உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/001-007

விக்கிமூலம் இலிருந்து



தமிழ் நாடகத்
தலைமையாசிரியர்


நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலைவளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது.

முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான்குறிக்கும்.

சுவாமிகள் காலத்திலிருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச்சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர்.

ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவது கூடக் கௌரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின்மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடகமேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

தோற்றம்

1867-ஆம் ஆண்டில் ஆவணித் திங்கள் 22-ஆம் நாள் தமிழ் மாநிலம் சுவாமிகளைத் தாங்கும் பேறு பெற்றது. தமிழர் வரலாற்றிலே அழியாத இடம் பெற்ற கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், மகாகவிபாரதியார், வீரபாண்டியக் கட்டபொம்மன் முதலிய தியாகிகளையும், வீரர்களையும், புலவர்களையும் தந்த திருநெல்வேலி மாவட்டம்தான் நாடகப் புலவராகிய சங்கரதாஸ் சுவாமிகளையும் நமக்குத் தந்தது. தென் பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த ‘வெள்ளையத் தேவன்’ பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப் பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.

கல்வி

தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர். நகர மக்கள் அவரை ‘இராமாயணப் புலவர்’ என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச்செயல்”

என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.

அக்காலத்தில் ‘புலவரேறு’ என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் நமது சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்டபோது நமது சுவாமிகளுக்கு உடுமலைச்சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்கள் சக மாணவராயிருந்தார். கவிராயர் அவர்கட்கும் ஆசிரியர் சுவாமிகளுக்குமுள்ள அன்புத் தொடர்பு மிகப் பிரசித்தமானது. அதுபற்றிய சில குறிப்புகளைப் பின்னர் அறிவோம்.

கணக்கர் கவிஞரானார்

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையிலே சுவாமிகள் சிலகாலம் கணக்கராக வேலை செய்தார். தமது பதினாறாவது வயதிலேயே சுவாமிகள் வெண்பா, கலித்துறை, இசைப் பாடல்கள் முதலியனவற்றை எழுதத் தொடங்கினார். கவிதைப் புலமைக்கும் கணக்கு வேலைக்கும் போட்டியேற்படவே சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் தமது இருபத்துநான்காவது வயதில் நாடகத் துறையில் பிரவேசித்தார்.

நடிகர்-நாடகாசிரியர்

முதன்முதலாகச் சுவாமிகளின் புலமையை அறிந்து பயன்படுத்திக் கொண்டது திருவாளர்கள் ராமுடு ஐயர், கல்யாணராமையர்ஆகிய பழம் பெரும் நடிகர்களின் நாடக சபையெனச் சொல்லப்படுகிறது. இச்சபையில் முதலில் நடிகராகவும் பின்னர் ஆசிரியராகவும் சுவாமிகள் சில ஆண்டுகள் பணி யாற்றினார். இரணியன், இராவணன், எம தருமன், ‘நளதமயந்தி’யில் சனீசுவரன் முதலிய வேடங்கள் சுவாமிகளின் நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டிய சிறந்த பாத்திரங்கள் என்று கருதப்பட்டன.

சூத்திரதார்

திருவாளர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சில காலம் சுவாமிகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சூத்திரதாராகவும் நடித்து வந்தார். சுவாமிகள் சூத்திரதாராக வந்து நாடக நுணுக்கங்களைப்பற்றியும், நடைபெறவிருக்கும் நாடகத்தின் நீதிகளைப் பற்றியும் நிகழ்த்தும் விரிவுரையைக் கேட்க மக்கள் ஆவலோடு கூடுவார்கள்.

ஆண்டிக் கோலம்

நாயுடு அவர்களின் குழுவில் இருக்கும்போது சுவாமிகள் வாழ்க்கையில் வெறுப்புற்று, தமது வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானின் திருவருளை வேண்டிக் கையில் ஐம்பது ரூபாய்களுடன் ஒரு நாள் ஆண்டிக் கோலத்தோடு தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டுவிட்டார். இவ்வாறு கோவணாண்டிக் கோலத்துடன் தலங்களைச் சுற்றி வந்தபோதுதான் எல்லோரும் அவரைச் சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

தத்து புத்திரர்

தீர்த்த யாத்திரை முடிந்ததும் சில ஆண்டுகள் புதுக்கோட்டை மகா வித்துவான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளை அவர்களுடன் சுவாமிகள் இருக்க நேரிட்டது.

புலவர்களால் மிகக் கடினம் என்று கருதப்பட்ட வண்ணம், சந்தம், இவற்றைப் பாடுவதில் சுவாமிகள் மிகவும் வல்லவராயிருந்தார். அவரது ‘சந்தக் குழிப்பு’க்களிலே காணப்படும் தாள விந்நியாசங்களையும், சொற்சிலம்பங்களையும் பார்த்துப் பரவசமடைந்த மகா வித்துவான் மான் பூண்டியா பிள்ளை அவர்கள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தமது ‘தத்து புத்திரராக’ ஏற்றுக்கொண்டார்.

சக மாணவர்கள்

சுவாமிகளைச்சந்தங்கள் பாடச்சொல்லிவிட்டுப் பிள்ளையவர்கள் ‘கஞ்சிரா’ வாசித்துத் தானே களிப்படைவாராம். இந்தச்சமயத்திலேதான் தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களான திருவாளர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை இருவரும் மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் மாணவர்களாக இருந்து வந்தனர்.

