தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/048
௬. ‘இதென்ன முட்டை ?’
பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பெரிய பிள்ளை பிறரையெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நிலத்தின்மேற் குப்புற வைக்கச் செய்து, ஒரு மரபுத்தொடர்ச் சொற்களைத் தனித்தனி சொல்லி ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு கையைச் சுட்டி, இறுதிச் சொல்லாற் குறிக்கப்பட்ட பிள்ளையை “உங்கள் அப்பன் பேர் என்ன?” என்று கேட்கும். அதற்கு அப்பிள்ளை “முருங்கைப்பூ” என்னும். பின்பு அப் பெரிய பிள்ளை “முருங்கைப்பூ தின்றவனே?” (ளே !) முள்ளாந் தண்ணீர் குடித்தவனே! (ளே !)” பாம்புக்கை படக்கென்று எடுத்துக்கொள்” என்று சொல்லும். “முருங்கைப்பூ...... குடித்தவனே! (ளே)” என்னும் பகுதியால், சொல்லுக் கொருவராக நான்கு பிள்ளைகள் சுட்டப்பெறும். “குடித்தவனே! (ளே)” என்று முடியும் பிள்ளை, உடனே ஒரு கையை எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். “குடித்தவனே! (ளே)” என்று இரண்டாம் முறை முடியும் பிள்ளை, இன்னொருகையையும் எடுத்துப்பின்னால் வைத்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் திரும்பத் திரும்பச் செய்பின், இறுதியில் ஒரு பிள்ளை அகப்பட்டுக்கொள்ளும்.
அப்பிள்ளை தன் இருகைகளையும் மடக்கி ஒன்றன்மேலொன்றாய்க் கீழேவைக்க, மற்றப் பிள்ளைகளும் தம் கைகளை அவ்வாறே அவற்றின்மேல் அடுக்கி வைப்பர்.
பெரிய பிள்ளை “கீழே சாணிபோட்டு மெழுகலாமா? மண்போட்டு மெழுகலாமா?” என்று கேட்டு, பிறர் “சாணிபோட்டு மெழுகு” என்றால், தன் அகங்கையால் அடிக்கையின் கீழ்ப் பூசுவதுபோல் தடவவேண்டும்; “மண்போட்டு மெழுகு” என்றால், புறங்கையால் அவ்வாறு செய்யவேண்டும்.
பின்பு மீண்டும், “தீட்டின கத்தியில் வெட்டலாமா? தீட்டாத கத்தியில் வெட்டலாமா?” என்று பெரிய பிள்ளை கேட்டு, “தீட்டின கத்தியில்” என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்டாலும், “தீட்டாக கத்தியில்” என்றால் மணிக்கைப் பக்கத்தாலும் வெட்டவேண்டும்.
இனி, வெட்டுஞ் செயல்பற்றி, முற்கூறிய வினாவிற்குப் பதிலாக, “அடியில் வெட்டட்டுமா? நுனியில் வெட்டட்டுமா?” என்று கேட்டு, “அடியில் வெட்டு” என்றால் குத்துக்கையடுக்கின் அடியிலும், “நுனியில் வெட்டு” என்றால் அதன் நுனியிலும் வெட்டுவதுமுண்டு.
பின்பு மீண்டும் முன்முறைப்படி கைகளை அடுக்கி வைக்கவேண்டும். பெரிய பிள்ளை ஒவ்வொரு கையாய்த் தொட்டு “இதென்ன மூட்டை?” “இதென்ன மூட்டை” என்று கேட்கும். பிறர் “அரிசி மூட்டை,” “பருப்பு மூட்டை,” “புளி மூட்டை,” “உப்பு மூட்டை” ஒவ்வொரு சரக்கின் பெயராற் கூறுவர். “ஒவ்வொரு மூட்டையிலும் கொஞ்சங் கொஞ்சந் தாருங்கள்” என்று பெரிய பிள்ளை கேட்கும்.பிறர் "தரமாட்டோம்" என்பர். அதனாற் பெரிய பிள்ளை, எல்லாரையும் கண்ணை மூடிக்கொண்டு குப்புறக் கவிழ்ந்துகொள்ளச் சொல்வாள். அவர் அங்ஙனஞ் செய்தபின், “உங்கள் அப்பா வருகிறார்கள்” “உங்கள் அம்மா வருகிறார்கள்” என்று ஏமாற்றி யாரையேனும் எழவைத்து, அப்பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையான அடி பெரியபிள்ளை கொடுக்கும். ஒருவரும் ஏமாறி எழாவிடின், “விளையாட்டுப் போதும், எழுந்திருங்கள்” என்று சொல்லி, எல்லாரும் எழுந்தபின் எல்லார்க்கும் அடிகொடுக்கும். இதோடு ஆட்டம் முடியும்.