தமிழர் ஆடைகள்/014
பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள்
மனிதன் இயற்கையிலேயே தன் உயிருக்கும், உடலுக்கும் ஊறு நேரா வண்ணம் காத்துக் கொள்ளும் உணர்வுடையவன். இன்னல்தரும் எதையுமே அஞ்ச எண்ணுபவன். அவனது நினைவுகளும் நடைமுறை வாழ்வும் இதனடிப்படையிலேயே அமைகின்றன. நன்மை நாடலும் தீமையினின்றும் விலகிச் செல்லலுமே அவனது எல்லாச் செயல்களுக்கும் அடித்தளமாகின்றன. இத்தகைய அவனது செயற்பாடுகளில் சில, பழக்க வழக்கங்கள் என்றும் எண்ணங்கள் சில, நம்பிக்கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மாந்தரின் காலம், சூழல், எண்ணம் போன்ற பல நிலைகளுக்கேற்ப மாறுபடும்; மரபுகளாகத் தொடரும்; பழமைக் கூறுகளாக எஞ்சியும் நிற்கும். பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தெளிவு பெற, சமுதாயத்தின் கலாச்சாரம் பண்பாடு இவையும் விளக்கமுறும். இவற்றை எடுத்தியம்புவதில் வரலாற்றின் ஒரு கூறான ஆடை வரலாறும் உதவுகின்றது. இவற்றைப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் இவண் நோக்கலாம்.
பழக்க வழக்கங்கள்
பழக்கம், வழக்கம் எனும் இருசொற்களின் இணைவு இச்சொல். பழக்கம் - பயிற்சி, வழக்கம் - ஒழுக்கம் எனவும்; வழக்கம் - பழக்கம், பொதுவானது எனவும் பொருள்படுகின்றன். இதனடிப்படையில் பழக்க வழக்கம் என்பதனை நோக்க, தனி மனிதனின் பயிற்சி அல்லது ஒழுகும் முறையினைப் பழக்கம் எனவும், இத்தனிமனிதச் செயற்பாடு பொதுமை நிலையில் அதாவது ஒரு குழு அல்லது ஒரு இனம், அல்லது ஒரு மதம் அல்லது ஒரு நாடு என்ற முறையில் பயிலப்படும்பொழுது, வழக்கமெனவும் நின்று, இவை ஒருங்கிணைந்த நிலையில் பழக்கவழக்கமெனச் சுட்டப்படுகின்றன எனலாம். இவை பின்னர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் பொழுது மரபாக மலர்கின்றன.
பழக்க வழக்கங்கள் மனிதன் வரலாற்றுக் காலம் தொடங்கி வேர்விட்டு வளர்ந்து வந்துள்ளன. மனித சமுதாயத்தினரின் வாழ்வோடு இயைந்து இணைந்து வரும் காரணத்தினால் மக்கள் வாழ்வியலில் பிரித்தெடுக்க இயலாத ஒரு நிலையை இவை அடைந்துள்ளன. மனிதனோடு தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இவை தோய்ந்து கிடக்கக் காண்கின்றோம். மாந்தன் உடைக்கு முதன்மை கொடுத்த நிலையில், உடைபற்றிய கல்வியும் இவனது பல்வேறு நடைமுறைகளை எடுத்தியம்புகின்றன.
பொழுதுக்கேற்ப உடுத்தல், சடங்குகளுக்குத் தனியுடை உடுத்தல், தொழிலுக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்ளல், சமுதாய நிலைகளுக்கு ஏற்ப அணிதல் போன்ற பல அடிப்படைகளில் உடுத்தும் நிலையிலும், சூழல்களுக்கேற்ப ஆடைகளைக் கையாளும் தன்மையிலும், இவற்றின் கூறுகள் பொருந்திக் கிடக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் தமிழர் ஆடை வரலாற்று விளக்கங்களில் நின்று, அவர்களின் பழக்க வழக்கங்களில் அமையும் ஆடையின் தாக்கத்தைக் காணலாம்.
1. காலமும் ஆடையும்
ஆடையின் பலவிதப் பயன்பாடுகளில் மனிதனை இயற்கைத் தாக்குதல்களாகிய குளிர், வெப்பம் ஆகியவற்றினின்று பாதுகாப்பதும் ஒன்றாகும்.
முதன்முதலில் மனிதன் தழை, மரவுரி, தோல் போன்றவற்றை உடையாகப் பயன்படுத்தினான். பருத்தி, பட்டு போன்றன தொடர்ந்தன; இன்றும் தொடருகின்றன. இவற்றைப் பல நோக்கு அடிப்படையில் பயன்படுத்திய மனிதன், காலஞ்செல்லச்செல்லத் தான் உடுத்திய உடைகளின் பயன்பாடு, சிறப்பியல்பு, தனித்துவம் ஆகியவற்றையுணர்ந்து, அவற்றை உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் உருவாக்குகின்றான். இவ்வாறு உடல் பாதுகாப்பு எண்ணத்தில் தோன்றியதே காலத்திற்கேற்ப உடையுடுத்தும் பழக்கமாகும்.
எனினும், எல்லா மாந்தரும், இத்தகைய காலத்திற்கேற்ற உடை உடுத்துவதில்லை. உடையில் நாகரிக முதன்மை அடைந்தவர்களும் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தோரும் இதனைத் தங்களுக்கேற்றவாறு அமைத்தனர். சான்றாக இன்றும் ஒரு சில பகுதிகளில் உலகத்தோடு ஒட்ட ஒழுக இயலாது, நாகரிக முதிர்ச்சி பெறாது தனித்து வாழும் மக்கள் இயற்கையின் தாக்குதல்களைப் பொருட்படுத்தாமல் ஆதி மனிதர்களைப்போல இருப்பதைக் கேள்வியுறுகின்றோம்.[1] இந்நிலையில் தமிழர் ஆதியிலேயே நாகரிக முதன்மை பெற்றவர் என்பதை நிறுவும் வகையில், இவர்தம் காலத்திற்கேற்ப ஆடைகளும் அமைந்துள்ளன எனல் பொருத்தமாகும். வெளிப்படையாகவும், உய்த்துணரத்தக்க வகையிலும் இவ்வெண்ணங்கள் இலக்கியத்தில் பரந்து காணப்படுகின்றன.
குளிர் காலம்
தமிழர் போர்க்காலங்களில் மார்பில் கவசமும், கைகளில் உறையும் அணிந்து இருந்தனர். தங்களுடைய இசைக் கருவிகளையும், போர்க்கருவிகளையும் உறையிலிட்டுப் பாதுகாத்தனர் காக்கின்றனர். இவை யாவும் பிற தாக்குதல்களினின்று தாமும் தம் பொருட்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் காரணமாகவே. இதைப் போன்றே குளிரினின்றும் தம்மைக் காத்தனர். பட்டு, மயிர் போன்ற வேற்றிழைகளில் நெய்த ஆடைகள், அரத்தம் போன்ற நிறமூட்டப்பட்ட ஆடைகள், உடைகளை உடுத்திக் கொள்ளும் முறைகள் போன்றன காக்கும் முறைகளாகத் துணைபுரிந்தன.
சங்க மாந்தர் குளிர் காலத்திற்கெனத் தனித்த உடைகள் உடுத்தியதாக அறிய இயலாவிடினும் கார்காலத்தில் போர்த்தித் தம்முடம்பைக் காத்திருப்பர் என்பதனை உய்த்து உணரமுடிகின்றது. பேகன் மயிலுக்குப் போர்வையீந்த செய்தியைப் புறப்பாடல் காட்டும்.
‘மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்தக் கெடா நல்லிசை பேகன்’ எனப்புறம் (145) சுட்டும்.
பனிக்கும் என்று எண்ணிப் படாத்தினைக் கொடுக்கின்றான் என்பதினின்றும் பனிப்பின் போர்த்த வேண்டும் என்ற மனநிலையும், அதற்காகத்தான் பேகன் போர்த்தியிருத்தல் வேண்டும் என்பதும் தெளிவுறுகின்றன.
கார் நாற்பதில் அறியவரும் ஈர்ங்கட்டு (22) என்னும் உடை, கார் காலத்தில் இறுக்கமாக உடுத்தப்பட்டதொரு உடையாக அமைய, உடுத்தும் விதத்தினால் குளிர்ப்பாதுகாப்பு நாடிய தமிழர் மனநிலை வெளிப்படும்.
சிலப்பதிகாரம் நிற உடைகளை யுடுத்தியமையைக் காட்டுகின்றது. கார் காலத்தில் வீழ்பூஞ் சேக்கை மேலினிதிருக்கின்ற மதுரை மகளிரை அரத்தப் பூம்பட்டினை அரையிசை யுடுத்தியவராகக் காட்டுவார் இளங்கோ (14:86). அரத்தப்பட்டு சிவப்பு நிறமுடைய பட்டு; சிவப்பு குளிருக்கு ஏற்ற பாதுகாப்பு அளிக்கக்கூடியது என்பதனை யுணர்ந்து[2] அதற்கேற்பச் செயல்பட்ட திறம் இதனால் விளக்கமுறுகின்றது.
