தாவிப் பாயும் தங்கக் குதிரை/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உதவி பெற்ற தேவதை

வெற்றிவேலன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். ஒரு சிற்றாறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் பெருகி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையில் ஒரு கிழவி நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து போக ஏதாவது வழியுண்டா என்ற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருந்தாள். வெற்றிவேலனுக்குத் தன் தாயார் கூறிய சொற்கள் நன்றாக நெஞ்சிற் பதிந்திருந்தன.

அவன் அந்தக் கிழவியின் அருகில் சென்றான். “பாட்டி, அக்கரைக்குப் போக வேண்டுமா? நான் உதவி புரிகிறேன்” என்று கூறினான்.

கிழவி நன்றியறிதலோடு அவன் உதவியை ஏற்றுக் கொண்டாள்.

வெற்றிவேலன் கிழவியைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். பெருக்கெடுத்துப் போகும் சிற்றாற்றில் இறங்கி நடந்தான். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. அடி எடுத்து வைக்கும் போதெல்லாம் ஆளைச் சாய்த்துவிடும் போலிருந்தது. எப்படியோ, மூச்சைப் பிடித்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து அக்கரை சேர்ந்து விட்டான். தன் தோளிலிருந்து கிழவியைக் கீழே இறக்கி விட்டான். இறக்கிவிட்டவுடன் அவளை நோக்கிய வெற்றிவேலன் பெருவியப்படைந்தான். அது கிழவியல்ல; ஒரு தேவதை!

அந்தத் தேவதையை அவன் வணங்கினான்.

“மகனே, உன்னிடம் நல்ல மனம் இருக்கிறது. அந்த மனத்தில் உறுதியிருக்கிறது. உனக்கு நலம் பல உண்டாகட்டும்!” என்று வாழ்த்து மொழிகள் கூறி அந்தத் தேவதை மறைந்து விட்டாள்.

எல்லாம் கனவுபோல் இருந்தது. வெற்றிவேலன் தான் ஒரு தேவதையைக் கண்ட வியப்பிலிருது மீள நெடுநேரம் ஆகியது. பிறகு அவன் தன் வழியே நடக்கத் தொடங்கியபோது அவன் காற் செருப்பில் ஒன்று காணாமற் போயிருந்ததைக் கண்டான். ஆற்றைக் கடக்கும்போது அது நழுவிவிட்டது என்பது அவனுக்கு அப்போது தான் தெரிந்தது. ஒற்றைக்கால் செருப்போடு அவன் மீதி வழியெல்லாம் நடந்து சென்றான். பல சிற்றூர்களையும் காடுகளையும் மலைகளையும் கடந்து அவன் கடைசியாகத் தன் சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான்.

அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அரசனைப் பார்க்க வேண்டும் என்று கூறினான். காவலர்கள் அவனை அரச சபைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அவனைக் கண்டவுடனேயே அவன் சிற்றப்பனுக்குப் பீதி ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் ஒற்றைக் காலில் செருப்பணிந்து கொண்டு வரும் ஓர் இளைஞன் உன் நாட்டைப் பறித்துக் கொள்வான் என்று ஒரு முனிவர் அவனுக்குச் சாபம் கொடுத்திருந்தார். இருந்தாலும் அவனுடைய சிற்றப்பன் தன் பயத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “தம்பி நீ யார்? எங்கு வந்தாய்?” என்று குழைவான குரலில் கேட்டான்.

“நான் தான் வெற்றிவேலன். உங்கள் அண்ணன் மகன். என் நாட்டைத் திரும்பப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்.” என்று கூறினான் வெற்றிவேலன்.