உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் அகராதிக் கலை/முதல் பாகம்

விக்கிமூலம் இலிருந்து


முதல் பாகம்

தமிழ் அகராதிக் கலை வரலாறு

அகராதிக் கலை என்றதுமே, இப்படியும் ஒரு கலையா என்று வியப்புடன் கேட்கத் தோன்றும். ஆம், இஃதும் ஒரு கலைதான்! இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழ் அகராதிக் கலையின் வயது மூவாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்டதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் ‘லெக்சிகோகிராஃபி’ (Lexicography) என அழைக்கப்படும் அகராதிக் கலை ஐரோப்பிய மொழிகளில் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. அத்தகு வளர்ச்சி தமிழ் மொழியிலும் நடைபெற்று வருகிறது.

அகராதி என்றால் என்ன? அகராதிக் கலை என்றால் என்ன? அதன் வரலாறு யாது? இவ்வினாக்கட்குத் தொடர்ந்து விளக்கம் காண வேண்டும்.

அகராதி என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள சொற்கள் அகர வரிசையில் அடுக்கிப் பொருள் (அர்த்தம்) கூறப்பட்டிருப்பதற்கு அகராதி என்று பெயராம். அதாவது, ஆனி, அறம், ஆடு, அணில் என்னும் சொற்களை எடுத்துக் கொண்டால், தமிழ் எழுத்துக்களுள் முதலெழுத்தாகிய ‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அறம், அணில் என்னும் சொற்களை முதலிலும், அடுத்த எழுத்தாகிய ‘ஆ’ என்னும் எழுத்தில் தொடங்கும் ஆனி, ஆடு, என்னும் சொற்களை அடுத்தபடியாகவும் நிறுத்த வேண்டும்; அறம், அணில் என்னும் சொற்களுள்ளும், இரண்டாவது எழுத்துக்களை நோக்கின், ‘ற’ என்பதனினும் ‘ணி’ என்பது எழுத்து வரிசையில் முதன்மையானதாதலின், அணில் என்னும் சொல்லை முதலிலும், அறம் என்னும் சொல்லை அடுத்தபடியாகவும் நிறுத்த வேண்டும்; அது போலவே, ஆனி, ஆடு என்னும் சொற்களுள்ளும், இரண்டாவது எழுத்துக்களுள் ‘னி’ என்பதனினும் ‘டு’ என்பது முதன்மையானதாதலின், ஆடு என்னும் சொல்லை முன்னும், ஆனி என்னும் சொல்லைப் பின்னும் அமைக்க வேண்டும்; இவ்வாறே இன்னும் மூன்றாவது–நான்காவது–ஐந்தாவது எழுத்துக்களையும், ஐந்திற்கும் மேற்பட்ட எழுத்துக்களையும் நோக்கிச் சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்கு நேரே பொருளும் கொடுக்கப்பட்டிருக்கும் சுவடிக்குத்தான் அகராதி என்பது பெயர்.

+அகரம் ஆதி = அகராதி, அகரம் என்றால் ‘அ’. (அகரம் என்பதில் உள்ள ‘கரம்’ என்பது, சாரியை எனப்படும்.) ஆதி என்றால் ‘முதல்’. அ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கிச் செல்வதால் அகராதி எனப்பட்டது. இதனை ‘அகர வரிசை’ என்னும் பெயராலும் இன்று அழைக்கின்றனர். அகரத்தை முதலாகக் கொண்டு அ,ஆ,இ,ஈ, என்ற வரிசையில் சொற்கள் செல்வதால் ‘அகர வரிசை’ என இக்காலத்தில் தனித் தமிழ்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அகரவரிசை முறையை ஆங்கிலத்தில் ‘ஆல்பா பெடிகல் ஆர்டர்’ (Alphabetical Order) என்பர். இப்பெயர் ‘கிரீக்’ (Greek) மொழியிலிருந்து வந்ததாகும். Alpha என்பது ஒரு சொல்; Beta என்பது மற்றொரு சொல். Alpha என்பது A என்னும் எழுத்தில் தொடங்குகிறது; Beta என்பது B என்னும் எழுத்தில் தொடங்குகிறது. A என்பது கிரீக் மொழியின் முதல் எழுத்து; B என்பது அம்மொழியின் இரண்டாம் எழுத்து. கிரீக் எழுத்துக்களிலிருந்து தான் இலத்தீன் எழுத்துக்கள் தோன்றின. இலத்தீன் எழுத்துக்களால் தான் ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி முதலிய ஐரோப்பிய மொழிகள் எழுதப்படுகின்றன. எனவே, ஐரோப்பிய மொழிகளில் A, B, C, D’ வரிசை என்று சொல்வதற்குப் பதிலாக, Aவில் தொடங்கும் Alpha என்னும் சொல்லையும், Bயில் தொடங்கும் Beta என்னும் சொல்லையும் இணைத்து Alphabet வரிசை என்கின்றனர். அ, ஆ வரிசை என்பதற்குப் பதில் ‘அணில் ஆடு வரிசை என்று சொல்வது போன்றதாகும் இது. A, B என்னும் எழுத்துக்களை அறிமுகஞ் செய்ய Alpha, Beta என்னும் சொற்கள் பயன்படுத்தப் படுவதைப் போல, இந்தக் காலத்தில் முதல் வகுப்பு மாணவரின் சுவடியில் அ, ஆ என்னும் எழுத்துக்களை அறிமுகப்படுத்த அணில், ஆடு, என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன வன்றோ? எனவே, ஆங்கிலத்தில் Alphabetical Order என்பதுபோல, தமிழில் ‘அணிலாடு வரிசை’ என ஒரு புதுப்பெயர் படைத்துக் கொண்டு வழங்கி வரலாம். அல்லது, சுருக்கமாக ‘அ-ஆ வரிசை’ என்றும் அழைக்கலாம். அதன் சுருக்கமே ‘அகர வரிசை’ என்பது.

எனவே, அணிலாடு வரிசை முறையில் சொற்கள் அடுக்கப்பட்டுப் பொருளும் கூறப்பட்டிருக்கும் சுவடி அகராதி என அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘டிக்ஷனரி’ (Dictionary) என்கின்றனர்.

அகராதிக் கலை என்றால் என்ன?

சொல்லுக்குப் பொருள் கூறத் தொடங்கிய அகராதி நாளடைவில் பல துறைகளாகப் பிரிந்து பல உருவங்கள் எடுத்தது. அவற்றுட் சில வருமாறு:

(1) சொல்லுக்குப் பொருள் கூறுவதோடு, அச்சொல் எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாயிற்று என்ற விவரமும், அது பேச்சு வழக்கிலோ அல்லது செய்யுள் வழக்கிலோ வந்துள்ள தொடரும். அது எடுத்தாளப்பட்டுள்ள நூலின் பெயரும், நூலில் அது வந்துள்ள உட்பிரிவின் பெயரும், இத்தனையாவது பாடல் எனப் பாடல் எண்ணும் இன்ன பிறவும் கொடுக்கப்பட்டிருக்கும் அகராதிகள்.

(2) மின்சாரம், பொறிகள் (இயந்திரங்கள்) என்பன போன்ற குறிப்பிட்ட பொருள்களைப் பற்றியும், உழவு, நெசவு போன்ற குறிப்பிட்ட தொழில்களைப் பற்றியும் உள்ள சொற்கள் மட்டும் அவற்றின் தோற்றத்துடன் பொருள் கூறப்பட்டிருக்கும் தனித்துறையகராதிகள்.

(3) சரியான இலக்கிய வழக்கிலிருந்தும் பொருத்தமான ஒலியிலிருந்தும் (உச்சரிப்பிலிருந்தும்) வேறுபட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு வழங்கப்படும் வட்டார வழக்குச் சொற்கள் மட்டும் அகர வரிசையில் பொருள் கூறப்பட்டிருக்கும் வழக்கு அகராதிகள் (Dialects).

(4) ஒரு நூலின் இறுதியில் அல்லது முதலில், அந்நூலிலுள்ள செய்யுட்களின் முதலிலுள்ள சொற்களையெல்லாம் திரட்டி அகர வரிசையில் கொடுக்கும் செய்யுள் முதற் குறிப்பகராதி; நூலின் உள் தலைப்புக்களைக் கூறும் பொருளடக்க அகராதி.

(5) ஒரு நூலிலுள்ள அருஞ்சொற்களை மட்டும் பொருளுடன் அந்நூலினிறுதியில் தந்திருக்கும் அருஞ் சொல்லகராதி.

(6) ஒரு நூலிலுள்ள சொற்கள் அனைத்தையும் நூலில் வந்துள்ள இடஞ்சுட்டிக் கொடுக்கும் தனி நூல் அகராதி.

(7) ஒரு நூலிலுள்ள இன்றியமையாச் சொற்களை மட்டுமோ அல்லது பொருட்களை (செய்திகளை) மட்டுமோ நூலில் வந்துள்ள அடி-இடம் சுட்டிக் கொடுத்துள்ள சிறப்பு அகராதி (Concordance). இவ்விருவகையுள் சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பது ‘சொற் கோவை அகராதி’ (Verbal Concordance) எனவும், பொருட்கள் கொடுக்கப்பட்டிருப்பது ‘பொருட்கோவை அகராதி’ (Real Concordance) எனவும் அழைக்கப்படும்.

(8) பல்வகைக் கலைத் துறை - அறிவுத்துறை பற்றிய படங்களுடன் கூடிய அருஞ்சொல் விளக்க அகராதிகள் (Glossary).

(9) உலகச் செய்திகள் - பொருள்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியம் (Encyclopaedia).

(10) ஒரு மொழிச் சொல்லுக்கு நேரான வேறு ஒரு மொழிச் சொல்லோ-அல்லது-பல மொழிச் சொற்களோ கொடுக்கப்படும் மொழியகராதி வகைகள்.

(11) மேலுள்ளவையே யன்றி, ஒரு மொழியிலே வழங்கும் பழமொழிகளை யெல்லாம் அகர வரிசையில் தொகுத்த பழமொழி யகராதி.

(12) ஒரு மொழி வல்ல: புலவர்களின் (அறிஞர்களின்) வாழ்க்கைக் குறிப்புக்களை அகர வரிசையில் தரும் புலவர் அகராதி.

(13) இருசுடர், முக்குணம், ஐம்பொறி எனத் தொகையெண்களால் சுட்டப்படுவனவற்றை விளக்கும் தொகை யகராதி.

(14) அகம், மகம், முகம்; இன்னல், கன்னல், தின்னல்-என்பன போன்ற செய்யுட் கேற்ற எதுகைத் தொடைச் சொற்கள் தரப்படும் தொடையகராதி.

(15) அரம்–அறம்; குலம்–குளம்; மணம்–மனம் என்பன போல ஒப்புமையுடைய ஓரெழுத்து வேறுபாடுடைய சொற்கள் தரப்பட்டுள்ள எழுத்து வேறு பாட்டகராதி.

இப்படி யின்னும் பலவகை அகராதிகள் உருவெடுத்து வளர்ந்து வருகின்றன.

முதலில் சொற்கட்குப் பொருள் கூறுதல் மட்டும் செய்து வந்த அகராதி, மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி பலவகை உருவங்கள் என்றைக்கு எடுக்கத் தொடங்கியதோ அன்றைக்கே அகராதியும் ஒரு ‘கலை’யாகி விட்டது. பொதுவாக ஓர் அறிவியலோ அல்லது ஒரு தொழிலியலோ அது தோன்றிய காலத்து இருந்த நிலையினும் மேலாகக் கற்பனையால் புதுப்புது நிலையை அடையத் தொடங்குகிற போதே ‘கலை’ பிறந்து விடுகிறது. ஓர் இயல் கலையாகி வளர வளர, மக்கள் அதனால் கவரப்பட்டு, அதனைப் பல வகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் பொது விதிக்கு அகராதிக் கலையும் உட்பட்டதே.

அகராதிக் கலை வரலாறு யாது?

ஒரு கலையாக வளர்ச்சி பெற்ற தமிழ் அகராதித்துறை மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோற்றம் எடுத்தது. இப்பொழுது கிடைத்திருக்கும் தமிழ் நூற்களுள் முற்பட்டதாகவும், மூவாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றியதாகவும் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண நூலில் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதிகள் உள்ளன.

முதல் தமிழ் அகராதி :

தொல்காப்பியம் ‘மொழி விஞ்ஞானமும்’, ‘சமூக வாழ்வியல் விஞ்ஞானமும்’ அடங்கிய ஒரு தலை நூலாகும். அதன் முதல் பிரிவாகிய எழுத்ததிகாரத்தில் எழுத்திலக்கணமும், இரண்டாவது பிரிவாகிய சொல்லதிகாரத்தில் சொல்லிலக்கணமும், இறுதிப் பிரிவாகிய பொருளதிகாரத்தில் செய்யுளிலக்கணமும் அணியிலக்கணமும் வாழ்வியற் பொருளிலக்கணமும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் சொல்லதிகாரத்திலுள்ள உரியியல் என்னும் பிரிவில் 120 சொற்கட்குப் பொருள் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். அதே அதிகாரத்திலுள்ள இடையியல் என்னும் பகுதியிலும் ஒருசார் சொற்கட்கு உரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. பொருளதிகாரத்திலுள்ள மரபியல் எனும் பகுதியிலும் சொற்பொருள் அறிவிக்கும் கூறு அமைந்துள்ளது. இம்மூன்று இயல்களுக்குள்ளேயே உரியியலில்தான் முழு அளவில் அகராதிக் கூறு அமைந்துள்ளது. எனவே இதனை ‘முதல் தமிழ் அகராதி’ எனலாம். ஆனால், தொல்காப்பியத்தில் பொருள் கூறப்பட்டுள்ள சொற்கள் இக்கால அகராதிபோல் அகரவரிசையில் இல்லை என்பது ஈண்டு நினைவில் வைக்கற்பாலது.

தமிழிலக்கணத்தில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முருகன், மாடு, வீடு எனப் பொருள்களின் பெயரைக் குறிக்குஞ் சொற்கள் பெயர்ச் சொற்கள். வா, போ என வினையை (செயலைக்) குறிக்குஞ் சொற்கள் வினைச் சொற்கள். தனித்துப் பொருள் தராமல், அவனே, செய்தானோ எனப் பெயர்ச் சொல்லோடும் வினைச் சொல்லோடும் சேர்ந்து பொருள் தரும் ஏ, ஓ போன்ற பெயரும் அல்லாத–வினையும் அல்லாத - இரண்டுக்கும் இடைப்பட்ட சொற்கள் இடைச் சொற்களாம். கறுப்பு, சிவப்பு, முழுமை போன்ற பண்புச் சொற்கள் உரிச் சொற்களாம்.