குளிர்ப் பாதுகாப்பில் முதன்மையிடம் பெறுவது இன்றைய நிலையில், மயிராடைகளேயாகும். இச்சிறப்பு அன்றே தமிழரால் உணரப்பட்ட ஒன்று என்பதனை இலக்கியச் சான்றுகள் நிறுவுகின்றன.
சிலப்பதிகாரம், பெருங்கதை, சிந்தாமணி மூன்று இலக்கியங்களிலும் மயிராடை பற்றிய எண்ணங்களைக் காண்கின்றோம்.
சிலப்பதிகாரத்தில்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கை
(5:16-17)
நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகைத் தெரியாப் பன்னூறடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதி
(14-:205-207)
யினையுடைய மதுரையும் இளங்கோவால் சுட்டப்படுகிறது.
மயிராடை பற்றிய எண்ணங்களை இவற்றுள் காண்கின்றோம். பிற விளக்கங்கள் இங்கில்லை யாயினும், பிற்கால இலக்கியங்களை வைத்துநோக்க இம்மயிராடைகளைக் குளிர்காலத்திற்கென, தமிழர் உருவாக்கியிருக்கவேண்டும் எனும் எண்ணம் எழுகின்றது. இம்மயிராடையிலும் எலி மயிராடை மிகச் சிறந்ததாகப் போற்றப் பட்டது.
புலிக் காலமளிப் பொங்கு பட்டசைஇ
எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து
(1:47:178-79)
என்று பிரச்சோதன மன்னனின் பள்ளியறையினை மயிர்ப்படாம், எலிப்பூம்போர்வை இரண்டையும் பயன்படுத்திய நிலையில் சிறப்பிப்பார் கொங்கு வேளிர். பிரச்சோதனனின்
கார் பனித் துளித்துக் கதிர் கண் புதைஇய
வார்பனி மாலை நம் வள நகர் புகுதல் (பெருங். 1,47:157-58)
எனும் கூற்று அது கார் காலம் என்பதை உறுதிப்படுத்தும். எனவே கார் காலத்தில் மயிராடைகள் முக்கியத்துவம் பெற்றமை வெளிப்படை.
சீவக சிந்தாமணி இம் மயிராடையின் சிறப்பாக, குளிர்போக்கும் தன்மையினையும், உடலைப் பாதுகாக்கும் இயல்பினையும் தெளிவாகக் காட்டுகிறது. முன்பனிக் காலத்தில், பூங்கோதை மாதர் பங்கயப் பகைப் பருவம் வந்தது என, எங்குமில்லாத எலிமயிர்த் தொழிலால் ஆன பொங்கு பூம்புகைப் போர்வையினை மேயினார் (2680) எனவும் பின்பனிக் காலத்தில்,
செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர்
அந் நெருப்பளவாய் பொற்கம்பலம்
மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னரொப்பு மில்லவர் களென்பவே
(சீவக. 2686)
போர்வையாக, எழினியாகப் பயன்படுத்தியதுடன் மருத்துவகுணமும் இதற்கமைந்திருந்ததனை நுதிமயிர்த் துகிற் குப்பாயத்தைப் பற்றிய விளக்கம் தெளிவு படுத்தும்.[3]
எலியினது கூர்மையுடைய மயிரினால் செய்த ஆடையாலாகிய சட்டை, எலிமயிராற் செய்த ஆடை மிகுந்த வெப்பம் உடையது; குளிர் நீக்கும் அதனுள் காற்று புகாது என்பதும் மிகவும் மேன்மையுடையது என்பதும் பனிக் காலத்தில் அதனை அணிவது உண்டென்றும் அது கிடைத்தற்கரியது என்றும் சிந்தாமணிப் பாடலுக்கு (819) உ. வே. சாமிநாதையர் அவர்கள் தரும் இவ்விளக்கம், இவ்வாடையினைக் குளிருக்கென்று பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்தும். இக்கருத்துக்கள் காலத்திற்கேற்ப உடையின் இயல்பினை நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்த தமிழர் தன் நுண்ணறிவினையும் வெளிப்படுத்தும். இக்கருத்திற்கு அரணாக, காஞ்சி புராணம், எலிமயிர்ப் போர்வையைக் குளிர்காலத்தில் அரைக் கணமும் கழித்திராத மக்களைச் சுட்டும்.[4]
இன்று தமிழரில் சாதாரண நிலை மாந்தர் போர்வையையும் உயர்ந்தோர் போர்வையுடன் தனித்த கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
கோடைக் காலம்
கோடைக்கெனத் தமிழர் தனித்த உடை உடுத்தியதாக இலக்கியக் குறிப்புகள் சுட்டவில்லை. குளிருக்கென்று தனித்த உடைகளை உடுத்தியமை கொண்டு கோடையில் உடுத்தியன, நம் நாடு வெப்பநாடு ஆகையால் அதற்கு ஏற்ற வண்ணமே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழர் உடைகளில் சிறப்பிடம் பெற்று அதிகமாகக் கையாளப்பட்ட, படும் பருத்தியாடைகள் கோடைக்கு ஏற்றன என்பது கண்கூடு. இப்பருத்தி ஆடைகள் நீரையுறிஞ்சி வெப்பத்தை வெளிப்போக்கும் தன்மையன. இதனை அன்றே தமிழர் உணர்ந்து தன் உடை வகைகளுள் பருத்திக்கு முதலிடம் கொடுத்திருக்கின்றனர்.
அரவுரியன்ன அறுவையாகவும், நுண்ணூல் பூந்துகிலாகவும் இவற்றை மிகவும் மென்மையுடையனவாகத் தம் கை வண்ணத்தால் அமைத்து, உடுத்தினர். சாதாரணமாகப் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்திய இவர்கள், சிலநேரங்களில் பட்டாடையையும் அணிந்தமை வெப்பகாலத்திற்கும் பட்டாடையும் ஏற்றதே என்பதை யுணர்ந்திருந்த காரணத்தால் இருக்கலாம்.[5] ஆயின் பருத்தியாடை போன்று அதிகமான மக்கள் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
இவற்றை நோக்க, வெப்ப காலத்தில் மேனிலை மாந்தர் பருத்தி, பட்டு இரண்டினையும் உடுத்த, சாதாரணமானவர்கள் பருத்தியுடையினை உடுத்தியிருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. தமிழரே அன்றி இந்திய மக்கள் அனைவரும் இவ்வடிப்படையில் உடுத்தியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தை வால்டர் இம்பெர் அவர்களின் கருத்து நல்குகிறது.[6]
சிறுபொழுதுக்கேற்ப உடை
பெரும் பொழுதுக்கு மட்டுமல்லாது, சிறுபொழுதுகளுக்குச் சிறப்புஉடை உடுத்தும் வழக்கினையும் தமிழர் கொண்டிருந்தனர்.
இரவில், பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மங்கையரைப் பட்டினப்பாலை (106-7) பகரும். பல்வகைப்பட்ட கோலம் கோடலை இலக்கியம் வழி காணும் நாம் இரவிற்கோர் கோலம் கொடியிடையார் கொள்ளும் தன்மையைச் சிலம்பும் (9:4) சுட்டக் காணலாம். இதற்கு அடியார்க்கு நல்லார் இரவுக்கு ஏற்ப நொய்யன அணிந்து எனப் பொருளுரைப்பர். இவற்றால் மென்மையான ஆடைகளாகவும், இரவுப்பொழுது உடைகள் அமைந்திருந்தன என்பது பெறப்படும். இன்று சிறுபொழுதுக்கு என்று தனித்த உடைகள் உடுத்துவதில் பல்வித வளர்ச்சி நிலைகளைக் காண்கின்றோம்.
இவ்வாறு பெரும்பொழுது, சிறுபொழுது எனக் காலங்கருதி உடை அணிந்த மக்கள் யார் எனப் பார்க்கும்போது செல்வர் பற்றிய எண்ணமே அதிகமாக அமைவதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் அன்றே தொடங்கிவிட்டன என்னும் உண்மையும் புலனாகும். ஏழைகளே அன்றி, துன்புற்ற மாந்தர், துறவிகள் இவர்களைப் பார்க்கும்போது இச்சிறப்பினைக் காண இயலவில்லை. எனவே வளமுள்ளோர் தங்கட்கு ஏற்ப உடுத்தினர்; ஏழைகள் துன்புற்றோர் துறவிகள் பொருளாதார நிலை, மனநிலை காரணமாகக் காலத்தைப் பொருட்படுத்தவில்லை எனக் கருதலாம். இன்றும் இந்நிலையே காணப்படுவது கண்கூடு.
