உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/004

விக்கிமூலம் இலிருந்து

௪. பந்து

துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ஆட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).

I. பேய்ப்பந்து

ஆட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

ஆடுவார் தொகை : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.

ஆடு கருவி : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.

ஆடிடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடு முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, “பந்தே பந்து” என்று உரக்கக்கத்துவான். பிறர் “என்ன பந்து ?” என்று கேட்பர். அவன் “பேய்ப்பந்து” என்பான். “யார் மேலே” என்று ஒருவன் கேட்க, அவன் “உன்மேலே” என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக்கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.

ஆட்டுத்தோற்றம் : குரங்கெறி விளங்காயினின்றோ. பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

விளா மரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.

ஆட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள்மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய விளைகட்கு இப்பயிற்சி ஏற்றதாம்.

II. பிள்ளையார் பந்து

ஆட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு பிள்ளையார் பந்து. இது திருச்சி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டு என வழங்கும்.

ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும்,ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம்.

ஆடிடம் : சுவரடியும் அதையடுத்த வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப் பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிகையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருங் தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.

பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப்படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாமனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர், எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஆட்டுத் தோற்றம் : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் சொள்ளையடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ்விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன.