தமிழர் ஆடைகள்/015
தொழிலும் ஆடையும்
தொழிலுக்கேற்ப ஆடையுடுக்கும் வழக்கு இன்று இயல்பான ஒன்றாக விளங்குகிறது. அன்றும் தமிழர் தொழிலுக்கேற்ப உடை உடுத்தினர் என்பது இலக்கியம் வெளிப்படுத்தும் உண்மை. தமிழரின் தொழிலுக்கேற்ற ஆடைகள் எந்தெந்த முறையில் அவனுக்கும் அவனது தொழிலுக்கும் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதனை இவண் நோக்கலாம்.
போர்
கோலங் கோடலில் ஆர்வம் உடைய தமிழர் போருக்கென்றும் தனித்த கோலத்தினைக் கொண்டு திகழ்ந்தனர்.
புறநானூற்றில் அமையும் அதியமானை ஒளவையார் பாடிய பாடல் போர்க்கோலம் பற்றிய உணர்வினைத் தருகின்றது.
கையது வேலே காலது புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
(புறம். 100)
என்ற நிலையில் அதியமான் தன் மகனைப் பார்க்க வரும் தன்மையை உரைக்கின்றது.
ஆடைபற்றிய உணர்வு இங்கில்லையாயினும் போர்க்கோலம் என்பது எத்தன்மையது என்பதை விளக்க வல்லது இப்பாடல். மேலும்,போர்க்கோல நீக்கிப் புகழ் பொன்னி னெழுதப் பட்ட
வார்க்கோல மாலை முலையார்
(சீவக. 2352)
போர்க்கோலம் செய்து விட்டாற்கு
உயிர் கொடாது அங்குப் போகேன்
(கம்ப. 7553)
என்னும் எண்ணங்களும் போர்க்கோலம் கொண்டமையை வெளிப்படுத்துகின்றன.
இப்போர்க் கோலத்தினை எத்தன்மையில் அமைத்தனர் தமிழர் என்பதையும் சில பாடல்வழி நோக்கலாம்.
போர்வீரர்களுக்கு அடிப்படைத் தேவை போர் செய்யும் வசதியும், பாதுகாப்புத் தன்மையுமே ஆகும். எனவே போர் செய்யத் தடையாகாமல் இருக்கவும், எதிரியின் படைக் கலங்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் அதற்கேற்ற உடைகளை அணிகின்றனர். இந்நிலையில் போர்வீரர்களுக்குரிய ஆடைகளுள் முதலிடம் வகிப்பது கவசம் எனல் பொருந்தும். பிற ஆடைகளுக்கும் இதற்குமுரிய வேறுபாடு பருத்தி, பட்டு போன்ற இழைகளினாற் செய்யப்படாமையே யாகும். சங்க இலக்கியம்,
புலிநிறக் கவசம் பூப்பொறிச் சிதைய
எய்சுணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலியன்ன களிற்று மிசை யோனைக்
(புறம். 13)
காட்டுகிறது. இதற்கு உரையாசிரியர், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவிப் பொலிந்த கொளுத்தற எய்த அம்புகள் போழப்பட்ட மார்பு என்று உரை எழுதிச் செல்கின்றார். இதனால் புலித்தோலால் கவசம் உருவாக்கப்பட்டமையை அறிய முடிகின்றது. பின்னைய இலக்கியங்களை நோக்க, உலோகக் கவசங்களே காலவளர்ச்சியில் செல்வாக்குப் பெற்றுவிடக் காணலாம்.
மார்பில் (புறம். 13) காலில் (மது. 436) கையில் (கம்ப. 8658) விரல்களில் (கம்ப. 9791) எனப் பல பாகங்களையும் கவசத்தால் மறைத்துச் செல்கின்றனர் போர் வீரர்கள்.
கவசம் அணிந்து போருக்குச் சென்றதுடன் கவசம் பற்றியதொரு மரபினையும் பின்பற்றினர் என்பதைச் சிந்தாமணிப் பாடல்வழி அறியக்கூடுகின்றது.புலிப் பொறிப் போர்வைநீக்கிப் பொன்னணிந்திலங்குகின்ற
ஒலிக் கழன் மன்னருட்கு முருச்சுடர் வாளை நோக்கி
கலிச் சிறையாய நெஞ்சிற் கட்டியங்காரனம் மேல்
வலித்தது காண்டு மென்று வாளெயிறிலங்க நக்கான்
(சீவக. 266)
இப்பாடலில் கட்டியங்காரனைக் கண்ட சச்சந்தன், தன், புலியினது வரியையுடைய கவசத்தைத் தவிர்த்து வாளை நோக்கிச் சிரிக்கின்ற தன்மை அமைகின்றது. போரில் கவசம் அணிதல் தேவை என்னும் நிலை இருக்க இங்கே கவசத்தை நீக்கும் தன்மையைப் புலவர் காட்டுகின்றார். இதற்கு, ‘வாகனம் ஏறாதவர் கவசம் பூணுதல் மரபன்று’ என்று காரணம் காட்டுகின்றார் உ.வே.சா. அவர்கள். எனவே வாகனத்தில் ஏறிப் போர் செய்வோர்தான் கவசம் அணிதல் வேண்டும் என்னும் பழக்கம் அவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.
போரில் உயிர்ப் பாதுகாப்புக் கருதியே கவசம் அணியும் பழக்கம் உருவாகியிருக்கலாம் எனினும் அதனைத் தவிர்த்துச் செல்லும் நிலையினைக் காண இதற்குரிய அடிப்படையாக எது இருக்கும் என்பது புலனாகவில்லை. எனினும் உயிரையும் விட, மரபினைப் பெரிதெனக் கருதினர் என்னும் உண்மை இங்கே வெளிப்படக் காண்கின்றோம்.
ஒளவையார் அதியமானைப் பாடும் பாடல் வழி, அவன் கவசம் அணிந்ததாகத் தெரியவில்லை. கையில் வேலுடன் காலில் கழலும், மார்பில் வியர்வையும், பசும் புண்ணுமாகத்தான் காட்சி அளிக்கின்றான்.
