தமிழ்ப் பழமொழிகள் 1/எ

விக்கிமூலம் இலிருந்து

எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல.

எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்?

(உபசாரம், எக்கு-இடுப்பு.)

எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ. 4840

எகனை முகனை பார்க்கிறான்.

எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்.

(போய் வந்தார்.)

எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்?

(வீட்டுக்கு.)

எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள்.

எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை. 4845

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை.

எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள்.

எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம்.

எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம்.

எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே? 4850

(பெருமாள்தானே.)

எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான்.

எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன்.

(காவிரிபின் கூற்று, ஏறிப் பாயாது.)

எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது.

எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன்.

எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி. 4855

(பார்.)

எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை.

எங்கும் பருத்தி எழுபது பலம்.

எங்கும் பொன்னம்பலந்தான்.

எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை.

எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம். 4860

எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.

எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும்.

எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும்.

எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு.

எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது. 4865

எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம்.

எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய்.

எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும்.

எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது.

எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள். 4870

எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும்.

எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும்.

(தீட்டுத் துடைக்கும்.)

எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்?

எச்சில் இலைக்கு அலையும் நாய் போல.

எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது. 4875

(எச்சில் தீட்டுக்கு.)

எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது.

எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா?

எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா.

எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல.

எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி. 4880

எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு.

எச்சில் இலை கண்ட நாய் போல.

எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா?

எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு. 4885

எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?

(எச்சிலிலைக் கணக்குக் கேட்கச் சொன்னார்களா?)

எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை?

எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்.

(கையாலும்.)

எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா?

(பிச்சை எடுப்பானா?)

எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும். 4890

எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை.

எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா?

எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.

எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா?

(அடங்குமா?)

எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை. 4895

எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல.

எச்சிலைத் தின்று பசி தீருமா?

எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம்.

எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம்.

எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள். 4900

எட்கிடை நெற்கிடை விட்டு எழுது.

எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்?

எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல.

எட்டாத பழம் புளிக்கும்.

எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே. 4905

எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல.

எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு.

எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை.

எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்.

(இடம்.)

எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும். 4910

எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது.

எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம்.

எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும்.

எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல்.

எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது. 4915

எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன்.

எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.

(இனிப்பு.)

எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு.

எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல்.

(இச்சிக்கிறதா?)

எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம். 4920

எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான்.

எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா?

எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?

எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும்.

(பச்சென்று இருந்தால் கண்ணுக்கு அழகு.)

எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே. 4925

(வைத்த மரம் தோப்பாக வேணும்.)

எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம்.

(பக்ஷம்.)

எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா?

எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா?

(உண்ணலாமா?)

எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும்.

(எட்டியுடன் கூடி.)

எட்டின மட்டும் வெட்டும் கத்தி; எட்டாத மட்டும் வெட்டும் பணம். 4930

எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது.

எட்டினால் குடுமியைப் பிடித்து எட்டாவிட்டால் காலைப் பிடிப்பது.

(தலையை.)

எட்டு அடி வாழை, கமுகு; ஈரடி கரும்பு, கத்தரி; இருபதடி பிள்ளை

(பிள்ளை-தென்னம் பிள்ளை. )

எட்டு அடி வாழையும் பத்தடி பிள்ளையும்.

(பிள்ளை-தென்னம் பிள்ளை.)

எட்டு ஆள் வேலையை ஒரு முட்டாள் செய்வான். 4935

எட்டு இருக்கிறது, எழுந்திரடி அத்தையாரே.

எட்டு எருமைக்காரி போனாளாம், ஓர் எருமைக்காரியிடம்.

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

எட்டு என்றால் இரண்டு அறியேன்.

எட்டுக் கிழவருக்கு ஒரு மொட்டைக் கிழவி. 4940

எட்டுக் குட்டுக் குட்டி இறங்கிக் காலைப் பிடிக்கிறது.

எட்டுக் கோவில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி.

எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை.

எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும்.

எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம். 4945

எட்டு நாயும் பெட்டைக் குட்டியும் போல்.

எட்டுப் படி அரிசியும் ஒரு கவளம்; ஏழூர்ச் சண்டை ஒரு சிம்மாளம்.

எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும்.