கறுப்பு, சிவப்பு, முழுமை எனத் தனியே பொருட்கள் இல்லை; எனவே இவை, பொருளின் பெயரைக்குறிக்கும் பெயர்ச் சொற்களுமல்ல; இவை செயல்களும் அல்லவாதலின் வினைச் சொற்களும் அல்ல. உள்ளத்தாலும் ஐம்பொறிகளாலும் உய்த்து (யூகித்து) உணரப்படும் பண்புகளே (abstract) இவைகள். அதாவது, கறுப்பு என ஏதாவது ஒரு பொருளைத் தனியே பிரித்துப் பார்க்க முடியாது; ஒரு பொருளில் கறுப்பு நிறம் என ஒன்று தெரியும் அவ்வளவு தான். மற்ற பண்புகளும் இப்படியே. இவ்வகையாக, நிறம், அளவு, தன்மை, உணர்வு முதலிய பண்புகளைக் குறிக்குஞ் சொற்கள் உரிச் சொற்கள் எனப்பட்டன. உரிச் சொல் என்பதற்கு, செய்யுட்கு உரிமை பூண்ட சொல் என்று சிலரும், அதற்கு உரியது-இதற்கு உரியது. இன்னும் எதெதற்கோ உரியது என்று சிலரும் விளக்கம் தருகின்றனர். அப்படியெனில், பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் செய்யுட்கு உரிய சொல் இல்லையா - இன்னும் எதெதற்கோ உரியசொல் இல்லையா? எனவே, உரிச்சொல் என்றால், பல்வகைப் பண்புகளைக் குறிக்குஞ் சொல் என்ற முடிவுக்குத் துணிந்து வந்துவிட வேண்டும். ‘உரி’ என்னும் பெயர் ஏன் வந்தது-எப்படி வந்தது? என்று கேள்வி கேட்டால் சரிப்படாது. பெயருக்கும் வினைக்கும் பெயர், வினை என்னும் பெயர்கள் ஏன் வந்தன-எப்படி வந்தன? இவை போலவே உரி என்னும் பெயரும் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்தப் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு சொற்களையும் பற்றித் தனித்தனியே பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களில் பேசியுள்ளார் தொல்காப்பியனார். நான்கு சொற்கட்கும் நான்கு இயல்களில் இலக்கணங் கூற வந்த ஆசிரியர், பெயரியலிலும் வினையியலிலும் பெயர்-வினை வகைகளும் அவற்றின் இலக்கணங்களும் கூறினாரேயன்றி, பெயர்ச் சொற்கள் பலவற்றையும் வினைச் சொற்கள் பலவற்றையும் திரட்டி நிறுத்திப் பொருள் கூறினாரிலர்; ஆனால் இடையியலில் இடைச் சொற்கள் சிலவும், உரியியலில் உரிச் சொற்கள் பலவும் அமைத்து அவற்றிற்குப் பொருளும் கூறியுள்ளார். பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் மக்கள் தெளிவாக அறிவார்கள் எனக் கருதி அவற்றிற்குப் பொருள் கூறும் வேலையை ஆசிரியர் விட்டுவிட்டார் போலும். அதே நேரத்தில், இடைச் சொற்களும் உரிச் சொற்களும் பொருள் கடினமானவையாதலின் அவற்றிற்கு மட்டும் பொருள் கூறினார் போலும். அவற்றுள்ளும், வெளிப்படையாக எளிதில் பொருள் தெரியும் சொற்களை விட்டு விட்டு, அரிய சொற்கட்கு மட்டுமே ஆசிரியர் பொருள் கூறியுள்ளார். இதனைத் தொல்காப்பிய உரியியலிலுள்ள

“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
 வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.”

என்னும் நூற்பாவால் அறியலாம். மேலும் ஆசிரியர், ‘அரிய சொற்கள் எனினுங்கூட, எல்லாச் சொற்களையும் இங்கே கூற முடியாது; சொற்களுக்கு உரிய எல்லாப் பொருள்களையுங் கூட (அர்த்தங்களையுங் கூட) சொல்ல முடியாது; விடுபட்ட சொற்களையும், பொருள்களையும் வந்தவிடத்துக் கண்டு கொள்க’ என்றும் முடிவில் அறிவித்துள்ளார். இச்செய்திகளை, இடையியலின் இறுதியிலுள்ள

“கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
 கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.”

என்னும் நூற்பாவானும், உரியியலின் இறுதியிலுள்ள

“கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல
 வேறுபிற தோன்றினும் அவற்றோடுங் கொளலே.”

“அன்ன பிறவும் கிளந்த அல்ல
 பன்முறை யானும் பரந்தன வரூஉம்
 உரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட
 இயன்ற மருங்கின் இனைத்தென அறியும்
 வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து
 ஓம்படை ஆணையிற் கிளந்தவற் றியலான்
 பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.”

என்னும் நூற்பாக்களானும் அறியலாம். மேலே “அன்ன பிறவும்” என்னும் நூற்பாவில் உள்ள ‘பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல்,’ ‘இனைத்தென அறியும் வரம்பு தமக்கின்மையின்’- ஆகிய தொடர்களை நோக்கின், சொல்லி முடியாவாதலின் எவ்வளவோ உரிச்சொற்கள் விடுபட்டன என்பது புலனாகும். மற்றும், அந்நூற்பாவின் இறுதியிலுள்ள ‘என்மனார் புலவர்’ என்னும் தொடரை நோக்கின், ஓர் அரிய உண்மை புலப்படும். ‘என்மனார் புலவர்’ என்றால், ‘என்று புலவர்கள் சொல்லியுள்ளனர்’- என்று பொருளாம். ‘என்று புலவர்கள் சொல்லியுள்ளனர்’ என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்றால், அவருக்கும் முன்னே எத்தனையோ புலவர்கள், எத்தனையோ இலக்கண நூற்கள் இயற்றியுள்ளனர் என்பது புலனாகிறது. அச்செல்வங்கள் எல்லாம், நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால், அவற்றில் கூறப்பட்ட சொற்பொருள்களையும் நாம் அறிய முடியும். எனவே, இவ்வுண்மையைக் கொண்டு நோக்குங்கால், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்திற்கும் முன்னமேயே — அதாவது வரலாற்றுக் காலத்திற்கும் அப்பாற்பட்ட மிகப் பழங்காலத்திலேயே, சொல்லுக்குப் பொருள் கூறும் அகராதித் துறை தமிழ் மொழியில் தோன்றி விட்டது என்னும் பேருண்மை தெரிய வரும்.

சொல்லுக்குப் பொருள் கூறும் உரியியலில், ஒரே பொருள் (அர்த்தம்) உடைய சொற்களும் உள்ளன; பல பொருள்கள் தரும் சொற்களும் இடம் பெற்றுள்ளன; ஒரே பொருளைத் தரும் பல சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் எடுத்துக்காட்டுக்களுடன் தனித் தலைப்பில் பின்னர் விளக்கப்படும்.

சொல்லிலக்கணம் :

தொல்காப்பியச் சொல்லதிகாரம் சொல்லிலக்கணம் (Etymology) கூறும் பகுதியெனக் கண்டோம். அதில் சொற்களின் பல்வேறு நிலைகளும், இயல்புகளும் கூறப்பட்டிருப்பதோடு, இடையியலிலும், உரியியலிலும் சொற்கட்குப் பொருள்களும் கூறப்பட்டிருப்பதையும் அறிந்தோம். இதைக் கொண்டு, சொல்லுக்குப் பொருள் கூறும் அகராதித் துறையும் சொல்லிலக்கணத்தின் பாற்பட்டதே என்பது புலனாகும்.

இவ்வாறு, சொல்லிலக்கணத்தின் ஓர் உறுப்பாயிருந்த அகராதித் துறை, நாளடைவில் அதிலிருந்து பிரிந்து ஒரு தனிக்கலையாயிற்று. எல்லாக் கலைகளிலுமே இவ்வாறு நிகழ்வது இயற்கையே. பொதுவாக, மக்களின் உள்ளத்து (மனத்து) இயல்புகளைக் கூறவெழுந்த உளவியல் (Psychology) கலையிலிருந்து, குழந்தை உளவியலும் (Child Psychology), கல்வி உளவியலும் (Educational Psychology) பிரிந்தது போல, சொல்லிலக்கணத்தி (Etymology) லிருந்து அகராதிக் கலை (Lexicography) பிரிந்ததில் வியப்பில்லை.

தொல்காப்பிய உரியியலின் வேலையைப் பிற்காலத்தில் சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி முதலிய நூல்கள் எடுத்துக் கொண்டன. இந்நூற்களில் சொற்பொருள் தவிர வேறெதுவும் கிடையாது. தொல்காப்பியத்தில் இடைச் சொற்கள்-உரிச் சொற்கள் மட்டும் குறுகிய அளவில் பொருள் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்நூற்களில் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், திசைச் சொல், வட சொல் எனப் பல்வகைச் சொற்களும் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் போலவே, இந்நூற்களிலும் சொற்கள் அகர வரிசையில் இல்லாமல் கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்தில், உரிச் சொற்களும், இடைச் சொற்களும் பொருள் கூறப்பட்டிருப்பதைக் கண்ட பிற்காலத் தமிழறிஞர்களின் உள்ளங்களில் பெயர்ச் சொல், வினைச் சொல் முதலிய சொற்கட்கும் ஏன் பொருள் கூறக் கூடாது? என்ற உணர்வு தோன்றியிருக்க வேண்டும். எனவே அவர்கள், எல்லா வகைச் சொற்களையுஞ் சேர்த்துத் தனி நூற்கள் எழுதத் தொடங்கி விட்டிருக்கிறார்கள். அப்படித்தான் சொல்லிலக்கணத்திலிருந்து அகராதித் துறை தனியாகப் பிரிந்திருக்க வேண்டும். இந்த முறையில் திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கள் பலவகைச் சொற்களுடனும் விரிவாகத் தோன்றியிருப்பினும், எளிய சொற்கள் முதற்கொண்டு இக்கால அகராதிகளில் எண்ணிறந்து காணப்படுவது போல், அந்நூற்களில் காண முடியாது; அரிய சொற்கள் மட்டுமே அந்நூற்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கள் தொல்காப்பிய உரியியலை நோக்க, மிகப் பரந்து பட்டவையெனினும், இக்கால அகராதிகளை நோக்க மிகச் சுருங்கியனவேயாம்.

மேலும், தொல்காப்பியக் காலத்திற்கும், திவாகரம், பிங்கலம் முதலிய நூற்களின் காலத்திற்கும் நடுவே பல நூற்றாண்டு காலம் இடைவெளியுள்ளது என்னுஞ் செய்தி ஈண்டு எண்ணத் தக்கது. இந்தத் துறையில் கிடைத்திருக்கும் நூற்களில் சேந்தன் திவாகரமே முற்பட்டது. அது, ஒரு தோற்றம் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அதாவது இற்றைக்கு 1200 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதற்கும் முன்னால், ஆதி திவாகரம் எனவும் ஒரு நூல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் முன்னால், நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் புலவரால் இப்படியொரு நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது. இப்படி வைத்துப் பார்க்குங்கால், மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னால் சில நூற்கள் தோன்றி மறைந்து விட்டது போலவே, அத்தொல்காப்பியத்துக்குப் பின்னும், சில நூற்றாண்டுகள் வரை சில நூற்கள் தோன்றி மறைந்திருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு. இதை நம்ப முடியாதென்றால், தொல்காப்பியத்தின் காலத்தை இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ள வேண்டி வரும்.

ஆகக் கூடியும், அகராதித் துறையில் தொல்காப்பிய உரியியலுக்குப் பின் நமக்கு உருப்படியாகக் கிடைத்துள்ள முழு நூற்களுள் சேந்தன் திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டும் முற்பட்டவை. இவற்றின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டெனச் சொல்லப்படுகிறது. இந்நூற்கள் ‘நிகண்டு’ என்னும் பொதுப் பெயர் ஏற்று, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு என மக்களால் அழைக்கப்படுகின்றன. இந்நிகண்டுகளையடுத்து, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலிய நூற்றுக்கணக்கான நிகண்டு நூற்கள் தோன்றின. இவையெல்லாம் பின்னர்த் தனித் தனித் தலைப்புக்களின் கீழ் விளக்கப்படும்.

நிகண்டு—பெயர்க் காரணம் :

நிகண்டு நூற்கள் எல்லாம் சொல்லுக்குப் பொருள் கூறும் அகராதித் துறையைச் சேர்ந்தனவே யாகும் அங்ஙனமாயின், இத்துறை நூற்கட்கு ‘நிகண்டு’ என்னும் பொதுப்பெயர் ஏன் வந்தது?–என்பது குறித்து ஆராய வேண்டும்:–

வடமொழியிலுள்ள வேதத்தின் ஆறு அங்கங்களுள் நிருத்தம் என்பதும் ஒன்று ; அதில் ‘நிகண்டு’ என ஒரு பகுதி உள்ளது ; அப்பகுதியில் சொற்பொருள் விளக்கஞ் செய்யப்பட்டுள்ளது. இதை யொட்டி, சொல்லுக்குப் பொருள் கூறும் தனி நூற்களும் நிகண்டு என வடமொழியில் அழைக்கப்பட்டன. புராணம், பிரபந்தம் முதலிய பெயர்களைப் போல இந்த நிகண்டு என்னும் பெயரும் தமிழ் மொழிக்குத் தொத்திக் கொண்டது. சொற்பொருள் கூறத் தொடங்கிய தமிழ் நூற்களெல்லாம் நிகண்டு என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பட்டன. இஃது ஒரு சாரார் கொள்கை.

நிகண்டு என்னும் வட சொல்லுக்குத் தொகுதிகூட்டம் என்று பொருளாம். சொற்கள் தொகுதியாக-கூட்டமாக அமைக்கப்பட்டுப் பொருள் விளக்கப்பட்டிருத்தலால் நிகண்டு என்னும் பெயர் தரப்பட்டதாம்.