அடுத்து,
மெய்புதை அரணம் எண்ணர்தெஃகு சுமந்து
முன் சமத்தெழுதரும் வன்கண் ஆடவர்
(பதி- 52:6)
எனப் பதிற்றுப்பத்து காலாட்படையினரைக் காட்டும். கவசத்தையும் வேண்டுமென்று எண்ணாது, வேலைத் தாங்கிப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் வீரராக இவர் அமைகின்றனர். கவசம் அணியாது போருக்குச் சென்றிருந்த அதியமானுடன் இவ்வீரர்களையும் காண, ‘விரைவு’ தான் இதற்குரிய காரணமாக அமைந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. போரினை உயிரென எண்ணியிருந்த தமிழர் உள்ளத்தையும், வெளிப்படுத்தும் வண்ணம் கவசம் பூணாத நிலை இங்கு அமைகின்றது.
பாதுகாப்புடன், போர் செய்ய வசதியாக இருக்கும் என்ற எண்ணத்திலும் இவர்களின் ஆடை அமைந்திருந்தது.
நீலக் கச்சையுடன் போருக்குச் சென்ற வீரனைச் சங்கப்பாடல் (புறம். 274) காட்டுகின்றது. கச்சை அணிந்து உடையினை இறுக்கிக் கட்டிக்கொண்டு சென்றனர் என்பது இவண் தெரியவருகின்றது.
- விடுகணைத் தெரித்து தானைவீக்கற விசித்து (சீவக. 1086)
- வட்டுடை மருங்குல் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கி (சீவக. 978)
போருக்குச் செல்லும் தன்மையைச் சிந்தாமணி இயம்பும். இவை இறுக்கமாய் அணியப் பெற்றதுடன், உடையினை முழங்கால் வரையுடுத்திய தன்மையையும் நவில்வன. வட்டுடை, முழங்கால் அளவாக உடுத்தும் உடை ஆகையால் போருக்கு ஏற்ற வண்ணம் பயனாகியிருக்கலாம். எனவே இதனை அணியத் தொடங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இன்று நிற ஆடைகள் போரில் பெறும் இடம் போன்று, அன்று நீலக் கச்சைப் பூவராடை மறவனைக் காண (புறம். 274) போரில் நீல நிற ஆடை இடம் பெற்றிருக்கலாமோ என்ற உணர்வு எழுகின்றது.
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ (புறம். 279)
தன் மகனைப் போருக்கு அனுப்பும் அன்னையைச் சங்க இலக்கியம் காட்டும். இங்கு, வெண்ணிற ஆடையின் பங்கு அமைகின்றது. எனவே போர் வீரர்களின் உடை நீலநிறமாக அமைய, போரின்போது ஈடுபடும் பொதுமக்களை இனஞ்சுட்ட, அவர்க்கு வெண்ணிற ஆடையை அளித்திருக்கலாம்.
சிலம்பு, சடையினர் உடையினர் என்று புறங்கொடுத்தோடும் வீரரைக் காட்டும், கரந்து செல்வதற்குரிய உடையைக் காண, போர் உடையினின்றும் மாறுபட்ட உடை என்பது தெளிவுறுவதுடன் முதலில் போர்க்குரிய உடையினை அவர்கள் அணிந்திருந்தமையும் ஈண்டு குறிப்பாகச் சுட்டப்படுகின்றது. நிறம் அல்லது உடையில் மாறுபாடு அமைந்திருக்கலாம். கலிங்கத்துப் பரணியில் உயிர் பிழைக்க ஓடும் வீரர்களுடன் இவ்வெண்ணம் ஒப்புமையாகின்றது (466, 468).
குறிப்பிட்ட நிற ஆடைகளை யுடுத்திப் போருக்குச் செல்வது இன்றைய நிலை. ஒருவிதமான பச்சை நிறம் காவி நிறம் உடைய ஆடைகளை, இன்று போர் வீரர்கள் அணிகின்றனர். தாமிருக்கும் இடத்தைப் பகைவர் அறியாது, கரந்து, காப்பாற்ற வல்லதாய்த் திகழும் தன்மையில் இவ்வாடைகளின் நிறம் அவர்களுக்குத் துணையாகின்றது.
காவல்
காவல்த் தொழில் எப்போதுமே ஊறு விளைவிக்கத் தக்கதொரு தொழிலாகும். எனவே காவல்த் தொழில் புரிபவர்கள் அதற்கேற்ப, தங்களைக் காத்துக் கொள்வதிலும் கருத்துச் செலுத்தினர் என்பதனை விளக்குமாற்றான் அமைவதில் அவர்கள் உடையும் ஒன்று.
மெய்க்காப்பாளர்கள், வாயிற்காவலர் என்ற இருநிலையில் இவர்களைக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் தங்கள் தொழிலுக்கேற்பச் சட்டை அணிந்திருந்தமை சங்கச் சான்றுகளினின்றே அறிய வரும் ஒன்று, மெய்க்காப்பாளர்கள் என்னும் நிலையில் நோக்கச் சட்டை அணிந்தவர்கள் என்னும் பொருளில் இவர்கள் கஞ்சுக மாக்கள் என்றே குறிப்பிடப்படுவதைக் காண்கின்றோம். கஞ்சுக மாக்களைத் திறை கொணர்ந்த தூதர்களாகச் சிலம்பு சுட்ட, பின்வந்த இலக்கியங்கள் மெய்க்காப்பாளர்களாகவே காட்டிச் செல்கின்றன. பதுமாவதி வையம் ஏறிச்செல்ல கஞ்சுகி மாக்கள் புடை காக்கும் தன்மையைப் பெருங்கதை இயம்பும் (3.5:108-10). குழந்தை பிறந்தமை கேட்டு வரும் விஞ்சைய மகளிரையும் (1726) சுயம்வர மண்டபம் சேரும் சோதிமாவையையும் (1795) செங்குன்றம் சேரும் தேவியரையும் (1648) காத்து வரும் தன்மையில் சூளாமணி இவர்தம் செயல்முறையைச் சாற்றும். கஞ்சுகியவர் கண் மெய் காவல் ஓம்பினார் என்னும் பாடலடி (சூளா. 92) இவரின் தொழிற்றன்மையை விளக்க வல்லது. தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் என, கம்பன் (பால. 380) இவர்களைக் காட்டுவான்.
