தான்பிரீன் தொடரும் பயணம்/புதிய போர்முறை

விக்கிமூலம் இலிருந்து
 

16
புதிய போர்முறை


1920ஆம் வருஷம் ஆரம்பத்தில், அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நிச்சயமான போர் தொடுத்துவிட்டது என்பதை உலகத்திற்கு அறிவிப்பதற்காகத் தொண்டர்கள் புதிய போர்முறையைக் கைக்கொண்டனர். அவர்கள் போலிஸ்கார்கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கித் தேசம்முழுவதும் குழப்பத்தை உண்டாக்கி வந்தனர். அக்காலத்தில் பீலர்கள் ஊர்க்காவலுக்காகச் சுற்றுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். அவர்கள் வெளியே சென்றால் உயிருடன் திரும்புவது நிச்சயமில்லாமல் இருந்தது. அவர்கள் தங்கள் படைவீடுகளை விட்டு வெளியறேமுடியாமல் உள்ளே அடங்கிக் கிடந்தனர். தொண்டர்கள் பீலர்களைச் சந்தித்துப் போராட வழியில்லாமையால் அவர்களுடைய படைவீடுகளிலேயே போய்ச்சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். பட்டிகளிலும் சாலைப்புறங்களிலும் இருந்த படைவீடுகளையெல்லாம் காலிசெய்து பெரிய படைவீடுகளில் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தொண்டர்கள் தங்களை எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு இரும்புக் கதவுகள் போட்டுக் கொண்டதுடன் சுற்றிலும் முட்கம்பி வேலிகளும் அமைத்துக் கொண்டனர். அந்தச் சமயத்தில் தொண்டர்களின் தீவிரமான போராட்டம் தேசம் முழுவதிலும் பரவியது. பிலர்கள் காலிசெய்த ஆயிரம் படைவீடுகள் ஒரே நாள் இரவில் அக்கினிக்கு இறையாக்கப்பட்டன. அவற்றைத் தொண்டர்கள் ஏன் எரித்தனர் என்றால் பின்னால் பட்டாளத்தாரும் பீலர்களும் அவற்றில் வந்து தங்க இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே. அந்தச் சமயத்தில் பீலர்கள் தாங்கள் போலிஸார் என்பதை அறவே மறந்து விட்டனர். போலிஸார் பொது மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால் அடிமை நாடுகளில் போலிஸார் கடமைகளை கைவிட்டுத் தேசபக்தர்களை அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாரைப்போல் சண்டை செய்வதையுமே கடமையாகக் கொண்டிருப்பார்கள். சுருங்கச் சொன்னால் ஐரிஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்டாளத்தாரைப்போல் யுத்தம் செய்துவந்தனர். எனவே மக்கள் அந்நிய அதிகாரிகளின் ராணுவத்தாரைப் பகைத்ததைக் காட்டிலும் தங்கள் கூடவேயிருந்து கொள்ளி வைக்கும் பீலர்களை மிக அதிகமாய்ப் பகைத்தனர். தொண்டர்களும் பீலர்களுடைய வம்சத்தைக் கருவறுத்துவிடவேண்டும் என்று முற்பட்டனர். பீலர்கள் எந்தெந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினார்களோ அங்கெல்லாம் தொண்டர்கள் தங்களுடைய போலிஸை நியமித்துக் கொண்டு திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் அடக்கி வந்தனர். எந்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளைக்காரர்கள் தொண்டர்களுடைய போலிஸ் படைக்கு அடங்கி ஒடுங்கிக்கிடந்தனர்.

ஐரிஷ் போலிஸார் மக்களைத் திருடரிடமிருந்து பாதுகாக்கும் கடமையை கைவிட்டதோடு நிற்கவில்லை. தொண்டர் படையினர் களவு முதலான குற்றங்களைச் செய்தவர்களைக் கைது செய்தால் போலிஸார் அக்குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு, அவர்களைப் பிடித்த தொண்டர்களையே தண்டித்துச் சிறைகளில் போட்டு வந்தனர். அக்காலத்துப் பத்திரிகைகளில் இது சம்பந்தமான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தன. மீத்தலுகாவில் ஒரு முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய் பயங்கரமான ஒரு கொலையைச் செய்து விட்டான். போலிஸார் அவனைக் கைது செய்து விசாரணையில்லாமலேயே விடுதலை செய்து விட்டனர். தொண்டர்கள் கையில் அவன் சிக்கிவிடாமல் தேசத்தைவிட்டு வெளியேறி விடும்படியும் அவர்கள் புத்தி சொல்லியும் அனுப்பினராம் ஆனால் அந்த ஆங்கில சிப்பாய் போலிஸாரிடமிருந்து விடுதலையடைந்து ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டர்களால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டான்!

