தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/016
௪. சடு குடு
ஆட்டின் பெயர் : ஆடுவாருள் ஒவ்வொருவனும் எதிர்க்கட்சியின் எல்லைக்குட் சென்று, சடுகுடு என்று
சொல்லியாடும் ஆட்டு, சடுகுடு எனப்பட்டது. இது, பாண்டி நாட்டில் குடட்டி என்றும், வடசோழ நாட்டில் பலிச்சப்பிளான் அல்லது பலீன் சடுகுடு என்றும் பெயர்பெறும். சடுகுடு என்பது தென்சோழநாட்டிலும் கொங்கு நாட்டிலும் இதற்கு வழங்கும் பெயராம்.
ஆடுவார் தொகை : நால்வர்க்குக் குறையாத இரட்டைப் படையான தொகையினர், இதை ஆடலாம்.
ஆடிடம் : வெளிநிலத்திலும், பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும்.
ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும், உத்திகட்டிச் சமத்தொகையான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். இரு கட்சியார் இடத்திற்கும் இடையில் ஒரு குறுக்குக் கோடு கீறப்பெறும். சோழ நாட்டார் இதை உப்புக்கோடு என்பர்.
முதலாவது, எந்தக் கட்சியார் பாடிவருவது என்று ஏதாவதொரு வகையில் தீர்மானிக்கப்பெறும். அங்ஙனம் தீர்மானிக்கப்பெற்ற கட்சியாருள் ஒருவன் உப்புக்கோட்டைத் தாண்டி எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து, ‘சடுகுடு சடுகுடு’ என்றோ, ‘சடுகுடு குடு குடு குடு’ என்றோ, ‘பலீன் சடுகுடு குடுகுடு’ என்றோ, இடைவிடாது பாடிக்கொண்டு எதிர்க்கட்சியாருள் ஒருவனையோ, பலரையோ தொட்டுவிட்டு அவனிடமேனும் அவரிடமேனும் பிடிகொடாது தன் கட்சி எல்லைக்குள் வந்துவிடவேண்டும். அங்ஙனம் வரும்வரை பாடுவதை நிறுத்தக்கூடாது. அவனால் தொடப்பட்டவரெல்லாம் தொலைந்துவிடுவர். அவர் ஆட்டிற் கலவாது ஒரு புறமாய்ப் போயிருத்தல் வேண்டும். அதன்பின், தொடப்பட்ட கட்சியாருள் ஒருவன் இங்ஙனமே எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து ஆடிச் செல்லவேண்டும்.
ஒருவன் எதிர்க்கட்சி எல்லைக்குள் ஆடும்போது பாடுவதைத் தானே நிறுத்திவிட்டாலும், எதிர்க்கட்சியாரிடம் பிடிபட்டு அதை நிறுத்திவிட்டாலும், அவன் தொலைந்தவனாவன். தொலைதலைப் பட்டுப் போதல் என்பர். ஒருகட்சியார் தம் எல்லைக்குள் ஆடும் எதிரியைத் தொட்டுப் பிடிக்க முயன்று முடியாமற்போயின், அவனைத் தொட்டவரெல்லாம் தொடப்பட்டராகவே கருதப்பட்டுத் தொலைந்துவிடுவர். ஒருவன் எதிர்க்கட்சியாருள் ஒருவனையோ பலரையோ தொட்டுவிட்டு வரும்போது, தன் கட்சியெல்லைக்குட் கால்வைக்குமுன் பாடுவதை நிறுத்திவிடின் அவனால் தொடப்பட்டவர் பட்டுப்போகார்.
தனிப்பட்டவர்க்கு வெற்றியோ தோல்வியோ இல்லாமல் இருகட்சியாரும் சமமாகவுள்ளவரை, கட்சிக்கொருவனாக மாறிமாறிப் பாடிவரல் வேண்டும். ஒரு கட்சியார் ஒருவனை இழந்துவிடின் (அஃதாவது அவருள் ஒருவன் பட்டுப்போனால்) அவரே அடுத்த முறையும் பாடிச் செல்லவேண்டும்.