சடங்குக் சூழலும் ஆடையும்
திருப்பு முனைகள் நாவலில் மட்டுமல்ல; மனித வாழ்க்கையிலும் பல உள. அவை நாவலுக்கு எவ்வளவு சுவையூட்டுகிறதோ அதைப்போன்று மனித வாழ்க்கைக்கும் எண்சுவைகளையும் ஊட்ட வல்லன. மனித மனம் இத்தகைய திருப்பு முனைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டும் சோர்வுடன் தாங்கிக் கொண்டும் தொடர்ந்து செயல்படுகின்றது. பிறப்பு, மணம், துறவு, இறப்பு என்பனவற்றை இதனுள் அடக்கலாம். இவற்றுள் இடம் பெறும் இன்றியமையா நிகழ்வுகளைச் ‘சடங்குகள்’ என்னும் பெயரால் அழைக்கின்றோம்.
இச்சடங்குகள் அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வழங்கிவருவன, இன, மத, தேச மாறுபாட்டிற்கு ஏற்ப இவை மாறுபடுமே தவிர இல்லாமற் போகாது. ஓரிடத்தில் உள்ள சடங்குகளே கால மாற்றம், நாகரிகமாற்றம், எண்ண வளர்ச்சி, பிற நாட்டார் தொடர்பு போன்ற பல கூறுகட்கு ஏற்ப மாற்று வடிவம் கொள்ளலும் இயல்பு.சடங்குகளில் மனிதத் தோற்றத்திற்கு முதலிடம் அளிக்கிறோம். இதனுள்ளும் முதன்மை பெறுவது ஆடை எனில் மிகையில்லை. ஒவ்வொரு வகைச் சடங்கிற்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆடையுடுத்துகின்றனர். சடங்குகளில் பங்குபெறுவோரின் ஆடையினைக் கண்டவுடனேயே அவர் இன்ன சடங்கில் ஈடுபட்டுள்ளார் என்று ஊகிக்கலாம். தமிழரின் சடங்குச் சூழல்களில் ஆடை பெற்ற இடத்தினை இங்குக் காணலாம்.
பிறப்பு
மழலையின் பிறப்பினை யாவரும் எதிர்நோக்கி அதனைக் கொண்டாடல் மரபு. பிறப்பு நாளே அன்றி, பின்னர் வரும் பிறந்த நாட்களையும் கொண்டாடுவர்.
சங்க இலக்கியத்தில் பிறந்த நாள் பற்றிக் குறிப்பேதும் இல்லை. ஆயின் தொல்காப்பியரின்,
சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள் வயிற் பெருமங்கலமும்
(புறத். 36)
என்னும் அடிக்கு உரை எழுதப்போந்த நச்சினார்க்கினியர் அதனை, ‘மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி என்ப’ என்று பிறந்த நாளில் வெள்ளணி அணிதலைக் குறிப்பிடுகின்றார்.
இவர் தம் சீவக சிந்தாமணி உரையிலும் இக்கருத்தையே உறுதிப்படுத்தும் வண்ணம் ‘வெள்ளணி அணிந்த ஞான்றே’ (614) என்னும் தொடருக்குப் பிறந்த நாள் ஒப்பனை வெள்ளணி என்கின்றார். இதற்கு உ.வே.சா. அவர்களின், பிறந்த நாளில் வெள்ளணி அணிதல் மரபாகலின் என்ற கருத்தும் தோக்கத்தக்கது. ‘அடித்தளை நீக்கும் வெள்ளணி’ என்ற சிலப்பதிகார (27:229) அடிக்கும் இதனையே சுட்டுவார்.
கலிங்கத்துப் பரணியிலும் இவ்வெண்ணத்தைக் காண்கின்றோம்.
எற்றைப் பகலினும் வெள்ளணி நாள்
இருநிலப் பாவை நிழலுற்றக்
கொற்றக் குடையினைப் பாடீரே (533)
அம்பிகாபதிக் கோவை குழந்தை பிறந்தமையைத் தலைவனிடம் தெரிவிக்க, வெள்ளணி அணிந்து சேடியை அனுப்பியதாகக் காட்டும் (463).
இவ்வெண்ணங்கள் அனைத்தும் பிறந்த நாளுடன் வெள்ளணி அணிதல் தொடர்புடையதாக இருந்திருக்கின்றது என்பதனை உணர்த்த வல்லன. சில சிந்தனைகளையும் இங்கு இவை எழுப்புகின்றன.
தொல்காப்பியத்திற்கு உரையாசிரியரின் உரைதான் வெள்ளணி நாள் என்பதைக் குறிப்பிடுகின்றதே தவிர, வெள்ளணி யுடுத்திய தன்மை நேரடியாக அதனுள் இல்லை. சங்கத் தமிழரிடமும் இவ்வெண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் முதலில் சுட்டப்படக் காண்கின்றோம். பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் வெள்ளணியை மங்கலமெனக் கருதியிருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருவன. எனவே இவ்விலக்கியங்களை வைத்து நோக்க வெண்மையை மங்கலத்துக்குரியதாகச் சமணர்கள் கருதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பின்னர் பண்பாட்டுக் கலப்பு காரணமாகத் தமிழரும் பிறந்தநாளில் மங்கலமென்று வெண்மையுடுத்தத் தொடங்கி இருக்கலாம். எனவேதான் நச்சினார்க்கினியரின் உரையில் இவ்வெண்ணம் வெளிப்படவும், கலிங்கத்துப்பரணி, அம்பிகாபதிக் கோவை இரண்டும் இவை தொடர்பான செய்திகளைத் தரவும் முடிகின்றது.
வெள்ளணி பற்றிய எண்ணங்களை நோக்க, அம்பிகாபதிக் கோவையில் தவிர ஏனையவற்றில் மகளிர் பற்றிய குறிப்புகள் இல்லை. இலக்கிய உத்தி என்ற நிலையில் அம்பிகாபதிக் கோவை இதனை மகளிர் உடையாகக் காட்டியிருக்கலாம். எனவே ஆடவர் பிறந்த நாளில் வெள்ளணி அணிதலை மரபாகக்கொண்டு இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. மகளிர் இன்றும் வெண்மையை மங்கல காரியங்கட்குப் பயன்படுத்தாமையும், ஆடவர் இன்று வெண்ணிற ஆடையுடுத்தலையும் ஈண்டு இணைத்து நோக்கலாம்.சங்க காலம் முதல் வெண்மையைத் தூய்மை என்ற எண்ணத்திலேயே தமிழர் பயன்படுத்தினர். இன்றும் தமிழர் வெண்மையைத் தூய்மை என்று எண்ணுகின்றனரே தவிர மங்கலம் என்று எண்ணுவது இல்லை என்றே சொல்லவேண்டும். எனவே வெண்மை மங்கலமென்பது பிற மதத்தார் எண்ணம் என்றும் அதன் தாக்கம் தமிழரிடமும் காணப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.
மணம்
மணத்தில் புத்தாடையுடுத்தும் வழக்கம் இன்று நேற்றல்ல; பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்து வரும் வழக்கமாகும். இக்கருத்தினை இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. சங்க காலத்து மணமகள்,
கோடிக் கலிங்கத்து ஒடுங்கிய நிலையிலும் (புறம். 86)
முருங்காக் கலிங்கத்தை முழுவதும் வளைஇயும் (136)
காணப்படுகிறாள். பெருங்கதையும், சிந்தாமணியும், புதுத்துகில்களையும், கலிங்கத்தையும், பட்டினையும் மணமக்களின் ஆடையாக நவில்கின்றன. சூளாமணியில் மணமகள் சயம்பவை கோடி மடியுடன் காட்டப்படுகின்றாள் (1093).
இராமன் மணப் பொழுதிற்கு,
நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தார்
உணர்வினின் ஒளிதிகழ் உத்தரீயம் தான்
தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே
(1304)
என்னும் நிலையில் உத்தரீயம் அணிந்தமையினையும்,
மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண் உறு கருங்கடல் அதனைக் கைவளர்
தண்நிறப் பாற்கடல் தழீஇயது ஆம் என
வெண் நிறப்பட்டு ஒளி விளங்கச் சாத்தியே
(பால. 1307)
என்று வெண்ணிறப் பட்டு அணிந்தமையினையும் அழகுற எடுத்தியம்புவர் கம்பர்.
மணமக்களே அன்றி, மணப் பொழுதில் பிறர் அணிந்தமையினையும் சில பாடல்கள் விளக்குகின்றன.பெருங்கதையில் அந்தணர், வள்ளுவன் வெண்டுகில் தானையயராகக் (2.4:147, 2:12:34.6) காட்சி தருகின்றனர். சீதை இராமன் மணத்தில் நகரமகளிர், சித்திரம் நிரை தோயும் செந்துகிலைப் புனைந்து (1280) தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வாறு புத்தாடைகளைச் சொல்லிச் செல்லும் தன்மையுடன், தூஉடைப் பொலிந்து நிற்கும் தலைவியைக் காட்டும் (புறம். 136) காட்சியும், மேயுடை அணிந்து மணத்தில் பங்கு கொள்ளும் கலி பற்றிய எண்ணமும் (சூளா. 1098) மணத்தில் பங்கு கொள்வார் உடைகள் சிறப்பாக, தூய்மையாக இருத்தல் வேண்டும் என்று எண்ணிய தமிழர் மனநிலையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
இன்று மணத்திற்குரிய ஆடைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஆயின் சிறந்த ஆடைகளாக இருக்கின்றன. தமிழர் வெண்ணிற ஆடையையும் கறுத்த ஆடையையும் மணத்தில் கொள்வது இல்லை. மேனாட்டார் தொடர்பு காரணமாக,[7] தமிழ் நாட்டில் கிறித்தவர்கள் வெண்மையை உடுத்துகின்ற பழக்கம் இன்று உண்டு.
