உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் ஆடைகள்/019

விக்கிமூலம் இலிருந்து

2. மிளிரவைத்தல்

ஆடை உருவாக்கத்திற்கு அடுத்த நிலை ஆடையை மிளிரவைத்தலாகும். ‘தங்கமுருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பிய தோரிங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணை யினிதென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி விண்ணை அளக்குமொளி மேம்படுமோரின்பமன்றோ? நல்லொளிக்கு வேறு பொருள் ஞாலமிசையொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பபாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன்’. தமிழர் எதிலும் எவ்விடத்திலும் எக்காலையிலும் காணக்கிடைக்கும் அழகினைக் கண்டுகளிப்பதில் இணையற்றவர் என்பதற்குச் சான்றாக அமைவது பாரதியின் இப்பாடல்.

இவ்வாறு எதிலும் அழகைக் காணும், காணவிழையும் மனித மனம் தன்னுடன் மிக நெருங்கிய ஆடையிலும் காண எண்ணியதே ஆடையினைப் பல்வகையிலும் வனப்பூட்டுதலுக்கு அடிப்படையாகும். இந்நிலையில் ஆடையின் ஒவ்வொரு பகுதியும் இவர்தம் கை வண்ணத்தில் அழகுபெறத் தொடங்கியது. இவற்றை வண்ணமூட்டல், பூவேலைப்பாடுகள் செய்தல், கரையழகு செய்தல், மணமூட்டல், பளபளப்பாக்கல் போன்ற பல வகைகளாகக் காணலாம்.

1. வண்ணமூட்டல்

இயற்கை மானுடனுக்கு அளித்த பல செல்வங்களுள் நிறம் பற்றிய உணர்வும் ஒன்றாகும். பச்சைநிறக் கம்பளத்தைப் போர்த்தியது போன்று வானளாவ உயர்ந்து நிற்கும் மலையும், அலை அலையாகப் பரந்து செல்லும் நீனிற மேகமும், பலநிறக் கலவையால் மனதைக் கொள்ளை கொள்ளும் வானவில்லும், கொஞ்சும் எழில்படைத்த பறவைகளின் மென்மைமிகு நிறக் கூட்டங்களும் நிறம் பற்றிய உணர்வை மனிதனுக்கு ஊட்டியதில் முன்னிற்பன. இயற்கையின் எழிற் காட்சிகளில் இதயத்தைப் பறிகொடுத்த மனிதன் தன் படைப்பிலும் அவற்றைக் கண்டுகளிக்க எண்ணிய விருப்பின் விளைவே வண்ண உருவாக்கத்தின் வெளிப்பாடு எனலாம். ஆடைகளுக்கும் நிறமூட்டி, கவர்ச்சியும் அழகும் மிகச் செய்கின்றான். சங்கப் பாக்களிலேயே இத்தகைய வண்ண ஆடைகளைக் கண்டு வியக்கின்றோம். இவண் குன்றியேய்க்கும் உடுக்கை, பொன்புனையுடுக்கை, நீலக் கச்சை, கல்தோய்த்த உடுக்கை, கருந்துவராடை என்ற நிலையில் சிவப்பு, மஞ்சள், நீலம், காவி, கறுப்பு போன்ற பல நிறங்களைக் காண்கின்றோம். காலவளர்ச்சியில் கடுமையான நிறம் தவிர மென்மையான நிறங்களையும் ஊட்டினர்.

பெருங்கதையில் மகளிர் நீராட்டுப் பற்றிக் கூறுமிடத்துக் கொங்குவேளிர்,

அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்
... ... ... ...
இனையா விருப்பிற் றம் விளையாட்டு முனைஇ
கயம் பாடவிய புறங்கரை போந்த பின் (1.42:193-98)

அவர்கள் தங்களை அணிசெய்து கொள்கின்ற தன்மையை உரைக்கின்றார்.

பைங்கூற் பாதிரிப் போது பிரித்தன்ன
அங்கோசிகமும் வங்கச் சாதரும்
கொங்கார் கோங்கின் கொய்ம்மலரன்ன
பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்
நீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்
கோலமொடு புணர்ந்த வேறு வேறியற்கை
நூலினு முலண்டினும் நாரினும் இயன்றன
யாவை யாவை யவையவை மற்றவை
மேவன மேவன காமுற அணிந்து (1:42:204-12)

என்று விளக்குகின்றார். பல்வண்ண ஆடைகள் இங்கே உணர்த்தப்படக் காண்கின்றோம்.

கம்பன், காடேகுவான் இராமன் என்பதறிந்த நகர மகளின் செயலாக,

பல்நிறத் துகிலினைப் பறித்து நீக்கி (1885)

சாதாரண ஆடையினை அணிந்தனர் என்பதனைக் காட்டுகின்றான். நிறமுடைய ஆடைகள் பற்றிய வண்ணத்துடன், இவை உயர்வான ஒன்றாகவும், இன்பத்தின் புலப்பாடாகவும் விளங்கியது என்பதும் இவண் தெளிவுபடுகின்றது.

வண்ணம் தோய்க்கும் இயல்பு புலப்படும் நிலையினையும் பெருங்கதை பேசுகின்றது.

வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ
நீலக் கட்டியும் மரகதத் தகவையும்
பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
பிடித்துருக் கொளீஇக் கொடித் திரியோட்டிக்
கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர் (3.1:95-100)

இதற்குரை எழுதும் கழக உரையாசிரியர், ‘வெள்ளிய நூலாலியன்ற அழகிய துகிலின்கண் வண்ணமூட்டி நீனிறக் கரையும் மரகத நிற உடலும் பச்சிலைக் கரையும் பொன்னிற உடலும் பல்வேறு கோலமாகக்கொண்டு கொய்து கூட்டிப் பிடித்து உருவமைத்து ஊடே ஊடே பூங்கொடி யுருவ முண்டாக வண்ண நூற்றிரிகளைப் போக்கி ஒப்பனை செய்தமைத்த கலிங்கமாகிய ஆடைகளை யுடுத்தோராய் செல்கின்றனர்’ என்கின்றார். இவண் வண்ணமூட்டலுடன் பிற ஒப்பனை பற்றிய எண்ணமும் அமைகின்றது.

வண்ணங்கள் பல இருந்தும் ஆடைக்குரிய வண்ணங்களாக ஐந்தினைத் தான் கருதியிருந்தனரோ என்ற எண்ணம்,

அறுவைக் கோதிய ஐவகை வண்ணம் (பெருங். 2.5:128)

அஞ்சு வண்ணத்தின் ஆடையுடுத்தாள் (கம்ப. சுந்தர. 174)

போன்ற குறிப்புகளால் எழுகின்றது.

பின்தோன்றிய இலக்கியங்களும் இப்பஞ்ச வணத்தையே சிறப்புற இயம்புகின்றன.

சான்றாக,

பட்டும், பஞ்ச வணத்தழகு துலங்க (முக்கூடற். 8)

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் வேறுண்டோ நீ
நோக்கிய வண்ணங்கள் நூறுடையாய் (தமிழ்விடு. 74)

என்பனவற்றைக் காட்டலாம்.

பஞ்சவணம் என்பது வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற ஐவகை நிறங்கள் என, தமிழ் லெக்சிகன் இயம்புகிறது. இவண் நீல ஆடை சுட்டப்படவில்லை, பொது நிலையில் இலக்கியங்கள் கறுப்பினை விடவும் நீல ஆடையையே சிறப்பிக்கின்றன. எனவே நீல நிறம் விடப்பட்டதன் காரணம் மேலும் ஆய்வுக்குரிய ஒன்று. இவ்வனைத்து எண்ணங்களும் இத்தொழிலின் தொன்மையை உணர்த்துவன. உறுதுணையாக, தொல்லியல் ஆய்வுகளும் அமைகின்றன, சங்க காலத்தைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் சாயத்தொட்டிகள், அரிக்கமேட்டிலும்[1], உறையூரிலும்[2] அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொல் பொருளாய்வும் தமிழர் பண்பாடும் என்னும் கட்டுரை ஒன்றும் அரிக்கமேடு சாயத்தொட்டி பற்றிய எண்ணத்தைத் தருகின்றது (தமிழ்ப்பொழில், 1971, நவம்பர்-டிசம்பர், பக்கம்-231).

