தாழம்பூ
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தாழம்பூ
சு. சமுத்திரம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை — 600 017.
| முதற் பதிப்பு | : | டிசம்பர், 1992 |
| திருவரசு இரண்டாம் பதிப்பு | : | டிசம்பர், 2001 |
விலை ரூ. 60.00
| ❖ Title | : | THAALAMBU |
| ❖ Author | : | Su. Samuthiram |
| ❖ Language | : | Tamil |
| ❖ Subject | : | Novel |
| ❖ Edition | : | Second Edition, December, 2001 |
| ❖ Pages | : | xii + 292 = 304 |
| ❖ Published by | : | THIRUVARASU PUTHAKA NILAYAM 13, Deenadayalu Street, Thyagaraya Nagar சென்னை - 600 017. |
| ❖ Price | : | Rs. 60.00 |
Printed at : Malar Printers 044-8224803
ஜனரஞ்சகமும்
சமுத்திரமும்...
தமிழ் இலக்கிய உலகில், ஒரு சிலரின் விமர்சனத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் ஒரு எழுத்தாளர் சு. சமுத்திரம். இவருடைய படைப்புகள் விமர்சனத்திற்கு உட்படும் போதெல்லாம், இவரைச் சாடுபவர்தம் எழுத்தாணியிலிருந்து எம்பிக் குதிக்கும் கேள்வி இதுதான்.
“ஜனரஞ்சகமாக எழுதுவது இலக்கியமாகுமா?”
ஜனரஞ்சகமும் இலக்கியமும் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி சமுத்திரத்தின் ஒவ்வொரு படைப்போடும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஜனரஞ்சகம் என்றால் என்ன?
ஜனரஞ்சகம் என்ற சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சொல்லைப் பாமரத் தனத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதோ, பாவிப்பதோ, அல்லது அவ்வாறு செய்து கொச்சைப்படுத்துவதோ சற்றும் சரியல்ல. ஜனரஞ்சகம் என்ற சொல், எல்லாத் தரப்பினரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியது என்ற அளவிலேயே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
ஜனரஞ்சகம் என்ற சொல்லை, ஒரு ஆரோக்கியமான பார்வையில் புரிந்து கொண்டே, சமுத்திரம் என்ற எழுத்தாளரைப் பார்க்க வேண்டும்.ஜனரஞ்சகமாக எழுதுவது என்பது, படிக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது என்பதுதான். எழுதுகிறவன் சிந்தனையில் தெளிவு இருந்தால், எழுத்தில் தெளிவு இருக்கும். அதை வாசகன் புரிந்து கொள்வான். இப்படி எழுத்தாளனை, வாசகன், உரையாசிரியர் உதவி இல்லாமல் புரிந்து கொள்வதால், அந்தப் படைப்பு ‘கனத்தை’ இழந்துவிடாது. ஒருவர், தனக்கே தெளிவில்லாமல் எழுதுவது, தன் இலக்கு என்ன என்பது தனக்கே தெரியாமல் எழுதுவது, அதன் விளைவாகப் படிப்பவன் சிரமப்படுவது, இதில் “ஏதோ” இருக்கும் என்ற பிரமையைத் தன்னுள் விரித்துக்கொண்டு, தன் சிரமத்தையே இலக்கியத் தரமாகப் பாவிப்பது இவை எல்லாம் இலக்கிய அதிகாரமாகும்.
இலக்கியத் தெளிவும் இலக்கியத் தரமும் முரண்பட்டவை அல்ல!
படைப்பின் புரிதலும் படைப்பின் கனமும் வெவ்வேறானவை அல்ல!
ஒரு எழுத்தாளருக்கு, தான் நினைப்பதைச் சரியாகச் சொல்லத் தெரியாதுபோனால், அவர் தேர்ந்த எழுத்தாளனாக இருக்க முடியாது.
ஒருவரது, மொழிப் பலவீனம், அந்த மொழியின் பலவீனமாக மாறும்; அதை மறைக்க - அதாவது பலவீனத்தையே பலமாக்கச் செய்யப்படும் முயற்சியே, இலக்கியக் கனம், இலக்கியத் தரம் என்ற கண்டுபிடிப்புகள். தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எதிரியின் மீது ஏவும் அஸ்திரமே, தெளிந்த நீரைப் பார்த்து ஆழமில்லை என்பது.
