தமிழர் ஆடைகள்/016
நம்பிக்கைகள்
‘பொதுவாக நம்பிக்கைகளுக்கும், சிறப்பாகத் தெய்வ நம்பிக்கைகளுக்கும் காரணம் காணுதல் இலகுவன்று’[1] என்பார் டாக்டர் கைலாசபதி. நம்பிக்கைகளில் ஒரு சிலவற்றிற்குக் காரணம் புலப்பட, பெரும்பான்மையன, தெளிவுபடாதனவாகவே அமையும் நிலையில் இக்கருத்து உறுதிப்படுகின்றது. இன்றைய நிலையில், காரணம் முற்பட்டு, காட்ட காரணத்துடன் கூடியன எனச் சுட்டப்படத் தக்கனவற்றை நம்பிக்கைகள் என்றும், காரணம் கற்பிக்க முடியாதவற்றை மூட நம்பிக்கைகள் என்றும் வழங்குகின்றனர். இவற்றுள்ளும் சிலர் சிலவற்றைப் பொருளுடையதாகக் கூறினும், பிறர் ஏற்றுக் கொள்வது இல்லை. எனவே காரணம் சுட்டப்பட்டனவும் மூடநம்பிக்கையாக வழங்கப்படல் உண்டு. இந்நிலையில் நம்பிக்கை என்பது இன்னதென்று வரையறைப்படுத்தவோ, எடுத்தியம்புவதோ இயலாத ஒன்றாகின்றது. எனவே மாந்தர் மனத்தின் ஒருவித உணர்வே நம்பிக்கை எனலாம்.
மாந்தர் தம் மனம் எண்ணும் நிலையில் உள்ள அனைத்துப் பற்றியும் பலவித நம்பிக்கைகள் கொண்டுள்ளனர். அருவி நீருடன் இணைந்து ஓடிவரும் பொருட்கள் போன்று, காலந்தோறும் மனிதனின் பல்தரப்பட்ட நம்பிக்கைகளும் அவனது வாழ்க்கை வரலாற்றில் படிந்து கொண்டே வருகின்றன. ஓடிவரும் நீரில் சில பொருட்கள் ஆங்காங்கு தங்கி விடுதல் போன்று சில அவ்வக் காலத்திற்குரியனவாகத் தங்கி விடலும் உண்டு.
காலம், நாடு போன்ற பல சூழல்களுக்கேற்ப நம்பிக்கைகள் மாறுபடுவதையும் நாம் காண்கின்றோம். சான்றாக, சிலவற்றை நோக்கலாம். எகிப்தியப் பாதிரிமார்கள், செடியினின்றும் கிடைக்கும் ஆடை, பிற ஆடைகளை விடத் தூய்மையானது எனக் கருதி அதனையே கோயிலினுள் அணிந்தனர். ஆயின் இன்று தமிழரில் அந்தணர் கம்பளி ஆடை எப்போதுமே மடித்தன்மையுடையது என்று கருதுகின்றனர். இதைப்போன்று தூய்மையுடன் ஆடை இருக்க வேண்டும். கந்தையுடை (அழுக்குடை) யுடுப்பின் மூதேவி வந்து அடைவாள் என்பதும் தமிழர் நம்பிக்கையாகும். ஆயின் மங்கோலிய மக்களிடம் காணப்பட்ட இதற்கு எதிரானதொரு நம்பிக்கையினை மார்கோபோலோ கட்டுவார்.
‘துணிகளை மங்கோலிய மக்கள் துவைக்க மாட்டார்கள். உண்மையிலேயே ஆற்று நீரில் துவைத்தால் அங்குள்ள தேவதைகளுக்குக் கோபம் வரும் என்று எண்ணினர்’.[2] இந்நம்பிக்கைகளின் மாறுதலுக்குரிய காரணம் புரியவில்லை. இத்தகைய முரண்பட்ட நம்பிக்கைகளுக்கு அவரவர்களின் மனஓட்டமே காரணம் எனலாம்.