இவ்வாறு வண்ணம் தோய்க்கும் தொழில் தன்மையைக் காண, அனைத்துச் செய்திகளும் நெய்த அறுவையில் வண்ணம் தோய்த்தலையே சுட்டுகின்றது. அறுவைக் கோதிய ஐவகை வண்ணம் என்னும்போது ஆடை என்ற பொருளே அமைகின்றது. அடுத்து,

வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ

என்பதும் வெண்ணூலால் ஆகிய பூந்துகிலுக்கு வண்ணம் ஏற்றப்பட்டது என்பதைத் தெரிவிக்கின்றது. நூலில் வண்ணம் தோய்த்துப் பின்னர் அதனை ஆடையாக நெய்தனர் என்பதற்குரிய சான்றுகள் எதையும் காணக் கூடவில்லை. எனவே ஆடையை நெய்த பின்னரே அதற்கேற்ற சாயம் தோய்த்தனர் என்பது உறுதிப்படுகின்றது. ஆயின் இன்று நூல்களே வண்ணம் தோய்க்கப்பட்டு ஆடையாக நெய்யப்படுகின்றன.

பூவேலைப்பாடுகள் செய்தல்

அழகுக்கு அழகு செய்வதில் தமிழர் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பதனை ஆடைகளிலும் பூக்கள்போன்ற சித்திரங்களை அமைத்து அதன் மதிப்பினை உணர்த்தினர் என்பதால் பெறலாம் சங்க காலத்திலேயே இக்கலையுணர்வில் தமிழர் தேர்ந்திருந்தனர். பூவிரிக்கச்சை, பூந்துகில், சில்பூங்கலிங்கம் என்று அடைகள் வழியாகப் புலப்படுத்தப்படும் சித்திரச் செயற்பாடுகள், விளக்கமாகவும் புலவரால் இயம்பப்படுகின்றன.

வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் (மணி. 3:167-169)

படாத்திற்கு உவவனம் உவமையாகின்றது. படாம், வினையில் வல்ல வித்தகரின் கைவண்ணத்தால் பொலிவு பெற்று இருப்பதுபோல என்னும் நிலையில் சித்திரச் செய்கையைச் சிறப்பிக்கின்றார் சீத்தலைச் சாத்தனார்.

வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம்
எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுதல் அளைஇ (பெருங். 1.42:34-5)

பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்
கருங்கட்பாவை கவின் பெறவைகினாள் (சீவக. 1033)

என்பனவும், ஆடையில் செய்த சித்திரக் கோலங்களைச் செப்புவனவே. கம்பன் சித்திர நுண்டுகிலைக் காட்டுவான். இத்தகைய வேலைப்பாடுகளைத் துகிலிகைத் தொழில் என, சூளாமணி சுட்டும். வடிவங்கள் எழுதப்பட்ட ஆடை ‘சித்திரக் கம்பி’ என்று வழங்கப்பட்டது என்ற எண்ணமும் ஈண்டு நினைத்தற்குரியது.[3]

பூவேலைப்பாடுகளே அன்றி ஆடையில் முத்துகளை வைத்து இணைத்து அழகூட்டும் கலையைப்பற்றி இயம்புகின்றது நந்திக் கலம்பகம்.

அடிவிளக்கும் துகிலாடைவிளக்கும் அரசர் பந்திப் பிடி விளக்கும்
விடி விளக்கு மதுவே நாங்கள் பூண்பதும் வெண்முத்தமே
(4. அதிகமாகக் காணப்படும் செய்யுள்)


கரையழகு செய்தல்

தங்களுக்கெனச் சில மரபுகளையும், நம்பிக்கைகளையும் காலங்காலமாகத் தமிழரும் கொண்டுள்ளனர். கரையில்லாத ஆடையைக் கட்டுதல் கூடாது என்ற எண்ணமும்[4] அவற்றுள் ஒன்று.

பண்டுதொட்டே தம் ஆடைகளில் கரையின் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பதைக் காண இவ்வெண்ணத்தின் தோற்றம் அன்றே கால்கொண்டிருக்குமோ என்ற சிந்தனை எழுகின்றது.

சங்க இலக்கியம் பட்டுடையில் அமைந்த கரையினை, ‘கொட்டைக் கரைய பட்டுடை’ (பொருநர். 155) என்று இயம்பும். பட்டுடையில் அமைந்த கரையும் வேலைப்பாட்டுடன் அமைந்தது என்பது இதனால் புலப்படும்.

கரையழகிற்கு மிக முக்கியத்துவம் இருந்தது என்பதனை,

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையில்
கல்வி அழகே அழகு (நாலடி. 131)

என்ற பாடல் புலப்படுத்தி நிற்கின்றது.

‘கரைகளில் எழுத்துருவங்கள் வர மேல்தூக்கி நெய்யப்பெற்ற ஆடைகளும், கரை வேறு உடல் வேறு நிறமாகப் பாவோடி உண்டை மறித்து வாங்கிய ஆடைகளும் இருந்தன என்பது பொன்னெழுத்து நூல் யாப்பு என்ற பெயரானே அறியப் பெறும்’[5] என்னும் கருத்து கரை அழகுக்கும் இயல்புக்கும் ஏற்ப ஆடைகளின் பெயரும் அமைந்திருந்தன என்பதை உணர்த்துவதாகும். கரையின் சிறப்புக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு, ‘அவளுக்கென்ன மகராசி முப்பாகம் புடவை கட்டுகிறாள்’, என்ற பழமொழியினாலும் விளக்கம் பெறும். முப்பாகம் புடவை என்பது மேலும், கீழும் கரையும் இடையில் உடலும் வரும் தன்மையுடைய சேலையாகும். இன்றும் கரையின் சிறப்புக்கிணங்கச் சேலையின் மதிப்புக் கூடல் கண்கூடு.

மணமூட்டல்

மணப் பொருட்கள் எனில் அவற்றின்பால் மால் கொள்வது மாந்தர் இயல்பு. தம்முடம்பைச் சந்தனக் கலவைகளால் மணமூட்டிய தமிழர் தம் உடைகளுக்கும் புலைகளால் நாற்றம் கொளுவினர்.

வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட
அகிலும் புகையு மாரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த (14:106-7)

என்ற சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரையாசிரியர் ‘துகில் - பட்டு வர்க்கம் நாற்றம் கொளுவுதலால் இவற்றுடன் எண்ணினார்’ என்று உரை விளக்கம் தருவார். மணப் பொருட்களுடன் ஆடையையும் ஒருங்குவைத்து எண்ணப்படும் அளவிற்கு வாசமூட்டலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது இவண் புவனாகும்.

இம்மணமூட்டுப் பொருளைப் புகை என்றும் தூமம் என்றும் இலக்கியங்கள் குறித்துச் செல்கின்றன. சங்க காலத்திலேயே,

மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப (மது. 653)

என்று கால்கொண்ட இச்செயல்,

காடிக் கலந்த கோடிக் கலிங்கம்
கழும வூட்டும் காழகில் நறும்புகை
முழுநிலா மாடத்து முடிமுதறடவக் (பெருங். 1.54:9-11)

எனவும்,

பூந்துகிற் கொடுத்த தீந்தேன் அகிற்புகை
பொன்னன்னார் தம் கூந்தலிற் வண்டு
                              கொப்புளித்திட்ட வாசம் (சீவக. 1855)

தூமஞ் சூடிய தூத்துகில் ஏந்தல்குல்
தாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினார் (சீவக. 875)

தூமத்தினார்ந்த துகிலேந்திய அல்குல் தாதை (சீவக. 1966)

எனவும் தொடர்ந்து பயின்று வரக் காணலாம்.

