உள்ளடக்கத்துக்குச் செல்

தராசு, சிறுகதைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தராசு
(சிறுகதைகள்)

சு. சமுத்திரம்

கங்கை புத்தக நிலையம்

13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.


முதற் பதிப்பு : டிசம்பர், 2001
விலை ரூ. 35.00
Title : THARAASU
Author : Su. Samuthiram
Language : Tamil
Subject : Short Stories
Edition : First Edition,
December, 2001
Pages : xiv + 162 = 176
Published by : GANGAI PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street,
Thyagaraya Nagar
Chennai - 600 017.
Price : Rs. 35-00

Printed at : Ragavendra Agencies, Chennai - 5 ✆ 8446166, 8446891



மணிக்கொடியும் -
மனிதக்கொடியும்




ஜ.ரா. சுந்தரேசன்
(பாக்கியம் ராமசாமி)



சமுத்திரம் அவர்களின் கதைத் தொகுப்புக்கு, முன்னுரை எழுதும் காரணத்தால், எனக்கும் இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று, நான் கர்வம் கொள்ளவில்லை. அல்லது சுரண்டல் லாட்டிரி மாதிரி, இது ஒரு சான்ஸ் என்றும் எடைபோட்டுக் கொள்ளவில்லை.

சாகித்திய அகாடமியால் கெளரவிக்கப்பட்ட நாவல் ஆசிரியரின், சிறுகதைப் படைப்பாளியின், சட்டயர் என்னும் சாட்டையால் சமூக அநீதிகளை ‘போலீஸ் அடி’ போல் உள்காயம் கொடுத்துச் சாடும் இலக்கியத் தோழரின் கதைகளைத் தொகுப்பாகப் படித்து, அவரது பரிமாணங்களின் வீச்சை காணமுடிந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன் என்பதே உண்மை.

இந்தத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகளை நான் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாததால், அவற்றில் வெளிவந்த சமுத்திரத்தின் கதைகளை நான் அனுபவிக்க முடியாமல் இருந்தது. ஆனால் மேற்படி கதைகளில் பல, இந்தத் தொகுப்பில் இடம்பெற்று பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறது.

சு. சமுத்திரம், வார்த்தைகளை எடுத்து ஆளுகிற லாகவம், வாசகர்களை அழுத்தமாக ரசிக்க வைக்கிறது.

மூத்த மகளை, அப்பா ஒரு படிக்காதவனுக்கு கட்டி வைத்தார். இளைய மகளுக்கு ஒரு சேஞ்ச்சுக்காக, படித்த மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைத்தார். அவன், மாசக் கடைசியில் சேஞ்சே இல்லாத ஆபீஸ் சூப்பிரென்டன்ட் என்று தெரிகிறது. அடிக்கிற அடியில், புளியங்காய் கொத்தாகக் கீழே விழுகிற மாதிரிதான் கதையில் கடைசி பகுதி அமைகிறது.

எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளுக்கு ஒரு பிடி சோற்றுக்கு வழி பண்ண லாயக்கில்லாத கணவன், ஆபீசில், எந்த லஞ்சத்துக்கும் மசியாதவனாக ‘என் பொண்டாட்டி பகட்டுக்கும், சேலைக்கும் பணம் கேட்டு தாலியைக் கழட்டி எறிகிறவள் அல்ல, என்னோட நேர்மையை தன்னுடைய தாலி பாக்கியமாக நினைக்கிறவள்’ என்று சொல்லும்போது மனுஷங்க இருக்க வேண்டிய இடம் எது என்கிறதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். இது கதைத் தலைப்பாக காட்டி இருப்பது சாலப் பொருத்தமே.

சொந்த வாழ்க்கையை மனித நேயத்தோடு வாழ்கிறவர்களால் தான் இலக்கியவாதியாகவும் திகழ முடியும்.

கூலிக்கும், புகழுக்கும் எழுதுகிறவன் எழுத்து, நன்றாகவே விற்பனையாகும். அவை, அன்றாடம் சமையலுக்குத் தேவையான காய்கறிகள். அவையும், அவசியந்தான். ஆனால் பாரீமுனை பேனா வியாபாரியின் கிறுக்கல்களை யனார்டாடோவின்ஸியின் ஓவியங்களோடு ஒப்பிடக்கூடாது.