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் - இவர்கள் எல்லாம் ஜனரஞ்சகமாக எழுதியவர்கள் தான். மக்களை மனதிலேயே வைத்துக்கொண்டு எழுதியவர்கள் தான். ஜனரஞ்சகமாக எழுதியதால், இவர்கள் படைப்புகளில் இலக்கியத் தரம், வறுமையை எய்திடவில்லை.என்றாலும், ஜனரஞ்சக எதிர்ப்பாளர்கள் எதற்கும் துணிந்தவர்கள், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் ஆகியோரையும் கைகழுவி விடுவார்கள். அவர்களுக்கும் இலக்கியத் தரம் இல்லை என்று “சுத்த” வாதம் செய்து விடுவார்கள். அவசியமானால் “கம்பனுக்கும்” கல்தா கொடுப்பார்கள்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் “கார்க்கி” பத்திரிகையை அன்று நடத்திய கவிஞர் இளவேனில் ஒரு வேடிக்கையைச் செய்தார், வார்த்தைகளை வைத்து விளையாடி, ஒரு புதுக் கவிதை எழுதினார். அதன் பொருள், அவருக்கே தெரியாது. ஆனால், ஏதோ ஒரு கலையம்சமோ அல்லது கருத்து அம்சமோ இருப்பதுபோல் ஒரு பாசாங்கு செய்யும் அந்தக் “கவிதை” கணையாழிக்கு அனுப்பப்பட்டது. எழுதியவரின் பெயர் அசத்தலாக இருந்தால்தான் கவிதைக்கு மவுசு என்று கருதி, கவிஞர். இளவேனில், அருப சொரூபன் என்ற பெயரில் அனுப்பி வைத்தார். எழுதியவருக்கே தெரியாத பொருள், கணையாழி ஆசிரியருக்குப் புரிந்தது. அந்த கவிதையை தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். பின்னர் இளவேனில், இவர்களின் பொய் முகத்தை சுட்டிக் காட்டினார். புரியாமல் எழுதினால், அதை இவர்கள் உயர்ந்தது என்று அங்கீகரிப்பார்கள் என்பது நிரூபித்துக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, இவர்களின் இலக்கியத்தரம், கனம், ஆழம் முதலியவை இவர்களின் போலித்தனத்திற்கு ஒரு அரித்தார அலங்கோலத்தையே காட்டும்.
ஒரு படைப்பு ஜனரஞ்சமாக இருப்பதாலேயே, தன் இலக்கியத் தரத்தை இழந்து விடாது என்பது திண்ணம். ஒரு படைப்பின் ஜனரஞ்சக அம்சம், அதன் இலக்கிய அந்தஸ்துக்கும் குறுக்கே நிற்காது.இப்படிச் சொல்வதால் ஜனரஞ்சகப் படைப்பெல்லாம் இலக்கியத்தரமானது என்று சொல்வதாக, கோணல்வாதம் செய்யக்கூடாது. ஜனரஞ்சக படைப்புக்களிலும் பல படைப்புகளுக்கு இலக்கியத்தரம் இருப்பதில்லை. இலக்கியத்தரம் என்பது, பல அம்சங்களை ஒருங்கிணைப்பதைப் பொறுத்ததாகும்.
ஜனரஞ்சகமாக எழுதுவதாலேயே, ஒரு எழுத்தாளனை ஓரம்கட்டப் பார்ப்பது இலக்கிய தர்மம் அல்ல என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.
சரோசா, ஒரு குப்பத்துக்காரி. திருடுதல், சாராயம் காய்ச்சுதல், அவளுக்குத் தொழில், பெற்றோரை இழந்த அவளுக்கு ஆறுதல், அவள் பாட்டன். அவரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு. இளங்கோ என்ற இளைஞன் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறாள். காவல் துறையில், இளங்கோவின் நண்பருக்கு இருக்கும் செல்வாக்கால், காவல் நிலையத்தில் உதைபடுகிறாள் சரோசா. செய்த குற்றத்துடன் செய்யாத குற்றமும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. செய்யாத குற்றத்திற்குச் சரோசா, தண்டிக்கப்படுவதை விரும்பாத இளங்கோ, தன் காதலி பாமா, பூக்காரி ருக்குமணி ஆகியோர் உதவியுடன், சரோசாவைக் காவல் நிலையத்தில் இருந்து சிறை மீட்கிறான்.
