உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/034

விக்கிமூலம் இலிருந்து

(௨) சோழ கொங்கு நாட்டுமுறை
1. ஒற்றைச் சில்லி

ஆட்டின் பெயர் : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் சில்லி என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி ஒற்றைச் சில்லி எனப்படும்.

சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.

ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு சில்லி (சில்லாக்கு) எனப்படும் வட்டும், இதற்குரிய கருவிகளாம். அரங்கின் மேற்பகுதியான அரைவட்டத்திற்குச் சோழநாட்டில் மலை என்றும் கொங்கு நாட்டில் கரகம் என்றும் பெயர். சேலம் வட்டாரத்திற் கரகங் கீறாமலும் ஆடப்பெறும்.

ஆடுமுறை : முதலாவது முதற் கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வோர் எட்டில் மிதித்துச் சென்று கரகத்தில் அல்லது கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி, மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லியை மிதித்து வெளியே தள்ளி, அதை ஓர் நாட்டில் மிதித்தல் வேண்டும்.

இங்ஙனம் பிற கட்டங்களிலும், தொடர்ந்து சில்லி யெறிந்து ஆடல் வேண்டும்.

மேற் கட்டங்களில் எறிந்த சில்லியை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக்கொண்டு வந்து, அடிக் கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே யெட்டில் மிதித்தல் வேண்டும்.

கட்டங்களினூடு செல்லும்போதும் மீளும்போதும், நொண்டியடிக்க வேண்டியபோதெல்லாம், நொண்டியடித்தே சென்று மீளவேண்டும்.

எறியப்பட்ட சில்லி கட்டத்திற்கப்பால் வீழினும், கட்டத்திற்குள் வீழாது கோட்டின்மேல் வீழினும் நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரே யெட்டில் சில்லியை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும், நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட சில்லி முதற் கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் செல்லினும் ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆட ல்வேண்டும். இங்ஙனம், ஆட்டை முடியும்வரை இருவரும் மாறிமாறி யாடுவர்.

நாலு கட்டத்திலும் சில்லியெறிந்தாடியபின், அகங்கையில் ஒருமுறையும் புறங்கையில் ஒருமுறையும் குத்துக்கைமேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, கரகம்வரை கொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். கரகத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.

அதன்பின், தலைமேல் ஒருமுறையும் வலப்பாதத்தின் மேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வோர் எட்டில் மிதித்துக் கரகம் வரை நடந்து சென்று நடந்து மீளவேண்டும்.

பின்பு, அரங்கிற்கு முன் நின்று, கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கு நின்று அரங்கிற்கு முன்பாகச் சில்லியெறிந்து, அங்கிருந்து நொண்டியடித்து வந்து அதை மிதித்தல் வேண்டும்.

பின்னர், மீண்டும் ஒருமுறை கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, கண்ணை மூடிக்கொண்டாவது மேனோக்கிக் கொண்டாவது ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒவ்வோர் எட்டுவைத்து நடந்துசென்று, சில்லியை மிதித்தல் வேண்டும். ஒவ்வோர் எட்டுவைக்கும் போதும் “அமரேசா” என்று சொல்லவேண்டும். கால் கோட்டில் படாது எட்டு சரியாயிருப்பின், எதிரியார் உடன் உடன் “ரேசு” (அமரேசு) என்று வழிமொழிவர்; சரியாயில்லாவிடின் “இல்லை” என்பர். அதன்பின் எதிரியார் ஆடல்வேண்டும்.

“அமரேசா”ப் பகுதி தவறாது முடியின்; எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று வினவி, “யானை” என்று சொல்லின் நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகவும், “பூனை” என்று சொல்லின் குனிந்து இருகாற் கவட்டூடும் சில்லியை ஒரு கட்டத்திற்குள் எறியவேண்டும். அது எக் கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக் குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப்படும். பழம் போட்ட கட்டத்திற்குள் எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்லவேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக்கட்டத்திற்கு வெளியே வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தை யொட்டி ஓர் அரைவட்டம் அமைத்துக்கொடுக்கப்படும். அதற்கு ‘யானைக்கால்’ என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக்கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக்கால் அமைத்துக் கொடுப்பர்.

ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்துவிடின் தவறாம்.

ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும்.

II. இரட்டைச் சில்லி

முதலாம் வகை

ஆட்டின் பெயர் : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி இரட்டைச் சில்லியாம்.

ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாம்.

ஆடு முறை : இது பெரும்பாலும் பாண்டி நாட்டு முறைப்படி ஆடப்பெறும்.

இரண்டாம் வகை

ஆடு முறை : இது ஏறத்தாழ ஒற்றைச் சில்லி போன்றே ஆடப்பெறும். ஒற்றைச் சில்லியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில்லியெறிந்தபின், கரகம் அல்லது மேற்புற வெளிவரை நொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். இதிலோ, வலப்புறக் கட்டங்களின் வழியாகச் சென்று இடப்புறக் கட்டங்களிலுள்ள சில்லியை மிதித்துத் தள்ளவேண்டும். வலப்புற உச்சிக் கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். இதைக் குறித்தற்கு அதில் மூலைக் குறுக்குக் கோடுகள் கீறப்பட்டிருக்கும்.

நடந்து செல்லவேண்டிய பகுதிகளில், ஒரே சமயத்தில் இரு காலையும் இருபுறக் கட்டத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும்.

மூன்றாம் வகை

ஆட்டின் பெயர் : இது சரிகைப் பரண்டி எனப்படும்.

ஆடு முறை : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங்களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இடவரிசை வழியாகவும் செல்லவேண்டும். இடவரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.

நடந்து செல்லவேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப்போல் ஆடப்பெறும்.

III. வானூர்திச் சில்லி

ஆட்டின் பெயர் : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி வானூர்திச் சில்லியாம். இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர்.

மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும்.

ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : மேலே காட்டப்பட்ட படி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும்.

ஆடு முறை : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி, மேற் கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டியடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரேசமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை சென்று, பின்பு அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியே தள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும்.

ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்றவேண்டும்.

இங்ஙனம் எட்டாங் கட்டம்வரை ஆடல் வேண்டும். சில்லியிருக்கிற கட்டம் எதுவாயினும், மேலே செல்லும்போது அதை மிதித்தல் கூடாது; கீழே வரும்போதுதான் அதை மிதித்தல் வேண்டும். ஆகவே கீழிரட்டையிலாயினும் மேலிரட்டையிலாயினும் சில்லி இருக்கும்போது, அதிற் பிறசமயம்போல் இருகாலும் ஊன்ற முடியாது. சில்லியுள்ள கட்டத்தை விட்டுவிட்டுச் சில்லியில்லாத கட்டத்தைத் தான் ஒற்றைக் கட்டம்போல் நொண்டியடித்து மிதித்துச் சென்று மீளவேண்டும். மேற்செல்லும் போதும் கீழ்வரும்போதும், கட்டங்களின் எண்முறைப்படியே சென்று வரவேண்டும். கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாகத் தள்ளும்போது, கட்டங்கட்டமாகவும் தள்ளலாம்; ஒரேயடியாகவுந் தள்ளலாம்.

எட்டுக் கட்டங்களும் இங்ஙனம் ஆடப்பட்டபின், ஒற்றைச் சில்லியிற்போல், வெள்ளைக்கையும் கருப்புக்கையும் குத்துக்கையும் தலையும் காலும், முறையே ஆடப்பெறும். தலையுங்காலும் ஆடும்போது, இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இருகாலும் வைத்தல் வேண்டும்.

அதன்பின், மலைக்குச் சில்லியெறிந்து நொண்டியடித்துச்சென்று மிதித்து, பின்பு அங்கிருந்து முன்புறமாகத் தள்ளி அவ்வாறே வந்து மிதித்தல் வேண்டும். இப்பகுதி நொண்டி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இதிலும், இரட்டைக் கட்டத்தில் இருகாலும் ஊன்றவேண்டும்.

பின்பு, மலைக்கு மீண்டும் சில்லி யெறிந்து ‘அமரேசா’ ஆடிச்சென்று மிதித்தல் வேண்டும். இரட்டைக் கட்டத்தில் ஒரே சமையத்தில் இருகால் வைத்தல் வேண்டும்.

‘அமரேசா’ முடிந்தபின், மலையில் நின்றுகொண்டு எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று கேட்டு, பதிலுக்கேற்பச் சில்லியெறிந்து, நொண்டியடித்துவந்து அதை மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்றுகொண்டு, “பழம் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமா? வந்து பழம் போடவேண்டுமா?” என்று எதிரியாரை வினவி, முன்னது குறிப்பின் போட்டுவிட்டு நொண்டியடித்து முன்வரவேண்டும்; பின்னது குறிப்பின் நொண்டியடித்து அரங்கிற்கு முன்புறமாக வந்தபின் சென்று போடவேண்டும்; போட்டபின் ஆட்டை முடியும்.