நிகண்டு என்பது வடமொழிச் சொல் என்று சொல்பவர் ஒருபுறமிருக்க, அது தமிழ்ச் சொல்தான் என்று சொல்பவரும் உளர். நிகண்டு என்னும் சொல்லுக்கு உண்மை என்பது பொருள் எனவும், ‘நிகழ்ந்தது’ என்னும் சொல்தான் ‘நிகண்டு’ என மருவி விட்டதெனவும் தமிழ்க் கொள்கையினர் ஒருசாரார் கூறுகின்றனர். இதற்கு இன்னொரு வகையாகவும் பொருட்டு (காரணம்) கூறலாம் :

நீளம் என்பதை நிகளம் எனவும் நீண்டது என்பதை நிகண்டது எனவும் பேச்சு வழக்கில் மக்கள் சிலர் சொல்வதைக் கேட்கலாம். நிகளம் என ஒருசார் செய்யுள் வழக்கும் உண்டு. இந்த வழக்குகளை யொட்டிப் பார்க்குங்கால், நிகண்டு என்னும் சொல்லுக்கு, நீண்டது என்று பொருள் கொள்ளலாம். சொற்களின் பட்டியல் நீளமாகத் தரப்பட்டிருத்தலின்-அதாவது-சொற்களின் பட்டியல் நிகண்டு (நீண்டு) கொண்டுபோதலின் ‘நிகண்டு’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். நிகளுவது நிகண்டு. எளிய மக்களின் பேச்சு வழக்கிலும் நிகண்டு என்னும் சொல்லாட்சியைக் காணலாம்; அது வருமாறு:–

“எனக்கு இந்த வேலை ஒரு நெகுண்டு இல்லே”; “அவன் அந்த வேலையை ஒரே நெகுண்டா முடிச்சு விட்டான்”; “நான் வழியில் எங்கும் நிற்காமல் ஒரே நெகுண்டா போய்ச் சேர்ந்தேன்”...... முதலிய வழக்காறுகள் தென்னார்க்காடு மாவட்டத்திலுண்டு. மற்ற மாவட்டங்களிலுங் கூட இருக்கலாம். இந்த வழக்காறுகளில் ‘நிகண்டு’ என்னும் சொல்தான் ‘நெகுண்டு’ எனக் கொச்சையான உருவத்தில் காணப்படுகிறது. ‘இந்தவேலை ஒரு நெகுண்டு இல்லை’ என்றால் தொடர்ந்து செய்ய முடியாத அளவுக்கு நீண்டு கொண்டு போகும் ஒரு பெரிய வேலையன்று என்பது கருத்து. வேலையை ‘ஒரே நெகுண்டா முடித்து விட்டான்’ என்றால், இடையீடின்றி நீண்ட நேரம் தொடர்ந்து செய்து வேலையை முடித்து விட்டான் என்பது கருத்து. ‘ஒரே நெகுண்டா போய்ச் சேர்ந்தேன்’ என்றால், நீண்ட தொலைவைத் தொடர்ந்து கடந்து சென்றேன் என்பது கருத்து. ‘ஒரே நெட்டாய்ப் போய்ச் சேர்ந்தேன்’ என்றும் சிலர் சொல்வதுண்டு. நெட்டாய் என்பதற்கும் நெகுண்டாய் என்பதற்கும் பொருள் ஒன்றே; இவ்விரண்டிற்கும் அடிப்படைகளாகிய நெடுமை (நெட்டாய்), நிகளம் (நெகுண்டாய்) என்னும் இரண்டும் ஒரே பொருளுடையனவன்றோ ?

எனவே, சொற்கள் நீளத் தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல் ‘நிகண்டு’ எனப்பட்டது. இப்படிப் பொருள் கொள்ளின், நிகண்டு என்னும் சொல் தமிழ்ச் சொல்லே என்பது பெறப்படும். நிகண்டு என்பதை வடசொல்லெனக் கொண்டு பார்த்தால், தொகுதி-கூட்டம் என்பது அதன் பொருளாகும்; எனவே, சொற்கள் தொகுதியாக - கூட்டமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நூல் நிகண்டு என்பது பெறப்படும்; இந்தப் பெயர்க் காரணம் பொருந்துமென்றால், நிகண்டு என்பதைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு, சொற்கள் ஒரு பட்டியல் போல நீளத்தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல் நிகண்டு எனக்கூறும் பெயர்க்காரணம் மட்டும் ஏன் பொருந்த முடியாது? எனவே, நிகளுவது நிகண்டு என்னும் முடிவுக்கு வரலாம்.

உரிச்சொல் :

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு முதலிய நூற்கள் நிகண்டு என்னும் பொதுப் பெயரால் அழைக்கப் பட்டது பிற்காலத்தில்தான்; முதற் காலத்தில் இந் நூற்கள் ‘உரிச் சொல்’ என்னும் பொதுப்பெயராலேயே அழைக்கப்பட்டன. சொல்லுக்குப் பொருள் கூறும் தனி நூலை இப்போது நாம் அகராதியென அழைத்தல் போல அந்தக் காலத்தில் உரிச்சொல் அல்லது உரிச்சொல் பனுவல் என அழைத்தார்கள். உரிச் சொல் என்னும் பெயர் நாளடைவில் மறைந்து போக, நிகண்டு என்னும் பெயர் நிலைத்துவிட்டது.

சொல்லுக்குப் பொருள் கூறும் துறை நூலுக்கு முதலில் உரிச்சொல் என்னும் பெயர் கொடுக்கப் பட்டதன் காரணமாவது:—

சொல்லுக்குப் பொருள் கூறும் துறை, முதன் முதல் தொல்காப்பிய உரியியலில் காணப்பட்டது. அதில் உரிச் சொற்கள் பொருள் விளக்கஞ் செய்யப் பெற்றிருத்தலைக் கண்ட பிற்கால அறிஞர்கள், தாமும் சொற்பொருள் விளக்கம் தரும் தனி நூற்கள் இயற்றத் தொடங்கி அவற்றை உரிச்சொல் என்னும் பெயரால் அழைத்தார்கள். எனவே, இந்த உரிச்சொல் என்னும் பெயர், தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் என்னும் பெயரிலிருந்து கடன் வாங்கப்பட்டதேயாகும். தொல்காப்பிய உரியியல், உரிச் சொற்கட்குப் பொருள் கூறுவதால் உரியியல் எனப்பெயர் பெற்றது; பிற்காலத்திலோ உரிச் சொல்லே யன்றி மற்ற சொற்கட்கும் பொருள் கூறும் நூற்களும் உரிச் சொல் என்னும் பெயர் பெற்றன; இது எது போன்றதெனின், எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு மட்டும் முதலில் பெயரா யிருந்த ‘எண்ணெய்’ என்னும் பெயர், பின்னர் மற்ற பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட நெய் வகைக்கும் உரியதானது போன்றதாம். ‘உரிச்சொல்’ என்பதின் உண்மையான பெயர்க் காரணம் இதுவே. ஆனால் சிலர், ஒரு சொல்லுக்கு ‘உரிய’ பல பொருள்களும், ஒரு பொருளுக்கு ‘உரிய’ பல பெயர்களும் கொடுக்கப்படுவதால் ‘உரிச் சொல்’ எனப்பட்டது என என்னென்னவோ காரணம் கூறி இடர்ப்படுகின்றனர்.

இனி, திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கட்கு, முதற் காலத்தில் உரிச்சொல் என்னும் பொதுப் பெயரே இருந்தது என்பதை உறுதி செய்யும் அகச் சான்றுகள் சில வருமாறு:—

(1) திவாகரம், பிங்கலம் ஆகிய நூற்கள் தோன்றிச் சில நூற்றாண்டுகள் கடந்த பின்னர், பதின் மூன்றாம் நூற்றாண்டில் ‘நன்னூல்’ என்னும் இலக்கண நூல் இயற்றிய பவணந்தி முனிவர், தொல்காப்பியச் சொல்லதிகார உரியியலைப் போலவே, தமது நன்னூலின் சொல்லதிகாரத்திலும் உரியியல் என ஒரு பகுதி அமைத்துச் சொற்பொருள் விளக்கஞ் செய்துளளார். அவர் உரியியலின் இறுதியில், ‘எல்லாச் சொற்கட்கும் இங்கே பொருள் கூறி முடியாது; மற்ற மற்ற சொற்கட்கு உரிய பொருள்களை யெல்லாம் பிங்கலம் முதலிய உரிச் சொல் நூற்களுள் கண்டு கொள்க’ என்னும் கருத்தில் ஒரு நூற்பா பாடியுள்ளார்; அது வருமாறு:—

“இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்றிசை நூலுட் குணிகுணப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே”

இந்நூற்பாவில், பிங்கலம் முதலிய நூற்கள் ‘உரிச்சொல்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. திவாகரமும் பிங்கலமும் இயற்றப்பட்ட காலம் எட்டாம் நூற்றாண்டு; பவணந்தியார் நன்னூல் இயற்றியகாலமோ பதின்மூன்றாம் நூற்றாண்டு. ஐந்து நூற்றாண்டுகட்குப் பின்னும், நன்னூலார், பிங்கல முதலிய நூற்களை நிகண்டு என்னும் சொல்லால் குறிப்பிடாமல் ‘உரிச்சொல்’ என்னும் சொல்லால் குறிப்பிட்டிருப்பது காண்க.

(2) இதே நன்னூற் பாடலுக்குப் பிற்காலத்தில் உரை யெழுதிய மயிலை நாதர் என்னும் அறிஞர்,

“.........அவை பிங்கல முதலான புலவர்களாற் செய்யப் பட்ட உரிச்சொல் பனுவல்களுள் விரும்பி அறிந்து கொள்க”

எனத் தமது உரையிலும் நிகண்டு என்னாது உரிச்சொல் பனுவ லென்றே கூறியுள்ளமை காண்க. மற்றும், நன்னூல் பொது வியலில் உள்ள,

“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”

என்னும் நூற்பாவின் உரையிலும் உரையாசிரியர் மயிலை நாதர்,

“......... விரிந்த உரிச்சொற் பனுவல்களுள்ளும் உரைத்தவாறு அறிந்து வழங்குக”

என்று உரிச்சொல் பனுவ லெனவே எழுதியுள்ளார். பனுவல்–நூல்; உரிச்சொல் பனுவல்–உரிச்சொல் நூல்,

இனி, பிங்கலம் முதலிய சில நூற்களின் பாயிரப் பகுதியிலும் உரிச்சொல் என்றே கூறியிருக்கும் சான்றுகள் வருமாறு: (3) பிங்கல நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளில்

“பிங்கல முனிவன் எனத்தன் பெயர்நிறீஇ
 உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை”

என உரிச்சொல் என்றே கூறப்பட்டுள்ளது.

(4) கயாதரர் எழுதிய கயாதரம் என்னும் நூலின் பாயிரப் பாடல்களில்,

“............... தேவைக் கெயாதரன் தொல்
 வேதியன் சொற்ற உரிச்சொற் பனுவலு மேம்படுமே.”

“............... உரிச்சொல் கிளர் பனுவல்.......................
 நடக்கும் படியாக் கெயாதரம் என்றுபேர் நாட்டினனே.”

எனவும், கயாதர நூலின் இறுதிப் பாடலில்,

“விரும்பிய கோவை உரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான்
 பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவைப்பெருந்தகையே.”

எனவும் ‘உரிச்சொல் பனுவல்’ என்றே கூறப்பட்டுள்ளது.

(5) திவாகரர், பிங்கலர், கயாதரர் முதலிய அறிஞர்களைப் போலவே காங்கேயன் என்னும் புலவரும் சொற்பொருள் கூறும் நூல் ஒன்று இயற்றியுள்ளார். அவர் தமது நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயர் வைத்து விட்டார். இதனை,

“உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல்
தன்னை.........”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம். மற்றும், இந்த உரிச்சொல் நிகண்டின் ஓலைச் சுவடியொன்றின் இறுதியில், ஏடு பெயர்த்து எழுதியவரால் பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது:--

950-ம் ௵ புரட்டாசி ௴ 14௳ ஆழ்வார் திரு நகரி மாசித் தெரு தேவர்பிரான் கவிராயர் உரிச்சொல் நீடுழி வாழ்க…

இதிலும் உரிச்சொல் என்று கூறப்பட்டிருப்பது காண்க. இவ்வாறே இன்னும் பல சான்றுகள் கொடுத்துக் கொண்டே போகலாம்.

பவணந்தியார் இயற்றிய நன்னூலுக்கும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டனவாகிய கயாதரம், உரிச்சொல் நிகண்டு ஆகியவற்றிலும் உரிச்சொல் என்னும் பெயர் காணப்படுவதை நோக்கின், இப்பெயர் 16-ஆம் நூற்றாண்டுக்கு மேலும்—ஏன்—17, 18-ஆம் நூற்றாண்டுகள் வரையுங்கூட வழக்கில் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

உரிச்சொல் என்னும் பெயர் மறையாமல் நடைமுறை வழக்கில் இருந்து கொண்டிருக்கும் போதே, அதற்குப் போட்டியாக நிகண்டு என்னும் பெயரும் தோன்றி விட்டதாகத் தெரிகிறது. திவாகரம், பிங்கலம் ஆகியவற்றிற்குப் பின்னால் தோன்றி, அவற்றினும் மிகுதியாக மக்களால் பயிலப்பட்டு வந்ததும், பதினாறாம் நூற்றாண்டில் தோன்றியதாகச் சிலராலும், அதற்கும் முன்னமேயே தோன்றியதாகச் சிலராலும் சொல்லப்படுவதுமாகிய சூடாமணி நிகண்டையியற்றிய மண்டல புருடர் என்னும் அறிஞரே, அச்சூடாமணியின் பாயிரப் பாடலில் அதனை ஒரு நிகண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்:



“மன்னிய நிகண்டு சூடா மணியென ஒன்று சொல்வன்
 இந்நிலந் தன்னின் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின்.”

என்பது அப்பாடற் பகுதி. சொற்பொருள் கூறும் துறையில் சூடாமணிக்குப் பின்னெழுந்த நூற்கள் பெரும்பாலன நிகண்டு என்னும் பெயருடனேயே தோன்றின. இப்படியாக, உரிச்சொல் என்னும் பெயருக்குப் போட்டியாக எழுந்த நிகண்டு என்னும் பெயர், அந்த உரிச்சொல் என்னும் பெயரை விழுங்கி விட்டுத், தான் நிலைத்து விட்டது.

அகராதி:

நிகண்டு நூற்கள், இக்கால அகராதிகளைப் போல், தனித் தனிச் சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்படாமல், செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன மற்றும், நிகண்டுகளில், சொற்கள் அகராதிகளைப் போல், அகர வரிசையில் அமைக்கப்படாமல், கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன. இக்கால அகராதிகளில் ஒரு சொல்லை உடனே தேடிக் கண்டு பிடித்து விடலாம். நிகண்டுகளில் இது முடியாது; ஆனால், அகராதிகளை நெட்டுரு பண்ண முடியாது; நிகண்டுகள் செய்யுளாயிருப்பதால் எளிதில் நெட்டுரு (மனப்பாடம்) செய்து விடலாம். அக்கால மாணாக்கர் அனைவரும் நிகண்டு கற்றனர். நிகண்டு கற்காத கல்வி அந்தக் காலத்தில் கிடையாது. கல்வித் துறையில் நிகண்டுகள் இன்றியமையா இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன.

முன் சொல்லியுள்ளபடி, குறிப்பிட்ட ஒரு சொல்லை எளிதில் தேடிக் கண்டு பிடிக்க முடியாத ஒரு பெருங்குறை ஒரு பெருந் தொல்லை நிகண்டுக் கல்வியில் இருந்து வந்தமை தமிழறிஞர்களால் உணரப்பட்டதோடு, அவர்தம் உள்ளங்களை உறுத்தியும் வந்தது. அதன் பயனாக, இக்குறையை நிறையாக்கும் முயற்சிகள் சில முகிழ்க்கத் தொடங்கின.