இந்தியாவின் வடக்கே செல்லச் செல்லச் சிவப்பு நிறத்திற்குன் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.[8] இதனைக் கொண்டு இந்தியரின் மண ஆடையே சிவப்பு என்பர் தாரா அலி பெய்க் அவர்கள்.[9]
இக்கருத்துடன், கம்பர் மங்கலக் கோலமெனச் சிவப்பினைச் சுட்டுவதும் சுட்டத்தக்கது (9571) தமிழர் இவ்வெண்ணத்தை அன்று கொண்டு இருந்திருக்கலாம் அல்லது வடநாட்டுத் தாக்கம் காரணமாக, தமிழருக்கும் கம்பர் ஏற்றிக் கூறியிருக்கலாம் என்பது இவண் தோன்றும் எண்ணமாகும்.
தூய்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், புத்தாடையுடுத்துதல் மணமக்களுக்கும் பிறருக்கும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை அளிக்க வல்லன என்ற எண்ணமும் இம்மரபு இன்றும் தொடரக் காரணமாக இருக்கலாம்.
மண ஆடைகள் பற்றிய இக்கருத்துகள் மரபாகப் பயின்றுவரும் புத்தாடை பற்றிய எண்ணத்துடன், ஒவ்வொரு காலத்திலும் சிறந்திருந்த ஆடைகள் என்ன என்பதையும் உணர்த்த வல்லன. காட்டாக, சங்க காலத்துக் கலிங்கமும், பின்னர் துகில், பட்டு இவற்றையும் நாம் காண்கின்றோம். இன்று பலவகையான பட்டுக்களே முதலிடம் பெறுகின்றன.
மரணம்
மரணத் துன்பத்தில் இறந்தவர்க்கு உடுப்பித்தல், மற்றவர் உடுத்தல் என்ற இரு நிலையுண்டு.
மரணமடைந்தவர்க்குக் கோடி எடுத்துப் போடல் மரபாகப்பயின்று வருமொரு பழக்கம். கோடி எடுத்துப் போடல் என்றாலே இப்பொருளை விளக்கும் தன்மை இன்றுநாம் உணரக்கூடிய ஒன்று.
கால்கழிக் கட்டிலிற் கிடப்பித்துத்
தூவெள்ளறுவை போர்க்கும் நிலை
(புறம். 286)
பற்றி சங்கப்பா பகரும்.
சூளாமணியில் அச்சுவக் கிரீவன் இறக்க,
பஞ்சும் துகிலும் பூம்பட்டும்
பாயப்பள்ளிப் படுத்ததன் மேல்
வழங்குச் செந்தீ வாய்ப் பெய்தார்
(1483)
என அவனது இறுதிச் சடங்கு பேசப்படுகின்றது.
நாலாயிர திவ்விய பிரபந்தம் ஒப்பாரிப் பாடலுடன் கோடி மூடியமையை,
பாடிப்பாடி யோர் பாடையிலிட்டுக்
கோடி மூடி
(பெரி. திரு. 4.5:8)
இன்று இறந்தவர் மேல் புத்தாடை அணியும் வழக்கு எல்லா மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது. பழங்குடிகளிடமும் காணும் இவ்வழக்கம் இம்மரபின் பழமையை உணர்த்துவதாகும்.[11]
எகிப்தியர்கள், இறந்தவர் மேல் சணல் தவிர வேறு ஆடை போர்த்தல் தூய்மை அற்றது. செடியினின்றும் கிடைக்கும் ஆடைகளே தூய்மையானது என்னும் நம்பிக்கையுடன் சணல் ஆடையைப் போர்த்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை தெரிய வருகின்றது.[12]
இதனை நோக்க தமிழரும், இறந்தோர் இறை நிலை அடைந்துவிட்டவர்கள், எனவே அவர்கள் மேல் தூய்மையான ஆடையே போர்த்தல் வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இப்பழக்கத்தினை யுருவாக்கியிருக்கலாம். அதுவே இன்று மரபாக வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மணிமேகலையில் பண்டங்கள் உள்ளீடு பெற்ற அறுவைகள் சுடுகாட்டில் சிந்திக் கிடத்தலைப் பற்றியதொரு எண்ணம் (6:93) அமைகின்றது. எனவே புத்தாடை போர்த்தல் மட்டுமல்லாது அவர்கள் விரும்பிய பண்டங்களையும் அவர்களுடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் என்பது இதனால் தெரிய வருகின்றது. இன்று பழங்குடிகளில் சிலர் பிணத்துடன் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களையும் வைக்கின்றனர் என்று காண்கின்றோம்.[13] எனவே இறந்தவருடன் சில பொருட்களையும் வைத்தல் என்பது பொது நிலையில் இங்கே வெளிப்படும் எண்ணம். ஆயின் பின்னைய எண்ணம் வெளிப்படையாக அமைய, மணிமேகலை, சிந்திக் கிடத்தலை இயம்பும் விதம் விளக்கமாகவில்லை.
நீலகேசியிலும் காட்டில் கூறை காணப்படும் நிலைமை பேசப்படுகின்றது.
வெள்ளின் மாலையும் விரிந்த வெண்டலை கரும் கரிந்த
கொள்ளி மாலையும் கொடிபடு கூறையுமகலும்
பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து
கள்ளியாரிடைக் கலந்ததோர் தோற்றமும் கடிதே
(30)
கொடிபடு கூறை என்னும் இதன் பொருள் விளக்கமாகவில்லை.
இன்று, இறந்தவர் நினைவாக அவரது ஆடையைப் பாதுகாக்கும் பழக்கத்தினைத் தமிழர் சிலர் கொண்டுள்ளனர்.
இறப்பில் பிறர் உடுத்தும் உடையினை இரு பிரிவில் நோக்கலாம்.
1. மனைவியர் உடுத்திய ஆடை.[14]
2. உறவினர் ஆடை.
உறவினர் ஆடை
உணர்வுகளின் இணக்கமே அன்பின் திறவுகோல். அன்பானவர்கள் பிரியின் தோன்றுவது அவலமே.
மரணச் சடங்கில் உறவு நிலைக்கேற்ப உடுத்தும் பழக்கத்தினர் தமிழர். மனைவியின் நிலை இரங்கத் தக்கது என்னும் நிலையில் தனித்த உடையாகவே அமைய, பிற உறவினர் உடுத்தியனவும் சிறந்தவையாக இருந்திருக்க முடியாது என்பதை இன்றைய நிலையும் வலியுறுத்தும்.சிந்தாமணி மரணத் துன்பத்தில் கறுப்பு உடையினை உறவினர் உடுத்தும் வழக்கு இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தருகின்றது. கலுழவேகன் தன் மகனிறக்க இறுதிச்சடங்கு புரியச் சுடுகாட்டிற்கு வரும்போது காளக உடையினனாகக் (320) காட்சி அளிக்கின்றான். காளக உடை கரிய உடை எனும் நிலையில் கறுத்த ஆடையினைப் பற்றிய எண்ணம் ஈண்டு அமைகின்றது. மேலும் வெண்மையை மங்கலமெனக் கருதிய சமண மதத்தார் கறுப்பினை அமங்கலமாகக் கருதியிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. தமிழர் இத்தகைய முறையில் உடுத்தியதாக எண்ணங்கள் இல்லை. எனினும் சில பாடல்கள்வழி, பொது நிலையில் பிரிவில் ஆடை சிறப்பாக அமையவில்லை என்பதினின்றும் மரணத்திலும் உறவினர் சிறந்த ஆடையுடுத்தியிரார் என்றதொரு உணர்வினை நாம் கொள்ள முடிகின்றது.
தன் தந்தையின் பிரிவை எண்ணி வருந்தும் அன்னி மிஞிலியைப் பற்றிய எண்ணமும் (புறம். 262) தமிழர் வாலிது உடாமைதான் அதாவது தூய்மையான சிறந்த ஆடைகளையுடாமைதான் காணப்பட்டதே தவிர, கறுப்பு உடையையுடுத்தும் வழக்கம் இல்லை என்பதை யுறுதிப்படுத்துமாறு அமைகிறது.
தலைவன் வினைவயிற் பிரிய, லாடியிருக்கும் நெடுநல்வாடைத் தலைவியின் கோலமும், அதாவது,
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல்
அம்மாசூர்ந்த அவிர் நூற் கலிங்கமொடு
(நெடுநல்-145)
காணப்படும் தன்மையும் இதற்கு இணக்கமானதொரு எண்ணமாகும். ஈண்டும் பிரிவில் வாலிது உடாமல் தலைவனை எண்ணி இருக்கின்றாள் தலைவி.
