த பிறநாட்டினரின் உடைபற்றியும் இலக்கியங்கள் சில எண்ணங்களைத் தந்து அமைகின்றன.

மெய்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லை. 60-61)
படம் புகு மிலேச்சர் உழையராக (முல்லை. 66)

என யவனர், மிலேச்சர் படம், மெய்ப்பை அணிந்த தன்மை இயம்பப்படுகின்றது. இவர்களைப் பற்றி, வேங்கடசாமி நாட்டார் தம் சிலப்பதிகார உரையில், ‘எகிப்து கிரீசு முதலிய பிறநாடுகளில் இருந்துவந்த வணிகர் தொழிலாளர் முதலாயினோர் யவனர் எனப்படுவர். இன்னோரைச் சோழகர் என்றும், மிலேச்சர் என்றும் கூறுவர் தொல்லுரையாளர்கள்’ (பக்கம். 111) என உரைக்கின்றார். எனவே வெளிநாட்டினரின் பொதுப் பெயர் இவை என்பதும், இவர் அனைவரும் சட்டையுடன் தோற்றமளித்தனர் என்பதும் இவண் உணரலாகும் நிலையாகும்.

ஆடவர் ஆடைகளை, பொதுநிலையில் இக்குறிப்புகள் வழி நோக்க,

(1) அரசர், உயர்ந்த நிலையில் உள்ள பிற ஆடவர் சிறந்த ஆடையுடனும், மேலாடையுடனும் காணப்பட்டனர்.

(2) ஏழை மக்கள் இடையாடை மட்டுமே அணிந்தனர். இவர்களில் பலர் துவராடையுடன் காட்டப்படுதலுக்குரிய காரணம் புலப்படுமாறில்லை.

(3) குறிப்பிட்ட தொழில் மாந்தர் சட்டையுடன் காணப்பட்டனர்.

(4) உயர்ந்தோர் நிலந்தோயவும், தாழ்ந்தோர் சிறு இடையாடையினையும் உடுத்தினர்.

போன்ற செய்திகள் அறிய வருகின்றன.

மகளிர்

மகளிரிலும் ஆடவர் போன்று பல பிரிவினரையும், பிரிவுக்கு ஏற்ப உடையினையும் காணலாம்.

அரசியர்

சங்கப் பாக்கள், பூந்துகில், கலிங்கம், உடுத்திய தன்மையில் இவர்களை இயம்பும்.

பெருங்கதையில் துகில் பட்டுடன் வட்டுடையும் (2.4:122) அணிந்த நிலையில் அமைகின்றனர். பின்னைய இலக்கியங்களும், சிறந்த உடையினை இவர்களுக்குரியதாகச் சுட்டும். மேலாடையும், கச்சும் அணிந்தமையினையும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்கள் உடுத்தும் தன்மையினையும் சில நிலைகள் வழியே காணலாம்.

கோடி நுண்டுகிலை, கொய்து கொண்டுடீஇயதாகப் பெருங்கதை உரைக்கும் தன்மையில் (2.5:164-66) கொய்து, உடனே தைக்காத துணியினை அவ்வாறே உடுத்திய தன்மையைக் காண்கின்றோம்.

கதிர் நிழற் கவாப் பதும நிறங் கடுக்கும்
புதுநூற் பூந்துகி லிருமடியுடீஇ (1.42:144-45)

என, நீராடிய பின்னர் துகிலினையுடுக்கும் தன்மையில் வாசவதத்தையைக் காட்டும் பெருங்கதை, இந்நிலை, பூந்துகிலினை இருமடியாக உடுக்கும் தன்மையைத் தெளிவாக்குகின்றது.

படாஅத் தன்ன படிவத்தாகிய
வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். 1.45:9-10)

காஞ்சனமாலை காணப்படும் நிலை, மேலாடை அணிந்த தன்மையை விளக்க வல்லது.

படாம் போன்று மார்பின் மேல் அணியப்பெற்ற மேலாடையின் தன்மை இங்குக் குறிக்கப்படுகிறது.

சிந்தாமணி, போர்வை போர்த்துக் காணப்படும் தன்மையை,

முழு மெய்யும் சிலம்பி வலந்தது
போற் போர்வை போர்த்துச் செல்லலுற்றாள் (340)

எனச் சுட்டும்.

பவளக் கொம்பைச் சிலம்பி வலந்ததுபோல் எனப் போர்வை போர்த்தல் உவமிக்கப்படுகின்றது. சிலம்பி நூலால் பவளக்கொம்பு மறையாதது போன்று முழுமெய்யினையும் போர்க்கும் தன்மையிலும், ஆடையின் மென்மையால், மேனி மறையாத நிலை இவண் சுட்டப்படுகின்றது. இதனால் இம் மகளிர் சில நேரங்களில் உடல் முழுவதையும் மறைத்தலும் உண்டு எனத் தெரிகின்றது.

உயர்நிலை மகளிர்

உயர்நிலை மகளிர் அரசியர் போன்றே சிறந்த ஆடையுடுத்திக் காட்சி தருகின்றனர்.

பட்டும், துகிலும், கலிங்கமும், தூசும் எல்லாக் காலங்களிலும் இவர்கள் பயன்படுத்தும் சிறப்புப் பெற்றன. இவற்றுடன் பூங்கரை நீலத்தையும் இவர்தம் உடையாகச் சங்க இலக்கியம் காட்டும்.