முதல் நிகண்டுகளாகிய திவாகரமும், பிங்கலமும் அகர வரிசையில் ஆசிரியர்களால் இயற்றப்படவில்லைதான். ஆனால், சில நூற்றாண்டுகள் கழிந்ததும், இந்நூற்களைக் கற்பித்தவர்களும், கற்றவர்களும் திவாகரரும், பிங்கலரும் அமைத்த முறைக்கு மாறாகச் சொற்களை அகர வரிசையில் மாற்றியமைத்து எழுதி வைத்துக் கொண்டனர். பின்னர் அச்சிட்டவர்களும், அவ்வாறே செய்து கொண்டனர். இந்த விவரங்கள் தனித் தனி நிகண்டுத் தலைப்புக்களில் பின்னர்த் தரப்படும்.

திவாகரமும், பிங்கலமும் இயற்றிய ஆசிரியர்கட்கு அகர வரிசை முறை நினைவு வரவில்லையாயினும், இந்நூற்கட்கு அடுத்தபடிப் பெருவாரியாக மக்களால் பயிலப்பட்டு வந்த சூடாமணி நிகண்டை இயற்றிய ஆசிரியர் மண்டல புருடர் இதில் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது. இவர் சொற்களை எதுகை வாரியாகப் பிரித்தார். சொற்களின் இரண்டாவது எழுத்து ஒத்து ஒரே மாதிரியாய் இருப்பதற்கு ‘எதுகை’ என்று பெயராம். எடுத்துக்காட்டாக, பகவன், பகல், மகரம், அகம் ஆகிய சொற்களில் இரண்டாவது எழுத்தாக ‘க’ என்னும் ஒரே எழுத்தே இருக்கிறது; இப்படியிருக்கும் சொற்கட்குக் ‘ககர எதுகைச் சொற்கள்’ என்பது பெயர். ‘க’ தொடங்கி ‘கௌ’ வரையும் உள்ள எழுத்துக்களுள், எந்த எழுத்தையாவது இரண்டாவது எழுத்தாகக் கொண்டுள்ள சொற்கள் அனைத்துமே ககர எதுகைச் சொற்களாம். மனவு, தனி, முனை, இனம்-என்பன போல, ‘ன’ தொடங்கி ‘னௌ’ வரையும் உள்ள எழுத்துக்களுள் எந்த எழுத்தையாவது இரண்டாவது எழுத்தாகக் கொண்டுள்ள சொற்கள் அனைத்துமே ‘னகர எதுகைச் சொற்கள்’ எனப்படும். இங்கே காட்டிய சொற்கள் எல்லாம் சூடாமணி நிகண்டிலிருந்து எடுக்கப்பட்டவையே. இப்படியாக, சூடாமணியியற்றிய மண்டல புருடர், ககர எதுகை, ஙகர எதுகை, சகர எதுகை, ஞகர எதுகை, டகர எதுகை, ணகர எதுகை, தகர எதுகை, நகர எதுகை, பகர எதுகை, மகர எதுகை, யகர எதுகை, ரகர எதுகை, லகர எதுகை, வகர எதுகை, ழகர எதுகை, ளகர எதுகை, றகர எதுகை, னகர எதுகை-எனச் சொற்களைப் பதினெட்டு எதுகை வகைகளாகப் பிரித்துக் கொண்டார்; ககர எதுகைச் சொற்களை முதலாவதாகவும், ஙகர எதுகையை இரண்டாவதாகவும், சகர எதுகையை மூன்றாவதாகவும், இப்படியே வந்து … னகர எதுகைச் சொற்களைப் பதினெட்டாவதாகவும் அமைத்து விட்டார். இதுவே ஒருவகை அகராதி முறைதானே.

சூடாமணி நிகண்டில் ஒரு சொல்லைத் தேட வேண்டுமானால், அச்சொல்லின் இரண்டாவது எழுத்து என்ன என்று நோக்கி, அதற்குரிய எதுகைப் பகுதியில் சென்று பார்த்தால் கிடைத்து விடும். இக்கால அகராதி முறையே போல இஃதும் ஒருவகை வசதிதானே. சூடாமணி நிகண்டு 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டதாகச் சிலரும், அதற்கு முன்னமேயே இயற்றப்பட்டு விட்டதாகச் சிலரும் கூறுகின்றனர். எப்படியோ, இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே இத்தகைய அகராதி முறையுணர்வு நம்மவர்க்குத் தோன்றி விட்டது என்பது வரைக்கும் உறுதி.

சூடாமணி நிகண்டில், மண்டல புருடர் கையாண்ட எதுகை, முறையைப் பின் வந்த நிகண்டு ஆசிரியர்கள் சிலரும் பின்பற்றினர். இருப்பினும், இந்த எதுகை முறையை முழு அகராதி முறையாகக் கொள்ள முடியாது. எதுகை முறையில் சொற்களின் இரண்டாவது எழுத்து மட்டும் கவனிக்கப்பட்டதே தவிர, முதலெழுத்து அகராதி முறையில் கவனிக்கப்படவில்லை. ‘த’ என்பதை இரண்டாவது எழுத்தாகக் கொண்டுள்ள ‘முதலை’ என்னும் சொல்லைத் தேட வேண்டுமானால், மற்ற எதுகைப் பகுதிகட்குச் செல்லாமல், நேரே ‘தகர எதுகை’ப் பகுதிக்குச் செல்வதற்கு மட்டுந்தான் சூடாமணியில் வசதியுண்டு; தகர எதுகைப் பகுதியில், தகர எதுகைச் சொற்கள் பல உள்ளன; அவையெல்லாம் முதலெழுத்து வாரியாக, அகர வரிசையில் அமைக்கப்படாமல் முன்னும், பின்னுமாகக் கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன; எனவே, எல்லாச் சொற்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு முறை படித்துப் பார்த்துக் கொண்டு வந்தால்தான், எங்கேயோ ஓரிடத்தில் ‘முதலை’ என்னும் சொல் தட்டுப்படும். இதனால் காலமும் முயற்சியும் வீணே.

முதல் அகராதி :

எனவே, சொற்களை முதலெழுத்து வாரியாக அகர வரிசையில் அமைக்க வேண்டுமென்ற உணர்வு அரும்பலாயிற்று. இதனைப் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஒரு புலவர் செய்து முடித்தே விட்டார். கி. பி. 1594-ஆம் ஆண்டில் சிதம்பர இரேவண சித்தர் என்னும் புலவர் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றினார். இச் செய்தியை, அந்நூலின் பாயிரப் பகுதியில் அவரே பாடியுள்ள

“அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்ஞாற்று
 ஒருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில்
 ..........................................அகராதி நிகண்டென
 ஓதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே.”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம். சக ஆண்டு 1516-இல் இயற்றியதாக ஆசிரியர் அறிவித்துள்ளார். சக ஆண்டுடன் 78 ஆண்டுகள் கூட்டிக் கொண்டால், கி.பி. ஆண்டு கிடைக்கும். எனவே, சக ஆண்டு 1516 என்றால், கி. பி. 1594-ஆம் ஆண்டில் அகராதி நிகண்டு இயற்றப்பட்டது என்பது தெளிவு.

சொற்கள் அ, ஆ, இ, ஈ என்ற அகர வரிசையில் முறைப்படுத்தப் பட்டிருத்தலின், இந்நூல் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. தமிழில் முதன் முதலில் ஏற்பட்ட அகராதி நூலே இதுதான்-அகராதி என்னும் சொல்லை முதன் முதலாகக் கற்றுக் கொடுத்ததே இதுதான்-இக்காலத்தில் சொற்பொருள் விளக்கும் நூல் வகைகளையெல்லாம் அகராதியென்னும் பெயரால் நாம் அழைப்பதற்கு மூல ஊற்று இதுவேதான்.

உலக முதல் அகராதி :

அகராதி நிகண்டு தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி மட்டுமன்று; இதுவரைக்கும் தெரிந்துள்ள ஆராய்ச்சி முடிபின்படி, உலகத்தின் முதல் அகராதியும் இதுவேதான். தொல்காப்பியமே போல, இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன், அசிரிய மக்கள் சொற்பொருள் கூறும் துறை நூல் இயற்றினரெனினும், மேலை நாட்டில் முதன் முதலாக, அகர வரிசையில் அகராதி நூல் தோன்றியது பதினேழாம் நூற்றாண்டில்தான். அதாவது, 1612-ஆம் ஆண்டில், இத்தாலி மொழியில் முதல் முதலாக அகர வரிசையில் அகராதி தோன்றியது. இந்த இத்தாலி அகராதிக்குப் பதினெட்டாண்டுகட்கு முன்பே-1594-ஆம் ஆண்டிலேயே தமிழில் அகராதி நிகண்டு தோன்றி விட்டதன்றோ? எனவேதான், அகராதி நிகண்டு உலக முதல் அகராதி என இங்கே சிறப்பித்து எழுதப்பட்டது.

1594-இல் அகராதி என்னும் பெயரை அறிமுகப்படுத்திய இரேவண சித்தர், அதற்குப் பதிலாக ‘அகர முதல்’ என்னும் அழகிய தூய தமிழ்ப் பெயரைத் தம் நூலிற்கு வைத்திருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய திருக்குறளிலுள்ள

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
 பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதல் பாடலிலும், மூவாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய தொல்காப்பியத்திலுள்ள

“எழுத் தெனப் படுப,
 அகர முதல் னகர இறுவாய்
 முப்ப தென்ப
 சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே.”

என்னும் முதல் பாடலிலும் ‘அகர முதல்’ என்னும் அழகிய தொடர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதன்றோ? இந்தத் தொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! ஒருவேளை, ‘அகர முதல்’ என்னும் தொடரின் துணை கொண்டே ‘அகராதி’ என்னும் பெயரை அமைக்க, இரேவண சித்தர் கற்றுக் கொண்டிருந்தாலும் இருக்கலாம்

டும்-டும்-டும்-டும்

“வாலு போச்சு கத்தி வந்தது டும் டும். கத்தி போச்சு மாங்காய் வந்தது டும் டும்- மாங்காய் போச்சு சோறு வந்தது டும் டும்-சோறு போச்சு மேளம் வந்தது டும் டும் டும் டும்”— என்ற கதையே போல, உரியியல் என்னும் பெயர் போய், உரிச்சொல் என்னும் பெயர் வந்தது. உரிச்சொல் போய், நிகண்டு வந்தது-நிகண்டு போய் அகராதி வந்தது - இப்போதோ அகராதிக்குப் பதிலாக, ‘அகர வரிசை’ என்னும் பெயர் வந்து கொண்டிருக்கிறது. வட மொழியிலுங் கூட, நிகண்டு அபிதானம், கோசம், நாம மாலை என்னும் பெயர்கள் மாறி மாறி அகராதித் துறை நூற்களைக் குறித்தன. ஐரோப்பிய மொழியிலுங் கூட இப்படித்தான்! பல பெயர்களைக் கடந்த பின்னரே, ஆங்கிலத்தில் Dictionary என்னும் பெயர், இப்போது நடை முறையில் இருந்து வருகிறது. Dictionary என்னும் பெயருக்கு முன் இருந்த பெயர்கள் பின் வருமாறு:—

Nominale (பெயர்ப் புத்தகம்), Medulla grammatices (இலக்கணத் தோழன்), Ortus Vocabulorum (சொற்களின் தோட்டம்), Promptorium Parvulorum (சொல்லெடுத்துக் கொடுப்போன்), Catholicon Anglicum, Manipulus Vocabulorum (கையடக்க அகராதி), Alvearie (சொற்களின் தேன் கூடு), Abecedarium (ஆரம்ப ஆசிரியன்), Bibliotheca (சொல் நூல் நிலையம்), Thesaurus (சொற் கருவூலம்), Word-hord, World of Words (சொல்லுலகம்) English Expositor (ஆங்கிலத் தெளி பொருள் விளக்கி) Ductor in Linguas (மொழியின் வழிகாட்டி), glossographia (அருங்கலைச் சொல் விளக்கம்), New world of words (சொற்களின் புத்துலகம்), Etymologicum (சொல் விளக்க இலக்கணம்), gazophylacium, Dictionary.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களெல்லாம், அகராதியைக் குறிக்கும் பொதுப் பெயர்களாகத் தெரியவில்லை; சொற் பொருள் கூறும் நூல் இயற்றத் தொடங்கிய ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பத் தத்தம் நூலுக்கு வைத்த பெயர்களாகவே தெரிகின்றன. இது எது போன்றதெனின், பண்டு தமிழகத்தில் சொற் பொருள் கூறும் நிகண்டு நூற்கள் இயற்றத் தொடங்கிய ஆசிரியர்கள் தத்தம் நூலுக்கேற்ப ‘நாம தீபம்’ (பெயர் விளக்கு), ‘அரும் பொருள் விளக்கம்’, ‘நாநார்த்த தீபிகை’, ‘பல் பொருள் சூடாமணி’ என்றெல்லாம் பெயர் வைத்தாற் போன்றதேயாம். ஆங்கிலத்தில் பல பெயர்களைத் தாங்கிக் கொண்டு சொற் பொருள் கூறும் நூற்கள் தோன்றிக் கொண்டிருந்த காலை, கி.பி. 1538-ஆம் ஆண்டில் ‘சர் தாமஸ் எலியட்’ (Sir Thomas Elyot) என்னும் அறிஞர் ‘Dictionary’ என்னும் பெயரில் சொற் பொருள் கூறும் நூல் ஒன்று வெளியிட்டார். இந்த ‘Dictionary’ என்னும் பெயரே, பின்பு எல்லா வகைச் சொற் பொருள் கூறும் நூற்கட்கும் பொதுப் பெயராய் விட்டது. இது போலவே தமிழிலும், அகராதி என்னும் பெயரே பொதுப் பெயராய் நிலைத்து விட்டது.

ஐரோப்பிய மொழிகளிலுஞ் சரி-இந்திய மொழிகளிலுஞ் சரி-பதினேழாம் நூற்றாண்டு வரை சொற்கட்குப் பொருள் கூறும் வேலை மட்டுமே அகராதித் துறையில் நடந்து வந்தது; பின்னரே பல்துறைக் கலையகராதிகள் தோன்றலாயின. அவையும் அகர வரிசை முறையில் அடுக்கப்பட்ட போது, அகராதித் துறையானது ‘அகராதிக் கலை’ என்னும் சிறப்புப் பெயருக்கு உரியதாயிற்று.

இத்துறை நூற்கள் அகராதி என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாலும், இந்த அகராதி என்னும் பெயரை முழுப் பெயராகக் கொள்ள முடியாது; அதாவது,—அகராதி என்றால் அகர வரிசையில் தொடங்குவது என்று மட்டுந்தான் பொருள். அகர வரிசையில் தொடங்கி என்ன செய்கிறது என்பதை இந்த அகராதி என்னும் பெயர் விளக்கவில்லை. அகர வரிசையில் தொடங்கிப் பொருள் விளக்கும் நூல் என்று, நாம் பெயர் விளக்கம் செய்து கொள்ள வேண்டும். எனவே, அகராதி என்னும் பெயரை ஒரு முதற்குறிப்புப் பெயராகக் கொள்ள வேண்டும்.