அழகியதொரு உவமை வாயிலாகப் புகையூட்டும் தன்மையைச் சிந்தாமணி நயமுற எடுத்துக் காட்டுகிறது.

காடியுண்ட மகளிரும் கழுமவூட்டும் பூம்புகை
மாடமாலை மேனலார் மணிக் குழலின் மூழ்கலிற்
கோடுயர்ந்த குன்றின் மேற்குழீஇய மஞ்ஞைதஞ்சிற
காடு மஞ்சினுள் விரித்திருந்த வண்ணமன்னரே (சீவக. 71)

என்பது அப்பகுதி துகிலுக்கு ஊட்டிய புகையின் மிகுதியால் மகளிரின் குழல்கள் மறைய அவர்கள் மாடத்தின் மேலிருக்கும் தன்மை, மலை மேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித்திருந்த தன்மையை ஒத்தது என்று இவண் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் துகிலினை அணிந்த பின்னும் தூமம் சேர்த்தனர் என்பது பெறப்படும்.

துகிலுடன் பிற பொருட்களுக்கும் புகையூட்டிய நிலையினை,

காடிக் கொண்ட கழுவுறு கலிங்கம்
தோடமை தூமடி விரித்த் சேக்கை (நெடு. 133-35)

என்பது சுட்டும். சிந்தாமணியும் இதனை,

தூமமே கமழுந் துகில் சேக்கை மேற்
காமமே நுகர்வார் (சீவக. 135)

என்று விளக்கக் காணலாம்.

புகையூட்டும் முறையில் சில வழிமுறைகளைக் கையாண்டதையும் இலக்கியங்கள் தெளிவாக உணர்த்தியுள்ளன. பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை,

தண்ணறுந் தகரமுளரி யமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப (நெடு. 55-6)

எனப் புகையூட்டலுக்கு அகிலையும், அயிரினையும் பயன்படுத்தியதை விளம்பும்.

குணதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் காரகிற் துறந்து (4:35-6)

என்று சிலப்பதிகாரத்தும் இது பேசப்படுகின்றது.

சிலப்பதிகார உரையில், ‘அயிர் - கண்டு சருக்கரை; கண்டு சருக்கரையுடன் அகிலைப் புகைத்தல் மரபு’ என்ற விளக்கத்தை அரும்பத உரையாசிரியர் அளிக்கின்றார். எனவே அகிற் புகையுடன், கண்டு சருக்கரையையும் மணத்தை மிகுதிப்படுத்தப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளல் இங்குப் பொருத்தமாகின்றது.

புகையுறுப்புக்கள் ஆறு; அவையாவன நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்று பகருவர்;[6]

இவற்றுள் அகிற்புகையே ஆடைகளுக்கு ஊட்டுவதில் முதன்மை பெற்றது என்பதனை, அனைத்து இடத்தினும் அதனையே சுட்டும் தன்மை உறுதிப்படுத்துகின்றது. தூமம் என்பதற்கும் அகிற்புகை என்றே பொருள் உரைப்பதும் இவண் இணைத்து நோக்கற்பாலது (சீவக. 719).

சிந்தாமணியின் 71-ஆம் பாடலில் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை நவிலுங்கால் ‘துகிலுக்கு ஊட்டிய புகையினை, பூம்புகை என்றாராயினும் அகிற்புகையே கொள்க’ என்று உரைப்பதும் இதற்குத் துணையானதொரு கருத்தாகும்.

ஆடைகளுக்குப் புகை மட்டுமன்றிச் சுண்ணமும் தூவி, மணங் காட்டியதனைத் தேவர் காட்டுகின்றார்.

கற்கணஞ் செய்த தோண் மைந்தர் காதலால்
நற்சுணப்பட்டுடைப் பற்ற நாணினால்
பொங்சுணத்தால் விளக்கவிப்பப் பொங்கிய
பொற்சுணம் புறம்பனை தவழும் பொற்பிற்றே (சீவக. 91)

என்ற பாடலில் சுண்ணப்பட்டு என்பதற்கு வாசனைப் பொடியை அளைந்த பட்டு என்று விளக்குவர் தமிழ்ப் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள்.

இன்ப உணர்வில் தமிழருக்கிருந்த ஆர்வத்தினையே இச்செயல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. கற்பூரத்தைத் துணியில் வைத்தால் பூச்சிகள் அரிக்காது என்ற எண்ணம் இன்று காணப்படும் ஒன்றாகும். புகையிடுதலை இதனுடன் இணைத்து நோக்க, துணிகள் பழுதுபடாது காக்கவும், ஆடைகளின்வழி உடம்பில் நோய்க் கிருமிகள் தாக்காமல் தடுக்கவும், நறுமணம் பெறவும் இப்பழக்கத்தினைத் தமிழர் கொண்டு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது. இஃது உறுதிப்படின் தமிழரின் அறிவியல் ஆய்விற்குச் சிறந்ததொரு சான்றாய் அமையும்.

இது தவிர அணிகலன்களை மெருகூட்டல் போன்று ஆடையினையும் மெருகூட்டவும் சில தொழில்முறைகளைக் கற்றுவைத்திருந்தனர் தமிழர் என்பதை, ‘கற்களினால் தோய்த்து ஆடையைப் பளபளப்பாக்கினர்’ என்ற அறிஞரின்[7] எண்ணம் விளக்கக் காணலாம்.

ஆடை உருவாக்கலிலும் பயன்பாட்டிலும் எண்ணம் செலுத்திய தமிழர் அதன் பாதுகாப்பிலும் பொறுப்புடன் செயல்பட்டதை இலக்கியங்கள் நவில்கின்றன. ஆடைகளைச் சிறப்புடைய வட்டிகளில் வைத்துப் பாதுகாத்தனர் என்பதற்குரிய சில சான்றுகளை இவண் சுட்டலாம்,

செப்பில் வைத்தனர் என்பதனை,

மாலையும் சாந்தும் மடியும் பெய்த
கையுறைச் செப்பொடு (பெருங். 1.35:27-8)

தூமணித் துகில்களார்ந்த வலம்புரித் துலங்கு செப்பு (சீவக. 2475)

என்ற பகுதிகள் சுட்டுகின்றன. வட்டியில் வைத்திருந்தனர் என்பது,

அணிகலப் பேழையும் ஆடைவட்டியும் (பெருங். 1.38:163)

கலிங்க வட்டியும் கலம்பெய் பேழையும் (பெருங். 1.38:285)

என்பவற்றால் தெளிவாகின்றது. மேலும் பேழையிலும் இது வைத்துப் பாதுகாக்கப்பட்டது என்பதனை,

செங்கோடிகமொடு ஆடைபுதைவுற்ற பேழை (சூளா. 870) என்ற குறிப்பு உணர்த்தும்.

ஈண்டு செப்பு, வட்டி, பேழை என்பன வெவ்வேறு வகையான பெட்டி வகைகளாக அமைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆயின் இவற்றின் வேறுபாடு புலனாகவில்லை. அமைப்பு நிலையிலேயே இவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது அணிகலன்களின் காப்பகமாக முதலில் விளங்கிய பேழை பின் ஆடைகளின் பாதுகாப்பிற்கும் பயன்பட்டமையால் உணரமுடிகிறது. அகராதி செப்பு என்பதைச் சிமிழ் என்றும்,[8] பேழை என்பதைப் பெட்டி என்றும்[9] உரைப்பதைக் காண, செப்பு சிறிய அளவு உடையதாகவும், பேழை பெரியதாகவும் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. செப்பு வலம்புரி வடிவம் கொண்டிருந்ததனைச் சிந்தாமணி ‘வலம்புரித் துலங்கு செப்பு’ எனும் கூற்றால் அறிவுறுத்தும்.

