உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/011

விக்கிமூலம் இலிருந்து

௨. வண்ணான் தாழி

ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களையும் சேர்ந்த சிறுவர், வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு வண்ணான் தாழி. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பானை

ஆடுவார் தொகை : பொதுவாக, நால்வர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங்கருவியாம்.

ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.

ஆடு முறை : ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணி போடவேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் வைத்துக்கொண்டு, மருள்கொண்ட தேவராளன் போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்னை மூடிக்கொண்டு எறிவான். அது யார்மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து இருகையாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு, “கூழ் குடிக்கப்போகிறேன்,” என்று சொல்லிச் சற்றுத் தொலைவுபோய் மீள்வான். அதற்குள் எனையோரெல்லாம் அம் மூட்டையில் தொப்புத் தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொட முயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஓடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின், அத்தொடுகை கணக்கில்லை. இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத் தொட்டுவிடின், தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல் வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரோடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான்.

இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும்,தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடுபவனாகவும், மாறிக்கொண்டே வருவர்.

புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடியடித்து விட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும், மரபாம்.

மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன், பின்பு தன்வினை விளைவை மிகுதியாய் அறுக்க நேரும்.

விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான்.

ஆட்டுத் தோற்ற விளக்கம் : வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வாரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்புமுண்டுபண்ணும். பழங் காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் வண்ணாரப் பாட்டம் அல்லது வண்ணாரப் பாறை என்னும் தொழில் வரி செலுத்தவேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஓடியிருப்பர். அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான்.

இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஓடித் தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும்.

ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடிபடாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ்விளையாட்டின் பயனாம்.