சங்க இலக்கியத்தில் சிறப்புப் பெறும் தழையுடையினை ஐந்நில மகளிரும் உடுத்தித் தங்களை அழகுபடுத்தியுள்ளனர். பரத்தையும் இதனை அணிந்து காணப்படுகின்றாள்.

அய வெள்ளாம்பல் அல்லிஅம் பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறலைப்ப

எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்று (293) இதனை நவிலும். துடையில் மாறி மாறி அசையும் தன்மையுடன் இது அமைதல், உடுத்திய தன்மையை இயம்ப வல்லது. விழவு, விற்பனைபோன்ற காலங்களில் இதனையணிந்தனர்; இடையில் மட்டுமே அணிந்தனர் என்பவற்றையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.

பூங்கரை நீலம் என்ற உடையினைப் புடைதாழ உடுத்தியிருந்தனர் எனச் சுட்டும் தன்மை, ஆடவர் போன்று மகளிரும் நிலம்தாழ உடுத்தியமையினைச் சிறப்பு எனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றது. ஏனெனில் சங்கப் பாடல்கள் சுட்டும் இவ்வாடையினை இரு இடத்தும் தலைவியின் ஆடையாகவே காண்கின்றோம். தாழ்நிலை மகளிர் உடுத்தாமையும் இவ்வெண்ணத்தினை உறுதிப்படுத்துவதாகும்.

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகிக்குத் தூமடிக் கொடுக்கச் சொல்லும் தன்மை (15:134) அவர்களின் தூமடி யுடுக்கும் இயல்பினை இயம்பும். மணிமேகலையில் ஆதிரையின் உடையாகக் கூறை (16:30) சுட்டப்படுகின்றது. பின்னரும் இம்மரபு தொடருகின்றது.

அரசியர் போன்று இவர்களும் மேலாடை அணிந்தனர். தலைவி அந்துகில் தலையினைக் கொண்டு, தலைவனின் வியரினைத் துடைக்கும் தன்மை (நற். மரு. 120), இவளது மேலாடை பற்றிய உணர்வினைத் தரும். காந்தர்வதத்தையின் தோழி தூத்துகிற் றோகை அணிந்து காட்சிதருகின்றாள் (சீவக. 762). சிந்தாமணி மகளிர் மேலாடையணிந்தமையினை வடகமெனச் சொல்லிச் செல்லும் (462).

மகளிரில் ஒருசிலர் கச்சணிந்த குறிப்புள்ளது. பெருங்கதையில், கச்சினார் கண்ணியர் கதிர் வெண் வளையினராக இவர்கள் சுட்டப்படுகின்றனர் (1.34:121).

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே (822).

என்று கம்பனும் மகளிர் மேலாடையைக் காட்டுவான். கம்பன் பலவிடங்களில் மகளிர் கச்சு அணிந்தமையினைச் செப்புவான்.

வார்காத்த வனமுலையார் (பால. 1736)

‘வீக்கப்பட்டன’ (144) எனச் சூளாமணி சுச்சு பற்றிய எண்ணத்தை தெளிவாகப் பேசும்.

தாழ்நிலை மகளிர்

சங்க இலக்கியம் புலவன் மனைவியை மாசொடு குறைந்த உடையளாகக் (புறம். 159) காட்டுகின்றது. விறலியரின் உடையாகத் துகில் அமைகிறது (பதி. 6:4). கட்டுவிச்சி கலிங்கம் அணிந்துள்ளாள் (பெருங். 1.37-239).

பெருங்கதையில் வேலை செய்யும் மகளிர் துகிலுடனும் கச்சையுடனும் காணப்படுகின்றனர் (பெருங். 1.43:124-26).

பெருங்கதையில் சலரர், புளிஞர் மகளிர் தழையுடையுடன் காணப்படுகின்றனர் (1.55:56-57). சிந்தாமணியிலும் வேட்டுவப் பெண்ணின் உடையாகத் தழை சுட்டப்படுகின்றது (1231). அம்பிகாபதிக் கோவை எயின மகளைக் குன்றிமணி கோத்தணிந்த மார்பினளாகக் காட்டும் (403).

சேடியர் வம்புடன் காணப்பட்டதை நெடுநல்வாடை இயம்பும்.

கவரிவீசும் மகளிர் கதிர் முலை, கச்சின் வீக்கியும் (சீவக. 541) வாயிற் காவல் மகளிர் கச்சு அணிந்தும் தோற்றம் தரலை (சீவக. 2015) நாம் காண்கின்றோம்.

‘முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற’ கம்பன் (1070)

விரைந்து செல்லும் பணிப்பெண்டிரைக் காட்டுவான்.

இந்நிலை கச்சுக் கட்டின தன்மையினை விளக்கி அமைகின்றது. வீக்குதல், யாத்தல் என்ற சொற்கள் கச்சினை இறுக்கிக்கட்டினர் என்பதையுணர்த்தும் நிலையில் அமைய இவண் பூட்டு அவிழ்ந்த என்று சொல்லும் தன்மை, கச்சின் முடிப்பு என்பதையுணர்த்தி, முடிச்சுப் போட்டுக் கச்சினை இறுக்கிக் கட்டியிருந்தனர் என்பதைத் தெளிவுறுத்துகின்றது.