அதே சமயத்தில்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தை அடக்குவதற்காகப் பிளாக் அன்டு டான் பட்டாளத்தார் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இந்த விசித்திரமா பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரந்தான் 'பிளாக் அண்டு டான்' பட்டாளத்தார் எமதூதர்களுக்கு நிகரானவர்கள். 1920ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் போலிஸ் படையிலிருந்து விலகிவிட்டதால் அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயரைச் சேர்த்து அனுப்பும்படி ஸர் கமார் கிரீன்வுட் என்பவர் ஆங்கில அரசாங்கத்திற்கு யோசனை சொன்னார் கிரீன்வுட்டின் நோக்கம் ஆயிரக்கணக்கான புதியபட்டாளங்களைக் கொண்டு அயர்லாந்தில் சகிக்கமுடியாத கொடுமைகளைச் செய்து அடக்கி விடவேண்டும் என்பதே. புதிய பட்டாளத்தில் சேர அயர்லாந்தில் ஆள்கிடைக்கவில்லை. இங்கிலாந்திலும் யோக்கியமானவர்கள் அதில் சேர விரும்பவில்லை. ஆதலால் பிழைப்பில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த பல பழைய ஆங்கில சிப்பாய்களையும், தாழ்ந்த நிலையிலிருந்த வகுப்பினரையும் கிரீன்வுட் பட்டாளமாகச் சேர்த்தார். அந்தப்பட்டாளத்தில் பெரும்பாலும் குற்றவாளிகளும், கேடிகளும். பலமுறை சிறை சென்றவர்களுமே நிறைந்திருந்தனர். அவர்கள் அயர்லாந்திற்கு வந்தபோது அரசாங்கத்தாரால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உடைகள் கொடுக்கப்படுவது வழக்கம். புதியதாய் வந்தவர்களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க வழியில்லாமையால் சர்க்கார் கைவசமிருந்த சில கறுப்பு உடைகளையும், கபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்தனர். இதனால் புதிதாக வந்தவர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்ந்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டைகளையும், கபிலச்சட்டைகளையும் அணிந்திருந்தனர். சட்டை ஒரு நிறம், குல்லா ஒரு நிறம், காற்சட்டை வேறு நிறம் இவ்வாறு கறுப்பும் கபிலமும் கலந்து ஆபாசமான பழைய உடைகளை அணிந்திருந்த பட்டாளத்தாரைக் கண்டவுடன், ஐரிஷ் மக்கள் நகைத்து ஏளனம் செய்தார்கள். மிகவும் சாமத்ர்தியசாலிகளாதலால் புதியபட்டாளத்திற்கு 'பிளாக் அன்டு டான்' என்று பெயர் வைத்தனர். ('பிளாக் அன்டு டான்' என்றால் கறுப்பும் கபிலமும் கலந்தது என்று பொருள்). அயர்லாந்தில் நாக்லாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் கபிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாய்களுண்டு. அந்த நாய்கள் 'பிளாக் அன்டு டான்' என்று அழைக்கப்பட்டு வந்தன. மக்கள் அந்த நாய்களின் பெயரையே புதிய பட்டாளத்துற்கும் சூட்டினார்கள். புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் கேடாக நடந்து கொண்டதால், அவர்களுக்கச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானதுதான்!

இனி போலிஸ் படைவீடுகள் தாக்கப்பட்டதைக் கவனிப்போம். முதல் முதலாகக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்திலுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படைவீடுகள் தாக்கப்பட்டு அங்கேயிருந்த போலிஸார் தொண்டர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டனர். அந்த போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் மூன்று மணி நேரத்திற்குப் பின்னால் உள்நாட்டுக்கலகத்தில் கொல்லப்பட்ட வீரர்களுள் ஒருவர்.) லியாம் லிஞ்ச் பிறவியிலேயே தளகர்த்தா. ஒரு பெரிய பட்டாளத்தை அணிவகுத்து நிறுத்தயும், அடக்கவும், சாமர்த்தியமாய் நடத்தவும் அவர் வல்லமையுடையவர். அவரும் ஸீன் மோய்லன் என்ற மற்றொரு தளகர்த்தாவும் சேர்ந்து கொண்டு பிரிட்டி ஷார்திகைக்குப் படி அற்புதமான போராட்டங்கள் செய்திருக்கிறார்கள்:

ஸியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும் கம்பீரமான தோற்றமும் உடையவர். அவருடைய கண்களில் காணப்பட்ட ஒளியே அவர் போர் வீரர் என்று அறிவுறித்தியது. அவர் குழந்தையைப் போல் திறந்த வெள்ளைச் சிந்தையுடையவர். ஆனால் போராட்டத்தில் காலனும் அஞ்சும்படியாக எதிரிகளைக் கலக்குவார். ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவரே தலைவராக இருந்ததார். 1919ஆம் ஆண்டு முதல் அவர் பிரிட்டிஷாரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரக்லன் படை வீடுகளைப் பிடித்ததும் அவருடைய சாமர்த்தியமேயாகும்.

அரக்லனைத் தாக்கியதற்குப் பின்னால் மைக்கேல், பிரென்னன் கிளேர் என்ற இடத்தில் படைவீடுகளைத் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டார். அங்கு கான்ஸ் டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று, பின்னால் கீழ்ப்படிந்து விட்டான். (அவன் பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுக் கலகத்தில் கெர்ரி என்னுமிடத்தில் கைதியாயிருந்த பொழுது கொல்லப்பட்டான்.) தொண்டர்கள்.அடுத்தபடியாக ஏப்ரல் 18ஆம் தேதி பல்லிலண்டர்ஸ் படைவீடுகளை முற்றுகையிட்டுப் பிடித்துக் கொண்டனர். அவ்விடத்தில் மூன்று போலிஸாருக்குப் படுகாயம் எற்பட்டது. படைவீடுகள் முற்றிலும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த போலிஸார் சகல ஆயுதங்களையும் தொண்டர்கள் தலைவராய் நின்ற ஸின்மலோனிடன் சமர்ப்பித்துவிட்டுச் சானாகதியடைந்தனர்.

தான்பிரீனும் திப்பெரரித் தொண்டர்படையை அழைத்துக்கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளைத்தாக்கினான். முதலாவது அவனுக்குப் பணிந்தவை டிரங்கன் படைவீடுகள். அங்கு போராட்டம் நடந்தது ஜூன் 4ஆம் தேதியில்.

டிரங்கனில் நடந்த போராட்டம் முடிவடைய வெகுநேரம் பிடித்தது. அதில் கலந்து கொண்ட தொண்டர்படை அதிகாரிகள் தான்பிரீன், ஸின்டிரீஸி, லிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின்ஹோகன் ஆகியோர். விடியும்வரை இருபக்கத்தாருக்கும் அருஞ்சமர் நடந்தது. காலை இளஞ்சூரியனின் கிரணங்கள் வீசிய பின்னும் அவ்விடத்தில் தொண்டர்களுடைய துப்பாக்கிக் குண்டுகளும் வெடி குண்டுகளும் சடசடவென்று வெடிப்பது நிற்கவில்லை. சிறிது கோத்தில் பகைவர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுத்தி விட்டனர். ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒரு மூலையிலிருந்த ஜன்னல் வழியாகப் போலிஸார் குழல் ஊதினார்கள். அதைக்கேட்டுத் தொண்டர்கள் அவர்களை வெளியே வந்து நிற்கும்படி உத்தரவு போட்டார்கள். அவ்வாறே அவர்கள் வெளியே வந்து நின்று தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர். தொண்டர்கள் அவர்களைக் கைது செய்து கொண்டு மற்றப் பட்டாளங்கள் வெளியிலிருந்து உதவிக்கு வருமுன்னால், விரைவாக ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். ஊருக்கு வெளியே சென்றதும் அவர்கள் தங்களுடைய கைதிகளை மன்னித்து விடுதலை செய்தார்கள் அக்கைதிக்கூட்டத்தில் ஆறு கான்ஸ்டபிள்களும் இரண்டு சார்ஜன்டுகளும் இருந்தனர். தொண்டர்களில் ஒருவருக்குக் கூடக் காயமில்லை.

அதே இரவில் கப்பர் ஒயிட் படை வீடுகளும் வேறு தொண்டர்களால் தாக்கப்பட்டன. ஆனால் அங்கு போலிஸார் பணியவில்லை.