இந்நம்பிக்கைகள் முழுவதையும் காண, இவை மனிதனின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், மீவியல்புக் கூறுகளுடன் தொடர்பு கொண்டும், இயற்கைச் சக்தியின் மேல் உள்ள அச்சம் காரணமாகவும், சமுதாயச் சூழலில் எழுந்தனவாகவும் பல்நிலைகளில் தோற்றம் கொண்டிருக்கக் காண்கின்றோம்.
இந்நம்பிக்கைகளுள் சில சிந்தனை ஓட்டத்திலேயே நின்றுவிட, பல பழக்க வழக்கமாகவும் உருவெடுக்கின்றன.
இத்தகைய நம்பிக்கைக் கூறுகளுள் ஆடை தொடர்பாகவும், சிலவற்றை மாந்தர் கொண்டு திகழ்ந்தனர். இவையும், ஆடையைப் பற்றிய மக்களின் சிந்தனைகளுக்கேற்ப மாறுபட்டன. ஆடையின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வோர் தேவதை இருந்ததாக நம்பினர் வடநாட்டார்.[3] தமிழரிடம் இந்நம்பிக்கை இல்லை.இவண், நாகரிகம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் சில நம்பிக்கைகளில் (மூடநம்பிக்கைகளில்) பிடிப்பு ஏற்படத்தான் செய்கிறது. அப்படி மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாவற்றுக்கும் காரணம் இல்லாமல் இருந்ததில்லை. அத்தகைய நம்பிக்கைகளுக்கு விஞ்ஞான மருத்துவரீதியில் ஏதோ ஓர் காரணம் இருக்கத்தான் செய்கிறது என்ற உண்மையை ‘All About Superstitions’ என்ற புத்தகம் நல்ல தெளிவான முறையில் விளக்குகிறது அவற்றில் சில.
1. சேலையின் முந்தானையைக் குழந்தை தொட்டுவிட்டால் குழந்தைக்கு வியாதி வரும்.
2. புதுத்துணிகளை வெள்ளிக்கிழமை வெட்டவோ கிழிக்கவோ கூடாது.இந்நிலையில், இலக்கியங்கள் உணர்த்தும், தமிழரின் ஆடையுடன் தொடர்புடைய நம்பிக்கைகள் என்னென்ன என்பதை தமிழர் ஆடை வரலாறு உணர்த்துமாற்றை இவண் காணலாம்.
1. வினை
செய்யும் வினைகளுக்கேற்ப, நன்மையினையும், தீமையினையும் மாந்தர் அடைவர் என்பது தமிழரிடம் அன்று முதல் இன்றுவரை வழங்கிவரும் ஒரு நம்பிக்கையாகும்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
(126)
என்று ஒரு பிறப்பில் வாழும் நிலை, எழுபிறப்பிலும் சிறப்பினைத் தரவல்லது என்னும் தெய்வப்புலவர் குறள் இக்கருத்தில் எழுந்ததே. இதனைப்போன்று தீயோராயினும் அவர்களின் செல்வ வாழ்வுக்கு உரிய காரணம் முற்பிறவியில் செய்த பயனே என்ற எண்ணம் தமிழரிடம் இருந்தது. இதனை நாலடியார்,
புணர் கடல்சூழ் வையத்துப் புண்ணியமோவேறே
உணர்வதுடையா ரிருப்ப உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல் வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து
(நாலடி. 264)
வினை பற்றிய நம்பிக்கை ஒருபுறமிருப்பினும் சிறப்பான வாழ்வு என்பது பட்டும் துகிலும் உடுத்து வாழ்தலே என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது.
நல்வினைகளுள் ஒன்று கொடை செய்தலாகும். தமிழரிடம் இவ்வியல்பு தொன்றுதொட்டே காணப்பட்டது என்பது விருந்தோம்பலிலும் இரவலர்க்கு ஈதலிலும் பெறப்படும். இவற்றுள் ஆடைக் கொடை செய்வார் நன்மையடைவர் செய்யாதார் தீமை அடைவர் என்னும் நம்பிக்கையும் காணப்பட்டது.