இன்றைய நிலையில் பிறமதத் தாக்கத்தின் விளைவாகக் கிறித்தவர்கள் கறுத்த உடை உடுத்துகின்றனர். தமிழரில் ஒரு சிலர் ஒரு சிறு கறுப்புத்துணியைத் துக்கத்தின் அடையாளமாகத் தங்கள் உடையில் பிணைத்திருப்பதும் உண்டு. ரோமானியர்கள் மரண துக்கத்தில் கறுப்பு டோகா அணிந்தனர் என்பதைக் கலைக்களஞ்சியம் சுட்டும்.
எனவே அன்று முதல் இன்றுவரை துக்கத்தில் கறுப்பு உடையைப்பற்றிய உணர்வு பிறர் கருத்தாகத்தான் காண முடிகின்றதே தவிர தமிழர் எண்ணமாகக் கொள்ள இயலவில்லை.இன்றும் இந்துக்களைப் பொறுத்தவரையில் சிறந்த புது ஆடைகளைத்தான் உடுத்தாரே தவிர கறுப்பு உடுத்தல் இல்லை. கறுப்பு ஆடையை அமங்கலம் என்று மங்கலக் காரியங்கட்கு பயன்படுத்தாமை தமிழரிடம் காணப்படுவதாகும். கறுப்பு அமங்கலம் என்பது இந்தியரிடம் காணப்படும் பொதுவானதொரு எண்ணமாகவும் சுட்டுவர்.[15]
தகுதியும் ஆடையும்
தகுதிக்கேற்ப உடையுடுத்தல் பண்டு தொட்டே தமிழரிடம் காணப்படும் வழக்கம். உடையின் தரத்திலும், உடையுடுத்தும் முறையிலும் இம்மாறுபாடுகள் பலவற்றை இலக்கியச் சான்றுகள் விளக்குகின்றன. அறிஞர் எண்ணமும் இதற்கு ஒத்தமைகின்றது.[16]
தகுதி என நோக்கச் செல்வத் தகுதி, பதவித் தகுதி, இனத் தகுதி, என்னும் நிலையிலும், விதவைகள், துறவிகள் நிலை என்றும் தகுதிக்கேற்ற உடையினை நோக்கலாம்.
1. செல்வம்
மேனிலை மாந்தர் என்ற நிலையில் நோக்க எல்லா இலக்கியங்களிலுமே மிகச் சிறந்த உடையுடுத்திய நிலையில் காட்டப்படுகின்றனர். இலக்கியம் வாயிலாக அறியவரும் உடை வகைகளுள் உயர்ந்தன அனைத்துமே உயர்நிலை மாந்தரின் ஆடையாகவே வரலாற்று அடிப்படையில் பார்க்கும்போது தெரிய வருகின்றது. ஆயின் தாழ்ந்த மக்களின் உடையாகச் சாதாரண ஆடைகளே பேசப்படுகின்றன. புரவலன் கொடையும் பாடி நிற்கும் புலவரின் நிலையும் சங்க இலக்கியத்தில் காணப்படும் தன்மைகள் இதனை விளக்கச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.‘செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற் கண் பொருபுகூஉம் ஒண் பூங் கலிங்கத்தைச் செல்வரும்’ (மது. 431-35), சில்பூங் கலிங்கத்தை யுடுத்திய செல்வ மகளும் (கலித். 55) காட்டப்பட, கருந்துவராடை உடுத்திய இடையனையும் (கலித். 108), மாசொடு குறைந்த உடுக்கையளாக ஏழைப்பெண்ணும் காட்டப்படல்போன்ற பல நிலைகள் அமைகின்றன. இந்நிலையே இன்றுவரையிலும் தொடரும் ஒன்று. எனவே செல்வத்தில் உயர்ந்தோர் சிறப்பு ஆடைகளையும், இல்லாதார் இழிந்த ஆடைகளையும் உடுத்துதல் செல்வத் தகுதியின் விளைவே என்பது வெளிப்படை. செல்வத்தை அளவிடும் கருவிகளுள் ஆடையும் ஒன்று என்பது இதனால் புலனாகின்றது.
2. பதவி
புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்புடுத்த நெடு நுண்ணாடையர்
தானை மடக்கா மானமாந்தராக
(1.32:63—65)
அரசன் முன் நிற்கும் கணக்கரையும், திணைத் தொழிலாளரையும் காட்டும் பெருங்கதை.
சிந்தாமணி உலக மன்னவன் திருநாளொளி முடி அணிந்து நின்றவர் போற் பூத்தன கோங்கம் என்றும் பைந்துகின் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போற் பூத்தன மரவம் (1568) என்று உவமை வாயிலாகப் பதவிக்கேற்ற உடையினைச் சுட்டும். கோங்கம் பலவும், சக்கரவர்த்தி முடிசூடும் நாளிலே முடிசூடிச் சேவிக்கும் அரசரைப் போலே பூத்தன; மரவம் மயிர்க்கட்டு கட்டி அவ்வரசர் பின்னேதிரியும் சட்டையையுடைய மிலேச்சரைப்போலச் சேரப் பூத்தன என்ற உரை இதனை விளக்க வல்லது.
கம்பன் பல இடங்களில் தகுதிக்கேற்ற உடையின் தன்மையினை இயம்புவான். உடுத்தும் முறையில் ஈண்டு பெரும்பாலானவை அமைகின்றன.
இராவணன் முன்னால் நிற்கும் யமன் சேலையாற் வாய்புதைத்தான் போன்று (ஆரணிய. 570) அனுமனும் சில இடங்களில் காட்சி தருகின்றான்.
வணங்கி நாணி
வாய்புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பன்
(10516)
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியான்
(6576)
எனவும் வாயினை மறைத்துக்கொண்டும், ஆடையினை ஒதுக்கிக்கொண்டும் நிற்கும் நிலையினைக் காண்கின்றோம்.
இவ்வெண்ணம் கம்பன் காலத்தில் அல்ல; தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கக் கூடும் என்பதைப் பேராசிரியர் உரை உணர்த்தும். ‘அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும் தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின’ (தொல்.பேரா. 12) என்று அடக்கம் என்பதற்கு உரிய இயல்புகளுள் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடங்கும் என்று உரைப்பர்.
இக்காட்டுகளை நோக்கத் தன்னைவிடத் தகுதியுடையோருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பு காரணமாகத் தமிழர் இவ்வழக்கினைக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியோர் அவையுள் ஆடை இகவார் என்ற நீதி நூற்கருத்தும் (ஏலாதி. 75) இதனோடு ஒத்ததே.
இனம்
இனத்திற்கு ஏற்ப அதாவது சாதிப் பகுப்பிற்கு ஏற்ற உடையும் இருந்திருக்கலாம் என்பதைச் சில எண்ணங்கள் தெளிவு படுத்துகின்றன. சிலப்பதிகாரத்தில் ‘பொங்கொளி யரத்தப் பூம்பட்டுடையினனாக அரசபூதமும்’ (22:46), உரைசால் பொன்னிறம் கொண்ட உடையினனாக வணிகபூதமும் (22:67), காழகம் செறிந்த வுடையினனாக வேளாண் பூதமும் (22:91) என இனத்திற்கேற்பப் பூதங்களின் உடை வேறுபாட்டைச் சுட்டுவார் இளங்கோ. வெளிப்படையாக இனங்களின் உடைமாறுபாடு விளங்காவிடினும் குறிப்பாகச் சுட்டுவதாக இதனைக் கொள்ளலாம்.
ஏனோர் பிறர்க்கும் இவையென வகுத்த
அணியுமாடையு மணியுநல்கி
(5.4:93-94)
சோழர் கல்வெட்டில் இடம்பெறும், ‘சிறு விளக்குகளும் பானைகளுள் செய்து விற்கும் குயவர்கள் ஒரு மேலாடை அணிந்து கொள்ளலாம்; இடையர்கள் இறந்தவர்கள் மேல் பச்சைப் பட்டு, புலியூர்ப்பட்டு போன்றவற்றைப் போர்த்திக் கொள்ளலாம். என்ற உரிமைகளும்[17], தோள்சீலைப் போராட்டம் நடத்தி நாடார் வென்ற பிற்காலச் சான்றும்[18] சாதிப்பகுப்பிற்கு ஏற்ற முறையில் உடை வகையில் சட்ட திட்டங்களையும் தமிழர் கொண்டிருந்தனர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இச்சட்ட திட்டங்கள் பழங்காலத்திலேயே உலகம் முழுமையும் காணப்பட்டது.[19] ஆடைகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டன.[20] இவற்றுடன் தமிழர் நிலையை ஒப்பிட, பிற்காலத்தில்தான் சட்டம் என்னும் நிலையில் இவ்வெண்ணங்களைக் காணினும் ஆதிமுதலே வரன்முறைகள் இருந்துள்ளன என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இவற்றைத் தவிர வயதில் மூத்தோர்க்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் தமிழரிடையே இருந்தமையினைச் சில எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன.நீதி இலக்கியமாகிய ஆசாரக் கோவை,
மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்துந் தாளிசைப்புங்
காட்டுளே யாயினும் பழித்தாரமாந்தம்மின்
மூத்த உளவாகலான்.
