உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/024

விக்கிமூலம் இலிருந்து

(2) இரவாட்டு
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’

ஆட்டின் பெயர் : ‘பாக்குவெட்டியைக் காணோமே’ என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் ‘பருப்புச்சட்டி’ எனப்படும்.

ஆடுவார் தொகை : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.

ஆடிடம் : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.

ஆடு முறை : தலைமையான இரு பெதும்பையார்[1] அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும்போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிடவேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.

ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.

ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.

பாண்டிநாட்டுப் பாட்டு

(1) த : பாக்குவெட்டியைக் காணோமே.
 : தேடி ஓடிப் பிடித்துக்கொள்
(2) த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே.
 : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
(3) த : ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
 : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
(4) த : குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
 : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
(5) த : பல்லே வலிக்குதே.
 : நெல்லைக் கொறித்துக்கொள்.

கொங்குநாட்டுப் பாட்டு[2]

(1) த : பருப்புச் சட்டி.
 : திருப்பி நக்கு.
(2) த : வாழை யிலை.
 : வழித்து நக்கு.
(3) த : ஊசியாலே குத்துவேன்.
 : வீட்டுமேலே ஏறுவேன்.
(4) த : கிணற்றிலே குதிப்பேன்.
 : கல்லெடுத்துப் போடுவேன்.
(5) த : தலையே நோகுதே.
 : தலையணை போட்டுக்கொள்.

ஆட்டுத் தோற்றம் : —இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டிகளையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.



    • 5 அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.
    • 1, 2. ‘நக்கு’ என்னுஞ் சொற்குப் பதிலாக ‘நொக்கு’ என்று வைத்துக்கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.