கற்றாரை கற்றது உணரார் என மதியார்
உற்றாரை யன்னண மோராமல்-அற்றார்கட்கு
உண்டி உறையுள் உடுக்கை யினை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று
(ஏலாதி. 9)
எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே யிவற்றோடு-கொள்ளென
அன்புற்றசனம் கொடுத்தான் றுணையினோ
டின்புற்று வாழ்வா னியைந்து
(ஏலாதி. 50)
ஐயமே பிச்சை யிருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி ஈந்தான்-வையமும்
வானும் வரிசையாற் றானாளு நாளுமே
யீனமே இன்றி இனிது
(ஏலாதி. 70)
என்று ஆடைக் கொடை செய்யின் சிறந்த வாழ்வு கிடைக்கும் என்னும் நம்பிக்கைகளை மாந்தர் மனத்தில் ஊட்டும் வண்ணம் இக்கருத்துகள் அமைகின்றன.
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாத நல்லறமும் செய்யார் வைத்தீட்டினார் இழப்பர்
(நாலடி. 10)
என்ற நிலையில் ஆடைக் கொடை செய்யாது தானும் உடாது இருப்போர் அடைவது தீமையே என்றதொரு நம்பிக்கையும் அமைகின்றது.
உடை கொடுப்பவன் நன்மையடைவதும், கொடாதவன் தீமை அடைவதும் உண்டு எனினும், எதையும் கொடுப்பதைத் தடுப்பவன் கொடாதவனைவிடத் தண்டனை பெறுவான் என்பதையும் தமிழர் நம்பினர். இதனடிப்படையில் எழுந்ததுவே,கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
(166)
என்ற குறட்பாவாகும் இதனையே கம்பர்,
கொடுப்பது விலக்குக் கொடியோர்-தம்சுற்றம்
உடுப்பதூஉம் உண்பதுவும் இன்றி அழியும் காண் (கம்ப. 451)
என்று வலியுறுத்தக் காணலாம்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத்தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்
(1023)
என்ற குறள் கருத்தும், குடி உயர்ந்து விளங்கச் செய்வேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் விரைந்து வந்து உதவும் என்னும் நம்பிக்கையில் எழுந்ததே.
கனவு
கனவு பலிக்கும் என்பதும் அவை பின் வருவதுணர்த்தும் நன்னிமித்தமாக அல்லது தீநிமித்தமாக அமையக்கூடும் என்பதிலும் தமிழர் நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆடை பற்றிய சில கனவுகளையும் இலக்கியங்கள் சுட்டி, அவை மூலம் தமிழரின் இந்நம்பிக்கையினை வெளிப்படுத்துகின்றது.
காழக நீப்பவும் களிறுமேற் கொள்ளவும் (புறம். 41)
என்னும் எண்ணத்தைச் சங்கப்பா நவிலும். களிறு, பன்றி என்ற பொருளில் அமைந்து, பன்றியின் மேல் ஊர்ந்து செல்லல் போன்றும், ஆடையை நீத்தல் போன்ற கனவும் கேட்டுக்கு அறிகுறி என்னும் தமிழர் எண்ணத்தைப் புலப்படுத்துகின்றது.
சிலம்பிலும் இக்கனவு பலித்தல் விளக்கப்படுகின்றது.
கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும்
(15:98)
திரிசடை இராவணனை அரத்த ஆடையனாகக் கனவு கண்டு, அதனைச் சீதைக்குக் கூறுகின்றாள் (சுந்தர. 174). அவனுக்குக் கேடும், சீதையின் நல்வாழ்வுக்குரிய நிமித்தமாகவும் இதனைச் சுட்டுகின்றாள். அரத்த ஆடையைக் காணல், உடுத்தியவர்கட்குத் தீது தரும் நிமித்தம் என்ற உணர்வு இங்கே அமைகின்றது. கம்பன் செம்மையை மங்கலக்கோலம் என்று எண்ணிய தமிழர் உணர்வினையும் காட்டுவான். ஆயின் கனவில் அரத்த ஆடை தீங்கு தருவதாகச் சுட்டுகின்றான். எனவே இரத்தத் தொடர்பு காரணமாக இதனைக் கனவில் காணல் நன்றன்று என்று எண்ணியிருந்திருக்கலாம். அல்லது அரத்த ஆடையினை இரத்தம் தோய்ந்த ஆடை எனக் கொள்ளலும் இக்கருத்துக்குப் பொருத்தமாகின்றது.