எப்படியோ அகராதி என்னும் அருமைப் பெயர் கிடைத்து, நிலைத்து விட்டது. முதல் உலக அகராதியாக 1594 இல் தோன்றி அகராதி என்னும் பெயரைத் தமிழர்க்குக் கற்றுக் கொடுத்த அகராதி நிகண்டு என்னும் நூலில், முதலெழுத்தைப் பொறுத்த மட்டுமே சொற்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன; இரண்டாவது - மூன்றாவது முதலிய எழுத்துக்களைப் பொறுத்தும் சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்படவில்லை. இக்குறையை ஓரளவு போக்கும் முறையில், அகராதி நிகண்டிற்கு, நூறாண்டு பின் தோன்றிய ‘அகராதி மோனைக்கு அகராதி எதுகை’ என்னும் நூலில், அகம், அகப்பை, வண்டி, வண்டல் என்பன போல, சொற்களின் முதலெழுத்துக்களேயன்றி, இரண்டாவது எழுத்துக்களை நோக்கியும் அகர வரிசை அமைக்கப்பட்டது. இந்த நூலிலும், மூன்றாவது—நான்காவது—எழுத்துக்கள் அகர வரிசையில் கவனிக்கப்படவில்லை. எனவே, இக்கால அகராதிகளில் உள்ளாங்கு, சொற்களை முதலெழுத்துத் தொடங்கி, இறுதி எழுத்து வரையும், அகர வரிசையில் நோக்கி அடுக்கிய பெருமை பதினேழாம் நூற்றாண்டுப் பாதிரிமார்கட்கே உரியதாம்.

நம் நாட்டில், கிறித்துவ சமயம் பரப்ப ஐரோப்பாவினின்றும் கிறித்துவப் பாதிரிமார்கள் பலர், பதினேழாம் நூற்றாண்டில் வந்திறங்கினர். அவர்கள் தமிழ் கற்றார்கள். ஐரோப்பிய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகளும் இயற்றத் தொடங்கினார்கள். இவ்வகராதிகள், ஐரோப்பியர் தமிழ் தெரிந்து கொள்ளவும், தமிழர் ஐரோப்பிய மொழிகளை அறிந்து கொள்ளவும் பயன்பட்டன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்-அதாவது 1679-இல், ‘ஆந்தம் தெ ப்ரோயன்சா’ (Fr. Antem de Proenca) என்னும் மேலைப்புலத் துறவியார் தமிழ்—போர்ச்சுகீசிய அகராதி இயற்றினார். பதினெட்டாம் நூற்றாண்டில்—1732-இல், இத்தாலி நாட்டிலிருந்து வந்த ‘பெஸ்கி’ (Fr. Beschi) என்னும் துறவியார் ‘சதுர் அகராதி’ என்னும் தமிழகராதி இயற்றினார். மேலும் பல ஐரோப்பியர்கள், பதினேழாம்—பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன், தமிழ் பிணைந்த அகராதிகள் பல இயற்றினர். இவையெல்லாம் பின்னர்த் தனித் தனித் தலைப்பில் விரிவாக விளக்கப்படும்.

மேலை நாட்டார் இயற்றிய அகராதிகளுக்குள், பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்படும் ‘பெஸ்கி’ இயற்றிய சதுர் அகராதியும், ஃபாபிரிசியஸ் (Fabricius) என்பவரியற்றிய தமிழ்—ஆங்கில அகராதியும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ‘ராட்லர்’ (Rottler) என்பாரியற்றிய தமிழ்—ஆங்கில அகராதியும், ‘வின்சுலோ’ (Winslow) என்பாரியற்றிய ஆங்கிலம்—தமிழ் அகராதியும், தமிழ்—ஆங்கில அகராதியும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. பிற்காலத்தில் தமிழ்ச் சொல்லுக்கு, ஆங்கிலச் சொல்லால் பொருள் கூறும் அகராதிகள் பலவும், ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதிகள் பலவும் தோன்றுதற்கு முன்னோடியாக — முதல் நூற்களாக இருந்தவை, ஃபாபிரிசியஸ், ராட்லர், வின்சுலோ ஆகியோரியற்றிய அகராதிகளேயாம். இவற்றிற்கெல்லாம் மேலாக, தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் தனித் தமிழ் அகராதிகள் பல தோன்றுதற்கு முன்னோடி முதல் நூலாகத் திகழ்ந்தது வீரமா முனிவரின் சதுர் அகராதியேயாம். இது, பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகளை உடையதாதலின், ‘சதுர் அகராதி’ எனப்பட்டது. பிற்காலத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலரால் தொகுக்கப்பட்ட மிகப் பெரிய தமிழகராதிகள் பலவும், இந்தச் சதுர் அகராதியைப் பின்பற்றியெழுந்தனவே.

மேலை நாட்டினரின் ஈடுபாட்டினால், தமிழ் அகராதித் துறைக்குச் சில நன்மைகள் கிடைத்தன. அவையாவன :—

(1) நிகண்டு என்னும் பெயரில் செய்யுள் நடையில் இருந்த அகராதித் துறை, எல்லோரும் எளிதில் படித்துணருமாறு தனித் தனிச் சொல் நடையில் வந்தது.

(2) சொற்களின் முதல் எழுத்து—இரண்டாவது எழுத்து வரைக்கு மட்டுமே இதற்கு முன் அகர வரிசை கவனிக்கப்பட்டது. வெள்ளையர் வந்த பின், இறுதி எழுத்து வரைக்கும் அகர வரிசை பின்பற்றப்பட்டது.

(3) பழைய நிகண்டுகளில் அருஞ்சொற்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், வெள்ளையர்கள் புதிதாகத் தமிழ் கற்றுக் கொண்டதனால், அவர்கட்கு அருஞ்சொற்கள் இவை—எளிய சொற்கள் இவை என்ற பாகுபாடே தெரியாமற் போயிற்று. எனவே, அவர்கள் அருஞ்சொற்கள்—எளிய சொற்கள் ஆகிய எல்லாச் சொற்களையும் தொகுத்துத் தமிழ்ச் சொல் வளத்தை முழு உருவத்தில் காட்டினர்.

(4) கிறித்துவம் பரப்புவதற்காக அவர்கள் கல்லாத எளிய மக்களோடும் பழகியதால், அம்மக்கள் வாயிலாக அறிந்து கொண்ட எளிய பேச்சு வழக்குச் சொற்களையும் சேர்த்து அகராதிகளின் வடிவத்தை முழுமைப்படுத்தினர்.

(5) வினைச் சொற்களின் வேர்ச் சொற்களைத் தனி அடையாளமிட்டுக் காட்டி, அவ்வேர்ச் சொற்களிலிருந்து மற்ற வினையுருவங்கள் தோன்றுமாற்றை எடுத்துக் காட்டியுள்ளனர்.

(6) தமிழ்ச் சொற்களுக்கு நேரான இலத்தீன்—போர்ச்சுகீசியம்—பிரெஞ்சு—ஆங்கிலம்—ஆகிய மொழிச் சொற்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஈந்தனர்.

இப்படியாக, சொற் பொருள் கூறும் கலைத்துறை, செய்யுள் நடையாலான நிகண்டுகளிலிருந்து தனிச் சொல் நடையாலான அகராதிகளாக மாறிப் பல்வகை வளர்ச்சிப் பருவங்களைப் படிப்படியாக எய்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டோடு, போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய ஐரோப்பிய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்று விட்டது. இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலத்தோடு தமிழ் பிணைந்த அகராதிகள் பலவும், வட மொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளோடு தமிழ் பிணைந்த அகராதிகள் சிலவும் மட்டுமே புதிதாகத் தோன்றின. இவற்றோடு, தமிழுக்குத் தமிழ் அகராதிகள் மிகப் பல தோன்றின என்பது சொல்லாமலே விளங்கும்.

தமிழுக்குத் தமிழிலும், சொற்பொருள் கூறும் அகராதிகளேயன்றி, தொடக்கத்தில் கூறியுள்ளாங்கு, தனி நூல் அகராதி, தனித் துறையகராதி, கலைச்சொல் அகராதி, கலைக் களஞ்சியம், ஒப்பியல் மொழியகராதி, பழமொழியகராதி, புலவர் அகராதி, தொகையகராதி, தொடையகராதி முதலிய பல்வகை அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றித் தமிழ் மொழி வளங்கொழிக்கச் செய்தன. இன்னும் பல்துறையகராதிகள் உருவாகிக் கொண்டுள்ளன.

மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய தொல்காப்பியக் கால முதல் இன்று வரையுள்ள தமிழ் அகராதிக் கலை வரலாற்றின் சுருக்கம் இதுதான்! விரிவு இந்நூல் முழுதுமாகும்!



தொல்காப்பியம்

இந்நூலில், சொற் பொருள் கூறும் துறையில் முதல் நூலாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றிய அகராதி வரை ஆராய வேண்டும். அவ்வரிசைப்படி முதல் நூலாகிய தொல்காப்பியங் குறித்து இப்பகுதியில் சிறிது ஆய்வாம்:—

தொல்காப்பியம் ஒரு மொழியிலக்கண நூல். தொல்காப்பியர் என்னும் தமிழ்ப் பெரும் புலவரால் இயற்றப்பட்டதால், தொல்காப்பியம் என இஃது அழைக்கப்படுகிறது.



ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் தொல்காப்பியரின் வரலாறு பற்றி உறுதியாக ஒன்றும் வரையறுத்துக் கூறவியலாது. திருவள்ளுவர், ஔவையார் முதலியோரின் பிறப்பு வளர்ப்பு குறித்து என்னென்னவோ கதைகள் நடமாடுவது போன்றே, தொல்காப்பியர் பற்றியும் கதைகள் பல வழங்குகின்றன. இவர் குடிப்பெயர் ‘காப்பியம்’ என்பதாம்; பழம்பெருங் காப்பியக் குடியில் தோன்றியதால், குடிப்பெயராலேயே இவர் தொல்காப்பியர் என அழைக்கப்பட்டாராம்.

அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் தொல்காப்பியர் தலைமாணாக்கராம். அதங்கோட்டாசான், செம்பூட்சேய், வாய்ப்பியனார், பனம்பாரனார், அவிநயனார், காக்கைப்பாடினியார், நற்றத்தனார் முதலியோர் தொல்காப்பியருடன் அகத்தியரிடம் கல்வி கற்றவர்களாம். இவர்கள் எல்லாருமே, தொல்காப்பியர் தொல்காப்பியம் இயற்றியது போல், ஆளுக்கோர் இலக்கண நூல் இயற்றினார்கள்; ஆனால், அவை நமக்குக் கிடைத்தில. இவர்தம் நூற்கட்கு முதல் நூலாக—ஆசிரியர் அகத்தியனாரால் இயற்றப்பட்டுத் திகழ்ந்த அகத்தியம் என்னும் தலைநூலே நமக்குக் கிடைக்கவில்லையே. தொல்காப்பியமாவது மறையாது கிடைத்திருப்பது ஒருவகையில் நமது பெரும்பேறே.

தொல்காப்பியர் தமது தொல்காப்பிய நூலை, ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்னும் மன்னனது அவையில், தம் நட்புப் புலவராகிய அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றினாராம். இச்செய்திகளை, பன்னிரு படலம் என்னும் நூலிலுள்ள

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்
 அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
 பொருந்தக் கற்றும் புரைதப வுணர்ந்தோர்
 நல்லிசை நிறுத்தத் தொல்காப்பியனும்…”

என்னும் பாயிரப் பாடற் பகுதியானும், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலுள்ள

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
 தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
 தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
 துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதல்
 பன்னிரு புலவரும்… … …”

என்னும் பாடற் பகுதியானும், தொல்காப்பியருடன் பயின்றாண்பராகிய பனம்பாரனார் என்னும் புலவரால் சிறப்புப் பாயிரமாக இயற்றப் பெற்றுத் தொல்காப்பியத்துக்கு முன்னால் சேர்க்கப்பட்டுள்ள, 

“வடவேங்கடத் தென்குமரி
 ஆயிடைத்
 தமிழ் கூறும் நல்லுலகத்து
 வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
 எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
 செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
 முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
 புலந் தொகுத் தோனே போக்கறு பனுவல்;
 நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்
 தறங்கரை நாவின் நான்மறை முற்றிய
 அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
 மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
 மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
 தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
 பல்புகழ் நிறுத்த படிமை யோனே”

.

என்னும் பாயிரப் பாடலானும் ஓரளவு அறியலாம்.

தொல்காப்பியக் காலம்

தொல்காப்பியரது காலத்தைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்துவதற்குரிய அகச்சான்று யாதொன்றுமிலது. நம் முன்னோர்கள் முறையாக வரலாற்றை எழுதி வைக்காததால் நேர்ந்த பெருங்குறையேயிது. இதனால், பெரும்பாலான மன்னர்கள், புலவர்கள் முதலியோர் தம் காலத்தை இன்னமும் சரியாக வரையறுத்துக் கூற முடியவில்லை. காலவாராய்ச்சி ஓரளவு உய்த்துணர்வின் வாயிலாகவே செய்யப்படுகிறது. இந்நிலையில் தொல்காப்பியக் காலமும் உய்த்துணர்ந்தே (யூகித்தே) உரைக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய கடைச் சங்கப் புலவர்களேயன்றி, அதற்கும் முன் தோன்றிய இடைச் சங்கப் புலவர்களும் இந்தத் தொல்காப்பியத்தைப் பயன்படுத்தினர். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட பேரவைக்குத் தலைமை தாங்கிய நிலந்தரு திருவிற் பாண்டியனும் தலைச்சங்க காலத்தைச் சேர்ந்தவனாக ஆராய்ச்சியாளர் சிலரால் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே, எது எப்படியிருந்த போதிலும், இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தியது தொல்காப்பியம் என உறுதியாகக் கூறலாம்; ஒரு தோற்றமாக மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியது என்று மொழியலாம்; எனவே, தொல்காப்பியத்தின் காலம் ஏறத்தாழ கி. மு. 1000 ஆகும். ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தியது என்று மொழிவாருமுளர்.

நூலின் அமைப்பு,

தொல்காப்பியம் நூற்பா (சூத்திர) நடையாலானது. இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையுடையதென்பது முன்னரே கூறப்பட்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் (உட்பிரிவுகள்) உள்ளன. ஆக மொத்தம் (3 x 9=27) இருபத்தேழு இயல்களையுடையது தொல்காப்பியம்.

எழுத்ததிகாரத்தில் எழுத்திலக்கணமும், சொல்லதிகாரத்தில் சொல்லிலக்கணமும், பொருளதிகாரத்தில் வாழ்வியல் இலக்கணமும், யாப்பிலக்கணமும், அணியிலக்கணமும் சொல்லப்பட்டுள்ளமை ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது.