சூளாமணி ஏவன் மகளிர் ஏகாய மிட்டனர் (1534) எனச் சுட்டும்.

துறவில் மகளிர்

சிலம்பில் கவுந்தியடிகள் சுவன் மேலறுவையளாகக் காட்டப்பட, இவளது துகில் பற்றிய எண்ணம் விளக்கமுறவில்லை. பின்னைய இலக்கியங்களில் துறவற மகளிர் உடைகள் மதத்திற்கு ஏற்றாற் போன்று மாறுபாடாக அமைவதைக் காணலாம்.

சமண மத மகளிர் துறவில் மார்பில் துகில் அணிகின்றனர். இதனை; சீவகன் துறவின்போது, மகளிரும் துறவறம் பூண்ட ஞான்று,

பானிலாக் கதிரென அம்மென் பைந்துகில்
தானுலாத் தடமுலை முற்றம் சூழ்ந்தரோ (2635)

எனக் காட்டுகின்றார் தேவர். மேலாடை அணிந்தமை ஈண்டு தெளிவாக இயம்பப்படுகின்றது.

சுயம்பிரபை தவக் கோலத்தில்,

மருங்கு அலச வற்கலை வரிந்து, வரிவாளம்
பொரும், கவசம் ஒக்கும், முலைமாசுபுடைபூசி
பெருங்கலை மதித் திருமுகத்த பிறழ் செங்கேழ்க்
கருங்கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதிகாண (கம்ப. 4672)

காட்சியளிக்கும் தன்மையைக் கம்பன் காட்டுகின்றான்.

பக்கம் வருந்தும்படியாக வற்கலையை இறுகக் கட்டிச் சுயம்பிரபை காட்சி தரும் தன்மை இவண் அமைகின்றது. வற்கலை ஆடையை இடையில் கட்டிய இவள், மேலாடை அணியவில்லை என்பதை, ‘முலைமாசு புடைபூசி’ என்னும் எண்ணம் வெளிப்படுத்துகின்றது. சமணத் துறவியரின் நிலையினின்றும் மாறுபட்ட நிலையில் இவர்களின் வேடம் அமைவது ஈண்டு வெளிப்படை.

இவ்வாறு மகளிரின் உடைகள் அமைய, பொது நிலையில் காணப்படும் மேலாடை பற்றி முரண்பட்ட எண்ணங்கள் நிலவுவதால் அதன் உண்மை நிலையினை இவண் நோக்கலாம்.

தமிழ் மகளிர் கச்சு, மேலாடையினைச் சில நேரங்களில் அணிவதும், பல நேரங்களில் அதனை அணியாமையும் இவற்றை முக்கியமெனக் கருதாத அவர்களின் மனநிலையைத் தெளிவாக்குகின்றது. குங்குமம் சந்தனம் முதலிய பூசி அழகுபடுத்தும் தன்மைக்கே முதன்மை கொடுத்தனர் என்பது இலக்கியப் பயிற்சிகள் தெளிவாக்கும் ஒன்று.

இன்றைய நிலையில் மகளிர் மார்பாடைக்குத் தனி மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்தலையும், மானம் காத்தலுக்கு இன்றியமையாதது என்று கருதுதலையும் நோக்கும் தமிழருக்குத் தமிழ் மகளிரின் மேலாடைபற்றிய ஐயம் உள்ளது. அணிந்தனர் என்பது ஒரு சாராரும், அணியவில்லை என்பது இன்னொரு சாராரும் கொள்ளும் எண்ணம். தமிழரின் உடுத்தும் நிலை விளக்கியதுபோன்ற மேலும் சில இலக்கிய எண்ணங்களின் வழி நின்று இக்கருத்தை ஆராயலாம்.

சங்க இலக்கியத்தில்,

அம்பணைத் தடைஇய மென்றோன் முகிழ்முலை
வம்பு விசித் தியாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் வியர் மகளிர் நல்லடி வருட (நெடு. 149-51)

என, சேடியர் கச்சு அணிந்த குறிப்புத் தெளிவாதல் போன்று பிற மகளிர் அணிந்த குறிப்புத் தெளிவாகவில்லை. மேலாடை அணிந்தமையும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சுட்டப்படுகின்றதேயொழிய குறிப்பாக மகளிர் அனைவரும் அணிந்தமை பற்றிய சான்று இல்லை.

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் (1087)

என்பது தெய்வப்புலவர் கருத்து.

இவண் மாதரின் மார்பாடை களிற்றின் முகபடாத்திற்கு உவமிக்கப்படுகிறது. மகளிர் மார்பை மறைக்கத் துகில் அணிந்தனர் என்பதே ஈண்டு தோன்றும் பொருள்.

இன்று யானைக்குப் பொதுவாகப் படாம் அணிதல் இல்லை. சிறப்பு நாட்களில் மட்டும் சில யானைகள் படாம் அணிதலைப் பெறுகின்றன. அதுபோன்று அன்று அரசர், செல்வர் போன்றோர் யானைக்கு அணிந்திருக்கக் கூடும். இதனையும் எல்லா நேரங்களிலும் அணிவித்திருக்க முடியாது. இதோடு ஒத்த நிலையில் மேல்நிலை மகளிர் எப்போதாவது சில பொழுதுகளில் மார்பில் துகில் அணியும் நிலையை உவமித்திருக்கலாம் குறளாசிரியர்.