எட்டும் இரண்டும் அறியாதவன்.

எட்டும் இரண்டும் அறியாத பேதை. 4950

எட்டு மாசம் குளிர்ந்திருந்தால்.

எட்டு மாட்டுக்கு ஒரு சாட்டை.

எட்டு முழமும் ஒரு சுற்று; எண்பது முழமும் ஒரு சுற்று.

எட்டு வருஷத்து எருமைக் கடா ஏரிக்குப் போக வழி தேடுகிறது.

(ஈட்டுப் பிராயத்து.)

எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம். 4955

(வட்டம்-தையல். )

எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி.

எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே.

(எட்டேகால் லக்ஷணமே-அவலக்ஷணமே. எமனேறும்வாகனம்- எருமைக்கடா.)

எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க.

எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம்.

எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம். 4960

(விழுந்தாற் போல.)

எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை.

(எருமைச்சுமை.)

எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா?

(கோபாலம்-பிச்சை.)

எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.

(முட்டி, பல்லக்கா. )

எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை.

எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம். 4965

எடுத்த அடி மடங்குமா?

எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது.

எடுத்த கை சிவக்கும்.

எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்?

எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும். 4970

எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும்.

எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான்.

(செத்தான்.)

எடுத்து ஆளாத பொருள் உதவாது.

எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா.

(எருது மாடு ஆகாது.)

எடுத்து எறிந்து பேசுகிறான். 4975

எடுத்துக் கவிழ்த்துப் பேசுகிறான்.

எடுத்துச் சொல்; முடித்துச் சொல்.

எடுத்துப் பிடித்தால் வெட்டுவேன் என்ற கதை.

எடுத்துப் போட்டு அடிக்கிறது; முறத்தைப் போட்டுக் கவிழ்க்கிறது.

எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பான். 4980

எடுத்து விட்ட எருது போல.

எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்?

எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்?

எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும்.

எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லக்கு. 4985

எடுப்பார் கைப் பாவை போல.

எடுப்பார் கைப் பிள்ளை.

(கைக் குழந்தை.)

எடுப்பார் மழுவை; தடுப்பார் புலியை; கொடுப்பார் அருமை.

எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைத்தாற் போல இருக்கும்.

(தம்பி.)

எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு. 4990

எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்.

எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?

எண் அற்றவர் கண் அற்றவர்; எழுத்தற்றவர் கழுத்தற்றவர்.

(இல்லாதவன்.)

எண் அறக் கற்று எழுத்து அற வாசித்தாலும் பெண்புத்தி பின் புத்திதான்.

எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. 4995

என்சாண் இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே.

எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை.

எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.

எண்சாண் உடம்பு இருக்கக் கோவணத்திலே விழுந்ததாம் இடி.

எண்சாண் உடம்பும் ஒரு சாண் ஆனேன். 5000

எண்ணத்தில் மண் விழுந்தது.

எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது.

(ஏடு இடம் கொள்ளாது.)

எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.

(மண்ணைத்தின்ன, நொண்டிக்குதீரை வந்து.)

எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம்.

எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல். 5005

(என்னச் சுற்ற.)

எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்.

எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய்.

எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்.

எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய்.

(ஏளனம்.)

எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய். 5010

எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

எண்ணிச் சுட்டது தேசை.

எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே.

(மாப்பிள்ளை.)

எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு. 5015

எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை.

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.

(குறள்.)

எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை.

எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது.

எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய். 5020

எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி?

எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி.

எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல்.

எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 5025

எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம்.

எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை.

எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல.

எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல.

எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல. 5030

எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்?

எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ!

எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி,

எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்?

எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது. 5035

(தலை சீவி.)

எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும்.

எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி.

(குடித்த நாய் இருக்க.)

எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை.

(செலவே ஒழிய, பிழைக்காது, பிழைத்தபாடு இல்லை.)

எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்?

எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ? 5040

எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ?

எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா?

(எண்ணெய் மிஞ்சுமோ?)

எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான்.

எண்ணெயில் விழுந்த ஈயைப் போல.

எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது. 5045

(எண்ணெயைத் துடைக்கலாம், எழுத்தை அழிக்க முடியுமா?)

எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்!

எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம்.

எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு.

எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன்.

எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது. 5050

(நாவிதன் கூற்று.)

எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை.

எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான்.

எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?

(எத்தனை தேய்த்தாலும் போகாது.)

எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை.

எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ? 5055

எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை.

எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது.

எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான்.

(தின்னான்.)

எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை. 5060

எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.

எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை.

எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான்.

(நோரு-வாய்.)

எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.

(பிழைக்கலாம்.)

எத்திக் கழுத்தை அறுக்கிறதா? 5065

எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது.

(இரவிலே தாலாட்டுவது.)

எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி.

(கேப்பை-கேழ்வரகு.)

எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே.

(யாழ்ப்பாண வழக்கு.)

எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.

எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான். 5070

எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி.

(பரிகாரி-வைத்தியன், பிணியாளி.)

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான்.

எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும்.

எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன். 5075

எதார்த்த வாதி வெகுஜன விரோதி.

(பொதுஜன விரோதி, மகாஜன துவேஷி.)

எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு.

எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.

எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும். 5080

எதிர் நீச்சம் போடுகிறான்.

எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு.

எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே?

எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு.

எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம். 5085

எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம்.

எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?

(பேசுகிறதா?)

எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா?

எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம். 5090

எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல்.

எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.

எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது?

எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்? 5095

எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர்.

எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.

எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்.

எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது.

எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன? 5100

எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது.

எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும்.

எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?

எந்தப் பொருளும் கந்த புராணத்திலே.

(‘புளுகும்’ என்பது தவறான பாடம்.)

எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்? 5105

எந்த மனசும் மைந்தனை வெறுக்குமா?

எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு.

எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான்.

எப்படியாவது என் கோயில் வாழ.

எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய். 5110

எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது.

எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி?

எம்மதமும் சம்மதம்.

எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான்.

எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும். 5115

எமன் கடாவை ஏரில் பூட்டினது போல,

எமன் கையில் அகப்பட்ட உயிர் போல,

எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா?

எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்?

எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா? 5120

எமன் வாயிலிருந்து மீண்டது போல.

(வந்தது போல.)

எமனுக்கு வழி காட்டுவான்.

எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல.

எமனையும் நமனையும் பலகாரம் செய்வான்.

எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான். 5125

எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?

எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?

எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே.

(தீயில் வார்த்தாற் போல்.)

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல. 5130

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

(இழுத்தால்.)

எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல்.

எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா?

எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா?

(எண்ணெய் ஊற்றியது போல.)

எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி. 5135

எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல.

எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல.

எரிகிற புண்ணில் புளி இட்டது போல.

எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல.

எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி. 5140

எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல்.

எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான்.

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

(எடுத்தது. )

எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல. 5145

எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்?

எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல.

எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா?

எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை.

எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது. 5150

எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல்.

எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே.

எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல.

எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம்.

(பயிர்.)

எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை. 5155

எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான்.

எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல.

எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா?

எருக்குழியின்றி ஏர் பிடியாதே.

எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும். 5160

எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு.

எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான்.

எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம்.

எருதில் ஏழை உண்டா?

எருதின் நோய் காக்கை அறியுமா? 5165

எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.

எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்.

எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும்.

எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல.

(தொழுவத்திலே-கொட்டகையிலே.)

எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல. 5170

எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது?

எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம்.

(உண்ணிக்கு நாக்கு வாங்குகிறதாம்.)

எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும்.

எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும்.

எருதுக்குச் சூடு போட்டது போல. 5175

(எருமைக்கு.)

எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?

எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி.

எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும்.

எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய்.

எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய். 5180

(இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் ஏழே கடுக்காய், எட்டே கடுக்காய்.)

எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான்.

எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல.

எருது சுமந்தது; கோணி கொண்டது.

எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும்.

எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா? 5185

(தோழம்-தொழுவம்.)

எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா?

எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா?

எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்?

எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?

(காக்கை அறியுமா?)

எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும். 5190

எருது பொதி சுமந்தாற் போல.

எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல.

எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது?

எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா?

எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல. 5195

எருப்போட்டு ஏர் இடு.

எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே.

எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா?

எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்?

எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம். 5200

எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய்.