சமையலறைக்குள் டோடா வின்ஸிகள் வராவிட்டாலும் சமையலறையில் உள்ளவர்கள், ஓவியக் கண்காட்சிக்கு போகலாம். ரசிக்கலாம். ஆகவே இம்மாதிரியான சிற்பங்கள் பத்திரிகை உலகுக்கு ஒரு கட்டாயத் தேவை.

சமுத்திரத்துக்கு, ஒரு ராகம் உண்டு. அவரே கண்டுபிடித்துள்ள ராகம். பொருளாதாரத்திலோ, சமூக அந்தஸ்திலோ, சாதிசமயங்களிலோ அமுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு ஜடமாகி விட்டவர்களை மனிதராக்கி - மகோன்னதமாக்கிக் காட்டும் ரச வித்தையாளர்.

கொட்டாவிக் கச்சேரி செய்ய, சமுத்திர பாகவதருக்குத் தெரியாது. ‘அன்றே, என் ஆவியும், உயிரும் குன்றே அனையாய் ஆட்கொண்டனையே’ என்ற மாணிக்க வரிகளில் வரும் ஆவியை-ஆன்மாவை உணரச் செய்யும் கருத்துச்சேரி, இவரது கதைச் சேரி.

அனைத்துக் கதைகளிலும் சிறிதும் மழுங்கவே மழுங்காத வைர ஊசி போன்ற உறுதியான கண்ணோட்டம். சமூக சீர்த்திருத்த நையாண்டி, இந்த சமுத்திரத்தில் விழுந்தால் வேஷக்காரர்களின் அரிதாரம் கரைவதைத் தவிர, வேறு வழியே இல்லை.

அரசு அதிகாரிகள், அரசு சிப்பந்திகள், மேல் தட்டினர் ஹிப்போக்கிரைட்ஸ் எனப்படும் மித்யாசாரர்கள் - ஆகிய இவர்களுடைய உலகத்தில் புகுந்து, நம்மால் அடிபட முடியாது. ஆனால் அத்தகைய அடிகளும் ரணங்களும் எப்படி இருக்கும், ரணப்படுத்துகிறவர்களின் வக்கிரங்கள் எப்படி இருக்கும், ரணப்படுகிறவர்களின் சதையும் மனசும் எப்படித் துடிக்கும் என்பதை சமுத்திரத்தின் கதைகள் மூலம் அனுபவித்து விடலாம்.

கதைகளைப் படிக்கும் போதே, நமது ஆழ் மனத்தில் நல் சிந்தனைகளை மேலெழுப்பி நம்மை உயர்த்தும், உயர்ந்த சேவையை, இவரது அனைத்துக் கதைகளிலும் ரசிக்கலாம். ருசிக்கலாம். திருந்தக்கூடாது என்று பிடிவாதமான, திடவாதமான மனோ இயல்பு கொண்ட மூர்க்கர்கள்கூட தங்களை அறியாமல், ஓரளவாவது பண்படுவார்கள்.

மெஸேஜ் மெஸேஜ் என்று ஏன் தேடுகிறார்கள்? ‘தமிழகத்தில் மேஸேஜைத் தவிர என்ன இருக்கிறது? மற்றவர்களைக் காட்டிலும் சமுத்திரத்தின் திவ்ய சக்ஷுக்களுக்கு, அந்த மேஸேஜ் தெளிவாகப் புலப்படுகிறது. நன்றி.

ஆழ முகிழ்ந்து எடுத்த மனிதநேயத்தின் பண்பாட்டுத் தத்துவங்களை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் விநியோகிக்கும், பிரசார பிராண்டு அற்ற மனித நேய உணர்வே அவரது எழுத்துக்களின் வசீகரத்துக்கும், வாழ்வுக்கும் காரணங்களாக அமைந்துள்ளன.