‘நொண்டி’யிலும் ‘அமரேசா’விலும் தவிர, பிற பகுதிகளில் மலைக்குச் செல்வதில்லை.

ஆட்டத்தில் தவறும் வகையும், அதன்பின் நிகழும் செயலும், பிற சில்லிகட்குக் கூறியவையே.

ஓர் ஆட்டையில் வென்றவர் அடுத்த ஆட்டையில் முந்தியாடுவர்.

IV. வட்டச் சில்லி

ஆட்டின் பெயர் : வட்டமான அரங்கு கீறி ஆடும் சில்லி வட்டச் சில்லியாம்.

ஆடு கருவி : சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதை ஆடு கருவியாம்.

சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத்தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத்தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும்.

ஆடு முறை : முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அதை ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து மேன்மேலுயர்ந்த தொகையுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த கில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டுமேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல் கூடாது.

ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆடல் வேண்டும்.

குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர். (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்,) கெலித்தவராவர். கெலிப்பதற்குப் பழம் என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும். உப்புக்கள், வட்டையினின்று தொடங்கி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு வரிசையாக இருக்கும். வெளியே தள்ளப்பட்ட சில்லி ஒரேயெட்டில் மிதிக்க முடியாதவாறு தொலைவிலிருப்பின், ஆடுபவர் தாம் வைத்த உப்பு வரிசைமேல் நடந்துசென்று அதை மிதிக்கலாம்.

V. காலிப்பட்டச் சில்லி

ஆட்டின் பெயர் : காலிப்பட்டம் போல் அரங்கு கீறி ஆடும் சில்லி காலிப்பட்டச் சில்லியாம்.

காற்றிற் பறக்கவிடும் பட்டத்தைக் காலிப்பட்டம் என்பர் வடார்க்காட்டு மாவட்டத்தார்.

ஆடு கருவி : மூலைக்குறுக்குக் கோடிட்ட ஒரு சதுரமும், அதையொட்டிய படுக்கையான ஒரு சிறு நீள் சதுரமும் கொண்ட ஒரு பெருநீள்சதுர அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடு கருவியாம். மூலைக்குறுக்குக் கோடிட்ட சதுரம் நான்கு கட்டமாக அமையும். மேலுள்ள நீள்சதுரம் ஐந்தாங் கட்டமாகும்.

ஆடு முறை : முதலாவது முதற்கட்டத்திற் சில்லியெறிந்து, அதை ஒரேயெட்டில் நொண்டியடித்து மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் அதை முன்போல் மிதித்தல் வேண்டும். பின்பு மேற்கட்டங்களிலும் சில்லி யெறிந்து, எண் முறைப்படி கட்டங்கட்டமாய் நொண்டியடித்துச் சென்று மிதித்து, நேரடியாகவோ கட்டங்கட்டமாகவோ வெளியே தள்ளி, முன்போன்றே நொண்டியடித்து வந்து மிதித்தல் வேண்டும்.

மலை வேண்டுவாருள் சிலர், ஐந்தாங் கட்டத்தை மலையாகக் கொள்வர். அங்ஙனங் கொள்ளாதார், அதன் மேற்புற வெளியை அங்ஙனம் பயன்படுத்துவர். மலைக்குச் சில்லி யெறியும்போது எதிர்நோக்கியும், மலையிலிருந்து சில்லி யெறியும்போது புறங்காட்டித் தலைக்கு மேலாகவும், எறிவது வழக்கம்.

பழமானவர் உப்பு வைப்பர்.

இங்ஙனம் எளியமுறையில் இதை ஆடுவது வடார்க்காட்டு வழக்கமாம்.

சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் ‘அமரேசா’ என்பவற்றையும், சேர்த்துக்கொள்வர்.

இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4 ஆம் அல்லது 5 ஆம் கட்டத்தில் விழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் விழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை தொண்டியடித்துத் தள்ளிக்கொண்டுபோய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம்.

VI. கைச்சில்லி

தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக்கொள்ளும் ஆட்டு கைச்சில்லியாம். இது சேலம் வட்டாரத்தில் ஆடப்பெறும்.