(ஒரு பீர் பால் தா. கொடுக்காதா என்றானாம்.)

எருமைக் கன்று அருமைக் கன்று.

எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை.

எருமைக்குச் சூடு போட்டது போல.

எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா? 5205

எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும்.

எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது.

(முறை.)

எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா?

(ஏற்குமா?)

எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா?

(எக்கியத்திற்கு.)

எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல. 5210

எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும்.

எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.

எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல.

(எருமைமேல்.)

எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான்.

எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது. 5215

எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல.

(கருத்து; அசுத்தம்.)

எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல.

எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான்.

(எரு முட்டை.)

எருமை மூத்திரம் லேகியத்திற்கு ஆகுமா?

(எக்கியத்திற்கு.)

எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா? 5220

எருமை வாங்குமுன் ஏன் விலை கூறுகிறாய்?

எருமை வாங்கும்முன் நெய் விலை பேசுகிறதா? பிள்ளை பெறுமுன் பெயர் வைக்கிறதா?

எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறுகிறதா?

எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல.

எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல. 5225

எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும்.

எல்லப்ப செட்டி லக்க ஏக லக்க,

(லக்க-கணக்கு.)

எல்லா ஓட்டும் குல்லாவிலே.

எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே.

(எல்லா ஒட்டும்.)

எல்லாம் அதிசயந்தான்; ஆக்குகிறது பூஜ்யந்தான். 5230

எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை.

(ஏதும்.)

எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறதா?

எல்லாம் அறியாதவனும் இல்லை; யாதும் அறிந்தவனும் இல்லை.

எல்லாம் இருக்கிறது பெட்டியிலே, இலைக்கறி கடையச் சட்டி இல்லை.

(கீரை கடைய.)

எல்லாம் ஈசல் செயல். 5235

எல்லாம் ஏறி இளைத்த குதிரையின்மேல் தம்பி பொற்பட்டம் கட்டிப் புறப்பட்டான்.

எல்லாம் களத்தின்மேல் விளைவு.

எல்லாம் கிடக்க எருதுக்குச் சீமந்தமாம்.

எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?

எல்லாம் கிடக்கக் கிழவனைத் தூக்கி மணையில் வைத்தாளாம். 5240

எல்லாம் சரி என்று எண்ணலாமா?

எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான்.

எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி.

(காடிப் பானையில்.)

எல்லாம் தபோபலத்தால் கைகூடும்.

எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை. 5245

(நிமிர்த்தி.)

எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது.

எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது.

(ஒன்று.)

எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன்.

எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான்.

எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து. 5250

எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை.

எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும்.

(எல்லாவற்றுக்கும்.)

எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது.

எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல.

எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம். 5255

எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்?

எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான்.

எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான்.

எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்.

எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம். 5260

எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள்.

எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள்.

எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான்.

(சிரட்டை-கொட்டங்கச்சி.)

எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார்.

எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார். 5265

எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள்.

(நாமம்.)

எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்.

எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான்.

எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம்.

எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள். 5270

எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா?

(மனிதர் எல்லாம்.)

எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம்.

எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்?

எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?

(பல்லக்கை யார் தூக்குவார்கள்.)

எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு. 5275

எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான்.

எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம்.

எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும்.

எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு.

எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள். 5280

எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல,

எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை.

எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான்.

எல்லி செட்டி லக்க ஏக லக்க.

(லக்க - கணக்கு.)

எல்லை கடந்தால் தொல்லை. 5285

எல்லை சுற்றின பிடாரி மாதிரி.

எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.

எலக்ட்ரியை நம்பி இலை போடாதே.

(எலக்ட்ரி-மின்சாரம்.)

எலி அம்மணத்தோடே போகிறது என்கிறான்.

எலி அழுது புலம்பினாலும் பூனை விட்டுவிடுமா? 5290

(பூனை பிடித்து விடாது.)

எலி அறுக்கும்; தூக்க மாட்டாது.

எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

எலி எட்டப் பாம்பு குடிகொள்ள.

எலிக்கு அஞ்சிச் சந்நியாசம் போனது போல.

எலிக்கு அஞ்சுவான்; புலிக்கு அஞ்சானாம். 5295

எலிக்கு அநுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளியார்க்கு அநுகூலம் வலியார் அரசனுக்கு அஞ்சுதல்.

