உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/012

விக்கிமூலம் இலிருந்து

௩. சூ விளையாட்டு
(க) பாண்டிய நாட்டு முறை

ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில் இது இன்று அவுட்டு (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன் உட்கார்ந்திருக்கும் ஒருவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம்.

ஆடுவார் தொகை : இதை ஆட ஐவர் வேண்டும்.

ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம்.

ஆடு முறை : மூவர் இவ்விருசை இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஓடுவான். இன்னொருவன் அவனைத் தொடவேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றியன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக்கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம்.

ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது அரிது.தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்துவிட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னாலிருப்பவனை ‘அவுட்டு’ என்று சொல்லி எழுப்பிவிட்டு அவனிடத்தில் தான் உட்கார்ந்துகொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கியன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப்பட்டவன் உடனே ஓடிப்போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிறவனாகவும் ஓடினவன் தொடுகிறவனாகவும் மாறல் வேண்டும். ஓடுகிறவன் தான் எப்போது விரும்பினும், உட்கார்ந்திருக்கும் ஒருவனை எழுப்பிவிட்டு, தான் அவனிடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்.

ஓடுகிறவன் தான் கூடியமட்டும் தொடப்படாதவாறு தொடுகிறவனுக்கும் உட்கார்ந்திருக்கிறவனுக்கும் நேர் முன்னும் அண்மையிலும் நில்லாது மிகத் தள்ளியே நிற்பன்.

இங்ஙனம் வேண்டுமளவு தொடர்ந்தாடப்பெறும்.

ஆட்டுத் தோற்றம் : இது வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. தொடுகிறவன் வேட்டைக்காரனும், ஓடுகிறவன் வேட்டை விலங்கும், எழுப்பப் படுகிறவன் வேட்டை நாயும் போன்றவராவர்.

ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும், ஒருவனுக்குப் பிடிகொடாமல் ஓடித் தப்புவதுமாகிய வினைப் பயிற்சி, இவ் வட்டாற் பெறப்படும்.

(௨) சோழநாட்டு முறை

ஆட்டின் பெயர் : சூ விளையாட்டு என்னும் தனித் தமிழ்ப்பெயர் வழங்குவது சோழ நாட்டில்தான். “சூ” என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு அச்சொல்லாற் பெயர்பெற்றது.

ஆடுவார் தொகை : அறுவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

ஆடு முறை : ஆடுவார் சமத்தொகையவான இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவனாக இருவர் நிற்க, ஏனையரெல்லாம் வரிசையாய் இடையிட்டு நிலத்தில் உட்கார்ந்துகொள்வர். உட்கார்ந்திருப்பவருள், ஒவ்வொரு கட்சியாரும் ஒருவன் விட்டொருவனாயிருப்பர். ஒரு கட்சியார் கிழக்குநோக்கின் மற்றொரு கட்சியார் மேற்கு நோக்கியும், ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர்.

நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவன் தன்னால் தொடமுடியாதென்று கண்டால், தன் கட்சியாருள் ஒருவனைச் ‘சூ’ என்று சொல்லி எழுப்புவான். பிற செய்திகளெல்லாம் பாண்டி நாட்டு முறையே.

இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு எதிரெதிர்த்திசையை நோக்கியிருப்பதும், “சூ” என்று சொல்லுவதுமே சோழநாட்டு வேறுபாடாம்.