ஆனால் இந்தப் பின்னணியை உணராத சரோசா, தன் குப்பத்து ஆட்கள் மூலம், இளங்கோவைப் பழி வாங்குகிறாள். குப்பத்து ரவுடிகள் இளங்கோவை அடித்துக் குற்றுயிராய்த் தூக்கி எறிகிறார்கள். பூக்காரி ருக்குமணி காப்பாற்றுகிறாள். பின்னர் சரோசா உண்மையை அறிகிறாள்.
சாராயத் தொழிலில் இருந்து சரோசாவை விலக வைத்து இளங்கோ, தன் அலுவலகத்திலேயே ஒரு தாற்காலிக வேலை வாங்கித் தருகிறான். தங்களை விட்டுப் போவதை விரும்பாத சாராயக் கும்பலோ, அவளை ஒழிக்க விரும்புகிறது. இதனால், காவல்துறையை அந்த கும்பல் ஏவி விட்டு சரோசா மீது செய்யாத கொலைப்பழியை தலையில் சுமத்துகிறது. என்றாலும், அரக அலுவலகத்தில் வேலைபார்க்கும் இன்னொரு தொழிலாளியான முனியம்மா, சரோசாவைக் காப்பாற்றச் சமதர்ம மாதர் மன்றத்திற்கு அழைத்துக்கொண்டு செல்கிறாள். அந்த மாதர் மன்றம், சரோசாவை வென்றெடுக்கிறது. அவள் அதில் ஐக்கியமாகிறாள். இதுதான் கதை.
குப்பம், மத்தியதர வாழ்க்கை, அலுவலகம், காவல் துறை இவை அத்தனையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, சமுத்திரம் கண்முன் நிறுத்துகிறார். இந்த நான்கில் சிதைவையும், சீரழிவையும் சித்திரிக்கும் சமுத்திரம், அங்கே மனிதாபிமானம் சுடர்விடுவதையும் சுட்டிக்காட்டுகிறார். குப்பத்தில் ஒரு சரோசா, மத்தியதர வர்க்கத்தில் ஒரு இளங்கோ, அலுவலகத்தில் ஒரு முனியம்மா, காவல் துறையில் ஒரு திருமலையப்பன் - இவர்கள் தத்தம் வாழ்க்கைச் சூழலிலிருந்து “மானுடம்” காப்பவர்கள். அதாவது ‘சமன் செய்து சீர்தூக்குகிறார்’ சமுத்திரம்.
சமதர்ம மாதர் மன்றம், நாவலில் திணிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது, பின் சிந்தனையாகவும் இருக்கக்கூடும். சரோசாவைச் சமதர்ம மாதர் மாமன்றத்திற்கு முனியம்மாள் அழைத்துச் செல்கிறாள். ஆனால் முனியம்மாள் இத்தகைய சிந்தனையும் பார்வையும் உடையவள் என்பதை முன்னாலே ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.
நாவல் முழுவதும் சமுத்திரத்தின் நடையில் ஒரு கிண்டல், குத்தல், கேலி... இந்த ‘பாணி’ நாவல் முழுவதும் சமுத்திரம் ‘இருக்கிறார்’ என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாதாரணமாகப் படைப்பிலக்கியத்தில், ஆசிரியர் இருக்கிறார் என்ற உணர்வு துருத்திக்கொண்டு நின்றால் அது கலையம்சத்தைப் பலவீனப்படுத்தும். ஆனால் சமுத்திரத்தின் நாவலில் அந்தப் பலவீனம் இல்லை.
பாத்திரப்படைப்பும், நடையும் நாவலுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள்.