எலிக்கு இரணம்; பூனைக்குக் கொண்டாட்டம்.

எலிக்குத் திண்டாட்டம்; பூனைக்குக் கொண்டாட்டம்.

எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல.

(வீட்டில் தீ வைத்தது போல, வீட்டைக் கொளுத்தியது போல.)

எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம். 5300

எலிக்குப் பூனை பயப்படுமா?

எலிக்கு மணியம், சுவரை அறுக்கிறது.

எலிக்கு வலி, பூனைக்குக் கொண்டாட்டம்.

எலி கடித்தால் சிறுபாலை அடி.

(செருப்பாலே அடி.)

எலி தலையிலே கோடரி விழுந்தது போல. 5305

எலி தலையிலே கோபுரம் இடிந்து விழுந்தது போல.

எலிப் பகை தொலைக்க, இருந்த வீட்டில் தீயிடல் போல.

எலிப் பாழாக இருந்தாலும் தனிப் பாழாக இருக்க வேண்டும்.

எலிப் புழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந்தென்ன?

எலி பூனைக்குச் சலாம் போடுவது போல. 5310

எலி பூனைய வெல்லுமா?

எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா?

எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார்.

எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும்.

(சிறங்கை-சிறு அங்கை.)

எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல. 5315

எலியும் பூனையும் போல.

எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?

எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?

எலியைத் தவற விட்ட பூனை போல.

எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்? 5320

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்.

எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல.

எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான்.

எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும்.

எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல். 5325

எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா?

(வேட்டைக்குத் தவில் அடிப்பா?)

எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும்.

(எல்லாப் பக்கமும் பேசும்; எப்படி வேண்டுமானாலும் பேசும்.)

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்?

எலும்பு ருசியை நாய்தான் அறியும்? 5330

எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?

(இருந்த பல்லும்.)

எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான்.

எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல.

எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல.

எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம். 5335

எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும்.

எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்.

எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று.

எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?

எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம். 5340

எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்?

எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே!

எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று.

எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி.

எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை. 5345

(எறிவான்.)

எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.

(கிழித்து.)

எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல.

எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.

எழுத்து எண்ணிப் படித்தவன்.

எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர். 5350

(உதட்டுக்குப் பால் மாறிய வருத்தம் அடைவர், செட்டி நாட்டு வழக்கு.)

எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான்.

எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும்.

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல். 5355

எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம்.

எழுதிய விதி அழுதால் திருமா?

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.

எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல. 5360

எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல.

எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.

எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை.

எழுந்ததும் தொழு; தொழுததும் படு.

எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க. 5365

எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள்.

எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை,

எழுந்திருப்பான்; கால் இல்லை.

எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில்.

(பழமொழி நானூறு.)

எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும். 5370

எழுபது பேரைக் கொன்ற படுநீலி.

(நீலி கதை.)

எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.

எள் உருண்டை போல.

(சிறுமை.)

எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான்.

எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான். 5375

எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு.

(யாழ்ப்பாண வழக்கு)

எள் போட்டால் எள் விழாது.

எள் விதைத்த காட்டில் கொள் முளையாது.

எள் விதைத்தால் துவரை விளையுமா?

எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே! 5380

எள் விழுந்தால் கீழே விழாது.

எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை.

எள்ளுக்காய் பிளந்த விவகாரம்.

எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும்.

எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல. 5385

எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு

  ஓர் உழவு உழுது பயிர் செய். 

எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு.

எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு.

  :(எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.)  

எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும்.

எள்ளுக்குள் எண்ணெய் போல. 5390

எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும்.

(எண்ணெய் போல.)

எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி.

எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள்.

எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம்.

எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும். 5395

(எள்ளைத் தின்றால்.)

எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய்.

எள்ளுப் பயிருக்கு எழுபது நாள்.

எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது.

(விழாது.)

எள்ளும் அரிசியும் கலந்தாற் போல.

எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும். 5400

எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம்.

எள்ளும் கொள்ளும் எழுபது நாள்.

எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான்.

எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான்.

எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன். 5405

(முகம் கழுவினேன்.)

எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும்.

எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல்.

எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும்.

எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு.

எள்ளுள் எண்ணெய் போல். 5410

எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான்.

எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல.

எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல.