புதுமைப்பித்தனிலிருந்து ஜெயகாந்தனில் இருந்து வேறுபட்ட ஓர் எழுத்து மேதை சமுத்திரம். இவரது வார்ப்புகள் மனிதக் கட்சியைச் சார்ந்தவை.

பழையவர்கள் மணிக்கொடிக் காலம் என்ற ஒன்றைச் சடங்காகக் கொண்டாடுவார்கள். சமுத்திரம், மனிதக் கொடி கால எழுத்தாளர் என்பதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது.

உங்களுடன் - ஒரு
கதையாடல்''...

சு.சமுத்திரம்

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் இருபது ஆண்டுகளாக பழமை உடையவை. இதுவரை இந்தக் கதைகள் நிற்கின்றன. இனிமேல் நிற்குமா என்பதைக் காலந்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், அந்தக்காலத்தில், வைகை ஆற்றுக்கு எதிராக நல்ல படைப்புகள் எதிர்நீச்சல் போட்டதாக அறிகிறோம். ஆனால், இந்தக்காலத்தில், சில இலக்கிய தலிவான்கள் உருவாக்கும் குட்டைக்குள் எதிர்நீச்சல் போட வேண்டிய அவலநிலை இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும், இந்தக் குட்டையும், இவற்றை அரிக்கும் இலக்கிய கொசுக்களும், மக்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமரர் கல்கியை தூற்றியவர்களே இன்று அவருக்குப் பல்லக்கு தூக்கும் காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கதையின் பின்னணி அனுபவங்களை பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் தொகுப்பின் முதல் கதையான தானாடி-சதையாடி, ஒரு அன்பு பிரபாகத்தில் நீச்சல் அடிக்கிறது. இந்த அன்பு, பாசம் இருக்கிறதே, இவை மகத்தான மாறுவேடதாரிகள். எங்கள் ஊர்ப் பக்கம், தன் மகனைப் படிக்க வைத்த ஒரு பெரியவர், அவனால் கல்லூரியில் இழிவுப்படுத்தபட்டதும், ஆண்டுக் கணக்கில், அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே மறுத்தார். வெறுத்தார். ஆனால், அதே மகன் அகாலமாய் மரணம் அடைந்தபோது, சடலம் புதைக்கப்பட்ட மறுநாள் யாருக்கும் தெரியாமல், கடுகாட்டிற்கு ஓடி புதைக்குழியை தோண்டி பெற்ற மகனை பார்ப்பதற்கு முயற்சித்தார். ஆக, அன்பு ஒரு வெறுப்பு முகமூடியைப் போட்டுக்கொள்ள முடியுமே தவிர, அந்த அன்பால் தனது முகத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இந்தத்தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் முதலாவது கதை.

‘நாமர்க்கும் குடியல்லோம்’ எழுதப்பட்ட காலத்தில் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு பேசிக்கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் வழக்கமில்லை. ஆனால், இன்றோ தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல, இருவரும், பல இடங்களுக்கு தனியாகவே செல்கிறார்கள். அன்றைய காலத்தில் நான் எதிர்நோக்கிய, இன்றைய காலத்துப்பெண் இதில் வரும் வேதா.

உண்மையில் எரிபவள்- இப்படி அப்பாவியாக இருக்கமுடியுமா என்ற ஒரு எண்ணம் ஏற்படலாம். ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு, முன்பு மூதாட்டிகளாக இருந்தவர்கள், கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தார்கள். அதே சமயம், லஞ்ச லவண்யங்கள் காலத்தால் மாறுவேடம் போட்டாலும், சுயங்கள் அப்படியே இருக்கின்றன என்பதை காட்டுக்கிற கதை.

