தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தொகுதி - 4
பதிப்பாசிரியர்
டாக்டர் ம.நடராசன், எம்.ஏ., பிஎச்.டி.
தமிழ் அரசிப் பதிப்பகம்
189, டி.டி..கே. சாலை
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
நூல் விவரக் குறிப்பு
| நூல் : | தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |
| ஆண்டு : | 2003 |
| உரிமை : | தமிழ் அரசிப் பதிப்பகம், |
| 189, டி.டி.கே. சாலை, | |
| ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. | |
| பக்கம் : | xxiv + 408 = 432 |
| விலை : | ரூ.135.00 |
அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்
101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை
லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004
✆: 24984693, 24661807
முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின்
முன்னுரை
திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன்,
'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று. என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்: பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் - எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.
படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 'தம்பிக்குக் கடிதம்' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!
அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்து படைக்க முன்வந்த 'பாரி நிலைய'த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற வாழ்வார்களாக!
4. 1. 63 இரா. நெடுஞ்செழியன்
பதிப்புரை
பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க - ஒளிவீச எழுந்த ஞாயிறு.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
(குறள் - 666)
என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர்.
‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர்
தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை,
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
(குறள் - 643)
என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார்.
பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்
பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, பேரறிஞர் அண்ணா பேசுகிறார் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன.
பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்
இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களில் 'தம்பிக்கு' என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது.
மடல்களின் தொகுப்பு முறை
பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் எழுதிய 171 கடிதங்களும், 'காஞ்சி' இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய 'காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...' என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள் எழுதிய 'இராச்சிய சபை' ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன.
மடல்களில் காணப்படும் பொருண்மைகள்
அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் - காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி, நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின.
பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்
அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு', 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.
எளிமையான விளக்கங்கள்
தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர்,
“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும்
ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக்
கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து
இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”
(நச்.தொல்.948)
அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார்.
கடிதத் தலைப்புகள்
'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார்.
'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன்
இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே'
என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது.
வினா அமைப்பு மடல்கள்
'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்.
மொழியாய்வு
'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார்.
தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும்,
"சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத்
தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா"
என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம்.
புராணத் தலைப்புகள்
'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும், 'குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார்.
புராண உவமை
புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார்.
அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு.
பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம்.
எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்
'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்', 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்', 'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார்.
தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்
பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா' என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது.
இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது.
17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது.
தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன."சங்க இலக்கியக் காட்சிகள்
தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204).
சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும்.
கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது.
சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும்.
நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி
கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு
இனிய செய்தநம் காதலர்.
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.
பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது.
பட்டினப் பாலை
கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.
"மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன.
நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன!
கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன!
தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்!
அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்!
கடல் வழி வந்த குதிரைகள்
நில வழி வந்த மிளகும் பொதிகள்,
இமயச் சாரலின் மணியும் பொன்னும்,
குடகு மலைச் சந்தனமும், அகிலும்
தென்கடல் முத்து
கீழ்க்கடல் பவளம்
ஈழ நாட்டுப் பொருள்
காழக நாட்டுப் பொருள்
இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம்.
மலைபடுகடாம்
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார்.
மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன!
விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன.
எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம்.
தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள்.
அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்!
கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார்.
மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.
கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான்.
மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது!
முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்!
ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது.
நின்னே போலும் மஞ்ஞை!
என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது.
சங்க இலக்கியக் காதல்
பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது! இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது.
அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார்.
புறநானூறு
புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 'நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.'
"புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம் கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை."
இரு காட்சிகள்
சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார்.
இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது?
அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு,
“மரத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்"
ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்?
நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல.
'கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்'.
நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது.
நடைநலம்
நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர் அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக' - 103).
அவர் எழுதுகிறார் :
"வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம்.
தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும் நமக்கு.
முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய்.
அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மையாவும் உண்டு இங்கே.
முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்."
தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று
'தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து 'நெடுஞ்செழியன் - அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான 'வாகையூர்' என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும்.
'திரு.வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, 'உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.
தொடர் மடல்கள்
'போலீஸ் போலீஸ்', 'தண்டோரா சர்க்கார்', 'வெகுண்டெழுந்தான் பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்', 'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்', 'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்', 'பற்று', 'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன.
கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்' என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை,
1. மரங்கொத்தியும் குருவியும்
2. அவரைக் கொடியும் குழந்தையும்
3. மகிழம்பூவும் பூசனைப் பூவும்
4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு
என்பன.
மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன.
எலினார் அந்தனி கதை
அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 - 3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும்.
நாடகத்துறை வித்தகர்
பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', 'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில.
'செல்வ சீமானின் மகன்'
பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம்.
காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர்.
செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான்.
'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார்.
கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்
உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன. 'முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்'?, 'வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம்.
கொள்கை உறுதி
தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி வரை கொண்டார். "நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட தலைவரும் ஒருவரே - அவர்தான் பெரியார்" எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா.
பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய ‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம்.
இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த 'யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி.
பொருளடக்கம்
(தொகுதி 4)
பக்கம்
| 1 |
| 16 |
| 34 |
| 55 |
| 71 |
| 89 |
| 103 |
| 122 |
| 137 |
| 155 |
| 176 |
| 189 |
| 206 |
| 211 |
| 224 |
| 235 |
| 248 |
| 263 |
| 281 |
| 290 |
| 306 |
| 321 |
| 327 |
| 339 |
| 354 |
| 363 |
| 373 |
| 395 |