வாயிற் காவலரின் சட்டை எனப் பார்க்கும்போது படம், மெய்ப்பை, குப்பாயம், கஞ்சுகம் என்று அனைத்து சட்டை பற்றிய பெயர்களும் இங்கே சுட்டப்படக் காணலாம்.படம் புகு மிலேச்சர் (முல்லை - 66).
மெய்ப்பைப் புக்க வெருவருந் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் - (முல்லை. 60-61).
வரிக் குப்பாயத்து வார் பொற் கச்சையர் (பெருங். 1.40:378)
முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன்
(கம்ப. 6926)
என்ற நிலையில் வாயிற்காவலர் சட்டை அணிந்தமையினைக் காண்கின்றோம்.
கஞ்சுகம் அணிந்த நிலையில் அனைத்து இடங்களிலும் மெய்க்காவலர் காட்டப்பட, வாயிற் காவலர் படம், மெய்ப்பை, குப்பாயம் அணிந்த நிலையில் காட்சி தருவது இங்கு நோக்கற்குரிய ஒன்று. கம்பனில் தான் கஞ்சுகம் அணிந்ததாக இருவரும் சுட்டப்படுகின்றனர். எனவே இருவர் அணிந்ததும் சட்டை எனினும் அமைப்பில் மாற்றங்கள் அமைந்து இருவரையும் வேறுபடுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
காவலரே சட்டையணியும் தன்மை, ஒரு வினாவினை எழுப்புகின்றது. காவலர்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்றபடி சட்டை உதவும் என்ற எண்ணத்தில் அணிந்தார்களா? அல்லது பிற நாட்டைச் சார்ந்த காவலர் சட்டை அணிந்து இருந்தமையினைக் (முல்லை. 61) கண்டு பின்னையோரும் சட்டை அணியத் தொடங்கினரா என்னும் வினாவே அது. பிற நாட்டினரைக் கண்டு சட்டையிடும் வழக்கம் புகுந்தது எனினும் தமக்கும் தம் தொழிலுக்கும் ஏற்றது என்ற எண்ணத்திலும் இதனை இவர்கள் அணியத் தொடங்கினர் என்று கூறுதல் பொருத்தமான தாகும்.
உடையினையும், இன்றைய சீருடை (uniform) போன்று அணிந்திருந்தனரோ என்னும் சிந்தனை பெருங்கதை நிகழ்வு ஒன்று எழுப்பும் ஒன்று. உருமண்ணுவாவின் தோழர்,
செழுமணிக் காரர் குழுவினுட்காட்டி
உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
வெண்பூந்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு புணர்ந்த
அணியினராகிப் பணி செய்தற்குரிய
இளையரை ஏற்றித் தளை பிணியுறீஇக்
(3.17:125-130)
போர், காவல் போன்ற தொழில்களுக்கேற்ப உடை உடுத்தியது போன்று தங்கள் எண்ணங்களை நிறைவேற்றவும் உடையினை மாற்றிக் கொண்டனர் தமிழர்.
ஒற்று அரசியலுக்குத் தேவையான ஒன்று. திருவள்ளுவர்,
ஒற்றின் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றங் கொளக் கிடந்தது இல்
(583)
என அரசின் வெற்றியே ஒற்றுக்குள் அடங்கும் என்பார். ஒற்று பற்றிய எண்ணம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர் உணர்ந்த ஒன்று.
புடை கெட ஒற்றின ஆகிய வேயே
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை
(புறத். 3)
என வெட்சித் திணையின் துறைகளாக அமைவன இவை. இவண், ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய சொல் ஒற்றரின் தொழில்த் தன்மையைத் தெரிவிக்கின்றது. இலக்கியங்களில் பல நிலைகளில் பயிற்சி பெறும் இவ்வொற்றின் (சிலப். 28:105-6, சிந்தா, 1829, 1921, 2142) முதன்மையான தேவைகளுள் ஒன்று மாறுவேடமுமாகும்.
தெய்வப் புலவர் இதனை,
துறந்தார் படிவத்தாராகி இறந்தாராய்ந்து
என் செயினும் சோர் விலது ஒற்று
(586)
என்றுரைப்பார். இவண், ஒற்றறியத் துறந்தார் படிவமே ஏற்றதாக அக்கால மக்கள் எண்ணி இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுகின்றது. ஏனெனில்,
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
(585)
துறவியாடை, பிறரின் ஐயப்பாடுகளினின்றும் காக்கும். மக்கள் நம்பிக்கையையும் எளிதில் பெற வழி வகுக்கும் என்ற எண்ணமே இதற்குரிய அடிப்படை நோக்கமாக இருந்திருக்கலாம்.
ஒற்றுத் தொழில் அன்றி, சில செயல்களை நிறைவேற்ற வேடம் மாறிவரலும் இலக்கியம் வழிப் புலனாகும். வேற்றுருவம் எடுத்தல், பெரியவடிவம் எடுத்தல் போன்ற பல உருமாறல் கூறுகளுள் ஆடையை மாற்றிச் செல்லலும் உண்டு.