ஆடையைப் பற்றிய இவ்வனைத்துக் கனவுகளும் தீநிமித்தங்களாகவே அமைவதை இங்கே சுட்டலாம். இன்றைய நாட்டுப்புற நம்பிக்கை பெண் உடையைக் காணல் தீது[4] என்று சொல்லலும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கதாகும்.
கற்பு
மணிமேகலையில் ஆதிரை எரிபுக, கற்புத் தீயினால், தீ அவள்மேல் பற்றவில்லை. இதனை, ‘கற்புடைய பெண்டிர் உடுத்த கூறை எரியுண்ணாது’ (10:30) எனக் கற்புடைமை காரணமாக, உடல் அன்றி உடையும் எரியுண்ணாது என்ற நம்பிக்கையைச் சுட்டி விளக்குவர் சாத்தனார். கற்பின் சிறப்புக் காரணமாக உடையும் சிறப்புப் பெறுகின்றது. பிற பெண்டிரிடம் இருந்து கற்புடைய பெண்டிர் உயர்ந்தவர்கள் என்பதையும் கற்பின் திறத்தையும் மேம்படுத்தும் நிலையில் இந்நம்பிக்கை தமிழரிடம் காணப்பட்டது எனலாம்.
மந்திரம்
மாந்தர் மந்திரசக்தி யுடையவராக இருத்தல் கூடும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் இருந்தது.
மந்திரத்துடன் மேலும் சில மீவியல்புக் கூறுகள் இடம் பெறுகின்றதைக் காண்கின்றோம். இயக்கர் மீவியல்பு ஆற்றல் பொருந்தியவர்கள் என்ற எண்ணமும் இதனுள் அமைகின்றது. எனவே மனிதர்களிடம் இருந்தும் தனிப்பட்டவர்கள், மேம்பட்டவர்கள் என்னும் நம்பிக்கையில் இவர்கள் துகில் சோர்வுறாது என்றும் மாசுறாது என்றும் நம்பினர். இதனைச் சிந்தாமணிப் பாடல் ஒன்று விளக்குகின்றது.
இதுவென வுருவென இயக்கி என்றலும்
புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலால்
மதுவிரி கோதையம் மாலைநின் மணம்
அது முறை யியக்கலின் இயக்கி யாகுமே
(1015)
எனத் காந்தர்வதத்தை கூறுவதாக அமைகின்றது. குணமாலையைக் கண்டு, பூந்துகிலும், குழலும் சோர எழுதுதலின் புதிய ஓர் இயக்கி என்கின்றாள். எனவே இயக்கிக்குத் துகில்கள் சோர்வுறாது என நம்பிய மக்கள் நம்பிக்கை தெளிவாகின்றது. இதற்குரிய விளக்கத்தில் உ.வே.சா. அவர்கள் ‘ஆடையுடன் பிறத்தலும், மயிர் பிறந்த காலத்தில் இருந்தபடியே இருத்தலும் இயக்கர்க்கு இயல்பு என்பர்’ என்னுமொரு எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றார். தமிழரிடம் இந்நம்பிக்கை இன்று இருப்பதாகத் தெரியவில்லை.
கற்பகக் கானம் பற்றியதொரு நம்பிக்கையும் இலக்கியத்தில் இடம் பெறுகின்றது.