இவற்றுடன் ‘மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகில்’ (சீவக. 1146) என்னுமாற்றான் செப்புகளை அலங்கரிக்க மணிகளைப் பயன்படுத்தினர் என்பதும் செப்பில் வைத்துப் பாதுகாத்கப்படலை மங்கலமாகக் கருதினர் என்பதும் புலப்படுகின்றது.

பெட்டியில் வைத்துப் போற்றும் தன்மை பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணியிலேயே காட்டப்பட, அதற்கு முன்னைய சங்க இலக்கியம், சிலம்பு போன்றவற்றில் காணக் கூடவில்லை. எனவே பின்னைய வளர்ச்சி நிலையாக இதனைக் கொள்வதில் தவறில்லை. பலநிலைகளில் மேம்பாடடைந்திருந்த நம் முன்னோர் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புற ஆடையினைப் பாதுகாத்திருப்பர். ஆயின் அவ்வழி புலனாகுமாறில்லை.

கலிங்க வட்டி, கலிங்க நாட்டினின்றும் பெறப்பட்டது என்பதும் இவண் உணர்ந்துகொள்ள முடிகின்றது. வெளியே கொண்டு செல்லவும் இவற்றைப் பயன்கொண்டனர் என்பதையும் சில சான்றுகள் உணர்த்துகின்றன.

மாலையும் சாந்து ஆடை போன்றன பெய்த செப்பினை வயந்தகன் உதயணனைக் காணச் செல்லும்போது எடுத்துச் செல்கின்றான் (பெருங். 1.35:27-29) எனும் கூற்றும், நீர் விழவிற்காக அணிகலப் பேழையையும் ஆடை வட்டியையும் எடுத்துச் செல்கின்ற வழக்கும் (பெருங். 1.38:163) இதனைத் தருகின்றன.

தையற்கலை

தைத்தலைத் ‘துன்னம்’ என்ற சொல்லால் குறித்தனர் பண்டைத்தமிழர், துன்னுதல் என்றால் பொருந்துதல்[10] என்பது பொருளாதலால் இழைகளைப் பொருத்துதல் காரணமாகத் துன்னம் என்ற பெயரால் இதனைச் சுட்டினர் எனலாம். இன்று தைத்தல், தையல் என்ற சொற்களால் இதனைக் குறிக்கின்றனர். ‘தைத்தல்’ என்ற சொல் சங்கப் பாக்களிலேயே இடம்பெறினும், துன்னுதல் என்ற பொருளில் அது வழங்கப்படவில்லை. அணிதல், ஊடுருவுதல் என்ற பொருளில் காணப்பட்ட ‘தைத்தல்’ என்ற சொல், பின்னர் அணியும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், துணியினை ஊடுருவி ஊசிகொண்டு தைக்கும் தன்மையாலும், தைத்தல் என்ற சொல்லாட்சி பயிற்சி பெறத் தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதலாம். கிழிந்த துணியைத் தைக்கவேண்டிய தேவையும், உடுத்தும் முறையில் ஏற்பட்ட வளர்ச்சி நிலையும் தைத்தல் தொழிலுக்கு அடிப்படையாயிற்று. பல்கலை வல்லுநர்களாகிய தமிழர்கள் நெய்தல் தொழிலில் பெற்றிருந்த தேர்ச்சியைத் தைத்தல் தொழிலிலும் சங்ககால முதற்கொண்டே பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் இயம்புகின்றன. இதனைப் பதிற்றுப்பத்தின் ஓர் உவமை வழி நிறுவலாம்.

இரும்பனம் புடைய லீகை வான்கழல்
        மீன்றேர் கொட்பிற் பனிக் சுயமூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவள்ளூசி
        நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
        அம்பு சேருடம்பினர் சேர்ந்தோரல்லது (பதி. 42:1-5)

என்னும் நிலையில், வீரனின் மார்பில் காட்சி அளிக்கும் ஊசியால் தைக்கப்பெற்ற வடுவானது கயத்தில் மீனினைக் கொத்தும் சிரலின் செயலுக்கு உவமிக்கப்படுகிறது. கயமாகிய புண்; இழையாகிய சிரல்; ஊசியாகிய வாயலகு; கயத்தில் மீனினைக் கொத்திக் கொண்டு சிரல் தன் வாயலகையும் வெளியே எடுக்கும் தோற்றம் போன்று, புண்ணிலிருந்து, அதனைத் தைக்கையில் ஊசியும் நூலும் வெளிவருகின்றன. இத்தகைய தையல் பெற்ற வடு என்று உரைக்கும் தன்மை, தமிழரின் தையல் அறிவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும்.

தமிழரின் ஆடையைத் தைக்கும் தையல் தொழிலினை, 1. கிழிந்த துணியினைச் சீர்செய்தல் 2. உடையாக வடிவங்கொடுத்தல் என்ற இரு நிலைகளில் பகுத்து நோக்கலாம்.

சீர்செய்தல்

ஏழைப் புலவனின் இழிந்த உடையினைச் சித்திரிக்கும் சில பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். பல நிலைகளில் சிதாரின் சிதைவு இயம்பப் படினும் வேற்றிழை நுழைந்த, தையல் இடம்பெற்ற இடத்தினையும் சில காட்டுகின்றன.

ஏழ்மை காரணமாகச் சிதைந்த பழைய சிதாரினைக் கிழிசல் தெரியாவண்ணம் தைத்துச் சீர்படுத்தி உடுத்தியுள்ளான் புலவன். இதனை, ‘வேற்றிழை நுழைந்த வேர்நனைச் சிதார்’ (புறம். 69) என்று கவிஞர் காட்டுவார். நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த ஆடையைச் சங்கப்பாடல் சுட்ட, அதன் சிறப்பு எண்ணி வியந்தது போன்று ஈண்டு பயில்வோர் மனம் புலவனுக்காக இரங்கும் வண்ணம் சிதார் காட்சி தருகின்றது. இதனைப் போன்றதொரு காட்சி, பொருநராற்றுப்படையிலும் இடம் பெறுகின்றது.

ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழைநுழைந்த
துன்னற் சிதார் துவர நீக்கி (79-81)

மன்னன் அரவுரியன்ன அறுவையை அளிக்கின்றான்.

ஈரும் பேனும் மிக்கு, வியரினால் நனைந்து வேற்று நூலால் தைக்கப்பட்ட சிதாரினை ஈண்டு காண்கின்றோம். வேற்றிழை என்பதற்கு நிறம் வேறுபட்ட இழை என்பர் உரையாசிரியர். தைக்கப்பட்ட ஆடை என்ற நிலையில் துன்னம் என்ற சொல்லாட்சி அமைவதும் கருதற்பாலது.

வடிவங் கொடுத்தல்

உடுக்கும் நிலையில் அதாவது துணிக்கு ஒரு வடிவம் கொடுக்கும் நிலையிலும் தைத்தல் தொழில் அமைகின்றது. பொதுநிலையில் தமிழரின் உடைகள், துணியினை அவ்வாறே உடுத்த நிலையிலேயே காணப்படுகின்றன. எனினும், படம், மெய்ப்பை, குப்பாயம், கஞ்சுகம் போன்றவற்றைத் தைத்துத்தான் அணிந்திருக்க முடியும் என ஊகிக்கலாம். சொல்லாய்வு இதனை வலியுறுத்தும்.

தையல் தொழில் பற்றிய அறிவிருந்தும் தைத்த ஆடைகளை இன்றியமையாததாகக் கருதாமையே அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமைக்கும், சட்டை போன்றவற்றைத் தைத்தலின் விளக்கங்கள் அமையாமைக்குமுரிய காரணம் எனலாம்.