ஆற்றலும் வீச்சையும் அறிவும் அமைந்தோர்
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆகென
(3.1:92-3)
உதயணன் கூறுகின்றான். பிறர் தம்மை உணராமைக்குரிய உள்வரிக் கோலம் என இதனைக் கழக உரையாசிரியர் விளக்குவர். இக்கோலம்,
வெண்ணூற் பூந்துகில் வண்ணம் கொளீஇ
நீலக் கட்டியும் மரகதத் தகவையும்
பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
கோலமாகக் கொண்டு கூட்டமைத்துப்
பிடித்துருக் கொளீஇக் கொடித் திரியோட்டிக்
கையமைத்தியற்றிய கலிங்கத் துணியினர்
(3.1:95-100)
எனக் காட்டப்படுகின்றது. இவ்வேடம் நாட்டில் யாத்திரை செய்வார் கோலமாக அமைந்தது எனக் காணும்போது, பல்வகைப்பட்ட யாத்திரை மாந்தர் உடைபற்றிய உணர்வினைப் பெறுகின்றோம், பல்வண்ணங்களுடைய ஆடையால் உருவினைக் கரந்து சென்ற உதயணன் தோழர் வேடமும் வெளிப்படுகின்றது.
உருமண்ணுவாவின் தோழர் செழுமணிக் காரரின்
காவலர் வேடத்தில் மறைந்து செல்கின்றமையும்
(3.17:125-30)
அறப்பேராண்மையின் அடக்கிய யாக்கையன்
கல்லுண் கலிங்கம் கட்டிய அரையினன்
அல்லூண் நீத்தலின் அஃகிய உடம்பினன் (பெருங். 4.7:157-9)
எனச் சைனமுனிவனாக, யூகி தன்னை மறைத்துக் கொள்கின்றான். இவண், சைன முனிவன் கல்லுண் கலிங்கம் கட்டியவனாகச் சுட்டப்பட, உடையினைத் துறந்து வாழும் சைனத் துறவிகளிடம் இருந்து வேறுபட்டவர்கள் இவர்கள் என்பது புலப்படுகின்றது.
இம்மாறுவேடங்களை காண, மாறுவேடம் கொள்ளல் பல நோக்கங்களின் அடிப்படையில் அமையும்போது அவற்றிற்கு ஏற்ற விதத்தில் தங்கள் தோற்றத்தினை மாற்றி வந்துள்ளனர் என்பது தெளிவுறுகின்றது.
உடுத்தும் முறையில், நிறம் மாற்றலில், பிறர் உடையை உடுத்துவதில் இம்மாறுபாடுகள் அமைந்திருக்கின்றன. காவலர், துறந்தோர் போன்ற வேடங்களில் காணப்படும் தன்மை, குறுகிய காலத்தேவை எனில் பிற உடையினை உடுத்தல், ஆடையில் வண்ணம் கொளுவியுடுத்தல் என்ற முறையிலும், அதிக நாட்கள் எனில் துறவியாடையையும் அணிந்து வந்திருக்கலாம் என்ற எண்ணத்தை நல்குகின்றது. இவ்வாறு வேடமிட்டுச் செல்லுபவர்களில் கள்வரையும் இணைத்து நோக்கலாம்.
களவுத் தொழில் பற்றிய பல எண்ணங்கள் சிலப்பதிகாரத்தில் அமைகின்றன.
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திர மிடனே காலங் கருவி யென்
றெட்டுடன் அன்றே யிழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கடுணை யெனத் திரிவது
மருந்திற் பட்டீராயின் யாவரும்
பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப்பட்டீர்
(16:166-71)
இருளில் நீல ஆடை தன் நிறத்தை வெளிப்படுத்தாது. எனவே களவுத்தொழில் புரிபவர்க்கு அவர் இருக்கும் இடத்தைப் பிறர் உணராது மறைக்க உதவுகின்ற நிலையில் ஏற்புடைத்தாகின்றது.
பொது நிலையில் கள்வர் நிலை இவ்வாறு அமைய ஆறலைக் கள்வர் பற்றிய எண்ணத்தையும் சங்கப்பா இயம்புகின்றது இவர்தம் ஆடையாகக் காட்டப்படுவது செந்துவராடை (நற். 33) செம்மை வீரத்தினைக் காட்டக் கூடியது. எனவே நேரடியாகவே ஆறலைத்தலைப் புரியும் இவர்தம் மனவுணர்வுக்கு ஏற்பச் செந்துவராடை அமைகின்றது எனக் கொள்ளல் பொருந்தும்.
வழிபாடும் ஆடையும்
மனிதன் இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய இன்பங்களை அடைய முயல்வதுடன் மேலுலக இன்பம் கருதியும் சில செயல்கள் புரிகின்றான். தன்னைப் படைத்த இறைவனே அவ்வின்பத்தை அளிக்க வல்லவன் எனும் கருத்தில் வழிபடுகின்றான். வழிபாட்டுக்குரிய சில நியதிகளில் தூய்மையான ஆடையும் ஒன்றென்பதைக் காட்டுகள் உணர்த்துகின்றன.
‘புலராக் காழகத்தைப் புலரவுடீஇ’க் கூப்பிய கையினராகத் திருவேரகத்து இருபிறப்பாளரைத் திருமுருகாற்றுப்படை (184) காட்டும். குறவர் வழிபாட்டினை ‘முரண்கொள் உருவில் இரண்டுடன் உடீஇ’ (திருமுருகு. 230) நடத்தினர் எனக் காண்கின்றோம்.
தீம்பானுரை போற்றிகழ் வெண்பட்டு உடுத்து சேணிகன் இறைவனை வணங்க எழும் நிலையினைச் சிந்தாமணி (3046) பேசுகின்றது. அருகக் கடவுளுக்கு எடுத்த விழாவில் அந்தணர் வெண்டுகிலையும், வேந்தர் அரத்தப் பட்டினையும் வணிகர் பீதக உடையினையும் உடுத்திக் காட்சி அளிக்கின்றனர் (சூளா. 1874, 77, 79). இவண், இன்று போன்றே வழிபாட்டிற்குத் தூய்மை அடிப்படையாக அமைய, தங்கள் செல்வ நிலை, தகுதிக்கு ஏற்ப உடுத்தினர் என்பது விளக்கமுறுகின்றது. காந்தர்வதத்தை, யவனச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி, ஏற்பு உடுத்தபின் தியானம் புரியும் தன்மையும் (சீவக. 1146) இதனுடன் இணைத்து நோக்கதக்கது.இன்றும் இந்துக்கள் நீராடி, ஈர ஆடையுடன் இறைவனை வணங்குகின்ற தன்மையினைக் காணலாம். முகம்மதியர் வெண்ணிற ஆடை உடுத்தி வணங்குகின்றனர். கோயிலுக்குப் போகும்போது தூய நூற்புடவை அல்லது பட்டுப் புடவை கட்டிக் கொண்டு போகவேண்டும் என்பது தமிழர் நம்பிக்கை என்பர்.[1] பிற நாட்டாரிடமும், வழிபடுவதில் சில முறைகள் இருந்ததாக அறிகின்றோம்.[2]
இறைவனைத் தொழும் நிலையில் மட்டுமன்றி, இறைத் தொடர்பான சடங்குகளிலும் தனித்தனியே தங்கள் எண்ணங்கட்கு ஏற்றவாறு உடையுடுத்தினர்.