மீண்டும் நாடகாசிரியர்

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாக மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வேண்டுகோளின்படி சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் மீண்டும் நாடக ஆசிரியப் பொறுப்பை மேற்கொண்டார். பிள்ளை அவர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதுண்டு. வள்ளி வைத்தியநாதய்யர், அல்லி பரமேஸ்வரஐயர்ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் சுவாமிகள் சில ஆண்டுகள் இருந்தார். திருவாளர் பி.எஸ். வேலு நாயர் அவர்களின் ஷண்முகானந்த சபையிலும் நெடுங்காலம் சுவாமிகள் பணிபுரிந்தார். திரு.பி.எஸ். வேலு நாயர் அவர்களும், எனது தந்தையார் திரு. டி.எஸ். கண்ணுச்சாமிப் பிள்ளை அவர்களும் ஆசிரியர் சுவாமிகளின் அன்புக்குரிய மாணவர்களாவார்கள். திரு. வேலு நாயர் அவர்களின் குழுவிலிருந்தபோதுதான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரன்’ நாடகத்திற்குச் சுவாமிகள் பாடல்கள் இயற்றினார்.

மாணவ மாணவியர்

தமிழ் நடிகருலகில் திரு. வேலு நாயர்அவர்களின் பேச்சுத் திறனைப் புகழாதாரில்லை. இத்தகைய நாவன்மை நாயர் அவர்களுக்கேற்பட்டது சுவாமிகள் அளித்த தனிப்பட்ட பயிற்சியினாலும், சுவாமிகளின்பால் நாயரவர்களுக்கிருந்த ஆசிரிய பக்தியினாலும்தான் என்று எனது தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த எல்லா நாடக சபைகளிலும் சுவாமிகள் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே தமிழகத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய நடிகர்களான திருவாளர்கள் ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேசபத்தர், ராஜா, வி.எம். கோவிந்தசாமிப் பிள்ளை, எம்.ஆர். கோவிந்தசாமிப் பிள்ளை, சி. கன்னையா, சி.எஸ். சாமண்ணா ஐயர், மகா தேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே.எஸ். அனந்த நாராயண ஐயர், கே. எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை முதலியோரெல்லாம் நமது சுவாமிகளிடம் பயிற்சி பெற்றவர்கள். அவரது பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையரிலும் திருமதிகள் பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள்முதலிய பலர் சுவாமிகளின் மாணவிகள் ஆவார்கள்.

சொந்த நாடகக் குழு

சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே சொந்தத்தில் ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலேதான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்மிடையே வாழும் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் தோன்றியவரே.

சிறுவர் நாடகக் குழு

கால வேகத்தில் நடிகர்கள் சுவாமிகளின் பாடல்களை மட்டுமே உபயோகித்துக்கொண்டு உரையாடல்களைத் தம் தம் உளப் போக்கிற்கேற்றவாறு பேசத் தொடங்கினர். நாடக மேடை விவாத மேடையாயிற்று. நாடகக் கலை நலியத் தொடங்கியது. ஸ்பெஷல் நாடகங்களிலே போட்டியும் பூசலும் தாண்டவமாடின. பெரிய நடிகர்கள் பலரிடம் ஏற்பட்ட இந்தக் கட்டுப்பாடின்மையே சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளின் தோற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. மனம் போன போக்கில் பேசுபவர்கள்பால் வெறுப்புற்ற சுவாமிகள் கட்டுத் திட்டங்களுடன் அடங்கி நடிக்கும் முறையில் சிறுவர் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.

பால மீன ரஞ்சனி சபை

சுவாமிகள் ஆசிரியராக இருந்த முதல் ‘பாய்ஸ்’ கம்பெனி திரு. ஜெகந்நாத ஐயர் அவர்களின்பால மீன ரஞ்சனி சங்கீத சபை. பிற்காலத்தில் ஆசிரியப் பொறுப்பேற்றுப் பல நடிக மணிகளைத் தோற்றுவித்த திருவாளர்கள் பி. டி. சம்பந்தம், எம். எஸ். முத்துகிருஷ்ணன், டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை, எம்.வி. மணி, டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி, எஸ்.வி. வெங்கட்ராமன், நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம், எம். ஆர். ராதா முதலிய எண்ணிறந்த நடிகர்கள் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தத்துவ மீனலோசனி சபை

சிலகாலம் அந்தச் சபையில் இருந்த பிறகு திரு. ஜெகந்நாதய்யர் அவர்களுடன் ஏற்பட்ட மனத்தாங்கலின் விளைவாகச் சுவாமிகள் மதுரைக்கு வந்து சில நண்பர்களின் கூட்டுறவோடு 1918-ஆம் ஆண்டில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராக அமர்ந்தார்.

எங்கள் குருநாதர்

இந்தக் குழுவில்தான் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று குறிக்கப்படும் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.

1918-ஆம் ஆண்டு முதல் 1922-ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய நான்காண்டுகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக் கல்வி பயிலும் நற்பேற்றினைப் பெற்றேன். அவருடைய அறிவாற்றலைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியாத பருவம். இன்று உணருகிறேன் எங்கள் குருநாதரின் பெருமையை.