உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/027

விக்கிமூலம் இலிருந்து

​

(3) இருபொழுதாட்டு
க. ‘ஒருகுடம் தண்ணீர் ஊற்றி’

ஆட்டின் பெயர் : “ஒருகுடம் தண்ணீர் ஊற்றி” என்று தொடங்கும் பாட்டைப் பாடி ஆடும் விளையாட்டு, அம்முதற் குறிப்பையே பெயராகக் கொண்டது.

ஆடுவார் தொகை : இதை ஆட நால்வர்க்குக் குறையாது வேண்டும்.

ஆடிடம் : இது தெருவில் ஆடப்பெறும்.

ஆடு முறை : இருவர் கைகோத்து உயர்த்தி வைத்துக் கொண்டிருக்க அவருக்கிடையே வேறிருவர் அல்லது பலர் ஒருத்திபின் ஒருத்தியாக ஒருத்தி யரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு நுழைந்து சென்று, “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூப் பூத்ததாம், இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூப் பூத்ததாம்” என்று “பத்துக்குடம் தண்ணீர்” வரையும் பாடிக்கொண்டு கைகோத்து நிற்கும் இருவரையும் மாறி மாறிச் சுற்றிக் கொண்டேயிருப்பர்.

“பத்துக்குடம் தண்ணீர் ஊற்றி” என்ற அடி முடிந்தவுடன், அல்லது அதற்குச் சற்று முன்பே, கைகோத்து நிற்கும் இருவரும் கையைத் தாழ்த்தி இரண்டாவது அல்லது கடைசிப் பிள்ளையைப் பிடித்துக்கொள்வர் அல்லது சிறைசெய்வர். அப்போது வரிசை முதல்விக்கும் கைகோத்து நிற்பவருக்கும் பின்வருமாறு உறழுரையாட்டு நிகழும்.

வ : விடடா துலுக்கா!
கை : விடமாட்டேன் மலுக்கா!

​

வ : (கணைக்காலிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன்[1], விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (முழங்காலில் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (இடுப்பிற் கைவைத்து) இருமாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை: விடமாட்டேன் மலுக்கா !
வ : (தோளிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலையிற் கைவைத்து)இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கி) இங்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கிக் குதித்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !

இங்ஙனம் உறழ்ந்துரையாடியபின், “ஆட்டுக் கறியும் சோறும் தருகிறேன், விடடா துலுக்கா !” என்று வரிசை முதல்வி கூறியவுடன், சிறைசெய்யப்பட்ட பிள்ளை விடுதலை செய்யப்படும். அதோடு விளையாட்டு முடியும்.

​“விடடா துலுக்கா !” என்னும் ஏவலும், “விடமாட்டேன் மலுக்கா” என்னும் மறுப்பும், ஒருமை குறித்தனவேனும், கைகோத்து நிற்பவர் இருவரும் ஒருங்கே ஏவப்படுவதும் ஒருங்கே மறுத்துரைப்பதுமே மரபாம்.

ஆட்டுத் தோற்றம் : —அரண்மனைப் பூந்தோட்டத்திற்குக் காவலாயிருந்த ஒரு மகமதியன், தன் காவல் தோட்டத்தில் பூப்பறித்ததொரு பிள்ளையைப் பிடித்துக்கொண்டு, அவள் பெற்றோர் எவ்வளவு பணந்தந்தும் ஏற்காமல் கடைசியில் புலவு அல்லது கறிச்சோறு தருவதாகச் சொன்னவுடன், அப்பிள்ளையை விட்டுவிட்ட செய்தியை,, நடித்துக் காட்டுவதுபோல் உள்ளது இவ்விளையாட்டு.


  1. ↑
    • ‘பொன் தருகிறேன்’ என்பது ‘பொன்னு தாறேன்’ என்று கொச்சை வடிவிற் சொல்லப்படும்.