(91)
என்கின்றது.
காட்டில் நடந்து செல்லும்போது தம்மினும் மூத்த மரங்கள் உளவாகலான் போர்த்துச் செல்லல்கூடாது என்னும் இதன் கருத்து தம்மினும் வயதில் முதிர்ந்த மாந்தர்க்கு மதிப்பு கொடுக்கும் பொருட்டுப் போர்வை போர்த்தலில்லா தன்னமயை இயம்புகின்றது.
நீலகேசியுரையின் கண்ணும் இத்தகையதொரு எண்ணத்தினைக் காண்கின்றோம்.
இனி, துவராடை போர்ப்பது நடுநாட்டினர் வழக்கமன்றோ? இந்தாட்டில் மூத்தார் முன்னிலையோர் போர்வை வாங்குதல் போல என்னை?
மூத்தார்முன் மத்தியத்தார்போற் போர்வை போர்த்திட்டான்
வாய்த்திரா வகை வேண்டித்துவர் துன்னம் வகுத்திட்டான்
என்பதாகலின் (நீலகேசி உரை 190).
எனவே இவ்வுரையின்படி இத்தகையதொரு முறையில் வயதில் முதிர்ந்தோர்க்கு மதிப்புக்கொடுக்கும் இயல்பு காலங்காலமாகத் தமிழரிடம் காணப்பட்டதொரு பழக்க வழக்கமாகும் என்பதனை உணர முடிகின்றது.
கைம்பெண்டிர்
தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(குறள். 55)
இத்தகைய அவளது பெரும் சிறப்பு அவள் கணவனை இழந்த நாளிலேயே விடைபெற்றுவிடுகின்றது. கைம்பெண்டிரின் நிலை மிகவும் இரங்கத்தக்கதொன்று என்பது தமிழர் சமுதாயத்தின் அன்று முதல் இன்றைய வரலாறுவரையிலும் பார்க்கத் தெளிவுறும்.
அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ் போனல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்தட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரற் பெய் பாயின்று வதியும்
உயவர் பெண்டிர்
(புறம். 246)
என்னும் பெருங்கோப்பெண்டின் உரை, கைம்மை மகளிரின் அவல வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் சிறப்பானதொரு சான்றாகும். சமுதாய மதிப்பினைப் பெறாத நிலையில் இவர்கள் தான் முன்பு உடுத்திய ஆம்பலின் அல்லியை உண்டும், நூல்நூற்றுப் பிழைத்ததாகவும் (புறம். 125) மேலும் சில எண்ணங்களைக் காண்கின்றோம்.
இதனுடன், தலைவனுடன் இணைந்து வாழும் மகளிர் சிறந்த உடைகளை யுடுத்தியும், பல்வகை அழகுக் கோலங்களால் அதாவது சந்தனம் பூசுதல், தொய்யில் எழுதுதல் போன்றவற்றால் தங்களை அழகு படுத்தியும் கொண்டனர். எதிராக விதவைகள் இவற்றையெல்லாம் இழந்து காட்சி தருகின்றனர். இக்கோலத்தில் அவர்களின் ஆடை, எத்தன்மையில் இருந்தது என்பதையும் சில காட்டுகள் உணர்த்துகின்றன.
ஆர்கொலோ உரை செய்தார் என்று
அருள் வர சீற்றம் அஃக
பார்குலாம் எழு வெண் திங்கள்
பகல் வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை
இறைமுகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல் மார்பன்
தாயரை நினைத்து நைந்தான்
(கம்ப. 4424)
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்
(கம்ப. 4425)
என்கின்றான். ஈண்டு, மங்கல அணியை யிழந்து, அழகு செய்யப்படாத தனங்களைக் கழுத்தொடு மறையும்படியாகப் போர்த்திய நிலையில் தாரை அமைகின்றாள். பல மங்கலக் கோலங்களை எல்லாம் அவள் இழந்து காட்சி தருகின்றாள். மங்கல அணி இல்லை. மணி அணிவு இல்லை. கோதை இல்லை. மார்பில் குங்குமம் சாந்தம் பூசவில்லை. ஆயின் மார்பை மறைத்துப் போர்த்தியுள்ளாள் என்னும் காட்சி கைம்பெண்டிரின் கோலத்தினைத் தெள்ளத் தெளிவாக நம்முன் படம்பிடித்துக் காட்டுகின்றது.
எனவே கைம்பெண்டிர், தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளும் வழக்கினைக் கொண்டிருந்தனர் என்பது ஈண்டு தெளிவாகின்றது.
நறுந்தொகைப் பாடல் ஒன்றில் உடுத்த ஆடை கோடியாக இருக்க, முடித்த கூந்தலை விரிக்கும் நிலையைக் (56) காட்டுவார் கவிஞர்.
இங்கு, விதவைகள் உடுத்திய ஆடை கோடியாகக் காட்டப்படுகின்றது. கோடி என்பது புத்தாடையைக் குறிக்கும் சொல்லாகும். எனவே மனைவி புத்தாடை அணிந்து காணப்படுகின்றாள் என்னும் பொருள் அமைகின்றது. கணவனை இழந்த மனைவியின் நிலை துன்பிற்குரியதொன்றாகும். இத்தகைய நாளில் புத்தாடை உடுத்தல் என்பது உறுதியாகச் சிறந்த ஆடை என்னும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வேறு பொருளே அமைந்திருக்க வேண்டும்.இன்று ‘கோடி’ என்னும் சொல், வெளுக்காத, வெண்ணிற ஆடையைக் குறித்தும் வழங்குகின்றது. ‘கோடி நிறம்’ என்றும் இவ்வண்ணத்தைக் குறிப்பிடுகின்றோம். எனவே இப்பொருள், சூழல் கொண்டு பார்க்க, வெண்ணிற ஆடையையே ஈண்டு கோடி என்னும் சொல் குறித்திருக்க வேண்டும் எனவும், விதவைகள் வெள்ளையாடை யுடுத்தல் அன்றே தொடங்கிவிட்டதொரு மரபு எனவும், கொள்ளல் பொருத்தமானதாகும்.
இன்று விதவைகள் வெண்ணிற ஆடையுடுத்தல் பற்றிய எண்ணம் தமிழரிடையே பரவலாக அமையினும், ஒரு சில இடங்களில் தான் இப்பழக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கக் காண்கின்றோம். சில சமுதாயததினரிடையே, கணவனை இழந்த மனைவிக்கு, அவளது மருமகன் முறையுள்ளோர் வெள்ளையுடை எடுத்துக்கொடுக்கும் வழக்கு இன்றும் (கன்னியாகுமரி மாவட்டம்) நடைமுறையில் இருப்பது பழமரபினைப் புலப்படுத்துவதாகலாம்.
வெண்ணிறத்தைத் தூய்மை எனக் கருதிய தன்மை சங்கப்பாக்களிலேயே பரந்து காணப்படும் ஒன்று. கற்புக்கு முல்லையைச் சுட்டியதும் இவ்வடிப்படையிலேயே. எனவே விதவைகள் தங்கள் வாழ்வு முடிந்தது என்ற எண்ணத்தில் மனம் தூய்மையாக இருக்கவும், தன்னைப் பிறருக்கு உணர்த்தவும், பிறர் விரும்பாதிருக்கவும் வழி செய்யவல்லது என்னும் நம்பிக்கை யடிப்படையிலும் வெண்ணிற ஆடையினை உடுத்தியும், மார்பினை மறைத்தும் வந்து இருக்கலாம். அல்லது பிறமகளிரிடம் இருந்து பிரித்துக்காட்டச் சமுதாயம் அளித்த வரன்முறையாகவும் இது இருந்திருக்கலாம்.
இன்று பல இடங்களில் விதவைகள் வண்ண ஆடை உடுத்துகின்றனர். கணவன் இறந்தவுடன் அவனுடன் உயிர் துறத்தல் அல்லது அவனது நினைவாகத் துறவு வாழ்க்கை வாழல் அன்றைய மனைவிமார்களுடைய நிலை. இதற்குச் சமுதாயக் கட்டுப்பாடும், காரணமாக இருக்கலாம். ஆயின் இன்று கணவன் இறப்பின் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற சமுதாயச் சூழல் அவர்கள் மனநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றது. எனவே இயற்கையாக உடையிலும் மாற்றம் அமைகின்றது. மேலும் இத்தகைய நம்பிக்கைகளை எல்லாம் எண்ணிக் கொண்டிராத உழைக்கும் மக்களிடமும் இம் மாற்றத்தைக் காணும் நாம் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப எண்ணங்கள் மாறுபடும் தன்மையை யுணர்ந்து கொள்ள முடிகின்றது. விதவைகளின் வெண்ணிறவுடை பற்றிய நம்பிக்கை தமிழர் நம்பிக்கை மட்டுமன்று. இந்தியரின் பொது நம்பிக்கையுமாகும்.[21]
துறவிகள்
ஆற்றின் இழுக்கி அறனிழுக்கா இல்வாழ்வானிடத்தினின்றும் வேறுபட்டோர் துறவிகள் என்பதனை ஆடைபற்றிய எண்ணங்களும் வெளிப்படுத்தும்.