வினைக்கு வேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை (புறம். 166) என, சங்கப் பாடல் ஒன்று வேந்தன் வேள்விக்கெனக் கலைத் தோலினை மார்பில் அணிந்தமையினைச் சுட்டும். வினைக்கு வேண்டி என்னும் கூற்று, வேள்விக்கு மட்டுமே மன்னன் இதனை அணிந்திருந்தான் என்னும் எண்ணத்தைத் தருகின்றது.
இன்று காவடி எடுப்போர் காவி ஆடையுடன் எடுக்கின்றனர் (கன்னியாகுமரி மாவட்டம்). தீமிதித்தலுக்கு மஞ்சள் ஆடையைப் பயன்படுத்துகின்றனர் (திருச்சி மாவட்டம்). ஐயப்ப பக்தர்கள் நீலம் கருமை நிற ஆடையினை யுடுத்துகின்றனர். இத்தனி உடைகளுக்கு அடிப்படைப் பொருள் ஏதேனுமிருக்கலாம். ஆயின் விளக்கம் புலனாகவில்லை. ஆயின் அனைத்திலும் தூய்மை அடிப்படையாக இருக்கக் காணலாம். உலக நிலையிலும் இவ்வெண்ணம் பழமையான ஒன்று என்பது, எகிப்தியப் பாதிரிமார்கள் கோயிலினுள் அணியும் உடைபற்றிய எண்ணம் தெளிவுறுத்தும்.[3] உடுத்தும் முறையிலே அன்றி, மேலும் சில எண்ணங்களும் இது தொடர்பாக அமைகின்றன.
‘யாவற் காயினும் இறைவற் கொருபச்சிலை’ என்ற தமிழர் உணர்வு, இறைவனுக்கு உடை சாத்தி வணங்கும் வழக்கினையும் வழிபாட்டில் கொண்டுள்ளது.
தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ
(17:1-2)
எனப் பரிபாடல் இயம்பும் தன்மை, அன்றே இவ்வியல்பு கால் கொண்டுவிட்டதை வெளிப்படுத்தும்.
ஆடலும் ஆடையும்
ஆடற் கலையில் ஆடை அணிகலன்களின் இடம் போற்றத்தக்க ஒன்று. உள்ளத்து உணர்வுகளை முகம் பிரதிபலிப்பினும், அவ்வுணர்வுகளின் முழுமை ஆடைகளில் தான் மறைந்துள்ளது எனக் கூறலாம். அரசன் வேடம் போட்டு நடிப்பவன் முகத்தில் அரசக் களையைக் கொணரினும் மன்னனுக்குரிய உடை இல்லாவிட்டால் அவனது நடிப்பு வெற்றி பெறா. அதைப் போன்றே நடனக் கலைக்கும் கோலங்கோடல் உயிர்த்துடிப்பினை ஊட்ட வல்லதாகும்.இக்கோலங்களைப் பற்றிய விளக்கங்கள் இலக்கியங்களில் மிகுதியாக அமையவில்லை. எனினும் சில எண்ணங்கள் உண்டு என்பதை உறுதிப்படச் செய்கின்றன.
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிவமும் நீங்கா மரபிற்
பதினோராடலும்
(சிலப். 6:64-66)
என்று இளங்கோ மாதவியின் பதினோராடலும் அவரவர் அணியுடன் நடந்தது என்கின்றார். ஈண்டு ‘அணி’ என்பது உடையையும் உள்ளடக்கியதேயாம்.
கோலம் பற்றிய உணர்வு இவண் அமையினும், இக்கோலங்கள் எவ்வாறு இருந்தன என்பது தெளிவுறவில்லை.
மணிமேகலை, பெண்மை திரிந்த ஆண்மைக் கோலமாகிய பேடிக் கோலத்திற்கு வட்டுடையினைப் பயன்படுத்தினர் (3:123) எனச் சுட்டும்.
இதனைப் போன்று பாவையாடல் பற்றியதொரு எண்ணமும் அமைகின்றது.
திருவின் செய்யோளாடிய பாவை (மணி. 5:4) என்னுமிடத்து உ. வே. சாமிநாதைய்யர், பாவை பதினோராடலுள் ஒன்று. அது போர்ச் செய்தற்குச் சமைந்த கோலத்தோடு அசுரர் மோகித்து விழும் கொல்லிப்பாவை வடிவாய்த் திருமகள் ஆடியது என்பர். எனவே போர்க் கோலத்திற்குரிய உடையினை, பாவைக் கோலத்திற்கு அணிந்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது.
எனவே இவ்வெண்ணச் சுவடு, பிற ஆடல்களுக்கும் அதற்கென்று தனித்த உடை கொண்டிருந்தனர் என்னும் எண்ணத்திற்கு வழி நடத்துகின்றது.
நிலமும் ஆடையும்
ஆடையுடுத்தத் தொடங்கிய நிலையில் மாந்தர், தம் நிலத்தில் கிடைத்தவற்றை உடுத்தினர். வணிக, கலாச்சாரத் தொடர்கள் பெருகப் பெருக, பிற இடத்தினின்று பெற்றவற்றையும் பயன்படுத்தத் தொடங்கினர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில், அங்கு விளைந்த பருத்தியின் செல்வாக்கு மிகுதியாக அமைந்தது; அமைகின்றது. பலவகை ஆடைகளையும் இதனுடன் இணைத்துப் பயன்படுத்தினர் தமிழர். ஐந்நில மகளிரும் தழையுடையினை மிகுதியாக ஏற்றனர் என்பது சங்க இலக்கியம் சுட்டும் நிலை. அவ்வவ் நிலத்திற் கிடைத்தன கொண்டே அவையும் அமைந்தன.
மரனாருடுக்கை அணிந்த குறவன் (நற். 64), அங்குழைச் செயலைத் தண்டழை யுடீஇய ஆறலைத்தல் தொழில் புரியும் சவரர், புளிஞர் மகளிர் (பெருங். 1.55:57) மரவுரியுடையவன் வேட்டுவன் (சீவக. 1231), புலித்தோலை யுடையாக உடைய குகன் (கம்ப. அயோத். 650) போன்றவர்களை நோக்க நாகரிக வளர்ச்சி யற்றோர் தமக்குரியதாக ஏற்றுக் கொண்டன அவர்களுக்கு அண்மையில் கிடைத்தவற்றையே என்பது தெளிவாகின்றது. பிற நாகரிகங்களைப் பற்றி அறியாமையும், விலை மதிப்பு அதிகமும் இந்நிலைக்குரிய காரணிகள் எனலாம்.
நிலத்திற்கேற்ற ஆடையணியும் பழக்கம் வாயிலாக மாந்தர் நடைமுறை வாழ்வுடன் ஒவ்வொரு காலத்திலும் மாந்தர் ஆடைகள், புதிய நாகரிகம் புகுத்திய புதுமைகள், சமுதாயத்தில் முன்னணி மாந்தர் நிலை, பின் தங்கிய மக்கள் நிலை என்பனவற்றையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
செல்வந்தர், ஏழைகள் உடைகளைக் காணப் பிற நிலைகளில் போன்று இதனுள்ளும் பின் தங்கிய நிலையே ஏழைகள் நிலையாக உள்ளது.[4]
ஆடையினைக் கையாளும் முறைகள்
ஆடையினைக் கையாளும் முறையிலும் தமிழரிடம் சில பழக்க வழக்கங்கள் படிந்திருந்தன. விருந்தோம்பல், குறிப்பு உணர்த்தல், சூதுபோன்ற சில நிலைகளில் இவை எவ்வாறு அமைகின்றன என்பதைக் காணலாம்.விருந்தோம்பல்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று
(குறள். 82)
என்பது தமிழர் விருந்தினர்க்குக் கொடுத்த பெருஞ்சிறப்பிற்குச் சிறியதொரு எடுத்துக்காட்டு.
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்த இவ்விருந்தோம்பலில் தன்னை ஒத்த பிறருக்குக் கொடுக்கும் நிலையில் அன்பளிப்பாகவும், இரந்து நிற்கும் இரவலனுக்கு இரங்கிக் கொடுக்கும் நிலையில் கொடையாகவும் உடை பங்கு பெறுகின்றது.
தலைவிக்குத் தலைவன் கையுறையாகத் தழையுடையினைக் கொடுக்கும் நிலையிலேயே ஆடை அன்பளிக்கும் நிலை தொடக்கமுறக் காணலாம்.
மணிமேகலையில் ஆதிரையின் கணவன் சாதுவனை நாகர் வழியனுப்பும்போது பூந்துகிலையும் மற்றும் பல்பொருட்களையும் (16:123) கொடுத்து அனுப்புகின்றனர்.
பிறப்பில், ஆடை அளித்தலைப் பெருங்கதை பகரும்,
ஏனோர் பிறர்க்கு மிவையென வகுத்த
அணியு மாடையு மணியு நல்கி
(5.4:93-94)
நரவாணதத்தன் பிறப்பு கொண்டாடப்படுகின்றது.
மணத்தில் ஆடை கொடை செய்தமையினைச் சிந்தாமணிப் பாடல் (2078) இயம்பும்.
அன்பளிப்புக் கொடுக்கும் தன்மையினைக் கம்பனில் பலவிடங்களிலும், பல நிலைகளிலும் காணலாம். நற்செய்தி சொன்னவர்களுக்கு மகிழ்ந்து பரிசில் அளித்தனர்.
பரதன், இராமன் வரவினைச் சொன்ன அனுமனுக்குக் ‘கோவொடு தூசு நல்மணிக் குலம்’ (கம்ப. 10356) யாவும் நல்குகின்றான்.
இராமன் வில்லாற்றல் விளம்பிய வீரர்க்குத் தூசு அளித்தமையும் (கம்ப. 821) காணக் கூடுகின்றது.
கலைக்கோட்டு முனியை அழைத்து வருவதாகக் கூறிய விலைமகளிர்க்குத் தூசு ஆதி ஆய பாங்கு உள அளிக்கின்றான் தயரதன் (கம்ப. 218). கேள்வி இன்பத்தில்போது அன்றி, காட்சி இன்பம் அடையும் போதும் உடையினை அளித்தனர்.
இராமனின் கடிமணம் கண்டு மகிழ்ந்த தாயர் சீதைக்குப் பல் பரிசில்களுடன் பட்டாடை நல்கி மகிழ்கின்றனர் (கம்ப. 1342).
மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது பரிசில்களுடன் உடையினையும் அளித்தனர் எனக் காண்கின்றோம். மகவு பிறக்கப் போகின்றது என்ற மகிழ்ச்சியில், வாய்ந்த நல்துகிலொடு பலவும் பிறருக்கு அளிக்கின்றான் தயரதன் (கம்ப. 276).
அன்பளிப்பில் வேற்றுமை பாராட்டல் இல்லை என்பது சீதையை முனிபத்தினி துன்னு தூசினொடு சந்திவைக் (ஆரணிய. 5) கொடுத்து வழியனுப்பும் இயல்பு இயம்பும்.
