தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/015
௩. அணிற் பிள்ளை
ஆட்டின் பெயர் : ஒருவன், ஒரு பெருஞ் சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கியாடும் ஆட்டு அணிற் பிள்ளை எனப்படும்.
ஆடுவார் தொகை : இதை ஐவர் ஆடுவர்.
ஆடு கருவி : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடு கருவிகளாம்.
ஆடிடம் : பொட்டலும்,அகன்ற தெருவும் இதை ஒரு ஆடுமிடமாம்.
ஆடுமுறை : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்றுகொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப்படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில் குறுக்கும் மறுக்கும் முன்னும் பின்னுமாக முன்னோக்கியே இயங்கிக் கொண்டு, அந்நால்வரும் அக் கற்களை யெடாதவாறு தடுப்பன். அவர் அவனால் தொடப்படாமல் ஆளுக்கொரு கல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனே நாற்கல்லையும் எடுத்து ஆளுக்கொன்றாகக் கையிற் கொடுக்கவுஞ் செய்யலாம். ஒவ்வொருவனும் ஒவ்வொன்றாக எடுக்கும்போதேனும், ஒருவனே நான்கையும் எடுத்துக் கொடுக்கும்போதேனும், அணிற்பிள்ளை தொட முயல்வான்: தொட்டுவிடின், தொடப்பட்டவன் அணிற்பிள்ளையாதல் வேண்டும். இங்ஙனமே தொடரும்.