தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/010
(2) இரவாட்டு
இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளியில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும்.
க. குதிரைக்குக் காணங்கட்டல்
ஆட்டின் பெயர் : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது குதிரைக்குக் காணங்கட்டல். காணங்கட்டுதலாவது கொள்வைத்தல்.
ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.
முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற்பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இருகையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்திற்பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே வீழினும் எறிந்தவன் தொலைவான்.
தவறாத ஒவ்வோர் எறிவும்,காணம் விளைத்துக் குதிகரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், “உழுதாயிற்று” என்றும்; இரண்டாவதில், “விதைத்தாயிற்று” என்றும்; மூன்றாவதில், “முளைத்துவிட்டது” என்றும்; இங்ஙனமே தொடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, “ஓர் இலக்கு விட்டிருக்கிறது”, “ஈர் இலக்கு விட்டிருக்கிறது”, “மூவிலக்கு விட்டிருக்கிறது”, “நாலிலக்கு விட்டிருக்கிறது” “ஐயிலக்கு விட்டிருக்கிறது”, “ஆறிலக்கு விட்டிருக்கிறது” “ஏழிலக்கு விட்டிருக்கிறது”, “எட்டிலக்கு விட்டிருக்கிறது”, “ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது”, “பத்திலக்கு விட்டிருக்கிறது”, “கொடியோடி யிருக்கிறது”, “பூப்பூத் திருக்கிறது”, “பிஞ்சுவிட்டிருக்கிறது”, “காய் காய்த்து விட்டது” “காணத்தை அறுத்தாயிற்று”, “களத்தில் அடித்தாயிற்று”, “வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று”, “அடுப்பில் வேகிறது”, “குதிரைக்கு வைத்திருக்கிறது”, என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர்மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
ஆட்டுத் தோற்றம் : இவ்விளையாட்டு ஒருகால் உழிஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம்.
ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகையிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடைபட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும் வேண்டும் உணவுப்பொருட்களை, நகரக் குடியிருப்பிற்கும் புறமதிற்கும் இடைப்பட்ட நிலத்திலேயே விளைத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
“நாடுகண்டன்ன கணை துஞ்சு விலங்கல்” என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) “நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற... இடைமதில்” என்ற அந்நூலின் பழையவுரையாசிரியர் விளக்கவுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத் தக்கது.
காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகையிட்டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம். இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எரிவாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது.
விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம்.
ஆட்டின்பயன் : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.