(பங்கு வைப்பது போல.)

எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும்.

எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி. 5415

எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது,

எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம்.

எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான்.

(அடிக்கிறான்.)

எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.

எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி. 5420

(கொள்ளலாமா?)

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும்.

எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.

(அடித்தால்.)

எற்று சால் எண்ணாயிரம் பொன்.

(விநாயகர் கணக்குப் பிள்ளையாக வந்து மன்னனிடம் சொன்னது, )

எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு.

எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா? 5425

எறிந்த கல் விழுகிற மட்டும்.

எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல.

எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா?

எறிவானேன்? சொறிவானேன்?

எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது. 5430

எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா?

எறும்பு இட்டலியைத் தூக்கியது போல.

எறும்பு ஊர்வது போல.

எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.

எறும்பு ஊரக் கல்லும் தேயும். 5435

(கற்குழியும்.)

எறும்பு ஊரில் பெரும்புயல் வரும்.

எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா?

எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி.

(தண்டலையார் சதகம்.)

எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.

எறும்புக் கடிக்கு மருந்தா? 5440

எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்.

எறும்புக்குத் தெரியாத கரும்பா?

எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம்.

எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல்.

எறும்பு கடிக்கப் பொறுக்காதா?. 5445

எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும்.

எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம்.

எறும்பு தின்றால் நூறு வயசு.

எறும்பு நுழைந்த ஆனைக் காது போல.

எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். 5450

எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல.

எறும்பும் தன் கையால் எண் சாண்.

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.

எறும்பு முதல் ஆனை வரையில்.

என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று. 5455

என் கிண்டி லட்சம் பொன்.

என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.

என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது.

என் கை பூப்பறிக்கப் போகுமா?

என் கையிலே எலும்பு இல்லையா? 5460

என் கை வெல்லம் தின்கிறதா?

என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்?

என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு.

என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன்.

என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே. 5465

(என் பவிஷூ, என் பேச்சு.)

என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும்.

என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை.

என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள்.

என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள்.

என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார். 5470

(வளர்த்தாள்.)

என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்.

என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.

என் முகத்தில் கரி தடவாதே.

(சாணி பூசாதே.)

என் முகத்தில் கரி பூசினாயே!

என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை. 5475

என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது.

என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன்.

என் வயிற்றிலே பாலை வார்த்தாய்.

என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? 5480

என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ்.

என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள்.

என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை.

என்றும் காய்க்கும் எலுமிச்சை.

என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம்.

என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான்.

என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே.

என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும்.

என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே.

என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது? 5490

(போடுகிறவளுக்கு.)

என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே!

(சின்னமலைக் கவுண்டன் கொங்குநாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்தவன்.)

என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.

என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம்.

என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்?

என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய். 5495

என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான்.

என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்?

என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம்.

என்னடா பிரம்ம வித்தையோ?

என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது. 5500

என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம்.

என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும்.

(செரிக்கும்.)

என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை.

என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை.

என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா! 5505

(ஆண்டவனே!)

என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.

என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம்.

என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே?

என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி.

என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம். 5510

என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்?

என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம்.

என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான்.

(கேடு கெட்டவன்.)

என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை.

என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு. 5515

என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி.

என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி.

என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன்.

என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.

என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன். 5520

(விடுவான்.)

என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை.

(அழகு.)

என்னை நம்பாதே, தாலி வாங்காதே.

என்னைப் பவிஷு ஆற்றுகிறான்.

என்னைப் பார் என் மேனி அழகைப் பார்.

என்னைப் போலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை. 5525

என்னையும் பார்த்து இரவல் கேட்கிறதா?

என்னை விடைந்தால் உன்னை விடைவேன்; அம்மலாமா?

எனக்கா கல்யாணம் என்றானாம்.

எனக்கு அஷ்டமத்துச் சனி.

எனக்கு ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. 5530

எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஓர் அடி அடிக்கலாம்.

எனக்குக் கட்டின லிங்கத்தைக் குழிப்பாக்கு விளையாடுவேன்.

எனக்குக் கொடுக்கிறதைக் கொடுத்தால் போகிறேன்.

எனக்குப் பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்.

எனக்குப் பாக்குப் பிடிக்கப் பார்க்கிறான். 5535

எனக்கு வேண்டாம் பூசணிக்காய்.

எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/எ&oldid=1157199" இலிருந்து மீள்விக்கப்பட்டது