தையற் தொழிலாளர் இருந்தமையை,

துன்னகாரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி (5:33-4)

என்று சிலம்பும், ‘தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்’ என மணிமேகலையும் (28:33-9) காட்டும். இவண் துன்னகாரர் துனைவினைஞர் என்பன தையற்காரரையும், தோலின் துன்னர், தோலினால் படைக்கலங்களுக்கு உறை முதலியன தைப்போரையும் விளக்கி நிற்கின்றது. தையல் தொழிலில் முக்கியத்துவம் வகிக்கும் ஊசி பற்றிய குறிப்புகள் இடம் பெறலையும் தையல் தொழில் அறிவுக்குரிய சான்றாக நினைக்கலாம்.

‘கொற் சேரித் துன்னூசி விற்பாரில்’ என்று பழமொழி (73) இயம்பும் குறிப்பினைத் திருக்கோவையாரும் கம்பனும் நல்கக் காணலாம். கம்பன் பாடல்,

இருப்புக் கம்மியற்கு இழை நுழை
     ஊசி ஒன்று இயற்றி
விருப்பின் ‘கோடியால் விலைக்கு’ எனும்
     பதடியின் விட்டான்
கருப்புக் கார்மழை வண்ண! அக்
     கருந்திசை களிற்றின்
மருப்புக் கவ்விய தோளவன்
     மீளருமாயம் (9964)

என வரும்.

திசை யானையின் மருப்புக்களினால் தோண்டப்பட்ட தோளையுடைய இராவணன், நூல் நுழைதற்குரிய காதினையுடைய ஊசி ஒன்றைச் செய்துகொண்டு இரும்புத் தொழில் செய்யும் கொல்லனிடத்தில் விருப்பத்தோடு சென்று ‘விலைக்கு வாங்கிக் கொள்க’ என்று விற்கும் அறிவிலிபோல் ‘மாயவனாகிய நின் மேல் மீருதற்கு அரிய மாயக்கணையை விட்டான்’ என்னும் பொருள் அமையும் இப்பாடலில், இன்றுபோன்றே அன்றும் கொல்லர் ஊசி போன்றவற்றைச் செய்தனர் என்பது பெறப்படுகின்றது. இழைநுழை ஊசியினை, நூல் நுழைதற்குரிய ஊசி என்று உரையாசிரியர் உரை குறிப்பிடுகின்றது. ஆடை இழையில் நுழையும் ஊசி என்ற பொருளையும் இதற்குக் கொள்ள, தையல் தொழில் பற்றிய உணர்வு மீண்டும் உறுதிப்பட வாய்ப்பாகின்றது.

வணிகம்

‘வினையே ஆடவர்க் குயிரே’ என்ற போற்றத்தகு மன உணர்வுடன் வாழ்ந்தவர் தமிழர். பலவினைகளுள் ஒன்றான வணிகம் மிகப் பழமையான தொழிலுமாகும். ‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது’ வணிகம் செய்தல் தமிழர் வணிக நெறி. திரைகடல் ஓடியும் திரவியம் தேடி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய தமிழர், பிறநாடுகளில் இருந்து சிறந்த பொருள்களைப் பெற்றும் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியும் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர். இந்தியரின் வணிபச் சிறப்பு அறிஞர் எண்ணங்களில் தெளிவுறுவது போன்று,[11] தமிழரின் வணிகச் சிறப்பும் பல் சான்றுகளினால் புலப்படுகின்றது.

பட்டினப் பாலையில்,

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியா பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி (128-132)

என்ற அடிகள் பொதுநிலையில், தமிழர் வணிகத்தின் தன்மையை நவில்கின்றன.

இத்தகைய வாணிபத்துள் சிறப்புடன் திகழ்ந்தது தமிழரின் உடை வணிகம் என்பதற்கும் அறிஞரின் விளக்கங்கள்[12] சில, சான்று பகர்கின்றன. சந்திர குப்த மௌரியனுக்கு அமைச்சனாகவும் ஆசானாகவும் திகழ்ந்த சாணக்கியர் தாம் அருளிய அர்த்தசாத்திரத்தில், பாண்டிய நாட்டு முத்துகளையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வாணிகம் செய்தலே சிறந்தது என்பார்[13] என்னும் கருத்து வெளிநாட்டுடன் அன்றி, நாட்டின் பிறபகுதியுடனும் தமிழர் செய்த உடை வணிகச் சிறப்பை விளக்க வல்லதாகும்.

இத்தகைய தமிழரின் உடை வணிகப் பெருமைக்கு, இலக்கியங்களும் ஒருசில கருத்துகளை நல்கி, தமிழரின் உடை வணிக அறிவினைத் தருகின்றன.

கலிங்கம், வங்கச்சாதர் போன்ற ஆடைப் பெயர்கள் பிறநாட்டினின்றும் வருவிக்கப்பட்ட ஆடைகளின் பெயர்களைக் குறித்து அமைவன. கலிங்கப் பெட்டி, யவனப்பேழை என்பனவும் வணிகத் தொடர்பினை விளக்குவனவே. இவை ஆடையுடன் வந்த பேழைகளாக அல்லது ஆடைகளை வைத்துக்கொள்ளப் பிற நாட்டினரிடம் இருந்து வருவித்துக் கொண்டனவாகவே இருக்கலாம்.

உள்நாட்டு வணிக முறையினையும் சில குறிப்புகள் உணர்த்துகின்றன.

தெண்டிரை அவிர் விறல் கடுப்ப
குறியவும் நெடியவும் மடிதருவிரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவிலுங் காலுற நிற்றரக் (519-22)

காணப்படும் தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டும் தன்மையில் தெருவில் ஆடை கொணர்ந்து விற்கும் நிலையினை விளக்குகிறது.

தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கை யோடளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய மறுகும் (5:18-21)

எனச் சிலப்பதிகாரம், பல்வளங்களும் நிரம்பிய மறுகில் ஆடையும் காணப்பட்டதை உரைக்கும். மேலும்,

நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலப். 14:205-7)

என்ற எண்ணம் அறுவை விற்க தனித்த வீதிகளே இருந்தமையினைப் புலப்படுத்தும்.

ஆடை தூய்மை செய்தல்

தமிழரின் சுகாதார உணர்வின் எதிரொலிகளை, அவர்தம் ஆடையினைத் தூய்மை செய்யும் நிலையிலும் காணலாம். புலைத்தி, காழியர் பற்றிய செய்திகள் ஆடையினைத் தூய்மைபடுத்துவோர் பற்றிக் குறிப்பிடுவதாகும்.

ஊரவர் ஆடை கொண்டொலிக்கும் புலைத்தி (கலித். 72)

என்ற எண்ணம் புலைத்தி ஊர்மாந்தரின் ஆடையினை வெளுத்துக் கொடுக்கும் தொழில் தன்மையை இயம்புகின்றது. ஊரொலிக்கும் பெருவண்ணார் என பெரிய புராணம் சுட்டுதலும், (திருக்குறிப்பு-113) ஒட்டக் கூத்தர் பாடல் ஒன்று வண்ணானின் தொழிலைப் ‘பாப்புனைந்த நூலெய்து கறைத் தூய் தாக்கல்’ என்றியம்புவதும் இவர்கள் தொழிலினை விளக்குவனவாகும்.

இலக்கியப் பகுதிகள் இத்தொழிலின் இயல்பினைச் சிறப்புறப் படம் பிடிக்கின்றன.

வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம் (நற். 90)

எனப் புலைத்தி கலிங்கத்தை ஒளிபெறத் தோய்க்கும் தன்மையும்,

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்தெடுத்து
தலைப்புடைப் போக்கித் தன்கயத்திட்ட
நீரிற் பிரியாப்பரூ உத் திரிகடுக்கும் (குறுந். 330)

என்னும் நிலையில் தோய்க்கும்போது பசையில் தோய்த்து எடுத்துத் தோய்க்கும் தன்மையையும் காண்கின்றோம்.

