தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/052
III. பெரியோர் பக்கம்
இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம்.
1. ஆண்பாற் பகுதி
(1) பகலாட்டு
தாயம்
இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது பதினைந்து நாயும் புலியும் என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது,
“வல்என் கிளவி தொழிற்பெய ரியற்றே”
(தொல்.373)
“நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே
உகரங் கெடுவழி அகரம் நிலையும்”
(ஷை.374)
என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம்.
(2) இரவாட்டு
கழியல்
ஒரு குறிப்பிட்ட தொகையினர், குறிப்பிட்ட இடங்களில் நெருங்கி நின்றுகொண்டு, ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு குறுங்கழி ஏந்தி அவற்றைப் பிறர் கழிகளோடு தாக்கியடித்து, பின்னிப் பின்னியும் சுற்றிச் சுற்றியும் வரும் ஆட்டு, கழியல் எனப்படும்.
இது பகலிலும் ஆடற்குரியதாயினும், பொதுவாக இரவிலேயே ஆடப்பெறும். இதற்கும் கும்மிக்குப் போல் ஒரு தனிவகைப் பாட்டுண்டு. அது, தன்னன தன்னன தன்னான—தன
தன்னன தானன தன்னான
என்னும் வண்ணம் பற்றியதாகும்.
(3) இருபொழுதாட்டு
முக்குழியாட்டம்
இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங்காயளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, முக்குழியாட்டம் எனப்படும்.
இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நிலவிரவிலும் ஆடப்பெறும், திருச்சி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர்.