தான்பிரீன் தொடரும் பயணம்/வைசிராயைக் குறிபார்த்தல்

விக்கிமூலம் இலிருந்து

13
வைசிராயைக் குறிபார்த்தல்



நாக்லாங் சம்பவத்திலிருந்து அயர்லாந்தில் புரட்சிக்காரர்களுடைய போராட்டம் தீவிரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் ஆயுதங்களைக்காகக் கொள்ளையிட்டனர். ஊர்காவலுக்காகச் செல்லும் போலிசார் ஆங்காங்கேதாக்கப்பட்டனர். டப்ளின் நகரிலிருந்த இரகசியப் போலிசார் திருடர்களையும், சூதாடிகளையும், சாதாரண கலகக்காரர்களையும் கண்டுபிடிப்பதை விட்டு, அரசியில்வாதிகளையும் புரட்சிக்காரர்களையும் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களுடைய துப்பறியும் வேலைகளுக்காகப் பழைய திருடர்களையும், குற்றவாளிகளையும் கையாட்களாகச் சேர்த்துக் கொண்டனர். நள்ளிரவில் ஸின்பினர்களுடைய வீடுகளில் சோதனை போடவும், லின்பின் புத்தகங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கொள்ளையிடவும் அவர்கள் பட்டாளததார் கூடச் சென்று உதவி புரிந்து வந்தார்கள். டப்ளின் நகரிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களைத் தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அச்சமின்றி நடமாட முடிந்தது. ஒரு குற்றமும் செய்யாதவர்களும், வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியையே தொட்டறியாதவர்களுமான மக்களுடைய வீடுகளில் நாள் தவறாமல் சோதனைகள் போடப்பட்டன. இந்த அற்பக் கொடுமைகள் மக்களை அரசாங்கத்திற்கு விரோதமாய்த் தூண்டிவிட்டன. ஐரீஷ்மொழியில் பாடல்கள் எழுதி வைத்திருப்பது போன்ற அற்பக்காரியங்களுக்காகப் பல ஆடவர்களும், பெண்களும், பையன்களும், சிறுமிகளும்கூடச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொண்டர்களால் இக்கொடுமைகளைச் சகித்திருக்க முடியவில்லை.

1919 ஆம் வருடக் கடைசியில் நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இரகசியப் போலிஸார் நடுத்தெருக்களில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். சுட்ட தொண்டர்கள் பகைவர்களிடம் சிக்காமல் தப்பிவந்தனர். பிற்காலத்தில் இரகசியப் போலிஸ் வர்க்கத்தையே அழித்து விடவேண்டும் என்று தொண்டர்கள் உறுதி செய்தபின் அவ்வர்க்கத்தார் தங்கள் வீடுகளில் வசிக்கமுடியவில்லை. தெருக்களில் நடமாடவும் முடியவில்லை. கடைசியாக அவர்கள் அனைவரும் 'டப்ளின்மாளிகை' க்குள்ளேயே பதுங்கிக்கிடக்க நேர்ந்தது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதனால் ஆயுதந்தாங்கிய பட்டாளத்தாருடன் வருவதே வழக்கம். அவர்களில் பலர் வேலையை ராஜினாமா செய்தனர்; மற்றும் சிலர் புரட்சிக்காரர்களுடைய தொந்தரவுக்குத் தப்பி வாழமுடிந்தது; ஏனென்றால் அவர்கள் புரட்சிக்காரருடைய வழிக்கு வருவதில்லை என்று அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர். பின்னால் பல இரகசியப் போலீஸார் புரட்சிக்காரருடைய இரகசிய இலாகாவில் சேர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆவணங்களையும் தகவல்களையும் கொடுத்துப் பேருதவி செய்துவந்தனர்.