இவ்வாறு துணியினைத் துவைத்தலுக்குக் களர்ப்படு கூவல் நீரைப் பயன்படுத்தினர் என்பதை,

களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை (புறம். 311)

என்ற கருத்து காட்டும்.

களர்ப்படு கூவல் நீர் அன்றி உவர் மண்ணையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்பது,

காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய (அகம். 89)

என்ற சங்கப் பாடலில் இந்தியர் பிற பொருட்களையும் துணிவெளுக்கப் பயன்படுத்தினர் என்ற எண்ணத்தையும் நாம் காண்கின்றோம்.[14] இவ்வாறு வெளுத்த ஆடைக்குக் கஞ்சியூட்டும் மரபினையும் இலக்கியம் நவில்கின்றது. இதனை,

பசைவிரற் புலைத்தி நெடிது பிசைந்தூட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலன் காழ்அல்குல் (புறம்-387)

காடியுண்ட பூந்துகில் கழுமமூட்டும் நறும்புகை (சீவக. 91)

போன்ற சில பகுதிகளால் தெளிவுபடுத்தலாம்.

அன்று அழுக்கைப் போக்கலும் பின்னர் கஞ்சியூட்டலும் வண்ணான் தொழிலாகக் கண்ட நிலையே இன்றும் தொடருகின்றது.

சாணி, உவர்மண் போன்ற அழுக்கை ஏற்றி, புது அழுக்கோடு பழைய அழுக்கையும் மாற்றும் தன்மை இன்று அமைகின்றது. துணி வெளுக்க மண்ணுமுண்டு என்று கூறும் புலவரும் உவர்மண்ணையே குறித்திருக்கலாம்.

இரட்டைப் புலவரின் பாடல் அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்துத் தப்பும் தன்மையை இயம்ப, தோய்த்தல் என்னும் வினையுடன் தப்புதல் என்ற வினையையும் துவைத்தல் என்ற சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்பது பெறப்படும். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆடையைச் சுத்தம் செய்யவும் புதிய கருவிகளைப் புகுத்தியுள்ளன.

ஆடைத் தொழிலாளர் சமுதாயநிலை

ஆடைத் தொழிலாளர் என்னும்போது ஆடையுடன் தொடர்புடைய தொழிலைச் செய்யும் நூற்புத் தொழிலாளர், நெய்வோர், வணிகம் செய்வோர், தூய்மை செய்வோர் என்போரைச் சுட்டலாம். ஒரு தொழில் பற்றிப் பேசுங்கால் அவற்றுடன் தொடர்புடையோரையும் இணைத்துச் சமுதாயத்தில் அவர்களின் இடம் என்ன? எத்தன்மையில் அவர்கள் நிலை அமைந்தது என்பதனைக் காண்டல் வழக்காதலின் இவண் ஆடைத்தொழிலாளர் பற்றிய எண்ணங்களை நோக்கலாம்.

1. நூற்புத் தொழிலாளர்

நூற்புத்தொழில் புரிந்தோராகப் பெண்களே காணப்படுகின்றனர். இழைக்கும் சேயிழையாருக்குமுரிய தொடர்பு பண்டைக்காலம் முதல் நிகழ்காலம் வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. கைம்பெண்டிர் இதனைப் பிழைப்பு வாய்ப்பாகக் கருதியிருந்தனர் என்பது இலக்கியம் வழங்கும் செய்தி. இம்மரபு இன்றும் தொடரும் ஒன்று.

பருத்திப் பெண்டின் பனுவல் (புறம்-125)

என்றும், ‘ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த நுணங்கு நுண்பனுவல்’ (நற். 353) என்றும் இவர்கள் நூல் நூற்றமை சங்கப் பாக்களில் நவிலப்படுகின்றது கைவண்மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓரிழைப்படுத்தலைச் சிறப்பித்தலும் காணப்படுகின்றது.

தன் ஆதரவிற்குத் துணையில்லா காரணத்தால் தன் முயற்சியினால் நூற்கும் தன்மையும்; சிறு தீ விளக்கம் கொண்டு இரவுவரை அவள் உழைக்கும் தன்மையும் கைம்பெண்டிர் இதனைத் தங்கள் வாழ்வுத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றன.

கொங்கு நாட்டில் கணவன் இறந்தவுடன் விதவைகளுக்கு நூற்புக் கதிரும் பஞ்சும் கொடுக்கும் சடங்கு ஒன்றினைக் காட்டி, கைம்பெண்களின் தொழிலான இது, இன்றைய நிலையில் மரபெச்சமாக எஞ்சி நிற்கின்ற ஒன்று என்பர்,[15] ஸ்பின்ஸ்டர் என்ற ஆங்கிலச்சொல் பருத்தி நூற்போரையும் கைம்பெண்டிரையும் சுட்டுவதும் இத்துடன் இணைத்து நோக்கத் தக்கது.

தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல்
சிறு வெள்ளாம்பல் அல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல (புறம். 280)

என்ற விளக்கமும் கைம்பெண்டிரின் ஏழ்மைநிலை, நூற்றல் தொழிலால் மாற்றம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வல்லதாக அமைகின்றது.

இன்று கைம்பெண்டிரும், பிற பெண்டிரும் வயது வேறுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். நூற்பார் வாழ்க்கைத்தரம் இன்றைய நிலையிலும் சிறப்பாக இல்லை என்பது கண்கூடு. ‘கொட்டை நூற்று கப்பல் விற்ற கடன் தீர்க்க முடியுமா?’ என்னும் பழமொழியும், பண்டுதொட்டே நூற்போரின் நிலை இதுவே என்பதைக் காட்டவல்லது.

நெய்வோர்

நூற்றல் தொழிலை மகளிர் செய்ய, நெய்தல் தொழில் ஆடவர்க்குரியதாகக் காணப்படுகிறது.

மதுரைக்காஞ்சியில் நெசவாளர் ‘கம்மியர்’ (521) என்று அழைக்கப்படுகின்றனர். கம்மியர் என்பது தொழிற் செய்வோரின் பொதுப் பெயராக அமைந்து இருந்தது என்பதனை, மனைகளையும், நகரங்களையும் சிற்பநூல் முறைப்படி வகுத்துக் கொடுத்தோரைக் கைவல் கம்மியர் என நெடுநல்வாடையும் (76-9), செப்புப்பானை கடைவோரைக் கம்மியர் என நற்றிணையும் (153) குறிப்பிடுவதினின்றும் உணரலாம்.

கம்மியர் என்ற பொதுப்பெயருடன் ‘காருகர்’ என்ற சிறப்புப்பெயர் இவர்க்கு இருந்தது என்பதனைக் கட்டு நுண்வினைக் காருகர் என்ற சுட்டு உணர்த்தும் (சிலப். 5-19). காருகர்-பிட்டு வணிகரையும் குறித்தது எனினும் காருக வினைத்தொழில் எனத் திவாகர நிகண்டும் இவர்களைக் குறிப்பிடும் நிலையில், இப்பெயர் சிறப்பாக இவர்களுக்குரியதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெரிய புராணம் இவர்களை அறுவையர் குலமெனக் குறிப்பிடும் (பெரிய. நேச. 2).

சோழர் காலத்தில் நெசவாளர், ஆயோகவன்,[16] கைக்கோளர், சோழிய சாலியர், பட்டசாலியர், சேனியர் என்ற பல பெயர் கொண்டிருந்தனர் எனக் காண்கின்றோம்.[17] நன்னூல் உரையாசிரியரான மயிலைநாதரும் தன்னுரையில் சோலிகன், சாலிகன், பட்டணவன், சேணியன் என்று குறிப்பிடுவார் (289). இன்றும் அடவியார், பட்டுச்சாலியர், பட்டாலியர், பட்டுநூல்காரர், சாலியர், தேவாங்கர், கைக்கோளர், செங்குந்தர், சணப்பர் போன்ற பல பிரிவினர் நெசவாளரில் காணப்படுவது குறிக்கற் பாலது.

