தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/033
௨. பாண்டி
(க) பாண்டிநாட்டு முறை
ஆட்டின் பெயர் : பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற் கீறப்பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, பாண்டி எனப்படும்.
இவ்விளையாட்டு, ஏனையிரு தமிழ்நாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறிகருவிப் பெயராய் இருக்கலாம்.
பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப்பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பதுபோல், பாண்டி என்பதும் கொண்டிருக்கலாம்.
பாண்டி விளையாட்டிற்கு வட்டு அல்லது வட்டாட்டு என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப்பெயரே வழங்குகின்றது.
ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
ஆடு கருவி : வரிசைக்கு மூன்று ஆக இருநட்டு வரிசையாக ஆறு கட்டங்கொண்ட ஒரு நீள்சதுர அரங்கும், ஆடகர் ஒவ்வொருவர்க்கும் அரையங்குலக் கனமும் ஈரங்குல விட்டமுமுள்ள ஒரு வட்டமான கல் அல்லது ஒட்டாஞ்சல்லியும், இதை ஆடு கருவியாம். அரங்கு, பொதுவாக, ஆறடி நீளமும் நாலடி அகலமும் உள்ளதாயும், மேற்குறும்பக்கத்தில், ‘சமுத்திரம்’ என்னும் ஓர் அரைவட்டங் கொண்டதாயும், இருக்கும். அவ்வரை வட்டத்தின் உச்சியில் சிறுபான்மை அமைக்கப்படும் ஒரு சிறு வளைவு, ‘கும்பக்குடம்’ எனப்படும். கட்டங்கட்குத் தட்டுக்கள் என்று பெயர், கல்லிற்கு அல்லது ஒட்டாஞ்சல்லிக்கு வட்டு என்று பெயர்.
ஆடிடம் : அகன்ற தெருவும் பெரு முற்றமும் பொட்டலும் இதை ஆடிடமாம். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
ஆடு முறை : உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்படியோ யார் முந்தி யாடுவதென்று துணிந்துகொண்டு இருவருள் ஒருவர் ஆடத் தொடங்குவர். திருவுளச்சீட்டுத் தீர்ப்பு காசு சுண்டி அல்லது வட்டெறிந்து அறியப்பெறும்.
ஆடுபவர், அரங்கிற்கு முன் நின்று, இடவரிசை முதற்கட்டத்தில் தம் வட்டையெறிந்து, நொண்டியடித்து ஒரேயெட்டில் அவ்வட்டை மிதித்து, அதைக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் நொண்டியடித்து ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும்.
எறியப்பட்ட வட்டு கட்டத்திற்கப்பால் விழினும் கட்டத்திற்குள் விழாது கோட்டின்மேல் விழினும், நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரேயெட்டில் வட்டை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும் தூக்கிய காலை ஆடும்போது கீழே ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட வட்டு முதற்கட்டத்தினின்று ஒரேயெட்டில் மிதிக்க இயலாதவாறு தொலைவிற் சென்றுவிடினும், ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடவேண்டும். இங்ஙனம் மாறி மாறிக் கடைபோக ஆடுவர்.
முதற்கட்ட ஆட்டுத் தவறாது முடியின், அடுத்த இரு கட்டங்களிலும், பின்பு சமுத்திரத்திலும், அதன்பின் வலப்புற முக்கட்டங்களிலும், முறையே முன்போல் ஆடவேண்டும். 2 ஆம், 3 ஆம், 5 ஆம், 6 ஆம் கட்டங்களில் ஆடும்போது, கட்டந்தொறும் மிதித்து நொண்டியடிப்பதும், ஒரு கட்டம் இடையிட்டு நொண்டியடிப்பதுமாக, இருவேறு முறையுண்டு. இவற்றுள் பின்னதே பெரும்பான்மை. வட்டைக் காலால் தள்ளுவதிலும், மிதிக்கக் கூடிய கட்டங்கட்டமாய்த் தள்ளுவதும், ஒரேயடியாய் வெளியே தள்ளுவதும், என இருமுறையுண்டு.
என்றும் இடவரிசைக் கட்டங்களின் வழியாகவே அரங்கிற்குட் புகவேண்டியிருத்தலின், இடவரிசைக் கட்டங்களும் சமுத்திரமும் முறையே கீழிருந்து மேலாகவும், வலவரிசைக் கட்டங்கள் முறையே மேலிருந்து கீழாகவும், ஆடப்பெறும் என்பதை அறிதல் வேண்டும்.
இருவரிசைக் கட்டங்களும் ஆடப்பட்டபின், அரங்கின் முன் நின்று, ஆயின் அரங்குப் பக்கம் புறங்காட்டித் தலைக்குமேலாக, சமுத்திரத்தில் விழுமாறு வட்டையெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று மிதித்துக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் மிதித்தல் வேண்டும். இங்ஙனம் இடையில் ஒன்றும், இறுதியில் ஒன்றுமாக, இருதடவை சமுத்திரத்தில் வட்டெறிந்து ஆடப்படும். முதல் தடவை எதிர்நோக்கியும், இரண்டாம் தடவை புறங்காட்டியும், வட்டெறிவதே வேறுபாடாம்.
யாரேனும் ஒருவர் இரண்டாந்தடவை சமுத்திரத்தில் தவறாது ஆடியபின். ஆட்டை முடியும். வெற்றிபெற்றவர், அரங்கிற்கு வெளியே முன்புற மூலையொன்றை யடுத்து, குதிங்காலை நடுவாக வூன்றிப் பெருவிரல் அல்லது பாதத்தால் ஒரு வட்டம் வரைவர். அதற்கு உப்பு என்று பெயர். அதை வரைதல் ‘உப்பு வைத்தல்’ எனப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வோர் உப்பு முன்னேர் வரிசையாக வைக்கப்பெறும். முந்தி வென்றவர் அரங்கின் இடப்புற மூலையடுத்தும். பிந்தி வென்றவர் அதன் வலப்புற மூலையடுத்தும் உப்புவைத்தல் மரபு. அரங்கிற்கு முன்னால் தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.
ஆட்டுத் தோற்றம் : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.
ஆட்டின் பயன் : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.