சரோசா, தாழம்பூவாக இருக்கலாம். தாழம்பூவையே தலையில் சூட இயக்கம் இருக்கலாம். ஆனால் சமுத்திரம், மல்லிகைப்பூ தான், அதைத் தலையில் சூடத் தயக்கம் காட்டினால், தலையில் தான் கோளாறு.
டிசம்பர், 1992.
ச. செந்தில் நாதன்
தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
சென்னை.
என்னுரை
1992-ஆம் ஆண்டில் இந்த நாவலை, இதே பெயரில் தினத்தந்தியில் தொடர்கதையாக எழுதினேன். ஆகையால், அந்த வாசகர்களுக்குரிய எளிய நடையில் முதல் தடவையாக ஒரு சமூக பிரச்சனை குறித்து எழுதப்பட்டது.
இந்த நாவலுக்கான நிகழ்வு, என் கண் முன்னாலயே நடந்தது. எங்கள் பகுதிப் பக்கம், இந்தப் படைப்பில் வரும் சரோசா போல இரும்பு இத்தியாதிகளை திருடுவதும், தட்டி கேட்பவர்களை தலைகளில் தட்டுவதுமாக இருந்த ஒரு சேரிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்புதான். இவள், தனது தாத்தாவிடம் காட்டிய பரிவையும் நான் ஒரு தடவை கண்டிருக்கிறேன். அந்த மனிதர், இந்த நாவலில் வருவதுபோலவே காட்சி அளிப்பார்.
சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், இந்த இரு நிறுவனங்களிலும் கேசுவல்கள் எனப்படும் அரசின் அன்றாட கூலி அலுவலர்கள், நிரந்தர அலுவலர்களால் எப்படி பாடாய்ப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிவேன். பெரும்பாலும் இந்த நாவலில் வருவது போலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு நான் மனிதாபிமானமிக்க அலுவலராகவே செயல்பட்டேன். இவர்களில் பட்டதாரிகள் உட்பட்ட பலர், இன்னும் என் வீட்டிற்கு வருகிறார்கள். இந்த நட்புரிமைதான் இவர்களை பற்றி எழுத எனக்கு தகுதி வழங்கியுள்ளது.
ஒரு சேரிப் பெண்ணை பற்றிய பரிதாப சித்தரிப்போடு, அரசின் அன்றாடக் கூலி அலுவலர்களின் அனுதாப சித்தரிப்போடும் இரட்டை நோக்கத்தோடு, இந்த நாவலை எழுதினேன். கூடவே, கள்ளச்சாராயம் காய்க்கப்படும் ‘கலையை’ சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் போய் தெரிந்து கொண்டேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர். செந்தில்நாதன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது குடும்ப நண்பர். அவர் அண்ணன் ச. ராசமாணிக்கமும் நானும், நேருதாசன், பகத்சிங், தமிழ்மணி, தர்மலிங்கம், பலராமன் போன்ற தோழர்களும் சேர்ந்து, 1958-ம் ஆண்டு வாக்கில் தேசிய முழக்கம் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறோம். இவர்களோடு, தோழர் செந்தில்நாதனும் அந்தக் காலகட்டத்தில், என் சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
தோழர். செந்தில்நாதனின் அணிந்துரை, அடிப்படை மக்களைப் பற்றிய இந்த படைப்பிற்கு வலிமை சேர்க்கிறது. ஜனரஞ்சகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்து, இந்தக் காலகட்டத்தில் ஒரு கருத்துப் போராகவே நடைபெற்று வருகிறது. இது, இப்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. தரமான வாசகர், எந்தப் பக்கம் முகம் திருப்புவது என்று புரியாமல் தவிக்கிறார். மேட்டுக்குடி எழுத்தாளர்கள், இவரது முகத்தை பலவந்தமாக திரும்பப் பார்க்கிறார்கள். என்னைப் போன்ற எழுத்தாளர்களும், தோழர் செந்தில்நாதன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களும் இந்த வன்முறை திருப்பிலிருந்து வாசகர்களை, மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.