அடுத்து, யானைக்குப் படாமிடுதல் அழகு கருதியே தவிர மறைத்தல் நோக்கமன்று. இதனைப் போன்றே மகளிரும் அழகு கருதி மார்பில் துகில் இட்டனரே தவிர, மறைத்தல் நோக்கமாகப் புலப்படுமாறில்லை. இதற்குப் பின்வரும் இலக்கியக் கூறுகளும் துணை நிற்கின்றன.

சிலப்பதிகாரத்து மகளிர் இடையாடை பற்றிய பல எண்ணங்களைக் காண்கின்றோம். ஆயின் மார்பில் ஆடை அணிந்ததாக யாண்டும் குறிப்பில்லை. மார்பை மறைத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அங்குக் காண முடியவில்லை.

1. சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
    ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் (1:56-7)

2. திருமுலைத் தடத்திடைத் தொய்யிலன்றியும்
    ஒரு காழ் முத்த மொடுற்றதை என்கொல் (2:67-70)

3. அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
    மென்துகில் அல்குல் மேகலை நீங்க
    கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் (4:47-49)

4. பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ்
    நிறங்கினர் பூந்துகில் நீர்மை யினுடீஇ (6:87-8)

5. அரத்தப் பூம்பட்டு அரைமிசை யுடீஇ (14:86)

எனும் பகுதிகளை இங்கு சான்றாக நோக்கலாம். மாதவியின் பல அழகுக் கோலத்தினை நிரல்படக் கூறுங்கால் இடையாடை சுட்டப்படுகின்றதே தவிர மேலாடை சுட்டப்படவில்லை. இதற்கு, நடனமகளிரின் இயல்பே இது[6] எனக் காரணம் கொள்ளலாம் எனினும் மென்துகில் அல்குலில் மேகலை நீங்க, கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாத நிலையுடைய கண்ணகியைக் காண்கின்ற பொழுது, துன்பச் சூழலிலும் இடைத்துகிலை விடாது, மார்பில் குங்குமம் பூசாத நிலைதான் சுட்டப்படுகின்றதே தவிர மார்பாடை சுட்டப்படவில்லை. எனவே குலமகளான கண்ணகியின் நிலையே இவ்வாறு அமைய, இவ்வியல்பு அச்சமுதாய நிலையே என அறுதியிட்டுக் கூறலாம்.

நுரை புரை கலிங்கம் ஒருமுலைப் புதைப்ப (பெருங். 2:5:86)
வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி (பெருங். 1:45:8-11)

என்னும் எண்ணங்கள் பெருங்கதையில் அமைவன.

கலிங்கம் மார்பை மறைத்தல் தேவை என்றால் ஒரு பகுதியை மட்டும் மறைத்தல் என்பது ஒப்புக் கொள்ள முடியாதது. வடகப் போர்வையை வனப்பொடு திருத்தும் தன்மை அழகுபடுத்துதலின் நோக்கத்தையே நம்முன் தோற்றுவிக்கின்றது. எனவே ஈண்டும் மேலாடை அணியினும் அதன் நோக்கம் அழகுபடுத்தலே என்பது வெளிப்பட்டு நிற்கக் காணலாம்.

சீவக சிந்தாமணியில் பெண் துறவியர் மேலாடை அணிந்த நிலையைக் காட்டும்போது, ‘உத்தரியம் இடைகவல் வருந்த அணிந்த நிலை’ (சீவக. 472) எனவும், ‘அந்நுண்டுகிற் கல்லரத்தமல் குலது வருத்த’ (சீவக. 1783) அணிந்ததாகவும் புலவர் விளக்குவார். சாதாரணமாக மகளிர் மேலாடை அணியும் வழக்கு இருந்திருப்பின் அது பழக்கமாகி இருக்கும். எனவே வருத்த என்ற வினையைப் புலவர் பெய்யத் தேவையிருந்திருக்காது. புதியதாக அணியும் தன்மை தான் வருத்தத்தைக் கொடுப்பது என்ற நிலையில் துறவியர் புதுமையாக இதனை அணிந்தனர் என்பதை உணர முடிகின்றது.

இந்தியா முழுமையும் மகளிர் மேலாடை அணிதலை முக்கியமெனக் கருதாத நிலையே இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் கஞ்சுகம் அணியாத துறவி தண்டனை பெற்றாள் என்ற கருத்தினை அறிய ஏற்படுகின்றது. பொதுவாக அணியும் வழக்கு இருந்திருப்பின் அணிந்திருப்பாள். வழக்கம் இல்லாத காரணத்தால்தான் அணியாமல் சென்று தண்டனை பெறுகின்றாள். கம்பனும் சீதையின் கோலம்கோடும் தன்மையினை அழகுற எடுத்தியம்பும்போது மேலாடையைப் பற்றிக் குறிப்பிடாது செல்லும் தன்மையைக் காண்கின்றோம்.