இவற்றுள் சொல்லதிகாரத்திலுள்ள இடையியல், உரியியல் என்னும் இரு பகுதிகளிலும், பொருளதிகாரத்திலுள்ள மரபியல் என்னும் பகுதியிலும் சொற் பொருள் கூறும் அகராதிக் கூறு அமைந்துள்ளது. இனி முறையே அம்மூன்று இயல்கள் குறித்து ஆய்வாம்:—

இடையியல் :

இடையியலில், மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மற்றையது, மன்ற, தஞ்சம், அந்தில், கொல், எல், ஆர், குரை, மா, மியா, இக, மோ, மதி, இகும், சின், அம்ம, ஆங்க, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, ஆக, ஆகல், என்பது. ஔ, எனா, என்றா, ஒடு—முதலிய இடைச் சொற்கட்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சில இடைச் சொற்களின் பொருள்கள் வருமாறு:–

‘கொன்’ என்னும் இடைச்சொல், அச்சம், பயன் இல்லாதது, காலம், பெருமை என்னும் நான்கு பொருள் உடையதாம்:

“அச்சம், பயமிலி, காலம், பெருமையென்று
 அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.”

என்பது தொல்காப்பிய நூற்பா. ‘மன்ற’ என்னும் சொல்லுக்குத் தேற்றம் (தெளிவு) என்று பொருளாம். ‘தஞ்சம்’ என்னும் சொற்கு எண்மை (எளிமை) என்று பொருளாம். ‘கொல்’ என்னும் சொற்கு ஐயம் (சந்தேகம்) என்று பொருளாம்:


“மன்ற என்கிளவி தேற்றம் செய்யும்.”
“தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.”
“கொல்லே ஐயம்.”

என்பன நூற்பாக்கள். இவ்வாறே மற்ற இடைச் சொற்களின் பொருள்களையும் தொல்காப்பிய இடையியலில் கண்டு கொள்க. எல்லா இடைச்சொற்களையும் எல்லாப் பொருள்களையும் ஈண்டுக் கூற முடியாது என்று தொல்காப்பியரே எழுதியுள்ளார்.

உரியியல் :

சொற்பொருள் கூறும் துறையில் மிகவும் இன்றியமையாததான உரியியலில் ‘உறு’ என்னும் சொல் முதலாக ‘எறுழ்’ என்னும் சொல் ஈறாக நூற்றிருபது உரிச் சொற்கட்குப் பொருள் கூறியுள்ளார் தொல்காப்பியர். மாதிரிக்காகச் சில சொற்களின் பொருள்கள் வருமாறு:–

உறு, தவ, நனி என்னும் மூன்று உரிச்சொற்களும் ‘மிகுதி’ (அதிகம்) என்னும் பொருள் உடையனவாம்:
“உறுதவ நனியென வரூஉ மூன்றும்
 மிகுதி செய்யும் பொருள என்ப.”

என்பது நூற்பா. குரு, கெழு என்னும் சொற்கட்கு நிறம் என்று பொருளாம். செல்லல், இன்னல் என்னுஞ் சொற்கட்கு இன்னாமை (துன்பம்) என்று பொருளாம்:

“குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.”
“செல்லல் இன்னல் இன்னா மையே.’’
என்பன நூற்பாக்கள். மேலும் சில சொற்பொருள் அறிவிக்கும் நூற்பாக்கள் வருமாறு:–

“மல்லல் வளனே.” (மல்லல்—வளம்)
“மழவும் குழவும் இளமைப் பொருள.”
“சீர்த்தி மிகுபுகழ்.”
“மாலை இயல்பே.”
“கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.”

 (உள்ளது சிறத்தல்—Evolution)
“கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.”
“தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.”
“தடவும் கயவும் நனியும் பெருமை.”
“பழுது பயம் இன்றே.” (பயம்—நன்மை)
“முழுது என்கிளவி எஞ்சாப் பொருட்டே.”
“வம்பு நிலையின்மை.”
‘'மாதர் காதல்.”
“புலம்பே தனிமை.”
“வெம்மை வேண்டல்”. (விருப்பம்)
“வறிது சிறிது ஆகும்.”
“ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்.”
“பையுளும் சிறுமையும் நோயின் பொருள.”
“எய்யாமையே அறியாமையே.”
“தெவ்வுப் பகையாகும்.”
“செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.”

“விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.”
“கருவி தொகுதி.” (கூட்டம்)
“இலம்பாடு, ஒற்கம் ஆயிரண்டும் வறுமை;”
“பே, நாம், உரும் என வரூஉங் கிளவி
 ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.”
“வாள் ஒளியாகும்.”
“உசாவே சூழ்ச்சி.” (ஆலோசனை)
“வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்.”
“கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.”
“புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி.” (யாணர்-புதுவருவாய்)
“யாணுக் கவினாம்.” (யாணு—அழகு)
“ஐ வியப்பு ஆகும்.”
“வையே கூர்மை.”
“எறுழ் வலி ஆகும்.”

மேலுள்ள நூற்பாக்களில் பல வளமான அரிய, அழகிய புதிய சொற்களையும், அவற்றின் பொருள்களையும் கண்டோம்; அரிய சொற்கட்கிடையே தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது, செழுமை ஆகிய எளிய சொற்களையும் கண்டோம்; நமக்கு எளியனவாகத் தோன்றும் இச்சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் அரியனவாகக் கருதப்பட்டன போலும். மற்றும், தொல்காப்பியர் ‘கடி’ என்னும் ஓர் உரிச் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்:–

“கடி என் கிளவி
வரைவே, கூர்மை, காப்பே, புதுமை,
விரைவே, விளக்கம், மிகுதி, சிறப்பே,
அச்சம், முன்தேற்று, ஆயீ ரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
ஐயமும், கரிப்பும், ஆகலும் உரித்தே.”

இந் நூற்பாவில் கடி என்னும் சொற்கு உரிய பன்னிரு பொருள்களைக் காணலாம்.

இப்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சொற்களுள் சில சொற்கட்கு எல்லாரும் அறிந்த பொருள் கூறப்படவில்லையே என்று சிலர் கேட்கலாம்; எடுத்துக்காட்டாக,—கடி என்னும் சொல்லுக்குக் ‘கடித்தல்’ என ஒரு பொருளும் உண்டே—அது தொல்காப்பிய நூற்பாவில் கூறப்படவில்லையே என்றும், மாலை என்னும் சொல்லுக்கு மாலை நேரம் எனவும் ஒரு பொருள் உண்டே—அது கூறப்படவில்லையே—‘மாலை இயல்பே’ என இயல்பு (தன்மை) என்னும் பொருள் மட்டுந்தானே கூறப்பட்டிருக்கிறது என்றும் கேட்கலாமல்லவா? இதற்குத் தக்க விடை வருமாறு:–

கடித்தல் எனப் பொருள்படும் இடத்தில், கடி என்னும் சொல் வினைச் சொல்லாகும்; வரைவு, கூர்மை முதலிய பொருள்படும் போது, கடி என்னும் சொல் உரிச்சொல்லாகும். மாலை நேரம் எனப் பொருள்படும் இடத்தில் மாலை என்னும் சொல் காலப் பெயர்ச் சொல்லாகும்; இயல்பு என்று பொருள்படும் போது மாலை என்பது உரிச் சொல்லாகும். இந்தப் பகுதியோ, உரியியல். எனவே, சொற்கள் உரிச்சொற்களாக, இருக்கும் நிலைக்கு மட்டுமே உரியியலில் பொருள் கூறப்படும்.

தொல்காப்பியர் உரியியலில் நூற்றிருபது சொற்களையும், அவற்றிற்குப் பொருளாகப் (அர்த்தமாகப்) பல சொற்களையும் கூறி விட்டு, இறுதியில் பின் வருமாறு தெரிவித்துள்ளார்:-

“எடுத்துக் கூறியுள்ள சொற்களைப் புரிந்து கொள்வதற்காக, அவற்றின் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ள சொற்களும் சிலருக்குப் புரியவில்லையென்றால், அவற்றிற்கும் நான் பொருள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது; அப்படிச் சொல்வதானால், அதற்கு எல்லையேயிராது; எனவே, ஒருவனுக்கு ஒரு சொல்லும், அதன் பொருளும் புரியவில்லை என்றால், அவனுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர், நன்றாகத் தெரிந்த வேறு ஓர் எளிய சொல்லின் துணை கொண்டோ அல்லது — கண்ணுக்குத் தெரியும் ஓர் உருவப் பொருளைக் காட்டி, அதன் துணை கொண்டோ விளக்கலாம். ஆசிரியர் எவ்வளவுதான் முயன்று உணர்த்தினும், கற்பவரின் உணரும் ஆற்றலையும் பொறுத்தே பொருள் புலப்பாட்டில் வெற்றி கிடைக்கும்.”—என்று தொல்காப்பியர் மொழிந்துள்ளார். இதனை,

“பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம் பின்றே”.
“பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்.”
“உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே”.

என்னும் உரியியல் நூற்பாக்களால் உணரலாம். இக்காலக் கல்வியில், சொல்லுக்குப் பொருள் கூறும் முறை பற்றிப் பயிற்று முறை (போதனா முறை) நூற்களுள் பல வழிகள் கூறப்பட்டுள்ளன; அவற்றுடன், மேலுள்ள தொல்காப்பிய நூற்பாக்களையும் கருத்திற் கொள்வது கல்வியுலகத்திற்குக் கடமையாகும்.

மரபியல்

மரபியல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதியில் உள்ளது. இன்னும் கேட்டால், தொல்காப்பிய முழு நூலின் இறுதிப் பகுதியே மரபியல்தான். மரபியலிலும், சொற்பொருள் கூறும் துறைக் கூறு அமைந்துள்ளது. மரபு என்னும் சொல்லுக்கு ஈண்டு முறைமை அல்லது வழக்கமுறை என்று பொருள் கொள்ளலாம்; அதாவது, இதையிதை, இப்படியிப்படித்தான் சொல்வது முறை — இதையிதை இப்படியிப்படித்தான் செய்வது வழக்கம் — என்று வகுத்துக் கொண்டு உலக வழக்கில் பின்பற்றி வருகிறோமல்லவா? — அதற்குத்தான் மரபு என்று பெயராம். எடுத்துக்காட்டாக, மிகச் சிறிய கோழியைக் கோழிக் குஞ்சு என்று சொல்வதுதான் மரபே தவிர, கோழிக் குட்டி என்று சொல்வது மரபன்று; மிகச் சிறிய யானையை யானைக் குட்டி என்று சொல்வது மரபே தவிர, யானைக் குஞ்சு என்று சொல்வது மரபன்று.

தொல்காப்பியர் மரபியலில் இதையிதை, இப்படியிப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற முறையில், பல வகைப் பொருள்கட்குரிய மரபுச் சொற்களைக் கூறியுள்ளார். ஆனால், ஆசிரியர் காலத்தில் வழங்கிய சில மரபு முறைகள் பிற்காலத்தில் மாறிப் போக, வேறு விதமாகவும் வழங்கப்படுகின்றன. ஆம்! கால வெள்ளத்தில் மிதந்து, கலித்துச் செல்லும் உயிருள்ள மொழியின் போக்கை முற்றிலும் யாரே தடுக்க முடியும்?

இனி, மரபியலின் மாதிரிக்காகச் சில மரபுச் சொற்களைக் காண்போம்:- பறவை - விலங்குகளின் இளமை நிலையைக் குறிக்கும் பெயர்கள் முதல் நூற்பாவில் கூறப்பட்டுள்ளன. அப் பா வருமாறு:

“மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
 பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும்,
 கன்றும், பிள்ளையும், மகவும், மறியும் என்று
 ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.”

இவற்றுள்ளும், பார்ப்பு, பிள்ளை என்னும் இரு பெயர்களும் பறவை, ஊர்வன என்னும் இரண்டு இனங்களின் இளமை நிலையைக் குறிக்கும் பெயர்களாம்:-

“அவற்றுள்,
 பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.”
“தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன.”

என்பன நூற்பாக்கள், மூங்கா (கீரி), வெருகு (பூனை), எலி, அணில் இந்நான்கிற்கும் குட்டி, பறழ் என்னும் இளமைப் பெயர்கள் உரியனவாம்:

“மூங்கா வெருகுஎலி மூவரி அணிலொடு
 ஆங்கவை நான்கும் குட்டிக்கு உரிய.”
“பறழ் எனப்படினும் உறழாண் டில்லை.”

என்பன நூற்பாக்கள். நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவற்றிற்குக் குருளை, குட்டி, பறழ் என்னும் இளமைப் பெயர்கள் உரியனவாம். இவற்றுள் நாய் தவிர, மற்றவற்றிற்குப் பிள்ளை என்னும் இளமைப் பெயரும் உரியதாம்:-



“நாயே பன்றி புலி முயல் நான்கும்
 ஆயுங் காலைக் குருளை என்ப"
“நரியும் அற்றே நாடினர் கொளினே.”
“குட்டியும் பறழும் கூற்றவண் வரையார்.”
“பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை
 கொள்ளுங் காலை நாயலங் கடையே.”

என்பன நூற்பாக்கள். இப்படியே மற்ற, மற்ற விலங்குகட்குரிய மற்ற, மற்ற இளமை நிலைப் பெயர்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பின் வரும் நூற்பாவில் பறவை—விலங்குகளின் ஆண்பாற் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:—

“எருதும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும்
 சேவும், சேவலும், இரலையும், கலையும்,
 மோத்தையும், தகரும், உதளும், அப்பரும்,
 போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும்
 யாத்த ஆண்பாற் பெயரென மொழிப.”

பின்வரும் நூற்பாவில் பறவை—விலங்குகளின் பெண்பாற் பெயர்கள் பேசப்பட்டுள்ளன:—

“பேடையும், பெடையும், பெட்டையும்; பெண்ணும்,
 மூடும், நாகும், கடமையும், அளகும்,
 மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும்,
 அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.”

இவற்றுள் இந்த, இந்தப் பெயர்கள் இந்த, இந்த ஆண் பறவைக்கும், ஆண் விலங்கிற்கும் உரியன என்றும், இன்னின்ன பெயர்கள், இன்னின்ன பெண் பறவைக்கும், பெண் விலங்கிற்கும் உரியன என்றும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இன்னின்ன பறவை—விலங்குகளோடு, இன்னின்ன மரபுப் பெயர்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும் எனத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருப்பவற்றுள், பல வழக்காறுகள் இக்காலத்தில் இல்லை. எனவே, மேலுள்ள தொல்காப்பிய நூற்பாக்களைப் படிக்கும் போது, நமக்கு வியப்பும் வேடிக்கையும் தோன்றுகின்றன.