மக்கள் எழுத்து என்பது மலிவு எழுத்தல்ல, மாறாக எந்த மக்களிடம் நிகழ்வுகளையும், மொழியாடல்களையும் உள்வாங்குகிறோமோ, அவற்றை, அந்த மக்களுக்கே, விஞ்ஞான பூர்வமாக, அவர்களின் மானுட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பிக் கொடுப்பதே மக்கள் எழுத்தாளர்களின் பெரும் பொறுப்பாகிறது. இதற்கு, இந்த தாழம்பூ, பத்தாண்டுகளுக்கு முன்பே தாள் திறந்தது.
தோழர் செந்தில்நான் சுட்டிக்காட்டுவதுபோல், சமதர்ம மாதர் மன்றம் இட்டுக்கட்டப்பட்டதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே நடந்த பெண்ணியப் போராட்டங்களை உள்வாங்கித்தான் இந்த ‘மன்றத்தை’ படைப்பில் கொண்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்ணிய அமைப்புகள்கூட இந்தப் படைப்பைப் பற்றி அலட்டிக்கவில்லை.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் 19-ஆம் நூற்றாண்டில், நம் மூதாட்டிகள் மாராப்பு போட உரிமை கேட்டு முப்பத்தைந்தாண்டு காலம் நடத்திய தோள்சீலைப் போராட்டமே இன்றைய பெண்ணிய இலக்கிய மீட்புகளில் இடம் பெறாதபோது, இந்தப் படைப்பு இடம் பெற வேண்டும் என்று நான் நினைப்பது ஒரு மூடநம்பிக்கை மாதிரிதான்.
இந்தப் படைப்பு வெளியாகக் காரணமாக இருந்த தினத்தந்திக்கு - குறிப்பாக அதன் இயக்குனர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அப்போதைய செய்தி ஆசிரியரும், மிகச் சிறந்த எழுத்தாளருமான தோழர். சண்முக நாதனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படைப்பை பல்வேறு கல்வியாளர்கள் தத்தம் ஆய்வுகளுக்காக கருப்பொருளாக எடுத்தாண்டிருக்கிறார்கள். பல்வேறு ஆய்வு அறிக்கைகள், எம்.பில்., பட்ட அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இவர்களுக்கு, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது படைப்புகள் அனைத்தையும் கொண்டு செலுத்த முன்வந்திருக்கும் பெரியவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும், நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இங்கே நான் குறிப்பிடுவதுபோல் நன்றி ஒரு கடன்தான். காரணம், எனது பழைய படைப்புகளை கொண்டு வருவதன் மூலம் இவர்களுக்கு புதிய வருவாய் வரப்போவதில்லை. ஆனாலும், என் மீதுகொண்ட அன்பாலும், என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மக்கள் வழி படைப்புகள் புதுப்பிக்கபட வேண்டும் என்ற சமூக நோக்காலும் பெரியவர் திருநாவுக்கரசு இந்த நாவலையும், இது போன்ற எனது இதரப் படைப்புகளையும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறார். அவருக்கு ஆயிரம் தடவை நன்றி கூறினாலும் அது முழுமையாகாது.
வாசகப் பெருமக்கள் இந்தப் படைப்பு குறித்து தங்களின் விசர்சனத்தை தெரியப்படுத்தினால் அது என்னை ஊக்குவிக்கும்.
- சு. சமுத்திரம்
- உள்ளடக்கம்
- தாழம்பூ/001
- தாழம்பூ/002
- தாழம்பூ/003
- தாழம்பூ/004
- தாழம்பூ/005
- தாழம்பூ/006
- தாழம்பூ/007
- தாழம்பூ/008
- தாழம்பூ/009
- தாழம்பூ/010
- தாழம்பூ/011
- தாழம்பூ/012
- தாழம்பூ/013
- தாழம்பூ/014
- தாழம்பூ/015
- தாழம்பூ/016
- தாழம்பூ/017
- தாழம்பூ/018
- தாழம்பூ/019
- தாழம்பூ/020
- தாழம்பூ/021
- தாழம்பூ/022
- தாழம்பூ/023
- தாழம்பூ/024
- தாழம்பூ/025
- தாழம்பூ/026
- தாழம்பூ/027
- தாழம்பூ/028
- தாழம்பூ/029
- தாழம்பூ/030
- தாழம்பூ/031
- தாழம்பூ/032
- தாழம்பூ/033
- தாழம்பூ/034
