தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9
தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்
ஒன்பதாம் பகுதி
அறிஞர் அண்ணா
பாரிநிலையம்
184.பிராட்வே.சென்னை-600001
முதற்பதிப்பு : டிசம்பர், 1981
பதிப்பு : உரிமையுடையது
விலை ரூ.12–00
மாருதி பிரஸ், 173 பீட்டர்ஸ் ரோடு, சென்னை-600 014.
பதிப்புரை
அமரர், அறிஞர் அண்ணா அவர்களின் சிந்தனையும் பேச்சும் எழுத்தும் மகத்தான சக்தி படைத்தவை; தமிழர் உள்ளங்களைத் தம் வசப்படுத்தும் ஆற்றலும் ஊட்டமும் பெற்றவை.
எளிமை, நயம், கருத்துச் செறிவு, அரசியல் தெளிவு, வரலாற்றுப் படப்பிடிப்பு எல்லாவற்றையும் அவற்றிற் காணலாம். அவை காலத்தை வென்று நிலைக்கும் சிறந்த தமிழ் இலக்கியங்கள்!
அண்ணாவின் கடிதங்களின் ஒன்பதாம் தொகுதி இது. தமிழக வரலாற்றின் முதன்மையான ஒரு வரலாற்றுத் திருப்பத்தில் எழுதப்பட்டவை. அண்ணாவின் ஆழமான அமைதியான உள்ளுணர்வுகளின் பிரவாகத்தை இக் கடிதங்கள் பிரதிபலிக்கின்றன. இவை தமிழன்பர்களின் சிந்தனைக்கு விருந்தும், நல்ல மருந்தும் ஆகும்.
அண்ணாவின் கடிதங்களின் பிற தொகுதிகளும் தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
—பாரி நிலையத்தார்
முதல் இரண்டு தொகுதிகளின்
முதற் பதிப்பின்
முன்னுரை
திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம். ஏ.,
‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூல் வடிவம் கொண்டு, அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழ்மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல் கருத்துக் கருவூலமாகத் திகழப் பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை, ‘பாரி நிலையத்தார்’ செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன். பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும். அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் —கட்டுரைகள்— நாடகங்கள்—திரைப்பட வசனங்கள்—எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச்சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசைபயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும்—உண்மையும் உயர்வும் திண்மையும் திட்பமும் சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லாவகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லா வகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.
படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பல பலப் இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்கு பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப் பரபரப்புணர்ச்சியுடன் அவற்றைப் பிரித்துப் படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ, அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் ‘தம்பிக்குக் கடிதம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே, விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!
அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக்கொண்டு இலக்கியவிருந்து படைக்க முன்வந்த ‘பாரி நிலைய’த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன் பெற்று, இனிதுற வாழ்வார்களாக!
4–1–1963
—இரா. நெடுஞ்செழியன்
பொருளடக்கம்
| கடித எண் |
நாள் | பக்க எண் | ||
|---|---|---|---|---|
| 137. | புதுப் பா! | 18-6-61 | ... | 9 |
| 138 | அழியாச் செல்வம் | 25-6-61 | ... | 27 |
| 139&140 | கதைகள்—கருத்தளிக்க | 2-7-61 | ... | 59 |
| 141 | முதல் பந்தி! | 20-8-61 | ... | 76 |
| 142 | பட்டப் பகலில்...! (1) | 3-9-61 | ... | 105 |
| 143 | பட்டப் பகலில்...! (2) | 10-9-61 | ... | 118 |
| 144 | பட்டப் பகலில்...! (3) | 24-9-61 | ... | 131 |
| 145 | குன்றம் பல சென்றிருந்தேன் | 29-9-61 | ... | 145 |
| 146 | பணபாணம், பஞ்சு பஞ்சாக... | 19-11-61 | ... | 165 |
| 147 | முயன்றால் முடியும்! | 26-11-61 | ... | 187 |
| 148 | தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன் | 3-12-61 | ... | 216 |