கட்டாயம் இல்லாத காதல் - நான் வசிக்கும் பகுதியில் நடந்தது. மனைவியான அக்காள் மகள், தன்னை நிராகரிக்கப்பட்ட ஒரு இளைஞனும், கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், இருவருமே தெனாலிராமன் பூனைகளாய் போனதால், இவர்களுடைய இணைப்பும் நடைபெறவில்லை. இருவருக்குமே, சட்டம், தங்களை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம். சட்டம் ஒன்றும் அப்படி பிடித்துக் கொள்ளாது என்று எனது அருமைத்தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர். செந்தில்நாதன் என்னிடம் தெரிவித்த போது, நான் ஆலோசனை கூற முடியாத அளவிற்கு, அந்தப் பெண் எங்கோ போய்விட்டாள். ஆகையால், எதிர்காலத்தில் அல்லாடும் இப்படிப்பட்ட இளம் தலைமுறையினருக்கு இந்தச் சிறுகதை வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

கா... கா... கா... - இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒருவரைப் பற்றிய பதிவு. நல்ல மனிதர். மனதில் ஏதோ ஒரு பயப்பிராந்தி இருந்ததால் காக்காத்தனங்களில், ஈடுப்பட்டிருக்கலாம் என்று இப்போது எனது அனுபவம் கூறுகிறது. ஆனால், அப்போதோ அவரை கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதை. நல்ல வேளையாக, கதையில் நான் கொடுத்த தண்டனை அவருக்கு நேரவில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல்.

சுதந்தர மாடன் சிறுகதை, நாடு முன்னேறி உள்ள அளவிற்கு நாட்டு மக்கள் முன்னேறவில்லை என்பதை தெரிவிக்கும் கதை. இப்படிப்பட்ட, பல சிறுவர்களை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். இது, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று அமைப்புகளுக்கும் இப்போதும் பொருந்தும்.

இடஒதுக்கீடு - அல்லும் பகலும் உழைக்கும் ஒரு அரசு வாகன டிரைவரை, அதிகாரிகள் எப்படி இழிவாக நடத்துகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது. அதே டிரைவர், சட்டம்பேசினால், இந்த அதிகாரிகளின் நிலைமை என்னவாகும் என்பதை கதை எடுத்து கூறுகிறது. இந்த மாதிரியான டிரைவர்களை மையப்படுத்தி, ஐந்தாறு சிறுகதைகளை பல்வேறு பார்வையில் எழுதியிருக்கிறேன். பல அதிகாரிகள் பந்தாக்களை விடமுடியாமல், டிரைவர்களை பந்தாடும்போது, அவர்களது கள்ள பயணம் வெளிப்பட்டு பந்தா பறிபோய்விடுகிறது.

டிராக்டர் தரிசனம், அந்தக் காலத்து விவசாயப் புதுமை. கல்கி பத்திரிகை, இதைப் பற்றி எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க, எழுதப்பட்ட கதை. ஆனாலும், கதையில் பாதி பக்கங்களை கரையான் தின்றுவிட்டது. ஆகையால், மீதியை நான் ‘ஒப்பேத்தி’ இருக்கிறேன். பழைய சுவை இந்த ‘ஒப்பேத்தலில்’ இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும், சுவை குறைவுதானே தவிர சுவையற்றது அல்ல.

வினை – விதை - எதிர்கால முதியவர்களுக்கு ஒரு படிப்பினை. இந்தக் கதையே, அதைத் தானாகக் கூறுகிறது. பிஞ்சுப் பிராயத்தில், எந்த தாக்கத்தையும், தாத்பரியம் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் சிறுவர்-சிறுமியர்களிடம் பெற்றவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அதற்கு அன்பே அடிப்படையாக இருந்தாலும், அந்த அன்பு, பாராமுகத்தில் கொண்டு போய்விடும் என்ற அனுபவப் பகிர்வே இந்தக் கதை. இதனால், பெற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தவிர்க்க முடியாது ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டிக்காட்டும் சிறுகதை.

தலைப்புக் கதையான தராசு, முதல் தலைமுறை அலுவலர்களிடமிருந்து பெற்றோரும், உற்றோரும், மனைவியும், மக்களும் ‘சம்திங்காக’ எதிர்பார்ப்பது உண்டு. ஒரு அலுவலர் தன்னளவில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது. எளிமை இல்லாமல், நேர்மை இல்லை என்பதை குடும்பத்தினருக்கும் உணர்த்தி, அவர்களை அப்படி வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். என்னளவில் வெற்றி பெற்ற இந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாக்கி உலாவிட்டிருக்கிறேன்.