இவ்வுலக இன்பத்தைத் துறந்து, மேலுலக இன்பம் அடைய விழைதலே துறவின் குறிக்கோள். எனவே தங்கள் இலக்கினை நோக்கி ஐம்பொறிகளையும் செலுத்தத் தங்களைச் சில கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றனர் துறவிகள். உலக இன்பங்களுள் ஒன்றாகிய ஆடையினையும் வெறுக்கின்றனர். சிறந்த உடைகளைத் தவிர்க்கின்றனர். பிற இல்வாழ் மாந்தரிடமிருந்து தனிப்பட்டவர் என்பதை உணர்த்தவும் இவர்கள் தங்களுக்கென்று தனித்த உடைகளை உடுத்தும் பழக்கத்தினைப் பின்பற்றியிருக்கலாம்.
துறவிகளின் குறிக்கோள் ஒன்று எனினும் அவர்கள் மதக்கோட்பாட்டிற்கு ஏற்ப ஆடைகளில் மாற்றம் அமைகின்றது.
இந்துமதம்
கல்தோய்த்துடுத்த படிவப் பார்ப்பானையும் (முல்லை. 37). சீரை தைஇய யுடுக்கையுடைய முனிவரையும் (திருமுருகு. 126) சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். கம்பராமாயணத்தில் காடு செல்லும் இராமன் முதலிய மூவரும் சீரை அணிகின்றனர் (1843), அரண்மனைக்கு வந்த முனிவர்க்கு அளிக்க மரவுரி வைத்திருப்பர் என்ற உரையாசிரியரின் விளக்கமும் (1919), தன்னிடமிருப்பது மரவுரி மட்டுமே என்ற முனிவர் கூற்றும் (659) அக்காலத்தில் துறந்தோரும் முனிவரும் மரவுரியை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனை உணர்த்த வல்லது. இன்றைய நிலையில் இந்துமதத் துறவிகள் காவியாடை புனைகின்றனர். மரவுரி, காவியாடை இவற்றை நோக்க யாவரும் வேண்டாத, விரும்பயியலாத ஆடைகளைத் துறவிகள் தங்களுக்குரியதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
புத்த மதம்
புத்த மதத் துறவிகளின் ஆடை பெரும்பாலும் உடல் முழுவதும் போர்த்தியது போன்ற நிலையிலேயே இன்று காண்கின்றோம். அன்றும் இவ்வாறே இருந்திருக்கலாம் என்றதொரு உணர்வினை இலக்கியங்கள் தருகின்றன.
மணிமேகலையில் சங்க தருமன் என்ற புத்த முனிவன்,
கதிர் சுடுமமயத்துப் பனிமதிமுகத்தோன்
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையனாக (5:60-61)
காட்டப்படுகின்றான்.
நீலகேசி புத்தமதத் துறவியரின் உடையினைப் பற்றிய பல எண்ணங்களை விளக்கமாகத் தருகின்றது. செம்படம், துவராடை போன்ற இவர்களின் உடையின் நிறம் பற்றிய உணர்வையும், முழு மெய்யினையும் போர்க்கும் இவர்கள் இயல்பும் பல இடங்களில் சுட்டப்படுகின்றன.
படம் புனைந்தவர் கடாம் தாம் — நீல. 360
இது செம்படர்கள் இறைவன் உறையும் — நீல. 464
வீடிற்கே யெனின் ஞானம் வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே யெனி னின்னிற் பெருஞ் செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயனென்னையென வினவ மொக்கலனு
மூடிற்றுஞ் சிறிதுனதாலுரு வறிதற்கென மொழிந்தான்
(272)
என்கின்றான்.
இதற்கு நீலகேசி,
படைப்பெளிதாற் கேடரிதாற் பலகள்வர் நவையாரா
லுடைக் கியைந்த வொலியற்றா லூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய் வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பெரிதன்றாற் றொட்டை நீபூணியோ
(273)
எனப் பதிலிறுக்கின்றாள்.
துறவுக்கு இவ்வுடை தேவையில்லை. தோலே போதுமானது என்றுணர்த்துகின்ற தன்மை இதனுள் அமைகின்றது. இவண், புத்த மதத்தாரின் உடையினையும், அவற்றை எள்ளும் பிற மதத்தார் இயல்பினையும் நாம் அறியக் கூடுகின்றது.
கலிங்கத்துப் பரணியில்,
குறியாகக் குருதிக் கொடி ஆடையாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத் தங்குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை யுடை கண்டால் என்
அப்புற மென்றியம்பிடுவார் அநேகர் ஆங்கே
(458)
என்று போர்வீரர்கள் பிழைத்துச் செல்லும் நிலையில் பௌத்தத் துறவுக் கோலம் பற்றிய எண்ணம் அமைகின்றது. இவ்வெண்ணங்கள் காவியுடையினை யுடுத்தியும், போர்த்தியும் காணப்பட்ட பௌத்தத் துறவியரின் நிலையைத் தெளிவாக்க வல்லன.
பெண் துறவிகளின் உடையினைப் பற்றிய எண்ணம் வெளிப்படையாகத் தெரியவில்லையாயினும் ஒருசில எண்ணங்கள் தனிக்கோலம் இருந்தமையினைத் தெளிவுபடுத்த உதவுகின்றன.
மாதவி, மணிமேகலையை,
கோதைத் தாமம் குழலொடு களைந்து
மோதித்தானம் புரிந்தறம் கொள்ளத்
(27:107-8)
சாத்தனார் இக்கோலத்தைப் பிக்குணிக் கோலம் என்றுரைப்பார்.
கைக் கொண்டெடுத்த கடவுட் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
(15:57-8)
என மணிமேகலை காட்டப்படுகின்றாள்.
மேலும் ‘பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலம்’ என்றும் (23:25) பிக்குணிக் கோலத்தின் தன்மை சுட்டப்படுமாற்றைக் காண, காணும்போதே பிறர் புரிந்து கொள்ளக்கூடிய துறவுக்கோலம் என்பது தெளிவாகின்றது. எனவே ஆடவர் போன்று இவரும் காவியுடை அணிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
பிக்குணிக் கோலம் என்பதனை விளக்கும் உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள், துறந்தோரில் ஆண்பாலாரைப் பிக்ஷுக்கள் என்றும், பெண்பாலாரைப் பிக்ஷுணிகளென்றும் கூறுதல் பெளத்த சமய மரபு (மணி. 15:58) என்று காட்டுவார். பிஷுணி ஒருத்தி கஞ்சுகம் அணியாது சென்று தண்டனை பெற்றாள் என்னும் எண்ணம் வடநாட்டறிஞர் கருத்தாகக் காணப்படுகின்றது.[22] எனவே அங்கு புத்தமதத் துறவி சட்டை போட்டிருந்தாள் எனக் காண்கின்றோம். நம் இலக்கியங்களைப் பொறுத்தவரையில் சமணத் துறவிகளுக்குத் தான் இக்கட்டுப்பாடு இருந்ததாகத் தெரிகின்றதே தவிர, புத்தமதத் துறவியின் மேலாடை பற்றிய எண்ணம் ஏதுமில்லை. எனவே பிற பகுதித் துறவிகளுடன் இவர்களை ஒப்பிட்டுப் பிறர் பின் செல்லாத பிக்குணிக் கோலம் என்று சுட்டும் தன்மையில், ஆடவர் போன்று இவர்களும் உடுத்தியும் போர்த்தியும் ஆடை அணிந்திருக்கக்கூடும் என்பது உறுதிப்படுகின்றது. இந்துமதத் துறவிகளைப் போன்று இவர்களும் காவியாடை உடுத்தும் தன்மைக்குரிய காரணம் புலப்படவில்லை. அவர்கள் போன்று, அனைத்தையும் துறந்த மனப்பான்மை காரணமாகப் பிறர் விரும்பாத உடையினை இவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது ஆசையை ஒழித்தல் வேண்டும் என்ற புத்தமதக் கொள்கையின்படி ஆடையின்மேல் உள்ள ஆசையையும் ஒழித்து இருக்கலாம்.
சமணமதம்
சமணமதத் துறவிகளின் ஆடைபற்றிய எண்ணங்கள் பல காட்டுகள்வழிப் புலனாகும் ஒன்று.
நாணமும் உடையும் நீத்து - இருக்கும் துறவியரை மணிமேகலையும் (3:88) மணியுறை கழிப்பதுபோல் துகில் நீக்கிய சீவகன் நிலையைச் சிந்தாமணியும் (30:28) அரைக் கவிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் சமணரெனச் சொல்லிப் பிழைக்கும் தன்மையைக் கலிங்கத்துப் பரணியும் (466) காட்டும் தன்மையில் சைனத் துறவிகள் தங்கள் உடையினையும் துறந்து துறவறம் பூண்ட தன்மை விளக்கமுறும்.