மற்றும், மரபியலில் மரம்—புல் வகைகளைப் பற்றியும் சில செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளி வயிரம் உடையது ‘புல்’ எனப்படுமாம். உள் வயிரம் உடையது மரம் எனப்படுமாம். தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை முதலியன புல்லின் உறுப்புக்களாம். இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, முதலியன மரத்தின் உறுப்புக்களாம்:—

"புறக் காழனவே புல்லெனப் படுமே.”
“அகக் காழனவே, மரமெனப் படுமே.”
“தோடே, மடலே, ஓலை என்றா
 ஏடே, இதழே, பாளை என்றா
 ஈர்க்கே, குலையே நேர்ந்தன பிறவும்
 புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.”
“இலையே, முறியே, தளிரே, தோடே
 சினையே, குழையே, பூவே, அரும்பே,
 நனையே, உள்ளுறுத் தனையவை யெல்லாம்
 மரனொடு வருஉங் கிளவி யென்ப.”

என்பன நூற்பாக்கள். இச்சொல் வளங்களை அறியும் போது, உள்ளத்தில் உவகை ஊற்றெடுக்கின்றதன்றோ தோடு, மடல், ஓலை, ஏடு, இலை, முறி முதலிய சொற்களைக் குறிக்க ஆங்கில மொழியில் Leaf என்னும் ஒரே சொல்தான் உள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று.

மற்றும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்னும் எண்களால் சுட்டப்படும் ஒரு சார் தொகைப் பெயர்கள் மரபியலில் விளக்கப்பட்டுள்ளன. அவையாவன:—

ஓர் அறிவு என்பது உற்றறியும் (தொட்டுணரும்) தோல் அறிவு; ஈரறிவு என்பன அதனோடு (தோல் அறிவோடு) நாக்கறிவு; மூவறிவு என்பன அவற்றோடு மூக்கறிவு; நாலறிவு என்பன அவற்றோடு கண்ணறிவு; ஐயறிவு என்பன அவற்றோடு செவியறிவு, ஆறறிவு என்பன அவற்றோடு மன அறிவு :—

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
 இரண்டறி வதுவே அதனோடு நாவே
 மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
 நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
 ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
 ஆறறி வதுவே அவற்றோடு மனனே
 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.”

என்பது நூற்பா. ஓரறிவுடைய உயிர்கள் புல், மரம் முதலியன. ஈரறிவுடையவை நந்து (நத்தை), முரள் (இப்பி) முதலியன. மூவறிவின சிதல் (கறையான்), எறும்பு முதலியன. நாலறிவின நண்டு, தும்பி முதலியன. ஐயறிவின மா (விலங்கு), புள் (பறவை) முதலியன. ஆறறிவின மக்கள், ஒருசில உயர் அறிவுடைய விலங்குகள் முதலிய உயிர்கள்:—

“புல்லும் மரனும் ஓரறி வினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“நந்தும் முரளும் ஈரறி வினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“சிதலும் எறும்பும் மூவறி வினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“நண்டும் தும்பியும் நான்கறி வினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“மாவும் புள்ளும் ஐயறி வினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“மக்கள் தாமே ஆறறி வுயிரே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”
“ஒருசார் விலங்கும் உளவென மொழிப.”

என்பன நூற்பாக்கள். இப்படி இன்னும் பல பெயர் விளக்கங்கள் மரபியலில் தரப்பட்டுள்ளன.

முப்பெரும் பிரிவுகள்

தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த நிகண்டு நூற்கள் மூன்று பெரும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தோன்றியனவாம். அம் முப்பெரும் பிரிவுகள் தொல்காப்பியத்திலிருந்தே உறிஞ்சி எடுக்கப்பட்டன. அவ்விவரம் வருமாறு:—

மேலே, தொல்காப்பிய இடையியல், உரியியல், மரபியல் ஆகியவற்றிலிருந்து சில சொல்—பெயர் பொருள் விளக்கங்களைக் கண்டோம். கூர்ந்து நோக்குவோர்க்கு, அச்சொல்—பெயர்—பொருள் விளக்கங்களில், மூன்று கூறுகள் இலைமறை காய்களாக மறைந்து கிடப்பது புலனாகும். அவையாவன:—

(1) சிலவிடங்களில், ஒரே பொருளைக் குறிக்கும் பல பெயர்கள் (சொற்கள்) கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,—மிகுதி என்னும் ஒரு பொருளைக் குறிக்க, உறு, தவ, நனி என மூன்று சொற்கள் காட்டப்பட்டுள்ளன; பெருமை என்னும் ஒரு பொருளைக் குறிக்க, தட, கய, நளி என்னும் மூன்று சொற்களும், அச்சம் என்னும் ஒரு பொருளைச் சுட்ட, பே, நாம், உரும் என்னும் மூன்று சொற்களும், கூறப்பட்டுள்ளன. இவை ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்கள் (சொற்கள்). ஆகையால், இவற்றிற்கு ‘ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி’ எனப் பெயர் கொடுக்கலாம்.

(2) சிலவிடங்களில், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் (அர்த்தங்கள்) தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,—ஏற்றம் என்னும் ஒரு சொல்லுக்கு நினைவு, துணிவு என்னும் இரு பொருள்களும், விழுமம் என்னும் ஒரு சொல்லுக்கு சீர்மை, சிறப்பு, இடும்பை என்னும் மூன்று பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. கடி என்னும் ஒரே சொல்லுக்கு, வரைவு, கூர்மை முதலிய பன்னிரண்டு பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், இன்னவற்றிற்கு ‘ஒரு சொல் பல்பொருட் பெயர்த் தொகுதி’ எனப் பெயர் தரலாம். சொல்லுக்குப் பொருள் கூறும் (Homonyms) பகுதியாகிய இதிலேயே, ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் கூறியிருப்பதையும், அடக்கிக் கொள்ள வேண்டியதுதான்!

(3) சில விடங்களில், பல பொருள்களின் கூட்டமாகிய தொகைப் பெயர்கள்—அதாவது—எண்ணிக்கையால் குறிக்கப்படும் பெயர்கள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக,—மூன்று என்னும் எண்ணால் சுட்டப்படும் ‘மூவறிவு’ என்னும் தொகைப் பெயர், தொடு அறிவு, நாக்கறிவு, மூக்கறிவு என்னும் பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கிறது. அதே போல், தொடு அறிவு, நாக்கறிவு, மூக்கறிவு, கண்ணறிவு, செவியறிவு என்னும் பல பொருள்களின் கூட்டத்தை ‘ஐயறிவு’ என்னும் தொகைப் பெயர் குறிக்கிறது. பல பொருள்களின் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு தொகைப் பெயராக இருத்தலின், இன்னவற்றிற்குப் ‘பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி’ எனப் பெயர் அளிக்கலாம்.

மேற்கூறப்பட்டுள்ள முப்பெரும் பிரிவுகளின் அடிப்படையிலேயே, கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் முதல் நிகண்டாகிய சேந்தன் திவாகர நிகண்டு அமைந்துள்ளது. அதைப் பின்பற்றியே, மற்ற நிகண்டுகளும் அமைந்துள்ளன. இவ்விவரங்கள் திவாகர நிகண்டைப் பற்றிய தனித் தலைப்பின் கீழ்ப் பின்னர் விரிவாக விளக்கப்படும். -

ஆட்சியும் மாட்சியும்

இப்போது உலக மொழி எனப் புகழ்ந்து போற்றப்படுகிற ஆங்கில மொழியே, ஆயிரம் ஆண்டுகளுக்குள்தான் உருவாகி, இந்த உயர் நிலையை அடைந்துள்ளது. ஆனால், தமிழ் மொழியில் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியம் என்னும் உயர்தனிப் பெரு நூல் தோன்றியுள்ளதென்றால், தமிழ் மொழியின் தொன்மையும், வன்மையும் சொல்லி முடியுமா? இன்னும் கேட்டால், நூல் வல்ல புலவர்கள் இவ்வாறு இயம்பியுள்ளனர்—அறிஞர்கள் அவ்வாறு அறிவித்துள்ளனர்’ என்றெல்லாம் பலவிடங்களில் தொல்காப்பியரே கூறியிருப்பதை நோக்கின், தொல்காப்பியத்திற்கு முன்பே பெரு நூல்கள் பல தோன்றியிருந்தமை புலனாகும்; ஆகவே, தமிழின் தொன்மைக்கு எல்லையேயில்லை என்பது தெளிவு. தோன்றியிருந்த பெரு நூல்கள் எங்ஙனமோ அழிந்து போக, தொல்காப்பியம் ஒன்றே நிலைத்து நின்றதால், அதனையே பின் வந்த தமிழ்ப் புலவோர் பலரும் போற்றிக் கையாண்டனர். இடைச் சங்கத்திலும், கடைச் சங்கத்திலும் தொல்காப்பியமே ஆட்சி செலுத்தியது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றியே, அனைவரும் நூல் இயற்றினர். படித்தவர்கள் என்றால், அவர்கள் தொல்காப்பியம் படிக்காமல் இருந்திருக்க முடியாது.

தொல்காப்பியத்தின் ஆட்சியும் மாட்சியும் பெருகவே, அதற்கு உரைகள் பல தோன்றின. ஒரு நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளின் எண்ணிக்கை, அதன் ஆட்சிக்கும், மாட்சிக்கும் தக்க சான்றாகும். தொல்காப்பிய நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர் கல்லாடர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், சிவஞான முனிவர் முதலிய பழம்பெரும் புலவர்கள் இயற்றியுள்ள உரைகள் தரம் நிறைந்தவை. பத்தொன்பது—இருபதாம் நூற்றாண்டுகளில் தோன்றிய பேரறிஞர்கள் சிலரும், தொல்காப்பியத்திற்கு உரை வகுத்துள்ளனர். இஃதன்றி, வேறு சில நூற்களின் உரையிலும், தொல்காப்பிய நூற்பாக்கள் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டில் சேந்தன் திவாகர நிகண்டு இயற்றிய திவாகர முனிவரும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் நன்னூல் என்னும் இலக்கண நூல் யாத்த பவணந்தி முனிவரும், தத்தம் நூற்களினிடையே தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே எடுத்துச் சேர்த்துக் கொண்டுள்ளனர். பிற்காலத்திய ஆசிரியர்கள் சிலரும் இப்பாதையில் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழ்ப் புலவோர் பலரும், குறிப்பிட்ட தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றித் தமிழ் மொழியை வளர்த்து வந்ததனால், ஆங்கில மொழியில், நூற்றாண்டுக்கு நூற்றாண்டு தோன்றிய நூற்களினிடையே, இது வேறு மொழியோ, அது வேறு மொழியோ என்று ஐயுறக் கூடிய அளவிற்கு நடை வேறுபாடு காணப்படுவது போல், மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தொல்காப்பிய நூல் நடைக்கும், இன்று தோன்றும் தமிழ் நூல் நடைக்குமிடையே பெருத்த வேறுபாடு காணப்படவில்லை. இது தமிழ் மொழிக்கும் ஒரு சிறப்பேயாகும்.

இடைவெளி நூற்கள்

கிடைத்திருக்கும் தமிழ் நூற்களுள் சொற் பொருள் கூறும் துறையில், முதல் நூல் தொல்காப்பியம்; இரண்டாவது நூல் சேந்தன் திவாகரம். தொல்காப்பியமோ, கி.மு. ஆயிரம் ஆண்டுகட்கு முன், அதாவது—மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியது; சேந்தன் திவாகரமோ கி.பி. எட்டாம் நூற்றாண்டில்—அதாவது-ஆயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முன் தோன்றியது. அப்படியெனில், இரண்டுக்கும் நடுவே ஆயிரத்தெண்ணுாறு—அல்லது— ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு கால இடைவெளி உள்ளமை புலனாகும். இந்தப் ‘பசிபிக்’ இடைவெளியில், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூற்கள் பலவும், சேந்தன் திவாகரம் போன்ற நிகண்டு நூற்கள் பலவும் கட்டாயம் தோன்றியிருக்கத்தான் வேண்டும். நமது தீப்பேறாக, அவையெல்லாம் கிடைக்கவில்லை. ஆயினும், நிகண்டு (கலைக் கோட்டுத் தண்டு), ஆதி திவாகரம் என்னும் இரு நிகண்டு நூற்களின் பெயர்கள் மட்டும் தெரிகின்றன; நூற்கள் கிடைத்தில. அவற்றுள் முதலில் நிகண்டு கலைக்கோட்டுத் தண்டு என்னும் நூல் பற்றிய குறிப்பு வருமாறு.

நிகண்டு (கலைக் கோட்டுத் தண்டு)

நன்னூல் என்னும் இலக்கண நூலின் பாயிரப் பகுதியில் நூற்கட்குப் பெயர் வைப்பதற்குரிய பல பொருட்டுக்கள் (காரணங்கள்) சொல்லப்பட்டுள்ளன; இறுதியில், இடுகுறியாகப் பெயர் வைப்பதும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இடுகுறி என்றால், ஒரு பொருட்டும் (காரணமும்) இன்றி, ஏதாவது ஒரு பெயர் வைத்துத் தீரவேண்டுமே என்பதற்காக இடப்பட்ட பெயர் ஆகும். நமக்கு ஒரு பொருளினது பெயரின் பொருட்டுத் தெரியவில்லையென்றால், அதை இடுகுறிப் பெயர் என்று சொல்ல வேண்டியதுதான் போலும்! இது பற்றிய நன்னூல் நூற்பா வருமாறு:—

“முதனூல் கருத்தன் அளவு மிகுதி
 பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
 இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே.”

இந்நூற்பாவிற்கு உரையெழுதிய மயிலை காதர் என்னும் உரையாசிரியர், முதனூல், கருத்தன், அளவு, மிகுதி, பொருள், செய்வித்தோன், தன்மை ஆகிய நிமித்தங்களால் (காரணங்களால்) பெயர் பெற்றமைக்கு எடுத்துக்காட்டாகச் சிற்சில நூற்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு, இடுகுறியால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு எழுதியுள்ளார்:—

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு நூல், கலைக்
 கோட்டுத் தண்டு முதலாயின.”

இதே நூற்பாவின் உரையில், சங்கர நமச்சிவாயர் என்னும் உரையாசிரியர் பின் வருமாறு எழுதியுள்ளார்:—

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு கலைக்
 கோட்டுத் தண்டு முதலாயின.”

நன்னூலின் உரைகளிலேயன்றி, ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் களவியல் இலக்கண நூலின் உரையிலும் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:—

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு நூல், கலைக்
 கோட்டுத் தண்டு என இவை.”