ஒருசில ஆடகர் சடுகுடு என்று சொல்லாமல் பாட்டுப்போல் மோனை யெதுகை அமைந்த நெடுமொழித் தொடர்களையும் சொல்வதுண்டு. (ஒருவன் தன் வெற்றி வீரம் வலிமை முதலியவற்றை எதிரியிடம் மிகுத்துக் கூறுவது நெடுமொழியாம்.)
‘சடுகுடு’ முதலிய தொடர்களை மூச்சுவிடாமற் சொல்லவேண்டும் என்பது மரபு. ஆயினும் சிலர் மூச்சு விட்டுக்கொண்டே இடைவிடாது பாடிக்கொள்வர்.
எந்தக் கட்சியில் அனைவரும் முன்பு படுகின்றனரோ, அந்தக் கட்சி தோற்றதாகும். தோற்றவர்க்குத் தோல்வியால் உண்டாகும் சிற்றவமானமேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.
ஆட்டுத்தோற்ற விளக்கம் : பண்டைத் தமிழரசர் செய்துவந்த போர்வகைகளுள் வெட்சி என்பது ஒன்று. அது நிரை கவர்தல் அல்லது நிரை மீட்டல். இவற்றுட்பின்னது கரந்தை யெனப்படும்.
குறும்பரசர் கொள்ளைத்தலைவர் செயலாகவாவது, வேந்தர் ஏவலாலாவது நிகழ்வது நிரை கவர்தல். நிரைகவரப்பட்ட நாட்டரசன் தன் படைகளைக்கொண்டு நிரை மீட்டல் கரந்தை.
நிரை கவரும்போதும் நிரை மீட்கும்போதும் போர் நிகழும். அப்போரில் வெற்றி தருமாறு கொற்றவை என்னும் காளிக்குத் துடிகொட்டிப் பலியிடுதல் மரபு. இது கொற்றவை நிலை யெனப்படும்.
“மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(புறத். 4)
என்பது தொல்காப்பியம்.
சடுகுடு என்னும் விளையாட்டு, வெட்சிப்போரினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. இரு கட்சியாரும் வெட்சி மறவரும் கரந்தை மறவரும் போல்வர். இடைக்கோடு, அவ்விருசாரார் நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப்புறம் போன்றது. ‘பலிசடுகுடு’ என்று பாடுவது, காளிக்குப் பலியிடுவதையும் துடி கொட்டுவதையும் குறிப்பது (துடிப்பறையிற் சிறியவகை சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.) இருகட்சியாரும் தத்தம் எதிர்க் கட்சியாரைப் பிடித்து நிறுத்துவது, நிரைகவர் தலையும் நிரை மீட்டலையும் நிகர்ப்பது. ‘பட்டுப் போதல்’ என்னும் வழக்கு வெட்சிப்போரில் வீழ்ந்திறத்தலைக் குறிப்பது.
ஆட்டின் பெயர் : இந்த ஆட்டினால், நீண்டநேரம் மூச்சடக்கவும், திருடனைப் பிடிக்கவும், எதிரியினின்று தப்பிக்கொள்ளவும், பயிற்சி பெறலாம்.
கொங்குநாட்டு வேறுபாடு : பாண்டிநாட்டார் சடுகுடுவிற்கு இடைக்கோடொன்றே கீறிக்கொள்வர். கொங்கு நாட்டாரோ, இருகட்சியார்க்கும் இரு வேறு சதுரக் கட்டங்களை அமைத்துக்கொள்வர். ஆடும்போது ஒவ்வொருவரும் தத்தம் கட்டத்திற்குள்ளேயே நிற்றல் வேண்டும். வெளியேறின் விலகிவிடல் வேண்டும்.