தராசு, சிறுகதைகள்/012
ஒன்றுக்குள் இரண்டு
அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த, பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்த்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச்... ஹி ஈஸ்... ஹெட் கிளார்க் சோணாசலம்...” என்று சொல்லி முடித்து, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய் விட்டார்.
செக்ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்; டைப்பிஸ்ட்காரி கொண்டையை சரிசெய்து கொண்டாள். சேல்ஸ் - அசிஸ்டண்ட் சிங்காரம், சட்டைப் பித்தானைப் போட்டுக் கொண்டான். ‘மாடர்னாக’ இருப்பதாய் காட்டிக்கொள்ள விரும்பிய பெண்கள், ‘பௌவியமாய்’ இருப்பதாய் நினைத்துக் கொண்ட பெண்கள், ‘கிளாட் டூ மீட் யூ ஸார்’ என்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தப் பட்டவுடனேயே சொல்லியாக வேண்டும் என்பதற்காக, அவற்றை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் – இப்படி அலுவலகம், தீபாவளியை கொண்டாடுவதுபோல், புதுமையாகத் தோன்றியது.
சேல்ஸ் மானேஜர் சதாசிவத்திற்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். டூவிட்பேண்டும், சிலாக்கும், உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் மின்விசிறியில் லேசாக ஆடின. கூர்மையான பார்வையும், அறிமுகப்படுத்தப்படுவோரின் கண்களை, அவன், நேராகப் பாத்ததில், அப்படிப் பார்க்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்கள் போல், தலைகளை குனிந்து கொண்டார்கள்.
தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கௌண்டன்ட் சுந்தரம், தான் லேட்டாக வந்ததற்கு, மற்றவர்கள்தான், வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தவன்போல், மதர்ப்புடன், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்தான்.
தலைமைக் குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, ‘அம்போ’ என்று விட்டுவிட்டு, சுந்தரத்தைப் பார்த்தார். அவனை, முதலில் அறிமுகப் படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான்.
“ஹி ஈஸ்... சுந்தரம்... ஸார்” என்றார் சோணாசலம். “கிளாட் டு மீட் யூ மிஸ்டர்... சதாசிவம்” என்று சொல்லிக் கொண்டு, சுந்தரம் மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான். எல்லோரும் ‘ஸார்’ போடுகையில், இவன் மட்டும் ‘மிஸ்டர்’ என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை. அதோடு, அவன் பேசிய தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான்தான் அக்கெளண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள்கூட, பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், ‘ஆப்டர்ஆல்’ ஒரு அக்கெளண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது சுப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான்.
“கிளாட் டூ மீட் யூ ஆல்... ஒர்க் ஈஸ் காட். உங்களுக்கு, எந்த பிரச்சினை என்றாலும்... என்கிட்ட வரலாம்... பட்... டிஸ்ஸிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்... நான்... லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ்... படிக்கும் போது... அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்...”
அலுவலக ஊழியர்கள் அனைவரும் மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள்போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம்.
ஆனால், அக்கௌண்டண்ட் சுந்தரம், அலட்சியமாக மேலே ஓடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாகப் புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் சதாசிவம் லட்சியம் செய்ததுபோல், கோபமாக கேட்டான். லேட்டாய் வருகிறவர்களை டிஸ்மிஸ் பண்ணிடுவேன். “தாமதமாக வருவது ஒரு சமூக விரோத செயல்” என்று பேசிக்கொண்டே போனான்.
ஊழியர்கள், அவருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். சுந்தரம் மட்டும் ‘ஒனக்கு ஒரு திறமை இருந்தால்... எனக்கும் ஒரு திறமை இருக்கு... நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகைக்குள் தலை நுழைத்தான்.
மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும் பார்த்துவிட்டார்கள். மானேஜர் சதாசிவம் ‘அட்வைஸ்’ முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போய்விட்டான். அவனை எப்படி மடக்கலாம் என்று மானேஜரும், ஆசாமி மீது எப்படி ஒரு வழி செய்யலாம் என்று அக்கௌன்டன்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த பைலையும் பார்க்கவில்லை.
