தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/002
தமிழ்நாட்டு
விளையாட்டுக்கள்
[முதற் பகுதி]
ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி இளைஞர் பக்கம் ஆகும். (அகவை = வயது.)
1. ஆண்பாற் பகுதி
(1) பகலாட்டு
௧. கோலி
(௧) பாண்டிநாட்டு முறை
ஆட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி = உருண்டை).
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாவடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.
ஆடிடம் : அகன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலைவிற் கீறப்பட்ட கோட்டில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.
முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும், அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் வீழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும்.
முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.
ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்குமாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியின் கோலி தொலைவிலிருக்கும்போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்தமுறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு.
ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும்.
ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே. பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும்.
ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டுவாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக்கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக்கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும்.
ஆட்டுத் தோற்றம் : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப்பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.
ஆட்டின் பயன் : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித்தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம்.
(௨) சோழ கொங்கு நாட்டு முறை
சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம் முதலிய பல வகைப்படும்.
I. பேந்தா
(i) சதுரப் பேந்தா
ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.
ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப்படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.
ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.
ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலியைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.
ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்றுகொண்டு தன் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற்கிடைக்கப்பாற் போய் நிற்பின்,பேந்தாவிற் குள்ளிருக்குங் கோலியை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப் பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளும் நிற்றல் கூடாது: நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தாவிற்கு வெளியில் நிற்பின், “பேந்தா செத்து ஆறு மாசம்” என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறியபோதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.
அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு.
மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங்கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.
ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, “பேந்தாமேற் கைபடும்” என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், “பேந்தாமேற் கைப்படக்கூடாது” என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் “நேர்” என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.
அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் “சாண்குடி சடாபுடா” என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். “சாண்சூடி சடாபுடா இல்லை” என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டியதில்லை.
ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் “தடுத்தால் தூர்” என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.
அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும்போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடிதவறின், மீண்டும் நிலமட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.
மூன்றாம்முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்றுதரம் அடித்து விடின் எதிரி தன் கோலியைத் தன் முட்டிக்கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டுவந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவனாவன்; அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை முட்டிதள்ளல் என்பர்.
(ii) வட்டப்பேந்தா
ஆட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக்கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு வகை வட்டப்பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.
ஆடுவார் தொகை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின்மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.
ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொருவனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவானது இருத்தல் வேண்டும்.
ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுளில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும்.
கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில், உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
ஆடிடம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.
ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.
ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்டபின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான்.
உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவதில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.
உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.
முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்த்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற்போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்துவிடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விருகாய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக்காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான்,
குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல்போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தைவிட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங்குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப்பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும்வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.
ஒருவன் கெலித்தவிடத்து இன்னெருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.
எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும்.
ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக. முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.
II. அஞ்சல குஞ்சம்
ஆட்டின் பெயர் : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது ‘அஞ்சல குஞ்சம்’ என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக்கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ‘ஒற்றைக் குழியாட்டம்’ எனவும்படும்.
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.
ஆடிடம் : பேந்தாவிற்குரியதே இதற்கும்.
ஆடுகருவி : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.
ஆடுமுறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும்.
ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்துவிட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டுவிடின் நான்காம்.
நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்: 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம்.
குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை,
அஞ்சல குஞ்சம்,
அறுவக்க தாடி,
எழுவக்க மைனா,
எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை)
தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி)
தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம்.
பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப்பட்ட கோலிக்காரன் முட்டி தள்ளவேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக்கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக்கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்திவிடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம்.
பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும்போது, எதிரி தன் கோலி நெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக்கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும்.
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும் அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டிதள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும் அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு.
| முதன்முறை | | 3 அடி | | 3 தள்ளு |
| 2 ஆம் முறை | 2 அடி | 2 தள்ளு | ||
| 3 ஆம் முறை | 1 அடி | 1 தள்ளு | ||
| 4 ஆம் முறை | 1 அடி | 3 தள்ளு |
முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிறவனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் “போதாது” என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் நெரியாமல், “போதாது,” “போதாது” என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, “போதுமா?” என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக்கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, “போதும்” என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுமான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.
தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும். முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.
இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், பச்சா என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், இரட்டைப்பச்சா என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே.
முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும்.
முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்று பெயர்.
அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.
மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், கோடு என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.
உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.
ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு. எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.
ஆட்டின் பயன் : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம்.
IV. முக்குழியாட்டம்
(i) சேலம் வட்டார முறை.
ஆட்டின் பெயர் : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழு வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம்.
ஆடு முறை : மேற்கூறிய இருகுழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு.
| திருச்சி | சேலம் | |
| (1) கருவி : | இருகுழி | முக்குழி |
| (2) முறை : | மூட்டல் ஒரே தள் | மூட்டல் 3 தள் வரை |
| (3) பெயர் : | இஷ்டம் அல்லது கிசேபி | முக்குழியாட்டம் |
| வெளிமட்டு | வெளி டிப்பு | |
| ‘லைன்’ அல்லது ‘லாக்கு’ | கீர் அல்லது கீறு |
௨. தெல்
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய் குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெரிக்கப்படுவது என்னும் பொருட் காரணத்தையுடையது.