உள்ளடக்கத்துக்குச் செல்

தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு/ஞாயமற்ற மறியல்

விக்கிமூலம் இலிருந்து

ஞாயமற்ற மறியல்


(நொண்டிச்சிந்து)

என்றுதான் சுகப்படுவதோ! - நம்மில்
யாவரும் "சமானம்" என்ற பாவனை இல்லை - அந்தோ
ஒன்றுதான் இம் மானிடச்சாதி - இநில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும் "சாதிகள்" என் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே "பேதம்" எனும் பேய்! - மிகக்
கூகூம்இக் கதை நினைக்கத் தேசமக்களே! (என்று)


இத்தனை பெரும் புவியிலே - மிக
எண்ணற்றன தேசங்கள் இருப்ப தறிவோம் - எனில்
அத்தனை தேசத்து மக்களும் - தாம்
அனைவரும் “மாந்தர்” என்று நினைவதல்லால் - மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
எட்டுலக்ஷம் சொல்லி மிகக் கெட்டலைவரோ! - இவர்
பித்து மிகக் கொண்டவர்கள்போல் - தம்
பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல் நன்றோ? (என்று)

***



தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
ஈண்டுப் பிற நாட்டில் இருப்போர் - செவிக்
கேறியதும் இச்செயலைக் காறியு மிழ்வார் - பல்
ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
அறிவற்ற மாக்கள்எனக் கருதப்பட்டோம் - நாம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம் (என்று)


ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும் ஞானப் புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியின் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்த - இவர்
இஞ்சிதின்ற குரங்கென இனித்திடுவார் - நாம் (என்று)

***



உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரை அடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள் போகப்போருள் அனுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற்சிலரை - மண்ணில்
முட்டித் தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம் (என்று)


உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்ட படி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரண முண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும், - நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும், - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது தாங்கள் நலம் நுகர்வதற்கே - நாம் (என்று)

***


வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆளுபவன் க்ஷத்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த வைசியனென் றுயர்வு செய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி
ஆதியினில் மநுவகுத்தான் - இவை
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் - நாம் (என்று)


அவனவன் செயும் தொழிலைக் - குறித்
தவனவன் சாதியென மதுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மநுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும் கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வருணமும் - கீழ்க்
குப்புறக் கவிழ்ந்த தென்று செப்பிடத்தகும் - இன்று
எவன் தொழில் எவன்செய்யினும் - அதை
ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம் (என்று)

***


பஞ்சமர்கள் எனப்படுவோர் - மட்டும்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ - இனித்
தஞ்சமர்த்தை வெளிப்படுத்தித் - தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ - இது
வஞ்சத்தினும் வஞ்சமல்லவோ - பொது
வாழ்வினுக்கும் இது மிகத் தாழ்மையல்லவோ - நம்
நெஞ்சத்தினில் ஈரமில்லையோ? - அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ - நாம் (என்று)


கோரும் "இமயாசல" முதல் - தெற்கில்
கொட்டுபுனல் நற்"குமரி" மட்டும் இருப்போர் - இவர்
யாருமொரு சாதியெனவும் - இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள் எனவும் நம் மிடை இக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றியஉடன் - அந்த
ஒற்றுமை அன்றோ நமக்கு வெற்றியளிக்கும்? - நாம் (என்)

***