இரண்டு மூன்று நாட்கள் ஓடின.
அக்கௌன்டன்ட் சுந்தரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கீழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை புதிய மானேஜரைப் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.
‘அடுத்த’ தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய அக்கௌன்டென்ட், ‘குட்மார்னிங் ஸார். ஆபீஸிற்கு வாரீங்களா’ என்று கேட்டு வைத்தான்.
மானேஜர் சதாசிவம், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள் தான் நுழைவதைப் பார்த்த பிறகும் ‘ஆபீஸிற்கு வாரீங்களான்னு’ கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், அவன், லண்டனில் பிஸினஸ் அட்மினிஷ்ட்ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை. அக்கௌன்டன்டுக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் ‘யூ மீட் மி இன் மை ரூம்’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான்.
அக்கௌன்டன்ட் சுந்தரத்தின், ரத்தம் கொதித்தது. மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும்... இருக்கட்டும்... இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம்.
மானேஜர் சொன்னபடி அவன் பார்க்கவில்லை. பியூன் வந்து சொன்னபிறகு, கால்மணி நேரம் கழித்து மானேஜர் அறைக்குப் போனான். அப்போது, மேனேஜர், அவனைக் அழைத்ததை மறந்தவன் போல் பாவலா செய்து கொண்டே, ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தான்.
“சரண்சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்?”
அந்தப் பெண் (அழகானவள்) மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள். அதற்குள் அங்கே நின்று கொண்டிருந்த அக்கௌன்டன்ட் சுந்தரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே “நம் நாட்டுக்கு” ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்” என்று பேசிக் கொண்டே போனான்.
அந்த இளம் பெண், மானேஜரை விட்டு விட்டு சுந்தரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கௌன்டன்ட் பேசியது மானேஜர் சதாசிவத்திற்கு சகிக்கவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது சதாசிவம், அவளை ‘இம்ப்ரஸ்’ செய்தாக வேண்டும்.
‘இம்ப்ரஸ்’ செய்தான்.
‘மிஸ்டர் சுந்தரம்! நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ், வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட் மீன்’
“நீங்க வந்த சமயத்துல நானும் வந்துடுறேனே.”
அந்த இளம் பெண், அக்கௌன்டன்டின் பதிவில் ஒளிந்திருக்கும் சட்டயரை, ரசித்தவள்போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள்.
மானேஜர் சதாசிவத்திற்கு, ரத்தம் கொதித்தது. ஒருபெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவனை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப் படுத்துவதா? முடியாது; விட முடியாது.
“மிஸ்டர் சுந்தரம் டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளிஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸே ஒய் ஆர் யூ லேட்.”
அக்கெளன்டன்ட் சுந்தரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி என்ன நினைப்பாள்?
ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான்.
‘லுக்’ மிஸ்டர் சதாசிவம் ஏன் அனாவசியமாய் ‘பஸ்’ பண்றிங்க? இப்போ லேட்டாய் வந்ததுனால எந்தக் குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்தீங்க”
“எதிர்த்தா பேசுற... யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்”
“நோ... நோ... யூ ஆர் பாஸிங் மீ டூ மச். பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது.”
“ஓட்... திமுராவா பேசுற... கெட் அவுட். ஐஸே யூ கெட் கெட் அவுட்.”
“போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க”
“இங்க எதுக்கு மேன் வந்திங்க?”
“நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?”
“எதிர்த்தா பேசுற”
“நீ நான்னு பேசினா... நானும், நீன்னு பேச வேண்டியது வரும்...”
“ஐ ஸே யூ கெட் அவுட்”
“ஐ ஸே யூ ஷட் அப்”
மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினான். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் ‘சேலஞ்ச்’ செய்யப்பட்டதை, அவன் விடத் தயாராகயில்லை.