பல்லவர், சோழர் காலத்தில் இவர்கள் வரி செலுத்தி இருந்திருக்கின்றனர். தறிகளில் நூல்நூற்போர், நெசவு நெய்வோர் மீது வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.[18] கைக்கோள் நெசவாளர், சாலிய நெசவாளர், சரிகைத்தறி நெசவாளர் மீதும், பஞ்சு, பட்டுநூல், பட்டாடை தறி மேலும் வரி போடப்பட்டது.

தறிப்புடவை அல்லது தறிக்கூறை, பேர்கடமை, பஞ்சுபீலி, பட்டாடை, நூலாயம், தறிஇறை, பறைத்தறி, சாவிகத்தறி, தூரகத்தறி, வாசல் வரி போன்றன இவ்வரிகளின் பெயராகும்.[19] பட்டாடை மூலாயம் என்பது விசயநகர மன்னர்கள் தறிகளின் மேல் விதித்த வரியாகும்.[20]

கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கைக்கோளர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்புப் பெற்றனர். முதலிகள் என்னும் குலப்பட்டப் பெயரையுடைய இவர்களின் சிறப்பு கருதி சில வரிகளில் இருந்து இவர்கட்கு விலக்கு அளிக்கப்பட்டது,[21] எனவே இவர்கள் முன்னாளில் தாழ்நிலையில் மட்டுமன்றி மதிப்பின்றியும் இருந்துவந்த நிலை தெளிவுறுகின்றது.

இன்று மகளிர் நூற்புத் தொழிலுடன் ஆடவர் போன்று நெசவுத் தொழிலையும் செய்து வருகின்றனர். இந்தியாவின் சில இடங்களில் இத்தொழிலைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது.[22] நெசவுக் கலை பற்றிய எண்ணங்களை அதன் அடிப்படை நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டுவது பெண்கள் கடமை என்ற கருத்து உலக நிலையில் காணப்படுவதாகும்.[23]

நெசவாளர்களின் இருக்கையினைக் காருகர் இருக்கை என்று வழங்குவதினின்றும் அன்றே அவர்கள் தனித்த பகுதிகளில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது தெளிவு. சோழர் காலத்தில் இவர் இருந்த பகுதிகள் ‘பாடி’ என்று அழைக்கப்பட்டது.[24] இன்றும் தனித் தெருக்களையும், பகுதிகளையும் இவர்க்குரியதாகக் காணலாம் (சாலியத் தெரு, பட்டாலியர் தெரு).

நெசவாளர்களின் நிலை இவ்வாறு அமைய, அறுவை வாணிகர் என ஆடைவணிகம் செய்வோர் அழைக்கப்பட்டதாகக் காண்கின்றோம். மறுகில் இவர் காணப்படும் நிலையினை, வண்ணறுவையர் வளந்திகழ் மறுகு எனக்காட்டும் மணிமேகலை (28:47). குறியவும் நெடியவும் முடியினை அங்காடிகளில் கம்மியர் விரித்துநிற்கும் நிலையினை மதுரைக்காஞ்சியில் காண, ஆடை, நெய்வதும் ஆடை வணிகர் தொழிலாகவும் இருந்திருக்கக் கூடும் என்ற சிந்தனை தோன்றுகின்றது. இன்றும் நெசவுத்தொழிலுடன், வாணிபத்தையும் வைத்து நடத்தும் மேனிலை மாந்தரும் உண்டு. எனவே நெசவாளர்களைப் பற்றிய சோழர் கால எண்ணங்கள், வணிகரையும் உள்ளிட்டுக் குறிப்பதாக இருக்கலாம்.

பருத்தி நூல் பட்டு நூல் அமைத்தாடை ஆக்கலும் பிறவும் காருகவினைத் தொழில் எனத் திவாகர நிகண்டு, காருகவினைத் தொழில் சுமத்தல் என்று கூறுவது, வணிகரைச் சுட்டியிருக்கலாம் என்ற எண்ணமும் மேற்கண்ட சிந்தனைகளுக்கு அரண் ஆகின்றது. இன்று நம்நாட்டைப் பொறுத்தவரையில் நெய்வோருக்கு அமையும் பெயரே வணிகருக்கும் அமைய, பிறநாடுகளில் வணிகர் தனிப்பெயர் பெற்று இருந்தனர். தையற்கலைஞர் தைத்த உடைகளின் தேவை அதிகமாக இல்லாத காரணத்தால் தையற் கலைஞர்களைப் பற்றிய குறிப்பினையும் விளக்கமாகப் பெறமுடியவில்லை. இவரைத் துன்னர் என்று பண்டைய இலக்கியங்கள் பகர, குயினர், பொல்வர் என்றும் வந்தோர் வழங்கியிருக்கின்றனர்.

தூய்மை செய்வோர்

ஈரங்கொல்லியர், வண்ணார், ஏகாலியர், தூசர், காழியர் என்று நிகண்டுகள் வண்ணானின் பல்பெயர்களைத் தருகின்றன. சங்க காலத்தில் காழியர் என்றும் புலைத்தி என்றும் இவர்கள் சுட்டப்படுகின்றனர். அதிகமான குறிப்புகள் புலைத்தியின் தொழில் தன்மையைச் சுட்டி அமைகின்றன. எனவே, மகளிரே இத்தொழிலில் அதிகமாக ஈடுபட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பெரிய புராணத்தில் வண்ணான் என்று இவர்கள் குறிக்கப்படுகின்றனர் (திருக்குறிப்பு - 113).

‘மண்ணைப் பயன்படுத்தி ஆடையின் அழுக்கு நீக்கும் தன்மையில் மண்ணான் என்று ஆகி வண்ணான் என்று திரிந்தது’ என்று வண்ணான் என்ற பெயர்க்காரணம் சுட்டுவர்.[25] மண்ணுதல், கழுவுதல் என்ற பொருள் உடையது. ஆடையை மண்ணுபவன் என்ற நிலையில் மண்ணான் என்று நின்று, பின்னர் வண்ணான் எனத் திரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இன்றும் வண்ணானை மண்ணான் என்று அழைத்தல் உண்டு.

பல்லவர், சோழர் காலத்தில் துணிவெளுக்கும் வண்ணார்க்கும் வரி விதிக்கப்பட்டது. வண்ணாரப்பாறை என்பது இவர் பயன்படுத்திய கற்களின்மேல் விதிக்கப்பட்ட வரியாகும்.[26] எனவே வண்ணாருக்கும் வரிவிதித்தமையை நோக்க, பல ஆடைத் தொழிலாளர்கள் வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது உணரக் கூடியதொன்று.

இன்றைய ஆடைத் தொழிலாளருள் வணிகம் செய்வோர் தவிர, ஏனையோர் நிலை என நோக்க, பெரும்பாலும் தாழ்ந்ததொரு நிலையே இவர்க்குரியது. இதனைப் போன்றே அன்றைய தொழிலாளருள் வணிகர் தவிர, பிற மாந்தர் நிலை சிறப்பாகக் காட்டப்படவில்லை.

இன்று அரசாங்கத்தின் நோக்கால் தொழிலாளர் நலம்பெற்று வருகின்றனர். பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி இவ்வேழையர் நலம்காணச் செயல்பட்டு வருகின்றது அரசாங்கம். எனினும், பண்டுதொட்டு இன்றுவரை ஆடைத்தொழிலாளரின் நிலை, ‘தங்களை நிர்வாணமாக்கி, பிறர் உடுத்தப் பாடுபடுகின்றனர்’ (Weavers naked themselves and toiled to clothe others) என்ற உண்மைக்கு இலக்கணமாக அமைகின்றது எனில் மிகையாகா.