திப்பெரரியிலிருந்து வந்திருந்த தான்பிரீன் முதலான நால்வரும் டப்ளின் நகரில் நிலையாக இருப்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு நகரிலுள்ள சந்துக்கள், பொந்துக்கள் உட்பட எல்லாப் பகுதிகளும் நன்றாய்த் தெரிந்திருந்தன. எவ்விதமான மாறுவேஷமும் அணியாமல், நினைத்த இடமெல்லாம் சுற்றித் திரிந்தனர். டப்ளின் பெரிய நகராதலால், அவர்கள் சுயேச்சையாகத் திரியவும், நண்பர்களைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிக் கலந்து கொள்ளவும் வசதியாயிருந்தது. இரகசியப் போலிஸாரின் தொந்தரவைச் சகிக்கமுடியாமல் தான்பிரீன் கூட்டத்தார் ஒற்றர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். அவர்கள் சில ஒற்றர்களைச் சுட்டுத்தள்ளினார்கள்; மற்றும் சிலரைத் தாக்கித்துரத்தினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்தால், என்ன வெகுமதி கிடைக்கும் என்பதை அவர்கள் செய்கையில் காட்டினார்கள். பிறகு ஒற்றர்களுடைய இடையூறு குறைய ஆரம்பித்தது. திப்பெரரியிலிருந்து சில ஒற்றர்கள் டப்ளினுக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்தான் ஸோலொஹெட்பக் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும் என்பது அரசின் எண்ணம். அந்த ஒற்றர்கள் வந்த சில நாட்களுக்குள் பாடங்கற்றுவிட்டனர். அவர்கள் தான்பிரீன் கூட்டத்தாரைப் பின்பற்றிச் செல்வது தங்கள் உடம்புக்கு நல்லதில்லை என்று கண்டு கொண்டனர். குளிர்காய்வதற்கு, நெருப்போடு ஒட்டியிராமலும் வெகுதுரம் விலகிவிடாமலும் இருப்பது போல, அவர்கள் தொண்டர்களிடம் நடந்து கொண்டனர். சில சமயங்களில் அவர்கள் தொண்டர்களை வெகு சமீபத்தில் கண்டு விட்டாலும், காணாதது போல் வெகு விரைவாகச் சென்று விடுவார்கள்.

சிறிது காலத்திற்குப் பின் தான்பிரினும் அவன் தோழர்களும் போலிஸ்காரர்களையும் சிப்பாய்களையும் சுட்டுத் தள்ளி வந்ததைப் பற்றி நீண்ட விவாதங்கள் வெய்து வந்தனர். முடிவில் அது போதாதென்றும், வேறு சிலமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் தீர்மானித்தனர். பெரிய அதிகாரிகள் போலிலாரைத் தங்களுடைய வில்லுக்கேற்ற அம்புகளாக உபயோகித்து வந்ததால், எய்தவரை விட்டு அம்பை நோவதில் என்ன பயன்? சில போலிஸாரைச் சுட்டுத் தள்ளிவிட்டால் அதிகாரிகள் வேறு சிலரை நியமித்து விடுகிறார்கள். அதிகப் படிப்பில்லாத ஏழை மக்கள் ஏராளமாயிருக்கும் வரை தொப்பியும் சட்டையும் மாட்டி அவர்களைப் போலீஸ் வேலைக்கு நியமிப்பது எளிதாகவிருந்தது. மேலும், போலிஸாருடைய உயிர் பலிவாங்கப்படுவதை இங்கிலாந்து அதிகமாய்ப் பொருட்படுத்துவேயில்லை. எனவே பெரிய அதிகாரிகளை வதைத்தால் தான் இங்கிலாந்து கண்விழிக்கும் என்று புரட்சிக்காரர்கள் தீர்மானித்தார்கள். அரசாங்க தலைமை அதிகாரிகளைப் பழிவாங்கினால் தேசமெங்கும் தந்திகள் பறக்கும்; உலகமெங்கும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும்; சகல நாட்டார்களும் ஐரிஷ் அரசாங்கத்தில் ஏதோ கோளாறுகள் இருப்பதாகத் தெரிந்து கொள்வார்கள். ஆங்கில அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் துக்கமடைவார்கள். அயர்லாந்தில் ஆங்கில ஆட்சி ஒழுங்காக நடைபெறாமற் போகும். தொண்டர்கள் இவ்வாறு பலவிதமாக யோசனை செய்து, அயர்லாந்தின் வைசிராயான லார்ட் பிரெஞ்சைத் தாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அம்முடிவைப் பலமுக்கியமான நண்பர்களுக்கு அறிவித்து அவர்களில் சிலரை உதவிக்கு வரும்படியாக அழைப்பனுப்பினர்.