உருவிளை பவள வல்லி பால்நுரை உண்டதென்ன
மருவிளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் மாட்டி
கருவிளை மலரின் காட்சிக்காசு அறு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலைத் தழுவச் சேர்ந்தார்
(கம்ப. 10140)


செந்நிறம் மிக்கு விளைந்த பவளக்கொடி பால் நுரையால் மூடப்பட்டது என்னும்படி மணம் நிறைந்த வெண்ணிறக் கலவைச் சாந்தினைப் பூசிக் குங்குமக் குழம்பினைக் கொங்கையில் அப்பிக் கருவிளை மலர்போலும் தோற்றத்தினையுடைய குற்றமற்ற நீலநிறப் பட்டினையும் அதன்மேல் காமனது செல்வம் விளைகின்ற இடைக்கு ஏற்ப மேகலையினையும் பிராட்டியின் மேனியில் பொருந்த அமைய அணிந்தனர் என இவண் அமையும் இவ்விளக்கம் மார்பில் குங்குமத்தால் அழகுசெய்யப்பட்ட தன்மையைக் காட்டி மேலாடையின்மையை எடுத்தியம்பும். கல்லாடமும் மணப்பெண்ணின் மேலாடை அணியாத கோலத்தினைச் சித்திரிக்கின்றது.

மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று
எழுமதிக் குறைந்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவியுண்டு கனியாது
மற்றது பூத்த பொற்றிதழ் தாமரை (18:16-19)

திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணிகலன்களாகிய பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்ததென்று, முலைக் கண்களாகிய வண்டு பொருந்தி தேன் நுகர்ந்து மகிழாமல் அவ்வண்டு திகழாநின்ற முலைகளாகிய இரண்டு பொன் தாமரை அரும்பி மலர்ந்த நெஞ்சாகிய நீர் நிலையில்......என்று இதன் விளக்கம் அமைகின்றது. இவண் அணிகளால் மறைத்தமை பற்றிய எண்ணம் வெளிப்படுகின்றதே தவிர மேலாடை பற்றிய குறிப்பில்லை.

மேலும் சங்க காலம் முதற்கொண்டு மார்பில் ஆடை பெறாத முக்கியத்துவத்தை, அனைத்து இடங்களிலும் வனப்பூட்டும் நிலையே பெறுவதைப் பல சான்றுகள் வழி உணரலாம்.

பொரிப்பூம் புன்கின் எழில்தகை யொண்முறி
சுணங்கனி வனமுலை அனங்கு கொளத் திமிரி (நற். பாலை. 9)

என நற்றிணை, மார்பில் தளிர் அப்பும் தன்மையை உரைக்கும்.

சூரரமகளிர்க்கு ஏற்றியுரைக்கும் தன்மையிலும் மகளிர் வழக்கமென இதனை உணர வைக்கின்றார் திருமுருகாற்றுப்படை ஆசிரியர்,

திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்
           தேய்வைத்; தேம் கமழ் மருதினர்
கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக்கொட்டி
           விரிமலர், வேங்கை நுண் தாது அப்பி (திருமுருகு. 32-36)

என அமையும் இவ்விளக்கம், சந்தனத்தை மார்பில் பூசி, அதன் மேல் வேங்கைப் பூவினது நுண்ணிய தாதை அப்பும் தன்மையை இயம்புவது அம்மக்களின் அழகுணர்வுடன் அதற்குக் கொடுத்த சிறப்பினையும் காட்டவல்லது.

மணிமேகலையில் ஆதிரை ஒள்ளெரிபுகல் பற்றிக் கூறுமிடத்து,

படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள்ளெரியுறா அது
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலிற்
சூடிய மாலையும் தொன்னிறம் வழாஅது (16:29-32)

எனச் சுட்டுகின்றார் சாத்தனார். கூறையுடன், சாந்தம் தான் ஈண்டும் இடம் பெறல் காண்கின்றோம்.

சிந்தாமணியில் காந்தர்வதத்தையின் கோலத்தைக் காட்டுகின்ற பொழுது,

வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம்வீக்கி
கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கொட்டித்
தொண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கினிபாதம் சேர்த்திப்
பண்ணிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (624)

என இயம்புவார் திருத்தக்கதேவர்.

சந்தனக் கோலம் எழுதப்பெற்ற சீதையின் மார்பு சித்திர வனமுலை எனக் கம்பனால் சுட்டப்படுகின்றது. மேலும்,

பாசிழை மகளிர் பகட்டு வெம்முலை
பூசிய சந்தனம் புழுகு குங்குமம்
மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற
வீசின நறும் பொடி விண்டு வாடையே (கம்ப. 4362)

என, குளிர்காற்று நறுமணப் பொருட்கள் காரணமாக நறுங்காற்றாகின்றது.

அகிற் சேறு அணிந்த முலைத் திருமங்கை (கம்ப. 13) என்ற பாடலடி, அகிற் குழம்பினையும் மார்பில் பூசிய தன்மையை விளக்க வல்லது.

அம்பொன் செய் கலாப அல்கு
          வந்தழை புனைந்து வஞ்சிக்
கொம்பஞ்சு மருங்கு னோவக்
          குவிமுலை முறி கொண்டப்பி (1633)

என, சூளாமணியில் தேவியர் பொழில்விளையாட்டு ஒப்பனையில் மார்பில் தளிரினை அப்பும் தன்மை நவிலப்படுகின்றதைக் காணலாம்.

இவற்றினின்றும் பல்வேறுபட்ட கோலங் காணும் நிலையிலும் மேலாடையினை விட, பிற சந்தனம், குங்குமம், அகிற் குழம்பு, தாது போன்றவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்தனர் மகளிர் என்பது வெளிப்படை.