உதவிய வீரர்களுக்கும் அன்பளிப்பு அளித்துப் பாராட்டினர்,
கொம்புடை மலையும் தேரும் துரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான்
(யுத்த. 10512)
என இராமன் சுக்கிரீவனுக்கு அளித்தமை, ‘மன்னும் நுண் தூசும்’ பிறவும் (யுத்த. 10514) அங்கதனுக்கு வழங்கியமை,
பொன்தினி வயிரப் பைம் பூண் ஆரமும்
புனைமென் தூசும்
(யுத்த. 10516)
அனுமனுக்கு ஈந்தமை கம்பனால் விளக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட செயலை நிறைவேற்றினால் அதற்குப் பரிசிலாக ஆடை அணிகலன்கள் தருவேன் என்று சொல்லலும் உண்டு, இவண், இலக்குவனை அழைத்துவரின்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்
என அதிகாயன் மயிடனுக்குக் கூறும் தன்மையைச் சான்றாக்கலாம்.
சூளாமணியில் விருந்து வரவேற்பில் ஆடையை எடுத்துச் செல்லலும் (467) ஆடையை விருந்தினரின் தவிசின்மேல் விரித்தலும் (932) சுட்டப்படுகின்றது.
இன்றுபோன்று மணமகளின் சீதனத்திலும் ஆடை பங்குபெற்றது.பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற
நற்புடைய பேழை (870)
போன்றவற்றை மணமகளான சுயம்பிரபையுடன் அனுப்பும் தன்மையினைச் சூளாமணியில் காணலாம்.
விருந்தினரை வரவேற்கும் பொழுதில் ஆடை கொண்டு செல்லல், அவர்கள் வரவில் தாங்கள் மகிழ்கின்றோம் என்பதை யுணர்த்தவாக இருக்கலாம். மகிழ்வில் பிறருக்குக் கொடுத்தல், தங்களின் மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் எனலாம்.
இவற்றை நோக்க ஆடைகளைப் பெறுவதில் அன்றைய மாந்தரும் இன்றைய மாந்தர் போன்று பெருமகிழ்வு கொண்டனர் என்பதும், பல்வகை அன்பளிப்பு நிலையில் ஆடை முதன்மையிடம் வகித்தது என்பதும் தெளிவு மணமக்களுக்குப் புது உடை எடுத்துக் கொடுத்தல், சடங்குகளில் உறவினர்க்கு அளித்தல், அந்தணர்க்குக் கொடுத்தல் போன்ற சில கொடை நிலைகளில் இன்று இவை இடம் பெறுகின்றன.
இருப்போர்க்கு அன்பளிப்பாக உடை முதலியவற்றை அளிக்க, இல்லாதவனுக்குத் தானம் செய்தலும் சில எண்ணங்களால், தெரிய வருகின்றது.
சங்க இலக்கியப் புறப்பாடல்களுள் மன்னன் பண்பு நலன் வெளிப்படும் இடங்கள் பல. மன்னனின் கொடைச்சிறப்பு, ஆடைக் கொடையை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தமை, புலவன் வறுமை நீக்கி மன்னன் மனமகிழ்ந்தமை போன்றவற்றை இந்நிலைகள் சித்திரிக்கின்றன. தொன்றுபடு துளையொடு பருவிழை போகி நைந்து கரை பறைந்த உடையினையும் (புறம். 376) முதுநீர்ப் பாசியன்ன உடையினையும் (புறம். 390) பாசிவேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாரினையும் (பொரு. 153-4) பாறிய சிதாரினையும் (புறம். 150) நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிறகன்ன சிதாரினையும் (பதி. 2:2) உடுத்திய நிலையில் இரவலன் காட்டப்படுகின்றான். இவ்வேழ்மை நிலையினை மன்னன்,
திருமலரன்ன புதுமடியையும்
புறம்.390
வேறுபட்ட உடையினையும்
புறம். 377
கொட்டைக் கரைய பட்டுடையினையும்
பொரு. 155
கழைபடு சொலியினிழையணி வார
ஒண் பூங்கலிங்கத்தையும்
புறம். 383
அளித்துப் போக்குகின்றான். பெற்றவர் மனமகிழ்வில் தானும் பங்கு கொள்கின்றான்.
இக்கொடை பற்றிய உணர்வுகள் பிற்காலத்தில் குறைந்து விட்டமையை நீதி நூற்கள் கொடை கொடுத்தலை வற்புறுத்தும் நிலையும், அதனைப் பற்றிய நம்பிக்கைகளைக் கூறும் தன்மையும் உணர்த்தும். இருப்பினும், தமிழனிடம் இவ்வுணர்வு முழுமையாக மறைந்து விடவில்லை என்பது ஒருசில எண்ணங்களால் புலப்படுகின்றது.
நந்திக் கலம்பகத்தில், ‘துணியரைச் சுற்றிப் பரடு திறப்ப, பல்கடைத் திரிந்த பாணன் நந்தி மன்னனைப் பாடி புதுப் பூம்பொலன் கலன் அணிந்து, யானை எருத்தத்தில் இருக்கின்றான்’ (27) எனப் பேசப்படுகின்றான். எனவே உடைக் கொடை தனித்துச் சுட்டப்படவில்லை எனினும் பொதுநிலையில் கொடையில் ஆடையும் இடம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
இவற்றை இணைத்து நோக்க, சில கொள்கைகளின் அடிப்படையில் இப்பழக்க வழக்கங்களைத் தமிழர் கைக்கொண்டிருந்தனர் எனக் கருதலாம்.
2. தன் மகிழ்ச்சியில் பிறருக்கும் பங்களித்தல்.
3. பிறருக்கு நன்மை செய்யின் தாமும் நன்மை பெறலாம் என்ற அறக்கோட்பாட்டில் உள்ள நம்பிக்கை.