முடிவுரை

ஆடையும் ஆடைத்தொழிலும் பற்றிய இக்கட்டுரையில், தமிழரின் பலவிதக் கைத்தொழில் தேர்ச்சியினையும், கலையுணர்வினையும் விளக்கும் வண்ணம் இலக்கியச் சான்றுகளின் இயல்பு அமைந்ததைக் கண்டோம். தமிழர் பெருமையினை வெளிப்படுத்தப் பல்லாற்றானும் துணைநிற்கும் தொழிலாளரின் சமுதாய நிலையினைப் புரிந்துகொள்ளவும் இவை வழிவகுக்கின்றன.

முடிவுரை

தமிழர் ஆடைகள் என்னும் இவ்வாய்வின்கண் இலக்கியச் சான்றுகளினின்றும் கிடைத்த சில முடிபுகளைக் கூறியுள்ளேன்.

சான்றாக, உடையும் ஆடையும் வேறுபட்டது; துகில் தமிழர் ஆடையே; நேத்திரம் போன்றன பிற பகுதி மாந்தரிடம் இருந்து பெற்றவை போன்ற எண்ணங்களைக் குறிப்பிடலாம். சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பிற மதத்தார்த் தொடர்பு காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றனவே தவிர அவை தமிழருடையது அன்று என்பது சான்றுகளுடன் சுட்டப்பட்டுள்ளது.

இந்நூல் தரும் முடிபுகளில் சில, பிற சான்றுகள் வாயிலாக மாறுபடவும் வாய்ப்புண்டு. எனவே, ஆராய்ச்சியின் முதற்கட்ட நிலையில் புலனான எண்ணங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

கல்வெட்டுக் குறிப்புகள், சிற்பம் சித்திரங்கள் போன்ற பிற அனைத்துச் சான்றுகளையும் நோக்கி இவ்வாராய்ச்சி தொடரப்படின் மேலும் பல எண்ணங்களில் தெளிவும் மிகுதியான கருத்துகளும் கிடைக்கும்.

12-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் ‘தமிழர் ஆடை’ பற்றிய ஆய்வும் நிறைவேறும் போதுதான் தமிழரின் உடைகள் பற்றிய முழுமையான அறிவினைப் பெறமுடியும். இதனால் அவ்வாராய்ச்சியும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம்.

  1. அரிக்கமேட்டில் வெண்துகில்களுக்குச் சாயமிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு சாயத் தொட்டிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
    —தொல்லியல் ஆய்வுகள்-டாக்டர் கே.வி. இராமன், பக்கம்-28.
  2. சங்க காலச் சோழர் தலைநகரான உறையூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட சாயத்தொட்டியின் இடிபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காலமும் சங்க காலத்தைச் சார்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ் மக்கள் பல் வண்ணங்களில் உடை அணிந்தார்கள் என்ற உண்மையை இந்த ஆதாரத்தினாலும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.
    —பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில்-அரங்க பொன்னுசாமி, கொங்கு, 13-3-1976, பக்கம்-59.
  3. எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934, பக்கம்-203.
  4. எங்கள் நாட்டு ஆடை-ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6, 1934, பக்கம்- 203.
  5. எங்கள் நாட்டு ஆடை, ச. தண்டபாணி தேசிகர், கலைமகள் தொகுதி-6 பக்கம்-203.
  6. Tamil Lexicon, Vol. V, part-I.
  7. உலக நாடுகளில் அகழ்ந்து எடுக்கப்பட்ட புதியகற்காலப் பொருட்களிலும் ஆடைகளைப் பதப்படுத்தும் கற்கருவிகள் கிடைத்துள்ளன.
    — தமிழகத்தில் நெசவுத்தொழில், டாக்டர் மா. ராசமாணிக்கனார், தமிழ்ப்பொழில், தொகுதி-35, 1960.
    தேய்ப்புக்கல் நெய்த துணிகளைத் தோய்த்துப் பளபளப்பாக்கப் பயன்படுவது.
    — சேலம் மாவட்டக் கோயில்கள், ஆ. ராஜேந்திரன், பக். 12
  8. Tamil Lexicon, Vol. III, part-I.
  9. Tamil Lexicon, Vol. V, part-III.
  10. Tamil Lexicon, Vol.IV, part-I.
  11. We have clear evidence that there was regular commercial intercourse between India and China before the beginning of the Christian Era,
    — Indian Inheritance, Vol. II—Art History and Culture Eds. K.M. Munshi & Divakar, Page-220.
    The Roman merchants were surprised at the indescribable fineness of the Indian Silk.
    — The Classical Age of the Tamils, M. Arokiasami, page-72,
  12. மிகப் பழைய காலத்தே தமிழ்நாட்டு அரசுகள் தங்கட்கேயுரிய நாகரிகத்தில் திளைத் தொளிர்ந்தன. தென்னாட்டிலிருந்தே இந்தியத் தேக்குமரம், மஸ்லின் ஆடை இவற்றினைப் பாபிலோனியர் தங்கள் நாட்டிற்கு தேகினர் என்பது தெளிவாகின்றது.
    — பர்னேட். மேனாட்டறிஞர் கண்ட தமிழகம், வரத வீரப்பன், பக்கம் - 27.
  13. இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ். இராமகிருஷ்ணன், பக்கம்-41.
  14. அந்நாளில் ஆடையைத் துவைத்தலும் நடைபெற்றது. ‘அகதா’ என்ற ஒருவகைப் பொருள் இதற்குப் பயன்பட்டது.
    — தமிழியல், தொகுதி-6, தமிழ் இலக்கியத்தில் ஆடைவகைகள், அ. மீராமுகைதீன், பக்கம்-97.
  15. ஆய்வுத் தொகை - தொகுதி-2, பருத்திப் பெண்டிர், கி. நாச்சிமுத்து, பக்கம்-282.
  16. அரசர்குலப் பெண்ணுக்கும், வணிகர் குடி ஆணுக்கும் பிறந்தவன் ஆயோகவன் எனப்பட்டான். இவர்கள் ஆடைகளை நெய்து அரசர்க்கும் அந்தணர்க்கும் கடவுளுக்கும் கொடுத்து வந்தனர். இவருட்சிலர் திரிபுவனம் போன்ற இடங்களில் இறையிலியாக நிலங்களைப் பெற்று கோவிலுக்கும் மறையவர்க்கும் வேண்டிய ஆடைகளை நெய்து வந்தனர்.
    — கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழர் காலத்திய சமுதாய அமைப்பு, க.த. திருநாவுக்கரசு, பக்கம்-229.
  17. செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-68.
  18. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.
  19. செங்கை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு, இரா. நாகசாமி, பக்கம்-69.
  20. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக். 414.
  21. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-415.
  22. அஸ்ஸாமில் ஒரு லட்சம் பெண்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்க்கை மரபு ஆகும். அஸ்ஸாமிய பெண்கள் தங்கள் திருமணத்திற்கான புடவையைத் தாங்களே நெய்து கொள்ளவேண்டும் என்பது குடிமரபு. திருமண ஆடைகளை நெய்து கொள்ளாத பெண்ணுக்குத் திருமணம் நடப்பது கடினம்.
    — பி.வி. கிரி, சுரதா கைத்தறி மலர், 1971.
  23. Every woman should acquaint herself with principles involved in weaving, the raw materials out of which fabrics are made and the wearing of the finished products
    — Fundamentals of Dress, Marietta Kettunen, Page-142.
  24. செங்கைமாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, பதிப்பு. இரா. நாகசாமி, பக்கம்-69.
  25. தமிழ்ப்பொழில், தொகுதி-2, 1926-27, நாட்டுப்பாடல், வ. பெருமாள், பக்கம்-240.
  26. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, பக்கம்-306.
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழர்_ஆடைகள்/019&oldid=1841577" இலிருந்து மீள்விக்கப்பட்டது