இவ்வாறு நன்னூல் உரையிலும், இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் உரையிலும் எழுதப்பட்டிருப்பதற்குத் தக்க சான்று பகர்வது போல், ‘நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார்’ என்னும் சங்க காலப் புலவர் ஒருவரின் பெயர் அடிபடுகிறது. நற்றிணை என்னும் சங்க இலக்கியத்திலுள்ள “கானல் மாலைக் கழிநீர் மல்க” என்று தொடங்கும் 382—ஆம் பாடல் இவர் பாடியதே. இப்பாடல் ஒன்றின் வாயிலாகத்தான் இவர் தமிழ் மக்கட்கு அறிமுகமாகியுள்ளார். நற்றிணைக்குப் பின்னத்தூர். அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரை நூற் பதிப்பின் முற்பகுதியில், பாடினோர் வரலாறு என்னும் தலைப்பில், நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:—

“மான் கொம்பை நிமிர்த்திக் கைக் கோலாகக் கொண்டமையால் இவர் கலைக் கோட்டுத் தண்டன் எனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால், இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது; அதுவே கலைக் கோட்டுத் தண்டு எனப்படுவது. இதனை இடுகுறிப் பெயரென்று கொண்டார், களவியலுரைகாரரும், நன்னூல் விருத்தியுரைகாரும் (சூத் 49). அஃது இதுகாறும் வெளி வந்திலது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 382-ஆம் பாட்டு.”

இந்தப் பகுதி அப்படியே ‘அபிதான சிந்தாமணி’ என்னும் நூலிலும் உள்ளது. ‘கலைக் களஞ்சியம்’ என்னும் நூலிலோ பின்வருமாறுள்ளது:—

“நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார்: சங்ககாலப் புலவர் நிகண்டு, கலைக் கோட்டுத் தண்டு என்பவை இடுகுறியாற் பெயர் பெற்ற நூல்களென நன்னூல் விருத்தியுரை (நன். பாயிரம்: 49) கூறும். இந்த நூல்களுக்கும், இவருக்கும் ஏதாவது தொடர்புண்டோ என்பது ஆராயத்தக்கது. (நற். 382).”

மேலே எடுத்துக்காட்டப்பட்டவற்றுள், நன்னூல் உரையும், களவியல் உரையும், ‘நிகண்டு நூல் என்பது ஒரு தனி நூல்; கலைக் கோட்டுத் தண்டு என்பது, மற்றொரு தனி நூல்’ என்னும் பொருள்பட உள்ளன. அபிதான சிந்தாமணி, நற்றிணை உரையின் முற்பகுதி ஆகியவையோ, ‘நிகண்டு என்பதும், கலைக் கோட்டுத் தண்டு என்பதும் ஒரே நூல்தான்—அதாவது—கலைக் கோட்டுத் தண்டு என்பது ஒரு நிகண்டு நூல்’ என்னும் கருத்துப்படக் கூறியுள்ளன. இவ்விரு வேறு கருத்துக்களுள் எது உண்மையானது?

நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்பது ஒரு புலவரைச் சுட்டுவதால், அவர் நிகண்டு நூல் என ஒரு நிகண்டு நூலும், கலைக் கோட்டுத் தண்டு என ஒரு நிகண்டு நூலுமாக இரண்டு நிகண்டுகள் எழுதியிருக்க மாட்டார்; அல்லது, இரண்டும் ஒரே நிகண்டு நூலாகவும் இருக்க முடியாது. நிகண்டன், கலைக் கோட்டுத் தண்டன் என்னும் இரண்டு ஆண்பாற் பெயர்களின் முடிபைக் கொண்டு, இரண்டும் தனித் தனி நூற்களே என்று துணியலாம். அப்படியிரண்டும், வெவ்வேறு நூற்களின் பெயர்களேயெனின், நிகண்டு என்பது நிகண்டுத் துறை நூலாகவும், கலைக் கோட்டுத் தண்டு என்பது வேறு துறை நூலாகவுந்தான் இருக்க வேண்டும்; ஒருவரே இரண்டு நிகண்டு நூற்கள் எழுதியிருக்க மாட்டார்.

இதில் இன்னுமொரு சிக்கல் உள்ளது:— கலை என்றால் மான்; கோடு என்றால் கொம்பு; தண்டு என்றால் தடி; எனவே, மான் கொம்பை நிமிர்த்தித் தடியாக ஊன்றிச் சென்றதனால், கலைக் கோட்டுத் தண்டனர் என ஆசிரியர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்—என்னும் கருத்துப்பட நற்றிணையுரையின் முற்பகுதியும், அபிதான சிந்தாமணியும் கூறுகின்றன. இதன்படி நோக்கின், கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயருடைய ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல், அவர் பெயராலேயே கலைக் கோட்டுத் தண்டு என அழைக்கப்பட்டது-என்னும் கருத்து உறுதிப்படும்; படவே, நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும், கருத்தனால் (ஆசிரியனால்) பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக இந்நூலைக் குறிப்பிடாமல், இடுகுறியால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக இந்நூலைக் குறிப்பிட்டிருப்பது பொருத்தமற்றதாகும். ஆனால், இவ்வுரையாசிரியர்கள், கலைக் கோட்டுத் தண்டு என்னும் நூலை இயற்றியதால் ஆசிரியர் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்துடையவர்களாக இருந்திருக்கலாம். அப்படியெனில், கலைக் கோட்டுத் தண்டை ஊன்றியதனால்தான் ஆசிரியர் கலைக் கோட்டுத்தண்டனார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து பொருத்தமற்றதாகப் போய்விடும். இவ்வாறு இருவேறுபட்ட இச்சிக்கலுக்குத் தீர்வு யாது?

சங்க காலப் புலவர்களுள் ‘தொடித்தலை விழுத் தண்டினார்’ என்பவர் ஒருவர். இவரது பாடலொன்று புறநானூற்றில் உள்ளது. அது. ‘இனிநினைக் திரக்கமாகின்று’ என்று தொடங்கும் (243-ஆம்) பாடலாகும் அப்பாடலில் புலவர், ‘ஆழமான மடுவில் குதித்து மணலெடுத்து வந்த இளமை போய்விட்டதே; தண்டு (தடி) ஊன்றி நடுங்கி நடக்கும் முதுமை வந்துவிட்டதே’ என்று இரங்குகிறார், அப்பாடற் பகுதியாவது:–

“இனிநினைந்து இரக்க மாகின்று...............
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை



அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே”

இப்பாடலிலுள்ள ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்னும் தொடர் கவனிக்கற்பாற்று. புலவர் ஊன்றிய தண்டு (தடி) விழுத் (பெரிய) தண்டாம்; அதன் தலையில் (உச்சியில்) தொடி (பூண்) போடப்பட்டுள்ளதாம்; அதனால் புலவர் தமது தடியைத் ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்று விதந்து கூறியுள்ளார். இப்பாடலில் ‘தொடித்தலை விழுத் தண்டு’ என்னும் தொடர் கவர்ச்சியுடையதாகக் காணப்படுவதால் இத்தொடராலேயே தொடித்தலை விழுத் தண்டினார் எனப் புலவர் அழைக்கப்பட்டார். இது போலவே, குறுந்தொகை என்னும் சங்கநூலில் ஒரு பாடலில் ‘அணிலாடு முன்றில்’ என்னும் தொடர் சிறந்து காணப்பட்டதால் அப்பாடலைப் பாடிய புலவர் ‘அணிலாடு முன்றிலார்’ என அழைக்கப்பட்டார்; இன்னொரு பாடலில் ‘ஓர்இல் பிச்சை’ என்னும் தொடர் சிறந்து காணப்பட்டதால் அப்பாடலைப் பாடியவர் ‘ஓரில் பிச்சையார்’ என அழைக்கப்பட்டார்; மற்றொரு பாடலில் ‘ஓர் ஏர் உழவன்’ என்னும் தொடர் .சிறந்து தோன்றியதால் அதன் ஆசிரியர் ‘ஓர் ஏர் .உழவனார்’ என அழைக்கப்பட்டார். இவ்வாறே தாம் பாடிய பாடலிலுள்ள தொடரால் பெயர் பெற்ற சங்கப் புலவர்கள் இன்னும் பலருளர். இது அக்காலத்து மரபு; அதாவது, ஒரு பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லையென்றால், அப்பாடலிலுள்ள சிறந்த தொடரால் ஆசிரியரை அழைப்பது அக்கால வழக்கம். இம் மரபையொட்டிக் கலைக் கோட்டுத்  தண்டனார் என்னும் பெயரையும் ஏன் ஆராயக் கூடாது?

மான் கொம்பை நிமிர்த்தி எவரும் தடியாகக் கொள்ளார்; எனவே, தாம் பாடிய பாடலிலுள்ள தொடரால் பெயர்பெற்ற தொடித்தலை விழுத்தண்டினார் போலவே, கலைக்கோட்டுத் தண்டனாரும் தொடரால் பெயர் பெற்றிருக்கலாம். தனித்தனி நூலாக மதிக்கப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு முதலிய நீளமான பத்துப் பாட்டுக்களைப் போல ஒரு நீளமான பாடல் இருந்திருக்கலாம்; அதற்கு நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் கிடைக்காமல் விடுபட்டுப் போயிருக்கலாம். இந்நிலை பழங்கால நூல்கள் சிலவற்றிற்கு உள்ளதுதானே! எனவே நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் தெரியாத அந் நெடும்பாட்டு நூலில் ‘கலைக் கோட்டுத் தண்டு, என்னும் தொடர் சிறப்பிடம் பெற்றிருக்கலாம்’ அதனால், அத்தொடராலேயே நூலையும் ஆசிரியரையும் பெயர் சுட்டி அழைத்திருக்கலாம். ஆகவே, அந் நூலுக்குக் கலைக்கோட்டுத் தண்டு என்னும் பெயர் எந்த நிமித்தம் (காரணம்) கருதியும் வைக்கப்பட்டதன்று; ஏதேனும் ஒரு பெயர் வேண்டுமே என்பதற்காக இடுகுறியாக இடப்பட்ட பெயரேயென்பது புலனாகலாம். இதனால்தான் நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும் இடுகுறியாற் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாகக் கலைக்கோட்டுத் தண்டைக் காட்டியுள்ளனர். எனவே, கலைக்கோட்டுத் தண்டு என்பது நிகண்டு நூலன்று; வேறு துறையைச் சேர்ந்த நூலேயாகும். இதனை ஒரு 

நிகண்டு நூலின் பெயரென அபிதான சிந்தாமணியாரும் நற்றிணை உரையாளரும் கூறியிருப்பது பொருத்தமுடைத்தன்று. புலவரது நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயரைக் கொண்டு, அவர் ஒரு நிகண்டுநூல் இயற்றியுள்ளார் என்பது புலப்படினும், அந்நிகண்டின் பெயர் தெளிவாகத் தெரியாததால் அது கலைக் கோட்டுத் தண்டாகத்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துவிடக்கூடாது.

கலைக் கோட்டுத் தண்டைப் பற்றிய செய்தி எப்படியிருந்தபோதிலும், கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் பெயருக்கு முன்னாலுள்ள ‘நிகண்டன்’ என்னும் அடைமொழியைக் கொண்டு அவர் ஒரு நிகண்டுநூல் இயற்றியுள்ளார் என்பதுவரை உறுதி.

இந்நிகண்டு, ஏனைய நிகண்டுகட்கெல்லாம் முற்பட்ட முதல் நிகண்டாகவும் இருக்கலாம்; அதனால், அந்த நிகண்டு—இந்த நிகண்டு என ஆசிரியர் எந்தப் பெயரும் வைக்காமல், வெறும் ‘நிகண்டு’ எனவே தம் நூலை அழைத்திருக்கலாம். திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியனபோலின்றி, வெற்றுப்படியாக நிகண்டு என்னும் பெயர்மட்டும் உள்ளதால், ‘ஆசிரியர் ஒரு நிமித்தமும் கருதி ஒரு பெயரும் வைக்கவில்லை; ஏதேனும் ஒரு பெயர் இருக்க வேண்டுமே என்பதற்காக நிகண்டு என இடுகுறியாக வாளா அழைத்துக் கொண்டார்’—என்று நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும் எண்ணி, இடுகுறியாற் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக, இந்நிகண்டு நூலைக் காட்டியிருக்க வேண்டும். 

மற்றும், நன்னூல்—களவியல் உரைகாரர்கள் காட்டியுள்ள நிகண்டு, கலைக் கோட்டுத் தண்டு என்னும் இரு நூற்கட்கும், நற்றிணையின் 382-ஆம் பாடலைப் பாடிய நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் புலவர்க்கும் தொடர்பில்லையென்று எவரேனும் கட்டவிழ்த்து விடுவார்களோ என்னவோ! நன்னூல்—களவியல் உரைகளில் நிகண்டு—கலைக் கோட்டுத் தண்டு என்னும் பெயர்கள் பக்கத்தில் பக்கத்தில் இணைந்திருப்பதாலும், நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயரிலும் அவ்வாறே இணைப்புக் காணப்படுவதாலும் அவ்விரு நூற்களையும் இயற்றியவர் அவரேயென முடிச்சுப் போடப்பட்டுள்ளது.

நிகண்டு நூலின் காலம்

நற்றினை கடைச்சங்க நூலாகும்; நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனாரும் கடைச் சங்கப் புலவரே; எனவே, அவரியற்றிய நிகண்டு நூலும் கடைச் சங்க காலத்ததாகும். கடைச் சங்க காலம், கி.மு. ஐந்நூறிலிருந்து கி.பி. ஐந்நூறுவரை தலைக்குத் தலையொருவிதமாக ஆராய்ச்சியாளரால் பந்தாடப்படுவது தெரிந்த செய்தியே.

இனி ஆதி திவாகரம் என்னும் நிகண்டு குறித்து வருமாறு:—

ஆதி திவாகரம்

இப்பொழுது கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் முந்தியது ‘சேந்தன் திவாகரம்’ என்னும் நிகண்டாகும். இது, சேந்தன் என்னும் சிற்றரசனது 

வேண்டுகோட்படி திவாகரர் என்பவரால் இயற்றப்பட்ட தாதலின், இயற்றுவித்தோன் பெயரையும் இயற்றியவர் பெயரையும் இணைத்துச் சேந்தன் திவாகரம் என அழைக்கப்பட்டது. இந்தத் திவாகரருக்கு முன்னாலேயே இன்னொரு திவாகரர் தம் பெயரால் ‘திவாகரம்’ என ஒரு நிகண்டு இயற்றியிருந்தார். இப்படியாக இரண்டு திவாகரங்கள் தோன்றிவிடவே, இரண்டிற்கும் வேறுபாடு தெரிவதற்காக, முதலில் தோன்றிய திவாகரம் ‘ஆதி திவாகரம்’ எனவும், சேந்தனது தூண்டுதலால் இரண்டாவதாகத் தோன்றிய திவாகரம் ‘சேந்தன் திவாகரம்’ எனவும் அழைக்கப்பட்டன. ஆனால் எப்படியோ ஆதி திவாகரம் அழிந்து போயிற்று.

சிலர், இந்த இரு திவாகரங்களையும் தனித் தனி நூலாகக் கொள்ளாமல், ஒரே நிகண்டெனக் கூறுகின்றனர். இவர் கூற்றுப் பொருத்தமுடையதாகப் புலப்படவில்லை. இது குறித்துச் ‘சேந்தன் திவாகரம்’ என்னும் தனித் தலைப்பில் விரிவாக ஆராயப்படும்; அதனை அடுத்து வரும் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே காணலாம்.