தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/026
௩. பன்னீர்க்குளத்தில் முழுகுதல்
பதினொரு பெண்பிள்ளைகள் கூடித் தெருவில் ஓரிடத்தில் வட்டமாய் உட்கார்ந்தபின், அவருள் தலைமையானவள் ஒவ்வொருத்தியின் முட்டிக்கால்களையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி சுற்றிச் சுற்றித் தொட்டுக்கொண்டு.
1 2 3 4 ஒருப்புட்டம் திருப்புட்டம் ஓடிவா மங்களம் 5 6 7 8 செக்கைத் திருப்பிச் செவ்வெண்ணெய் வார்த்து 9 10 11 12 மாடுங் கன்றும் வருகிற வேளை 13 14 15 16 மஞ்சள் தண்ணீர் தெளிக்கிற வேளை 17 18 19 காலை மடக்கடி காமாட்சி
என்னும் மரபுத் தொடரை, தொடுகைக்கொன்றாகப் பத்தொன்பது சீர்படச் சொல்வாள். காமாட்சி என்று முடிகிற பெண் உடனே ஒரு காலை மடக்கி உட்காரவேண்டும் (அதாவது மண்டியிட்டுக்கொள்ள வேண்டும்). இங்ஙனமே மீண்டும் மீண்டும் அம்மரபுத் தொடர் சொல்லப்பட்டு, ஒவ்வொரு தடவையும் காமாட்சி என்று முடிகிற பெண் தன் காலை மடக்கிக்கொள்ள வேண்டும். இரண்டாந் தடவையாகக் காமாட்சி என்று முடியும் பெண், தன் மறு காலையும் மடக்கினவுடன் எழுந்து போய்விடவேண்டும். இங்ஙனம் ஏனைப் பதின்மரும் எழுந்துபோய் ஓரிடத்திற் கூட்டமாயிருப்பர்.
பின்பு, தலைமையானவள் ஓரிடத்தில் தனிமையாக இருந்துகொண்டு, “முதலில் போன காமாட்சி ஓடிவா” என்பாள். அவள் வந்தவுடன் “உன் குழந்தையை என்ன செய்தாய்?” என்று கேட்பாள். அவள், “என் குழந்தையைக் கிணற்றில் முறித்துப் போட்டுவிட்டுக் குளத்தில் முழுகிவிட்டு வந்தேன்” என்று சொல்வாள். “நீ எந்தக் குளத்தில் முழுகினாய்?” என்று தலைமையானவள் கேட்பாள். அதற்கு அவள், “தயிர்க்குளத்தில் முழுகினேன்” என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய்விட்டது” என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள்.
பின்பு, “இரண்டாவது போன காமாட்சி ஓடிவா” “மூன்றாவது போன காமாட்சி ஓடிவா,” என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள். ஒவ்வொரு தடவையும் முன்சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப்பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி “பருப்புக்குளத்தில் முழுகினேன்” என்பாள். அன்று, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். மூன்றாவதுபோன காமாட்சி “நெய்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய்விட்டது” என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி “பவ்வீக்[1] குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே, தலைமையானவள் “போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது” என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண்மட்டும் “நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன்” என்பாள். உடனே தலைமையானவள் “வா வா வா” என்று சொல்லி அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும்.
தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும்போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக்கொண்டு வருவது வழக்கம்.
- ↑
- இடக்கரான சொல் இடக்கரடக்கி அச்சிடப்பெற்றது.