லார்ட் பிரெஞ்சைச் சுடுவது சாமானியமான விஷயமில்லை. தரிசனம் கிடைப்பதே அரிது. அவர் வெளியே செல்லும் பொழுதுதெல்லாம் ஏராளமான பட்டாளத்தார் பாதுகாப்பிற்குச் செல்வது வழக்கம். அவர் எங்கு எப்பொழுது செல்லப்போகிறார் என்ற விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முக்கியமான விஷேசங்களிலும் விழாக்களிலும் அவர் அடிக்கடி கலந்து கொள்வதில்லை. இக்காரணங்களினால் தான்பிரீன் கூட்டத்தார் அவர் சம்பந்தமாகத் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. மூன்று மாத காலமாய் இரவு பகலாய் அவர்கள் திட்டங்கள் போட்டுப் பல இடங்களிலே அவரை எதிர்பர்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய இரகசிய தூதர்கள் ஓடி அலைந்து வைசிராய் செல்லுமிடங்களைப் பற்றி விசாரித்து அறிவித்து வந்தனர். 1919ஆம் வருடத்தின் கடைசி மூன்று மாதங்களிலும் தொண்டர்கள் 12 இடங்களில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்து ஏமாந்தனர். வைசிராய் வருகிற பாதையும் நேரமும் அவர்களுக்கு வெகு நன்றாய்த் தெரியும். எனினும் வைசிராய் அவர்கள் கையில் சிக்கவில்லை. ஏனென்றால் அவர் கடைசி நேரத்தில் முன்னால் போட்ட பிராயானத் திட்டங்களை அடியோடு மாற்றி விடுவார். தான் செல்ல வேண்டி இடங்களுககு மிகவும் காலதாமதமாய்ச் செல்வார்; அல்லது முன்னதாகவே சென்று விடுவார். அலலது போகாமலே நின்று விடுவார்.

வைசிராயைத் தாக்குவதற்காகச் செய்யப்பட்ட முதலாவது முயற்சியில் மைக்கேல் காவின்ஸும் தான்பிரீனும் இருந்தனர். அவ்வாறே கார்க் நகரத் தொண்டர் கடையின் தளகர்த்தாவான பாம் மக்கர் பெயின் என்பவரும் பன்முறை கூட இருந்து உதவி புரிந்தார். (அவர் அடுத்த வருஷம் கார்க் நகர சபைத் தலைவராக இருந்த பொழுது, போலிஸார் அவரை அவர் வீட்டில் வைத்தே கொலை செய்தார்கள்). நவம்பர் மாதம் 11-ம் தேதி யுத்த சமாதான தினத்தில் வைசிராய் கலந்து கொள்வதற்காக டிரினிட்டி கலாசாலையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தான்பிரீன் தனது தோழர்களுடன் கிரேட்டன் பாலத்தருகில் சென்று காத்துக் கொண்டிருந்தான். அந்தப்பாலம் வைசிராய் கலாசாலைக்குச் செல்லக்கூடிய பாதையில்தான் இருந்தது. தான்பிரீன் ஏராளமான வெடிகுண்டுகளைத் தோழர்களிடம் கொடுத்து வைத்திருந்தான். வைசிராயுடைய கார்வரவும் குண்டுகளை அதன்மேல் எறிந்து காரையே தவிடு பொடியாக்கி விடவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் வைசிராய் வரவில்லை. அவர்கள் குண்டுகளைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம்.

அக்காலத்தில் பத்திரிகைகளுக்கும்கூட வைசிராயின் சுற்றுப் பிரயானத்தைப் பற்றி உண்மையான விவரங்கள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் பொய்ச் செய்திகளையே பத்திரிகைகளுக்கு அறிவித்து வந்தனர். வைசிராயின் கடற்கரையிலிருக்கும் பொழுது, நாட்டுப்புறத்திவிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வரும் இதை நம்பாமல் தங்களுடைய இரகசிய இலாகாவின் உதவியால் உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டிருந்தனர். 1919 டிசம்பர் மாதத்தில் வைசிராய் வடகடலில் ஓடம் விட்டு உல்லாசமாக வாழ்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் உண்மையில் அவர் ரோஸ்கம்மான் என்னுமிடத்தில் தமது நாட்டுப்புற மாளிகையில் வசித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் டப்ளினிலுள்ள தமது வைசிராய் மாளிகைக்குத் திரும்பும் பொழுது பீனிக்ஸ் தோட்டத்திலேயே அவரைத் தாக்க வேண்டுமென்று முடிவு செய்யபட்டது. பீனிக்ஸ் தோட்டதிற்கு அருகே ஆஷ்டவுன் ரயில் நிலையத்தின் பக்கத்திலே அவருடைய காரை மறிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.