பத்திரிகைகளில் இவ்விஷயங்களைப் பற்றி உண்மையான விவரங்கள் வெளிவருவதேயில்லை. தொண்டர்கள் வெளிவந்து தாங்கள் செய்த வீரச்செயல்களை வெளியிட சூழ்நிலை பக்குவமாயில்லை. போராட்டத்தில் தப்பிப்பிழைத்த போலிஸாரே தங்களுக்கே தெரிந்த விஷயங்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் தங்கள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு, விருத்தாந்தங்களைத் திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்தும் கூறிவந்தார்கள் தாக்கிய தொண்டர்கள் 30பேர் என்றால் 300க்கு மேற்பட்டவர் வந்திருந்ததாக போலிஸார் கூறுவர். ஏனென்றால் 30பேருக்கு அவர்கள் தோற்றனர் என்பது கேவலமல்லவா மேலதிகாரிகள் இதைக் கேட்டு அவர்களைக் கண்டிக்கவும் கூடும். சில பத்திரிகை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விஷயங்களை வெளியிட அஞ்சினர். வெளியிட்டால் நள்ளிரவில் பிளாக் அண்டு டான் படையினர் அவர்களை வாட்டி வருத்துவர். அதனால் அவர்கள் செய்தி எழுதுகையில் 'தொண்டர்கள் காயமடைந்தனர்; சிலர் இறந்து வீழ்ந்தனர்' என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சில தொண்டர்கள் இறந்திருக்கும் பொழுது, அவர்களுக்கு அவ்விஷயமே தெரியாது போய்விடும்!

அடுத்தாற் போல் தான்பிரீன் கூட்டத்தார் தாக்கிய இடம் ஹால்லி போர்டு. அது திப்பெரரித் தாலுகாவின் வடமேற்குப் பக்கத்திலுள்ளது. அங்கிருந்த போலிஸாரும் தொண்டர்களிடம் சரணாகதியடைந்து, ஆயுதங்களைப் பறிகொடுத்தனர். அங்கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள் டிரங்கனில் தலைமை வகித்த தொண்டர்படை அதிகாரிகளேயாவர்.

ரியர் கிராஸ் என்னுமிடம் அடுத்தாற்போல் தாக்கப்பட்டது. அங்கு போராட்டம் மிக உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் தொண்டர்கள் போலிஸாரை முடியடிக்காமலே திரும்ப நேர்ந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பல இடங்களிலிருந்து தொண்டர்கள் உதவிக்கு வந்திருந்தனர். ஸீன் டிரீஸியும், தான்பிரீனுமே தலைமை வகித்து நின்றார்கள். போலிஸாரும் உயிரை வெறுத்துத் தீவிரமாக போராடினார்கள். அவர்கள் எறிந்த வெடிகுண்டுகளின் சில்லுகள் ஒ மல்லி, ஜிம் கோர்மன், டிரீவி, தான்பிரீன் முதலியோரைச் சிறிது காயப்படுத்தின. தொண்டர்கள் படை விடுகளைத் தீ வைத்து எரித்தார்கள். பல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் சுடப்பட்டு இறந்தனர்.

மே மாதம் 27-ஆம் தேதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப்பட்டன. அந்தப் போராட்டம் மிகவும் புகழ் பெற்றது. தான்பிரீன் அதில் கலந்து கொள்ளவில்லை. ஸீன்மலோன் தோண்டர்களைத் தலைமை வகித்து நடத்தினார். அப்போராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை நடந்தது. கில்மலைக் படை வீடுகள் மிகப்பெரியனவாய், உறுதியான கட்டிடங்களுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாப்பாட்டு விடுதியையும் வேறுபல வீடுகளையும் அமர்த்திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தில்தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெட்ரோலைச் சொரிந்தனர். தீ வைத்தவுடன் அவ்விடுகள் எரிந்து தரைமட்டமாயின. போராட்டத்தில் ஸ்கல்லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்களில் காயமடைந்தவர் அறுவர் இறந்தவர் இருவர். இறந்துபோன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலிலேயே தொண்டர்களுக்குப் பணிந்து விடவேண்டும் என்று சொன்னதற்காக மற்றப் போலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிப்பூட்டிவிட்டனர். இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச்செல்ல வழியின்றி எரிந்து சாம்பலாயினர். போலிஸாருக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜெண்டு பின்னால் அரசாங்கத்தால் ஜில்லா இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தப்பட்டார். சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுலகத்திற்கு அனுப்பி விட்டனர்.

அடுத்த பெரும்போராட்டம் ஊலாவில் நடந்தது. அன்றுதான் சர்க்கார்படையின் பிரிகேடியர் ஜெனரல்களுள் ஒருவரான லூகாஸ் தொண்டர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்.