தாரை விதவைக் கோலத்தில் குங்குமக் கலவையும் சந்தனக் குழம்பும் பூசாத மார்புடன் தோற்றம் தருவதைக் (4425) கண்ட இலக்குவன் தன் தாயரை நினைத்து இரங்கும் நிலை கம்பனில் அமைகின்றது. மங்கல மகளிர்க்குரியதொரு சிறப்புப் பொருளாக இவற்றைக் கொண்டு இருந்திருக்கலாம் என்னும் எண்ணமும் இதனால் எழுகின்றது.

பிற அறிஞர் எண்ணங்களும் மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை எனும் கருத்திற்குத் துணை நிற்கின்றன. சான்றாக, ‘அக்காலப் பெண்டிர் இடுப்பிற்குமேல் எவ்வித ஆடையும் அணிந்ததாகச் சிற்பங்களைக் கொண்டு கூற முடியவில்லை’ என்னும் மா. இராசமாணிக்கனார்[7] எண்ணத்தைச் சுட்டலாம். மகாபலிபுரச் சிற்பங்கள் பற்றிக் கூறிச் செல்லும் அறிஞரின் பல எண்ணங்களும் இக்கருத்திற்கு ஏற்பவே அமைகின்றது.[8] இந்தியாவில் மகளிர் நிலை பற்றிய சார்லஸ் பேப்ரி கூற்றும் இதனை உறுதிப்படுத்துமாறு அமைகின்றது.

இன்றைய நிலை கொண்டும் இதனை நோக்கலாம். தமிழகம் பண்டு சேர, சோழ, பாண்டிய நாடு[9] என்ற முப்பிரிவுகளாக இணைந்திருந்த நிலையில், அனைவரும் தமிழரே. எனவே இன்று மலை நாட்டில் வாழும் மகளிரில் சிலர் மார்பாடைக்கு முக்கியத்துவம் கொடுக்காது இருக்கும் நிலையை, அன்றைய தமிழ் மரபின் எச்சமாகக் கொள்ளலாம். இன்று தமிழ் நாட்டிலும் சில இடங்களில் சேலையைக் கொண்டு மார்பை மறைத்தல் தவிர, ரவிக்கை போன்றவற்றைப் பயன்படுத்தாத நிலையையும் இவண் சுட்டலாம். இவற்றால் பண்டைத் தமிழக மகளிர் மேலாடைக்குச் சிறப்பளிக்கவில்லை என்பது தெளிவு.

ஆடையும் அணியும்

மகளிரின் உடையுடன் அணிகலன்களும் பங்குபெறுவதனை இப்பகுதி பேசுகிறது. உடுத்துதலில் ஒரு முறைமையாகப் பொதுநிலையில் காணப்படுவதால் இஃது இவண் விளக்கப்படுகிறது.

இன்று அரை ஞாணின் மேல் உடையுடுத்தும் இயல்பும், உடையின் மேல் ஒட்டியாணம் போன்ற அணிகள் அணிவதும் தமிழரின் ஒரு பழக்கமாகும். இவ்வியல்பு அன்றே தமிழரிடம் பொருந்தயிருந்த ஒன்று என்பதை இலக்கியங்கள் வழியே நாம் பெறுகின்றோம்.

பல்காழ் வீடுறு நுண்துகிலினூடு வந்து இமைக்கும் தன்மையில், நற்றிணை (பாலை. 366) நுண்துகிலின் வழியே இமைக்கும் மேகலையைச் சுட்டுகின்றது.

சிலம்பில்,

பிறங்கிய முத்தரை முப்பத்திரு காழ்
நிறங்கினர் பூந்துகில் நீர்மையின் உடீஇ (6:87-88)

என மாதவியின் அழகுக் கோலத்தில், மேகலையைத் துகிலின் உள் அணியும் தன்மை பேசப்படுகின்றது. இதனை, முப்பத்திரண்டு வடத்தினாற் செய்த விரிசிகை என்ற மேகலை என்பர் அடியார்க்கு நல்லார். இதற்கு, ‘ஆடைகளில் முத்தினைக் கோவையாக இணைத்துத் தைத்து உடுத்தல் உண்டு; இது விரிசிகை எனப்படும்’ என மற்றுமொரு எண்ணத்தையும் காண்கின்றோம்.[10]

ஆடையுள் கலாபம் இடம்பெறலை,
கலாபம் புதைத்த நிலாவெண்டுகில் (பெருங். 2.5:86)

நிலாவுறழ் பூந்துகின் நெகிழ்ந்திடைத் தோன்ற
கலாபப் பல்காழ் கச்சு விரிந்திலங்க (5.1:137-38)

எனப் பெருங்கதை இயம்புகின்றது.

‘தமர் பொதிர்ந்தெனத் துகில் தரித்த காஞ்சியர்’ எனச் சூளாமணியும் கலையினையும் காஞ்சியினையும் இடையில் ஆடைக்குள்ளே அணிந்த மகளிரைக் காட்டுகின்றது.

இப்பகுதிகள் துகிலின் உள்ளே அணிந்துள்ள அணியின் இயல்பினை விளக்கி, மகளிரின் பழக்கத்தைப் புலப்படுத்துகின்றன.

துகிலின் மேலும் அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டமையும் சில குறிப்புகளால் விளக்கம் பெறுகின்றது.

சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று வைகி (மதுரை. 721-2)

எனுங்கால், உடையணி பொலியும்படி கலிங்கம் உடுத்திய தன்மை இவண் விளக்கமுறுகின்றது. பட்டுடை சூழ்ந்த காசு (468) என்ற சிந்தாமணிப் பாடலும் இத்தன்மையினை நவில்கின்றது.

அணிகலனுடன் இணைத்துப் பேசப்படும் இடங்கள் அனைத்தும் அரசியர், உயர்நிலை மகளிருடனேயே அமைவதால் பொருள்வளம் மிக்கோர் இயல்பாக இதனைச் சுட்டலாம். சிறப்பான துகில், கலிங்கம், பட்டு போன்ற அரையாடைகளுடனேயே இவ்வணிகள் இடம் பெறுவதும் குறிக்கற்பாலது.

மகளிரின் இவ்வாடை பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து நோக்க:

(1) ஆடவர் போன்றே இவர்கள் உடைகளிலும் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.

(2) மேலாடை முக்கியத்துவம் பெறவில்லை.

(3) உடுத்தும் முறையிலும் தங்களின் அழகுணர்வு வெளிப்படும் தன்மையிலேயே இவர்களின் உடைகள் அமைகின்றன.

போன்ற சில எண்ணங்கள் தெளிவுபடுகின்றன.

பொது ஆடைகள்

ஆடவர் மகளிரின் அனைத்து ஆடைகளுள்ளும் பல இருபாலருக்கும் பொதுவானதாகவும் சில சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆடவர்க்குரியதாகக் கஞ்சுகம், குப்பாயம், படம், மெய்ப்பை போன்றவற்றையும் மகளிர்க்குரியதாகத் தழையுடை, பூங்கரைநீலம் போன்றவற்றையும் காண்கின்றோம். ஏனைய துணி என்ற நிலையில் இருபாலருக்கும் பொதுவானதாக அமைகின்றது. இவற்றுள் கச்சு, அணியும் விதத்தினால் மாறுபடக் காணலாம்.

மகளிர் மார்பில் அணிந்ததாகக் கச்சு பற்றிய மகளிர் தொடர்பான எண்ணங்கள் உணர்த்த, ஆடவரால் இடையில் கட்டப்பட்டது என இலக்கியங்கள் பகர்கின்றன.

சங்க இலக்கியம் அத்தி மன்னனின் கச்சு பற்றிக் கூறும்போது, ‘கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று’ (அகம். 376) எனச் சிறப்பிக்கும். ஈண்டு வயிற்றில் கட்டப்பட்ட தன்மை புலனாகின்றது.

சுரிகையினைக் கச்சில் கொள்ளும் தன்மையினையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு, ‘சுரிகை அம்பூங்கச்சிடைக் கோத்துவாங்கி’ (698) சீவகன் காணப்படும் தன்மையைச் சான்றாக்கலாம்.

மாந்தர் அழகுபட உடுத்தும் தன்மையிலும் சில பொதுக்கூறுகள் காணப்படுகின்றன.

இன்று பல்லவர், சோழர் காலச் சிற்பங்களைக் காண நம்மை மிகவும் கவருவன அவர்களின் உடையுடுத்தியுள்ள அழகேயாம். இடையாடையில் சிறப்புற அமைக்கப்பட்டு இருக்கும் சுருக்குகள் பற்றிய எண்ணங்களை இலக்கியம் வழியாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

‘தூசுலா நெடுந்தோகை யினல்லார்’ (சீவக. 1320) என அரசியைச் சார்ந்த ஆயத்தாரின் நிலையைத் தேவர் காட்டுகின்றார். இதற்கு, ‘தூசிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய ஆயத்தார்’ என நச்சினார்க்கினியர் பொருள் தருகின்றார். மற்றொரு பாடல்,

தோகை மஞ்ஞைத் தொகுதி போற்றோகை செம்பொன் நிலந்திவளக்
காலிற் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கதிர்வேலும்
நீலக் குவளை நிரையும் போற் கண்ணார் காவலிருந்தாரே (2698)

என, காலிற் சிலம்பு முதலியன ஏங்கக் கொய்சகம் நிலத்தேபட்டுத் துவளச் சென்று சோலையிலே மஞ்ஞைத் தொகுதி போல அமைந்த தன்மையைக் காட்டும்.

தோகை என்ற சொல் மயிற்றோகை என்ற பொருளில் இன்று பயிலப்படக் காண்கின்றோம். எனவே இவர்களின் ஆடையும் இத்தன்மையில் அமைக்கப்பெற்றதால், இதனையும் தோகை என்று சுட்டியிருக்கலாம். தோகை கொய்சகம் எனக் கம்பனில் குறிக்கப்படுகின்றது.

மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம்
மருங்குறச் சேர்த்தி (கம்ப. 9788)

என அமையும் கொய்சகம் சிறையுடன் உவமிக்கப்படும் தன்மையிலும் இதன் அமைப்பு வெளிப்படக் காணலாம்.

சூளாமணியில்,

கொந்தாடும் பூங்குழலும் கோதைகளுமாடக்
கொம்போலந் துகிலசைத்த கொய்சகம் தாழ்ந்தாட (177)

சோதிமாலை பந்தாடும் காட்சி விளக்கப்படுகின்றது. விசய திவிட்டரைக் கண்ட மகளிர் நிலையினைக் குறிப்பிடுமிடத்தும் ‘தோமறிந்த சூழ்துகின் நெகிழ்ந்துடுத்து’ (487) உழலும் தன்மை அமைகின்றது. கொய்சகம் மறிந்து கிடந்த சுற்றப்பட்ட ஆடையைக் குலைத்து மீண்டும் உடுத்து என்னும் இதன் பொருளும், கொய்சகத்தின் அமைப்பினை இயம்புகின்றது.