அறக் கோட்பாடு என்னும்போது சங்ககாலத் தமிழர்க்கு இது பொருந்துமா என்னும் வினா எழக்கூடும். ஏனெனில், அறத்தான் வருவதே இன்பம், அறமெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று அறம் கருதியே அறம்செய்த நிலையே காணக்கூடியதொரு நிலை. இருப்பினும்,
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகள் ஆஅய் அலன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே
(புறம். 134)
என்று ஆஅய் அண்டிரன் கொடையின் சிறப்பு சிறப்பிக்கப்படுகின்றதைக் காண்கின்றோம். அறம் கருதி அறம் செய்தலே அன்றைய தமிழர் நிலையென உரைக்கும் இப்பாடல், அறவிலை வணிகரில் ஒரு சிலரும் இருந்திருக்கக் கூடும் என்ற உணர்வைத் தரும் தன்மையில் அமைகின்றது. ‘ஆஅய் அலன்’ என்று சொல்லும்போதே பிறர் உண்டு என்பது தொக்கி நிற்பது வெளிப்படை. எனவே இக்கருத்துடன், பிற்கால, நம்பிக்கையூட்டும் எண்ணங்களும் அதாவது அறம் செய்தால் சிறப்பாக வாழலாம் என்ற எண்ணங்களும், தாமும் நன்மையடையலாம் என்ற எண்ணத்துடன் அறம் செய்ததனை உறுதிப்படுத்த வல்லன.
தமிழர் இக்கொள்கையில் கொடையினையும், விருந்தோம்புதலையும் செய்ய, மணத்தில் கொடை செய்தல் வீண் ஆடம்பரம் கருதியாகும் என்னும் டாக்டர் மோதிச் சந்திராவின் கருத்தும் இவண் கொள்ளத் தக்க ஒன்று.[5]
குறிப்புக் காட்டல்
தங்கள் எண்ணங்களைப் புலப்படுத்தவும் சில வகைகளில் ஆடையைப் பயன்படுத்தினர் தமிழர்.
1. தலைவி பூப்படைந்தமையினை உரைக்க, சிவந்த உடையை உடுத்தி அனுப்புகின்றமை திணைமாலை நூற்றைம்பது (மருதம். 1:44) உணர்த்தும் ஒன்று.
2. மகிழ்ச்சிப் பெருக்கில், துகில் வீசிப் புலப்படுத்தல் பல இடங்களில் சுட்டப்படுகின்றது.இராமன் மணத்தில் மிதிலை நகர மகளிர்,
விரிந்து ஒளிர் காசு பொன் தூசுவீசி
(கம்ப. 1320)
மகிழும் தன்மை, அவர்கள் மகிழ்வு எல்லையைக் காட்டுகின்றது.
நண்பனை எதிர்கொள்வதிலும் இதனைக் காணலாம். சுக்கிரீவன் இலக்குவனை,
சுண்ணமும் தூசும் வீசி
சூடகத் தொடிக்கைம் மாதர்
கண் அகல் கவரிக்கற்றைக்
கால் உற
(கம்ப. 4475)
வரவேற்கின்றான்.
மக்களின் இம்மகிழ்வுச் செயலைச் சில இடங்களில் தேவர்க்கும் ஏற்றியுரைப்பார். கம்பர்.
பகைவனின் வீழ்ச்சியில் மகிழும் தன்மையில் தேவர்கள் மன மகிழ்கின்றனர். இராவணன் வீழ்வில் வடகமும் துகிலும் வீசி (கம்ப. 5993) மகிழ்கின்றனர், இந்திரசித்து இலக்குவனால் வதையுண்ட பின்,
எல்லாரும் தூசு வீசி ஏறிட ஆர்த்தபோது
கொல்லாத விரதத்தார் தங்கூட்டம் ஒத்தார்
(கம்ப. 9307)
என் இவர்களின் நிலை இயம்பப்படுகின்றது.
இப்பழக்கம் தொடர்ந்து தமிழரிடம் காணப்பட்டது என்பது பெரியபுராணக் குறிப்புகளால் உறுதிப்படுகின்றது.
திருஞானசம்பந்தரைக் கண்டு காழி நகரில் மாமறையோர் சூழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து ‘தாமறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து’ (திருஞான. 95) ஆர்க்கின்றனர்.
தம்பிரான் தோழர் முதலை வாயினின்றும் மீட்ட மகவு கண்டு,
விண்ணிலுள்ளார் அதிசயித்தார்
மறையோ ரெல்லாம் உத்தரீயம்
விண்ணிலேற விட்டு
(வெள். 13)
ஆர்த்தனர் எனக் காண்கின்றோம். சமாதானத்தைப் புலப்படுத்தவும் துகிலை வீசினர் (1863) என்பதனைச் சிந்தாமணி யியம்பும்.
- ↑ நாட்டுப்புற நம்பிக்கைகள்-தமிழவன், பக்கம்-34.
- ↑ Hebrew women like the women of Assiriya in the temple, they had to wear a transparent veil which covered the whole head and face.
—The story of Clothes - Agnes Allen, Page-46. - ↑ Egyptian Priests wore clothes similar to those worn by other men but in the temple they were not allowed to wear anything but linen. In later times they seem to have been allowed to wear cotton garments outside the temple. The Rosetta Stone, which we can see in the British Museum has an inscription on it written in three different scripts one in Greek and the others in two different kinds of Egyptian writing. It was probably written about 196 B.C. and it mentions Cotton garments supplied for the use of the priests. They were allowed to wear an outer cloth made of wool, but they had to take it off before entering the temple and they must not at anytime wear a woollen garment they touched the skin. The Egyptians believed that a fabric woven from fibres that came from an animal was not so clean as one made from fibres that came that from a plant.
—The Story of Clothes - Agnes Allen. page. 31. - ↑ Remember that only Royalty and Court dandies would be dressed in the latest fashion of the period; the poorer folks dress could be well be ten years or more behind the time.
— Discovering Costume- Audery. I. Barfoot, page-9. - ↑ Pomp and show are a special feature of Hindu Marriages, At the time of the marriage both the bride and bride-grooms parties vie with one another to display and offer as presente brocade saries and other rich garments.
—Costumes Textiles Cosmotics and Coiffure-Dr. Moti Chandra, page-58.