அக்கெளன்டன்ட் சுந்தரம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா. அவள் கடைக் கண் பார்வையில், மண்ணில், அக்கௌன்டன்டான அவனுக்கு அந்த மாமலை மானேஜரும், ஓர் கடுகாம்.
மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஓடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆசுவாசப்படுத்திய அவர்கள், வெளியே வந்து சுந்தரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை. இதற்குள், அந்தச் இளம்பெண் ஓடிவிட்டாள்... ஒரேயடியாய் ஒடுவதுபோல் ஓடிவிட்டாள்.
மானேஜிங் டைரக்டர் மதனகோபாலும் குலுங்கினார். சாம்பசிவம், சுந்தரத்தைப் பற்றியும், சுந்தரம் சாம்பசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர்: அவன் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். சுந்தரம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது.
‘ஆக்ஷன்’ எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அக்கௌன்டன்டும் ‘பீலர்ஸ்’ விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர், இறுதியில் இருவருக்குமே ‘மெமோ’ கொடுத்தார். அக்கெளன்டன்டுக்கு ‘சிவியர் மெமோ’.
சேல்ஸ் - மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜர்களை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று சுந்தரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித ‘கெடுபிடி’ நிலவி வந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார்கள்.
அதையும் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது.
ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவன், தான் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் ‘ஹம்பிள் பிரைட்’ (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய், அவர்களை உட்காரச் சொன்னான். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து, ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவங்கினான்.
“என்ன விஷயம்?”
“வந்து ஸார்... நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்தப் போறோம்.”
மானேஜர் சதாசிவம் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவனீர்களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்திற்கு அவன் எழுதியதை அப்படியே பிரசுரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதி இருக்கிறான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள், அவனிடம் ‘ஸ்கிரிப்ட்’ கேட்க வந்திருக்கிறார்கள் போலிருக்கு. வெரிகுட்.
வந்தவர்கள் ‘ஸ்கிரிப்டை’ விட்டு விட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். வாய்விட்டே கேட்டான்.
“டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதுறது.”
“நம்ம அக்கௌன்டன்ட் சுந்தரம்தான் ஸார். நீங்க தலைமை தாங்கணும்.”
“நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்.”
ஊழியர்கள், சுந்தரத்திடம் விவரத்தை சொன்னார்கள். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன்போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.
சுந்தரத்தின் ‘ஸ்கிரிப்டை’ சதாசிவம் படித்தான். அவனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, அந்தக் கம்பெனிலிலேயே தனக்கு மட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு, அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய சுந்தரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும், ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் குடைந்தன.
“ஸ்கிரிப்ட் எப்படி ஸார் இருக்கு” என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள்.
“இதுக்கு பேரு ஸ்கிரிப்டா? கதையே இல்ல... வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற பேர்ல சம்போக கோர்வை... சீச்சி... இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க.”
“டூ லேட் வார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க.”
“நான் பணமும் தாரேன், ஸ்கிரிப்டும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள நீங்க படித்ததில்லையா?”
ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை அக்கௌன்டன்டிடம் சொன்னார்கள். அவன் கத்துவான் என்று எதிர்பார்த்தார்கள், அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள்.
“சுந்தரம் எப்படிடா உன்னால கோபப்படாம இருக்க முடியுது?”
“சேல்ஸ் மானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கணும்?”
அக்கௌன்டன்ட், தான் ‘பெருந்தன்மையானவன்’ என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப்பட்டான். இதுபோல், சதாசிவமும், நாடகத்தை, அவன் ‘டைரக்ட்’ செய்ய ‘பெருந்தன்மையோடு’ சம்மதித்தான்.
ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாற்றங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. அவனால், கத்தாமல் இருக்க முடியவில்லை.
“நிறுத்துங்க... இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது.”
அக்கௌன்டன்டும், நாடக டைரக்டருமான சுந்தரம் விடுவானா? விடவில்லை.
“சொல்லுங்களேண்டா... ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு.”
“அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?”
“எல்லாக் காட்சியும் மட்டாக இருந்தால், என்ன பண்றது?”
“என் ஸ்கிரிப்டா மட்டம். நான்சென்ஸ், டைரக்ஷன்தான் மகா மட்டம்”
“என் டைரக்ஷனா? இடியாட்டிக்... மட்டமான ஸ்கிரிப்டையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்ஷன் ஒரு உதாரணம்”.
“மிஸ்டர் சுந்தரம் நீ ரொம்பத்தான் பேசுற”
“மிஸ்டர் சதாசிவம்! இங்க நீங்க மானேஜர் இல்ல... ரைட்டர். நான் அக்கௌண்டண்ட் இல்லே... டைரக்டர். டோண்ட் பீ ஸில்லி.”
“வார்த்தையை அடக்கிப் பேசு. இந்த மாதிரி டைரக்ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்.”
“எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட டைரக்ஷன் எவ்வளவோ மேல்.”
“டேய்! என்னடா நினைச்சிக்கிட்டே?”
“டாய்... என்ன நினைக்கணுங்குறடா?”
“இப்படி பேசினா பல்லை உடைப்பேன்”
“இதோ நானே உடைக்கிறேன் பாரு.”
ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த, நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது.
விவகாரம், மானேஜிங் டைரக்டர் தனபாலுக்கு மட்டுமல்ல, பத்திரிகைகளுக்கும் போய்விட்டது. இப்போது சதாசிவமும், சுந்தரமும் இடைகால பணி நீக்கத்தில் இருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக யாரை போடுவது என்பதில் ஒரு பணிபோர் நடப்பதால்; இன்னும் விசாரணை தொடங்கவே இல்லை.
சாம்பசிவம் எப்படியோ... சுந்தரத்திற்கு அடி மேல் அடி... மனைவியின் ஊமை குசும்பில், மாமனார், மாமியார் கரித்துக் கொட்டல்... அவன் அதிகாரி... எப்படியும் தப்பிச்சுக்குவான். நீ வெறும் அகௌவுண்டன்டு. உனக்குத்தான் வேலை போகும் என்ற அப்பாவின் ஜோசியம், இதனால், சுந்தரத்திற்கே, தனது அனுகுமுறையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், புத்திசாலி என்பதால், ஒரு மனோ தத்துவ நிபுணரை சந்தித்து, தனது வரலாற்றை ஆதியோடு அந்தமில்லாமல் ஒப்பித்தான். அவர், அவன் மனோ பிரச்சனையை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றாலும், அந்த விவகாரத்தின் காரண காரியங்களை கண்டு பிடித்தவர்போல், ஒரு கண்டு பிடிப்பாளருக்கு உரிய கர்வத்தோடு தெரிவித்தார்.
“உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர், தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு. சுய-குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது ‘ஈத்’ தடுக்கிறது. ‘ஈகோ’ அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள், இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப் பகைவனாய் கருதுகிறான். வெறுப்பதன் மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால்தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்றதுக்கும், சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்’ என்று சொன்னதுக்கும், பைபிளில் ‘உன்னைப்போல் மற்றவனை நேசி’ என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன், தன்னே சோதித்துக் கொள்ள வேண்டும்.”
சுந்தரம் யோசித்தான். மானேஜர் சதாசிவத்தின் நடை உடை பாவனைகள், தன்னைப் போலவே அமைந்திருப்பது அப்போதுதான் உறைத்தது. தான், மானேஜராக இருந்தால் சதாசிவம்போல்தான் நடந்திருக்க முடியும் என்பதும், அவன், தன் நிலையில் இருந்தால், அவனும் தன்னைப்போல்தான் நடந்திருப்பான் என்பதும் புரிந்தது. விவகாரம் பதவிக் கோளாறு அல்ல மனிதக் கோளாறு என்பதும் கண்கெட்டு உறைத்தது.
அண்ணா – பொங்கல் மலர், 1982
♦