பாவலாக்கள் மூலமாகவே நமது அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்பதை மத்திய அரசு அலுவலர் என்ற முறையில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்த அனுபவ பின்னணியே, இந்தக் கதை. இது, இந்தத் தொகுப்பின் வாசிப்பில் ஒரு கலகலப்பு ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது.

ஒரு எழுத்தாளன், தான் படித்தறிந்த ஒரு தகவலை வைத்தும், கதை பண்ண முடியும் என்பதற்கு ஒன்றுக்குள் இரண்டு ஒரு எடுத்துக்காட்டு, ஒரே மாதிரியான மனோநிலையில் உள்ளவர்கள், ஒத்துபோக முடியாது என்ற மனோதத்துவத்தை படித்தறிந்து எழுதிய கதை.

ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும்.

ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழ வாங்கல் உண்மையிலயே நடந்தது. ஆனாலும், அவரது அடாவடிதனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான்தான் மென்மையாக கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப்பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு.

சண்டைக் குமிழிகள் பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு, தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளாகவே உள்ளன. இவர்களுக்கு, சண்டைக் காலத்தில் மட்டும், எதிர்தரப்பினர் சுமை தாங்கிகள். அது முடிந்ததும் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொள்வார்கள்.

இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் முதுபெரும் எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள், எனது எழுத்துலக வழிகாட்டி. அந்தக் காலத்தில், குமுதத்தில், எனது கதைகள் பெரும்பாலும் வாரம்தோறும் வருவதற்கு காரணமாக இருந்தவர். ‘வீட்டைக் கட்டிப் பார்’, ‘வாழ்க்கை ஒரு சமுத்திரம்’ ஆகிய குமுதக் கட்டுரைகள் இன்றுகூட பேசப்படுகின்றன என்றால், அதற்கு ஜ.ரா. சுந்தரேசன் அவர்களே காரணம். அந்த அளவிற்கு உட்தலைப்புகளோடு, வெளியிட்டார்.

எந்தவித குமுத பந்தாவும் இல்லாமல் என்னிடம், அன்று முதல் இன்றுவரை, இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் பெருந்தோழர். அனுமானுக்கு தன் பலம் தெரியாததுபோல் இவருக்கும் தனது இலக்கிய பலம் தெரியவில்லை. இவரது பாத்திரங்களான அப்புசாமியும், சீதாப் பாட்டியும் இன்றைய இலக்கிய தரகர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அவை இந்த இருட்டடிப்பை கிழித்துக்கொண்டு வீறுமிக்க வெளிச்சமாய் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகை இலக்கியத்தில், தனித்துவம் மிக்க படைப்பாளி ஜ.ரா. சுந்தரேசன் அவர்கள். இவரது முன்னுரை எனக்கு ஒரு இலக்கியக் கெளரவம்.

பெரியவர். திருநாவுக்கரசு அவர்களிடம், அவரது அருமை மகன் ராமு அவர்கள் மூலம் இந்த பழைய சிறுகதைகளை வெளியிட வேண்டும் என்று ‘தூது’விட்டேன். அவரும், உடனடியாக சம்மதித்தார். நவீனக் கதைகளே, வேலையில்லாத் திண்டாடத்தில் தவிக்கும்போது, இந்தப் பழங்கதைகளை, பொருட் செலவைப் பற்றி கவலைப்படாது வெளியிட அவர் முன்வந்தமைக்கு, ஆயிரம் நன்றிகள் சொன்னாலும், அவை போதா.

இறுதியாக –

எப்போதும் எழுதும் வாசகப் பெருமக்கள், எனது அந்தக் கால சிறுகதைத் தொகுப்புகளில் எப்படியோ விடுபட்டுப்போன பழங்கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, காலத்திற்கு அடக்கமா அல்லது பொருத்தமா என்பது குறித்து ஒரு வரி எழுதினால் நன்றியுடையேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தராசு,_சிறுகதைகள்&oldid=1877205" இலிருந்து மீள்விக்கப்பட்டது