சமணத் துறவிகள் ஆடையின்றி இருந்தனர் என்பதற்குத் திருச்செங்கோட்டில் கிடைக்கும் சமணமுனிவர் படுக்கையைப் பற்றிய எண்ணமும் அரணாகின்றது.[23]
நீலகேசியில், புத்தமதத்தினரைப் பழித்துரைக்கும் தன்மையில், நீலகேசி தன் சமயமான சமண சமயத்தின் சிறப்பினை உரைக்கின்றாள். ஆங்கு,
புனைவு வேண்டலர் போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை கோளென நேர்தலா
வினையவும் மலமேறினு மென்செய
அனையதான் மாக்கள் யாக்கையின் வண்ணமே
(319)
‘மூடு கூறையின் மூடல் பிறவிக்கு வித்து’ என்று சிந்தாமணி உரைக்கும் தன்மை, (1427) ஆடையை அகற்றலுக்கு உரிய அவர்களின் நம்பிக்கையை விளக்கவல்லது. கூறையின் மூடல் பிறவிக்கு வித்து; அதனை அகற்றின் தான் பிறவியை அறுக்கலாம் என்ற நம்பிக்கையைக் காண உடம்பை மூடல் பிறபற்றுகளுக்கும் வழி. வகுக்கவல்லது என்ற எண்ணமே இதற்கு அடிப்படையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
‘பாயுடுத்தல்’ என்றதொரு வழக்கினைச் சமணர்க்குரியதாகப் பெரிய புராணம் உரைக்கும் (திருஞான 724) எனவே சமணருள் பிரிவினர்க் கிணங்க நம்பிக்கைகள் மாறுபட்டன என்பதும் தெளிவு பெறும்.
சமணத் துறவிகளில் ஆடவரே அன்றி, பெண்டிரின் நிலையையும் இலக்கியக் காட்டுகள் தெளிவாக்குகின்றன.
காமன் கண் புடைத்திரங்கும் வண்ணம் எழின் முலை நெற்றி சூழ்ந்த தன்மையையும் (2993), இடை, கவல் வருந்தும்படி மார்பை மறைத்தும், போர்த்தும் காணப்படும் நிலையையும் (1783) சிந்தாமணி உரைக்கும். எனவே சமணத் துறவியருள் மகளிர் அரையாடையுடன் மார்பையும் மறைக்க வேண்டும் என்றதொரு எண்ணம் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இந்தியாவின் சில பகுதிகளில் துறவிகளுக்கென்று இக்கட்டுப்பாடு இருந்திருக்கலாம் என்பது தண்டனை பெற்ற புத்தமதத்துறவியுடன், பெண் துறவியர் பற்றிய டாக்டர் மோதிச்சந்திராவின் கருத்தாலும் விளக்கமுறும்.[24]
எனவே சமண மதத்தைப் பொறுத்த வரையில் ஆடவர் உடலை மூடாதும், மகளிர் மூடியும் காணப்படவேண்டும் என்ற எண்ணங்களின் அடிப்படையில் அவர்களின் ஆடையும் அமையக் காண்கின்றோம். இம்முரணுக்குக் காரணம் என்ன என்பது தெளிவாகப் புலனாகவில்லை.எனினும் மூடுகூறையின் மூடல் பிறவிக்கு வித்து என்னும் நம்பிக்கை ஆடவர்க்கே உரியதாகக் கருதப்பட்டு இருத்தல் வேண்டும். விதவைகள், பிற மதத்துறவிகள், பிற மாந்தரிடமிருந்து தங்களை இனம்பிரித்துக் காட்ட, தனித்த உடை அணிந்தமை போன்று, சமண மதத்தில் துறவற மகளிர் உடல் முழுவதையும் மூடுவதைப் பழக்கமாகக் கொண்டனர் என நினைக்கலாம்.
அனைத்துத் துறவிகளின் உடைபற்றிய எண்ணங்களையும் நோக்கத் துறவுக்கு அழகுபடுத்தல் தேவையற்றது. அழகைக் குறைத்தல் நன்மை பயக்கவல்லது. அடிப்படைத் தேவைகளை மட்டுமே ஏற்கவேண்டும் எனும் கொள்கைகளே காரணமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
- ↑ We know primitive people who are living now or were until quite recently in conditions similar to those in which men lived many thousands of years ago do not seem to feel the cold as we do.
—The story of clothes, Agens Allen, Page-31. - ↑ எங்கள் நாட்டு ஆடை —ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி—6, 1934, பக்கம்-203.
- ↑
பதுமுகன் பரவை மார்பன் நெய்க்கிழிப் பயிலச் சேர்த்தி
நுதி மயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே (சீவக. 819) - ↑ பழைய கைத்தொழில் வியாபாரங்கள்-மு.இராகவையங்கார், செந்தமிழ்-தொகுதி-5, பகுதி-8, 1906-1907.
- ↑ பட்டாடையை இரண்டு பொழுதிற்கும் உடுத்தல் பட்டாடை வெளியில் உள்ள சீதோஷ்ணத்தை உடலுக்குள் விடாது. உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியில் விடாது. எனவே இரண்டு பொழுதிற்கும் ஏற்றது
-எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் 1934, தொகுதி-6, பக்கம். 203. - ↑ “Like people in other tropical countries Indians are accustomed to light clothing except in winter when woollen and cotton padded dresses are necessary”
—India-walter-Inber, page. 190. - ↑ Brides wear white as a symbol of Chastity. The Costume worn at confirmation services is always white to denote purity and spirituality.
—Fundamentals of Dress, Marietta Kettunen, Page-89. - ↑ பெண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியாவில் குடியானவர் வாழ்க்கை-தமிழாக்கம் எஸ். இலட்சுமி, பக்கம். 111.
- ↑ Red is the wedding colour in India.
—Galbraith Introduces India, Page-161. - ↑ வலைச்சி முக்காடு இட்டுச் சவத்துக்கு முக்காடு இட்டுச் சவத்துக்கு முன்னே மயானத்துக்குக் கூட்டிச் சவம் அடுக்கினால்... வலையர்கள் செய்துவர வேண்டியவராக இருந்தனர்.
— தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும், கே.கே.பிள்ளை பக்கம். 420. - ↑ பழங்குடிகள், சு. சக்திவேல், பக்கம்-80.
- ↑ The Egyptions believed that a Fabric woven from fibres that came from an animal was not so clean as one made from fibres that came from a plant. That is why linen was only used for wrapping the bodies of the dead.
—The Story of Clothes, Agnes Allen, Page-37. - ↑ தமிழகப் பழங்குடி மக்கள் - ச. அகத்தியலிங்கம் (பதிப்பு) பக்கம். 70.
- ↑ ** கைம்பெண்டிர் உடை என்னும் பகுதியில் மனைவியர் உடை விளக்கப்படுகிறது.
- ↑ Black was always considered very inauspicious ‘Gal-braith Introduces India’ Page-161.
- ↑ The dress worn by the Tamil people varied according to their rank in society and the race to which they belonged.
—The Tamils Eighteen hundred years ago - V. Kanakasabhai, Page-116. - ↑ கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, கல்வெட்டுக் கருத்தரங்கு, பதிப்பாசிரியர் ஆர். நாகசாமி, பக்கம்—228, 229.
- ↑ The Nadars of Tamilnad — Robert L. Hardgrave, J. C. Page - 55.
- ↑ From time to time Kings and Queens passed sumptuary laws, designed to curb this extravagance in dress and sharply signifying the quality of clothes and ornament which could be worn by people according to their social status.
—Discovering Costumes - Audery I barfoot, Page-27. - ↑ So in 594 B.C. a law, was passed ordaining that no women was to wear more than three garments. This is an early example of a kind of order which as we shall see has been issued again and again in country after country in an attempt to make people dress as the government of the time thought they should....
—The Story of Clothes - Agnes Allan, Page-57. - ↑ The widow, who in India is expected to be a pattern of piety is enjoyed by her religion to drape herself only in white, this being the colour most expressive of the ideal virtue and renunciation which is the goal of her remaining life upon earth. A true ‘suttee’ is one whom love not fire consumes from the ambers of such a devotional sacrifice. There arises that ourest form of ascerticism which generates a spontaneous disguest for colour and embellishment and in content with white borderless and patternless garment.
—Costumes of India and Pakistan, S.N. Dar, Page-145. - ↑ The bhikkhunis also seem to have been allowed the use of Kancuka (bodice) because at one place it was mentioned that bhikkhuni who went to a village without bodice had to perform prayascitta.
—Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, Page-13. - ↑ ஆய்வுக் களஞ்சியம்-திருச்செங்கோடு, கொடுமுடி சண்முகம் பிரகதம் தேனோலை, 1979, பக்கம்-3.
- ↑ Ordinarily the nuns did not cover their sides or chest but after adolescence when their breasts developed they could cover them.
—Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Motichandra, Page- 63.