கொய்சகம் என்பதற்குப் பேராசிரியர் உரைக்கும் ‘பலகோடு பட அடுக்கியுடுக்கும் உடையைக் கொய்சகம் என்ப’ (தொல். பேரா. 464) என்னும் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்த வல்லது. இன்று வழங்கும் கொசுவம் என்ற சொல்லும் கொய்சசுத்தின் திரிபு ஆகத்தான் இருக்கவேண்டும் என்பதை அதன் தன்மை காட்டுகின்றது.

ஆடவரும் மகளிரும் உடுத்தும் நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்ளலாம்.

முடிவுரை

எனவே மேலே கண்ட அனைத்துக் கருத்துகளினின்றும், தமிழர் தேவையெனக் கருதி அணிந்தது இடையாடை எனவும், தகுதி, நாகரிக வளர்ச்சி, பிற பண்பாடுகளின் தோய்வு ஆகியவற்றின் காரணமாக மேலாடை, சட்டை அணிதல் போன்றனவும் முக்கியமெனக் கருதும் நிலை தமிழரிடம் புகுந்தது எனவும் கருதலாம்.

  1. Eat according to your own taste but dress according to others.
    - Select Papers, Sunit Kumar Chatterji, page-133.
  2. தமிழியல், தொகுதி-5, தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-94.
  3. If children in Egypt wore any clothes at all they were just like those of their parents but more often than not they ran about naked.
    - The Story of Clothes, Agnes Allen, page-34.
    There are very few children's costumes in these illustrations because until about 1770 there were no clothes specially designed for children. They became little copies of their elders as soon as they emerged from babies swaddling clothes.
    - Discovering Costume, Audery. I. Barfoot, page-22.
  4. The Patra statue however shows that the upper part of the body is bare except for the uttariya which lies across the chest and comes down to the feet from behind the left shoulder.
    —Indian Costume Coiffure and Ornament, Sachidanand Sahay, Page-4.
  5. பொத்தான்கள் நமக்குரியனவல்ல. பொத்தான் என்னும் சொல் பட்டன் என்னும் சொல்லின் திரிபு. இன்றுபோல் இணைப்பு நோக்கம் அன்று. அலங்காரத்துக்காகவே பொத்தான்களைப் பயன்படுத்தினர். இப்பொத்தான்கள் அணிவது கூடாது என்று விடாப்பிடியாக இருக்கும் ஓர் இனத்தார் இன்றும் அமெரிக்காவில் இருக்கின்றனர். மேனாட்டில் முன்னால் பெண்கள் அணிவதில்லை. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் பெண்களும் தம் ஆடையில் பொத்தான்களைத் தைத்துக் கொண்டனர். இப்பொத்தான்கள் முன்பு விலையுயர்ந்த சாமான்களால் செய்யப்பட்டன.
    -பொத்தான் புகுந்த புதுமை, ரா. சுந்தரேசன், தையற்கலை சுந்தரம், வெள்ளிவிழா மலர், 1972.
  6. It is further described that the girls while showing dance performance wore a thin dress in order to exhibit the grace of their body, Indian Costume Coiffure & Ornament
    — Sachidanand Sahay, page-43.
  7. பத்துப்பாட்டாராய்ச்சி - மா. இராசமாணிக்கனார், பக்கம். 510.
  8. Women are sometimes depicted with a breast-band (Kaccu). These breast bands are without any shoulder straps. Neither Parvathi not Lakshmi nor Budevi is depicted with the breastband. But female quardians the goddess Durga and celestial nymphs, The great penance panel, have it. The Queens of Mahendra and Narasimha are depicted bare about the waist. But their bodies would have been painted with Kunkum sandal paste and Chunnam.
    It is difficult to believe formost Indians of today that Indian women of all classes went about bare from the waist upwards (as do the Balinese) for many hundreds of years. Neverthless this is a fact that shows from thousands and ten thousands of sculptures and paintings. The evidence is not only overwhelming it is absolutely conclusive. Anyone with eyes can see that in the whole history of Indian art from the earliest times to approximately the 12th Century A.D. woman are invariably shown (with the sole exception of foreign fashions at one period) as wearing no garment, to cover their breasts....
    The Greeks like many other people, no doubt depicted the nude with relish, but they have thousands of other illustrations of every style of dress worn at various times by all classes of Greeks, Men and women.
    But in ancient Indian art all women are always shown with a bare upper body, - Mahapalipuram studies. - Gift Siromoney, P. Dayanandan, Dress and Ornament Pallava Peroid, Page. 93
  9. The first recorded examples of the Choli, the bodice, or blouse are found to my knowledge in the Pre-Mughal miniature paintings of Gujarat, mostly Jain religious manuscript illumination.
    —A History of Indian Dress, Charles Fabri, General Introduction.
  10. சிலம்புச் செல்வம், மு. சுப்பிரமணியன், பக்கம்-22.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/013&oldid=1841555" இலிருந்து மீள்விக்கப்பட்டது