துறவின்போது அனைத்துப் பொருட்களையும் பரிசிலாக நல்கும் சீவகனை,
பூந்துகில் புனைகலமாலை பூசுசாந்
தாய்ந்துல குணவு வந்தருளி மாமணி
காந்திய கற்பகக் கானமாயினான்
ஏந்திய மணிமுடி யிறைவ னென்பவே
(2997)
எனச் சுட்டுவார் திருத்தக்கதேவர். இவை முறையே விசித்திர வஸ்திரங்களைக் கொடுக்க வல்லது. ஸ்ரீபுராணத்தில் கண்டது என்று இதற்கு விளக்கம் அமைப்பார் உ.வே.சா. அவர்கள். இன்றும் கற்பகத்தரு கேட்டது எல்லாம் கொடுக்க வல்லது என்ற நம்பிக்கை தமிழரிடம் உண்டு. கற்பகத்தரு கொடுக்கும் நிதியும் பொருளும் பலப்பல என்ற எண்ணமும் தமிழரிடம் காணப்பட்டது என்பது கம்பன் பாடல் வழிப் (சுந்தர. 422) புலனாகின்றது. புராணக் கதைகளின் மேல் தமிழர் கொண்ட நம்பிக்கையின் விளைவே இந்நம்பிக்கையும் எனக் கருதலாம்.
முடிவுரை
மனித வாழ்வில் முக்கியப் பங்கு கொள்ளும் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் தமிழர் ஆடை வரலாற்றில் பெற்றுள்ள சிறப்பினை நோக்க,
1. காலம், சமுதாய நிலை, நிலம், தொழில், சடங்கு போன்ற ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப, ஆடை வகைகளையும் அமைத்துக் கொண்ட தமிழரின் அறிவு மேம்பாடு.
2. வாழ்வியற்கூறுகள் ஒவ்வொன்றிலும் ஆடையின் தாக்கம் அமைய, தமிழர் ஆடைக்குக் கொடுத்திருந்த முக்கியத்துவம்.
3. மனித வாழ்வியல் ஆய்வுக்கு, ஆடை ஆய்வும் சிறந்த பயனைத் தரவல்லது.
போன்ற பல கருத்துக்கள் வெளியாகின்றன.
மேலும் உலக நிலையில், மாந்தர் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளுடன் தமிழர் நிலையினை ஒப்பிட்டுக்காண உடுத்தும் முறை, உடையமைப்பு இவற்றில்தான் வேறுபாடு அமைகின்றதே தவிர, அடிப்படைகளில் மிகுதியான வேற்றுமை இல்லை. எனவே மாந்தர் மனம், காலம், சூழல் இவற்றால் வேறுபடினும் அடிப்படை உணர்வுகளில் ஒற்றுமையுடையது என்பது தெளிவுறுகின்றது. பகவத்கீதையின், வேற்றுமையில் ஒற்றுமையுடையது எண்ணங்கள் என்ற கூற்று[5] இவண் பொருந்தக் காணலாம்.
- ↑ பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - க. கைலாசபதி, பக்கம்-44.
- ↑ மார்க்கோபோலோ - மாரிஸ் காலிஸ் - தமிழாக்கம் - பெ. திருஞான சம்பந்தன், பக்கம்-73.
- ↑ வேத இலக்கியங்களில் ஆடையின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வோர் தேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
—கலைக் களஞ்சியம், தொகுதி-1, பக்கம்- 352.
Since clothing was associated with man only the Vedic Indian sensibly considered that clothes must be connected with divine mysteries. Different parts of the garment were therefore consecrated to different gods while the borders and middle portion were considered the preserve of ancestors.
—John Kenneth Galbraith Introduces India-Ed. Frank Moracs and Edward Howe,
—Indian Costumes - Tara Ali Baig, Page-154. - ↑ கனவில் பன்றி, பூ, பெண், ஆடு, பச்சைமரம், பெண்உடை, விறகு வண்டி, ஓடும் நீர் போன்றவற்றையும் காண்பது நல்லதல்ல.
—நாட்டுப்புற நம்பிக்கைகள்—தமிழவன், எண். 245. - ↑ Know that knowledge whereby are sees in all beings immutable entity... a unity in diversity was written in the Bhagavath Gita......
—John Kenneth Galbraith Introduces India—Ed.Frank Moraes and Edward Howe, Indian Costume, Tara Ali Baig, Page-154.